Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Monday, February 18, 2013

படித்த பழம் கதை





vallisimhan






சென்னையில் இருக்கும்போது காணாமல் போன
பழைய புத்தகங்கள் இங்கே துபாயில் வீட்டு மேல் அலமாரியில் கிடைத்தன,.
அவைஎன் தந்தையால் பைண்டு செய்யப் பட்ட வீட்டுவைத்தியம்  என்ற
புத்தகமும் ஒன்று.ஸ்ரீஹரி   அவர்கள் எழுதியது. இதைப் படித்தாலே பாதி வியாதி பறந்து விடும் போலிருக்கிறது.
அங்கங்கே மிளிரும் நகைச்சுவை.
 பீரோமேல் உட்கார்ந்திருக்கும் பையனுக்கு விளக்கெண்ணெய்  குடிக்கக் கொடுக்கும் அம்மா. கூடவே அப்பா. எத்தனை உணர்ச்சிகள்!
இது அம்மாவின் தந்தை சேர்த்துவைத்து அம்மாவுக்கு அனுப்பிய விகடன் அத்தியாயங்கள்.
.
பிஸ்ரீ அவர்களின் கம்பராமாயணக் குறிப்பு.  ஸ்ரீரங்கம் நரசிம்மன் ஒரு கதை எழுதி இருக்கிறார்.
சியாமா ''என்பவர் எழுதிய கதை அழகான மணியான
ஓவியங்கள்,
ஸ்ரீதர் அவர்களின்
நகைச்ச்சுவைத் துணுக்குகள்,
விதவிதமான  விளம்பரங்கள். அந்நிய நாட்டு நடிகைகள் போஸ்  கொடுக்கும்
விளம்பரங்கள்.
சியாமா  எழுதி இருக்கும் வேளைவரவில்லை கதை மனித எண்ணங்கள்
புனித மடையும் நேரம் மரணம் நெருங்கும்போது என்பதை விளக்கமாகக் கோர்வையாக
எடுத்துச் செல்லுகிறது.
வியாபாரி,இளம்சந்நியாசி,
இரு குழந்தைகள்,
கேப்டன் அமர்நாத்,
விமானப் பணிப்பெண்
சமூக சேவகி அம்மையார்  எல்லோரும் வேறு வேறு விதத்தில்
அந்த  ஆபத்தை உணருகிறார்கள்.
இளம் சந்யாசியும்,பணிப்பெண்ணும் மனம் தளராமல் மற்றவர் நலனை வேண்டுஜ்கிறார்கள்.
விமானம் ஆபத்தைக் கடந்து தரை  இறங்கியதும்
ஏறும்போது இருந்த மனோபாவம் மாறாமல் அனைத்துப் பயணிகளும் பிரிகிறார்கள்.
மயானவைராக்கியத்தை நினைவூட்டியது இந்தக் கதை.
இன்னோரு வியாபாரியை ஏமாற்ற நினைத்த செண்பகனார்
ஆபத்தில் மனம் மாறி,
விமானம் தரை தொட்டதும்
பழைய வேலையை தொடருகிறார்.
ரத்து செய்து பிரிந்த கணவனைச் சந்திக்க விழைந்த சமூகசேவகி
அதைச் செய்யாமல் கவர்னர் மாளிகையை நோக்கி விரைகிறார்.
இரு குழந்தைகளும் பத்திரமாகத் தாய்தந்தையரைக் கட்டி அணைக்கின்றன.
கடவுள்  நம்பிக்கை இல்லாமல் இருந்த காப்டன் அமர்நாத்
மனைவிக்கு  ஃபோன் செய்து இனிக்  கடவுளை நம்புவதாகச் சொல்லுகிறார்.
இளம் சந்யாசியும்,
விமானப் பணிப்
 பெண்ணும் இன்னும் வேளைவரவில்லை என்று சொல்லியபடி பிரிகிறார்கள்.
எளிமையான கதைகள்.  எளிமை எழுத்திலும்  பளிச்சிடுகிறது.





எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Saturday, November 20, 2010

நிலவும் வானும் நிலமும் கதிரும் பயிரும்..2


நிலவும் வானும் நிலமும் பயிரும்


++++++++++++++++++++++++++++++++++++++++

10:42 AM 11/20/2010

இந்தக் கதை-சம்பவத்துக்கு அடிநாதம் ஒரு குடிப் பழக்கம் கொண்டிருந்த தந்தை.



அவர் பெயரெல்லாம் அவசியமில்லை. பாதிக்கப் பட்டவன் பரத். அவனுக்கு இப்போது தந்தையும்


அன்னையுமாக இருப்பவர்கள் அவனது மாமாவும் மாமியும் தான்.

அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை.



தூத்துக்குடியில் குடும்பம் நடத்திவந்த பரத்தின்

பெற்றோர்கள்,நல்லதொரு கம்பெனியின் ஆதரவில் ஆநந்த

வாழ்க்கை நடத்திவரும் போது நடுவில் வந்த வழக்கம்

இந்த மது அருந்துவது.

தூத்துக்குடியில் ஒரு செல்வந்தர் பரத்தின்

அப்பா அலுவலகத்தின் வாடிக்கையாளர்.



