Showing posts with label Short story August 2021. Show all posts
Showing posts with label Short story August 2021. Show all posts

Sunday, August 08, 2021

முன்னம் ஒரு காலத்திலே..6.

வல்லிசிம்ஹன்

முந்திய அத்தியாயத்தில் சாரதாவும்,கோபாலன் சாரும் கிளம்பிச் சென்றதைச் சொல்லி இருந்தேன்.
எங்களுக்கு  இது அதிர்ச்சி என்றால்,
திரு வில்லியம்ஸ் முகத்தைக் கண்ணால்
பார்க்க முடியவில்லை.
ஒரு நொடியில் முக பாவத்தைச் சரி செய்து கொண்டார்.''எல்லோரும்
வந்து கௌரவித்ததற்கு மிக நன்றி.
இறைவன் என்றும் நம்முடன் இருப்பார்.

மணி 12 ஐ நெருங்குகிறது. மீண்டும் புது வருடத்துக்குச் சந்திக்கலாம்.''
என்று கிருஸ்துமஸ் தின வாழ்த்துகளைச் சொல்லிவிட்டுத் தன்
அறைக்குள் சென்று விட்டார்.
அறையின் கலகலப்புச் சட்டென்று ஓய்ந்தது.
எலிசபெத் எல்லோரும் சாப்பிட்டு விட்டார்களா என்று
கவனித்தாள்.
'' அவர்கள் தான் முக்கியமா, நாங்கள் முக்கியம் 
இல்லையா'' என்று முகம் சுளித்தாள் டாக்டர் சுசீலா.

மற்ற நண்பர்கள் திரு வில்லியம்சின் கறார் நடவடிக்கைகளுக்குப் 
பழகியவர்கள். இதற்கு மேலும் போதை ஏறினால்
தங்கியிருக்கும் இடத்துக்குப் போவது தடுமாறிவிடும்
என்ற யோசனையில் மகிழ்ச்சியுடனே கிளம்பினார்கள்.

அதுதான் புது வருடத்துக்கு வருவோமே ,அப்போது பேசிக்கொள்ளலாம்
என்று புறப்பட்டார்கள்.
சிலர் காலையில் கோவை செல்ல முடிவெடுத்து மற்ற
தோழர்களின் வீட்டிற்குச் சென்றார்கள்.
இண்டர்காம் அழைப்பு கேட்டு 
கணவனின் அறைக்குச் சென்றாள் எலிசபெத்.
''உன் அத்தை பெண்ணைப் புறப்படச் சொல். இனி இங்கே
அவள் வரக்கூடாது'' என்ற சொல்லிவிட்டுப் படுக்கச் சென்றார்.

மெல்ல வெளியே வந்த எலிசபெத் எங்களைக் கண்டதும்
பக்கம் வந்து'' நீங்களும் ஊருக்குக் கிளம்ப வேண்டுமா?''
என்று கேட்க நாங்களும் தலையசைத்தோம்.

''ஒரு நிமிடம் ,!!!ஐய்யர் வந்து விட்டாரா பார்க்கிறேன்" என்ற படி வெளி
போர்டிகோ அருகில் சென்றாள்.
அதற்குள் இண்டர்காம் ஒலிக்க சிங்கம் எடுத்தார்.
''டேய் சிம்மு, நீங்கள் இன்று இரவு தங்கி விடுங்கள்.
காலையில் பலகாரம் சாப்பிட்டுக் கிளம்பலாம்"
என்று வில்லியம்சின் குரல் கேட்டது.
அந்த மனுஷனுக்குப் பாம்புச் செவியோ
என்று நான் வியந்தேன்.

நாங்கள் நிற்கும் இடத்திலிருந்து 60 கஜ தூரம்
இருக்கும் அவரது அறை.கதவும் மூடி இருக்கிறது.:))

உள்ளே வந்த எலிசபெத்திடம், செய்தியைச் சொன்னார்
சிங்கம்.
"ஓ நல்லதாச்சு , குழந்தைகள் தூங்குகிறார்கள்.அதை ஒட்டி இன்னோரு அறை
இருக்கிறது.நீங்கள் உறங்கிக் கொள்ளலாம் "
என்றாள்.
எனக்கோ காலையிலிருந்து உடை மாற்றாமல் 
சங்கடம்.ஆனால் குளிர் என்னைப் பேச விடவில்லை.
இரவு வணக்கம் சொல்லிவிட்டு அந்த பச்சை வண்ண
அறைக்குள் சென்றோம்.
ஆமாம் அந்த வீட்டில் ஏழு வண்ணங்களுக்கும் அறைகள் இருந்தன,
பச்சை வண்ண அறையில் திரைச்சீலைகள் இளம்பச்சை.
உட்காரும் சோஃபா, கட்டில்கள் ஆழ்ந்த  பச்சை நிறம்,.
கட்டிலின் மேல் மெத்தை விரிப்புகள் ஆலிவ் பச்சை.

குழந்தைகளைத் தொந்தரவு செய்யாமல்
நாங்களும் உறங்கிவிட்டோம்.
வீட்டின் சத்தங்களுக்கு நடுவே வாசல் கதவுகள்
அடைக்கப் படும் சத்தமும்,
நாய்கள் அவிழ்த்து விடப்படும் சத்தமும் கேட்டது.
உறங்கி எழுந்திருக்கும் போது சிங்கமும் குழந்தைகளும்
குளியலறையில் சிரிக்கும் சப்தம் கேட்டது.


