Blog Archive

Tuesday, July 31, 2007

207 , 1943இல் ஒரு திருமணம்

207 , 1943இல்   ஒரு திருமணம்


பெண்ணுக்குப் பதிமூணு வயசாகிவிட்டது. திருமணம்                                  

செய்யவேண்டும்.சமவயதுள்ள பெண்களுக்கெல்லலம் மாப்பிள்ளை தேட ஆரம்பித்தாகிவிட்டது.ஆனால் புஷ்பா என்கிற பாப்பாவுக்குப் படிப்பில் ஆசை.அவள் அப்பா
வீரராகவன், தன் பெண்ணின் அறிவிலும்,அழகிலும் ,அடக்கத்திலும் அகமகிழ்ந்து போவார்.
அவளை அமைதியான படித்த பையனுக்குத்தான் மணம் செய்து கொடுக்கவேண்டும்.

1943இல் பதிமூணு என்பது அவ்வளவு குறைந்த வயசில்லேயே.


கீழநத்தம் கிராமத்தைவிட்டு மதராஸ் பட்டணம் வந்ததில் வாழ்க்கைத் தரம் அவ்வளவாக உயரா விட்டாலும் கையைக் கடிக்காமல் நான்கு பசங்களையும் ஒரு பெண்ணையும் கொண்ட குடித்தனத்தை ஓரளவு நன்றாகவே நடத்த முடிந்தது.தங்கம் 13ரூபாய் ஒரு பவுன்.அதுதான் பெரிய செலவு. இருந்தாலும் வருடாவருடம் ஐந்து பவுனாவதுவாங்குவது வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அதுவும் அவர் செய்து கொண்டிருந்த உத்தியோகம் ஸ்கூலில் சயன்ஸ் மாஸ்டர்.

அதில் பெண்டாட்டிக்கும் குழந்தைகளுக்கும் துணிமணி வகையறாக்களுக்கு அளவாகவே செலவழிப்பார். சுற்றத்தினர் , தன்னொத்து ஊரைவிட்டு வந்தவர்களுக்கும் உதவுவார்.கிராமத்திலிருந்து வரும் நெல் விற்றப் பணத்தைச்

சிறுகச் சிறுகச் சேமித்து எக்மோர் பெனிஃபிட் ஃபண்டில் சேர்த்து வந்தார்.

நிலங்களில் வரும் வருமானத்தைக் கணக்கெடுக்க வருடாந்திர போன இடத்தில் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் ஸ்ரீ ஸ்ரீனிவாசன் என்பவரது முதல் புத்திரன் சிரஞ்சீவிநாராயணன் நல்ல வேலையில் இருப்பதாகவும்,

தற்போது சென்னையில் அக்கா வீட்டில் இருப்பதாகவும் செய்தி கிடைத்தது.
உடனே தன் தம்பியையும்,அண்ணாவையும் அழைத்துக் கொண்டு ,
பொன்னியம்மன் கோவில்லருகில் ,23ஆம் நம்பர் பஸ் பிடித்து

மயிலாப்பூருக்கு விரைந்தார். புஷ்பா என்கிற பாப்பாவைப் பெண்பார்க்க வருமாறு ஸ்ரீமதி பத்மாசனியிடம் ,தங்கள் குடும்ப விவரங்களைச் சொல்லி அழைத்தார்.

வீரராகவனின் நேரடீப் பேச்சில் மனம் கவரப்பட்டு அந்த அம்மாவும்,

தன் தாயார் தகப்பனார் இருவரையும் கலந்து பேசி அடுத்த வெள்ளிக்கிழமை பெண்பார்க்கப் புரசவாக்கம் வருவதாகச் சொன்னார்.இதில் என்ன வித்தியாசமான விவரம் என்றால் சௌபாக்கியவதி புஷ்பாவுக்கும் ,சி.நாராயணனுக்கும் ஜாதகமே இல்லை என்பதுதான்.
பின் எப்படிப் பொருத்தம் பார்த்தார்கள்?

Sunday, July 29, 2007

இனிக்கும் முதுமை

முதுமை எப்போதுமெ இனிமை. குழந்தைகளுக்கு.

சீக்கிரமே வயசானால் படிக்க வெண்டாமே என்று தோன்றும்.

வேலைப் பளு தாங்க முடியாமல் பொருமும் 40 வயது அம்மாக்களும், அலுவலகத்து அடிமைத்தனத்தின் எல்லையில் நின்று வி.ஆர்.எஸ் வாங்க நினைக்கும் இன்னும் பிற சிலருக்கும் முதுமை ஒரு வரம்.


தாத்தாக்களுக்கும் பாட்டிகளுக்கும் தங்கள் அம்மா அப்பா எத்தனை வயது வரை வாழ்ந்தார்கள் என்ற நினைவு ஓடும். அந்தக் காலத்தில் தங்கள் மாமியார் மாமனார் தங்களை நடத்திய விதம்(நல்லதும், கெட்டதும்) ஞாபகம் வருதெ ரேஞ்சில் ஓடும் . மனைவிகள் சிந்தனை,மணநாட்கள், தங்கள் தந்தையர் அனுபவித்த பொருளாதாரத் தொந்தரவு, தாயார்கள் சொன்ன வார்த்தைகள் , மாமியார் வீட்டில் முதல் நாள்,முதல் சாப்பாடு(?) நம்மைக் கண்டுகொண்டவர்கள், தோழமை பேசினவர்கள், சரியான மொஃபஸ்ஸ்ல் என்று வர்ணித்தவர்கள் இந்த மாதிரி நல்லதும் பொல்லாததும் நினைவுக்கு வரும்


கணவர்களோ மாமனாரிடம் உரிமை கொண்டாடிய விதம், மச்சினர்கள் அருமை, இல்லையானால் கடி,அறுவை , புது மனைவியை நெருங்க விடாமல் கொட்டம் அடித்த வானரங்கள், மனைவியின் மற்ற சொந்தங்கள் தன்னை மிருகக்காட்சியில் புதிதாக வந்த பணம் பறிக்கும் ஜந்து போல பார்த்தது. அலட்டிக் கொண்டது, இவைகள் ஞாபகம் வரும்.


குழந்தைகள்,படிப்பு,வேலை,இன்ஷுரன்சு,கார் வாங்கிய,கடன் வாங்கிய, இத்தியாதி இத்தியாதி நினைவுகளும் வரும் என்று நினைக்கிறேன். இது :-)) நமக்குத் தெரியாத டாபிக்."-)) இவை ஓயும் நேரம் முதுமை நம்மை நெருங்கி விட்டதா என்று யாரும் யோசிப்பதில்லை. பெண்ணுக்குப் பையன் தேடும் போதும், பையனுக்குப் பெண் தேடும் படலம் ஆரம்பிக்கும்பொதும் ஒரு நூதனமான சங்கடம் வரும். என்ன தெரியுமா?