எப்பவும் எந்த விசேஷமாக இருந்தாலும் அவர்கள் வீட்டிலிருந்து வண்டி வந்து

இவர்களை அழைத்துப் போகும்.

வேற்று மதத்தினராக இருந்தாலும் வித்தியாசமெல்லாம் கிடையாது.

அவர்கள் வீட்டிலும் குழந்தைகள் இருந்தன.



இன்னும் இரண்டு மூன்று தோழர்கள் சேர்ந்து கொண்டால் நேரம் போவது தெரியாது.

சீட்டுக்கட்டும்,மதுவும், மற்ற சகலகொறிக்கும் பண்ட்ங்களும் சேர்ந்து கொண்டு

முதலில் சந்தோஷமாகத் தான் கழிந்தது.



பரத்தின் அம்மா சைவம் என்பதால் அவளுக்குத் தோசையும்,ஊறுகாயும்

தயிர்சாதமும் அழகாக அலங்கரிக்கப் பட்ட தட்டில் வந்துவிடும்.

அந்த வாடிக்கையாளர்...க்ரிஸ்டோஃபர், வந்து பரத்தின் அம்மா சரியாகச் சாப்பிடுகிறாளா


என்று பார்த்துவிட்டுத் தான் போவார்,.

நல்ல மனம்.அவரது மனைவி குணவதி அம்மாளும் அப்படியே. அவளும் வயதில் பெரியவள் தான்.

ஆனால் அசராமல் கணவரின் விருந்தினர்களை முகம் சுளிக்காமல்

கவனிப்பாள்.

ஒரு இரு வருடம் இதுபோல் ஓடியது.

பரத்தின் தந்தைக்குத் திருநெல்வேலிக்கு மாற்றல்.



இதற்குள் க்ரிஸ்டோபருடனான நட்பு மிகவும் வலுத்துவிட்டது. உண்மையிலியே

மிக்க அன்பு பூண்ட நண்பர்கள் ஆனார்கள்.

ஒரே ஒரு வித்தியாசம்.

பரத்தின் தந்தைக்கு மது இல்லாமல் ஒரு நாளாவது இருக்க முடியவில்லை.



சம்பளப் பணத்தில் அழகாக ஓடிக் கொண்டிருந்த

குடும்பம் கடன் தொல்லைக்குள் மாட்டியது.

திடீரென முன்பின் சொல்லாமல் வந்த க்ரிஸ்டோஃபர் நண்பனின்

நிலை பார்த்து அதிர்ந்து போனார்.

என்னம்மா மகளே, எனக்கு ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா.

நான் அந்நியமாகிவிட்டேனா.'என்று வருத்தப் பட்டவர்

பரத்தின் அப்பாவைக் கையோடு

தன் ஊருக்கு அழைத்துப் போனார்.

அங்கு இரண்டு மூன்று நாட்கள் இருக்க வைத்து,

அவரைத் தெளிய வைத்து

மீண்டும் திநெல்வேலிக்கு அழைத்து வந்துவிட்டார்.



அங்கிருந்தே பரத்தின்(அப்பாவின் பெற்றொர்) தாத்தா பாட்டிக்குத்

திருச்சிக்குத் தொலைபேசியில் விஷயத்தைச் சொல்லி

உடனே புறப்பட்டு வருமாறு அழைத்தார்.

அவர்களோ இது போன்ற விஷயங்களில் தெளிவில்லாதவர்கள்.

தானாகச் சரியாகிவிடும். தங்கள் மகன்

அப்படிப்பட்டவன் அல்ல என்பதில் உறுதியாக இருந்தார்கள்.



அந்த நிலைமையில் தான் பரத்தின் அப்பாவுக்கு

அளவுக்கு மீறின போதையில் கார் ஓட்டும்போது,

ஒரு மரத்தில் மோதின விபத்து நிகழ்ந்தது.



குழந்தை பரத்திற்குப் பன்னிரண்டு வயது.

நல்லவேளையாக அடியேதும் இல்லாமல் அவன் தந்தை தப்பித்தாலும்

அவரைச் சரிசெய்து வீட்டுக்கு அழைத்து வர

இப்போது இருக்கும் மாமா ரகுநாதன் தான் உதவினார்.

போலீஸ் கேஸ் ஆகாமல் பார்த்துக் கொண்டு



அதற்கு மேற்பட்ட உதவிகளையும் செய்து கொடுத்துவிட்டு

பக்கத்தில் இருக்கும் திருச்செந்தூருக்குத் திரும்பினார்.

அவர் வேலை,சொந்த வீடு,மனைவி மகள்,மகன்

எல்லோரும் அங்கேதான் இருந்தார்கள்.



திருப்புகழ்,முருகன்,கோவில் இதுதான் அவருக்கு எல்லாம்.

தங்கை கஷ்டப்படுவதை அவரால் சகிக்க முடியவில்லை.

எங்களோடு வந்துடுமா,நான் பார்த்துக் கொள்கிறேன்

என்று எத்தனையோ சொல்லிப் பார்த்தார்.



பரத்தோட அம்மாவுக்குத் தன் கணவனின் மேலிருந்த அன்போ

கரிசனமோ குறைந்ததே இல்லை.



