Blog Archive

Wednesday, October 31, 2007

வான் வலைப் பூக்கள்...வார்த்தைகள்

நல்ல வார்த்தைகள் சொல்லப் படும்போது வீட்டிலிருக்கும் அஸ்து தேவதைகள் ஆசீர்வதிக்குமாம்.

நல்லது அல்லாத சொற்கள் வேண்டாம் என்பது மூதுரை.
முந்திய பதிவில், உணவு பழக்க வழக்கம்,மற்றும் வலிநிவாரண மாத்திரைகளின் விளைவுகளைப் பற்றி
ஒரு புராணம் எழுதி இருந்தேன்.
எல்லாரையும் பயமுறுத்திவிட்டுப் பிறகு ஒரு டிஸ்க்ளெய்மரும் போட்டேன்.



''Allthat begins well ends well''ரொம்பப் பிடித்த வரிகளில் இது ஒன்று. இன்க்யுரபிள் ரொமாண்டிக் என்ற பட்டப் பெயர் வைத்தாலும் சரிதான்.
சுபம்(சுபமாக கல்யாணத்தில் முடிந்து) போட்டாத்தான் படம் பார்க்கவும் பிடிக்கும்.

சரோஜாதேவி தனியாளாக எழும்பூர் ப்ளாட்ஃபாரத்தில் காதலிலே தோல்வியுற்றாள் பாட்டுக்கு நிழலோவியம் போல் நடப்பதைப் பார்த்துப் பாதிப்படத்திலேயே வெளியே வந்த ஞாபகமும் இருக்கிறது.:)))






இந்த எல்லாப் பில்ட் அப் புக்கும் காரணமாக இருப்பது, இன்று நான் வாங்கின ஆல் க்ளியர் ரிபோர்ட்.
டாக்டரம்மா'' எல்லாம் நல்லா இருக்கு. எண்ணை மத்திரம் சாப்பிடாதே.
பசித்தால் வெள்ளரி,தக்காளி சாப்பிடு.
சாக்கலேட்,
குக்கீஸ்,மிளகாய் பஜ்ஜி எல்லாம் கண்ணால பார்த்துக்கோ.
வேக வைத்த கடுகு போடாத காய்கறி ,தண்ணீர் விட்ட மோர்.... இப்படி போகிறது இந்த லிஸ்ட்.
புதிதாக ஒண்ணும் இல்லை.






ஆதலால் இனி கவலை இல்லை. அடுத்த ஆண்டு பரிசோதனையின் போது அறுவைப் பதிவு போடாமல் உங்களையெல்லாமல் காப்பாற்றுவதாக வேண்டுதலும் செய்து கொண்டேன்.