நாம இத்தனை நாள் வரை இருந்த சோ அண்ட் சோ நிலைமை மாறி, பொண்ணோட அம்மா, அப்பா ஆகும்போதும், இல்லை பையனோட அம்மா, அப்பாவாகத் தெரியும்போதும், "அதோ வராளே "ஆறு கஜப் பச்சை புடவை அவதான் நம்ம ஜில்லுக்கு மாமியாராம்." வரச்சேயே வாசனை பார்த்தியா. எல்லாம் ஃபாரீன். நம்மாத்து மாப்பிள்ளை சம்பாத்தியம் இப்ப்டித்தான் போரது போல" என்ற பேச்சைக் கேட்க நேரிடும்.இல்லாவிட்டால்(நம்) பெண் போட்டோ,ஜாதகம் இவற்றோடு வரப்போகும் (வருவது வராதது அப்புறம் தான் தெரியும்) சம்பந்தி வீட்டுக்கு ஒரு தளர்ந்த, எதிலேயுமெ ஃfஃஒகஸ் பண்ணாத பார்வையோடு அங்கே இருக்கும் எல்லோருக்கும் (ஸப்ஜாடா) வணக்கம் சொல்லி, பழங்கள்,பூக்கள் எல்லாவற்றையும் வைத்து விட்டு ஒட்டியும் ஒட்டாமலும் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, நிமிரும்போது ஒரு கேள்வி பாயும். 'நீங்கள் எல்லாம் ரொம்ப மாடர்ன் போலத் தெரியறதே.' "ஏன்னால் எங்க பக்கம் 9 கஜம் புடவை தான் ,எல்லோரும்". சுத்தி முத்திப் பார்த்தால் சில 6கஜம், சல்வார் காட்சிக்கு வந்து போகும். கேள்வி கேட்டவர் யோசிப்பது என்ன என்று அர்த்தம் புரியாது, இது மட்டும் இல்லை , நம்ம பையனுக்காகப் (பெண் பார்க்கப்) போகும்போதும், நிறைய சோதனைகள் வரும். அப்போது புரியும் ஒன்று, நாம் ஏற்கனவெ செகண்டரி சிடிசன் ஆயாச்சுனு.... அவர்களுக்கு நம் பையன் தான் முக்கியம். கல்யாணம் வரை கொஞசம் வால்(இருந்தால்) அசைத்துப் பார்க்கலாம்.. பெண் வீட்டு மனிதர்களுக்கு நாம் மனித வேடம் போட்ட பூதம். 'ஐய்யோ பையனோட அப்பா எவ்வளவோ தேவலை.' இது இருக்கு பாரு, ....(என்னோட திசையில் எல்லோரும் பார்த்த வண்ணம் இருப்பார்கள்") . நாம் அப்போது அப்ப்ரூவல் வாங்கக் காத்திருக்கும் ,அதான் எத்தனையோ இடங்களில் காத்து இருக்கோமெ, காலேஜ் வாசல், ஸ்கூல் வாசல் இத்தியாதி அதுபோல், உலகத்தில இருக்கிற நல்லதையெல்லாம் முகத்தில் சேர்த்துக் கருணைக் காமாட்சியாகக் காட்சி கொடுத்தாலும் ம்ம்ம்ஹூம், ஒண்ணும் தேறாது. பிராண்டட்..!....------- மாமியார். அதனால் இவள் இப்படித்தான். லேபல் ஒட்டாத குறை. சரி இப்போ பழைய கேள்விக்குப் போவோம். நீங்கள் எல்லாம் மாடர்னா? என்று கேட்ட அம்மாவின் தொனி எனக்குப் புரியவில்லை. என் குறைந்த வெட்டுண்ட தலைமுடி தான் கவனத்தை இழுத்து அந்த மாதிரி பேச வைத்தது என்று. பிறகுதான் தெரிய வந்தது. அதற்காக நான் சவுரியோ, நீண்ட கூந்தல் தைலமோ பாவிப்பதாக இல்லை. அது அந்த அம்மாவுக்குத் தெரியாதே


இந்த மாதிரி என் கணவருக்கும் சில பல கேள்விக்கணைகள் ,
சார் எப்பவுமே பாண்ட் தானோ. என்னதான் இருந்தாளும் நம்ம வேஷடி அங்கவஸ்திரம் மாதிரி ஒரு டிக்னிடி இந்த மாடர்ன் டிரெஸ்ல வரலை சார். இந்த மாதிரிக்கேள்விகள் ,

வயதானவராகத் தோற்றம் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினாலும், எப்படியோ தப்பி இப்போது நிஜமாகவே வயதான (கொஞ்சமே கொஞ்சம் ஒரு 10%) அப்பியரன்ஸ் கொடுக்கிறோம்.


ஆதலினால் நாமெல்லாம் செய்ய வேண்டியது என்ன வென்றால் (ப்ளாக் சின்னப் பசங்களை சொல்ல வில்லை,) 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான்.


கூடு மான மட்டும் சீக்கிரமே ஆன்மீகப் பாதையில் செலுத்தி,ஹிண்டு க்ராஸ்வேர்ட் போட்டு, சபாவில் மெம்பராகித், தவறாமல் டை (தலை) போட்டுக் கொண்டு , சிகாகோ,எல்.ஏ, இல்லினாய், ஓஹையோ,கிலீவ்லாண்ட் சாஃfட்வேர், விசா பிரச்சினை,அரோரா ,பிட்ஸ்பர்க்,கோவில்,மாப்பிள்ளை (இல்லாட்ட) பையன் இரண்டு கார் வைத்து இருப்பது, பெரிய வீடு வாங்கி கிரிஹப்பிரவேசம் செய்தது, என்று பேச ஆரம்பித்தால் முதுமை பக்கத்தில் கோலாகலமாக வருகிறது என்று பொருள். வரணும். !!!!!!இல்லாவிட்டால் யார் விட்டார்கள்/ '

அய்யோ பாவம் நமம ஜில்லு மாமியார் கொஞ்சம் பாரியா இருக்கார் இல்லியா, அதனாலே அடிக்கடி தொப் தொப் (நான் விழும்போது இந்தச்சத்தம் கேட்ட நினைவில்லை) என்று விழுந்து விடுகிறாராம். ம்ம் இந்தப் பொண்ணு தான் எல்லாம் கவனிச்சுக்கிறதுனு சொல்லும்போது எனக்கு சீக்கிரமே வயசாகிவிடும் என்றுதான் தோன்றுகிரது.

'இது சொந்தக் கதை இல்லை.' இப்படி சொன்னால் டிஸ்கி என்று அர்த்தமா? அப்படியே சொல்கிறேன். இது கற்பனை. அப்படி இப்படி போயி,, எப்படி? ஆரம்பித்த இடத்திற்கே வந்து விட்டேனா?

Wednesday, July 25, 2007

205,குடமிளகாய் கட்லட்

முன்னமேயே சொல்லி இருந்தது போல எங்க சிங்கத்துக்கு ஊரோட ஒட்டி வாழப் பிடிக்காது. அதனால் நாங்க வாடகைக்கு இருக்கிற இடமெல்லாம் தனியா, கொஞ்ச தூரத்தில தேசிய நெடுஞ்சாலை கண்ணில தென் படற மாதிரி அமைந்திருக்கும்.அப்படி அமைந்த வீடு ,சேலத்தில ரயில் நிலையத்திலிருந்து பக்கத்தில உமா தியேட்டர் ஒட்டி ஒரு பத்து வீடுகளுக்கு நடுவில் ஒரு வீடு.
சுத்திவர வயக்காடு.
தவளை சார் தினம் வாசப்படியில் தவம் கிடப்பார்.
நான் வாசல் தெளிக்கும் போது
தண்ணீர் மேலே பட்டபிறகு என்னை ஒருதடவை முறைத்துவிட்டு தாவுவார், அவர் என் மேல் தாவாமல் இருக்கணுமே பெருமாளேனு நினைச்சுப்பேன்.
அந்தப் பத்து வீட்டில முத வீட்டில் ஒரு வயசானவர்,நடு வீட்டில் நான்,
அந்தக் கோடியில் ஒரு பாட்டி,தன் பேரன் நாச்சியப்பனோடு ....இவ்வளவுதான் ஜனம்.
காலை 7.25க்கு ஜீப் வரும் ,ஐய்யா ஏறிப் போய் முனை திரும்பும் வரை பார்த்துவிட்டு, உள்ள வந்து ராத்திரி மிச்சம் வைத்த சாதமும்,தயிரும் பாட்டி கொடுத்த ஆவக்காயும் ஒரு கிண்ணத்தில் வைத்து உள்ள தள்ளினால் அடுத்த இரண்டு மணி தூக்கம்தான்.
அது  முதல் மகன் எண்ணில் கருக்கொண்ட நான்காவது மாதம். மதுரைக்குப் பிரசவத்துக்குப் போக இன்னும் நாலு மாதம் இருக்கே ,எப்படிடா பொழுது போகும் என்று யோசிப்பேன்.
கதையெல்லாம் படிச்சு முடிச்சாச்சு. வானொலி கிடையாது.
வரிந்து வரிந்து உற்றார் உறவினருக்கெல்லாம் கடிதம் போட்டாச்சு.
கடிதம் கொண்டுவரும் தபால்காரர்,பால்காரம்மா,நாடார்கடைப்பையன்,காய்வண்டிக்காரர் எல்லோருடய குடும்ப க்ஷேமலாபங்களெல்லாம் விசாரித்து வைத்தாச்சு.

வயல்களைத் தாண்டி இருக்கும் ரோட்டில் எப்பவாவது இருக்கும் போக்குவரத்தையும் ஜன்னல் வழியாப் பார்த்து அலுத்துப் போன நாட்களில்தான் ரேவதி பஞ்சரத்தினம் பக்கத்து வீட்டுக்குக் குடி வந்தாள்.

