Blog Archive

Wednesday, April 25, 2007

முதுமை வரம் நல்லதாக இருந்தால் சாபமில்லை

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portalஅன்பு ,
கண்மணி,இதுதான் வயதுக்கு உண்டான சிந்தனை.
நான் குறிப்பிட்டது, முதுமைக்குச் சேர்த்துவைப்பது பற்றி.எங்கள் பெற்றோரும் அந்த மாதிரித் தான் இருந்துவிட்டுப் போயும் சேர்ந்துவிட்டார்கள்.
அவர்களுக்கு சொல்பமே என்றாலும் பென்ஷன் என்று ஒன்று வந்தது.எங்களை மாதிரித் தனியார் இடத்தில் வேலை செய்து ரிட்டையர் ஆனவர்களோ, இல்லை தொழில் செய்து ஓய்வெடுப்பவர்களோ,ஒரு sizable amount பத்திரப் படுத்திவைக்கவில்லையென்றால் பட வேண்டிய அவஸ்தை கொஞ்சம் இல்லை.நான் நேரில் பார்த்ததினால் சொல்கிறேன்.நல்ல புத்திர பாக்கியம் இருக்கலாம்.ஆனால் ஓடுகின்ற வாழ்க்கையில் யார் யாரைக் குற்றம் சொல்ல முடியும்.முதியோர் இல்லத்திற்கு யாரையும் அனுப்பும்படி நான் சொல்லவில்லை.
இன்று நீ நாளை நான் என்கிற வாக்கியத்தில் இன்று நானாகத்தான் நான் இருக்கிறேன்.எனக்கும் என் குழந்தைகள் எங்களைச் சரியாகக் கவனித்துக்கொள்ளுவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.அதையும் மீறி சுதந்திரமாக இருக்கவேண்டும் என்று நான் நம்புவதில் என்ன தப்பு.நோயில் வீழ்ந்த ஒரு (புகுந்த வீட்டு)பாட்டியையும் கவனித்துக் கடைசிவாய்த் தண்ணீரையும் விட்டவள் நான்,.அந்தப் பாட்டியும் பதினாறு பெற்றவள்தான்.எல்லாவிதத்திலும் உயர்ந்த மனுஷி.அவளுக்கு வாய்த்ததும் சுலபமான சாவு இல்லை.
நோயும் மரணமும் நம் கையில் இல்லை.அதைத்தான் வாங்கி வந்த வரம் என்று சொன்னேன்.