நான் எழுந்து அறையை ஒட்டிய ஃப்ரென்ச் விண்டோஸ்
வழியாகத் தோட்டத்தை ரசித்துக் 
கொண்டிருந்தேன்,.
''அம்மா!! என்ற குரல் கேட்டது.திரும்பினால்
த்ரேசா கைகளில் பெரிய தட்டில் 
காப்பி, பிஸ்கட்,பால் என்று வைத்து
நின்று கொண்டிருந்தாள்.
"உள்ள வாம்மா" என்றதும் ''அம்மா உங்களை சாப்பாட்டு மேஜைக்கு வரச் சொன்னார்''
என்று வெளியே சென்றாள்.

ஒரு 36 மணி நேரத்துக்குள் என்னவெல்லாம் அனுபவம்
என்று வியந்து கொண்டு,
சிங்கத்தையும் குழந்தைகளையும்
அழைத்தேன்,
நானும் முகம் கழுவி சுத்தம் செய்து கொண்ட பின்னர்
குடும்பம் சாப்பாட்டு அறைக்கு நகர்ந்தது.
''என்னடா எல்லோரும் தூங்கினீர்களா?'' என்ற 
பெரிய குரல் கேட்க , ஆமாம் பில் என்றார் சிங்கம்.
''ஹவ் அபௌட் யூ மிஸஸ் சிம்மு.? சௌகரியமாக
இருந்ததா?'' என்ற விசாரிப்புடன்

குழந்தைகளையும் உட்காரச் சொன்னார்.

எலிசபெத் புத்தம் புதிய புன்னகையுடன் 
அழகாக உடை உடுத்த் இருந்த பெண்களுடன் வந்தார். 
உலகத்திலேயே மிருதுவான இட்டிலி, சட்டினி மிளகாய்ப் 
பொடி எல்லாம் சத்தம் இல்லாமல் 
பரிமாறப் பட்டன.
சின்னவனைப் பார்த்து ''நெய் ,சர்க்கரை வேண்டுமாடா
உனக்கு ?''என்று கேட்டதும் மேலும் கீழும் தலையாட்டினான்.
""
குழந்தைகளுக்கு நிறைய நெய்யும் சர்க்கரையும் வை வெள்ளைச்சாமி"
என்று அந்த சமையல்காரரிடம் சொல்ல அவரும்
பணிவாகக் கொண்டு வைத்தார்.

''நாங்கள் கிளம்பலாமா பில். ? கோவையில் வேலை இருக்கிறது''
என்றார் சிங்கம்.
"ஆல் இன் குட் டைம்:)"" இப்பவே சனிக் கிழமை மதியம் ஆகப் 
போகிறது. ஒரு நாள் உன் வொர்க்ஷாப் நஷ்டப்பட்டு விடுமா?
என்னோடு எஸ்டேட் சுற்றிப் பார்க்கக் குழந்தைகளோடு வா.
பிறகு ஊருக்குப் போவதைப் பார்க்கலாம்" என்றார்.

பசங்களும், சிங்கம், திரு வில்லியம்ஸ் பெரிய ஜீப்பில் ஏறிக் கொண்டு
வெளியே சென்றார்கள்.

என்னுடன் நீ வா என்று எலிசபெத் அழைக்க
வெளியில் சென்று படிகளில் உட்கார்ந்தோம்.
''இரவு  என்ன நடந்தது என்று தெரிய வேண்டாமா?"
என்றாள்.'' அவசியமானால் சொல்லுங்கள்.''
என்றேன்.
அந்தப் பெண் சாரதா அழுததும் நான் என் தவறை உணர்ந்து விட்டேன்.
என் கணவர் அப்படிப்பட்ட மனிதரே அல்ல.
கோபம் பெரிதாக வருமே தவிர நல்ல குணவான்.
தவறிழைத்திருக்க மாட்டார். அதுவும் கோபாலன் மாதிரி சாதுவான
மனிதனுக்கு அவர் வேறு விதமாகத் தீங்கிழைக்க
இறைவன் சாட்சியாக  நினைக்க மாட்டார்.
நேற்று இரவு  வெகு நேரம் பேசினோம்.
பைபிள் படித்தே படுக்கச் சென்றோம்.
இனி எங்கள் வாழ்வில் சாத்தானுக்கு இடம் இல்லை"

அதனால் நீ நிம்மதியாகப் புறப்படு. உங்க வீட்டுக்காரரை அனேகமாக
எங்க வீட்டுக்காருடன் தான் பார்க்கப்
போகிறாய்.எங்க வீட்டுக்காரருக்கு உலகமே குடும்பமாக இருந்தால்
சந்தோஷமாக இருப்பார்.''

என்று முடித்தவளை மகிழ்ச்சியுடன் பார்த்தேன்.
உள்ளே சென்றோம் அங்கே எங்களுக்குக் 
கொடுக்கப் பட்டிருந்த அறையில் மிகக் கச்சிதமாக
பைகள் வைக்கப் பட்டிருந்தன.
எங்களுடைய க்ருஸ்துமஸ் பரிசு உன் குடும்பத்துக்கு.
மகிழ்ச்சியுடன் அணிந்து கொள் என்று என் கையில் ஒரு பையைக்
கொடுத்தாள்.
அழகான சந்தேரி காட்டன் புடவை அரக்கு வர்ணத்தில்
நீலப் பூக்களுடன் அமைதியாக அவள் கையில்
உட்கார்ந்திருந்தது.
மற்ற பைகளில் பெரிய கேக், ஃப்ரூட் பன், ஆரஞ்சுப் பழங்கள்,
மாதுளம்பழங்கள், ஒரு பெரிய பாக்கெட் காப்பிப் பொடி, டீத்தூள்
எல்லாம் இருந்தன,
எனக்கு மிகத் திகைப்பாக இருந்தது.

