Blog Archive

Friday, February 24, 2012

பொறுமையும் நம்பிக்கையும்

விண்ணைத் தொடுவேனா

உயர்ந்து வீட்டின்  மூன்றாம் தளத்தையும் தொட்டுவிட்டது இந்த

டெம்பிள் ட்ரீ..
அவ்வப்போது  உதிர்க்கும்  பூக்களின் மணம்  மனதை மயக்கும்.
அதைக் குனிந்து   எடுத்து முகர்பவர் சிலர்.
இறைவனுக்கு இது ஏலாது என்பவர் சிலர்.
வீட்டின்  அடித்தளத்தைத் துன்புறுத்தக் கூடும்
எடுத்துவிடலாமே  இது சிலரின் கருத்து.

பெயருக்கு ஏற்ற மாதிரி
ஒரு கோபுரத்தின்   கம்பீரத்தோடு
கடவுளை அடைய இன்னும் உயருகிறது இந்த உயிர்.
எல்லாச்  சொற்களையும் உரமாக எடுத்துக் கொண்டு.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Wednesday, February 22, 2012

தவிப்பின் இன்னோரு பக்கம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

டெல்லியில்    நேற்று    சிறிய  ஆட்டம்.
ஓடு போனை எடு. சம்பந்தி!!  சௌக்கியமா...

துபாயில்  சிவப்பு வர்ண    அலைகள்
மருமகளை அழை.
என்னப்பா ஆச்ச்சு. எனக்குத் தெரியாதேமா
நாங்கள் பீச் பக்கம் போவதே இல்லை.

ஜெல்லிஃபிஷ் கடிக்கிறதாம் குழந்தையை அலைகளில் நிற்கவைக்காதீர்கள்.
சரிம்மா  நாங்க பாத்துக்கறோம்.

சாமி என் கிட்ட இருந்து எங்க பிள்ளைகளைக் காப்பாத்து:)
மறந்து  போன  வரிகள்.

இதில் அக்கம்பக்கத்துக் காரர்களும் அடங்குவார்கள்.
பதிவர்களும்   தான்:)

