Blog Archive

Thursday, November 25, 2021

சில செய்திகள் 2

வல்லிசிம்ஹன்

அனைவருக்கும் இறைவன் அருள் என்றும் நிலைத்திருக்க வேண்டும்.

வண்ணங்கள் நன்மை தருகின்றன. 
வெளியே 7 மணி அளவில் காலை விடிகிறது.
மாலை நாலு மணிக்கு இருள் 
கவியத் தொடங்குகிறது.

இன்னும் ஒரு ஐந்து மாதங்களுக்கு 
இதுவே நிச்சயம்.

அதனால் வீட்டுக்குள்ளும் வெளியேயும் 
விளக்குகளையும் வண்ணங்களையும் சேர்த்து
மனதை உற்சாகமாக வைக்க

முயற்சிக்கிறோம்.
நிறைய உணவு, உடை எல்லாவற்றையும் 
அருகிலிருக்கும் நல் உதவி செண்டரில்
சேர்ப்பதும் இன்னும் மகிழ்ச்சி.

வீட்டில் இருக்கும் விளையாட்டு பொருட்கள், கேம்ஸ்,
தேகப் பயிற்சிக்கான மெஷிங்கள் என்று 
எல்லாம் வெளியேறி தேவையானவர்களை அடையும் போது

எத்தனை நிம்மதி!! 
மனதில் குவியும் குப்பைக்களையும்,
பழைய வருத்தங்களையும் அகற்றும் போதும்
கிடைக்கும் கலகலப்பு அளவிட முடியாதது.

சென்ற நவம்பரில் இறையடி இணைந்த அன்பு கோமதி அரசுவின் கணவருக்கு
அஞ்சலிகள்.
அன்பின் கோமதி கலக்கங்கள் நீங்கி தன் மக்களோடு
அமைதிவாழ்வு பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

  நான் கேட்டுவரும் ஆடியோக்கள் மனதுக்கு
இதம். வாழ்வை அப்படியே  ஏற்றூக்கொண்டு

வார்த்தைகளை வெளியே விடாமல் இருப்பதும்,
கடும் வார்த்தைகளுக்குக் காது கொடாமல்
இருப்பதும்,
குழந்தைகளுக்கு நல வார்த்தைகள் சொல்வதும் நம்மால்
செய்யக் கூடியதே என்பதை உணர்ந்து வருகிறேன்.
இனியும் தொடர்ந்து இறையுடன் அமைதியாக
இருக்கவே விருப்பம்.
 
கண்களின் எரிச்சல் ஒன்றே  நான் படிக்காமல்
இருக்கக் காரணம்.
எத்தனையோ நல்ல செய்திகளை தவற விடுகிறேன்.
மீண்டும் படிக்க ஆரம்பிக்கலாம் என்று 
வைத்தியர் சொன்னதும் தொடர்கிறேன்.
அனைவரும் நலமுடன் இருக்கவேண்டும்.
Shree Devakikrishna Ravalnath Travel Vlog 1.3 - Marcela, Goa on 17th Aug...

ஸ்ரீ கிருஷ்ணா வாசுதேவ தேவகி நந்தன கிருஷ்ணா

Saturday, November 20, 2021

சில செய்திகள்.

வல்லிசிம்ஹன்


அனைவருக்கும் நல் வணக்கம். இறைவன்
அருளால் ஆரோக்கியம் அமைதியும் 
நிறைய வேண்டும்.

சில காலங்களாக உடல் நான் சொன்ன 
பேச்சு கேட்பதில்லை.
வெள்ள செய்திகளின் பாதிப்பும், வயதான உறவினர்களின்
ஆதரவு குறைந்த நிலையும் 
இங்கே நிலவும் கடும் குளிரும்

நம் மனதையும் பாதிப்பதாலோ என்னவோ
வயிறும் கெடுகிறது,.
ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது.

கூடவே சர்க்கரை அளவும் நர்த்தனமாடி
நடப்பதும் சிரமமாகிறது.

எல்லாவற்றிலும் ஒரு நல்லதும் இருக்கிறது.
கண் பரிசோதனைக்கு முயற்சி செய்கிறோம்.

அந்தத் தனியாக இருக்கும் முதியவர்கள் என்னை விட வயதானவர்கள்.
இங்கே ஏன் என்று கேட்க என் மகள் இருக்கிறாள்.

தத்துவ போதனைகளின் வழி , எது வந்தாலும் அமைதியாக
ஏற்றுக் கொண்டால்
துணிவு நமக்கு வழிகாட்டும்.
சில நாட்களில் மீளலாம்.
அதுவரை விலகி இருக்கிறேன். நமஸ்காரம்.

Friday, November 19, 2021

தீபத் திரு நாள் வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன்


அனைவருக்கும் கார்த்திகைத் திருநாள்
வாழ்த்துகள். இருள் அகல ஏற்றும் தீபங்கள் மன இருளையும்,பயம்களையும் ,  
நோய்களையும் விரட்டி அடிக்கட்டும். சமாதானத்தையும்,மகிழ்ச்சியையும்   ஆரோக்கியத்தையும் கொடுக்கட்டும்.
 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Wednesday, November 17, 2021

Magna Indica with Rishabh Gulati | Indonesia's Hindu revival | NewsX

🤩

பாரதி மணி ஐயாவுக்கு அஞ்சலி

வல்லிசிம்ஹன்


அவர் மறையும் போது கூட 
சிரிப்பாகச் சில விஷமங்கள் செய்து
மறைகிறாரோ என்று நினைப்பு வந்தது.

ஒரு செய்தியும் பின்னர் மறுப்பும் வந்ததும் காலை 
எழுதிய பதிவை 
பயந்து போய் எடுத்துவிட்டேன்.மீண்டும் சுகா அவர்கள் பதிவைப் படித்த பிறகே
தைரியமாக இப்போது பதிவிடுகிறேன்.

