அருள்மிகு கர்ப்பரக்ஷாம்பிகா
மே மாதம் மருமகள் தொலைபேசியபோது தங்களது விடுமுறை நாட்கள் பயணத்தைப் பற்றியும், அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை கோவிலுக்குச் செலுத்த வேண்டிய பிரார்த்தனை யையும் சொன்னார். உடனே தோன்றியது மனக்கண்ணில் மற்ற கோவில்களும். பத்துவருடங்களுக்கு முன்னால் தரிசனம் செய்த தெய்வத்திருத்தலங்கள். மீண்டும் காண வாய்ப்பு. அதற்கேற்றார்ப் போல மகளும் அவள் குடும்பமும் வருவது. ஒருவரையும் கேட்காமல் இரண்டுநாட்கள் கும்பகோணத்தில் தங்குவதாகத் திட்டம் போட்டு பயண ஏஜண்டிடம் சொல்லி ஜூலை 4 ஆம் தேதிக்குக் காலை ரயிலில் பயணச்சீட்டுகள் வாங்கிவிட்டேன். அப்படியே அன்பு த்தோழி கீதா சாம்பசிவத்திடம் வழிமுறைகளையும் கேட்டுக் கொண்டேன்.
தங்குமிடம், பயணம் செய்ய ட்ராவல்ஸ் வண்டி எங்க முன் பதிவு செய்யலாம் என்று கேட்டுக் கொண்டு,லஸ் விநாயகரையும் வேண்டிக் கொண்டு(எல்லோரும் இந்த ஏற்பாடுக்கு ஒத்துக் கொள்ள வேண்டுமே:)) ஒவ்வொரு குடும்பமாக வந்திறங்கியது. வந்த இரண்டுநாட்களில் கும்பகோணம் ரயிலேறியாச்சு. கடைக்குட்டிப் பேரனைப் பற்றித்தான் கொஞ்சம் கவலை. சீக்கிரம் சளிபிடித்துக் கொள்ளும். இன்னும் இரண்டு வயது கூட முடியவில்லை.
கவலையைத் தீர்க்கத் தானே தாயும் தந்தையுமாக கடவுளர்களாக அமர்ந்திருக்கிறார்கள்.! ஒவ்வொரு ஊராக வண்டி கடக்கும் போது மாயவரம் நிலையம் வந்தது. மாயவரத்துப் பதிவர்கள் அனைவரும் மனதில் வந்து போனார்கள். திருமதி அரசு,கயல்விழி,ஆயில்யன் என்று இன்னும் எத்தனையோ ஞாபகங்கள். அத்தனை ரயில் நிலையங்களின் சுத்தமும் நேர்த்தியும் மனதைக் கவர்ந்த்து. குப்பையெல்லாம் நம் சென்னைக்குத் தானோ என்று நினைத்துக் கொண்டேன்:( இளமைக்கால எழும்பூர் ரயில் நிலையமும் இப்போது இருக்கும் நிலையும் மனதை என்னவோ செய்தது. காலத்துக்கேற்ற மாறுதல்கள்.கிணற்றுத்தவளையாக நான் இருந்தால்,நகரம் மாறாமல் இருக்குமா.
நிறைய நல்ல மாறுதல்களும் வந்திருக்கின்றன. சுத்தம் தான் கொஞ்சம் போதவில்லை. இதற்கு எதிர்மறையாக வழி நெடுகப் பார்த்த ரயில் நிலையங்கள் மகா சுத்தம். கும்பகோணத்திற்கு நல்ல வெய்யில் நேரத்தில் மதியம் இரண்டிற்கு வந்தோம்.
கொண்டுவந்த ரொட்டிகளும், இட்லியும்,தயிர் சாதமும் காலியாகி இருந்தன. எங்களை அழைத்துப் போக வந்திருந்த டெம்போ ட்ராவலரும் ஓட்டுனர் மணியும் வந்தனர்.
சாரா ரீஜன்சி விடுதியை அடைந்தோம். அவரவர் அறைகளை அடைந்தோம். குழந்தைகளைத் தயார் செய்து,அவர்கள் சாப்பாட்டையும் தயார் செய்து கொண்டு, தாயார் கர்ப்பரக்ஷாம்பிகையை த் தரிசிக்கக் கிளம்பினோம். |