அன்று இரவு,
நில்கிரி ரயிலில் ஏற்றி விட்டார் வில்லியம்ஸ்... 70 நிமிடங்களில் 
கோவை வந்து விட்டோம்.
ரயில் நிலையத்திலிருந்த டாக்சி எடுத்துக் கொண்டு
வீடு வருவதற்குள்
குழந்தைகள் தூங்கி விட்டார்கள்.

அடுத்த வீட்டை நோக்கினேன். இருளில் ஆழ்ந்திருந்தது.

அடுத்த ஒரு வாரத்துக்கு அங்கு ஆரவாரமே இல்லை.
பிறகு ஒரு நாள் சாரதா நம் வீட்டிற்கு வந்தார்.

அந்த மதிய வேளையில் அவரின் அழகு
இன்னும் அதீதமாகத் தெரிந்தது.
''குருவாயூர் போய் வந்தோம் ரேவதி.
நான் நம்பிக் கொண்டிருந்த நிகழ்ச்சியும் இன்னும்
எட்டு மாதங்களில் நடக்கப் போகிறது''
என்ற வார்த்தையைக் கேட்டதும்
எனக்கு வந்த ஆனந்தத்தைச் சொல்லி முடியாது.
அப்படியே அவரை அணைத்துக் கொண்டேன்.

  ''நீயும் போன வார நிகழ்ச்சிகளை மறந்து விடு.
இதோ நாளை புது வருடம்.
இன்னும் கொஞ்ச நாட்களில் திருச்சூர் சென்று விடுவோம்.
அம்மா வீடும் குருவாயூரப்பனும் பக்கம்."
இனிமேல் திரு வில்லியம்ஸ் குடும்பத்துடன் எங்களுக்கு
சம்பந்தம் இல்லை.
எங்க வீட்டுக்காரருக்கு வருத்தம் தான்.
வரப் போகும் பையன் எல்லாவற்றையும் 
மாற்றி விடுவான்" என்றார்.

அவர்கள் செல்வது  வருத்தம் தான். எதிர்வீட்டில் புதிதாகச் 
செட்டியார் குடும்பம் வந்திருந்தது, அவர்கள் வீட்டிலும் மூன்று 
பெண் குழந்தைகள்.
மாறிக் கொண்டே இருப்பதுதானே வாழ்க்கை.!!!
சாரதா கோபாலனுக்கு மகிழ்ச்
சியுடன் விடை கொடுத்தோம்.

திரு வில்லியம்ஸ் குடும்பத்துடன்  மாதம் ஒரு முறையாவது
வந்து விட்டுப் போவார்கள்.
சிங்கத்துக்கு மேன்மையான தோழர் கிடைத்தார்.
எனக்கும் தான்!!!! உயர்ந்த தோழி கிடைத்தாள்.
70களில் நடந்த இந்த சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்ததில்
இந்த ஆறு நாட்களும் உதகையில் இருந்த உணர்வு எனக்கு.

மிகைப்பட சொல்லவில்லை. இருந்தும் மிக நீளம் தான்.
எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம்.   நட்புகளுக்கு
மிக மிகநன்றி . நல்ல நட்பு கொஞ்சம் சிதைந்தாலும் 
கோபாலன் திரு வில்லியம்ஸ் இருவருக்கும் 
நட்பைப் புதுப்பித்துக் கொள்ள
மீண்டும் ஒரு கட்டிடம் காரணமாக இருந்தது.
சென்னையில் வீடு கட்ட விழைந்த போது
அழைத்த கம்பெனியின்  பங்குதாரராகக்
கோபாலன் வந்த போது மீண்டும் நட்பு துளிர்த்தது.
மீண்டும் அந்த நால்வரும் சேர்ந்தனர்.
முன் போல இல்லாவிடினும் கசப்பு இல்லை.
சுபம் மங்களம்.


OOTY LAKE.







Thursday, August 05, 2021

முன்னம் ஒரு காலத்திலே 4

வல்லிசிம்ஹன்

கிருஸ்துமஸ் நாள் நல்ல மூடுபனியுடன், 
குளிர் சூழ லேசான சூரிய வெளிச்சத்துடன் மலர்ந்தது.
குழந்தைகளுக்கு மகா உத்சாகம். ஜன்னல்களைத் தொட்டுச்
சில்ல்ல் என்று சப்தம் எழுப்பினார்கள்.

அவரவர்களுக்கான பால், காப்பி கொடுத்ததும்
கொண்டு வந்திருந்த நல்ல் உடைகளையும் காலுறைகளையும்
மாட்டி ஷூ போட்டுக் கொண்டு 
சமர்த்துக் குடங்களாக வண்டியில் ஏறிக் கொண்டார்கள்.

நாங்கள் வில்லியம்ஸ் அவர்களின் வீட்டு வாசலில் இறங்கி சுற்றியுள்ள
பெரிய தோட்டத்தைப் பார்த்தோம்.
மலையை ஒட்டி அமைந்த தோட்டம் என்பதால் படிப் படியாக
அமைந்த நிலத்தில்
ரோஜாச் செடிகள்,பலவகை பெயர் தெரியாத ஃபெர்ன்ஸ்,
குரோட்டன்ஸ், மாதுளை மரங்கள், ஆரஞ்சு மரங்கள்
என்று வண்ணமயமாக   இருந்தது அந்த எஸ்டேட்.