சென்று வாருங்கள் ஐயா. தமிழுலகின் பாட்டையா
என்ற செல்லப் பெயரை 
வாங்கியவர். அனைவரிடமும் இனிமையையும்
நகைச்சுவையையும் தெளித்தவர்,
முதுமை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வாழ்ந்து
காட்டிய பெரிய மனிதர்.

எப்படி ,இந்த மாதிரி திடுக்கிடும் செய்தியைக் 
கொடுத்தாரோ தெரியவில்லை.
சென்ற இடத்திலும் அனைவரையும் சுகமாக வைத்திருப்பார்.


Monday, November 15, 2021

ஷேய்ல உக்காயலாமா:)மீள் பதிவு 2014''போன உடணே ஷேய்ல உக்காயணும். அப்பா மடில.
சலோன் லேடி தலைல சில் சில் மயுந்து போடுவா.
கியுக் கியுக்னு சிஸர்ஸ் வச்சு ஹேய் எல்லாம் ஸ்னிப் செய்து, கண்ணு குத்தாம கட் செய்துடுவா''
யாக்கெட் தயுவா. எல்மோ தயுவா''
இவ்வளவு வீர வசனங்கள் பேசிய சின்னவன் நேற்று தலைமுடி சீர்திருத்தம் செய்ய, குழந்தைகளுக்கான இ ஸ்னிப்ஸ் என்ற கடைக்குள் நுழைந்ததிலிருந்து
மெல்ல சிணுங்கலோடு ஆரம்பித்த ஆலபனையை,
கேவிக் கேவி அழுது,
முழு கச்சேரியாகச் செய்து,
அம்மா அப்பா கைகளையும் மீறி, தேமேனு ரொம்பப் பொறுமையாக அவனது தலை முடியைச் சீர் செய்தவர்களையும் தள்ளி அமர்க்களப் படுத்தி இருக்கிறான்.

எங்க பெண் மாப்பிள்ளை இருவரும் வீட்டிலியே
தலைமுடியைச் சீர் செய்யும் கலையை ஒழுங்காகக் கற்றுக் கொள்ளப் போகிறார்களம்:)
இதெல்லாம் எனக்குத் தெரியாது. அவனோடு வெப்காமிராவில் பேசக் கூப்பிட்டபோது, அழகாக வந்து உட்கார்ந்து கொண்டு தலையை எலா ஆங்கிளிலும் காண்பித்தான். அடச் சம்த்தே ஹேர்கட் பண்ணிக் கொண்டாயா என்று நான் பெருமிதப் பட,
அவன் தான் அழுத கதையெல்லாம் நடித்துக் காட்டிச் சிரிக்கிறான்.
அவன் அம்மா அப்பாதான் இந்த கலாட்டாவிலிருந்து இன்னும் மீளவில்லை:)
பி.கு. அவனுக்கு மற்ற மழலையெல்லாம் தெளிந்தாலும் இன்னும் ர னா மட்டும் வரவில்லை.
லெக்டாங்கிள்...ரெக்டாங்கிள்
ஸ்குவீ...ஸ்குவேர்.
டாலகன்...ட்ரையாங்கிள்
தன் பேர் கிஷா. ..கிருஷ்ணா.
பின்
திருத்தங்கள்.!!!!
ஷேயர்...சேர்..நாற்காலி
மயுந்து...மருந்து..லோஷன்.
கிருஷ்ணாவுக்காக ,வாசுதேவன் சொன்ன மாற்றம்.:)
கிஷாவுக்கு மழலை அழகு.
பாட்டி எழுதும்போது நல்ல தமிழ் வந்துவிட்டது. அதனால மீண்டும் எடிட் செய்தேன்!!!
சயியா தி.வாசுதேவன் சார்??

Saturday, November 13, 2021

Friday, November 12, 2021

வெள்ளக்காடான மயிலாப்பூர்...#RainUpdates #ChennaiRains #ChennaiRains #Che...

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தண்ணீர்.
எங்கள் மயிலை.:(

Thursday, November 11, 2021

சேவை செய்வதே ஆனந்தம்.

வல்லிசிம்ஹன்
Thank you dear cousin Subha.


ஒருவர் செய்த சமூக சேவைக்காக, அவர் இறந்த பிறகு அவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. காரணம் வேறில்லை. இருக்கும்போது கொடுத்திருந்தால் அவர் ஏற்றிருக்கமாட்டார். பெருமைக்குரிய இந்த அறிமுகத்துக்கு சொந்தக்காரர் கோவை சாந்தி கியர்ஸ் நிறுவனர் திரு.சுப்பிரமணியம் அவர்கள் தான். கடந்த டிச.,11 அன்று அவர் மறைந்த பின்புதான் அவர் செய்த சமூகசேவை உலகமெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது.

பொறியியல் தொழில்நுட்பத்தில் கோவைவாசிகள் விற்பன்னர்கள் என்றால் சுப்பிரமணியம் வித்தகர். பி.எஸ்.ஜி.,தொழில் நுட்பக் கல்லுாரியில் பகுதி நேர விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டே, சிறிய அளவில் லேத் அமைத்து படிப்படியாக முன்னேறி சாந்தி கியர்ஸ் என்ற கியர் நிறுவனத்தை உருவாக்கி உலகின் முதல் தரமான கியர் நிறுவனமாக உச்சம் தொட வைத்தவர். கோவையின் 'கியர்மேன்' என்று தொழிலாளர்களால் கொண்டாடப்பட்டவர்.

 பல கோடி ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்த நிலையில், தனக்குக் கிடைத்த செல்வத்தை பகிர்ந்து வாழ நினைத்து சமூகசேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் சுப்ரமணியம். சாந்தி கியர்ஸ் பங்க்கில் பெட்ரோல், டீசல் போட்டால் வண்டிக்கு எந்தப் பிரச்சினையும் வராது. ஒரு துளி அளவு கூட குறையாது என்பது கோவை மக்களின் நம்பிக்கை. 

