Blog Archive

Thursday, January 29, 2009

விடுமுறைநாட்கள்

வலை மேயாமல் இருப்பது கடினம் என்று நினைத்தேன்.
அவ்வளவு கடினம் இல்லை:)
முக்கியமாக இரண்டு மழலைச் செல்வங்கள் போட்டி போட்டுக்கொண்டு
நம்மேல் சாயும் போது உலகத்தில் எதுவுமே கஷ்டமில்லை.
துபாய்ப் பேத்தியின் ஆண்டு நிறைவு இனிதே நடந்து முடிந்தது. திருப்பதி சென்று திரும்பி வந்தோம்.
மக்கள் வெள்ளம். நெரிசல். அத்தனையும் மீறி கையூட்டு யாருக்குமே கொடுக்காமல் ஒரே ஒரு நொடி அவனைத் தரிசனம் செய்து மனசை நிறைத்துக் கொண்டு வந்தோம்.
முடியிறக்கிய பாப்பா இன்னும் அழகா இருக்காள்.
தலையைத் தடவி முடியைத் தேடுகிறாள். பின்னால் எங்களைப் பார்க்கிறாள்.
காற்றடிக்கும்போது ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று தனக்குத்தானே ரசித்துக் கொள்ளுகிறாள்.
இப்போது அவளுடைய அக்காவும் பாசலிலிருந்து வந்திருப்பதால் ஒருவரை ஒருவர் கணித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதுவரை சிதறிக் கிடைந்த லொட்டு லொசுக்கு உடைந்த உடையாத பொம்மைகள் எல்லாம் மிக முக்கியத்துவம் பெற்று
அவரவர் பக்கம் கட்சி கட்டி கொண்டு விட்டார்கள். இவள் வைத்திருக்கும் ஆட்டு உரல் தான் அவளுக்கும் வேண்டும். அவள் வைத்திருக்கும் குரங்குக் குட்டிதான் இவளுக்கு வேணும்:)
இன்னும் ஒரு வாரம் எனக்கு இந்த வரம்.
பெரியவர்களைப் புரிந்து கொள்வதுதான் சிரமம். இவர்கள் உலக இன்னும் கொஞ்ச நாட்களுக்காவது எனக்கு வசப்படும் என்றே நினைக்கிறேன்.
''பாட்டி உன்கிட்ட 24 சாரீஸ் இருக்கா??
ஓ இருக்கே.
என்கிட்ட 24 டிரஸ் இருக்கு.
சேம் சேம்.
இது ஒரு சந்தோஷம்.
''பாட்டி ,துப்பட்டா போட்டுக்காம சல்வார் போடக் கூடாது. இது புத்திமதி.
சாப்பிடும்போது டி வி பாக்கக் கூடாது பாட்டி.
இதெல்லம் இனிமேத்தான் மூணு வயசு ஆகப் போகிற பேத்தி எனக்கு சொல்லிக் கொடுக்கும் அறிவுரைகள்.
மீண்டும் பார்க்கலாம்.