Monday, February 20, 2012

கிராண்ட் கான்யான் ...அசைபோடவைத்த படங்கள்

க்ராண்ட் கான்யான் ஸ்கைவாக்அரிசோனா மாநிலம் வரண்ட பாலைவனத்தின் எல்லையில் இருக்கிறது.
இது நான் முன்னால் படித்தது.
இப்போது பீனிக்ஸ் அப்படித் தெரியவில்லை.
புதிய வெகு நாகரீகமான நகரமாக மினுமினுப்புடன் இருக்கிறது.
ஒரு நாள் அங்குத் தங்கிவிட்டு வாடகைக்கு
எடுத்த காரில் செடோனா நோக்கிப் புறப்பட்டோம்.
வழிநெடுக இந்த நாட்டின் பிரம்மாண்டத்தை
அதிசயத்தபடி பயணம்.
உலகத்தின் அத்தனை மூலை முடுக்கிலிருந்து வந்தவர்கள் இந்த நாட்டை மேம்படுத்தி
இருக்கிறார்கள். இன்னும் செய்து கொண்டு
இருக்கிறார்கள்.
அதில் விளைவது சப்பாத்திக் கள்ளீகள்தான்.
ஆனால் அவைகளின் வகைகளும், பூக்களும் ஆயிரக் கணக்கில்.
எனக்கு கத்தாழை,கள்ளிச் செடிகள் வீட்டுக்கு
ஆகிவராதவை என்ற நினைப்பு.
சென்னை வீட்டில்(சிங்கம்) நிறைய வளர்த்தாலும்
பக்கம் போயிப் பேசி எல்லாம் செய்ய மாட்டேன்.
இங்கே அரிசோனா , ப்ஃஈனிக்ஸில் ,ஆராய்ச்சிப் பண்ணை ஒன்றில் 300 வருடங்கள் வயதான காக்டஸ் வகைகளைப் பிரமாண்டமான அளவில் பார்க்கும்போது,
அதிசயத்திலும் அதிசயமாக இருந்தது.
ஒரு கள்ளிப் பூவில் குளிர்ப்பானம் கூட செய்து சாப்பிடுவார்களாம்.எல்லாவிஷயத்தையும்
ஏர்போர்ட்டில் பார்த்த ஒரு பெண் (நியூயார்க்)
சொன்னாங்க,.
அவங்க ஹண்ட்க்ளைடரில்
போவதற்காக அங்கே இருந்து வந்து இருக்காங்களாம்.
யூ ஷுட் ட்ரை தட்
என்று புன்னகைத்துவிட்டுப் போச்சு அந்தப் பொண்ணு,.
ஒரு பக்கம் சிரிப்பு.
ஒரு பக்கம் ஆசை.
அப்படியே மனசார பறந்துவிட்டு மறுபடி பயணத்துக்கு
வண்டிக்குள் வந்துவிட்டேன்.
'எர்த் கால்லிங் அம்மா.
எர்த் கால்லிங் அம்மா''
இது என் பெண்.
ஏம்மா அப்பாப்போ எங்கெயோ போயிடரியே.
இதோ செடோனா வந்தாச்சு.
உன்னுடைய மிஸ்டீக் பவர்ஸ் எல்லாம் வொர்க் ஆவரதா பாரு''
என்று சிரித்த வண்ணம் இறங்கினார்கள்.
பவர்ஸ் இருக்கட்டும். முதல்ல ஒரு பில்டர் காப்பி கிடைக்குமா கேளுனு சொன்னபடி
காணாமப் போன கைகால்களைக் காண்டுபிடிச்சு இறங்கினேன்.
மரத்துப் போச்சு எல்லாம். தப்பா நினைக்காதீங்க.
கண்ணைப் பறிக்கும் அழகு.
சிவப்ப்பில் தோய்ந்த மண் குன்றுகள்.
அருமையான மணம் சூழ்ந்த வீதிகள்.
கலப்படமான மனிதர்களின் கூட்டம்.
பழைய கால வெஸ்டர்ன் படங்களின் போஸ்டர்கள்.
நேடிவ் அமெரிகன்ஸ் நிறையப் புழங்கும் இடம் என்பது கச்சிதமாகத் தெரிந்தது.
அங்கங்கே மயங்கிய நிலையில் சில
நபர்கள் சிரித்துக் களித்துக் கொண்டிருந்தார்கள்.
யயருக்கும் அவர்களால் தொந்தரவு இல்லை.
கடைகள்.
முத்து,மாணிக்கம்,பச்சை,அமேதிஸ்ட்,ஓபல்
இன்னும் விதம் விதமான ரத்தின வகைகள்.
சிலது போலி.
சிலது நிஜம்.
நம்ம ஊரிலேயெ பாண்டி பசாரில் பார்க்காததா:-)
இந்த ஊருக்குச் சொந்தக்காரங்க அதான் நேடிவ் இந்தியர்கள்
அன்போடு கலகலப்பாக இருக்கிறார்கள்.
என்னுடைய புத்தக அறிவை வைத்துக்கொண்டு
நீ செயினீ க்ருப்பா
நீ அபாச்சியா
நீங்க peacepipe பிடிக்கிற வழக்கமெல்லாம் விட்டாச்சா/
என்றேல்லாம் கேட்க ஆசை.
நல்லா இருக்காதேனு விட்டு விட்டேன்.
சிங்கம் எப்பவுமே ஆன் கார்ட்:-)
எதையாவது செய்து பேசி விடுவேனோ என்று.
அப்படியும் ஒரு சூவினீயர் கடையில் ஒரு நேடிவ்
இந தியப் பெண்மணி என்னிடம் அவளுடைய வாழ்க்கை கதையயே சொல்லி விட்டாள்.
அவளுக்கும் என்னை மாதிரி பேரன் பேத்தி வேணுமாம்.
ஆனால் பெண்ணை வற்புறுத்த மாட்டாளாம்.
நாந்தான் படிக்கலை.
அவளாவது படிக்கட்டும் என்று விச்தாரமாக்ப் பேசிக் கொண்டிருந்தாள்.
உலகம் முச்சூடும் இதுதான்
பெண்கள் நிலை!!
அங்கிருக்கும் சிவப்பு மண்ணுக்கு பெண்சக்தி என்று பெயராம்.
இங்கு கொஞ்ச நாட்கள் இருந்தால் இழந்த
உடல் நலத்தைத் திருப்பி பெறலாம்
என்று நம்புகிறார்கள்.
மாற்று நலச் சிகித்சை இங்கே வெகுவாகப்
பயன்படுத்தப் படுகிறது.
மிக அமைதியான இடம்.
எனக்கென்னவோ திருப்பதிக்க்ப் போகும்போது அந்த மலைச் சிகரங்கள் காவல் தெய்வம் போலவும்,
அங்கே இருப்பவர்களுக்கு நிம்மதி கூடுவது போலவும் தோன்றும்.
அதே மாதிரி ஒரு நல்ல வைப்ரேஷன் இந்த இடத்திலும் இருக்கிறது.
அங்கே தங்க இடம் கிடைக்காத்தால் மீண்டும் மலைப் பாதையில் பயணித்து
fளாக்ஸ் டாஃப் என்ற ஊருக்கு வ்அந்தோம்.
அங்கிருந்து க்ராண்ட் கான்யான் 2 மணி நேர
பயணம்.
போகும் வழி எல்லாம் ஆத்தங்கரையும்,
பள்ளத்தாக்கும்,
மலைக்காடுகளும் தான் துணை.
நடுவில் குவிஸ்னோசில்
ஒரு மண்டகப்படி.
சூடான சாண்ட்விச்சை ரசித்தபடி மேலே பயணித்து வந்து சேர்ந்தோம்.
மணி இரவு எட்டு.
இயற்கை அதிசயத்தைப் பார்க்க.நேரம் சரியில்லை
இருட்டில் என்ன செய்ய/
இருக்கவே இருக்கு ஐமாக்ஸ்.
நாளைக்குப் பார்க்கலாமா?
ஐமாக்ஸ் பெரிய திரையில்
கிராண்ட் கான்யான் பிறந்த கதையைச் சொல்லுவார்கள் என்று ஆசையுடன் போன எனக்கு அதன் நிகழ்கால
மூவாயிரத்துச் சொச்ச கதையைக் காண்பித்தார்கள்.
ஏதோ அட்வெஞ்சர் படம் பார்த்த நினைவு வந்தது.
இருந்தாலும் வரலாறு தானே.
ரசிக்கும்படியாகவும் இருந்தது.
கொஞ்சம் ரீல் கொஞ்சம் ரியல் என்று 30 நிமிடப் படம்.
அதிரடியாக ஓடும் கொலராடோ நதி இத்தனை ஆழத்தில் இருக்கிறதே என்று வருத்தமாக இருந்தது.
நேரே பார்க்க முடியாவிட்டால் ,
என்ன பலன்?
இந்தப் பள்ளத்தாக்கு,(?)
ஒரு மைல் ஆழம்.
விஸ்தீரணம் 277 மைல்கள் நீளமும்
கிட்டத்தட்ட 12 மைல்கள் அகலமும்
இடத்துக்கு இடம் வித்தியாசமாக இருக்கும் என்றார்கள்.
மலையைச் சுற்றி வர 7 நாட்கள்
கூட எடுக்கலாமாம்.
அங்கேயும் குடி இருப்பவர்கள்.
ஹோட்டல்கள்,
காபின் அமைப்பில் இருந்து கொண்டு நடப்பவர்கள்.
பூகோள ஆராய்ச்சி செய்பவர்கள்,
விடுமுறை கழிக்க வந்தவர்கள்,
என்று ஒரு சிறிய நகரமே இயங்குகிறது.
வயதானவர்கள் நல்ல உடல் நலத்தோடு
இரு கைகளிலும் வாக்கிங் ஸ்டிக் உதவியோடு கீழே இறங்கிக் கொண்டிருந்தார்கள்.
போக மூன்று, ஏறி வர ஐந்து மணிநேரம் என்று நல்ல ஆரோக்கியத்தில்
இருப்பவர்களுக்கே
அவ்வளவு நேரம் ஆகுமாம்.
நமக்குத் தான் இன்னோரு வீக்னஸ் உயரமாச்சே.
என்னுடைய உயரம் பத்தி சொல்லலை.
க்ராண்ட் உயரத்தைச் சொல்கிறேன்.
வியூ பாயிண்ட் என்று ஏகப்பட்ட இடங்கள்.
அதிலேருந்து பார்க்கும்போது ஏஞ்சல் கான்யான் தான் ரொம்பப் பிடித்தது.
மேலிருந்து பார்க்கும்போது அதுபாட்டுக்கு ஒரு குட்டிக் கான்யானாகப் போய்க் கொண்டே இருந்தது.
நல்ல பச்சை நிறத்தில் கீஈஈஈஈஈஈஈஈஈழேஏஏஏ
கொலராடொ நதி நெளிந்து கொண்டிருந்தது.
அதில் வெள்ளைநிற ராபிட்ஸ் (rapids) நுரைத்துக் கொண்டுபோவதும் தென்பட்டது.
river rafting நடக்கிறது.
மியுல்ஸ் எனப்படும் கோவேறு கழுதைகள் கட்டிவைக்கப் பட்டுக் காத்திருக்கின்றன.
நானென்ன வைஜயந்திமாலாவா.
பாட்டுப்பாடவா கேட்டுக்கொண்டே
அதுமேல் போக.
கண்ணால் எல்லவாற்றையும் ஆசீர்வாதம்தான் பண்ணமுடியும்:-)
எதற்கு என்கிறீர்களா.
அங்கே வந்த இரட்டை நாடி தேகங்களைச்
சுமந்து கொண்டு நடக்கணும்.
கால் வழுக்காமக் கொண்டுபோய்ச் சேர்க்கணூம்.
இதுக்கெலாம்தான். அதுகள் பாவம்தானே.
எனக்கென்னவோ சு. என் சுந்தரி கதையில் நாகேஷ் விரட்டப் பின்னாலேயே போகும் குதிரை
தான் ஞாபகம் வந்தது.;-0)
எனக்கு அதுமாதிரி ஏறிப் பயணம்
செய்ய முடியாதேங்கிற பொறாமையாக் கூட
இருக்கலாம்:-)
இப்படியாகத்தானே சுற்று முற்றும் பார்க்கும்போடு,
கிடைத்த கூழாங்கற்கள்,
மரத்துண்டுகள் எல்லாவற்றையும் பொறுக்கிக்
கொண்டோம் நானும் என் பேரனும்.
அவ்வப்ப்போது
மலை முனையில் காலைத் தொங்கப்போட்டுக்
கொண்டுப் போஸ் கொடுக்கும் ஜோடிகள், காளைகள்
கன்னிகள் எல்லோரையும் வேடிக்கை பார்த்தேன்.
வியர்டூனு சொல்ல முடியாது.
அதற்கு மேலோர்கள் அவர்கள்.
கரணம் தப்பினால் மரணம்
என்ற நிலையில் ,
புகைத்தபடி,
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதானு பாட வேண்டுமா:-)
ஓ.இவர்கள் அனைவரும் 'ஹார்லீ டேவிட்சன்
பைக்கர்ஸ்.'
இவங்க தனி உலகத்தைச் சேர்ந்தவர்கள்.
அதற்குப் பிறகு வருண ராஜா வந்துவிட்டார்.
அதனால் படங்களை அடுத்த பதிவில் போடுகிறேன்.
நாங்க பயனம் செய்தது தெற்குப் பக்காத்துக்கு.
வடக்குப் பக்கத்தில் மலை யிலிருந்து ஒரு பாலம் கட்டி இருப்பதாகவும்.
கண்ணாடித் தரையாக இருப்பதால் , பள்ளத்தாக்கின்
கீழ்க் கடைசி வரை பார்க்கலாம் என்று சொன்னார்கள்.
அதென்னடாவென்றால்,
தெற்கிலிருந்து 250மைல்
பயணம் செய்யவேண்டும் என்று தெரிந்தது.
சப்பென்றாகிவிட்டது.
இந்த தேசம் உண்மையாகவே ரொம்பப் பெரிசுதான் ஒத்துக்கத்தான் வேண்டும்.
கொலராடோ நதி பாய்ந்து இந்தப் பள்ளத்தாக்கு உருவாகி இருக்கிறது எல்லோருக்கும் தெரியும்.
அது இன்னும் அரித்துக் கொண்டிருக்கிறது.
சில இடங்களில் சிறு ஓடை. சில இடங்களில் வெள்ளம்
நுரைத்துக் கொண்டு ஓடுகிறது.
அனுபவிக்கத் தெரிந்த வலிமையான மனிதர்கள்
ஏறி இறங்கி, காம்ப் போட்டுக்கொண்டு
சந்தோஷப்படுகிறார்கள்
மற்றவர்கள் என்னை மாதிரி எழுதுகிறார்கள்.:-)
பூலோகத்துக்கு இறங்க வேண்டிய நாள்
வந்துவிட்டது.:-)