பத்து ரூபாய் இருந்தால் காலையில் பசியாறிவிடலாம். ஒரு ரூபாய்தான் ஒரு இட்லி. மதியம் பசியாற சுவையான சாப்பாடு வெறும் 18 ரூபாய்தான். ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு வந்தபோது, எல்லோரும் விலையை ஏற்றியபோது அந்த வரியையும் தன் பங்கில் ஏற்று சாப்பாட்டின் விலையைக் குறைத்தவர்.வாங்கிச் சாப்பிடும் வசதியே இல்லாதவர்கள் பல நுாறு பேருக்கும் தினமும் இரண்டு வேளை அன்னமிட்ட அண்ணல் திரு.சுப்பிரமணியம் அவர்கள்.

அதிகாலையில் சாய்பாபா காலனியில் மகனிடம் 20 ரூபாய் வாங்கிக்கொண்டு அங்கிருந்து பஸ் ஏறி சாந்தி கியர்ஸ் வந்து காலையும், மதியமும் இலவச உணவை வாங்கிச் சாப்பிட்டு விட்டு இரவில் தங்குவதற்கு மட்டும் வீட்டுக்குப் போகும் ஒரு மூதாட்டி அவர். கடந்த ஆண்டில் சுப்பிரமணியம் அவர்கள் இறந்தபோது அவர் கதறிய கதறல் தான் சுப்பிரமணியம் வாழ்ந்த வாழ்க்கைக்கான அடையாளம்.

மருந்துகளுக்கு 20 சதவீதம் சலுகை, மூன்றில் ஒரு பங்கு கட்டணத்தில் ஸ்கேன், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பூங்கா என்று வெளியுலகிற்கு தெரிந்து அவர் செய்த சேவை குறைவு. ஆனால் பறவைகளுக்கான பழத்தோட்டம், கிராமங்களுக்கு தரமான தார்ச்சாலை என்று யாருமறியாது அவர் செய்த சேவைகளின் பட்டியல் வெகுநீளம். அதனால் சுப்ரமணியத்துக்கு விருது கொடுத்ததை கோவை மக்கள் கொண்டாடுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

பத்மஸ்ரீ விருது சுப்பிரமணியம் போன்ற மாமனிதர்களுக்குத் தரப்படுவதன் மூலமாக பத்மஸ்ரீ விருது மேலும் கவுரவம் பெற்றிருக்கிறது. இந்த விருதை அவரது குடும்பத்தினர் வாங்கியிருந்தாலும் அதைப் பற்றி பெருமையாக ஒரு வார்த்தை சொல்லவும் தயாராக இல்லை சாந்தி கியர்ஸ் குடும்பம்...என்றைக்கும் ததும்பாத நிறைகுடம்!!! வாழ்க வளமுடன்!!!

படித்ததில் பிடித்தது. உங்களுக்கும் இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவருக்கும் பகிருங்கள்.

R.ராமகிருஷ்ணன்
மதுரை.

Tuesday, November 09, 2021

தீபாவளியின் போது வந்த பாடல்கள்.வல்லிசிம்ஹன்

தீபாவளிக்குப் புதுப்படங்கள் வெளியிடப்படும். அதற்கு முன்பே
பாடல்களும் வந்துவிடும்.

முதன் முதல் வண்ணத் தொலைக்காட்சியில்
அது போலச் சில பாடல்கள் மனதில் பதிந்தன.

பாடல்கள் கேட்கும் போது , வானொலியில் இசையில்
புதுப் பாடல்கள் கேட்டு அவைகளை உடனே ரசிக்கக் கொஞ்ச நாட்கள் பிடிக்கும்.
தொலைக்காட்சி வந்த புதிதில் கறுப்பு வெள்ளையில் 
ஒளியும் ஒலியும்  பார்த்தது போக,

சன் டிவியில் ஒரு தீபாவளியில் 'ராக்கம்மா கையைத் தட்டு''
பாடலைக் கண்டு ரசித்தது இன்னும் நினைவில்.  1991  என்று நினைவு.Monday, November 08, 2021

சின்னக் குழந்தை சேவடி போற்றி.

வல்லிசிம்ஹன்


சூர சம்ஹாரக் காட்சிகள் பொதிகையில்
ஒளி பரப்பாகும் நாள்
நாமும் அந்தக் கூட்டத்துடன் ஒன்றி கந்தனைச் சேவிப்போம்.

அகந்தையையும், கர்ம வினைகளையும் அழிக்க வந்த
வள்ளலின் நாமம் எங்கும் ஒலிக்க,
செந்தூர் அலைகள் துதி பாட
அந்த உணர்ச்சி மிகும்

ஓசைகள் நம் சிந்தையைச் சுத்தம் செய்யும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எப்பொழுதுமே கோபுரங்களும் விளக்குகளும் நமக்கு ஆதரவு
தரும். நான் உள்ளிருக்கிறேன்
என்று அந்த வேல் உரைக்கும். 
இன்றும் வேலா உன்னிடம் வேண்டுகின்றேன்.

இப்பொழுது என்னைத் துன்புறுத்தும் 
இந்த வலிகளிலிருந்து எனக்கு விடுதலை கொடு.

நீ கொடுப்பாய். நம்பிக்கை உண்டு.
உன் அம்மையும் அப்பனும் ,அன்பு சகோதரனும்,
உன மாமனும் மாமியும் , உன் இரு மாதரும்
அனைவருக்கும் நல் வழி காட்டட்டும்.Sunday, November 07, 2021

பத்தும் அறுபதும் மீள் பதிவு.

வல்லிசிம்ஹன்


நவம்பர்  7 2008
+++++++++++++++++++++++++++++


ஊருக்குக் கிளம்பப் போகிறொம் என்ற முஸ்தீபுடன் பேரனுடன் ஒரு அதிகாலை
பேச உட்கார்ந்தேன்.
அவன் தன்னுடைய காலை நேரத் தியானம் முடித்துக்கொண்டு, உடல்பயிற்சியும்
செய்த பிறகு ,என்னுடன் வந்து உட்கார்ந்தான்.
அவன் முகத்தில் கேள்வி. ஒன் மோர் அட்வைஸ் செஷனா????????
என்ற கேள்வி அவன் முகத்தில்.