Posted by Picasa

Thursday, October 25, 2007

இதயம் இருக்கின்றதே --இரண்டாவது

வீட்டிலிருந்து வரும்போது இருந்த தைரியம் போய் விட்டது.
வலிக்கிறதா என்று கேட்டால் ஆமாம் என்று மட்டும் சொல்லத் தெரிந்தது.
அங்கே அப்போது தலைமை டாக்டர் திரு.டி.ஜே.செரியன்.
கொஞ்சநாட்கள் முன்னால் தான் என் தம்பிக்கு வைத்தியம் பார்த்தவர்.
அவனைச் சரியான நேரத்தில் காப்பாற்றியவர்.
அவரும் அப்போதுதான் ஐசியூவுக்கு வழக்கமான ரவுண்ட்ஸுக்கு வருகிறார்.
என்னைப் பார்த்ததும் புதுசா, என்று கேட்டவாறு நாடியைப் பிடித்துப் பார்த்து
''she is having spasms. give her immediate attention ''
என்றவாறு
என்னை வெளீச்சத்தில் பார்த்தவருக்கு அடையாளம் தெரிந்து, முகத்தைச் சுருக்கி நினைவு படுத்திக் கொண்டார்.
யூ வில் பி ஓகே என்று தட்டிக் கொடுத்து அடுத்த கட்டிலுக்குப் போய் விட்டார்.
ஸ்பாசமா!! அப்டின்னா சீரியஸா என்று மண்டை குடைய சுற்றி நின்றவர்களைப் பார்த்தால், அவர்கள் என்னோட டயலாக் அடிக்க நேரமில்லாதவர்களாய் சலைன் பாட்டில் ,இஞ்சக்க்ஷன்
, ரிலாக்ஸ்' வார்த்தைகள் சகிதம் வாயிலேயும் ஒரு மாத்திரயைப் போட்டார்கள்.
தூக்கம் வருகிற வேளையில் பெண்ணும் தங்க சிங்கமும் கண்ணாடி வழியாகப் பார்ப்பது தெரிந்தது.
இரண்டு மணி நேரம்தான், தூக்கம் கலைந்து விழித்தபோது நான் வேறு ஒரு தனி அறைக்கு வந்தாகி விட்டது.
பக்கத்தில் அம்மா, அப்பா, பெண்,சிங்கம் எல்லோரும்.
என்ன ஆச்சும்மா, இதற்கு மேல் அப்பாவுக்கு வாயில் வார்த்தைகள் வரவில்லை.
எனக்கும் உண்மை நிலை புரியாத்தால் ஒண்ணும் இல்லைப்பா. முதுகு வலின்னு சொன்னதும் மாத்திரை கொடுத்து சரி செய்தாச்சு என்றேன்.
பிறகு வரிசையாக் எல்லா பரிசோதனைகள் தொடர்ந்தன.
முதுகுக்கு எக்ஸ்ரே, வயிற்றுக்கு ஸ்கான், ஈசிஜி இன்ன பிற ஊர்வலங்களாகத் தொடங்கி முடித்ததும்,
டாக்டரும் வந்தார்.
do you know what is wrong with you?
என்றதும் நான் இல்லை என்று தலை அசைத்தேன்.
உனக்கு இன்னும் இரண்டு வாரத்துக்கு வெறும் மோர்க் கஞ்சியும் சாதமும் தான் சாப்பாடு.
காரம், உப்பு ஒன்றும் கிடையாது, கூடாது.
ஒரு நாளுக்கு நாலு வேளை இது தான்.
''
Along with medicines for hypertension, you are going to take treatment for peptic ulcer"
ulcer???
அப்பாவுக்கு அல்சர் வந்ததும் படாத பாடுபட்டு மருந்து சிங்கப்பூரிலிருந்து வாங்கியதும் நினைவுக்கு வர மேலே பேச வாய் வராமல் சும்மா இருந்தேன்.
வயிற்றுப் புண்ணுக்கும் முதுகு வலிக்கும் என்ன சம்பந்தம்?
அதைத்தான் பிறகு விளக்கினார். டாக்டர்.
நான் பல்வலி தலைவலி இரண்டுக்கும் அடிக்கடி எடுத்துக் கொள்ளும்
குறிப்பிட்ட மாத்திரைகள்கள் ,
மாதம் இரண்டு தடவையாவது கடுமையான தலவலி,
முதுகுவலி என்று அந்த அந்த வேளைக்கு ரிலீஃபுக்காக
எடுத்துக் கொண்ட மருந்துகள் வயிற்றைக் கெடுத்து இருக்கின்றன.
வயிற்றில் வலியினால் வந்த வலி அலைகள், முதுகைப் பதம் பார்க்க
முதுகும், மார்பு பக்கமும் சூழும் வலி வந்து இருக்கிறது.
ஒரு தோற்றத்திற்கு அப்படியே நெஞ்சு வலிக்கான(heart attack) அடையாளங்கள் காட்டி இருக்கிறது.
ஒழுங்காகக் கவனித்துக் கொடுக்கப்பட்ட சிகிச்சையால் மூன்று நாட்களில் வீடு திரும்பினேன்.
மாத்திரைகளின் உதவியால்
அப்போதிலிருந்து கட்டுப்பாடான சாப்பாடும் மிதமான நடைப் பயிற்சியுமாரம்பித்தேன்.
மனம் அந்தப் பயத்திலிருந்து விடு பட ஆறு மாதங்கள் ஆகியது.

எல்லாவற்றுக்கும்
முதல் காரணம் காலை உணவு சாப்பிடும் வழக்கமே இல்லாமல் 12 மணி வரை பட்டினி கிடப்பது,
2, தெரிந்த தெரியாத வலி நிவாரண மாத்திரைகளைச் சாப்பிட்டாவது வீட்டு வேலைகள் நின்று விடாமல்(!!) நான்
ஓடியது
இன்னும் சில பல சொல்ல விரும்பாத குட்டிக் காரணங்கள்.(அதில் ஆவக்காய் பிசிந்த சாதமும் உண்டு):))
இப்போது இந்த க்ஷணத்தில் இதை நினைவு கூர்ந்ததற்குக் காரணம்,
பெண்கள் மார்பகப் பரிசோதனை செய்து கொள்ளும் மாதமாக
இந்த அக்டோபர் இருப்பதால் தான்.
வேறு புதிதாக நமக்குப் பிரச்சினை என்று வருவதற்கு முன்னால் நாமே முன்னெச்சரிக்கையாக
வருடம் ஒரு முறை நம்மைப் பரிசோதித்துக் கொண்டு விட்டால்
பாதி துன்பங்கள் வராது என்று நினைக்கிறேன்.
நலம் பெற்று வாழ விரும்புகிறேன்.
அது போல நம் சமூகமும் விழிப்புணர்வோடு ஆரோக்கியமாக
வளம் பெற்று இருக்கப் பிரர்த்திக்கிறேன்.

இதயம் இருக்கின்றதே...

இது இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்.(டிஸ்கி வரி)