அந்த நிலைமையில் தான் சிவசங்கரி அம்மா எழுதின

ஒரு மனிதனின் கதை'' படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.






  எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Thursday, July 22, 2010

தொடர்ந்து முடிந்தது பாகம் 7



சாயந்திர நேரம் எல்லோரும் ஸ்ரீனிவாசனின் அறையில் உட்கார்ந்து

சஹஸ்ரநாமம் சொல்ல ஆரம்பித்தார்கள்.
பெற்றோர் இருக்கும் நாட்களிலிருந்து ராதையும் ஸ்ரீநிவாசனும்

பெற்றோருடன் உட்கார்ந்து ஆறு மணி அளவில் கடவுள் துதி சொல்வது வழக்கமாக
இருந்தது.

நடுவில் நின்றிருந்த பழக்கத்தை ஆரம்பிக்கவேண்டும் என்று நினைத்த
ராதை,தன் கணவனையும் பெண்கிருஷ்ணா,
மாப்பிள்ளை,பிள்ளை அனைவரையும் அழைத்து அண்ணன் அறைக்கு வந்து

அவரிடம் சொல்லவும் மகிழ்ச்சியோடு தலை அசைத்தார் அவர்.

அரைமணி நேரம் பக்திமணத்தில் கரைந்தது.

பாமவின் பிள்ளைகளும் ,மனைவியரும் கூடத்தில் தொலைக்காட்சி
பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அத்தையைப் பார்த்து எல்லோரிடமும் குசலம் விசாரித்ததோடு

கடமை முடித்தவர்களாகத் தம் தம் அறை நோக்கிப் போனவர்கள் மீண்டும் கீழே
வந்தது இரவுச் சாப்பாட்டுக்குத் தான்.

நாணிப்பாட்டியும் அவரது மகளும் சுவையாக அளவாகச் செய்திருந்த
சாப்பாட்டை ருசித்து உண்டனர் ராதையும் அவளது குடும்பத்தினரும்.


க்றிஸ்டினாவும் தங்களோடு உட்கார்ந்து அமைதியாகச் சாப்பிடுவதை
பாமாவின் பிள்ளைகளும் மருமகள்களும் அதிசயமாகப் பார்த்தனர்.

இயல்பாக இருக்கும் குழந்தைகளும் இனிமையாகப் பட்டுவுடன் அரட்டை

அடித்தவண்ணம் சாப்பிட்டு முடித்தனர்.

''அத்தை அவர்களுக்கு பீட்சா,பர்கர் அப்படிக் கேட்ப்பியோன்னு
நாங்க நினைத்தோம்'' என்று ஆச்சரியப் பட்ட தன் மருமகன்களைப்
புன்னகையோடு பார்த்தாள் பாமா.

அவர்களுக்கு எந்த இடத்திலும் எல்லாவிதமான சாப்பாட்டையும்
சாப்பிடப் பழக்கி இருக்கிறோம்பா. காரமில்லாத உணவு விரும்பிச் சாப்பிடுவார்கள்.

நம் நாணிப்பாட்டிக்கு அது பழகிய மெனு தானே என்றாள்.
சாப்பிட்டு முடித்த கையோடு அண்ணனின் அறைக்கு விரைந்தாள் ராதை.

அங்கே அண்ணனுக்குக் கஞ்சியும் தயிரும் கொடுத்துமுடித்திருந்த பாமாவைச்

சாப்பிடச் சொல்லி அழைத்தாள்.

நானும் இங்கேயே இந்தக் கஞ்சியைச் சாப்பிட்டுவீட்டேன்மா.இனி பழமும் பாலும்

போதும் என்றவளை மெல்ல அணைத்துக் கொண்டாள் ராதை.
விரதம் இருக்கியா என்று கேட்டதும், ஸ்ரீநிவாசன் அவளை அருகில் அழைத்துத்

தங்கள் தினசரி உணவே அதுதான்.காய்கறிகள் கலந்த சாலட் மட்டும் இல்லை,

என்று சைகையில் சொல்ல முனைந்தார்.

அவர் ஆரம்பிக்கப் பாமா முடிக்க நல்ல ஜோடி என்று கைகளை வளைத்து
அண்ணாவிடம் சூப்பர்' என்று காட்டினாள்.
*****************************************************************

''அப்போ கிளம்பலாமா ராதா. குழந்தைகள் களைப்பாக இருக்கிறார்கள்


என்றதும், இதோ வரென் கோவிந்தன்,என்ற வண்ணம்,

சமையலறைக்கு விரைந்தாள் ராதா.

நாணிப்பாட்டியும் அவரது பெண்ணும் சாப்பிட்டு முடித்து, அறையைச்

சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.



பாட்டி, என்னுடன் எங்கள் இடத்திற்கு வரமுடியுமா, உங்களோடு பேச வேண்ட்டும்

என்ற ராதாவைப் பார்த்து ஒரு புரிதலோடு தலை அசைத்தார் பாட்டி.