எங்கள் அறையில் படுப்பதால் எங்களுடனேயே எழுந்திருக்கும் வழக்கம் வந்துவிட்டது.
அவனுக்கு வீட்டுப்பாடங்கள் இல்லாத நாளாகப் பார்த்து,
நேரம் இருக்கும் போது, மெஷின் துப்பாக்கி, வான்வெளி, குற்றங்கள் தண்டிக்கப் படவேண்டியவை
என்று ஒரே வேகமாகப் பேசுவான்.
எனக்கோ பயமாக இருக்கும். ஒரு வேளை அதிகமாகக் கற்பனை உலகத்தில் ,இருக்கிறானோ. நிறைய வீர தீரப் புத்தகங்கள் படிப்பதால் இத்தனை தீவிர சிந்தனைகள் வருகிறதோ என்று நினைப்பேன்.
''
பையா, இவ்வளவு உணர்ச்சி வசப்பட வேண்டாம், அது உடலுக்கு நல்லதில்லை.
எதையும் தீர்மானம் செய்வதற்குள் தீர யோசிக்கணும்'' என்று நான் முடிப்பதற்குள்
பாய்ந்து வரும் பதில்கள்.

அப்படித்தான் என் பள்ளிப்பருவத்தையும் அவனுடைய தற்போதைய பாடங்களையும் நேற்று
பேசிக்கொண்டிருந்தோம். '' உனக்கு இவ்வளவு பெரிய புத்தகங்கள் இருந்ததா பாட்டி?
நீ ஆந்தையைப் பற்றி பிராஜெக்ட் செய்திருக்கியா.
ஆப்ரஹாம் லின்கன் பற்றி என்ன தெரியும்.'' என்றேல்லாம் கேட்டபோது நான் என்னுடைய ' நாலாப்பு'
எப்படி இருந்தது என்று யோசித்து முடிந்தவரை சொன்னேன்.

என்னுடைய தேடல்கள் கூகிளில் தான். மற்றும் புத்தகங்களிருந்து இப்போதுதான்
எனக்கு வேண்டும் என்பதைநிறையப் படிக்கிறேன் என்றும் சொன்னேன்

ஆந்தை சாப்பிட்ட உணவை(எலிகள்) எப்படித் திருப்பிக் கக்கிவிடும் என்றும்
அதை (எலியின் எலும்புகளை) அவர்கள்
பரிசோதனைக் கூடத்தில் அறுத்துப் பார்த்ததாகச் சொன்னதும்
எனக்கு வியப்பு தாங்கவில்லை.
''அந்த எலும்புகளை என் லாக்கரில் ஒரு ப்ளாஸ்டிக் பையில் சீல் செய்து வைத்திருக்கிறேன்' என்று
வேறு சொன்னான்.
அது நல்லதில்லையே தொத்து நோய் ஏதாவது வந்துவிடாதா என்றதும், 
நாங்கள் எல்லோருமே அப்படித்தான் வைத்திருக்கிறோம்,ஒன்றும் வராது''என்றான்.

எதற்கு இதையெல்லாம் தெரிந்து கொள்ளணும் என்றேன். 'சுற்றுச் சூழல் பற்றி தெரிந்து கொண்டால்தானே
நாம் ஒழுங்காகப் பிழைக்க முடியும் என்று பதில் வந்தது.

.
நீ எதையாவது டைசெக்ட் செய்திருக்கிறாயா?? பாட்டி.
நான்; ஏதோ பூக்களைப் பிரித்துப் பார்ப்போம். ஒரு தவளை, ஒரு காக்ரோச்,ஒரு எலி டைசெக்ட் செய்திருக்கிறேன்''
அதுவும் நான் கல்லூரிக்குப் போனபோதுதான் என்றதும்,

உனக்கு ரொம்ப ஸ்லோ எஜுகேஷன் இல்லை??? என்று வேறு கேட்டான்.
நான் இந்திய கல்விமுறையைச் சோதிக்கும் இக்கட்டிலிருந்து விடுபட 

,அப்படிப் படித்தே நம் ஊரில் ஏகப்பட்ட விஞ்ஞானிகள் வளர்ந்தார்கள்,இருக்கிறார்கள் என்றும்
மேற்கோளோடு எடுத்துச் சொன்னேன்.

நான் மேம்போக்காக , ' பரிசோதனைன்னு சொல்லி கினிபிக் எல்லாம் கொல்லறாங்களே
அது தப்புனு தோணுகிறது' என்று  நான் சொன்னதும்.

அப்படிப் பார்க்கப் போனால் ''நீ செடியிலிருந்து பூவைப் பறிக்கிறதும் தப்புதான்.''
பூ செடியிலிருந்தால்தான் அந்தச் செடிக்கு நல்லது. நீ அதப் பறித்து சுவாமிக்கு வச்சு அது வாடிப் போய்க்
குப்பைக்குப் போகிறது.'' என்றான்.

ஒருவேளை மனிதர்களை வைத்துப் பரிசோதித்தால் இன்னும் பலன் கிடைக்குமோ என்னவோ என்று என்னை யோசனையோடு
பார்த்தான்.( அதாவது போட்டு வாங்குவது") என்னிடம் என்ன பதில் வருமென்று சோதனை செய்கிறான் என்று புரிந்தது:)
எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது. தாத்தா வாசனை பேரன் பேரில் பட்டிருக்கிறது என்று. அவருக்குத் தான் இந்தச் செடியில் பூக்களைப் பறிக்கிறது எல்லாம் பிடிக்காது.

அவனுடைய எண்ணங்கள், செயல்கள் எல்லாமே வித்தியாசமாகவே எனக்குத் தெரியும்.
கொஞ்ச வருடங்களா இருக்கின்றன அவனுக்கும் எனக்கு இடையில்.
ஐம்பது வருடங்கள்.!!!