இதயம்,மனசு இதைப் பற்றி ஒரேயடியாகக் கவலைப்பட்ட வயது ஒரு பதினாறு
அந்த பதின்ம வயதுகளில் தான்:)
வேறு விதமான கவலை. மணியன் நாவல்களீல் வரும் கதாநாயகிகள் போல சிம்பிளாக,ஆனால் அழகாக ,ஏழையாக இருக்கலாம். ஆனால் காதல் தான் வெற்றி பெற வேண்டும் என்றெல்லாம் மதிய இடைவேளைகளில் தோழிகளுடன் பேசிக் கொண்டது உண்டு. அதுவும்
எப்போதும் மனம் தளரக் கூடாது. துணிந்து நின்று கல்லானலும், புல்லானாலும் பேசிய காலங்கள்
அவை.
திருமணம், குழந்தைகள், அவர்கள் வளர்ப்பு, பள்ளிக்கூடம், வேலை மாற்றங்கள், ஊர் மாற்றங்கள்
எல்லாம் பார்த்து திரும்பிய போது நாற்பது வயதாகி விட்டது.
நோய் என்று பெரிதாக எதுவும் அண்டியது என்று கிடையாது. தலைவலிகள்
இருக்கும்,அதைத்தவிர கவலைப் படும் அளவுக்கு ஒன்றும் இல்லை. அம்மா
கவனமாக நன்றாகப் பேணி வளர்த்த வயிறு.
அதை எவ்வளவு கவனிப்பில்லாமல் விட்டு இருக்கிறேன் என்பது ஒரு சாயந்திர வேளையில் தெரிந்தது.
பெரியவனின் பள்ளி விழா. பெற்றோர்களுக்கும் அழைப்பு உண்டு. இங்கே இதோ நாரத கான சபாவில்
நடக்கிறது.
இருக்கையில் அமர்ந்து கலை நிகழ்ச்சிகளைக் கவனிக்கு மகிழ்ந்து கொண்டிருந்தபோது அந்த முணு முணு வலி ஆரம்பித்தது.
நடு முதுகில் வலி.
அலட்சியம் செய்ய முடியாத அளவுக்கு வளர்ந்ததும் உட்கார முடியாமல்
எழுந்து வீட்டுக்கு நடந்து வந்துவிட்டேன். ஏதோ ஒரு இனம் புரியாத பயம்.
வியர்வை,படபடப்பு இவை சேர்ந்து கொண்டதும் அரைகுறை ரீடர்ஸ் டைஜ்ஸ்ட் அறிவு
என்னைக் கிலி கொள்ள வைத்து உடனே தேவகிக்கு(ஹாஸ்பிடல்) விரைந்து விட்டேன்.
ஏதாவது இதயம் சம்பந்தப் பட்டதாக இருந்தால்??
ஒருவரும் வீட்டில் இல்லை.பள்ளிகளிலிருந்து வரவில்லை.
தங்க சிங்கத்தையும் எதிர்பார்க்க முடியாது, அவர் ஏதோ கூடுவாஞ்சேரியிலோ,
ஊரப்பாக்கத்திலோ ஏதாவது லாரியைப் பிரித்துப் போட்டு மேய்ந்து கொண்டிருப்பார்.
மொபைல் போனெல்லாம் கிடையாது.
அப்பா அம்மாவைப் பயமுறுத்த மனதில்லை.
அங்கே மருத்துவமனியில் என் வலி பற்றி சொன்னதும் உடனே
ஸ்ட்றெட்சரில் படுக்க வைத்து
ரத்த அழுத்தம் பார்த்து அது எங்கேயோ உயர்மட்டத்தில் உலாவிக் கொண்டிருப்பதாக அங்கே இருந்த டியூட்டி டாக்டர் சொன்னதும்
இன்னும் பயந்து, ஏகத்துக்கு முழித்து சினிமாவில் வரும் வேண்டாத சீன்கள் எல்லாம் நினைவுக்கு வர,
அட ராமா சங்கிலி, வளையல் எல்லாம் பத்திரப்படுத்திப் பெண் கல்யாணத்துக்கு உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள் என்று எழுதி வைக்காமல் வந்தோமே
என்றேல்லாம் நினைவு ஓடுகிறது.
மூக்கில் ஆக்ஸிஜன் மாஸ்கும் வைத்ததும் கற்பனை அதீததிற்கு ஓடி விட்டது.



பிறகு நடந்ததெல்லாம்
கொஞ்சம் ஞாபகப் படுத்திக் கொண்டு மசாலாவும் சேர்க்க வேண்டி இருப்பதால்,
அடுத்த பதிவில் பார்க்கலாம்.:))





Sunday, October 21, 2007

எங்கும் எப்போதும் வெற்றி

கொலு இருந்த இந்தப் பத்து நாட்களும் பரபரப்பாக, வரவும் செலவுமாக,
சந்தோஷச் சந்திப்புகளாக,பாடல்களும் பக்தியும்

நட்பும் உறவும் பாரபட்சமில்லாமல்
பாசம் கொண்டாடிவிட்டோம்.
ஆண்டாள் மார்கழியில் ''கூடி இருந்து குளிர்ந்தேலோ ''
என்றாள்.
இந்தக் கொலுவின் போது ,அது என்னவோ தனி உற்சாகம் தான். எங்கள் வீட்டுக்கு பத்திரிகைகள் போடும் பையன்
கல்லூரியில் பி.பி.ஏ படிக்கிறான்.
கொலுவிற்கு அவன் கொண்டுவந்து கொடுத்தது அழகான தோரணங்கள்.அவன் வீட்டிலும் நவராத்திரி !!அங்கே அலங்காரத்துக்காகச் செய்தானாம்.
இன்னும் பூக்காரப் பெண். ஸ்பெஷல் பூக்கள் சப்ளை.
இன்னும் நேரம் காலம் இல்லாமல் பந்து தேடும் சாக்கில்
கிளுகிளு சிரிப்போடு வந்து போகும் சின்ன அனிருத்,அஜய்,சாக்க்ஷி எல்லோரும் சந்தோஷத்தையே
கொடுத்தார்கள்.