Tuesday, April 24, 2007

162,அப்போதைக்கு இப்போதே...
வெகு நாட்களுக்கு முன்னால்,
ஆலமரம் என்று ஒரு கதை படித்த நினைவு.
அதை அப்போது பிரபலமான எழுத்தாளர்களில் ஒருவரான கிருஷ்ணாவோ
அல்லது அனுத்தமாஎனும் புனைபெயரில் எழுதும் பெண்மணி யோ அதைக் கவிதையாக வடித்து இருந்தார்.
ஒரு தொண்ணித்திநான்கு வயதான பாட்டிம்மா.
தானும் தன் கணவரும் சேர்ந்து வாழ்ந்த,
ஆண்ட, புத்திரச் செல்வங்கள் பெற்ற
ஒரு பெரிய வீட்டின் திண்ணைக்கு வந்துவிட்ட
நேரம்.
பாட்டி மனதார எடுத்த வானப்ரஸ்த வாழ்க்கை.
பாட்டியை விட்டு விடத்தான் வீட்டில் இருப்பவர்களுக்கு மனசில்லை.
அத்தனை அழகான குடும்பம்.
பாட்டி பெற்ற பிள்ளைக்கே எம்பதுக்குப்
பக்கம் வயதாகிறது.
அவருக்குப் பிள்ளைகள், மருமகள்கள்,
பேரன்கள்,பேத்திகள்.
இப்படி வயிறு பிழைக்கப் போனவர்களைத் தவிர பெரிய குடும்பம் அங்கே இயங்குகிறது.
பாட்டியின் வீட்டு முனையில் ஒரு ஈசன் கோவில்.
அதில் நடkகும் அத்தனை பூசை நேரங்களிலும் பாட்டி சுருங்கிய தன் சரீரத்தை எழுப்பிக் கைகளை
உயர்த்திக் கும்பிடுவாள்.
அவளுக்குத் தெருவில் போகிற வருகிற அத்தனை நபர்கள் குடும்ப விவகாரமும் தெரிந்து இருக்கும்.
தங்கள் நிலத்தில் களை எடுக்கும் நபர்,மருத்துவச்சி,
புரோகிதம் செய்பவர்
என்று அனைவரும் தோழர்கள்.
பாட்டியின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு பேத்தி.
பாட்டியைக் குளிப்பதற்காக உள்ளே அழைத்து(தூக்கி)ச்
செல்லும் ஒரு முரட்டுப் பேரன்.
இன்னும் குஞ்சுகுளுவான்களாக
ஒரு நான்கு பரம்பரையைக் கவனித்துப் பெருமை கொள்ளும் பாட்டிம்மா,
அவ்வப்போது தட்டிக் கேட்பதும் செய்வாள்.
அவளுடைய நினைவுகள் வலம் வரும் நேரங்களில் பாட்டியை யாரும் அணுக முடியாது.
வேறு உலகத்தில் உலாவிக் கொண்டிருப்ப்பாள்.
ஒரு நாள் காலையில் பாட்டியின் சரித்திரமும் பூர்த்தியாகிறது.
இதற்கு நேர்மாறாக இன்னொரு கதை 'யாருக்கு வேணும் இந்தப் பூசணி' என்ற
சிறுகதை.
திரு.தி.ஜானகிராமன் எழுதியது.
இதில் வரும் அம்மா தான் பெற்ற செல்வங்களிடமே அவதிப் படுவாள்.
சுவீகாரம் கொடுத்த மகன் உதவி செய்வான்.
கடைசியில் தான் இன்னும் ஏதாவது அவமானம் சம்பாதிக்க வேண்டுமோ என்ற நிலையில் ஒரு மாட்டுவண்டிப் பயணத்தில் உடலைத் துறப்பாள்.
இந்த இரண்டு கதைகளும் என்னை வெகுவாக ஆக்கிரமிக்கும்.
வயதான பிறகு ஏற்படும்
மன உளைச்சல் தொந்தரவுகளுக்கு யார் காரணம்?
சரியாகத் திட்டம் போடத் தெரியாத பெற்றோர்களா.
இல்லை சமுதாய அமைப்பு மாறியதாலா..?
இரண்டுமேதான்.
சமூகம் புதிதாக மாறவில்லை.
பாசமாக இருக்கும் பிள்ளைகளும்,
கவனிப்பு கொடுக்காத பெற்றோர்களும் அப்போதும் இருந்தார்கள்.
அதே போல பாசத்தயும் பணத்தையும் கொட்டிவிட்டு
பின்னால் இரண்டிற்குமே ஏங்கும்
பெற்றொர்களும் இருக்கிறார்கள்.
வாங்கி வந்த வரம் என்று சொல்வதை
நான் நம்புகிறேன்.
'நெஸ்ட் எக்' என்பது போல முதுமைக்காகப் பிறர் கையை எதிர்பாராமல்
சேர்த்துவைத்துவிடுதல் நலம்.
எங்கள் வீட்டுப் பாட்டிகளில் ஒருவர் இருந்த நிலபுலன்களில் இருந்து எல்லா சொத்துக்களையும் அழகாகப் பிரித்து,
தனக்கும் கொஞ்சம் வைத்துக் கொண்டு
88 வயது வரை பந்தங்களோடு
சுகமாக இருந்து விட்டுப் போனார்.
இன்னொருவர் அவர் காவேரித் தண்ணீர்
பாயும் ஊரைச் சேந்தவர்.
இன்னும் இருவர் தாமிரபரணி
ஊர்க்காரர்கள்.
ஐந்தாறு பிள்ளைகள் நான்கு மகள்கள்
என்று பெரிய சம்சாரம் பெற்றும்
தனக்கு என்று ஒன்றும் வைத்துக் கொள்ளாமல்
மன வருத்தமும் அடைந்து பின்
தெளிந்து மறைந்தனர்.
வாத்தியார் ஐய்யாவைத் தான் கேட்க வேண்டும்.
முதுமை வரமா,
கடனா என்று.
யோசித்து வைத்துப் புத்திசாலியாக இருக்க முயற்சி செய்யலாம்.
உடல் நலனைப் பேணி தகுந்த விதத்தில்
ஆரோக்கியமாக இருக்கலாம்.
சரியான பாட்டையில்
நிதானமாகப் போய் இறைவனிடம் சேர வேண்டும்.
முற்பகல் செய்யும் நல்முயற்சி பிற்பகலில் காக்கும் என்றே நம்புகிறேன்.Saturday, April 21, 2007

161. எத்தனை கோடி பணம்

வழக்கமான கதை.

ஐம்பதுகளில் வெளிவந்த பல ,
குடும்பம் சம்பந்தப்பட்ட சினிமாக்களில்
'அன்பு எங்கே'யும் ஒன்று.

அதற்கும் ஒரு முன்னோடியாகக் கட்டாயம் ஒரு
இந்திப் படம் இருந்திருக்கலாம்.

ஒரு குடும்பம்
அண்ணன்,அண்ணி
கல்யாணம் ஆகாத தம்பி

அங்கே வேலைக்குச் சேரும் ஒரு பெண்.