பெண்ணிடம் மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு

படுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு

ராதையுடன் பாட்டியும் கிளம்பினார். பாமாவிடமும் விஷயத்தைச் சொல்லி

அனுமதி வாங்கிக்கொண்டு எல்லோரிடமும் விடை பெறவும்,பட்டுக் குட்டி ஓடி வந்து ஏறிக்

கொண்டு விட்டது. அம்மா கிட்ட கேட்டியா செல்லம் என்று ராதா ஆச்சரியப்பட,

நான் பாட்டி கிட்டச் சொல்லிட்டேன் , ஒண்ணும் நடக்காது.பயப்படாதே அத்தே
என்று சிரித்தது அந்தப் பெண்.

வண்டி

அபார்ட்மெண்ட்டை நோக்கிக் கிளம்பியது.

வாசலில் விளக்கு வெளிச்சத்தில் நிற்கும் பாமாவைப் பார்த்து ,அது வரை அழாமல் இருந்த ராதா

நாணிப்பாட்டி மேல் சாய்ந்துகொண்டு கண்கலங்கினாள்.

ஏன் இந்த மாதிரி நடக்கிறது. அண்ணா, பாமா மாதிரி நல்லவா பார்க்க முடியாதே.

இப்படிப் பிள்ளைகள் பெற்றோரிடமு ஒட்டாமல் உற்றாரிடமும் ஒட்டாமல்

ஏன் இப்படியானார்கள்.எனக்குப் புரியலையே என்று மெல்லிய குரலில் புலம்பியவளை

பாட்டி சமாதானப் படுத்தினார்.
காலப் போக்கு மாறிவிட்டது ராதாம்மா.
இப்ப நடப்பது பெண்கள் குடும்பம். நம்வீட்டு வண்டித்தடங்கள் ,

கரூர்,கொடியாலம் நோக்கித்தான் இனிமேல் போகும்.
அதை உன் அண்ணா நன்றகப் புரிந்து கொண்டார். பாமாவுக்குப் பிள்ளைகள்


வெளியூரில் படிக்கப் போனபோதே அவர்களின்

மாற்றத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.

திருமணம் ஆனதும் பெண்டாட்டிகளை அநுசரிக்க வேண்டிய கடமையும்,

அவர்களுக்குச் சேர்ந்து கொண்டது.

எல்லோரும் ஒரே வீட்டில் இருக்கிறார்களே ,என்று சந்தோஷப்படு.

நான் பாமாவையும் சீனுவையும் விட்டுக் கொடுக்க மாட்டேன். அவனைப்

பார்த்துக் கொள்ள வந்திருக்கிறானே ஒரு கைகால் டாக்டர்,அவன் என் பையன் தான்.

சம்பத்துனு அண்ணாவைக் குளிப்பாட்டி, மத்தவேலையெல்லாம் செய்வது

என் பெண்ணின் புருஷன். அவனுக்கும் நல்ல சம்பளந்தான் தருகிறார் உங்க அண்ணா.

என்று புன்னகை புரிந்தார் பாட்டி.

தொலைவில் தெரிந்த உச்சிப்பிள்ளையார் கோவில் விளக்குகளையும்,

ஸ்ரீரங்க நாதர் கோபுர விளக்கையும் வணங்கினாள் ராதா.

ஏனோ ஒரே ஒரு ஊரிலே ஒரெ ஒரு ராஜா'' பாட்டு நினைவுக்கு வந்தது.

பக்கத்தில் தூங்கி விட்ட இளந்தளிர் பட்டுக் குட்டியை இறுக அணைத்துக் கொண்டாள்.





எல்லோரும் வாழ வேண்டும்.

Tuesday, January 19, 2010

491 சினிமாவின் இரண்டாவது பாகம்

விஞ்ஞானியும் அவரின் குழந்தைகளும்



நூற்றைம்பது நாட்கள் பசியிலும் குளிரிலும் அலைந்த ஹச்கீஸ்


மாயாவும் காப்பாற்றப்பட்ட விஞ்ஞானியும்





மெதுவாக நகரும் மாயா.


எயிட் பிலோ படத்தின் கதை.
இந்தப் படத்தை யு டியூபில் பார்க்கலாம்.
http://www.youtube.com/watch?v=NXkoGlxVbLY
********************************************
ஜெர்ரியின் சின்ன விமானம் புறப்பட்டு ஒரு வட்டமெடுத்துப் பறந்து சின்ன புள்ளியாகும் வரை இந்த ஹஸ்கீஸ் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அவன் சொன்னது மட்டும் அவர்களுக்கு அப்படியே பதிந்து விடுகிறது. ,கடுமையான பனிப் பொழிவிலும் அவை அமைதியாகப் பொறுமையாக் அந்த ஐஸ்கட்டி மலையில் கண்களையும் காதுகளையும் மூடியபடி படுத்துக் கிடக்கின்றன.
ஓல்ட் ஜாக் என்கிற நாய்க்கு உண்மையிலியே வயதாகிவிட்டது. பசியும் குளிரும் தாங்கவில்லை.
உடனே எல்லா நாய்களும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துத் தங்கள் மொழியில் சங்கிலியிலிருந்து விடுபடும் எண்ணத்தை உறுதிப் படுத்திக் கொள்கின்றன.