சுண்டலுக்கு நாங்கள் பாடிய காலம் இல்லை இது.
''நாட் இண்டரஸ்டட்''
என்ன புதிதாக வந்து இருக்கு? இதுதான் கேள்வி:)
எங்க வீட்டில் சாமி பொம்மைகளே அதிகம் என்பதால்
'தாத்தா புதிசா ஒண்ணும் மரபொம்மை செய்யலியா'னு இன்னோரு கேள்வி.

ஆகக்கூடி இப்படியாகத்தானே நிறைவடைந்த நவராத்திரி
நம் அனைவருக்கும் எப்போதும் வாக்கு வன்மையும்,
மனதில் உறுதியும் விஜயலக்ஷ்மி கொடுப்பாள், கொடுக்க வேண்டும்.



நம் இணையத் தாரகைகள் மேலும் மேலும் ஒளிசேர்த்து மேன்மையோடு திகழ வேண்டும்.
வாழ்த்துக்களுடன்..








Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Thursday, October 18, 2007

கொலு இந்த வருடம் , போட்டோக்கள்

கொலுன்னு சொல்லியாச்சு.
வந்தவங்க யாருன்னு சொல்லணும்.
மேலே படத்தில இருப்பவங்க எல்லாம் வந்து கௌரவிச்சாங்க.
நம்ம வீட்டுக்கு இல்லை, இன்னொருத்தர் வீட்டுல.
அப்புறம் சுண்டல் இல்லாத கொலுவானு சில பேரு மூக்கு மேல கையை வச்சதால, அதையும் சுட்டுப் போட்டுட்டோங்க.
ரொம்ப நன்றிங்க.



























Posted by Picasa

0

Sunday, October 14, 2007

கொலு நாட்கள்

முன் குறிப்பு;

இங்கே இருக்கும் கரடியும்,குதிரையும் எங்கள் வீட்டு சிங்கம் செய்தது.
நல்லா இருக்குனு சொல்லிடுங்க:))

மற்ற இரண்டு படங்களூம் கொலு 2005 சென்னை.

இப்போப் பதிவுக்குப் போகலாம்.

வேற ஒண்ணும் இல்லை. இங்கே வந்ததுல இருந்து நிறைய பொதிகை நிகழ்ச்சிகளைப் பார்க்கும் சந்தர்ப்பம்,

வழக்கம் வந்துவிட்டது.

இப்போதும் நிறைய வளப்பமும் ஆரோக்கியமும் கொண்ட பசு மாடுகளுக்கு நடுவில் நின்று கொண்டு



பன்றி, முயல் வளர்ப்பு பற்றிய நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டுதான் எழுதுகிறேன்.

1551க்குப் போன் செய்தால் விவசாயம் பற்றின எல்லாத் தகவல்களும் கிடைக்கும்னு முடித்துவிடுவாங்க.

அப்புறம்தான் பகவத்கீதை சொற்பொழிவு.

கீதைத் தத்துவம் புரிந்துகொண்டு(அப்போதைக்கு)

ஞானம் பெற்று அப்புறம் காற்றில் விட்டுவிட்டு இட்லி சாப்பிடப் போவதும் தினப்படி வேலைகள்.



ஆனால் அதற்காகக் காலையிலும் மாலையிலும் காது குளிர நல்ல வார்த்தைகள் கேட்பதை விடுவதில்லை.என்றாவது ஒரு நாள் தெளிவு பிறக்காதா என்ற ஆவல்தான்.:)))

இதனால்தான் ஏதாவது ஒரு பதிவிடணும் என்று நினைக்கும்போது முன்னுரை,டிஸ்கி, விளக்கம் எல்லாமே ஒரு பதிவாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது.:))



நேயர்களே,.... சக பதிவர்களே... இதற்கு மேல் எழுதப் போவது இன்னோரு கொசுவர்த்திப் பதிவு.

ஸோ, எச்சரிக்கையாக இருப்பவர்கள், மன உறுதி இல்லாதவர்கள் வேறு பதிவுக்குப் போய் விடுங்கள்:))



இதற்குப் படங்களாகப் போட்டு இருப்பது இப்போதைய கொலு என்றாலும்,

நான் சிறப்பாக நினைப்பது பிறந்த வீட்டுக் கொலுவைத்தான். பெற்றோரும், குழந்தைகளுமாய் உழைத்துக் கொலுப்படி நிர்மாணம் செய்யப்படும்.

அம்மாவின் கையழகில் அந்த 22ஆம் எண்,சன்னிதிதெரு வீடு புதுப் பொலிவு பெறும். ஒரே ஒரு பெரியதெருவைக் கொண்ட அந்தத் திருமங்கலம் ஊரில்,

ஒரு முனையில் பஸ் நிலையம், ஆனந்தா திரையரங்கு.

மறு முனையில் மீனாட்சி அம்மன் கோவில்.

நடுவில் இரு பக்கங்களிலும் முறையே ஒரு உடுப்பி ஹோட்டல்,ஒரு தபாலாபீஸ், ஒரு ஜவுளிக்கடை, ஒரு அரசமரத்தடிப் பிள்ளையார் இவ்வளவும் அடங்கும்.