http://www2.nature.nps.gov/air/webcams/parks/grcacam/grcacam.cfm

மேலெ இருக்கும் லின்க் க்ளிக் செய்தால் மேற்கொண்டு விவரம்அறியலாம்.
என்னுடன் கூட வந்து தெரிந்துகொண்டவர்களுக்கு
மிகவும் நன்றி.

Tuesday, February 14, 2012

அண்மையின் அருமை


''பாலசம்சாரம்    .நாமதான் பார்த்துக்கணும்''
மதுரைப் பாட்டி சொல்வதை அவளின்   பேரன்கள்
உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டார்கள்.

மொத்தம் ஐந்து  பிள்ளைகளும்  இரண்டு பெண்களும் கொண்ட குடும்பம்.
அதில் ஒரு மகன் திடீரென்று   மூளைக்காய்ச்சலில்
  இறக்க நேர்ந்த  நேரம்.
அவரது மனைவியும் மூன்று குழந்தைகளும் மதுரை வந்து சேர்ந்தபோது
பாட்டி சொன்ன வார்த்தைகள்.

பாட்டியின் பெண்ணும் இறந்தவரின் தாயுமான திருமலை
இந்தவிவகாரம் எப்படிச்  செல்லுமோ என்று
கவலையுடன் இருந்தார்.
எதிர்பாராத சங்கடம்.
மகன்கள் வேறு  வேறு  ஊரில் குடியிருக்கிறார்கள். தானும் கணவரும்
மட்டும்   நெல்லையில்   குடித்தனம்.

வரும் பென்ஷன் தங்களுக்கு மட்டும் போதும்
இதில் இன்னும் நான்கு  உயிர்களைக் காப்பாற்றுவது ,படிக்கவைப்பது  எல்லாமே  பிரச்சினையாக இருந்ததால்
தன் நாத்தனாரிடம்    கலந்தாலோசிக்க வந்திருந்தனர்.

அவர் மதுரையில் வக்கீல் புதுத் தெருவில்  வசதியான இடத்தில்வாழ்க்கைப் பட்டு,
செழுங்கிளைத் தாங்கும் நற்குணம் படைத்தவராகவும் இருந்தார்.

வயதான தம்பியைக் காட்டிலும் உறுதியான இதயம் படைத்தவர்.
தானும்   புதல்வர்களில் ஒருவரை ப் பறிகொடுத்திருந்ததால் ,தம்பியின் கலக்கத்தைப் புரிந்தவர்.

நீ  ஒண்ணும்  தாட்சண்யப் படாதே  நம்பி.
நான்  நம்  காந்தி கிராமத்தில்  உன் மருமகளுக்கு மேலே படிக்க
ஏற்பாடு  செய்கிறேன்.கைத்தொழில் ஏதாவது கற்றுக் கொள்ளட்டும்.அவளுக்கு நன்றாகத் தைக்கத் தெரியுமே.
அதைச் சரிவரக் கற்றுக் கொண்டால்
அதுவே பெரிய  உபகாரமாக இருக்கும்.
பெரிய  பையனை நீ  வைத்துக் கொள்.அவனுக்குப் படிப்புக்கு
நான்  மாதாமாதம் பணம் அனுப்புகிறேன்.
உன்னிடம் இருந்தால்தான் அவனுக்குப் பொறுப்பு வரும்.


பின்னால்  வரும் நாட்களில் தாயையும்  தங்கைகளையும்
பார்த்துக் கொள்வான். பாளையங்கோட்டைப் பள்ளியில் நமக்குத் தெரிந்தவர்தான் தலமை ஆசிரியர்.
நல்ல  ஒழுக்கம்,படிப்பு எல்லாம்   கற்றுக் கொள்வான்.

கால்வருட,அரைவருட  லீவுநாட்களில்  உன் மருமகளும்பேத்திகளும்
உன்னிடம் வந்து இருக்கட்டும்.
முழுவருடக் கோடைவிடுமுறை நாட்களில் அவள் தன் தாய் வீடான பெரிய குளத்தில்  போய் இருக்கட்டும்.


தம்பியின் மற்றப் புதல்வர்களையும் அவள் விட்டுவைக்கவில்லை.
நீங்கள்   நான்கு பேரும்   கடிதப் போக்குவரத்து  வைத்துக் கொள்ளவேண்டும். அந்தக் குழந்தைகள் தாங்கள் கைவிடப் பட்டுவிட்டோம் என்கிற நினைப்புத் துளியும் வரக் கூடாது.

அப்பா இல்லாவிட்டாலும் சித்தப்பாக்கள்   ,அத்தைகள் பார்த்துக் கொள்வார்கள்
என்ற நம்பிக்கை இருக்க  வேண்டும்.''  ஒரு பெருமூச்சோடு
அக்கா   எழுந்துகொண்டார்.
தம்பியும் .மனைவியும் அவள்   கால்களில்   விழுந்து மனப்பாரம் தீர அழுது தீர்த்தார்கள்.
தாய்தந்தையரைப் பின்பற்றி அவரது மகன்களும்  அவர்கள் மனைவிகளும்
நமஸ்கரித்தார்கள்.

மகன் இறந்த போது இருந்த  மலைப்பு   கொஞ்சம்  அவர்களது மனத்திலிருந்து
அகன்றது.
******************************************************************************
51 வருடங்களுக்குப் பிறகு அந்தக் குடும்பத்தின்
நிறைய முன்னேற்றம் கண்டது. பெரியவர்கள் யாரும் இப்போது இல்லை. அடுத்த தலைமுறைக்கே ஷஷ்டி அப்த பூர்த்தி  நடந்துவிட்டது.

இந்தக் குடும்பத்துக்கும் எங்கள் சின்னப் பாட்டிக்கும் (ஆங்க்!அதே பாட்டிதான். என் கல்யணத்துக் கடிதம் கொடுத்தவர்:)   )
தோழமை பலவருடங்களாக உண்டு.
சமீபத்தில் ஒரு திருமணத்தில் மதுரையைச் சேர்ந்த சிலரைச் சந்தித்தேன்.

உறவினர்(அவளுக்கும் எனக்கும் ஒரே வயது) ஒருவளிடம் அந்தக் குடும்பத்தைப் பற்றிக் கேட்டேன்.
தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த   என் வயது மதிக்கத்தக்க ஒரு அம்மாவைக் காண்பித்தாள். யார் தெரிகிறதா?என்று கேள்வி.
நமக்கு நேற்றுப் பார்த்தவர்களையே மறந்து போகிறது.
''தெரியலையே என்றேன். நம்ம 'ஜில்லி''
உண்மையாவா என்று வாய் மூடாமல் பார்த்தேன்.
ஹேய்  ஜில்லியா..என்னைத் தெரிகிறதா,,,இது நான்.
இல்லையே. மதுரையை நான் மறந்தே நாளாகிறது. பழைய
உறவெல்லாம் விட்டுப் போச்சு என்று தோள் குலுக்கின பெண்ணை நான்
என்னுடன் வாடாமல்லி பறிக்கவும், மகிழம்பூ மாலை
தொடுக்கவும்
என் பின்னால் அலைந்த  சிறுமியோடு சம்பந்திப் படுத்திப் பார்க்க முடியவில்லை.
நான் விடுவதாக இல்லை.  உங்கள் பக்கத்து வீட்ல இருந்தோமே,
ஜானு,முகுந்தன்,கல்யாணி.?
உன்
குழந்தைகள் எங்கே  இருக்கிறார்கள்.