அருமையான உணர்ச்சி அவைகளின் முகத்தில்.
இப்படிக் கூட நடிக்க முடியுமா. பார்வையிலியே இத்தனை பரிமாற்றம் நடக்க முடியுமா என்று யோசித்தேன்.

முடிய வேண்டும். இல்லாவிடில் ஒரு குழுவாக இந்த ஆள் அரவமில்லாத பனிக்காட்டில்,எலும்பு உறையும் குளிரில் ஒரு ஸ்லெட் வண்டியைச் சீராக இழுத்துப்
போக முடியுமா....ஒன்று ,இரண்டு மைல்கள் இல்லை... நூற்றுக்கணக்கான மைல்கள் கணக்கில் பனிப்பிரதேசத்தில் கண்களை மறைக்கும் புயல் நடுவே போகவேண்டும்.

ஒன்றன் பின் ஒன்றாக, மாயா, ஓல்ட் ஜாக்,டியூயி,மாக்ஸ்(ஸ்லெட் டாக்ஸ்) என்று அவர்களின் பயணத்தைதொடங்குகிறார்கள். ஓரிரு கடல் பறவைகள் அவர்களுக்கு உண்வாகின்றன. ஓல்ட் ஜாக் நடக்கமுடியாமல் இறந்துவிடுகிறது.
ஓரிரவில் னார்தர்ன் லைட்ஸ் எனப்படும் அரோரா போரியோலிஸ் என்னும் வடதுருவ ஒளிக்கற்றைகளைக் கண்டு
உற்சாக மிகுதியால் ஓடும் 'டியுயி'' கால் வழுக்கி ஆழ்பள்ளத்தில் விழுந்து இறக்கிறது.
மாயா ,தன் எஜமானன் ஜெர்ரியின் நினைவில் உணவெடுக்க மறுக்கும் நிலையில் தான்
அவர்களை விட்டுச் சென்ற ஜெர்ரி ஷெபர்ட் திரும்புகிறான்.
தாய்நாடு சென்றதிலிருந்து தான் விட்டு வந்த நாய்களை நினைத்துத் தினமும் வருந்தும் அவன், மீண்டும் அங்கே திரும்ப பலரிடம் உதவி கேட்டுப் பார்க்கிறான்.
கிடைக்கவில்லை.
இந்த நிலையில் ''மாயா''வினால் காப்பாற்றப்பட்ட விஞ்ஞாஆனிக்கு,அவரது கண்டுபிடிப்புக்காகப் பட்டம் வழங்கப் படுகிறது.
அவரையும் ஜெர்ரி சந்தித்து,மீண்டும் அண்டார்டிகா போக உதவி கேட்கிறான். அவர் மறுத்துவிட,
மனிதர்களின் நன்றி மறத்தல் குணத்தை எண்ணி விரக்தி அடைகிறான் ஜெர்ரி.

விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பும் டாக்டர், தன் மகன் படுத்திருக்கும் அறைக்கு ,வருகிறார்.
தூங்கும் மகனருகில் உட்காரும் போதுதான் அவனது எழுதி வைத்திருக்கும் குறிப்பு ஒன்று கண்ணில் படுகிறது.
அதில் ''என் தந்தையைக் காப்பாற்றிய நாய்கள் தான் எனக்கு ஹீரோ'' என்ற வாசகம் இருக்கிறது. அடுத்த காட்சியில் விஞ்ஞானியும்,ஜெர்ரி ஷெபர்ட்,அவந்து உதவியாளர்,அவனது காதலியான விமான ஓட்டி அனைவரும் 155 நாட்கள் முடியும் தருவாயில் அண்டார்டிகாவை வந்து அடைகிறார்கள்.

எஞ்சியிருக்கும் மாயா,மாக்ஸ் இன்னும் இரண்டு நாய்களுடன் சேர்ந்து மகிழ்கிறார்கள்.
அதே வேகத்தில் அவற்றை அழைத்துக் கொண்டு திரும்புகிறார்கள்.

இந்தப் படத்தில் எனக்குப் பிடித்தது இந்த நாய்களின் நடிப்புதான். என்னதான் பயிற்சி கொடுத்திருந்தாலும்,அவைகளின்
அபார சக்தியும் புத்திசால்த்தனமும் என்னை மிகவும் கவர்ந்தன,.
அதே சமயம் உதவி கிடைக்கும் போது லகுவாக ஏற்றுக் கொண்டு, பிறகு அதை முழுவதும் மறந்துவிடும் மனித குணமும்,
நாய்கள் தானே என்று அலட்சியமாக இல்லாமல் , முயற்சி எடுத்துக் காப்பாற்றும் ஜெர்ரி ஷெப்பர்டின்
அளவுக்கு மீறிய அன்பு சுபாவமும் அழகாகப் படைக்கப் பட்டிருக்கின்றன,.


இதில் ஆச்சரியம் என்னவென்றால் இது உண்மையாகவே நடந்த சம்பவம் என்ற செய்திதான்.

எல்லோரும் வாழ வேண்டும்.


















Saturday, February 02, 2008

264 திருமங்கலம் காம்ப்....














நின்று நிதானமாக அசை போட்டு எழுதுவது என்று தீர்மானம் போட்டதில்(உதவி....இ.கொ, மதுரையம்பதி:)...)