கிளைபிரியும் இடங்களில் வலது பக்கம் ஒரு குட்டித் தெருவும் இடதுபக்கம் ஒரு ச்சின்னக் கடைத்தெருவும்

உண்டு. அங்கு முதலாக ஒரு பிரசித்தி பெற்ற வேர்க்கடலைக் கடையும் இருக்கும்.

ஒரு ஐந்து பைசாவுக்கு இரண்டு எட்டு வயது வயிறுகள்

நிரம்பிவிடும். கடலைமணிகளும் பெரிதாக இருக்கும்.
வலது பக்கம் போகும் தெருவில் ஒரு ஐய்யனார் கோவில் இருந்ததாக நினைவு. அதற்கு எதிர்த்தாற்போல் ஒரு பெரிய சுற்றுச்சுவர் இல்லாத கிணறு ஒன்றும் இருக்கும்.

தினம் ஆதாரப் பள்ளிக்குப் போகும்போது அந்த இரண்டு இடங்களையும் ஓடியே தாண்டிவிடும் வழக்கம் எங்களுக்கு.
இப்போது நினைத்தால் கூடக் கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது. அங்கே(கோவிலுக்குள் இருக்கும் )கொடுக்காப்புளி மரத்தின் பழங்கள் அப்படியே இன்னும்
நாவின் நினைவில் இருக்கிறது
அந்தக் கிணற்றில் கோட்டி இருப்பதாகவும் சொல்லுவார்கள்.





எனக்கும் என் தோழிகளுக்கும் மிகப் பிடித்தமான கொலு இருக்கும் ரஜினியின் வீடு இந்த இரண்டு அட்வென்சர் ஸ்பாட்ஸ் தாண்டிதான் போகணும். அவங்க வீட்டில 11 படிகள் நிறைய மிகப் பெரிய அளவில் பொம்மைகள் வீற்றிருக்கும். அவர்கள் சொந்த ஊர், தென்னாற்காடு. பண்ருட்டியில் செய்த வளப்பமான,செழுமை கொஞ்சும் ராமர்பட்டாபிஷேகம், ஆலிலை கிருஷ்ணன்,செட்டியார் கடை, மலையப்பன், வெள்ளைக்கார துரைகள்,தேர்கள் இன்னும் நிறைய வகைகளில் பொம்மைகள் வண்ணமயமாக இருக்கும்..





அதைப் பார்த்துவிட்டு நம்ம வீட்டுக்கும் அது போல வாங்க வேண்டும் என்றால்,அப்பா மாட்டேன் என்று மறுப்புச் சொல்ல மாட்டார். நாமே அதைவிடப் பிரமாதமாகச் செய்யலாம்மா என்று, உறுதி அளித்து அதை நிறைவேற்றுவார்.
முதலில் வாங்குவது கலர்க் காகிதங்கள் அதில் இரண்டு நாட்களில் தோரணங்கள் உருவாகிவிடும்.
அடுத்தப் ப்ராஜெக்ட் தெப்பக்குளம். அப்பாவுக்குக் கிடைத்தது ஒரு பெரிய பிஸ்கட் டின். அதை ஒரு ஒரு உப்புத்தாளால் தேய்த்து பளபளவென்று ஆக்கிவிட்டார்.
அப்புறம் என்ன!! சுற்றிக் காவியும் சுண்ணாம்பும் அடித்தால் குளம் ரெடி:)) வாசலில் பொம்மைகள் விற்ற மதுரைக்காரரிடம் ஒரு ஸ்ரீரங்கநாதரும், தெப்பக் குளத்தில் ஓட ஒரு குட்டிப் படகு,படகோட்டியோடு கிடைத்தது.

அடுத்தாற்போல குளத்தைச் சுற்றிப் பார்க் வேணுமே. சுற்றுப்புறத்தில யாரும் வீடு கட்டவில்லை. எல்லாம் பழைய வீடுகள்தான்.
இருக்கவே இருக்குக் கிணத்தில தூறு வாருகிற தொறட்டிகரண்டி. புரட்டாசி மாதம் மழைக்குமுன்னால கொஞ்சம் தண்ணீர் குறைவாகத்தான் இருக்கும். வாளியை இறக்கினாலே மண்ணும் தண்ணீருமாகத்தான் வரும்.