அவளும்,அவளுடய ரயில்வே அண்ணாவும்,அம்மாவும்
சென்னையிலிருந்து சேலத்துக்கு மாற்றல் கிடைத்து,ரயில் நிலையத்துக்குப் பக்கத்திலிருப்பதால் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து வந்தார்கள்.
என்னைப் போலவே படிப்பு,பாட்டு, சினிமா என்று ஒரே ஒத்த விஷயங்களில் ஈடுபாடு. ஒரு வயது என்னை விட மூத்தவள். கல்லூரியில் ஹோம்சயன்ஸ் முடித்துவிட்டு யார்மேல் தன் பிராக்டிகல் வகுப்பை நடத்தலாம்னு நினைச்ச போது நான் கிடைத்ததாகச் சொல்லுவாள்.

அவள் சொல்லிக் கொடுத்த குடமிளகாய்க் கட்லெட் செய்முறை இங்கே பதிகிறேன்.
உங்களுக்கும் தெரிந்திருக்கும். இன்னோரு தடவைப் படிப்பதால் குடமிளகாய் கோபிக்காது.:))

இரண்டு பேருக்கு கட்லெட் செய்ய 2 பெரிய குடமிளகாய் சரியாக இருக்கும்.
சிற்றுண்டி...
தேவை....

திடமான பெரிய குடமிளகாய் இரண்டு.

ஸ்டஃப் செய்யத் தேவையான காய்கறிகள்
1, பட்டாணி,
2,காலிஃப்ளவர்,
3,காரட்,
4,பீன்ஸ்,

வேகவைத்து உரித்த உருளைக்கிழங்கு 4 பெரியது.

சேர்க்க வேண்டிய மசாலா
கசகசா,சோன்ஃப்,கிராம்பு,துளி இஞ்சி,சின்னவெங்காயம் 3,பச்சைமிளகாய் 4

மேல்மாவு மைதாவும் ப்ரெட் தூளும்.

செய்முறை.
1, இரண்டு குடமிளகாயையும் நன்குக் கழுவித் துடைத்து,
நான்கு பாதிகளாகச் செய்து கொள்ளணும்.
அதில் இருக்கிற விதையெல்லாம் எடுத்துவிட்டுத் தயாரா வைத்துக் கொண்டு,
நாலு உருளைக் கிழங்கையும் குக்கரில் உப்புப் போட்டுவேகவைத்துப் பொடித்து மாஷ் பண்ணவேண்டும்.
,
2 காய்கறிகறிகளைப் பொடியாக அரிந்துகொள்ளணும்.
எல் லாவற்றையும் உப்பு,மஞ்சப்பொடியோடு வேகவைக்கணும்.

3,
மசாலா விஷயங்களை வாணலியில் வறுத்துப் பொடி செய்து கொள்ளணும்.

4,மைதாமாவைத் தண்ணீர் விட்டு பஜ்ஜிமாவு மாதிரிக் கரைத்துக் கொள்ளணும்.
5,
காய்ஞ்சுபோன ப்ரெட்டைத் தூள் செய்து தனியா வைத்தால் நநம் ரெடி.
வேகவைத்த உருளைக்கிழங்கோடு ,காய்கறி,மசலா அரைத்தது எல்லாவற்றையும் சேர்த்துப் பிசைந்து வைத்துக் கொள்ளணும்.

ஒரு பெரிய வாணலியில் நாலே நாலு கரண்டி ரிஃபைண்ட் எண்ணையை விட்டு மிதமான சூட்டில் வைக்கணும்.
குடமிளகாய்க் கிண்ணங்களில் இந்தக் காய்கறிக் கலவையை நிரப்பி,
மைதாமாவுக் கரைசலில் முக்கி எடுத்து ப்ரெட் தூளில் ஒத்தி
சுட்ட எண்ணையில் ஜாக்கிரதையாக வைக்கணும்.
ஒரு பக்கம் வெந்தவுடன்
அப்படியே மாற்றி குடைமிளகாயோடத் தலைப்பக்கத்தை வைக்கணும்.
வடிவம் மாறாமல் அழகா இருக்கணும் இல்லையா.
இப்படியே பொறுமையா நாலு கட்லெட் என்று சொல்லப்படும் இந்த டிபனை
செய்து
புதிதாக் கலயாணமான,
அம்பி,கைப்புள்ள இவங்களுக்கு உபயோகமான பதார்த்தமாக் கொடுக்கிறேன்.

தப்பு ஏதாவது இருந்தால் அது இப்போது என்னைப் பிடித்திருக்கும் காய்ச்சல் பொறுப்பு.

நல்லா இருந்தா வல்லிம்மா காம்ப்ளிமெண்ட்.:))
சொல்ல மறந்துட்டேனே,
புதிசா ஒரு தோழி எங்க பேத்திக்குக் கிடச்சிருக்கா. அவ பேரு லல்லிம்மா:))

Friday, July 20, 2007

சமயபுரத்து அம்மா


எட்டு வயதிலிருந்து இந்த அம்மா முகம் நினைவில் நிற்க ஆரம்பித்தது.
ஒரு சுதை உருவில் உட்கார்ந்து அருள் தரும் ஒரு நிஜமான அம்மா இவள். சமயபுரம் மாரியம்மனை தெற்கில் எல்லோருக்கும் வருடம் ஒரு தடவையாவது நினைவுக்கு வரும்.
வருடாந்திர விடுமுறையின் போது கண்டிப்பாகப் போய் வரும் கோவில்களில் இந்த அம்மாவும் இருப்பார்.
திருச்சி மன்னார்புரத்தில் நாங்கள் தங்கியிருந்த நான்கு வருடங்களும் முக்கால்வாசி ஞாயிற்றுக்கிழமைகள் காலையில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சமயபுரம் வந்துவிடுவோம்..
ஆடி மாதம் கேட்கவே வேண்டாம்.
எத்தனை கூட்டம் இருந்தாலும் அது நகர்ந்து அம்மாவைப் பபர்த்தபடி போய்க்கொண்டே இருக்கும்.
நம் முறை வந்ததும் பூசாரி அய்யா அம்மாவுக்குத் தீபம்காண்பிப்பார்.
இத்தனை மக்களைப் பார்த்துப் பார்த்துக் கருணை வழங்கிய கண்கள் இன்னும் அகன்று என்னைப் பார்ப்பதுபோல் இரூக்கும்.
அங்கு கமழும் சாம்பிராணிப் புகை,கற்பூரத்தின் வாசனை,அம்மாவின் மேல்பூச்சாக ஒளிவிடும் சிவந்தவண்ணம் ,ஆயிரம் தீபங்களுக்குச் சமமாக ஒளிரும் முக மண்டலம்....
இவ்வளவு சக்தியும் நம்மை ஆகர்ஷிக்கும்.
அந்த அனுபவம் இந்தக் கோவிலில் ஒன்றில்தான் நான் உணர்வேன். சன்னிதியை விட்டு வெளியே வந்து மாவிளக்குகள்,அலகு குத்தியவர்கள் இவர்களோடு பிரகாரத்தைத் திரும்பும்போது அம்மாவின் இன்னோரு பிம்பம் காத்திருக்கும்.
பகல் பன்னிரண்டு மணி அளவில் அந்தத் தீர்த்தத்தை மேலே தெளிப்பார்கள்.
அந்தத் தீர்த்தம் மேலே தெறித்ததும் தனி மகிழ்ச்சி. அம்மாவை மீண்டும் பார்க்க வருவோம் என்ற நம்பிக்கை துளிர்க்கும்.
வெளியே வந்து யானைக்குத் தலையைக் காண்பித்து,இன்னுமொரு சமயபுரம் படம் வாங்கிக்கொண்டதும், அடுத்தாற்போல சசப்பிடப்போகும் நுங்கை நினைத்தபடி பயணம் தொடரும்.
Thursday, July 19, 2007

படம், படம்,படம்,படம் பதிவிலேஇந்தப்படங்கள் அனைத்துமே வீட்டிற்கு அருகில் இருக்கும் Neuvelt Parkஇல் எடுக்கப்பட்டவை.
இன்னும் ஒன்று அப்லோட் செய்ய முடியவில்லை.கடைசிப்படத்தில் பின்னனல் இருப்பது டைனசார் பொம்மை. முன்னால் இருப்பது உண்மையான உயிருள்ள நாய்.