விளையாட்டு பொம்மை | T Janakiraman | Trilogy | Bharathy Baskar

தி.ஜானகி ராமனும் அலுக்காது.
பாரதி பாஸ்கரை மீண்டும் காண்பதில் 
மிக மகிழ்ச்சி.
பட்டி மன்றத்தில் பங்கு கொண்டதாகத் 
தெரிய வந்தது. இறைவனுக்கு நன்றி.

Friday, November 05, 2021

மீண்டும் மீண்டும் மீண்டும் மீள் பதிவு. இது பின்னூட்டங்களுக்காக 2018

வல்லிசிம்ஹன்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

வாழ்க்கையில் எத்தனை தடவை அடி பட்டாலும்,
வாய் என்னவோ நேரம் பார்த்துப் பேசுவதில்லை.
சுற்றி இருப்பவர்களுக்குப் பிடித்த சப்ஜெக்ட் மட்டும் பேச வேண்டும்.

அவர்கள் மதிக்காதவர்களை 

உயர்த்திப் பேசக்கூடாது.

இதைவிட மௌனமாக இருக்கலாம் என்றால் அது முடிவதில்லை.
 வயதாவதில் வரும் தொந்தரவுகளில்
இதுவும் ஒன்று.


14 comments:
ஸ்ரீராம். said...
மனம் சொல்வதை மனமே கேட்காத நிலை!

8:50 PM 
வல்லிசிம்ஹன் said...
நான் சொன்னா நானே கேட்காமல் இருப்பதோ ஸ்ரீராம்.

1:52 AM 
நெல்லைத் தமிழன் said...
வல்லிசிம்ஹன் அம்மா... நான் நேரத்தை நம்புகிறவன். நமக்கு நேரம் (கோள்) சரியில்லாதபோது, நாம் நினைக்காமலேயே வார்த்தைகள் வந்துவிழுந்து நமக்கு பிரச்சனை உண்டாக்கிவிடும். சிலருக்கு அவங்களோட ராசியினால (எங்க அம்மா), மனதுல நினைத்திருக்கமாட்டார்கள் (அந்த அர்த்தத்தில்) ஆனால் பேசும்போது மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாத அர்த்தத்தில்தான் வார்த்தைகள் வரும். நான், முக்கியமான மீட்டிங்குக்குச் செல்லும்போது நாம ஜெபம் செய்யாமல் செல்வதில்லை, முடிந்தவரை வாயைப் பொத்திக்கொண்டு இருக்க முயற்சிக்கிறேன். (ஆனாலும் கஷ்டம்தான்).

சமயத்துல நானே இதை நினைத்து சிரித்துக்கொள்வேன் (நேரம் சரியில்லாததால் வார்த்தைகளை விட்டுவிட்டதை எண்ணி, அதனால் வந்த பிரச்சனைகளையும் எண்ணி)

10:40 AM 
Geetha Sambasivam said...
ம்ம்ம் இப்போதெல்லாம் நான் பேச்சை வெகுவாய்க் குறைத்து விட்டேன். :)

2:16 PM 
வல்லிசிம்ஹன் said...
உண்மைதான் நெல்லைத்தமிழன்,
கோளும்,கிரகங்களும்,ஷஷ்டாஷ்டகம் என்றெல்லாம்
எத்தனையோ இருக்கிறதே.
கடந்த நாலு வருடங்களாக இந்தப் பாடு.
நாம் பேசும் வார்த்தைகளுக்கு ஏதோ உள் அர்த்தம் இருப்பதாக
நினைத்த்க் கொண்டுவிடுவார்கள்.
உலகத்தில் என்னைச் சரியாகப் புரிந்து கொண்டவர்களில்
அம்மா,அப்பா,தம்பிகள்,கணவர்.
நம் மனம் செல்லும் வேகம் குழந்தைகளுக்குப் புரிபடுவதில்லை.
மகன் களின் அணுகு முறையும் அப்படியே.
மாற்றாக வந்தவர்கள் நம்மைப் புரிந்து கொள்ளாவிடில்
கீதா மாதிரி பேசாமல் இருப்பதே மேல்.
உங்கள் அணுகுமுறை சிறப்பு.
ராம நாமம் காக்கும். அம்மா பாவம் மா.
அவரைப் பார்க்க ஆசையாய் இருக்கிறது.

7:17 PM 
வல்லிசிம்ஹன் said...
கீதா மா. நிஜமாவா. யாராவது என்னிடம் பேசும்போது நான் பதில் சொல்கிறேன்.
வரிந்து கட்டிக் கொண்டு தப்புக் கண்டு பிடித்தால் நான் என்ன செய்ய. ஹாஹா.

7:22 PM 
Avargal Unmaigal said...
பேசாமல் இருப்பது தவறு. பேசவேண்டும் அப்படி பேசும் போதுதான் நாம் பேசியது தவறா இல்லையா என்று தெரியவரும் அப்படி தெரியவரும் போது அது தவறாக இருந்தால் நம்மை திருத்தி கொள்ளவேண்டும்

11:56 PM 
நெல்லைத் தமிழன் said...
'அவர்கள் உண்மைகள்' - பெரும்பாலும் நாம் பேசுவதை, மற்றவர்கள் அர்த்தப்படுத்திக்கொள்வர். அதனால்தான் ரொம்ப ஜாக்கிரதையா வாய விடணும் (சொல்றது சுலபம். எனக்கும் இது வந்த பாடில்லை). நம்ம பையனை, அம்மா கண்டிக்கும்போது (தவறாப் புரிஞ்சு கண்டிக்கலாம், அல்லது அது பெரிய தவறா இல்லாமலிருக்கலாம்), நாம் தனியாக அம்மாவிடம் விளக்கலாம், இல்லைனா, பெரியவங்க, அவங்க சொன்னா அதுனால என்ன ஆகிடப்போறது, அவங்களுக்கு இல்லாத உரிமையா என்று விட்டுவிடலாம். இல்லைனா பையன் முன்னாலயே, நம்ம அம்மாட்ட, 'உன் வேலையைப் பார்த்துக்கிட்டிரு, ஏன் அவனை எப்போ பார்த்தாலும் கண்டிக்கற' என்றும் சொல்லலாம். ஒரே செயல், எந்த மாதிரி விளைவை ஏற்படுத்துது என்று நினைத்துத்தான் பேசவேண்டியிருக்கிறது.