தங்கை அண்ணா    எப்படி இருக்கிறார்கள்.
அம்மா?
அம்மா காலமாகி ரொம்ப நாளாச்சு. எங்கள் திருமணங்கள் முடிந்ததும்
அவள் நிறைய நாட்கள் இருக்கவில்லை. நானும் 1972லியே காலிஃபோர்னியா
போய்விட்டேன்.
தங்கை  வேற்று மதத்தவரைத் திருமணம் செய்து கொண்டு ஆஸ்திரேலியா
போய்விட்டாள்.
அண்ணா   தாத்தா வாங்கிக் கொடுத்தவேலையில் ரிடயராகி இப்போது நெல்லை பக்கத்தில் கிராமத்தில் இருக்கிறான். பெரிய குடும்பம்.
சௌத்  ரொம்ப ஹாட்டாக  இருக்கிறது அதனால் அடுத்த  ட்ரிப் ல தான்  பார்க்கணும்.
என் குழந்தைகள் என்னுடன் இந்திய   ட்ரிப்புக்கெல்லாம் வருவதில்லை.
இந்தக் கல்யாணமே மதுரைப் பாட்டிக்கு    ஒரு பேரன்'' எல் ஏ''ல  நல்ல பொஸிஷன்ல இருக்கானாம். அவன் மகனை என் பெண்ணுக்கு  வரன்  பார்க்கலாம்னு கேட்கத்தான் வந்தேன்.
அடுத்த நிமிடம்   அவளே போலத் தோற்றமளித்த இன்னோரு
பெண்ணைப் பார்க்க நகர்ந்துவிட்டாள்.

நானும் என் பழைய தோழியும்   சிரித்துவிட்டோம்.
நீ எங்கயும் சிங்கப்பூர் போலியா என்று நான் கேட்க , ஏன் நீதான் அமெரிக்கவாசின்னு கேள்விப்பட்டேன்'' என்று அவள் கலாய்க்க
அப்பாடி  சில விஷயங்கள் மாறுவதில்லை என்று நிம்மதியாக இருந்தது.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Saturday, February 11, 2012

முதுமையும் கண் பிரச்சினைகளும்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்கண் ணில் வைத்தியம் முடிந்து  கறுப்புக் கண்ணாடியும் நானுமாக ஒருநாள் வீட்டுப்  பலசரக்குப் பொருட்கள் வாங்கப் போயிருந்தோம்.


கொஞ்சம் தடுமாற்றம் இருந்தாலும் பழக்கம்
காரண்மாக  வேண்டும் என்ற பொருட்களைத் தள்ளுவண்டியில்
போட்டுக் கொண்டு எண்ணெய்   பாக்கெட்டை எடுக்க நிற்கும் போது
திடீரென்று பின்னால் ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

எவ்வளவு நாள்;ஆச்சு?''

திரும்பிப் பார்த்தால் ஒரு மூதாட்டி.அதாவது என்னை விடக் கொஞ்சம் வயதானவர்.
'எதுக்குக் கேட்கறேன்னால் நானும் செய்துக்கணும். 35 ஆயிரம்  லென்ஸ் மட்டும் ஆகணும் என்கிறான் என் அண்ணா பையன்.
அந்த லென்ஸ்  பேர் என்னடா. கூகிள்ள தேடிக்கறேன்னு சொன்னால் ,பெயர் சொல்ல மாட்டேன் என்கிறான்.''
எனக்குத் தலை கால் புரியவில்லை.

நம்மைக் கூட மதித்து ஒரு அம்மா கேட்கிறாரேன்னு சந்தோஷம்.:0)


என்ன தெரியணும் உங்களுக்கு?
என்  வைத்தியர் சொல்லும் லென்ஸ் அந்த விலைதானா.
அதற்கு உண்மையான பேர்  என்ன.
அதுபோட்டால் என் கண் புரை விலகி ப்  பார்வை விளங்குமா.

எனக்கோ படு உத்சாகம்.
'அதிலென்ன சந்தேகம் அம்மா. கண் நன்றாகத்தெரியும்.

அதைக் கேக்கலை....
??????
இந்ட்ரா  அக்குலர் லென்ஸ் எத்தனை வகைப்படும்.
நான் பணம் கொடுக்கப் போகிற  லென்ஸைத்தான்
வைத்தியர் பொருத்துவார் என்று என்ன நிச்சயம்?

ஆஹா  மாட்டிக்கிட்டயா மஹாதேவி;  அப்டீன்னு ஒரு குரல் .என் மனசுதான்.
உங்க   டாக்டர் யார்.

ஸோ அண்ட் ஸொ. உங்களுக்கு அவரைத் தெரியுமா?
நான் விழித்தேன். எனக்கு  தெரிந்த வைத்தியர்கள் எலும்பு முறிவுக்காரர்களும்,

டயபெடிஸ் மருத்துவர்களும் தான்.
''இல்லமா எனக்கு அவரைத் தெரியாது.'
ஓ ஊருக்குப் புதுச்யு போல நீங்கள்.
எங்க டாக்டர் என்னை 35 வருஷங்களாப் பார்த்துக் கொண்டு வருகிறார்.''
''அப்புறம் என்ன அவரை நீங்கள் நம்பலாமே''
உங்களுக்கு யார் வைத்தியம் செய்தது?
'தெரிந்த டாக்டர் தான்.
''
நீங்கள் உங்கள் லென்ஸ் செக் செய்தீர்களா''
சொன்ன விலையைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்''

ஓ! உங்கள் பிள்ளைகள் இருப்பார்கள். மருமகள் இருப்பாள். கணவர் பார்த்துக் கொள்வார்,.'


எனக்குக் கல்யாணம் ஆகவில்லை. பிள்ளைகளும் கிடையாது(!)
உங்களுக்குக் கண்ணில் மருந்து போட உங்கள் கணவர் வருவார்.
சமையலைப் பார்க்க மருமகள் இருப்பார்''
என்னைச் சொல்லுங்கள். பணத்தை யாராவது பறித்துக் கொள்வார்களோ என்ற
  பயத்தைத் தவிர   வேற என்ன இருக்கிறது.என்று சொன்னவர் அழ ஆரம்பித்துவிட்டார்.

ஐய்யோ சாமி இது என்னடான்னு   கவலையாகி விட்டது. இதற்கு நடுவில் சிங்கம் வேற உள்ள வந்து என்ன 'லேடி எம்ஜியார்''(கறுப்புக் கண்ணாடி மஹிமை)
ஒரு கடுகு புளி வாங்க இவ்வளவு நேரமா' என்றபடி   அருகே வந்தார்.
என்பக்கத்தில் அழும் பெண்ணைப் பார்த்து
என்னைச் சந்தேகமாப் பார்த்தார்.
என்ன செய்த. இப்படி இந்த ஓல்ட் வுமன்  அழறாங்களே''
நான் அம்மாவை அங்கிருந்த நாற்காலியில் உட்காரச் சொன்னேன்.
கடையிலிருந்த பெண்ணிடம் ,கொஞ்சம் தண்ணீர் வாங்கி அவரைக் குடிக்கச் சொல்லி
என் புராணத்தைச் சொன்னேன்.
;;அம்மா, எங்கள் குழந்தைகள் இங்கே இல்லை.
வெளியூரில் இருக்காங்க.
கண் சொட்டு மருந்து போட்டுக் கொள்ள மருத்துவமனையிலேயே கற்றுக் கொண்டேன்.
ஒரு பதினைந்து நாட்களுக்கு ஒரு அம்மா எங்களுக்குச் சப்பாத்தியும், காய்கறிகளும் செய்து தருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்''
உங்களாலும் முடியும்.
உங்கள் வைத்தியரை நம்புங்கள்.
தெய்வத்தை நம்புங்கள்'
கண் சரியாகிவிடும்.
வைத்தியரிடமே ஒரு  உதவியாளரை உங்கள் வீட்டுக்கு அனுப்பச் சொல்லி நான்கு நாட்களுக்கு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.