திருமங்கலத்தில் காம்ப் போட வேண்டிய நிலை.




திருமங்கலத்திலிருந்து 12 மைல் தொலைவில் பழங்கானத்தம்.


அங்கே தாத்தா பாட்டி, சித்தப்பா,சித்தி அவர்களுடைய மூன்று குட்டிக் குழந்தைகள்.




தாத்தா எல்லாத் தாத்தாக்களையும் போலக் கண்டிப்பானவர். அதில் என் பெரிய தம்பியை மட்டும் ரொம்பவே பிடிக்கும்.


கேட்ட கேள்விக்கு டக் டக்னு பதில் சொல்வானாம்.


அதுவும் டார்ச் ஆன் செய்ததும் வெளிச்சம் வருகிறாப்போலப் பளிச்சுனு சொல்லிடுவானாம்:))




அதனால் தாத்தா பக்கம் அதிகம் நானும் சின்னவனும் போகமாட்டோம்.


அநேகமாகக் காலை தினமணி படிக்கவேண்டியது என் வேலை. காலைப் பால் குடித்ததும் கிணற்றங்கரை.


அங்கு கிணர்ரிலிருந்து தண்ணீர் இழுகும் வேலை தாத்தாவுடையது. அவர் அங்கேயே குளித்து தன் துணிமணிகளைத் தோய்த்து விடுவார்.


அவர் தண்ணீர் நிரப்பும் குடங்களையும் வாளிகளையும் வீட்டுக்குக் கொண்டு வருவது எங்கள் பொறுப்பு.


தாத்தாவுக்கு அப்போது வயது எழுபத்தைந்து. பாட்டிக்கு எழுபது.

அபூர்வமான தம்பதிகள். பாட்டிக்கு வெடுக் நிறைய உண்டு.

எங்கள் சாப்பாடு முடிந்ததும் என்னை அழைப்பார். 'தாத்தா தூங்கியாச்சா பாரு ''என்பார்.

பூனையாய் தாத்தா அருகில் போய், அந்த ஈசிசேர் அருகில் நின்று,

தாத்தாவின் விசிறி இப்படி அப்படி போகிறதா,

இல்லை தாத்தா மேல இருக்கா என்று பார்ப்பேன்.


ஒரு நாளாவது தாத்தா கண் திறந்து என்னைப் பார்க்காமல் இருந்தது இல்லை.:)


'என்ன வேணும்? உங்க பாட்டிக்கு டவுனுக்குப் போணூமா?

என்று கேட்பார்.

'ஆமாம்னு சொல்லுனு' பின்னாலிருந்து குரல் வரும்.


வடக்கில மின்னலடிக்கிறது. காத்தோட மழை வரும். நாளக்குப் போலாமே சுண்டைக்காயும் மணத்தக்காளியும் நாளைக்கும் இருக்கும்'' என்பார்.

பாட்டியிடமிருந்து பதிலே வராது.

ஒரு அழகிய அரக்குப் பட்டுப்புடவை கட்டி எப்பவோ பாட்டி ரெடி.

அவருக்குத் தங்கைகள் மதுரை புதுத்தெருவில் குடியிருந்தார்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் அங்கே போய் அரட்டையும் டிபனும் உள்ளே போக வேண்டும் பாட்டிக்கு.

அநேகமாக நெல்லையில் ஒருவருமே இல்லாத நிலையாகி விட்டது.


பாட்டியின் வயது ஒத்தவர்கள் வக்கீல் புதுத்தெரு, நாயக்கர் புதுத் தெரு, சொக்கிகுளம், நரிமேடு,வசந்தநகர் என்று

குடி புகுந்து விட்டார்கள்.


தாத்தாவிற்கு பூஜையும் ராமனும் அவன் நாமமும் போதும்.

அவரைப் பார்க்க எல்லோரும் வந்த வண்னம் இருப்பார்கள். அதனால் உலக செய்தி அத்தனையும் அவருக்கு வந்துவிடும்.


தனது நெருங்கிய செல்வந்தராயிருந்த உறவிடம், அவர் வாங்கிக்கொண்ட உதவி டிவிஎஸ் பஸ் பாஸ் ஒன்றுதான்.

அதுவும் பாட்டிக்கு மட்டும்.