அதனால வண்டல் மண்ணும் கிடைத்து கடுகு,கேழ்வரகு போட்டாச்சு. குட்டிச் செடிகளும் முளைத்து நந்தவனமும் ஆச்சு. நடுவில ப்ளாஸ்டிக் நாற்காலிகள்,மேஜைகள், இதைதவிர தீப்பெட்டிகளால் உருவான பீரோக்கள், சாக்கலேட் சுற்றிவந்த ஜிகினாப் பேப்பரில் உருவான பெண்கள், பழைய கிராமபோன் இசைத்தட்டுகளில் வரையப்பட்ட பூக்கள் இன்னும் எத்தனையோ அம்மா அப்பா கைகளில் மல்ர்ந்த அழகு உருவங்கள் அந்த மூன்று
படிகளை அலங்கரிக்கும்.
செலவில்லாத கொலு.
காலையில் எழுந்திருக்கும் போதே இன்று புதிதாக என்ன செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு கொலு பக்கத்தில் உட்கார்ந்து அசை போட்டுவிட்டு, பொம்மைகளைத் தொடாமல் தள்ளி நின்று அழகு பார்த்து, மாலை வந்ததும், வீட்டுக்குக் கொலு பார்க்கவரும் சிறுவர் சிறுமியரின் அருட்புரிவாய் கருணைக்கடலே, எனையாளும் மேரி மாதா, பாடல்கள் எல்லாம் கேட்டுஊர்சுற்றல் முடிந்து
நம் வீட்டுச்சுண்டலையும் சாப்பிட்டு ஒவ்வொரு பொம்மைக்கும் குட்நைட் சொல்லாத குறையா பார்த்துவிட்டுப் படுக்கப் போகும் ஆனந்ததிற்கு ஈடேது??
சரஸ்வதி பூஜை அன்று படிக்கவேணும்கிற ஆர்வம் கட்டுக்கடங்காமல் போகும்:)அன்ரு இரவு சாஸ்திரத்திற்கு ஒரு பொம்மையை அம்மா படுக்க வைத்துவிடுவார்கள். படு சோகமாக இருக்கும்.
ஒரு நாள் தான். விஜயதசமி அன்று பள்ளிக்குப் போய் விட்டால் தீபாவளிப் பட்டாஸ் பேச்சில் வந்துவிடும்.

கொலுவுக்கு வந்ததற்கு நன்றி மக்களே.:))















Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Friday, October 12, 2007

நவராத்திரி வாழ்த்துக்கள்

Posted by Picasaஅனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துக்கள்.
அன்னையர்கள், சினேகிதிகள், சகோதரிகள்
நம் வலைப்பதிவு நண்பர்கள் எல்லோரும்
நன்மை பெற்று, வாழ்க்கையில் வெற்றிகள்
அடைந்து,
அன்பும் ஆதரவும்,அணைப்பும் பெருகும் குடும்பங்களோடு
சிறப்பாக வாழ அன்னை பராசக்தி
அருள்வாள் என்று நம்புகிறேன்.
அவள் நம்மைக் காக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

Friday, October 05, 2007

இணையத்தில் நட்புகளுடன் இருப்பது

சஷ்டாஷ்டகம் எனும் வார்த்தை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
நானும் இது ஏதோ முருகன் சம்பந்தப்பட்டது, பக்திமாலை, ஆறு ஸ்லோகம் அடங்கியது
என்று நம்பிக் கொண்டிருந்தேன்.
பெரியவர்கள் வீட்டில் ஒருவரோடு ஒருவர் பேசும்போதும், திருமண முயற்சிகள் நடக்கும் போதும்
ஷஷ்டாஷகம் இருக்கும் போல இருக்கே என்பதைக் குறிப்பிடும் போதுதான்
ஓஹோ இது மனிதர்கள் இடையே இருக்கும் விஷயம் என்று புரிந்தது.
நம்ம ஜோதிட ஆசானைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.அவர் கட்டாயம் நல்ல விளக்கம் வைத்து இருப்பார்.
அதைத்தவிர சந்திராஷ்டமம் வேறயாம்.
எங்க மாமியார் சொல்லுவாங்க. இன்னிக்கு எனக்குச் சந்திராஷ்டமம் நான் நிறையப் பேசக் கூடாது என்று,
எனக்கு இப்போது உண்மையாகவே இதைப் பற்றிக் கவலை வந்துவிட்டது.
நாமோ நிறைய எழுத்துக்களைப் படிக்கிறோம்.
நாமும் எழுதுகிறோம். எழுதியவர்களுக்குப் பின்னூட்டம் இடுகிறோம்.
நமக்குப் பின்னூட்டம் இடுபவர்களுக்கும் பதில் சொல்கிறோம்.
நகைச்சுவையாகச் சொல்வதாக நினைத்து எதையாவது எழுதிவிட்டு அவஸ்தைப் படுகிறோமோ என்று சில சமயம் தோன்றுகிறது.
நல்ல நண்பர்களை இழந்துவிடக் கூடாது இல்லையா.
எழுதுவது ஒரு அற்புதமான கலை.
பேசுவதும் அதைப் போலத்தான்.
சில சமயம் நாம் சொல்ல வரும் விஷயங்கள், பாதை மாறிச் சிலபேருக்கு வேறு விதமாகப் புரிகின்றன.
நமது நெருங்கிய உறவுகளுக்கேச் சில சமயம் நாம் என்ன சொல்ல வருகிறோம் என்று புரிவதில்லை.
அப்படிப் பார்த்துக் கொண்டே போய்த்தான் சிலசமயம் பேசாமலே இருந்த நாட்களும் உண்டு
அத்ற்குப்.
பலன் ,,மன அழுத்தம் அதிகரிப்பதுதான்.
ஆனால் நாம் பேசாமல் இருப்பதால் யாரும் அதைப் பற்றிக்கவலைப் படப் போவதில்லை.
அது சரியான அணுகு முறையும் இல்லை.
பேச வேண்டும், நாம் பேசுவது சரியான முறையில் புரிந்து கொள்ளப் பட வேண்டும், இதெல்லாம் unwritten rules.