குழந்தைகள் விளையாட சறுக்கு மரம்,ஊஞ்சல்கள்,
என்று விதவிதமான அமைப்புகள் தம்பதிகளின் ரசனையைக் காட்டியது.சுற்றி வரும்போது பெரிய பெரிய  kennels 
கண்ணில் தென்பட்டது.
நாங்கள் அருகே வந்த போது அத்தனை 11 நாய்ச்செல்லங்களும்
குரைக்க ஆரம்பித்தன:)

தாங்க முடியாமல் விரைந்து வீட்டு முகப்புக்கு வந்து விட்டோம்!!!
இத்தனை ஜீவராசிகளுக்கும் சாப்பாடு?
கூட வந்த  சுந்தரம், ''அவைகளுக்கு சமைக்கத்
தனி ஆள் இருக்கிறான். அவன் வர நேரம் தான்.
ஐய்யா நீங்கள் உள்ளே போய் உட்காருங்கள்''

''கதவைத் தாளிட்டுக் கொள்ளுங்கள்.  இவைகளை அவிழ்த்துவிட்டால்
இஷ்டத்துக்கு ஓடும்'' என்றார்.



இந்தப்படம்..............................,  அன்று மதியம்  சாப்பாட்டுக்குப் பின் பார்த்து ரசித்தோம்.

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அவர்கள் வீட்டில் அசைவம்
கிடையாது.
அவர்கள் பழக்க வழக்கங்கள் என்னை ,என் சிந்தனைப் போக்கை மாற்றியது.

பிடிக்காதது ஒன்றே ஒன்று. ஆனால் மலை வாசஸ்தலத்தில் இருப்பவர்கள் 
எல்லோருக்கும்  அந்தப் பழக்கம்  இருந்தது தெரியும்.

மாலை கிளம்ப இருந்த எங்களை கோபாலன் தம்பதியினர்
வற்புறுத்தி இருக்க வைத்தார்கள்.

கூனூர், சுற்றிப் பார்த்துவிட்டு உதகமண்டலமும் போய் வந்த
போது மாலை 8 மணி ஆகியிருந்தது.
எங்கள் குழந்தைகளும் அவர்கள் பெண்கள் இருவரும்
உள்ளே இருந்த சின்ன சாப்பாட்டு அறையில் 
தோசை சாப்பிடச் சென்றார்கள்.

முதல் நாள் மாதிரியே ஷெர்ரி என்ற  வைன் மற்றும் சற்று அதிக
ஆல்கஹால் உடைய விஸ்கி  கலந்து
பேசின வண்ணம் குடித்துக் கொண்டிருந்தார்கள்.
எங்களைத் தவிர இன்னும்  சில சினேகிதர்கள்

கோவையிலிருந்து வந்திருந்தார்கள்.
 நிதானமாக ஆரம்பித்தது, எடுத்ததற்கெல்லாம்
சிரிப்பு என்று சென்று கொண்டிருந்தது.

சமையல் பேச்சு வரும்போது திரு வில்லியம்ஸ்
சாரதாவின் சைவ சமையலை வெகுவாகப் பாராட்டினார்.

அவர் ஒரு உணவுப் பிரியர் என்பது இரண்டு நாட்களாக 
நான் பார்த்ததில் தெரிந்தது.
அவர்கள் வீட்டில் எலிசபெத் அவர்களைத் தவிர இரண்டு
 சமையல்காரர்களும் இருந்தார்கள்.
எல்லோருமே சமையல் செய்வதில் தேர்ந்தவர்கள்.

இந்தப் பேச்சில் எலிசபெத் குறுக்கிட்டு,
''நம் வீட்டு சமையலை விட அவர்கள் வீட்டு உணவு 
உங்களுக்குப் பிடித்துவிட்டது'' என்று புன்னகைத்தபடி சொன்னாலும்
அதில் ஒரு கசப்பு இருந்தது தெரிந்தது.

வந்திருந்த இன்னோரு டாக்டர் தோழி,
''சாரதாவுக்குப் பிள்ளையா குட்டியா
சமைப்பதைத் தவிர  வேறு பொழுது போக்கு இல்லை.
கொடுத்துவைத்தவள்'' என்று குறிப்பிட
சாரதாவின் முகம் சிவந்தது.

எனக்கே கலக்கமாக இருந்தது.இந்த  கூட்டத்தில் கலந்து பேச
எனக்கு விஷயம் இல்லை.

சட்டென்று  எழுந்து போக இருந்த சாரதாவை , கோபாலன் 
தடுத்து நிறுத்தினார்.

எல்லோருக்கும் தோசையும் ,தயிர் சாதமும் ஏற்பாடு செய்ய
எலிசபெத்  சமையலறைய நோக்கி நடக்க
நானும் பின் தொடர்ந்தேன்.
'' நீங்கள் அவர்கள் வீட்டுக்குப் பக்கத்து வீடா ? "
என்று அவள் கேட்டதும் தலை அசைத்தேன்.
''இரண்டு வருடங்களாகத் தெரியும் ''என்றேன்.
உடனே அவள்
''எங்க வீட்டுக்காரர் வெள்ளிக்கிழமை தோறும்
அங்கே தான் சாப்பிடுகிறார். நன்றாகப் பிடித்திருக்கிறது
போல...''

''எங்கள் வீட்டுக்காரரும் அவர்கள் வீட்டுக்குப் போவார்.
நல்ல நண்பர்கள் எல்லோரும்.'' என்று பொதுவாகச் சொன்னேன்.

''நீயும் கொஞ்சம் ஷெர்ரி எடுத்துக் கொள்கிறாயா. குளிருக்கும் இதம்"
  என்றாள். 

வழக்கம் இல்லை. 