தான் எங்கயாவது போக வேண்டும் என்றால், சித்தப்பாவிடம் சொல்லி வண்டி ஏற்பாடு செய்து கொள்ளுவார். அதுவும் வெகு அபூர்வம்.
மிக உயர்ந்த கொள்கைகள். நேர்மை., இவைதான் தாத்தாவின் அடையாளங்கள்.
எங்கேயிருந்தெல்லாமோ தாத்தாவுக்குத் தபால் வரும்.
பாரதீய வித்யா பவன் பத்திரிகை பவன்ஸ் ஜர்னல்.
மஞ்சரி பத்திரிகை,ஜே அண்ட் ஜே டீசேன் என்ற மருத்துவ பத்திரிகை. இவைகள் எல்லாம் சில.
இந்த மருத்துவத்தில் அவருக்கு இருந்த நம்பிக்கை ,அம்மா வழியாக எங்களையும் பிடித்துக் கொண்டது.
பழங்கானத்தத்திலிருந்து திருப்பரங்குன்றம் வரை நடந்தே வருவார்.
அங்கிருக்கும் தபால் அலுவலகத்திலிருந்து, எங்கள் தந்தாஇயுடன் கட்டுக் கட , கட தந்தி மொழியில் பேசுவார்.;))
எங்களுக்கும் அதை எப்படி மொழி பெயர்ப்பது என்று சொல்லியும் காட்டுவார்.
பாட்டிக்கு அப்போது மண் சட்டிச் சமையல் தான் வழக்கம்.
அதில் செய்யும் கீரைக் குழம்பும்,தோய்த்த கட்டித் தயிரும்,
ம்ம்ம்.நினைக்கத்தான் வேண்டி இருக்கிறது.
கைமுறுக்கு, திரட்டிப்பால் இதெல்லாம் பாட்டி கையால்
செய்து வந்து வெண்கலப் பானையில் அடைக்கலமாகும்.
பரணுக்கு ஏறிவிடும்.
தினம் மதியம் மூன்று மணிவாக்கில் ஆறு குழந்தைகளுக்கும்,
இரண்டு சிறுமலைப் பழங்களும் வாழைச்சருகில் திரட்டிப்பாலும்,இரண்டு முறுக்குகளும் விநியோகம் ஆகும்.:)
ஆறு மணிக்கு விளையாட்டு முடிந்தால் கைகால் கழுவி சஹஸ்ரநாம பாராயணத்துக்கு வந்து விட வேண்டும்.
ஏழரை மணிக்கு பாட்டி பெரிய அரிக்கஞ்சட்டி நிறைய மோர் சாதம் பிசைந்து கூடத்துக்குக் கொண்டுவருவார்.
நாள் முழுவதும் ஆடின ஆட்டம் வயிறு கூப்பாடு போடும்.
பக்கத்தில் சித்தி உட்கார்ந்து மாய மோதிரம், மந்திரக்குதிரை என்று கதைகள் சொல்ல, எல்லோர் கைகளிலும் சோறு வைத்து நடுவில் குழித்துக் கொண்டால்
மதியக் குழம்போ,இல்லை மாவடுவோ கிடைக்கும்.
சாப்பிட்ட இடத்தைச் சுத்தம் செய்ய(செய்யாமலிருக்க:)))
எனக்கும் தங்கைகளுக்கும் வாக்குவாதம் நடக்கும்.
தாத்தா சிரிப்புடன் எங்களை விலக்கி டைம்டேபிள் போட்டுக் கொடுப்பார்.
பிறகென்ன, ஒரு பெரிய கல்யாண ஜமக்ககளம் விரிக்கப்பட்டு ஒரு தலையணைக்கு இருவர் என் , தாத்தா கட்டிலருகில் படுப்போம்.
தாத்தா ராம நாமம் சொல்ல உறங்கிவிடுவோம்.
அடுத்த பதிவில் திண்டுக்கல்லுக்குப் போகலாமா:)




















Sunday, January 20, 2008

பாதுகையே நாட்டை ஆளும்




பாட்டி!! ஒரு கதை சொல்லேன். இப்படித்தான் எங்கள் இரவு நேரம் ஆரம்பமாகும்.


நாள் பூராவும் பள்ளிப்பாடங்கள் எழுதிவிட்டுக் கொஞ்ச நேரம் தாத்தாவோடு கேள்விக்கணைகள் தொடுத்து அரட்டை அடித்துவிட்டு,


அவர் தூங்கப் போனதும் என்னிடம் வருவான் பெரிய பேரன்.


இரண்டு வருடங்கள் முன்னால் சொன்ன சாக்கலேட் மரம், ஐஸ்க்ரீம் வீடு, பகாசுரன் கதை இதெல்லாம் இப்ப வேண்டாம்.


நான் பெரியவனாய்ட்டேனே பாட்டி:))




சரி ராமாயணம் சொல்லலாமான்னதும் ரொம்ப ட்ராஜிக்கா இல்லாம சந்தோஷமான பார்ட் மட்டும் சொல்லு'' என்று பதில் வரும்.


இவனுக்காக ராமாயணத்தில் கொஞ்சம் சைடு கதைகள் எல்லாம் இட்டுக் கட்டி சொல்வதும் உண்டு.


ஏனெனில் கேட்கிற கேள்விகள் சுலபத்தில் பதில் சொல்ல முடியாது.


உ-ம், ராமர் பரதன் கிட்ட பாதுகைகளைக் கொடுத்துட்டு வெறும் காலோட போனாரா.


பரதன் வேற ஏற்பாடு(another pair of sandals)


செய்திருக்கலாமே.


அப்போ சீதை,லக்ஷ்மணர் இவர்களும் செருப்பு போட்டுக்கலியா?




சாமி!!னு ஆயிடும்.


நான் என்ன, கம்பரா,வால்மீகியா என்று தேடிப் படித்த வகையும் இல்லை. எல்லாம் கேள்விஞானம்.


ஒரு நிமிஷம் இந்த கே ஆர் எஸ் போன் நம்பரை வாங்கி விஷ்ணு(பேரன்) கிட்ட கொடுத்து விட்டால் என்ன என்று தோன்றியது.