2:02 PM 
வல்லிசிம்ஹன் said...
அன்பு நெல்லைத்தமிழன்,

அங்கே தான் வம்பே ஆரம்பிக்கிறது.
என் பாட்டி அம்மா வழிப் பாட்டி,
என்னிடம் மிகப் பிரியம். இருந்தாலும்
சுருக்கென்ற வார்த்தைகள் விழும். நம் நல்லதுக்கு சொல்வதாக என்னால் அப்போது எடுத்துக் கொள்ள முடியவில்லை.
இப்போது இங்கே மகள் வெகு சாமர்த்தியமாகப் பையனைக் கையாண்டாலும்,
என்னால் சகித்துக் கொள்ள முடிவதில்லை.
இந்தப் பொண்ணு சிரமப் படுகிறதே.
அவள் சொல்வதைக் காதில் வாங்காமல் தன்போக்குக்கு வேலை செய்கிறதேன்னு கவலை.
சொன்னால் எனக்குத்தான் நஷ்டம்.
பாட்டி சொல்லிட்டான்னு பசங்க வருத்தப்படும்னு அவள் என் மேலேயே
சொல்வாள். பேசாமல் இருக்கலாம். இது அவள் குடும்பம்னு விட வேண்டியதுதான்.
நடுவில் இருப்பவர்கள் பாடு திண்டாட்டம் தான்.

6:07 PM 
Geetha Sambasivam said...
//இல்லைனா பையன் முன்னாலயே, நம்ம அம்மாட்ட, 'உன் வேலையைப் பார்த்துக்கிட்டிரு, ஏன் அவனை எப்போ பார்த்தாலும் கண்டிக்கற' என்றும் சொல்லலாம்.// இங்கே நான் கொஞ்சம் மாறுபடுகிறேன், நம்ம குழந்தை தப்பு செய்து விட்டால் அம்மா கண்டிக்கையில் தலையிடாமல் இருப்பதே நல்லது! என்னைப் பொறுத்தவரை, அப்போக் குழந்தைகளிடம், " உன் நல்லதுக்குத் தானே சொல்றாங்க! பாட்டி தானே!" என்று சொல்லி முடித்திருக்கேன். ஆனால் அதையும் சொல்லக் கூடாது என்பார்கள்.

அதே சமயம் என்னுடைய மைத்துனர்கள், கடைசி நாத்தனார் (எல்லோருமே என்னை விடச் சிறியவர்கள் தான்) தப்பு செய்து விட்டு அப்போ நான் இப்படிச் செய்யலாமா என்று கேட்டாலே எல்லோருமே கோபப்படுவார்கள். அதிலும் அவங்க செய்வது என் குழந்தைகளையோ, என்னையோ எங்களோட பேச்சு, வேலைகளைப் பார்த்துக் கிண்டல் செய்வது! அதைத் தான் கேட்டிருப்பேன்! அப்படியும் என்னோட மாமனார், மாமியார் "உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ! அவங்களுக்கு எது தப்பு, எது சரினு சொல்லித் தர அளவுக்கு நீ பெரியவளா? இல்லை கெட்டிக்காரியா?" என்பார்கள். இன்று வரை அப்படித் தான் நடக்கிறது! ஆகவே தான் நான் பெரும்பாலும் பேச்சைக் குறைத்துக் கொண்டு விட்டதோடு அபிப்பிராயம் கேட்டால் கூடச் சொல்லுவதில்லை! அப்படியா என்று கேட்டுவிட்டு நகர்ந்து விடுவேன்! :))))))) மற்றபடி எங்கள் குழந்தைகள் இருவரின் குடும்ப விவகாரங்களிலும் எங்கள் இருவருக்குமே காது கேட்காது, வாய் பேசாது! கண் தெரியாது!

6:14 AM 
வல்லிசிம்ஹன் said...
Geetha, the same with our family.Thank you .

6:46 AM 
Thulasidharan V Thillaiakathu said...
துளசி : அம்மா பல சமயங்களில் நாம நம்ம கருத்தைச் சொல்ல முடியாமல் போகிறதுதான்...பார்த்துத்தான் பேச வேண்டியுள்ள்து இருந்தாலும் சில சமயங்களில் நம் வார்த்தைகள் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டுவிடுகிறது...நேரம் என்று எடுத்துக் கொண்டு நாக்கில் சனி என்றும் சொல்லிக் கொண்டு கடக்க வேண்டியதாக மனம் வருந்தும் சூழலும் ஏற்படுகிறது.

கீதா : வல்லிம்மா இடம் பொருள் ஏவல் என்று சொல்லுற மாதிரி பார்த்துத்தான் பேசணுமா இருக்கு. அதுவும் நாம நல்லதுனு யாருக்காவது சொல்லப் போக அந்த நல்லதும் கூடத் தப்பாகிவிடுகிறது. ஸோ மௌனம் நல்லது என்று சென்றுவிடுகிறேன் நான் பல சமயங்களில் முடிந்தால் அழகாகச் சொல்ல முடிந்தால் சொல்லுகிறேன் இல்லையா கப்சிப்பென்று போய்விடுகிறேன். அதுவும் வீட்டில் பெரும்பாலும் மௌனம் தான்...சாதாரணமாகக் கூடப் பேச முடியாமல் போகிறது. அத்னால் மௌனமே...மகனுடன் நிறைய பேசுவேன்...அவனுக்கு நேரம் இருக்கும் போது அவனும் பேசுவான்...