என்றதும் ஒருவாறு தேறினார்.
என் விலாசத்தைக் கேட்டார். பக்கத்தில் உறுமல் சத்தம் கேட்கவே ''இங்க பக்கத்தில் தாம்மா இருக்கேன்.
அப்புறம் பார்க்கிறேன்,'' என்றவாறு வெளியே வந்தேன்.
பின்னால் அந்தப் பெண்ணின் குரல் ''வரவங்க, போறவங்க உதவியா செய்வார்கள்!! வாய்வார்த்தைக்கே வழியில்லாமல் போச்செ'கலிகாலம்!!!
என்று தன்னோடு உதவிக்கு வந்திருக்கும் பெண்ணோடு உள்ள போய் ரைஸ் ப்ரான் ஆயில் எடுத்து வைம்மா'
என்று கட்டளையிட்டார்..

எனக்கே என் கண்ணில் வைக்கப்பட்ட லென்ஸ் நான் சொன்ன லென்ஸ்தானா'என்ற சந்தேகம் வந்துவிட்டது:(
எதாக இருந்தால் என்ன. நம்பிக்கை இல்லாமல் வைத்தியம் கிடையாது.

நம்பிவிட்டால் சந்தேகம் கூடாது'
இப்படி உறுதி செய்து கொண்டேன்.:)Posted by Picasa

Thursday, February 09, 2012

வேரென நீ இருந்தாய்,நான் வீழாமல் இருந்தேன்...

அம்மாவும் ரங்கனும் 
பெண்ணின் திருமணத்தில் அம்மா

அம்மா கொஞ்சம் திரும்பேன்.
உன் முகத்தை மீண்டும் பார்க்கவேண்டும்.
உன்  பேரன்களுக்கும் பேத்திகளுக்கும்
உன்  பெயர் தெரிந்திருக்கிறது.
கடமைப்பட்டவர்கள்...ஆனால் அவர்களின்
வாரிசுகளுக்கும்
ஜயாப் பாட்டியைத் தெரிந்திருக்கிறது.

வாய் திறவாமல் கண்களா லயே சிரிப்பாயே
அந்தச் சிரிப்பை
அதன் புனிதத்தை அவர்களும் பார்க்கவேண்டாமா.

குழந்தைகளா
பாட்டிக்கு ஹாப்பி பர்த் டே இன்னிக்கு.
நாம் அவள் இருக்குமிடத்தில் ஆநந்தமாக இருக்க வாழ்த்தலாம்.
வாருங்கள்.
தாழம்பூ வாங்கி கையில் குத்தினாலும் அழகுப் பின்னலில் தைத்துவிடுவாள்.
அமுதமாகத்  தயிரும் அன்பும் சேர்த்துக்
கையில்  அன்னம் இடுவாள்.
அந்த அம்மாவை அவள் கைகளின்   ஆதுரத்தை
எந்நாளும் மறக்காமல் இருப்போம். எத்தனை  எழுதினால் போதும் எங்கள் அம்மாவைப் பற்றி.  உனக்கு அள்ளித்தர வேண்டிய அன்பு இன்னும் நிறைய இருக்கிறது. அம்மா. மீண்டும் வா.எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Wednesday, February 08, 2012

தேன்கிண்ணம் வழங்கும் கயல்விழிக்கு இசைப் பரிசு

இசைகேட்டால்   புவி  அசைந்தாடும்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

அன்பு கயல்விழி செய்து வரும் இசைச் சேவை எல்லோருக்கும் தெரிந்ததே.
சிறுமுயற்சியைச் சொல்லவில்லை.
பெரிய தேன்கிண்ணத்தைச் சொல்கிறேன்.

எங்கிருந்தெல்லாமோ தேடிதேடி  முத்துக்களோ ரத்தினங்களோ என்று வர்ணிக்கத் தகுந்த   தேன் சொட்டும் பாடல்களை தன்  ''தேன்கிண்ணம்''
பதிவில் கொடுத்துவருகிறார்.
செய்நன்றி அறிதல்  முக்கியமல்லவா.
அதுவும்   என் விஷயத்தில் கண் அறுவை சிகித்சை
முடிந்த பிறகு, கண்களை மூடிக் கொண்டு காதைத் திறக்கச் சொல்லி வைத்தியர் சொன்ன அறிவுரையை
நான் ஏற்றுக் கொண்டாலும்,
கடைப் பிடிப்பது மிகவும்   சிரமமாக இருந்த போதுதான், கூகிள் ப்ளஸ்ஸில்

நம் கயல் ஒரு லின்க்,பழைய பாடல் ,கண்டசாலா  பாடினதைப் பதிந்திருந்தார்.

இந்த இன்பத்தை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்
இந்த மகிமை.
நானும் பலபாடல்களை கூல்டோட்  தளத்தில்  சென்று தேடி
தரவிறக்கம் செய்து அனுபவித்திருக்கிறேன்.
ஆனால் கயல்விழி முத்துலட்சுமி

கொடுத்த ஒரு லின்க் எனக்கு ஒரு தங்கச் சுரங்கத்தையே திறந்து
கொடுத்தது போல  இருந்தது.
அரசியோ அரசனாகவோ இருந்தால் பொற்கிழி  கொடுக்கலாம்.
நாமெல்லாம்  பதிவர்கள் தானே. அதனால்
இசைக்கான  சிம்பல்  ஒரு ''இசை நோட்'' தான்.
கூகிளில் கிடைத்த   படம் ஒன்றை இன்று  நம் கயல் முத்துவுக்கு
அளிக்கிறேன்.
மனமுவந்து ஏற்றுக் கொள்ளவேண்டும்.
இசைக்கு  கோடி நன்றி  கயல்விழி முத்துலக்ஷ்மி.Sunday, February 05, 2012

ஃபெப்ரவரி க்ளோஸ் அப்! பிட் போட்டிக்கு

விழுதுகள்
பெண்வீட்டுத் தோட்டத்தில் தக்காளியும் பச்சை மிளகாயும்
தரையில்  வண்ணம் பேசும் மலர்கள்.
அடயாறு ஆலமரம் அருகே  எடுத்த  படம்
அலையோரம் நடை பழகும் குதிரைஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

முஹூர்த்தநாளும் முடிவாச்சா!!

குழந்தைகள்   அனுப்பிய பூங்கொத்து

இப்படியாகத்தானே ஐப்பசி மாதமும் வந்தது.தீபாவளி ஷாப்பிங் முடிக்க ஹாஜீமூசா கடை.

முதல் தடவையாகப் புடவை அதிலும் பட்டுப்புடவை போணி.

யானைக் கலர்னு அப்போது புதிதாக ஒரு ஏதோ ஒரு படத்தின் பேரோடு

வந்திருந்தது.

110ரூபாய்தான் விலை.அம்மா தீர்மானம் போட்டாச்சு.

அதுதான் பெண்பார்க்கிற அன்று உடுத்திக்கொள்ளவேண்டும்.சரி.

தீபாவளியும் வந்து போனது.

இந்தத் தடவை தம்பிகளோடு பட்டாசுக்குப் போட்டிபோடவில்லை.

சின்னவன் அடுத்த வருஷம் நீ இங்க வருவியான்னு கேட்க அப்போதுதான்

ஓஹோ இங்க இந்த இடத்தில் நம்ம நாட்கள் குறைவுதான்

என்றும் வெளிச்சமாகியது.
அக்டோபர் 31 ஆம் தேதி இரண்டு குடும்பத்துக்கும் உறவில்
இருந்த  குடும்பத்தில் ஒரு திருமணம்.
அத்தையிடமிருந்து  தொலைபேசி அழைப்பு.
  சிங்கம் புதுக்கோட்டையிலிருந்து
சென்னைக்கு வருவதாகவும், என்னையும் அழைத்துக் கொண்டு என் பெற்றோர்  அங்கே வந்தால்
 .அதில் எல்லோரும் சந்திப்பதாக ஏற்பாடு.