என் வாழ்க்கையில் என் பெற்றொர்களோ, என் புகுந்த வீட்டில் என் மாமியோரோ சில சமயம் மௌனம் அனுஷ்டிப்பதைப் பார்த்து இருக்கேன்.
அப்பாவிடமோ, அம்மாவிடமோ,மாமியாரிடமோ கேட்கும்போது, '' பேசுவதால்'' சில துன்பங்கள் வரும்போது
மௌனமே சிறந்தது என்று பதில் வரும்போது ,
என் மனம் வருத்தப் படும்.
நாம் ஏதாவது சொல்லி இவர்களை வருத்திவிட்டோமோ என்று.!!
''


''
எஃபெக்டிவ் கம்யூனிகேஷன்''
என்ற ஒரு மேலாண்மை வகுப்பு ஒரு வாரம் போய்ப் படித்து வந்தேன்.(ஒரு முப்பது வருடங்களுக்கு முன்னால்)
அது பற்றி இப்போது சில தாள்களே ஒரு அனுபவமாகக் கற்றதற்கு அடையாளம்.
எந்தப் பாடமும் அனுபவத்தில் பயன் படுத்தப் படாவிடில் அதனால் பயன் என்ன என்று தோன்றுகிறது.
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
கனியிருப்பக் காய் கவர்வது தவறு,
யாகாவராயினும் நா காக்க.....
இதெல்லாம் நாம் கற்ற, கற்றுக்கொண்டே வளர்க்கப் பட்ட வாக்கியங்கள்.

இருந்தாலும் இணையத்தில் நல்லமுறையில் எழுதிப் பிழைத்திருப்பது எப்படி என்றும் ஒரு'' கோர்ஸ்''
எடுத்தால் என் போன்ற இணைய சிறார்களுக்கு(!!!!!!) நன்மை பயக்கும் என்று நம்புகிறேன்.
மேலான இந்தத் தகவல் தொடர்பு சாதனத்தைப் பயன்படுத்தும் முறைகள் வரையிறுக்கப் பட்டால்,
கற்றுக் கொடுக்கப் பட்டால் உண்மையாகவே சிறப்பாக இருக்கும்.
கருத்துக்களைச் சொல்லுங்கள் நண்பர்களே,நண்பிகளே.

Monday, October 01, 2007

மகளிர் மாநாடு, எலியட்ஸ் பீச்....

முதல்ல டிஸ்கி. அப்புறம் தான் செய்தி.
இந்த மாதிரி பதிவுத் தலைப்பும் கொடுத்து எழுதச் சொன்னவங்க நூசிலாந்தில இருக்காங்க.
இந்தப் படங்களுக்கும் நாங்க சந்திச்சதுக்கும் சம்பந்தமில்லை. சிப்ஸ் சாப்பிட்டோம். அது உண்மை ,மத்ததெல்லாம் சும்மா சுட்ட படங்கள்

நுனிப்புல் பதிவுக்காரங்க சென்னை வந்துட்டுப் போறாங்க. ஒரு மயில் போட்டாங்க நாம பெண்கள் மட்டும் ஒரு அரை மணி நேரம்
சந்திக்கலாமே என்று. அதுக்கென்ன,,,
லாமேனு ''சம்மதிச்சுட்டேன்.
வேற யாரு வருவாங்கனு தெரியலை. பார்த்தால் அடுத்தாப்புல பத்திரிகைக்கார அம்மாவும், கவிதாயினியும்,மலர்வனம் அம்மாவும்,நிர்மலமா சிரிக்கிறவங்களும் வரோம்னு சொல்லிட்டாங்க,.

சரி எங்க பார்க்கலாம்னு அடுத்த கேள்வி.சாப்பாடே நமக்கு நினைப்பு அதால(நான்) சரவணபவன்னு சொல்லிட்டோம்.

முருகன் இட்லியும் போட்டிக்கு வந்து(அங்கே) சட்டினி ஓடுவதாகத் துளசிதள அம்மா சொன்னதால், அந்த நினப்பை அப்படியே விட்டோம்.

நுனிப்புல்கார(ஸ்வீட்) அம்மாவுக்கு ஏகப்பட்ட வேலை. கையில அவங்களுக்கு மொபைல் போன் கூட இல்லை.
அதால ஒரு சஸ்பென்சோட
பெசண்ட் நகர் பீச்சாண்ட கண்டுக்கலாம்னு ஒரு மனசா(????) முடிவு செய்தாச்சு.

பத்திகைக்கார அம்மா வீட்டுக்கு வழி கேட்டுகிட்டு(நாம தான் கிழக்கு,இடது,வலது எல்லாப் பக்கமும் குழப்பறவங்களாச்சே) ஒரு துணைக்கு நம்மளோட வாரியளானு கேட்டொம்.
கவலைப்படாதெ வல்லி, நான் இட்டாண்டு போறேன்னுட்டாங்க.
அவங்க வீட்டுக்காப் போயி, நல்ல சூடா ஒரு காப்பியும் குடிச்சுட்டு,(என்னவோ மாநாட்டில தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்துப் போற நினைப்புதான்:))) )