அவர்கள் மதிக்காதவர்களை உயர்த்திப் பேசக்கூடாது.// இது ரொம்பவே உண்மை எனக்கும் இந்த அனுபவம் உண்டு. நாம் எல்லோரையுமே அவர்களது ப்ளஸ் பாயின்ட்ஸ் எடுத்துச் சொல்லும் பழக்கம் வைத்துக் கொண்டால்...நான் சொல்லும் போது அவர்களைப் பற்றி நெகட்டிவாகச் சொல்ல வீட்டில் உள்ளனர். அதுவும் நாம் யாரையுமே உயர்வாகச் சொல்லமுடியாமலும் போவதுண்டு. வல்லிம்மா இது அவர்களின் ஈகோவைத்தான் காட்டுகிறது. எனவே நம்மீது தவறு இல்லையே நாம் நல்லதுதானே சொல்கிறோம் இல்லையா அப்படி நினைத்துக் கொண்டு சென்றுவிடலாம்..

9:54 AM 
Thulasidharan V Thillaiakathu said...
கீதாக்கா உங்களின் நெல்லைக்கான பதிலை அப்ப்டியெ வழி மொழிகிறேன்....ஒன்றே ஒன்றைத் தவிர...மைத்துனர், நாத்தனார் அவர்கள் சொல்லுவதற்குக் கூட நான் பதில் சொன்னதில்லை. என் மகனையே சொன்னதற்கும் வாய் மௌனமாக வந்துவிடுவதுண்டு....ஏனென்றால் பல இடங்களில் நாம் பேசிப் பயனில்லை. அவர்கள் அவ்வளவுதான்,,,பகவானே அவர்களுக்கு நல்ல சிந்தனைகளைக் கொடுனு சொல்லிக் கடந்துவிடுவதுண்டு. இத்தனைக்கும் என் பிறந்த வீட்டில் பாயின்ட் பேசி சட்டம்பி என்ற பெயரும் என் அம்மாவின் அம்மா என்னை அப்படி அழைப்பார்கள். ஆனால் அதன் பின் இதுவரை எத்தனையோ நடந்தாலும் பல சமயங்களில் மௌனமே!!

வல்லிம்மா வீட்டுக்கு வீடு வாசற்படி ஹா ஹா ஹா ஹா...பின்ன மனுஷங்கனு இருந்தா இப்படித்தானே...இது உலகம் முழுக்கப் பொருந்தும்!!

கீதா

10:00 AM 
வல்லிசிம்ஹன் said...
அன்பு கீதா,
பிறந்தகத்தில் சட்டாம்பிள்ளை
புகுந்த அகத்தில் சுண்டெலி.
எத்தனை மன வருத்தங்கள். அதைஎல்லாம் எழுதிக் கட்டுப் பிடியாகாது.
ஆமாம் மௌனம் ஒன்றே வழி.
இப்பொழுது ஒருவருக்கும் சந்தர்ப்பம் கொடுக்காமல் ஓடியாச்சு.
அதே மனிதர்களுக்கு வயதாகி விட்டது. என் குழந்தைகளுக்கும் வயதாகி விட்டது.
பெருமூச்சுதான் விடுகிறேன்.

Wednesday, November 03, 2021

தீப ஒளித் திரு நாள் வாழ்த்துகள்.


வல்லிசிம்ஹன்,

மீள் பதிவு. 2011

Luz Vinayagar.


கிருஷ்ணா     வைகுந்தா மாதவா


'' பிலாஜி கிங்''
*******************
இது ஒரு பலகாரம். இனிப்புப் பட்சணம். வாயில் போட வேண்டியதுதான்.
ம்ம்ம் என்பதற்கு முன்னால் தொண்டைக்குள் போய் விடும்.

''எனக்குப் பிடிக்கலை பாட்டி. இட் இஸ் ஸோ ஸ்வீட்.''
இது    ஸ்விஸ் பேத்தி.

ஓ!  இட் இஸ்  ஓகே ஐ  கஸ்'' இது பெரியவர்:)

பிலாஜி கிங் பெஸ்ட்  பாட்டி. அம்மா  மேட் இட்.

இது நடுப் பெருமாள்.:)  ஐந்து வயது கிருஷ்ணா.

என்னடா அது புதுப் பேரா  இருக்கே.
அது ஸ்விம் பண்ணும் பாட்டி.
என்னது!!!!!!

ஸ்வீட்   வாட்டர்ல  ஸ்விம் பண்ணும்.
ஓ வெள்ளையா இருக்குமா.???

இல்லாஆஆ.
ப்ரௌன்  கலர்.

வெல்லச் சீடையா செய்தா உங்க அம்மா. தீபாவளிக்கு.?????
அவனைச் சீண்டினேன்.

"இல்ல பிலாஜி கிங்."

அம்மா பாட்டிக்குத் தெரியவே இல்ல. நீ சொல்லு.:"

என்னடிம்மா பண்ண?
வாயில நுழையாத ஸ்வீட்  பேரா இருக்கே!!  இது நான்."அவன் சாப்பிட்டது இரண்டு தான் மா.
அதுல  நாக்குத் தமிழ்ல  புரளறது.:)பலவிதமாச் சொல்லிப் பார்த்து இந்தப் பெயர்ல வந்து நின்னிருக்கான்:)

குலாப்ஜாமுன்  தான் இந்தப் பாடு பட்டுவிட்டது.:)"

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

கந்த சஷ்டி ஆரம்பம்.ஐப்பசியும் வந்தது. அமாவாசையும் வந்தது. அடுத்தாற்போல்
வரவேண்டியது கந்த ஸ்வாமியின் ஷஷ்டி  விழா தானே,

விழாவின் போது விரதம் இருப்பவர்களைப்
பற்றி நம் கோமதி அரசு எழுதுவார் என்றே
நம்புகிறேன். 

அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள எப்போதுமே ஆவல்.