குழந்தைகளுக்குத் தூங்கும் நேரம் வந்து விட்டது
என்று சொன்னேன்.
 சமையலறையில் தயாராக இருந்த பணியாட்களிடம்
இரண்டு மூன்று தோசைக் கல்லைப் போட்டு சீராகத் 
தோசை வார்த்துக் கொண்டு வருமாறு
பணித்துவிட்டுப்
பக்கத்து அறையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 
குழந்தைகளிடம்  சீக்கிரம் அவரவர் அறைக்குப்
போகச் சொன்னாள். இன்னும் கொஞ்ச நேரம் விளையாடுகிறோம்
என்று சொன்ன பெண்களிடம் , அடுத்த நாளும் கோயிலுக்குச் 
செல்ல வேண்டும் என்பதை  ஞாபகப் படுத்தி
அனுப்ப, அவர்களும் பக்கத்தில் வந்து கன்னத்தில் முத்தமிட்டு,

செல்லும் போதே என்னையும் குழந்தைகளையும் அணைத்து
பை பை என்று சொல்லிச் சென்றனர்.

பொருந்தாத சூழ்னிலையில் மாட்டிக் கொண்ட
கலவரம் என்ன்னைச் சூழ்ந்தது.
சிங்கத்தைத் தேடினேன். 
அவர் இன்னோரு சினேகிதருடன் மும்முரமாகப்
புதிதாக வந்த வண்டிகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.

தோசைகள் வருவதும் எல்லோரும் சாப்பிடுவதுமாக நேரம்
கடந்தது.
நானும் உள்ளே சென்று குழந்தைகளை, இன்னோரு படுக்கை அறையில்
படுக்க வைத்துவிட்டு வெளியே வந்தேன்.
ஹாலில்
பேச்சு சத்தம் கொஞ்சம் அதிகமானது. சிரிப்பும்
உற்சாகமும் அதிகரித்தன.
எலிசபெத்  எல்லோரையும் உபசரித்த வண்ணம்
இருந்தாள். புன்னகை மாறாமல், அடக்கம் கலையாமல்
பழகுவதைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

சாரதாவின் முகம் மட்டும் இறுகி ,அழுவதற்குத் தயாராவதை
யூகிக்க முடிந்தது. கோபாலனும் , திரு வில்லியம்ஸும்
அவளை அடிக்கடி நோக்கிய வண்ணம் இருந்தனர்.

முன்னம் கிண்டல் செய்த அதே டாக்டரும், 
இன்னோரு மில் சொந்தக்காரரின் மனைவியும்
ஏதோ தகாத வார்த்தை சொல்ல
ஒரு பூகம்பம் வரப் போவது போல எனக்கு அச்சம்
தோன்றியது. ...................................

மீண்டும் பார்க்கலாம்










முன்னம் ஒரு காலத்திலே 3

வல்லிசிம்ஹன்




1972 ஆம் வருடம் மிகச் சிறந்த நினைவுகளைக் கொண்டது.
ஊட்டி எங்களுக்கு மிகப் பிடித்த இடமானது. அதுவும் குன்னூர், கோத்தகிரி
என்று பல இடங்களுக்கு
பைக்கில் சென்று மாலை திரும்பி விடுவோம்.

அப்போதிருந்த ஊட்டி ,மிக வளப்பமானது. இத்தனை வீடுகள்,
,மர முறிப்பு செய்த,  வெற்று மலைச் சரிவுகள்
இவை கிடையாது. யூகலிப்டஸ் மரங்களின்
வாசனை ஊட்டி மலை சாலைகளில் நிரம்பி இருக்கும்.
வண்டி செல்லும்போது சூரிய ஒளி
மரங்களோடு கண்ணாமூச்சி
விளையாடுவது ரசிக்குமாறு கூடவே வரும்.

இப்போது போல ஏசி வண்டிகள் இல்லை.
வண்டியின் ஜன்னல்களைத் திறந்து வைத்துக்
கொண்டு செல்லும்போது அத்தனை மகிழ்ச்சி
குழந்தைகளுக்கு.
சாரதாவின் மடியில் சின்னவன் சுகமாகத் தூங்க,
பெரியவன் அப்பாவின் தோளில் கைவைத்துக் கொண்டு நின்று 
கொண்டு வந்தான்  . . அவனைப் பிடித்துக் கொள்ள கோபாலன் சார்.

மகள் மூக்கருகே யூகலிப்டஸ் பாட்டிலை வைத்தபடி நான்.

ஒவ்வொரு வளைவிலும் 
ஒரு அலறல், ஒரு சிரிப்பு என்று கூனூர் வந்து சேர்ந்தோம்
சிங்கம் வண்டியைக் கொண்டு வந்து நிறுத்திய
இடத்தைப் பார்த்து அசந்து விட்டேன்.
''ஜன்னலை மூடுமா. எதிர்த்தாற்போல் என்ன வருகிறது பார்'' என்றார்.

அவ்வளவு பெரிய நாயை
என் வாழ்க்கையில் நான் பார்த்ததே இல்லை.

Great Dane!!!! அதன் உயரம் வண்டிக்கு மேல் இருந்தது.
அதன் பற்களையும் நாக்கையும் 
பார்த்து பெரியவனும் மகளும் அலறி விட்டனர்!
'' ஹே லியோ!! கட் தட்!!'' என்றபடி திரு வில்லியம்ஸ்
வந்தார்.
அட இவ்வளவு உயர்ந்த மனிதரா என்று நினைத்தேன்.
அச்சு அசல் ரங்காராவ் மாதிரி இருந்தவரைப் 
பார்த்ததும் பிடித்துவிட்டது.
அன்பான இன்னோரு அப்பா போல இருந்தார்.
Doberman


அவர் வண்டியின் பக்கத்தில் வந்து ''இவன் ஒரு நல்ல
பையன். ரொம்ப ஃப்ரண்ட்லி ''என்று சிரிக்க,
அதுவும் பல்லைக் காட்டியது.:)

அதைப் பிடிச்சுக்கோப்பா. நாங்க இறங்குகிறோம் என்றார் கோபாலன்.
வாங்க வாங்க வீட்டுக்குள் போகலாம் என்றபடி 
அந்தப் பிரம்மாண்ட மாளிகையின் படிகளில் ஏறினார் திரு வில்லியம்ஸ்.
படிகளின் மேல்படியில் நின்று எல்லோரையும் வரவேற்றார்
எலிசபெத் வில்லியம்ஸ்.
அசந்து போக வைக்கும் அழகு. பாந்தமான ஹேண்ட்லூ



ம்
புடவை. குவித்த கைகள். 'தோத்திரம்'  என்று உச்சரித்த உதடுகள்.
உள்ளேயிருந்து வந்த சாம்பிராணி வாசனை...
என்று எனக்கு எல்லாமே அதிசயமாக இருந்தது.!

ஒரு பத்துப்படிகள் ஏறி வீட்டின் வரவேற்பறைக்குள்
 நுழைந்தோம். இள நீல திரைச்சீலைகள். வெள்ளைப் பெயிண்ட் அடித்த
சுகமான ஆசனங்கள். அந்த வீட்டைப் பற்றித் தனியாகப்
பதிவு போடவேண்டும்.
இப்போது மேற்கொண்டு பார்க்கலாம்.

உள்ளே சென்றதும்
 குழந்தைகளுக்கு உபயோகிக்க குளியலறையைக் 
காண்பித்துக் கொடுத்தார் மிஸஸ் வில்லியம்ஸ்.

நானும் குழந்தைகளும் வெளியே வந்தபோது ஆண்கள் 
அன்றைய விசேஷ்மான நிகழ்வுக்குக் கையில்
வைன் கிண்ணம் ஏந்தி  இருந்தார்கள்.
''இட்ஸ் ஹார்ம்லெஸ்'' என்றபடி பெண்களும் (சாரதா உட்பட)
ருசி பார்க்க, 
நான் அவரது பெண்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.

நான் சற்றும் கண்டிராத சாரதாவை அங்கே பார்த்தேன்.
வெகு சகஜமாக எல்லோருடனும்
பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்.
உள்ளே இருந்து பலவித இனிப்புகளைக் கொண்டுவந்து 
பரிமாறிக் கொண்டிருந்தார்கள் வேலை யாட்கள்.
மாலை எட்டு மணி ... குழந்தைகள் தூங்க வேண்டிய நேரம்.

சாரதாவும் கோபாலனும் அங்கேயே தங்குவார்கள் 
என்று  தெரிந்தது.
சீட்டுக்கட்டு விளையாட்டுத் தொடங்கி நடந்து கொண்டிருந்தது.
போகலாமா என்று கேட்டபடி வந்த சிங்கத்திடம்
உடனே சரி என்று சொல்லி விட்டேன்.

 சாரதா, கோபாலன், வில்லியம்ஸ் தம்பதிகளுடன் 
கிளம்பும்போது.
'ஐய்யர்' !! என்று சத்தமான குரலில் அழைத்தார் வில்லியம்ஸ்.
உடனே உள்ளிருந்த வந்தார்"ஐய்யர்"   அவர்களின் காரோட்டி.

''இவர்களை பங்களோவில விட்டு விட்டு வா. ''என்றவர் மனைவியிடம் அவர்கள் உணவு தயாரா என்று கேட்க,
அவளும் உள்ளே இருந்து சூடான இட்லிகள் நிரம்பிய
பெரிய தூக்கையும், சட்டினி நிறைந்த டப்பாவையும்
கொண்டுவந்து கொடுத்தார்.

இந்த அன்பைக் கண்டு மனம் நிறைந்தது.
''மிஸஸ் சிம்மு, எங்க வீடு கூட பார்ப்பனர்கள் வீடு மாதிரி சுத்தம் தான்"
என்று பெரிதாகச் சிரித்தார் வில்லியம்ஸ்.
எனக்கு வெட்கமாகிவிட்டது.
இரவு வணக்கம் சொல்லி விட்டு
குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வண்டியில் ஏறி
அவர்களது  விருந்தினர் விடுதிக்கு வந்தோம்.

க்றிஸ்மஸ் விளக்குகள் பொருத்திய வீடுகளும்,
வீதிகளுமாக கூனூர் ஜ்வலித்தது.
இட்லி சாப்பிட்டு, அங்கிருந்த சுகமான 
கட்டிலில் நடுக்கும் குளிருக்கு இதமாக கனமான
ரஜாய் போர்வைகளுக்குள் நுழைந்தது தான் 
தெரியும்.
மறு நாள் காலை ஏழு மணிக்குக் கதவு தட்டப் படும் சத்தம்.
திறந்தால் காரோட்டி  சுந்தரம் ஐய்யர் நின்று கொண்டிருந்தார்.
இரண்டு பெரிய ஃப்ளாஸ்க் நிறைய காப்பியும் பாலும்
என்று கொடுத்தார்.

''குளித்துவிட்டு வாருங்கள் எல்லோரும் கோயிலுக்குச் சென்றிருக்கிறார்கள்''
என்றார்....தொடரும்.







Tuesday, August 03, 2021

முன்னம் ஒரு காலத்திலே 2

வல்லிசிம்ஹன்


வில்லியம்ஸ் ஜோன்ஸ் சாமிநாதன் இதுதான் 
எலிசபெத்தின் கணவர் பெயர்.முன்னோர்களில்
இந்துக்கள் இருந்திருக்கிறார்கள்
பிறகு மதம் மாறி இருக்கலாம்  என்பது சம்பந்தப் பட்ட
தோழி சொன்னது.

எலிசபெத்தின் குடும்பம் குடகு மலையில் ஏதோ
அரச குடும்பத்தின் திவானாக இருந்தவரிலிருந்து தோன்றியது
என்று அதே தோழி சொன்னாள்.
இந்தத் தோழி சாரதா ,கோவையில் எங்கள் வீட்டுக்குப் 
பக்கத்து வீட்டில் இருந்தாள். அவளும், அவள் கணவர்
கோபாலனும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். கட்டிடக் கலையில்
தேர்ந்தவர் கோபாலன். கோவையிலும் ,மேட்டுப் பாளையத்திலும் இருந்த
வில்லியம்ஸின் வீடுகளை
அமைத்துக் கொடுத்தவர் அவர்தான். 
குழந்தைகள் இல்லை. நம் கதையின் நாயகர் வில்லியம்சுக்கு
உற்ற தோழர்.

வெள்ளிக்கிழமையானால் அவருக்கு இவர்கள் வீட்டில் தான் சாப்பாடு.

சைவ சமையலில் வில்லியம்சுக்கு அவ்வளவு ஈடுபாடாம்.
சாரதாவும் நன்றாகச் சமைப்பார். 

நம் வீட்டின் வேலியைத் தாண்டினால் சாரதாவின் வீடு.
அந்த வீட்டின் பெரிய ஜன்னல் வழியே 
எங்கள் குழந்தைகள் விளையாடுவதைப் 
பார்த்துக் கொண்டிருப்பார்கள் அந்தத் தம்பதியினர்.

திடீர் என்று ஒரு நாள், ஒரு கூடை நிறைய 
சாக்கலேட் டப்பாக்களும், உயர் ரக பிஸ்கெட்களும்
சாரதா கொண்டு வந்து கொடுத்தார்.
ஏன் என்று நான் கேட்டதற்கு,
''வில்லியம்ஸ் சாருக்கு குழந்தைகள்
மிகப் பிடிக்கும். இந்தக் குழந்தைகளைப் 
பார்த்ததும் கொடுக்கச் சொல்லி என்னிடம் கொடுத்தார்''
என்றவளை ஆச்சர்யத்துடன் பார்த்தேன்.

''அவர் அப்படித்தான் ரேவதி. நிறைய கொடுக்கத் தெரிந்தவர்.
இதோ இந்த டிசம்பர் மாதம் எங்களையும்
கூனூருக்கு வரச் சொல்லி இருக்கிறார்.''
என்றவள் உங்க வீட்டுக்காரருக்குக் கூட அவரைத் தெரியுமாமே
என்று கேட்டாள்.

அது ஒன்றும் ஆச்சரியமாக இல்லை எனக்கு.
கோவைத் தொழிற்சாலையில் வராத வண்டிகளே
கிடையாது. அந்த ஊரே பணக்காரர்கள் ஊர்.
அதில் இவரும்  ஒருவராக இருக்கலாம்.
கொஞ்சம் கிட்ட நெருங்கி விட்டதால்,
இனிமேல் திரு வில்லியம்ஸ் என்று சொல்கிறேன்:)
திரு வில்லியம்ஸ் வரும் வண்டியே செவர்லே 
வண்டி என்று பார்த்திருக்கிறேன்.
இது போல அன்னிய நாட்டு வண்டிகளைப்
பழுது பார்ப்பதில் சிங்கத்துக்கு நிகரே கிடையாது.

அன்று இரவு குழந்தைகளின் கும்மாளத்தைப் பார்த்து சிங்கம்
சிந்தாமணி மார்க்கெட் போய் வந்தாயா என்ன
இத்தனை டப்பாக்கள் இருக்கிறதே என்று கேட்டார்.
என்னவோ இந்த மூன்றையும் அழைத்துக் கொண்டு நான் தனியே
போகப் பழகினவள் மாதிரி:)))
அந்த 22
ஸாரதா  கோபாலன் இப்படித்தான் இருப்பார்.


 எலிசபெத் வில்லியம்ஸ்.

அந்த 22 வயதிலும் தனியே வெளியே
போகத்தெரியாத
கிணற்றுத் தவளை நான்!!!

திரு வில்லியம்ஸ், சாரதா கோபாலன் என்று நான் கதை சொன்னதும்
அவரைப் பற்றி
மிகவும் சிலாகித்துப் பேசினார் சிங்கம்.
'ரொம்ப எளிமையான மனிதர்.பழக இனிமையானவர்.
வண்டிகள் பழுது பார்த்து எடுத்துக் கொண்டு போகும்போது
பணத்தைச் சரியாகக் கட்டிவிட்டுத்தான் எடுத்துச் செல்வார்'
என்றெல்லாம் கதை பறந்தது.
சிங்கத்துக்குக் கஸ்டமர்களே கண் கண்ட தெய்வம்:)

 டிசம்பர் மாதம் கோவையின் இளம் குளிர் இதமாக இருக்கும்.
எனக்கு  குழந்தைகளோட நர்சரிப் பள்ளி,
அவ்வப்போது வரும் சளி காய்ச்சல் என்று
இரவெது பகலெது என்று தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தது.


அப்பொழுதுதான் திரு வில்லியம்ஸ் தம்பதிகளின் 
அழைப்பு வந்தது.

சிங்கம் வந்து சொன்னார். பக்கத்து வீட்டு
சாரதா கோபால் தம்பதியினரும்,
நாமும் கிருஸ்துமஸ் தினத்துக்கு ஊட்டிக்குப்
போகிறோம். அங்கே டிராவலர்ஸ் பங்களோவில் ஒரு இரவு தங்கி
அடுத்த நாள் வந்துவிடலாம் என்றார்,.

காலையில் சந்தித்த சாரதாவும் இதையே சொல்ல
எனக்கு தெரியாத ஒருவர் வீட்டுக்குப் 
போகும் கூச்சம். மலை வளைவுகளில், வயிறு ஒத்துக் கொள்ளாமல்
வாந்தி எடுக்கும் மகள் நினைவு.
வேண்டாம் என்று சொல்லவும் தயக்கம்.

சில விஷயங்களில் சிங்கம் பேச்சை மீற முடியாது.

டிசம்பர் 24 ஆம் தேதி ,  ரிப்பேருக்கு வந்திருந்த
திரு வில்லியம்ஸ் அவர்களின் பெரிய வண்டியை
ஊட்டியில் ஒப்படைக்க வேண்டி இருந்ததால்
அதிலேயே சாரதா,கோபாலன்,நான் குழந்தைகள்
என்று ஏறிக் கொள்ள, சிங்கம் ஓட்ட
பாட்டும் பேச்சுமாகக் கிளம்பினோம்.



Monday, August 02, 2021

முன்னம் ஒரு காலத்துல....1

வல்லிசிம்ஹன்

  'ஒரேயடியாக வேர்க்கிதே. ராத்திரி மழை வருமோ
தெரிசா?'என்று கேட்ட  எஜமானியைப் பார்த்து தெரிசா
ஆமாம் என்று தலையாட்டினாள். 
எஜமானி சொல்லும் எதற்கும் ஆமாம் சாமி போட்டால் தான்
அந்த ஊட்டி மலையில் அவளுக்கு வாழ்வு.

அத்தனை பெரிய தேயிலைத் தோட்டத்தின்
சொந்தக்காரரின் மனைவி எல்சியம்மா.

நல்ல சிவப்பு நிறத்தில் ,ராஜ களையுடன்
அழகாகவே இருப்பாள்.
இந்த நிறத்துக்காகவே எஜமானர் வில்லியம்ஸ்
அவளை கூர்க் நாட்டிலிருந்து மணம் முடித்தாராம்.

எஜமானர் கொஞ்சம் கறுப்பு நிறம் தான்.



பரம்பரையாக இந்த கூனூர் எஸ்டேட்
அவரது குடும்ப சொத்தாக இருந்து வந்தது.
கோவையின் அருகில் வேலாண்டி பாளையத்தில் 
நல்ல பெரிய பங்களோ, இத்தாலிய
வல்லுனரைக் கொண்டு கட்டிய வீடு இருக்கிறது.
வில்லியம்ஸின் தந்தை தாத்தா
எல்லோரும் வெள்ளைக்காரன் காலத்திலேயே

இந்த தேயிலைத் தோட்டத்தை வாங்கி
விஸ்தரித்து சில நூறு ஏக்கர் கொண்ட பண்ணையாக
மாற்றி இருந்தார்கள்.
இவரும் ஒரு சகோதரியும் தான் வாரிசுகள்.
அக்காவுக்குத் திருமணம் செய்து
அவளுக்கு உரிமையான சில தோட்டங்களை
வில்லியம்ஸ் வாங்கித் தன் தோட்டத்துடன்
இணைத்துக் கொண்டார்.





வில்லியம்ஸ், எலிசபெத் தம்பதிக்கு இரண்டு பெண்கள். இருவருமே
அந்த ஊர் பெரிய பள்ளியில்  எட்டாம் வகுப்பிலும் ஒன்பதாம்
வகுப்பிலும் படித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்கு உபயோகத்துக்காகவே ஒரு வண்டி.

எஜமானி அம்மாவுக்கு கோவை சென்று வர, எஜமானருக்கு மேட்டுப் பாளையம்
சென்று வர ஒரு வண்டி என்று மூன்று வண்டிகளுக்குப்
பெரிய  கராஜ்.
தெரிசா சமையல் வேலைகளுக்கு உதவி.,
வீட்டைத் தினம் சுத்தம் செய்து, படுக்கை அறைகளில்
படுக்கை விரிப்புகளை மாற்றி,
மலர் அலங்காரங்கள் செய்ய இருவர்,,
துணிமணிகளைத் தோய்த்து கஞ்சி போட்டு,
இஸ்திரி செய்ய கணவன் மனைவி என்று இருவர்,

வீட்டோடு இருக்கும் தோட்டங்களைக் கவனிக்க,

உயர் ரக செல்லங்களைப் பேணிப் பாதுகாக்க இருவர்,
வண்டிகளை ஓட்ட இரண்டு ஓட்டுனர்கள்
என்று  வீட்டில் எப்போதும் நடமாட்டம் இருக்கும்.

இவர்கள் எல்லோரையும் கவனித்து வேலை
வாங்குவதில் எலிசபெத் நல்ல சாமர்த்தியசாலி. 
அவர்கள் மத ஒழுக்கங்களை கணவன் மனைவி
இருவரும் தீவிரமாகப் பின்பற்றுபவர்கள்.

இவர்கள் வாழ்வில் சற்றே சலனம் ஏற்படுத்தியது
என்று எலிசபெத் நினைக்கக் காரணமாக
ஒரு க்ருஸ்துமஸ் நாள் அமைந்தது.  ...............தொடரும்.




வருகிறது நவராத்திரி. மயிலை பொம்மை பரமசிவம் ஐயா

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக நலமாக வாழ வேண்டும்.  ‘பொம்மை பரமசிவன்’... உடைந்த கொலு பொம்மைகளுக்கு உயிரூட்டும் கலைஞர்!  நவராத்திரி நெருங்க நெர...