Wednesday, January 07, 2009

மாரிமலை முழைஞ்சில்இன்று சிங்கம் குகையைவிட்டுக் கிளம்பி விட்டது.
மாரி முடிந்தது.தன் அரசாங்கத்தைப் பார்வையிடவேண்டும். தன் மக்களை ஆராயவேண்டும்.
நித்திரை கலைந்த சிங்கவேளின் கண்கள் தீப்பொறி போலச் சிவந்திருந்தன.
மெள்ள தன் பெரிய,நீண்ட,உறுதியும் பலமும் மிகுந்த உடலைச் சிலிர்க்கிறது.
அதன் பெரிதாயிருக்கும் தலையின் பிடரி உலுக்கப்பட்டுஎல்லாத்திக்குகளிலும்
விரிந்து நிற்கிறது.
சோம்பல் முறிக்கிறது.
வாலைச் சுழட்டுகிறது.
ஒரு நீண்ட கர்ஜனை அதன் அடிவயிற்றிலிருந்து கிளம்பி குகைகளிலும் குகை வாயிலிலும் எதிரொலிக்கிறது.
என்ன ஒரு காட்சி. !!!!
மதர்த்த அதன் கால்களை அழுந்தப் பதித்து நடக்கிறது.
மார்கழி மாதத்துப் பாவையில் 23 ஆவது பாடலாக வரும் நிகழ்ச்சிதான் இது.
மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் சீரிய சிங்கம்''
அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி,
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போல நீ பூவைப் பூவண்ணா '' என்று ஆண்டாள் கண்ணனை விளிக்கிறாள்.
நரசிம்ஹம்,ராகவசிம்ஹமாகி இப்போது கிருஷ்ணசிம்ஹமாகி அவளுக்கு வேண்டிய பலனைக் கொடுக்க அவள் பாடுகிறாள்.
சிங்கம் குகையிலிருந்து புறப்பட்டது போல''கண்ணா நீ உன் கோவிலை விட்டு இந்த அரச சபைக்குக் கம்பீர நடை நடந்து
வந்து,
உன் நீதி வழுவா சிங்கதனத்தில் இருந்து எங்கள் காரியம் என்ன என்று செவி மடுக்க(ஆராய) வேண்டும் என்றும் அவனிடம் உரைக்கிறாள்.
சபையில் கண்ணன் உட்கார்ந்திருக்கும் அழகும்,
ஆண்டாளும் அவள் தோழிப்பாவைகளும் கைகூப்பி நிற்கும் சித்திரமும் மனதில் பதிகிறது.
வைகுண்ட ஏகாதசிக்குக் கண்ணனை நினைத்து
அரங்கனை நினைத்து,பார்த்தசாரதியை நினைத்து,அந்த நினைவுகளும் புண்ணியம் கொடுத்து நம் தீராத கர்மங்கள் களைய வேண்டிக்கொண்டால்,
இதோ நரசிங்கனும் நானும் வந்தேன் என்று பாட்டு மூலம் வந்துவிட்டான்.
திருமால் பாதம் சரண்.
அவன் பாதங்களை அடைந்து அவனுடன் ஒன்றிவிட்ட எங்கள் கோதை பாதங்களுக்கும் பூமாலை சார்த்துகிறேன்.Posted by Picasa

Friday, January 02, 2009

பிஐடி புகைப்படப் போட்டிக்கு ...ஜனவரி

போட்டி அறிவிப்பைப் படித்ததும் படங்களை ஆராய்ச்சிக்கு எடுத்தேன்.

இந்தப் படம் தன்னையே தேர்ந்தெடுத்துக் கொண்டது.

அமெரிக்காவிலிருந்து திரும்பும் வழியில் சூரிக் விமானதளத்தில் சில மணித்துளிக்கள் இருக்க வேண்டிய கட்டாயம்.

குழந்தைகளை விஒட்டு வந்த சோகம். மீண்டும் வீடு திரும்பியதும் காத்திருக்கும் அவசர வேலைகள்.

உடலில் இருக்கும் அசதி. மீட்ண்டும் சுறுசுறுப்பாக இயங்குவோமா என்ற சுய அலசல்.:)

எங்களுக்குச் சொல்லப்பட்டிருந்த லௌஞ்சிற்குள் நுழையும் போது ஒருவரையும் காணொம். இன்னும் அரைமணி நேரமே இருக்கும் நிலையில் ,இந்த இடம் இப்போழுது மனிதர்களால் நிரம்பி இருக்க வேண்டும்.!!

குழந்தைகளின் ஓட்டம், முதியவர்களின் அசதி. ஐரோப்பியர்களின் அதீத வாசனைகள். இன்னும் சில பேரின் அலட்சியப் பார்வைகள்.

ஓ,!!!நான் பயணங்களிலிலேயே இருப்பவன் என்று பறை சாற்றிக்கொள்ளும் சிறிய கணினிக்காரர்கள்.

இன்னும் இதுபோல் எத்தனையோ நடமாட்டம் இருக்கும். அந்த அதிகாலைப் பொழுது ஸ்விட்சர்லாண்தின் மெயின் டெர்மினலுக்கு ஒவ்வாத சூழலாக இருந்தது!!

உடனே போட்டோ பிடித்தேன்.

இப்போது அந்தப் படத்தைப் பார்க்கும்போது அந்த இடத்துக்கே ஒரு

அமைதியும்,காத்திருக்கும் மௌனமும் தென்படுவதாக எனக்குத் தோன்றியது.

கனத்த மௌனம் என்று சொல்லலாமா!!

எல்லாமே என் கற்பனைதான். அடுத்த ஒரு மணியில் அந்த இடம் நிரம்பியது.

எங்களைப் போலவே வெவ்வேறு இடங்களிலிருந்து வருபவர்கள் தங்கள் விமானத்தாமதத்தால் நேரம் கழித்து வந்திருக்கிறார்கள். அவ்வளவுதான்.

இருந்தும் அந்த அரைமணித் தனிமை விநோதமாகத்தான் இருந்தது.

Posted by Picasa