எங்கெல்லாம் தங்கி இருந்தோமோ
அங்கெல்லாம் முருகனும் பிள்ளையாரும் மலை மேலிருந்து
ஒளி வெள்ளமாகக் காட்சி கொடுப்பார்கள்.

திருப்பரங்குன்றம் மலை, திண்டுக்கல் மலை, மருதமல, திருச்சி மலை
திருத்தணி மலை என்று குன்றுகள் தோறும் இருந்து 
நம்மைக் காக்கும் அண்ணனும் தம்பியும் 
என்றும் துணை.

வல்லிசிம்ஹன்

Tuesday, November 02, 2021

சந்திப்போமா இனி...

வல்லிசிம்ஹன்பழைய புத்தகம் ஒன்றில் படித்தது. 
எதுவுமே தற்செயலாக நிகழ்வதில்லை.
எங்கெங்கோ போடப் பட்ட முடிச்சுகளின் பிரகாரம்

சந்திப்புகளும் எதிர்காலங்களும் நிச்சயம் செய்யப் படுகின்றன.

நானும் சிங்கமும் சந்தித்ததும் அது போலத்தான்.
பசுமலை மதுரையில் அப்பா இருந்த காலத்தில் 
நாலைந்து தடவைகள் மதுரை டவுனுக்கு சென்றிருப்போம். நானாகச் சென்றது
இரண்டு தடவை.
அதுவும் சிறு பிராயத்திலிருந்து பழகின
என் சித்தப்பா மகளைக் கண்டு வம்பு அரட்டை
செய்யப் போனது ஒருமுறை.

அந்த சித்தப்பாவுக்கு என் அப்பாவை வம்புக்கு இழுப்பது
பிடிக்கும். அவளுக்கும் வாய் ஜாலத்தில் 
குறைந்தவள் இல்லை.

திருமணம் என்ற சிந்தையே இல்லாத என் மனதில்
ஒரு எண்ணத்தை வரவழைத்து என்னையே கடிதம் எழுத வைத்து
செலுத்தப் பட்ட பூமராங்காக நிகழ்ச்சிகள்
நிறைவேறின.

இன்னமுமே இப்படி நடந்ததா என்று நினைக்க வைக்கும் நிகழ்வு.
கடிதம் சென்ற இரண்டு வாரங்களில்
இருவரும் சந்தித்து இவர் தான் இவள் தான் என்று தீர்மானித்து
ஐப்பசியில் ஆரம்பித்து தையில் 
திருமணமும் நடந்தாச்சு.

அந்த நாள் இந்த அக்டோபர் 31 ஒரு ஞாயிற்றுக் கிழமை.
நிகழ்வு.
மற்றதெல்லாம் வேறு கதை.
நல்லவர் கிடைக்க எனக்கு புண்ணியம் இருந்தது.
இறைவன் நல்லவன் தான்.
அனைவரும் வாழ்க நலமுடன்.
Monday, November 01, 2021

முதுமையே வா வா ...புத்தகம்.


வல்லிசிம்ஹன்படத்தில் இருக்கும் தம்பதிகள் எனக்குத் தெரிந்தவர்களே .

பெயர்கள் அவசியம் இல்லை. 
 இந்தப் புத்தகத்தை வாங்கின உடனேயே உறவினரிடம் 
கேட்ட போது,
அறுபதிகளிலேயே விளம்பரப் படங்களில்
அவர்கள் நடித்திருப்பதாகவும் 
நல்ல அன்யோன்ய தம்பதிகளாக நிஜ 
வாழ்க்கையிலும் இருப்பதனால் அவர்களுக்கு
நல்ல பெயர் என்றும் தெரிய வந்தது,


ஹார்லிக்ஸ், தேனீர், முதியோர் இல்லம்
என்று நிறைய விளம்பரங்களில்
வந்தார்கள். இந்த நூலை எழுதிய  டாக்டர் திரு வி எஸ் .என் 
அவர்களும் எங்களுக்குத் தெரிந்தவர்.

அடையாறு வி ஹெச் எஸ் மருத்துவமனையில் 
ஜிரியாடிரிக்ஸ் என்னும் முதியவர்களுக்கான
பகுதியில் அவரைச் சந்தித்த நினைவு.


புத்தகம் முழுவதும் முதியோர்களுக்கு
அறிவுரை. அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், மனப் பாதிப்புகள்,

நோய்களின் அறிகுறி, உடனடியாக 
அதைக் கண்டறிதல்,  மருத்துவ மனை அணுகுதல்,
நோய்களுக்கு ஆகும் செலவு, அரசு மருத்துவ மனையின்
அனுகூலங்கள்,

வீட்டில் நோயுற்றவர்களைக் கவனிக்கும் முறை,
அதற்குத் தனி உதவியாளர்களை அமைக்க 
விசாரிக்க வேண்டிய அலுவலகங்கள், ஏஜன்சிகள்

ஒன்று விடாமல் அத்தனை விவரங்களையும் கேள்வி பதில் முறையில்
விவரித்திருக்கிறார் டாக்டர் நடராஜன்.

வி ஹெச் எஸ் மருத்துவமனை தோன்றக் காரணமாக இருந்த
உன்னத மனிதர்  டாக்டர் சஞ்சீவியும் நினைவுக்கு வந்தார்.

இத்தனை சமூக நலங்களும் எளியவர்க்கும் சென்றடைய
உழைத்தவர் அவர்.

விகடன் பிரசுரமான இதைச் சிறிது சிறிதாகத் தான் 
படித்தேன்.

புத்தகத்தின் விலை 190 ரூபாய்.
கொடுக்கும் பலன் அளவிட முடியாதது.
வீட்டில் முதியவர்கள் இருந்தால், தாங்களே
முதியவர்களாக  இருந்தால்,
அண்டை அசலில் இருப்பவர்களுக்கு
உதவ விரும்பினால் படித்து அறிந்து கொள்ளலாம்,.

யாருக்காவது பலன் கொடுத்தால் மகிழ்ச்சி.