அப்படியே பீச்சாண்ட போயி நிழலா ஒரு இடத்தில உக்காந்துகிட்டோம்.
எங்களுக்குத் துணையா காக்கா,குருவி மாதிரி
மாதிரி கொஞ்சம் என்னைவிட வயசானவங்க
பக்கத்தில உட்கார்ந்துகிட்டு எங்களயே பார்த்துகிட்டு இருந்தாங்க.
நானும் போற வர வண்டி எல்லாம் பார்த்தேன். ஒரு தேங்கா மாங்காக் காரனும் பக்கம் வரலை.
பத்திரிகைக் கார அம்மாகிட்டப் பதிவு எப்படி எழுதலாம்னு பாடம் கொஞ்சம் கேட்டுக் கிட்டேன்,


சரி நினைச்சாக் கவியா பொழிவாங்களே அவங்க வராங்களான்னு பார்த்தோம்.
வந்த்ட்டாங்கப்பா. அட இன்னா எளிமை!!. இவங்க நாலு புத்தகம் பப்ளிஷ் பண்ணி இருக்காங்களாம்.
நம்ம பொதிகைல கூட இவங்களைப் பார்த்திருக்கோமேனு உஷாராயிட்டேன். ஓஹோ நாம இருக்கிறது சீனியர் (பதிவு)மங்கைகள் கூட்டத்திலனு தெரிஞ்சு போச்சு.

வந்த கவிதாயினி மூலமாத் தெரியுது, நம்ம பத்திரிக்கார அம்மாவும் ஒரு புத்தகம் விகடன்ல அதுதாம்மா நம்ம ஆ.வி. அதில போடறாங்களாம்.
அது ஆச்சா, இன்னோரு தடவை திறந்த வாயை மூடறத்துக்குள்ள நிரூ அம்மாவும் வந்துட்டாங்க. பிறகு
மலர்வனம் அம்மா. அவங்களுக்கு அறிமுகமே வேண்டாம்.
பேருக்கேத்த மாதிரி சிரிச்ச முகம்.
பெரிய கம்பனில வேலை செய்யறவங்க. நானு என்ன பேச. அவங்க பேசறதைக் கேட்டுக்கிட்டு, கவிதாயினி கொடுத்த
வறுவலை மென்னுக்கிட்டு இருந்தேன்.

சர்ருனு வந்த காரில புதிசாப் பத்திரிகை அறிமுகம் செய்யற நுனிப்புல் அம்மாவும் வண்ட்டாங்க.
எல்லாருமா மணலாண்ட போயி உட்கார்ந்து,
நலம் விசாரிச்சு,சமுதாய முன்னேற்றத்துக்கான ஆவலாதிகளைப் பகிர்ந்து கொண்டோம்.
எப்படி அரைக் கிலோ ஸ்வீட் சாப்பிட்டாலும் ஸ்லிம்மா இருக்கலாம்னு நுனிப்புல் அம்மா சொல்லிக் கொடுத்தாங்க.

திம்னு இருட்டுதேனு ஒரு பார்வை பின்னால பார்த்தால்....அப்படி ஒரு கறுப்பா மேகம் வந்திருக்குப்பா.
நேத்தித்தானே கண்ணனைப் பத்தி எழுதினோம் இன்னிக்கு பீச்சாண்ட நட்ட நடு வெளில மாட்டிக்கிட்டோமே சாமினு அழுவாச்சியா வந்திடுச்சி.
அத்தனை சீனியர்களும் என்னைப் பாதுகாப்பதாக உறுதி அளித்தாலும் நம்ம , இடி மின்னல் போது சீன் காட்டுவது அவங்களுக்கு நல்லது இல்லைனு தீர்மானஞ்செய்து
சூரத்திலிருந்த ஸ்பெஷலா வந்த இனிப்பை மட்டும் ஒரு பிடி பிடிச்சுட்டுக் கிளம்பிட்டோம்பா.

போற வழியெல்லாம் நினைச்சுட்டே போனேன் ,ஹ்ம்ம் என்னவெல்லாம் அறிவுரை கிடச்சிருக்கும்,,இப்படி வாங்கிக்காம வந்துட்டமேனு....:(((
இன்னோரு மாநாட்டில (இப்ப) விட்டதைப் பிடிச்சுட வேண்டியதுதான்:)))))

மாநாட்டுக்கு வந்தவங்க,

நுனிப்புல் உஷா....நன்றிம்மா
அருணா ஸ்ரீனிவாசன்......ர்ர்ர்ர்ர்ர்ர்ரொம்ப நன்றிப்பா
மதுமிதா........உண்மையாவே சினேகிதமாயிட்டாங்க.
நிர்மலா.....சிரிக்கவே வந்திருக்காங்க, இன்னும் கடி ஜோக் சொல்லி சிரிக்க வைப்பாங்க:)))
(மலர்வனம்) லக்ஷ்மி......இன்னும் நிறைய விமரிசனங்கள் எழுதப் போறாங்க. நாமும் படிக்கப் போறோம்.
எல்லாருக்கும் நன்றி. என்னை அழைத்ததற்கும்,
பழைய பள்ளி நாட்களை நினைவுறுத்திய ஒரு இனிய அற்புதமான மாலை நேரத்திற்கும்.

இதைப் பதிவிட உசுப்பிவிட்ட துளசி கோபாலுக்கும் மகா நன்றி.





நமக்கு என்ன ,,சொன்ன இடத்துக்குத் தப்பாம போயிட வேண்டியது. அவ்வளவு தானெ.
போயிட்டோம்.









Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal