எல்லோரும் இனிதே வாழ இறைவன் அருள்வான்.
உ
----
----
சரவணபவனில் சாப்பாடு முடிந்தது.
மற்ற இத்யாதி வேலைகளை முடித்துக் கொண்டு,
எங்கள் பச்சை அழகி பத்மினி காரில் ஏறீ
மீண்டும் வரதராஜர் கோவில் மதிலுடன் பயணத்து
மனதில் நூறு கேள்விகளுடன் அகத்தியர் நாடிக்கு வந்தோம்.
சுத்தமாகப் பராமரிக்கப் பட்ட அந்தக் குடிலின் பந்தல் கீழ்
பென்சுகளில் இன்னும் நிறைய ஆட்கள் உட்கார்ந்திருந்தனர்.
அன்னிய நாட்டவர்களும் ,நெற்றியில் குங்கும விபூதியுடன் உட்கார்ந்திருந்தது
அதிசயமாக இருந்தது,.
எங்களைக் கண்டதும்
உள்ளே இருந்த வந்த இளைஞர் ஐயா உங்களுக்காக
நாடி ஓலை படிக்கக்
காத்திருக்கிறார் உள்ளே வாருங்கள் என்று மிக மரியாதையாக
அழைத்துச் சென்றார்.
குளுமையான காற்று வீசிய ஒரு கூடத்தைத் தாண்டி
மாடிப்படிகளில் ஏறி மேலே வந்தோம்.
அங்கே இன்னோரு இளைஞர்
மேஜைக்கு அப்பால் உட்கார்ந்திருந்தார்.
அவர் பக்கத்தில் ஓலைச் சுவடிகளுடன் இன்னோருவர்
இருந்தார்,.
என் கணவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு
நாடிபடிப்பது பற்றி சுருக்கமாகச் சொன்னார்.
பிறக்கும் உயிர்களுக்கெல்லாம் கிட்டத்தட்ட ஆயிரம் இரண்டாயிரம் வருடங்களுக்கு
முன்பே ,ஜனன மரண ஓலைகள் உண்டு என்வும்.
ஏற்கனவே கணிக்கப் பட்டதைத்தான் தாங்கள் படிக்கப்
போவதாகவும்.
விளக்கினார். நான் பணம் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று கேட்டதற்கு
நீங்கள் கேளுங்கள் , உங்களுக்கு சரி என்று தோன்றினால்
மேற்கொண்டு பார்க்கலாம் என்றார்.
முதலில் ஐயாவுக்கு சொல்கிறோம்.
அய்யா பெயரில் 4 ஏடுகள் எடுத்தோம்.
உங்களுக்கு எது பொருத்தம் என்று சொல்லுங்கள்.
நீங்க நாலாவது குழந்தையாக உங்கள் பெற்றோருக்குப்
பிறந்தீர்களா என்றார்.
இவர் ஆமாம் என்று சொல்ல,
சட்டென்று அந்த ஓலையை ஒரு ராகத்தோடு
அந்தப் பையன் படிக்க ஆரம்பித்தார்.
வைணவ குலத்தில் ,சுந்தரராஜன் ,கமலா தம்பதிக்குப்
பிறந்தவர். நான்கு சகோதரிகள்.
இரும்பு சம்பந்தமான தொழிலில் இருப்பவர்.
நல்ல உழைப்பாளி.
தங்கள் பெற்றோர் மறைந்துவிட்டனர்.
தங்களுக்கு மனைவியும் மூன்று வாரிசுகளும்
இருக்கிறார்கள்.
என்று நிறுத்தினார்.
என்னால் படபடப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை.
இவர் ஆமாம் நீங்கள் சொல்வதெல்லாம் சரி
என்றார்,. சிங்கம் ஷாக் ஆன முதல் கணம் அது.:)
இப்பொழுது உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்
என்றதும்,
என்னைப் பார்த்தார் சிங்கம். குழந்தைகள் எதிர்காலம்
தான் தெரிய வேண்டும் என்று சொன்னார்.
உடனே அவர் ,உங்கள் ஓலைப்படி
அவர்கள் எதிர்காலம் நன்றாகவே இருக்கிறது.
முதல் பையன் வியாபார மேல்படிப்பைப்
படித்து இப்போது இருக்கும் வேலையை விடப் பெரிய வேலைக்குச் சென்று
வெளி நாடும் செல்வார்,
மற்றவர்களுக்கும் நல்லதே நடக்கும்.
அதற்கு அவர்கள் கைரேகை வேண்டும் என்றாரே
பார்க்கணும்.
சரி அம்மா ஓலையைப் படிக்கிறேன்.
என்னை நோக்கி அம்மா உங்கள் பெயர்
ர,ரா,ரே யில் ஆரம்பிக்குமா என்றார்.
நானும் தல அசைத்தேன்.
இரண்டு மூன்று ஓலைகளைத் தள்ளிவிட்டு
உங்கள் பெயர் ரேவதி.
நாராயணன் ஜெயலக்ஷ்மி என்ற உயர்ந்த
தம்பதியினரின் இரண்டாவது வாரிசு,
நற்குலத்தில் பிறந்து நற்குலத்தில் வாழ்க்கைப்
பட்ட வயது 18. உங்களுக்குச் சில பல
உடல் நலக் குறைவு இருந்தாலும்
வாழ்வில் குறை இல்லை.
இன்னும் இரண்டு தம்பியர் இருக்கின்றனர்.
உங்கள் வீடு கடற்கரையை ஒட்டிய ஊரில்
கிழக்கு மேற்காக அமைந்த சாலையில்
நடுவில் இருக்கிறது.
ஆரம்ப கணபதியும், அனுகூல வாயுகுமாரனும் குடி கொண்ட கோவில்கள்.
இரு பக்கமும்.
தெய்வ பலத்தால் உங்கள் கவலைகள்
தீரும். இன்னும் 10 வருடங்களுக்குள்
வாரிசுகளின் திருமணம் கை கூடி வரும்.
உங்கள் பூர்வ ஜன்ம பலன் களைப் பார்க்க நீங்கள் அடுத்த வாரம் வரலாம்.
இப்போது படித்தது நீங்கள் வந்த நேரத்தக் கணித்துச் சொன்னது.
என்று ஓலைகளைக் கயிறு கொண்டு கட்டினார்.
நான் பிரமை தட்டி உட்கார்ந்திருந்தேன்.
இது எப்படி சாத்தியம்.???
அவர்களுக்கு எங்களை முன்னே பின்னே தெரியாது.
பொதுவாகப் படித்த ஓலைகளுக்குக் கட்டணம்
அப்போது 150 ரூபாய்.
கட்டிவிட்டு வெளியில் வந்தவர்களின்
மன நிலை அதிசயத்திலிருந்து வெளிவரவில்லை.!!
அடுத்த வாரமும் சென்றோம் என்று நான் சொல்லத் தேவை இல்லை:)
நேரே அம்மா ,அப்பாவிடம் சொல்லிவிட்டே
வீட்டுக்குத் திரும்பினோம்.
வரும் வழியில் பத்மம் விடுதியில் காப்பியும், ரவா தோசையும்
சாப்பிட்டுவிட்டு வந்தோம் என்பது கொசுறு செய்தி.