அவர்தான் எல்லாவற்றுக்கும் ரெடியாகப் பதில் தேடித் தருவார்.


போனால் போகட்டும் பாவம் கண்ணபிரான் ரவி என்று விட்டுவிட்டேன்.:)


அதற்குப் பதிலாகப் பாதுகா தேவியின் மகிமையைச் சொல்லலாம் என்று ஆரம்பித்தேன்.




''ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய பாதுகா சஹஸ்ரம் நூலில் இந்த அழகான கதை வருவதாகப் படித்தவர் ஒருவர் எனக்குச் சொன்ன விஷயத்தை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

ஸ்ரீராமன் சேதுக்கரையில் நிற்கிறான்.

சுக்ரீவன்,லக்ஷ்மணன் ,அனுமன்,அங்கதன் இன்னும் மற்ற வானர சேனைகளும்,கரடிப் படைகளும் சீறிவரூம் கடலைப் பார்த்து,ஏங்கி நிற்கின்றனர்.

எப்படிக் கடப்பது இந்தக் கடலை??


அனைவராலையும் தாண்டக் கூடிய தொலைவு இல்லையே என்று யோசித்தபோது,விபீஷணின்
ஆலோசனைப்படி உணவும் நீரும் அருந்தாமல், தர்ப்பசயனத்தில் இருக்கிறான் ஸ்ரீராமன்.
சமுத்திரராஜன் வரவில்லை. ராமபாணத்தைப் பூட்டி கடல் மேல் ஏவும்போதும்
கடல் பொங்கியதாம். ஆனால் வற்றவில்லை. பிறகு நடந்த ,அணைகட்டும் படலம்
ராவண வதை,ஸ்ரீராமபட்டாபிஷேகம் எல்லாம் தெரிந்த,தெளிந்த புராணம்.

கடல் வற்றாமல் போனதற்கு ஸ்ரீமன்நிகமாந்த மகாதேசிகன் தன் பாதுகாசஹஸ்ரத்தில்
புதிய அழகிய அர்த்தமுள்ள காரணம் கொடுக்கிறார்.
ஸ்ரீராம பட்டாபிஷேகம் நடக்கவில்லை. அவருடைய பாதுகைகள் அரியணையில் அமர்ந்தன. அவைகளுக்குப் பட்டாபிஷேகம் நடத்திவைத்தான் பரதன்.
பாதுகாதேவி பெருமான் சரணங்களிலிருந்து கிளம்பி சிம்மாசனத்தில் அமர்ந்தன.
அவர் கைகளைப் பற்றிய திருமகள் சீதையோ கானகத்தில் நடந்தாள்.
இங்கே நந்திகிராமத்தில் பாதுகாதேவிக்குத் தினம்
காலை மாலை என்று சகல புண்ணிய நதிகளிலிருந்தும் கொண்டுவந்த தீர்த்தங்களால்
அபிஷேக ஆராதனை செய்தான் பரதன்.
அவ்வளவு புண்ணிய தீர்த்தங்களும்
சர்யு நதியை அடைந்து சாகரத்தையும் சேர்ந்தனவாம்.
வழக்கமாகக்
கடலில் நதிகள் சங்கமிக்கும்போது கடலுக்கு ஏதும் மாற்றம் கிடையாதாம்.
ஆனால் ஸ்ரீராமபாதுகா தீர்த்தம் அப்படியில்லையே!!
அதற்குத் தனி மகிமை அல்லவா!!

அம்ருதம் போல இந்த ஸ்ரீபாதுகாதீர்த்தம் கடலில் கலந்ததும் கடல் மேலும் விருத்தியாக,
கடல் நீரும் பெருகி விட்டதாம்.
அத்தனையும் அக்ஷ்யமாக வளம் பெருக,
அதே கடல் நீரில் ராம்பாணம் வந்தும் கடல் நீர் வற்ற சந்தர்ப்பமே இல்லாமல்
போய்விட்டதாம்.
ஸ்ரீராமபாணம்,பாதுகா தேவியின் சரண் புகுந்து புறப்பட்ட தீர்த்தத்திடம்
வாக்குவாதம் செய்யாமல் திரும்பிவிட்டதாம்.
என்ன ஒரு கற்பனை.!!
அவ்வளவு பெரிய மகா மகானின் வாக்கியங்களைப் படித்தவுடன்
இதையே கதையாகச் சொல்லத் தோன்றியது.
ஸ்ரீராமா சரணம்.
ஸ்ரீராம பாதுகா சரணம்.
ஸ்ரீ பாதுகா தேவியே சரணம்.
இந்தக் கட்டுரைக்கு ஆதாரம் ஸ்ரீந்ருசிம்ஹப்ரியா தை மாத இதழ்.
நன்றி.
சொற்குற்றம் பொருள் குற்றம் பொறுக்கவேண்டும்.


முதுமையின் இரவும் பகலும் 4

வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதே வாழ இறைவன் வழி வகுப்பான். அனைவருக்கும் கலியுகத்திலும் கண்ணன் நாமம் பாடக் கவலைகள் தீரும் கண்ணன் பிறந்து சிறப்பித...