பலிஆடு முகம் எப்படி இருக்கும் என்று என்னைப் பார்த்தால் தெரிந்து இருக்கும்.

கூட்டத்தில் அனைவரும் என்னைப்பார்ப்பதாக உணர்வு.

ஒரு வட்டமாக நாற்காலிகளைப் போட்டு அத்தை வீட்டுக்காரர்களும்

எங்க வீட்டூக்காரர்களும் உட்கார்ந்தோம்.

பார்த்துக்கோடா அப்புறம் சரியாவே பார்க்கலைனு எல்லாம்

சொல்லக்கூடாது ,

புளித்துப்போன வசனம் தான
அன்னிக்கு அப்படித்தான் தோணவில்லை.

அடக்கம் ஒடுக்கம் எல்லாம் முன்னாடியே மண்டையில் தைத்துத்தான் பாட்டி அனுப்பி இருந்ததால் நான் தலையை நிமிர்த்தவில்லை.

ஒரு கனமான குரல் ''நிமிர்ந்து உட்கார்ந்து அவனைப் பார்க்கலாம்''

என்றது.

பிறகு தெரிந்தது அது என் மாமாவின் (வருங்கால மாமனார் )குரல் என்று.

சரி என்று நிமிர்ந்தால் நாலைந்து பேர்கள் ஒரே ஜாடையில்.

அதில் ஒருவருக்குக் காதோரம் நரைத்திருந்தது.

அட ராமா,அதுக்குள்ள நரைத்துவிட்டதா.

ஒருவேளை இப்படித்தான் இருக்குமோ என்று மீண்டும் குனிந்த தலை.

மாமா அப்போது பார்த்து ஒரு ஸ்கைப்ளூ சட்டை பின்னால் போய் நின்று இதுதான் என்பதுபோல் சைகை காட்டினார்.

திருப்பியும் நிமிர்ந்துவிட்டு சிரித்துக்கொண்டிருந்தவரைப் பார்த்துவிட்டு

சரி ஓக்கேதான் என்று நினைத்தபடி

அம்மாவைப் பார்த்தேன்.அப்பா அம்மா இருவரும் கைகூப்பாத குறையாக நிற்பதைப் பார்த்து ஒரு கணம் நான் கலங்கியது இன்னும் நினைவு இருக்கிறது.

அவர்களோடு கிளம்பி இரண்டு வண்டிகளில் மைலாப்பூரில் இருந்த பெரிய வீட்டுக்கும் வந்தோம்.
பழைய கதைகளில் வரும். பச்சை வர்ணம் பூசப்பட்ட  இரண்டு பெரிய gate க்குள் வண்டிகள் நுழைந்தன.
இரண்டு புறமும் பெரிய பெரிய மரங்கள்.நாகலிங்கப் பூ வாசனை மூக்கை நிரப்பியது.
நெல்லிமரங்கள் ,சஃப்போட்டா  மரங்கள், விளாம்பழ  மரங்கள்,
மல்லிக் கொடிகள் நடுவில் உட்கார  சிமெண்ட் பெஞ்சுகள்
எல்லாவற்றையும் தாண்டி பெரிய   முற்றத்தில் போய்  இறங்கினோம்.
பசுமாடுகளுக்கான தீவனங்கள் நிரம்பிய  மூட்டைகள்
கொண்ட பெரிய கொட்டகை ஒன்று இருந்தது. அதியும் தாண்டி
  பசுமாடுகள் கட்டி நிறுத்தப் பட்ட  தொழுவம்  தெரிந்தது.
மாடுகளைப் பார்க்கறியாமா என்றது மாமனார் குரல்.
நான் ஓ யெஸ் சொல்வதற்குள்,  வீட்டிற்குள்ளிருந்து ஓடிவந்த சிறிய நாத்தனார்,முகம் பூராவும் சந்தோஷத்தோடு
 என் கைகளைப் பிடித்துக் கொண்டு முதலில் உள்ள  வாங்கோ.ராகுகாலம் வந்துடும் என்றவாறு அழைத்துப் போனார்.

முதலில் பார்த்தது ரொம்பவும் வயசான  ஆஜிப்பாட்டியையும்,தாத்தாவையும் தான்.
கல்யாண ஹாலைத் தாண்டி உள்ளே  போனால் பெரிய ஊஞ்சலில் சின்ன மாமனார்.

'ம்ம் என்ன படிச்சிருக்க?என்று மேலயும் கீழயும் பார்த்தார்.எனக்கு அவருடைய ஆகிருதி,
கையில் வைத்திருந்த வெற்றிலைச் செல்லம்
எல்லாம் விநோதமாகத் தெரிந்தன.
ஊஞ்சலுக்கு அப்புறம் இரண்டாம் கட்டு தெரிந்தது.சமையல் செய்யும்  இடத்திலிருந்து நல்ல பஜ்ஜி வாசனைவந்தது.
அதோடு  இன்னுமொரு பெரியவர் வந்தார்.
''பாப்பா, இதுதான் சிம்முவுக்குப் பார்த்திருக்கிற பெண்''இது பாட்டி.

என்னது இவ்வளவு பெரியவர் பேர் பாப்பாவா'என்று எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
ஒரே குழப்பம்.
அதற்குள் மாடிக்குப் போய்விட்டார் சிங்கம்.
பாட்டியையும் தாத்தாவையும் இன்னும் கண்ணில் எதிர்ப் பட்டவர்களையும் அப்பா  நமஸ்காரம் செய்யச் சொன்னார்.
தானும் செய்தார்.(எத்தனை அன்புப்பா உனக்கு என் மேல்.)!!!
நாத்தனார் மாடிக்குப் போய் மாப்பிள்ளை சிங்கத்தை மீண்டும் கீழே அழைத்துவந்தார். இருவர் முகத்திலும் சிரிப்பு.
*****************************************************************************************************************************************
அம்மாவின் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டோம்

ஐந்து நிமிடங்களில் அங்கிருந்து போன் வந்துவிட்டது.

எங்களுக்கு சம்மதம்.உங்கள் அபிப்பிராயம் என்ன.

அப்பா வந்து என்னைக் கேட்டார்."அம்மா,உனக்குப் பிடித்திருந்தால் சரினு சொல்லு."

இல்லாட்டாப் பரவாயில்லை.

நாந்தான் நிறையப் படித்த அறிவாளி ஆச்சே.

பரவாயில்லைப்பா சரினு சொல்லிடலாம்.

அவ்வளவுதான் பலவிதமானப் பொருளாதாரத் தடைகள் வந்தபோதும்

முனைப்போடு அனைவரும் உழைத்துத் தை மாதத்தில்

எங்கள் திருமணமும் முடிந்தது.

படிக்கவில்லை.

அவரவர் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறார்கள். இல்லாவிட்டால் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்க வைக்கப் படுகிறார்கள்.

கதையும் முடிந்தது கத்திரிக்காயும் காய்த்தது.

எல்லோரும் வாழ வேண்டும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Saturday, February 04, 2012

அன்றொரு நாள் இதே பகலில்....

அறிவிப்பு ...இதனால் சகலமானவர்களுக்கும் சொல்வது.

**********************************************************************

இந்தப் பதிவுக்குக் காரணம் திருமதி கீதா சாம்பசிவமும், தம்பி வாசுதேவனும்  தான்.
இன்னோரு காரணம்  நம்ம திருமதி பக்கங்களின்  கோமதி அரசுவுக்கும்  இதே
தைமாதம் 7 ஆம் தேதி திருமணநாள்.
அன்பும் அறனும் மிக்க நல் வாழ்வு வாழும் இந்த அருமை தம்பதியருக்கு நம்  இனிய மணநாள் வாழ்த்துகளைச் சொல்லி
ஆசிகளையும்   அனுப்புகிறோம்.சிங்கம் &  மிஸஸ் சிங்கம்..


**********************************************************************************************

.

எப்பவும் ஸ்கூல்பசங்களோட லீவு ஒட்டியே முன்னாளில் கல்யாணங்கள் நடக்கும். நாத்தனார் முடிச்சு போட வரணும்னால் அவங்க குழந்தைகளுக்கு லீவ் விட்டாத்தான் வரமுடியும்.

அதால கூட இருக்கலாம்.இப்பத்திக் கல்யாணம் மாதிரி இல்லையே.

வீட்டுக்கு முன்னாடி பந்தல். பந்தக் கால்போட்ட அன்னிலேருந்தே உற்சாகம் கிளம்பிடும்.

வண்டியில் வந்திருங்கும் கீற்றுகள்,வாழைமரம்,சரம் கட்டிவிடும் பழங்கள்

விதானம் கட்டும் துணி எல்லாமே ஒரே த்ரில்லிங்காக இருக்கும்.

வாசனை,பஜ்ஜி,பட்சண வகையறா செய்யப் போட்டக் கோட்டை அடுப்பு.பிரமாதமான சூழ்நிலை.

மருதாணி இட ஒரு நாள். அக்கம்பக்கம் இருக்கும் பெண்கள் முற்றுகையிட்டுவிடுவார்கள். பகல் மருதாணி,இரவு மருதாணி என்று எல்லோரும் பறித்துக் கொண்டுவந்த இலைகளை அம்மியில் வைத்து,பாக்குகளைஅதில் பொடித்துப் போட்டு,துளி எலுமிச்சஞ்சாறு பிழிந்து

ம்ம்ம் மருதாணிக்கே உண்டான ஸ்பெஷல் வாசனை வீட்டை நிரப்பும்.

அந்த மாமி,இந்த அத்தை,பாட்டிகள் குழுமிவிடுவார்கள்.

சின்னப் பெண்களிலிருந்து,பையன்கள் ,முதிர்ந்தவர்கள் எல்லோரும் கைகளில் மருதாணி இட்டுக் கொண்டுதிரியும் அழகு தனி.

மருதாணி இட்ட கைகள் காயும் வரை

அடுத்தவர்கள்,(சில பேருக்கு மருதாணி அலர்ஜி அப்பவே உண்டு) உதவி

சகல விஷயத்துக்கும் தேவைப்படும்.

இவ்வளவு நினைவும் வரக்காரணம் இந்த அனிவர்சரிப் பதிவுகள்தான்.

அப்படியே போற போக்கில எங்க கல்யாணம் நிச்சயமான கதையையும் சொல்லலாமே என்று தோன்றியது:-)

*******************************************************

மதுரையின் அருகே பசுமலை என்கிற ஊர் .அப்போது...41 வருடங்களுக்கு முன்னால் வயல்கள் ஒரு பத்துப் பதினைந்து புதிதாகக்கட்டிய வீடுகள் மெயின் ஹைவே(மதுரை/திருமங்கலம் சாலை)யை ஒட்டித்

இருந்தன.(பசுமலை பைக்காராவுக்கும் திருப்பரங்குன்றத்துக்கும்

இடையில் இருக்கும்.)

அவைகளில் ஒன்று தபால் அலுவலகம். இப்போதும் அங்கேயே தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.அப்பா போஸ்ட்மாஸ்டர்.நான்கு வருடங்களுக்கு ஒரு முறை ஊர் மாறிக்கொண்டே இருப்போம்.

அப்படி வந்த இடம் பசுமலை.ஏற்கனவே பழங்காநத்தம்

இடத்தில் பாட்டியும் தாத்தாவும் இருந்ததால் மதுரை பழகின இடமாயிருந்தாலும் அப்பா என்னைத் தனியே அனுப்பமாட்டார்.

கொசுறு மாதிரி சின்னத் தம்பி கூட வந்தால், நான் போகலாம் .டவுன் என்று அழைக்கப் படும்

செண்ட்ரல் பஸ்ஸ்டாண்டைச் சுற்றியுள்ள உறவினர்களைப் பார்த்துப் பேசிவரச் சொல்லுவார்,.

அவனும் பெரிய மனது பண்ணி,தன் (சேதுபதி உயர்னிலைப்பள்ளிக்குப் ) போவதற்கு முன்னால்,என்னை எங்கள் சித்தப்பா வீட்டில் (சந்தைப்பேட்டை)விட்டு விட்டுப் போவான்.

இப்போது நினைத்தால் சிரிப்பக இருக்கிறது. அப்பொது சுதந்திரம் பறிபோன மாதிரி இருப்பேன்.

என்ன இருந்தாலும் சென்னையில் ஒரு வருடம் தங்கிக் கல்லூரிக்குப்

போய்வந்து விட்டேன்,எனக்கு இந்த அஞ்சாம் நம்பர் பஸ்ஸில்

போய்வரத் தெரியாதா என்று தோன்றும்.

கேட்க முடியுமா??

அத்தனை பயப்பட்டு இருக்க வேண்டாம்.

அதுபோல ஒரு தடவை டவுனு பக்கம் போனபோது சின்னப்பாட்டி வீட்டுக்குப் போனொம்.

அங்க வந்த தபால்களைப் படித்துக் காண்பிக்க ,மற்றும் அவங்களுக்கு வேணும் என்கிற ஏவல்கள் ,வேலைகள் எல்லாம் செய்து முடிக்கணும்.இதெல்லாம் நாமா எடுத்துச் செய்கிற வேலைகள்.

அப்படி வந்த ஒரு கடிதத்தில் நான் இது வரை கண்ணால் கூடப் பார்த்திராத

ஒரு அத்தை, ''தன் உயரமான சிவப்பான 26 வயசு ஆன பையனுக்கு

ஒரு ஒல்லியான, உயரமான,சிவப்பான,அழகான (!!!!)

பெண் யாராவது இருந்தால் பார்த்து எழுதவும் .ஜாதகம் அனுப்புகிறேன்

என்று எழுதி இருந்தார். எனக்கும் எங்க சித்தப்பா மகளுக்கும்

தாங்க முடியாத வம்பு பிடித்துக்கொண்டது.

" அதென்ன பேச்சு.ஏன் கொஞ்சம் அழகு குறஞ்சா கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்களோ. இவங்க எல்லாம் மன்மத ஜாதியோ "என்றெல்லாம் பேசி அந்தப் பாட்டியை உண்டு இல்லைனு செய்துட்டோம்.

அவங்க அசரவில்லை.

ஏன் நீங்க தான் ரெண்டு பேரு மாமா பெண்ணுங்க இருக்கீங்களே

இவ்வளவு பேசறவங்க பதில் கடிதம் எழுதுங்களேன்னு சொல்ல,

உடனே பேனாவை எடுத்தது நான்தான்..

அன்புள்ள கமலாவுக்கு,(அத்தைன்னா போட முடியும்..விஷயம் தெரிந்து போயிடுமே)

இப்பவும் உன் கடுதாசி பார்த்து சந்தோஷம்.உன் பையனுக்கு ஏத்தமாதிரி

இங்கே உன் பெரியப்பாவின் பேத்தி ஸோ அண்ட் ஸோ

இருக்கிறாள்.

சிவப்பிலேயும் சிவப்பு .

உயரத்திலேயும் உயரம்.

கிளி போல அழகு.(:))நீ ஜாதகத்தை அனுப்பு. நான்

கோபாலன் கிட்டப் பேசிக்கறேன்.

இப்படிக்கு,

ஆசீர்வாதங்களுடன்

அம்முச் சித்தி.

இப்படி ஒரு கடிதம் அழகான கையெழுத்தில் உருவாகிப் பாட்டிக்கு வாசிக்கப்பட்டது.

நான் இந்த ஆட்டைக்கு வரலப்பானு தங்கை விலகிக் கொண்டாள்.

இதில வந்த வர்ணனைகள் நான் படித்த கதைகளிலிருந்தும்

எங்க பாட்டி அவ்வப்போது பேசும் பேச்சுகளிலிருந்தும் எடுக்கப்பட்டவை.

பாட்டிக்கு சிரிப்பு ஒருபக்கம். என் அப்பா என்ன சொல்வாரோ என்ற பயம் வேறு.

அதைப் பார்த்துவிட்டு நான் அவங்களைச் சமாதானப் படுத்தி

இதுக்கெல்லாம் பதிலே வராது என்று சொல்லி அடுத்த நிமிடம்

மறந்தும் விட்டேன்.

அதைவிட அப்போது வெளிவர இருந்த அடிமைப்பெண் திரைப்படம்,

எங்க வயசே இருக்கும் ஒரு பெண் நடிக்க வருவது பற்றிப் பேச்சு

என்று போய் விட்டது பொழுது.

பிறகு நடந்தது இன்னும் சுவாரசியம்.

நாளைக்குப் பார்க்கலாம்:-)

எல்லோரும் வாழ வேண்டும்.

இந்தப் பதிவு வெளிவர நேரம் மணநாள் காணும் எல்லோருக்கும்,காணப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

கடிதம் எழுதிவிட்டு தம்பியோடு அதே அஞ்சாம் நம்பர் பஸ்ஸைப் பிடித்து வீட்டுக்கு வந்து ரேடியோல பாட்டுக் கேட்டு,

என்ன ஏது என்று விசாரித்த பெற்றோரிடமும் எல்லார் நலங்களையும் சொல்லிவிட்டுப் படுக்கவும் செய்தாச்சு.

திடீரென்று மன உறுத்தல்.என்னடா ஏதாவது தப்பு செய்துட்டோமோ.

சாமி கடவுளே அந்தத் தபால் போகாம செய்திடேன் .

என்னவோ பிரார்த்தனை.

அது எப்படி நடக்கும்,நாமதான் போஸ்ட்மாஸ்டர் பொண்ணு.

சுத்தமா அட்ரஸ் எழுதி, ஐம்பது பைசா ஸ்டாம்பும் ஒட்டி

சந்தைப்பேட்டை தபாலாபீஸில் போய்ப் போடவும் போட்டாச்சு.இத்தனை நேரம் மெயில் பையில் திருனெல்வேலி எக்ஸ்ப்ரசில்

அது போய்க் கொண்டு இருக்கும்.

முகந்தெரியாத அத்தைக்குக் கடிதம்.

நமக்குக் கல்யாணத்தைப் பத்தி என்ன தெரியும்.

சிவாஜி,சரோஜாதேவி

ஜெமினி சாவித்திரி

பத்மினி எம்ஜீயார் பாடற டூயட் தெரியும்.

ஆளு யாருனு கூடத் தெரியாதே .பேரும் கேள்விப்படாத ஒரு பேரு.

அவஸ்தைடா கடவுளேனு தூங்கியும் போயாச்சு.

இரண்டு நாள் கழித்து எங்க அப்பா ஒரு பதினோரு மணிவாக்கில் வீட்டுக்குள் நுழைந்தார்.

சாவகாசமாக ஈசிசேரில் சாய்ந்துகொண்டு சேவற்கொடியோனின்தொடர் கதைபடித்துக்கொண்டிருந்த என்னை

ஒரு பார்வை பார்த்துவிட்டு சமையல் உள்ளுக்குப் போய்விட்டார்.

அப்பாவுக்கு இன்னிக்கு சீக்கிரமே பசித்துவிட்டது போலிருக்கே !என்று நினைத்தபடி மறுபடியும் ஆ.வி.யில் மூழ்கிவிட்டேன்.

கசமுச என்று பேச்சு.

இரண்டு பேருமாக வெளியே வந்தார்கள்.

அப்பா முகம் படுசீரியசாக இருந்தது.

அன்னிக்கு சித்தி வீட்டில என்ன நடந்ததுனு மெதுவாகத்தான் கேட்டார்.

சட்டுனு கடிதம் ஞாபகம் வர, ''இல்லைப்பா'',என்று ஆரம்பித்த என்னை அம்மா முறைக்க,எனக்குப் பேச்சு வரவில்லை.

''அத்தை கிட்டேயிருந்து அப்பாவுக்கு லெட்டர் வந்து இருக்கு. அப்பா பேரில எழுதினயா ஏதாவது.''

நான் மென்று முழுங்குவதைப் பார்த்த அப்பாவுக்கு

மனசு வரவில்லை.

''ஏம்மா அப்படி எழுதின.திஸ் இஸ் சம்திங் சீரியஸ்''.

என்று பேச ஆரம்பிக்க.

இவளைத் தனியா அங்கே அனுப்பினதே தப்பு. வாயை வச்சுண்டு சும்மா இருந்ததா பாரேன்.பதினேழு வயசுக்கு உண்டான விவரம் வேண்டாம்???????

என்று அம்மா வருத்தப்பட ,

சரி சரி முதல் முதல்ல மஞ்சள் தடவிக் கடிதம் வந்து இருக்கு.

தம்பிகிட்டப் பேசிட்டு மற்றதைப் பார்க்கலாம்..

என்று அப்பா திரும்பிப் போய்விட்டார்.

அம்மாவும் ஏதோ பெரிய பாரம் ஏற்றிவிட்டது போல யோசனையுடன் படுத்துக் கொண்டுவிட்டார்.

சுவற்றுக்கு அப்பால் , போனில் சித்தப்பாவுடன் அப்பா பேசுவது கேட்டது.

சொல்ல மறந்துவிட்டேன்.

போஸ்ட் ஆஃபீசும் வீடும் சேர்ந்துதான் இருக்கும்.கதவைத் திறந்து அடுத்தாற்போல் கார்ட் வாங்கலாம்,போன் பேசலாம்.

மகா சௌகரியம்:-)

மெதுவாக எழுந்து அப்பா வைத்துவிட்டுப் போன கடிதத்தைப் படித்துப் பார்த்தேன் ."அன்புள்ள,.....

சித்தி எழுதின கடிததிலிருந்த கல்யாண வயதில் உனக்குப் பெண் இருப்பது தெரிய வந்தது.

படிப்பைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

கல்யாணம் ஆனபிறகு இங்கெ சென்னையில் தங்கி அவள் மேலே

டிகிரிக்குப் படிக்கலாம்.

அக்கா கணவரிடம் என் பையன் ஜாதகம் கொடுக்கிறேன்.

அவர் மதுரைக்கு நாளைக்கு வருகிறார். எல்லாம் சுபமாக முடியும். தையில் கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம்."

இதுதான் சாரம்.

அப்பா என் திருமணத்தைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.தயாராகவும் இல்லை.

பெரிய அதிர்ச்சியாகத்தான் இந்தக் கடிதம் இருந்திருக்கும் என்பது என்னுடைய சின்னமூளைக்குகூடத் தெரிந்தது.

அடுத்த நாள் சொன்னதுபோல வந்துவிட்டார் இன்னொரு அத்தை வீட்டுக்காரர்.

தானே எல்லாவற்றையும் சரி பார்த்துவிட்டதாகவும்

இதைவிடப் பொருத்தமான வரன் கிடைக்காது என்றும் பையன் 400ரூபாய் சம்பளத்தில் ...கம்பனியில் அசிஸ்டண்ட் மேனஜர் ஆக இருப்பதாகவும்

சொல்லச் சொல்ல ஒரு மாதிரி வடிவம் உருப்பெற்றது.

எனக்குப் பிடித்த ஒரே வார்த்தை அஸிஸ்டண்ட் மானேஜர்.!!!!

ஏனெனில் காதலிக்க நேரமில்லை படத்தில் அந்த நாளைய கதாநாயகன்

ரவிச்சந்திரன் அந்த வேலையில் இருப்பார்.

உங்களால் நம்பக் கூட முடியாது எங்களின் வெகுளித்தனத்தை.:)

கடிதங்கள் பறந்தன.ரகசிய விசாரணைகள் நடந்தன.

ஐப்பசியில் பெண்பார்க்கலாம் என்று முடிவாகியது.

தொடரும் அதிசயங்கள் :)

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்