Wednesday, July 18, 2007

கொழுப்பில்லாத கூட்டு

இங்கே இருக்கும் பல குடும்பங்களில் அவரவர் பாரம்பரியங்களை விடாமல் பின்பற்றிவரும் பெண்களும் இருக்கிறார்கள்।
அவர்களில் ஒரு பெண் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவள்। அவளும் கணவரும் குழந்தைகளுமாக ஸ்விட்சர்லாண்டில் கிட்டத்தட்ட 12வருடங்களாக இருந்து வருகிறார்கள்।இரு மகன்களும் ஆங்கிலப்பள்ளியில் படிக்க,இந்த அம்மா பொழுதுபோவதற்காக நம் ஊர் சமையல் முறை வகுப்புகள் ஆரம்பித்து

நடத்தி வருகிறார்கள்।அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட குறிப்பு கீழே தருகிறேன்।

இது தால்,சப்ஜி,கூட்டு வகை.இது சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ளவோ, இல்லை அப்படியே சாப்பிடவோ,

சாதமுடன் கலந்து சாப்பிடவோ இசைவாக இருக்கிறது।உப்பும் காரமும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்றபடி சேர்க்கவும்।தேவையான பொருட்கள்।१, பயத்தம்பருப்பு....200கிராம்२ சேர்க்கக்கூடிய காய்கறிகள்

ஸூக்கினி,

முட்டைக்கோஸ்,

சௌ சௌ

தக்காளி

பட்டாணி,

காரட்,

குடமிளகாய்அரைக்க வேண்டிய மசாலா

தனியா 3 தே.கரண்டி
மிளகு 2 தே.க
பூண்டு 2
சீரகம் 3 தே.க
பெருஞ்சீரகம்..2 தே.க

இவைகளை வெறும் வாணலியில் வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

குக்கரில் பயத்தம்பருப்பையும்,காய்கறிகளையும் தனித்தனியே வேக வைத்து எடுத்துக் கொண்டு,
ஒரு தேக்கரண்டி எண்ணெயில் சீரகம் கொத்தமல்லி,கருவேப்பிலை இவற்றைத் தாளித்துக் கொண்டு ,அதில்
பயத்தம்பருப்பு,காய்கறிகளை ஒன்றாகப் போட்டு உப்பும் சேர்க்கவும் .

ஒரு கொதிக்குப்பிறகு அரைத்த மசாலாவையும் சேர்த்து வாசனை வந்ததும் இறக்க வேண்டியதுதான்.

மேலாப்புல பெருங்காயப் பொடி விருப்பமிருந்தால் தூவலாம்.
அத்தனையும் ஒன்றாக அரைத்து சூப்பாகவும் குடிக்கலாம்.


>

Friday, July 13, 2007

200,ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி

பதிவுகளுக்குக் கணக்கு,எண் எல்லாம்கொடுத்துவைப்பதுவும் ஒரு நன்மை என்று இப்போது புரிகிறது. இவரோ
இல்லை இவரோ


கண்டிப்பாக இவரும் நம் செயல்களை எல்லாம் கவனிக்கிறார்கள்.
இதோ இந்தக் கிருஷ்ணரும் இருக்காரே, இவர் பகவத்கீதையில் சொல்லி இருப்பது கடமையைச் செய்.பலனை எதிர்பாராதே.அப்படின்னால் பதிவு போடு. பின்னூட்டம் வந்தா சரி...வரலியா...அதுவும் சரி அப்படின்னுதான் அர்த்தம்.

மேலே இருக்கும் மூலராமர் படம் ஸ்ரீ ஸ்ரீ ராயர் என்று அன்பாக அழைக்கப்படும் ஸ்ரீகுரு ராகவேந்திர ஸ்வாமிகளும்,மற்றும் அவருக்கு முந்திய மாத்வ மட குருக்களும்,அவருக்குப் பின் வரும் குருக்களும் பூஜை செய்யும் சிலாரூபம். என் தமிழ் அறிவு மிகக் குறைவு என்று என் பதிவுகள் படிக்கும் அனைவருக்குமே தெரியும். இருந்தாலும் மனதில் தோன்றும் எண்ணங்களைப் பதிந்து விட வேண்டும் என்பது எப்போதுமே எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும்.
பேச முடியாத எத்தனையோ கற்பனைகள் ,,எழுதுவதற்குச் சுலபமாக இருப்பதே இதற்குக் காரணம். பேசுவது ஒரு கலை. எதிராளிக்கு நாம் சொல்வது முதலில் விழ வேண்டும்.
அது சொல்லும் விஷயத்திலும்,கேட்பவர்கள் அதை வரவேற்கும் விதத்திலும்
மாறி விடுகிறது.
முற்காலம் மாதிரி "ஏன்னாவொ , இன்னாங்க,!வோ " சரிப்பட்டு வருவதில்லை என் விஷயத்தில். ஏதோ ஒரு காரணத்தால் சொல், வலிமை இழக்கும்போது மௌனமே நம் எண்ணங்களுக்குச் சாட்சி. வாதாடும் வக்கீல்களுக்குத் தனித் திறமை வேண்டும் இல்லையா. அதுபோல பொய்யும் புனை சுருட்டும் சொல்லவும் கற்பனை வளம் வேண்டும். அப்படிப்பார்க்கப் போனால் வெறும் நிதர்சனமான உண்மைக்குக் கூட நிறைய முலலம் போடவேண்டி இருக்கிறது. சரஸ்வதி கடாட்சம் யாருக்கு நிறைவாகக் கிடைக்கிறதோ,அவர்களின் வாக்கு பிறரைச் சென்று அடையும் என்பது நியதி.
என் நம்பிக்கையைத்தான் இந்தப் பதிவில் எழுத நினைக்கிறேன்.
அந்த சரஸ்வதியே நேரில் வந்து ஆட்கொண்டதில் ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் மகிமை தொடங்கியது. எத்தனையோநபர்கள் ,பெரியவர்கள் இல்லம் துறந்து மடங்களின் பொறுப்பை ஏற்று இருக்க, இந்த குருராஜருக்கு மட்டும் ஏன் இவ்வளவு வசீகரம்,பெருமை என்று யோசித்திருக்கிறேன்.,
ஒரேஒரு புத்தகம் கையில் கிடைக்கும் வரை....
அதுதான் திரு.அம்மன் சத்திய நாதன் என்பவர் எழுதின "ராகவேந்திர மகிமை" என்கிற புத்தகம். அது என் கைக்கு வந்ததே ஒரு அதிசயம் தான்.மாற்றுமருத்துவத்தில் எனக்கு நம்பிக்கை அதிகம். மருந்துகள் மட்டுமே ஒருவர் வியாதியிலிருந்து விடுபட உதவாது என்பதும் என்னுடைய தீர்மானம். அதன் விளைவாக ரெய்கி என்ற ஆல்டர்னேட் மருத்துவ முறை கற்க விரும்பினேன். அது தொடர்பபகப் புத்தகங்கள் படிக்க ஆரம்பிக்கும்போதுதான் முறையாக ஒரு ஹீலரிடரிமிருந்து(reiki Master)
அதைக் கற்கவேண்டும் என்று தெரிந்தது,.
முறைப்படி அணுகி ஒரு அம்மாவிடமிருந்து இந்த முறையைக் கற்றபோது வழிவழியாக வரும் superior souls and Gurus ,Guides ஆசிரியர்கள் பற்றிய விவரங்கள் கிடைத்தது. எத்தனையோ வெளிநாட்டு உள்நாட்டு மகான்கள், இவர்களைப் பற்றிப் படிக்கும்போது எனது குருவான ரெய்கி மாஸ்டர் தன் வாழ்க்கையின் ஒரு சம்பவத்தை விளக்கினார்.
அப்போதுதான் ஸ்ரீராகவேந்திரரின் வரலாறும் அதன் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளும் தெரிய வந்தன.
மற்றுமொரு மகான் என்று விட்டிருப்பேன்,அன்றே எனக்கு முதுகு வலி வராமல் இருந்திருந்தால்.... இரவு நேரம் வலிதாங்க முடியாமல் தவித்தபோதுதான் குருராஜரை நினைக்கத் தோன்றியது.வலி தாங்க மருந்து இருந்தாலும் அதைச் சாப்பிட்டால் வரும் பக்கவிளைவுகளத் தாங்கும் பக்குவம் என் வயிற்றுக்குக் கிடையாது. பயம் வேறு. இது வெறும் முதுகுவலிதானா,வேற ஏதாவதா...உயிர் வெல்லக்கட்டி அல்லவா.அந்தப் பயம். வாய் லக்ஷ்மிநரசிம்மனைக் கூப்பிடுகிறது, மனம் டாக்டர் செரியன் போனில் கிடைப்பாரானு அலை பாய்கிறது,அப்போதுதான், மதியம் போஸ்டில் வந்த படம் நினைவுக்கு வந்தது.
ஆஹா, இவரைப் பார்த்து அப்ளிகேஷன் போடலாம் என்று திறந்தால் ரொம்ப சாந்த ஸ்வரூபியான முகம் கண்ணில் படுகிறது. ஸ்வாமி காப்பாத்தணும் என்று வேண்டியவள் அந்தப் படத்தைக் கையில் வைத்துக் கொண்டே உறங்கிவிட்டேன்.
அடுத்த நாள் காலையிலேயே டக்டரைப் பார்த்ததும், ரத்தக் கொதிப்பு அளவுமீறி இருந்ததும் இரண்டு நாள் தேவகி ஹாஸ்பிடலில் இருந்ததும்.
என்னை அங்கே பார்க்க வந்த ஒரு தோழி அம்மன் சத்திய நாதன் புத்தகத்தைக் கொடுத்ததும் ஒரு நீண்ட கதை.
ஆனால் எதுவுமே பிரதியாகக் கேட்காத ஒரு பெரிய குருவை அடைந்துவிட்டேன் என்பது நிச்சயமானது அன்றுதான்.
அவர் உருவில் என் மற்ற தெய்வங்களும் அடங்கி இருப்பதுதான் இன்னோரு அற்புதம். அவர் படத்தைப் பார்த்தால் தெரியும்.
முதலில் தெரிவது எங்கள் குலதெய்வம் ஸ்ரீ ந்ருசிம்ஹன், பிறகு ராமன், பங்கேற்கும் ஹனுமான்,ஸ்ரீராகவேந்திரரின் இஷ்டமான கிருஷ்ணன்.
காமதேனுவாகக் கற்பக விருட்சமாக ஸ்ரிகுருராஜன் தான் எங்களைக் காப்பவர். நான்தான் மறப்பேனே தவிர அவர் என்னைக் காவல் செய்யாத தருணமே கிடையாது.
அவரே இன்னும் துணையாக இருப்பார்.Thursday, July 12, 2007

199,Bern புகைப்படப் பதிவு

இந்தப்பதிவில் நான் பதிய நினைத்த சமாசாரங்கள் எல்லாம் புகைப்படங்களில்
இன்னும் தெளிவாகத் தெரிகின்றன.

இந்தப் பூனை ஜிகெக்கு உறவாம்.
இந்தக் கரடிகள் இப்போது மரத்தில் உருப்பெற்று வருகின்றன.

இது பெர்ன் நகர ஆறு. இதன் கரைகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுவதும் வெளியேறுவதும் வழக்கம்.ஆனாலும் மிகுந்த பழமை வாய்ந்த இந்த
வீடுகளில் வசிப்பவர்கள் பரம்பரை பரம்பரையாக இங்கே இருப்பதைத்தான் விரும்புகிறார்கள்.

பெரன் நகரம் ஒரு ஓவர் வியூ. கதவு சின்னதாக இருக்கும். உள்ளேபோனால் விரிவாக வீடு அமைந்து இருக்கும். கூரையில் இருக்கும் ஆட்டிக் அறைகள் வெகு அழகு.கூரையில் ஒரு பால்கனி அதில் இரண்டு நாற்காலிகள். சூரியக் குளியலும் அதில்தான். மாலை நேர மதுஅருந்தும் இடமும் அதுதான்.
அவர்கள் சமைக்கிறார்களா என்றே எனக்குச் சந்தேகமாயிருக்கும். எல்லா உணவு விடுதிகளிலும் எப்போதும் கூட்டம்.
ஆனந்தமாக ஃப்ரீ யாக இருப்பதுபோலக் கலகலப்பு எப்போதும்.
அப்படியே இருக்கட்டும்.


Wednesday, July 11, 2007

198,என் தோழி இவள்


இந்தப் படங்கள் எடுக்கப்பட்ட ஊரில் தான் என் தோழி இருந்தாள்.அவள் வாழ்க்கைப்பட்ட இடம். இப்போது இடம் மாறிவிட்டாலும் எங்கள் இருவர் மனசிலும் அழகான நட்பு உருவாகக் காரணமான இந்த யேற்காடு எனக்கு மறக்காது.


திருமணமாகிக் கையும் குழந்தையுமாக எங்கள் வாழ்க்கை துவங்கினது சேலத்தில். அப்போது அறிமுகமானவர்கள் இந்தத் தோழியும் அவளது கணவரும்.

இருவருமே எங்களை விடப் பத்து வயது மூத்தவர்கள்.

மதப்பற்று மிகுந்தவர்கள். ஞாயிறு அன்று காலை உணவு முடிந்ததும் சர்ச்சுக்குப் போய் விடுவார்கள்.


தோழியின் கணவர் .நல்ல உயரம் அதற்கேற்ற திடமான உடற்பாங்கு. இரண்டு பேரையும் சேர்த்து நிற்க வைத்துப் பார்த்தால்

அவ்வளவு நேர்த்தியாக இருக்கும்.

அவர்களுக்குச் சென்னையிலும் எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயே வீடு இருந்தது.

எங்க மாமியாருக்கு அவரிடம் நிறைந்த மரியாதை. சிங்கத்திடம் நம்ம வீட்டில செய்த பலகாரம் எல்லாம் கொடுத்து அனுப்புவார். அந்த யானைக்குக் கொடுடா.ரசிச்சுச் சாப்பிடட்டும் என்று வேறு சொல்லி அனுப்புவார்.

தோழியும் கணவரும் சாப்பிட்டுவிட்டுப் பலகாரம் அனுப்பிய கூடை நிறைய அவங்க எஸ்டேட்ல விளைந்த ஆரஞ்ச்,மலை வாழைப்பழம் எல்லாம் போட்டு அனுப்புவார்.

மாமியாரும் அவரும் (திரு.தாவித்) பேசிக்கொள்ளும் பாங்கு ரசிக்கும்படி இருக்கும்.

எங்களையெல்லாம் வீட்டுக்குள்ளெயே அனுமதிக்க மாட்டடங்க உங்க ஜனங்க, நீங்க என்னடான்னா உங்க வீட்டுப் பாத்திரத்தயே எங்களுக்கு அனுப்பறீங்கனு அவர் கேலி காட்டுவார். அதற்கு மாமியார் ,நீ தான் பழமாக் கொடுக்கிறியே, அதற்காகத்தான் உனக்கு இதெல்லாம் அனுப்புறேன்னு பதில் சொல்லுவார். மதங்கள் ,கட்டுப்பாடுகள் இதையெல்லாம் மீறி எங்கள் இரண்டு குடும்பங்களும் பழகி வந்தன.


அவர்கள் சென்னையில் இருக்கும் நாட்கள் மிக சந்தோஷமாகப் போகும்.

செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்னு ரெண்டு பேரும் படித்துப் பேசி வைத்தது போல ஒரு சேர உறவினர் நண்பர்கள் என்ற ஒரு ராஜ்ஜியத்தையே அன்பால் ஆண்டு வந்தார்கள்.


அவர்கள் வீட்டை த் தாண்டித்தான் நான் பஸ் நிலையத்துக்கே போக வேண்டும். அவர் வீட்டிலிருந்து பார்த்துவிட்டால் போதும்,

உடனே மனைவியை அழைத்து உன் சினேகிதி போறாங்க, ஆளை அனுப்பி என்ன விஷயம்னு கேளு, வெய்யில்ல நடக்க வேண்டாம்,கரண்டு பில்லோ எந்த பில்லோ போன் பில்லோ நம்ம டாமினிக்கை அனுப்பு, அவன் கட்டிட்டு வருவான் என்று சொல்லுவார்.

மனைவியும் (திருமதி கருணா தாவீத்) உடனே வெளியெ வந்து,

இந்தா எங்கப் போற இந்த வெய்யில்ல, உள்ள வந்து காப்பி குடி,
அப்புறம் வீட்டைப் பார்க்கப் போய்க்கலாம்னு அழைத்துச் சென்றுவிடுவார்.கருணாவும் பத்து வகுப்பு வரை படித்துக் கல்யாண பந்தத்தில் புகுந்தவள்.
சித்திரம் போன்ற அழகு. அடக்கம்,அதிராத பேச்சு.
ஏற்காடு மலையில் வீட்டு நிர்வாகம் ஓயாத வேலை. மிகப் பெரிய மலைத் தோட்டம்.
அத்தனையையும் இரண்டு ஆட்களை வைத்துச் செய்து முடிப்பாள்.
காலையில் எழுந்து ,முதல் வேலை பைபிளை ப் பிரித்துப் படிப்பதுதான். பிறகு சேலத்துக்கு செல்லும் கணவருக்கு வாய்க்கு ருசியாக மணக்க மணக்க அவங்க வகைக் கறியும் குழம்பும் சுடச் சுட செய்து அனுப்புவாள்.


கைவேலை,உப்புக் கண்டம் தயாரிப்பது,வடகம் செய்வது என்று நாள் முழுவதும் வேலை.சித்திரம் வரைவதும் ஒரு பொழுதுபோக்கு. தபால் வழியாக வரும் அனைத்து ஆங்கிலப் புத்தகங்களையும்,பத்திரிகைகளையும் படித்து அதில் வரும் சமையல் குறிப்புகளை எழுதிவைத்துக் கொண்டு வரும் விருந்தினருக்குச் சமைத்துக் கொடுப்பதில் ஒரு சந்தோஷம்.


எங்களுக்கும் ஒரு ஓசி மலைவாசஸ்தலம் கிடைத்தது. அதுதான் இந்த ஊருக்கு வரும்போதெல்லாம் கருணாவை நினனத்துக் கொள்வேன். கடிதங்களில் எல்லா விவரமும் கேட்டுக் கொண்டு இங்கிருக்கும் தேவாலயங்களைப் படம் எடுத்து அனுப்பினால் அதில் பரம ஆனந்தம்.
ஏதோ ஒரு நோய் 25 வருடங்களுக்கு முன் வந்து திரு.தாவீதை (அவளுடைய நாற்பைதைந்து வயதில்) அழைத்துக் கொண்டபோதுகூட இறைவனை நோகவில்லை. எப்போதும் போல் நிதானம்,பிரேயர் என்று தான் இருக்கிறாள்.
உன்னதமான ஒரு மங்கை.அவளைப் பதிவில் எழுதிவிட வேண்டும் என்று தோன்றியதால் பதிந்து விட்டேன்.


Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Monday, July 09, 2007

197,ஃபங் ஷுவே பகுதி 2


சீன வாஸ்து முறைப்படி கற்றவர்களிடம் அறிவுரை பெற்றுக்கொள்ளுவதில் தப்பில்லை. அவசரநிவாரணம் எந்தப் பிரச்சினைக்குமே கிடைக்காது என்று தெரியவே எனக்கு அவ்வளவு நாளாகியது. அதற்குள் வீடு மாறிவிட்டது. பார்க்கும் இடமெல்லாம் சிகப்பு,மஞ்சள்.போதாக்குறைக்கு எங்க மீன் செல்லம் அரோவானா மீனாக்ஷியும் சேர்ந்தது.
தஞ்சாவூர் ஓவியங்கள் சில,கடவுளர் படங்கள் என்று சுவர்கள் நிரம்பிவிட்டன.
ஆடிக்கும்,தைமாதத்துக்கும் வெள்ளி செவ்வாய் மட்டும் கொடை கேட்டு வருபவர்கள் எப்போதும் வரத்தொடங்கினார்கள். எங்க வீடும் இன்னோரு கோவில் போலத் தெரிந்திருக்கும்.:)))))
எங்க பையன் இப்பவும் சொல்லிக் காண்பிப்பான்.
அது எப்படிம்மா நீ இப்படியானே... அசப்புல ஒரு இரண்டு மமத இடைவெளியில் உன்னைப் பார்த்துப் பயந்தே போயிட்டேன்.
கண்ணில எக்ஸ்ட்ரா கருணை, சாந்தம் ,பவ்யம் நம்ம அம்மாவக் காணோமேனு வருத்தமாயிடுத்தும்மா.
அது ஒன்றுமில்லை,அந்தக் கடைக்காரம்மா கருணையாலே ஒரு பூஜை செய்முறையும் கற்றுக்கொண்டேன்.
சாததரண அனுமார் வால் பூஜையெல்லாம் இல்லை. இது அதிகாலை எழுந்து, குறிப்பிட்ட குங்குமம் இட்டு, அதை நம் நெற்றியிலும் வைத்துக் கொள்ளவேண்டும்.
ஒரு சின்ன நெத்தியில் புருவ மத்தியில் பொட்டு,அதன்மேல்(அனுமார்) சிந்தூரம், அதன் மேல் விபூதி,அதற்கும்மேல் இந்தப் பளிச் குங்குமம்.
திடீர்னு பாக்கிறவங்களுக்கு ,இந்த அம்மன் படத்தில வர ரம்யாகிருஷ்ணனைப் பார்த்த ஷாக் ... காரண்டி.....யாக்கிடைக்கும்.
பத்துமாதம் கழித்துப் பார்க்கவந்த பெரிய பையன், கதவைத் திறந்ததும் என்னைப் பார்த்த அதிர்ச்சியில் அரண்டு போய்,ரெண்டு ஸ்டெப் பின்னாடி போயிட்டான்.
மாயா பஜார் படத்தில கடோத்கஜன் சொல்றது போல நமோ மாதா என்று சிரிக்கிறான்.
சின்னவனோ இனிமே கோவில் யானைக்கே நீ ஆசீர்வாதம் செய்யலாம்மா.அத்தன தெய்வீகமா இருக்கே என்கிறான்.
இந்தக் கோலம் பார்த்து ரெண்டு,மூணு சம்பந்தங்கள் கை விட்டுப் போயின.
பின்ன ஜோசியம் சொல்கிற மாதிரி வேஷம் போட்ட மாமியாரை எந்தப் பெண்ணோட அப்பா கல்யயணம் கட்டிகொடுப்பார்.?
எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான். பிறகு சாமியே மனசு வைத்துத் திருமணங்கள் நடந்தன.
பித்தமும் தெளிந்தது.
ஆனால் படங்கள், விசிறிகள் ,யோகம்தரும் கழுதைப்படம்எல்லாம் அப்படியெதான் இருக்கின்றன.நீளம் கருதி மிச்சக் கதையைக் குறைத்து விட்டேன்...:)))

Thursday, July 05, 2007

196,ஃபங்ஷுவேயும் நானும்....1


வாஸ்து டால்ஃபின்


Add captionFeng shui எனும் ஃபங் ஷ்வே என் வாழ்க்கையில் புகுந்தது எப்போதுனு யோசித்தேன்...உட்காரப் போனேன்.உடனே


ஓஹோ வடக்குப் பார்த்து உட்காரக் கூடாதோ!!!
 தெற்கே பார்த்துத் திரும்பி உட்கார்ந்து கொண்டேன். அம்மா சாமி கும்பிடுதுனு மினிம்மாவும் விடை வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போனாள்.

ஒரு ச்சின்ன ஸ்டூல். அதில ஒரு கண்ணாடி பௌல். தண்ணீர் நிரப்பி அதில் இரண்டு கல்லு,கொஞ்சம் எண்ணை,ஒரு ஃப்ளோட்டிங் தீபம், கொஞ்சம் பூக்கள் உதிர்த்துப் போட்டுக் கண்திருஷ்டிக்கு ஒரு வேப்பிலை, பக்கத்திலேயே ஒரு சிங்கப்பூர் சாம்பிராணி.. இன்ஸ்டண்ட் மாயாலோகம்.

த்யானம் செய்ய வசதியா, ஒரு நாற்காலி,போற வறவங்களுக்கு இடைஞ்சலா வெளி வாசல் ,பின் வாசலுக்கு நடுவில் தான் இதெல்லாம் இருக்கும்.
கைல ஜபமாலை. ,கழுத்தில ருத்த்ராட்சம்.. போதுமா. இப்பவே ஒரு பிக்சர் கிடைத்திருக்குமே. எல்லாம் நம்ம விஷுவலைசேஷனோட பெருமை.......

இது ஒரு பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வீட்டுக்கு நலம்னு நான் கத்துக்கிட்ட சீன வாஸ்து.
வீட்டில ஏதவது நல்லது நடக்கணும்னால் இது போல தீபம்,தியானம் ,சி (chi) சக்தி,,சிவப்பு ,பச்சை,கறுப்பு,மஞ்சள் நிறங்களோட மகிமை,
யின் அண்ட் யாங், நான் எலியா,புலியானு ஆராய்ச்சி....


அதாவது இந்த வருஷம் பிறந்தா இந்த மிருகம்னு சைனீஸ் ல இருக்கும்
அது பிரகாரம் நான் எலினு தெரிஞ்சுது., எங்க வீட்டுக்காரர் முயல்னோ வேற ஏதொ போட்டு இருந்தது. எலியும் பூனையும்னால் கூட ஒத்துக் கொள்ளலாம்.
எலியும் முயலும் சினேகமா இருக்குமான்னும் அப்போது திடீர்னு சந்தேகம். ஆனால் நாங்க சகித்துக் கொள்கிற சதிபதியா இருந்ததால எலியும் முயலும் தோழமை சக்திகள்தானு உறுதிப் படுத்திக் கொண்டேன். :)))


அப்படி ஒரு வாஸ்து பிரமை ஒரு பத்து மாதம் வரை ஆட்டி வைத்தது. வாஸ்து சாஸ்திரம் தப்பு என்றோ சைனீஸ் மட்டம் என்றோ சொல்ல வரவில்லை. நான் வாஸ்து விஷயத்தில் நடந்து கொண்டவிதம் கொஞ்சம் விபரீதம்..நம்ம வீட்டுக்கு வரவங்க போறவங்களுக்கெல்லாம் வாஸ்து அறிவுரைகளை வாரி வழங்குவோம்.
தாராளமாக வழங்கப்படும்.இந்த அறிவுரைகளைக் கேட்டு,அவர்கள் சுற்றிய ரீலோடு அது திருப்பி எனக்கேஇன்னும் சொல்லப் போனனல் வரவங்க எல்லார் மூலமாவும் எனக்கு ஹிண்ட்ஸ் வர ஆரம்பிச்சுது..


"ஏங்க இந்த டைனிங் டேபிள் கிழக்கு மேற்கா இருக்கலாமே,


தெற்கு பார்த்து சோஃபாவைப் போடலாமே. சம்பந்தம் பேச வரவங்களுக்கு மேல்கையா நீங்க இருக்கணும்.(அப்போது எங்க பையன்களுக்குத் திருமணம் முயற்சிகள் செய்து கொண்டிருந்தநேரம் )


இதென்ன ரம்மியா, நான் ட்ரம்ப் கார்டு விளையாட.

காம்பவுண்ட் சுவருல பிள்ளையார் வரஞ்சிடலாம். தெருவில இருந்து கண் போடறவங்க கிட்டே இருந்து தப்பிக்க வழி.


வீடு கட்டின விதமே சரியில்லீங்க, ஒரு மாதிரி அகல நீளமெல்லாம் ஆராயம கட்டிட்டாங்க."


இதெல்லாம் சொன்னவங்க, வீட்டுக்குப் பெயிண்ட் அடிக்க வரவங்க,ஏசிக்காக சுவரில இடிச்சுக் கட்டினவங்க, குளிக்கிற அறையில டைல்ஸ் போட்டவங்க,காண்ட்ராக்டர்.....இவங்களைத் தவிர புதிசா வீடு கட்டினவங்களும் அடங்கும்.


நாங்களா கேப்போம்.....??என்னிக்காவது கேட்டு இருந்தாத்தானே.......


அதற்குப்பதில் மௌண்ட்ரோடுக்குப் படையெடுத்தேன்,அப்ப ஒரு புகழ்பெற்ற ஃபங்ஷுவே கடை அங்கே இயங்கிக்கொண்டிருந்தது.(இப்ப மூடிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். :)))

ஆஹா, அந்த அனுபவத்த இப்ப நினைச்சாலும் கலங்கறது மனசு.
எவ்வளவு பெரிய முட்டாளை எங்க அம்மா அப்பா உலகத்துக்கு
வாரி வழங்கி இருக்காங்கனு.


அங்க இருந்த கடை சொந்தக்காரங்க நான் உள்ள நுழைந்ததும் ஒரு நல்ல நாற்காலியில் உட்கார வச்சாங்க. நானும் சுத்திமுத்திப் பார்த்தேன்.
கொஞ்சம் இருட்டு,வாசனை மெழுகுவர்த்திகள் வெளிச்சம் கொடுத்தன.

அத்தனூண்டு சின்னக் கடைக்குள்ள,மணிகள்,விண்ட்சைம்ஸ்,விதவிதமான ஆமை,டிராகன்,தவளை,சிரிக்கிற, குண்டா இருக்கிற புத்தா பொம்மைகள், மாலைகள்,வர்ணம் நிறம்பிய கூழாங்கற்கள்,திபேத்தியன் இசையோடு,சாம்பிராணி வாசனையோடு,பக்கத்திலேயெ சிவலிங்கம், குட்டி மீன்கள்,மோதிரங்கள்......


ஒருமாதிரி அம்மனொ சாமியோ(இப்பத்தி மொழிப்படி மந்திரிச்சுவிட்ட ஆடு) நிலைமைக்குப் போகும்போது
அந்த அம்மா உங்களுக்கு என்ன மாதிரி பிரச்சினைனு என்கிட்ட சொன்னா நான் தீர்த்துவைக்கிறேன்.

இடிக்க வேணாம்,கட்ட வேணாம். ரெய்கி,சைனீஸ் வாஸ்து இதில சொல்லப் படாத நிவாரணமே இல்லை.அப்படின்னு சொல்லி விதமான மணிமாலைகள்,மோதிரங்கள்,சிகப்பு வெல்வெட் பைகள்,விசிறிகள்,பறக்கிற வாத்துகள் படம், பெரிய பொம்மைமீன் சிகப்புக் கண்ணோட,டர்ட்டில் டோவ் இன்னும் சில பொருட்கள் மறந்துவிட்டது. (எல்லாப் பொருட்களையும் ஒரு கணிசமான
விலைக்கு வாங்கிக் கொண்டேன், வாங்க வைக்கப் பட்டேன்:))))
அதற்கும், அதாவது என் மறதிக்கும் ஏதோ மந்திரிச்சுக் கொடுத்தாங்க.)
அப்புறம் என் நடவடிக்கையே மாறிவிட்டது.

சும்மா இருந்த வீட்டு வரவேற்பறை வண்ணக்குவியலாக மாறியது
வீட்டு வாசலைப் பபர்த்து வெங்கடாசலபதி படம்,பக்கத்துலேயே பிள்ளையார்
அவங்க படத்துக்குக் கீழே ஒரு சிகப்பு வெல்வெட் சக்கரம்,அதுக்கும் கீழே மஞ்சள்தங்கக் கலரில் ஓம்,
பேரனுக்காகக் கட்டின ஊஞ்சலில் மயிலிறகுக்கொத்து.அத்ற்கு மேலெ காற்றில் ஆடினால் சத்தம் செய்யும் விண்ட்சைம்.
அது சரியா,சிங்கம் வந்து உட்கார்ந்து டிவி ஃபான் போட்டதும் கிளின்க் க்ளாங் சத்தம் போட ஆரம்பிக்குமா.டிவீல டை ஹார்ட் பார்ப்பாரா,
இந்தக் கசமுசாவைக்கேட்பாரா.....
அதுக்கு ஒரு ரப்பர்பாண்ட் போட்டுவிட்டார். விஷயம் தெரியாத நான்கோவில்மணி ஓசைதன்னைக் கேட்டதாரோனு பாடிக்கொண்டு கூடத்துக்கு வந்தால் அது வாய் மூடி மௌனியாக இருக்கு.

இந்த கட்டறதும்,அவுத்துவிடறதும் ஒரு நான்கு நாட்கள் நடந்ததும் நான் அந்த விண்ட்சைம்ஸை மாடிக்கு மாற்றினேன்.
அடுத்தாற்போல இந்த ஆசைகளை எழுதி கயிற்றில்கல்லோடு சேர்த்துக் கட்டி சுவர்மூலையில் தொங்கவிடுவது,அதுவும் தெற்குமூலை இரு பசங்களுக்கும் சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்று எழுதி ஒரு கத்திரிப்பூ கலர் தாளில் சுற்றி அதில் ஒரு அமெதிஸ்ட் கல்லையும் கட்டி பட்டு நூலில் ஜன்னல் கம்பிகளில் கட்டி வைத்தேன். மீதியை நாளை பார்க்கலாம்Tuesday, July 03, 2007

195,தண்ணீர் விட்டே துவைத்தோம்

முன்னால போட்ட பதிவில இருந்த குழம்பு ஒண்ணும் ஆபத்தான விளைவுகள் ஏற்படுத்தி இருக்காதுன்னு நினைக்கிறேன்.

ஏனெனில் அதைவிட ஆபத்தில மாட்டிக்கொண்டேன் இன்று.-))இந்த ஊரில் வாடகை அதிகம் தெரியும். பையன் முதலில் இருந்த இடம் சிறியது. திருமணம் ஆனதும் சற்றே பெரிய இரண்டு படுக்கை அறைகளும் இரண்டு குளிக்கும் அறைகளும் கொண்ட வீட்டுக்கு வந்ததும் சௌகரியம் தான்.ஆனால் துவைப்பதற்கு ஒரு ப்ளாக்கிற்கு(BLOCK) ஒரு துவைக்கும் யந்திரமும் உலர்த்தும் டிரையரும் ,ஏகப்பட்ட கொடிகள்(துவைத்ததை உலர்த்தத்தான்) கட்டிய இரண்டு அறைகள்.ஆறு வீடுகளுக்கு வாரத்தில் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை . நம்ம டர்ன் அடுத்த வாரம் முதல் நாள் வரும்.

ஆடைகள் நிறைய சேர்ந்து போச்சே.

கைக்குழந்தைக்காரியைத் தொந்தரவு செய்யக் கூடாது, என்ன ஒரு பெரிய கம்ப சூத்திரமா,

அப்படின்னுட்டு, நாமே செய்யலாம்னு ஒரு நல்ல(¨¨!!!!) யோசனை வந்ததால், மகனிடம் செய்முறையெல்லாம் கற்றுக்கொண்டேன்.

அவனும் சொல்லிக் கொடுத்துவிட்டு அலுவலகம் கிளம்பினான்.அவன் சொல்லும்போது புரிந்தது.

அப்புறம்தான் கொஞ்சமே கொஞ்சம் ஸ்டெப்ஸ் கன்ஃப்யூஸ் ஆகிட்டது. இப்பப்பார்க்கலாம்...


முதல்லே இந்தப் பூத மெஷினுக்கு ஒரு அடைப்பான்.
இது எதுக்குனு தான் தெரியலை. நம்ம ஊர் மாதிரி கதவைத் திறந்தோமா,துணியைப் போட்டாமா,கதவைச் சாத்தினோமோ,பட்டனைத் தட்டினோமா கிடையாது.

தோய்க்கிறதுக்கு ஒரு கார்ட்.

ஒரு ஃபுல் லோடு தோய்க்கிறதுக்கு இரண்டு fரான்க்.மொத்தமா பணம் கட்டி வாங்கிட்டு, சலவைக்குச் சலவை அந்த மீட்டரில் போட்டு எடுக்கணும்.
மஷினோட வாயில எல்லாத்துணியும் போட்டு விட்டுக் கதவைச் சார்த்தி, உஷ்ணம்,துணிமணிகளோட வகைக்கேத்தமாதிரி ஏதோ ஒரு ஜெர்மன் வார்த்தை...அதில இந்தக் குமிழி யைத் திருப்பணும்.

அப்புறமா கார்டு போட்டு........இங்கதான் தப்பு வந்திது.
நம்ம ஊர் மின்விசிறி மாதிரி ஸ்விட்ச். அதை வலது பக்கம் திருப்பும்படி இன்ஸ்ட்ரக்ஷன். நான் செய்தா அது ஆன் ஆனாத்தானே. ????
தண்ணி வர சத்தமும் கேக்கலை
சரிடா எதுக்கும் கார்டை இன்னோருதடவை போடலாம்னா அது கீ கீ கீனு அலற ஆரம்பித்தது. சாமி சரணம்னு அவசரமா வெளில எடுத்தேன்.சத்தம் நின்னது.
ஆனால் காலில் சில்லென்னு தண்ணீர்.

இங்கேதான் எல்லாம் சுத்தக்காரங்களாச்சே. இது எங்கேருந்து வருதுனு பார்த்தால் அந்த அடைப்பான் கார்க் இருக்கே அதுவழியாச் சும்மா கலகலனு சிரிச்சுகிட்டு தண்ணீர்.

நாந்தான் அதைச் சரியா மூடவில்லைனு புரிந்தது. கையில தோய்க்க எடுத்துப் போன சிங்கத்தோட டர்க்கிடவலை அப்படியே அங்க போட்டுப் பிழிஞ்சேன் பிழிஞ்சேன் அப்படி ஒட்டப் பிழிஞ்சப்புறம்தான் ,நிம்மதி ஆச்சு. இல்லைன்னால் மகனுக்கும் மருமகளுக்கும் யார் பதில் சொல்றது.

நம்ம அசட்டுக் கௌரவம்தான் என்னாவது.

அடுத்தாற்போல நாளைக்குத் தோய்க்க வரப் போற மேல்வீட்டு இத்தாலிக்காரம்மா பெல் அடித்து"you did not dry the place"னு சொல்லிக் காமிப்பாங்க.

ஏற்கனவே சிங்கம் செய்யற கரடிக்கு (!!!) ஆபத்து வந்து விலகி இருக்கு.
( அது இன்னோரு கதை:))))...மரத்தில சிற்பம் செதுக்கறதுல நம்ம ஐயா
எக்ஸ்பர்ட். மரத்தில செதுக்கணும்னா உளி மரத்தில பதியணும். அதுதானே முறை? இவரு செதுக்க ஆரம்பிச்சு பத்து நிமிஷத்துல மேல் வீட்டிலேருந்து டும்டும்டும்னு தலைமேலவிழற மாதிரி ஒரு டமால்னு சத்தம்.
"I am waiting for the other shoe to fall"னு சொல்லாத குறையா மேலேயே, நாங்க அத்தனை(பேத்தி,மருமவ,மகன்,நான்,சிங்கம்) பேரும் பார்க்கறொம்.
டக்டக்னு செருப்பு சத்தம். படில அத்தனை வேகமா அந்தம்மா இறங்கிப் போறாங்க.......


அப்புறம் ஒண்ணுமே இல்லை. கொஞ்ச நேரம் கழித்து மகன் மெயில் எடுத்துவர கீழே போய்விட்டு வரும்போது ஒரு நோட்டீஸ் ஒட்டீருக்குப்பா. யாரோ ஒருத்தர் காலைல எட்டு மணிக்குச் சத்தம் போட ஆரம்பிக்கிறார்.
"எனக்குத் தூக்கமே வரலை. நிறுத்தச் சொல்லுங்க. " அப்படினு பிரிண்ட் செய்து ஒட்டிட்டாங்கனு சிரிக்கிறான்.


இந்த ஊர்ல அதான் வழக்கமாம். நேர முகத்தைப் பார்த்துக் கம்ப்ளெயினிங் எல்லாம் கிடையாது. ஆன்னா,ஊன்னா போர்டில போயி முட்டிப்பாங்க போல....
வேற வழியில்லாம சிங்கம் உளியைக் கீழ வச்சுட்டாரு பையனுக்கு மனசாகலை. இந்த வீட்டெல்லாம் பார்த்துக்கிற யாசிலின் அப்படீங்கற நல்ல மனுஷர்கிட்டச் சொல்லித் தனி அறை(Storage cellar) ஒண்ணை வாடகைக்கு ஏற்பாடு செய்து கொடுத்து விட்டான்.


அது இருக்கட்டும். இப்ப நம்ம கதை தண்ணீரிலத் தத்தளிக்கீறது இல்லயா
இங்க வரலாம். உடனே மேல வந்து சிங்கத்தைச் சத்தம் போடாம கீழே வரச்சொல்லி அந்த ஸ்டாப்பரைத் திருகி மூடச்சொன்னேன். அசட்டுக்கு அறு பது நாழியும் வேலைனு நினச்சிருப்பாரோ என்னமோ.
 பாவம் .. நல்லா அழுத்தி மூடினப்புறம்,அதிசயமாக உடனே மெஷின் ஒட ஆரம்பித்துவிட்டது.
என்ன உடனே உனக்கு உன் நண்பர்களுக்கெல்லாம் சொல்லணுமே நான் வேணா அடுத்த லோட் போடட்டுமானு கேட்டார்.
சரின்னு சொல்லி இருப்பேன். என்ன இருந்தாலும் வேலை முடிக்காமல் கம்ப்யூட்டர் பக்கம் வரக் கூடாதுனு சபதம் போட்டு இருக்கோமே நானும் என் மனசாட்சியும். அதனாலே பெருந்தன்மையா விட்டு விட்டேன்..:)))

இனிமே  எனக்குத் தெரியும்னு சொல்லிட்டுத்தான்   முடித்தேன் கதையை.