குடித்து விட்டு வீட்டுக்குத் தள்ளாடியபடி வரும்
தம்பியாக
எஸ்.எஸ்.ஆரும்,
பணி புரியும் பெண்ணாகத் தேவிகாவும்
நடித்ததாக நினைவு.
இந்தச் செய்தி எல்லாம் பேசும்படம்
என்ற புத்தகத்தைப் படித்துத் தான் நாங்கள் தெரிந்து கொள்வோம்.

1958இல் வந்த படமாக இருக்க வாய்ப்பு.

ஜமுனா ராணி பாடிய ' மேலே பறக்கும் ராக்கெட்டு'
மிகவும் பிரபலம் அப்போது.
அத்துடன் கூடவே இந்தப் பாடலும்

இனிமைச் சாரலாக நினைவு வருகிறது.

அறிவு போதிக்கும் பாடல்கள் நிறைய அந்த நாட்களில் வெளிவரும்.
பட்டுக்கோட்டையார் பாடல்கள் ,
உடுமலை நாராயண கவி,
இவர்கள் எழுதி வெளிவந்த காலம்.

எப்போதுமே ரசிக்கக் கூடிய வரிகள்.

உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

பாடியவர் பி.சுசீலா.
இந்த அம்மாவுக்கு எத்தனை
நன்றி சொல்வது!!
எங்கள் இனிய நினைவுகளுக்கு இவரும் டி.எம்.எஸ் ஐயாவும் நிறைய உரம் கொடுத்து இருக்கிறார்கள்.

பாடல் இதொ.
எத்தனை கோடிப் பணம் இருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே
உத்தமமான மனிதர்களைத்தான்
உலகம் புகழுது ஏட்டிலெ-இந்த
உலகம் புகழுது ஏட்டிலே


அர்த்த ராத்திரி பனிரண்டு மணிக்கு
ஆடிக் கொண்டே நுழைவதை....
அகப்பட்டதெல்லாம் தூக்கி எறிந்து
ஆர்ப்பாட்டாங்கள் செய்வதை...
அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால்
வெட்கம் வருவது இல்லையா..
அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால் வெட்கம் வருவது இல்லையா
இல்லையா நீ சொல்லையா
இல்லையா நீ சொல்லைய்யா....(.எத்தனை கோடி)


அன்னம் இட்டுத் தாலாட்டி
ஆசையோடு வளர்த்தாள்
அந்த அன்னையரின் எண்ணம் தன்னைக்
கனவினிலே வளர்த்தே...
முன்னவர் போல் பெயரெடுத்து
முறையோடு நாளும்
முடிவு கொண்டே வாழ்ந்திருந்தாலும்
துணைபுரிவேன் நானும்
தினம் துணை புரிவேன் நானும்
தினம் துணைபுரிவேன் நானும்...(எத்தனை கோடி)

ரசித்தீர்களா:-)

Friday, April 20, 2007

சித்திர ராமன்....17...விபீஷண சரணாகதி, சேது பந்தனம்


அனுமன் கூறிய சொற்படி முப்பது நாட்களில் சீதையை
மீட்பேன் என்று
சபதம் செய்து ஸ்ரீராம,லக்ஷ்மணர்கள் மலைகள் வனாந்தரங்களில் இருந்த அத்தனை வகை வானரங்களையும் கரடிகளையும் படைதிரட்டி,
கிஷ்கிந்தையிலிருந்து
புறப்பட்டு மகேந்திர பர்வதத்தை வந்தடைய
பதினொரு நாட்கள் ஆயின.
கிட்டத்தட்ட ஒரு லட்சத்து பதினேழு
ஆண்டுகளுக்கு முன் சேது அந்த இடத்தில் இருந்ததோ.?
கரையில் ஒரு பாறையில் அமர்ந்த ராமனின் முன்னால் சமுத்திரம் பரந்து விரிந்து கிடக்கிறது.
அப்போது வானில் ஆரவாரம் எழுகிறது.
மேலே நோக்கினால் ஐந்து
அரக்கர்கள் தெரிகிறார்கள் கூப்பிய கைகளுடன்.
ராமகாதையில் சற்றே பின்னால் போனால்
ராவணின் சபையில் விபீஷணனின்
கவலையும் அவன் அண்ணனின் அலட்சியமும் தெரியும்.
விபீஷணன் மன்றாடுகிறான் அன்னையை விடுவிக்கும்படி,
ராவணன் செவி மடுக்கவில்லை.
அநீதியின் பக்கலில் இருக்காமல்
உலக உத்தமன் பாதங்களைச் சரணென,
உடுத்த உடையுடன் மனைவி,நாடு,சுற்றம் விட்டு
கிளம்பி சேதுக்கரைக்கு வந்துவிட்டான்.
அவனைக் காணும் சுக்ரீவ சேனை மிரண்டு
ஆத்திரப் படுகிறது.
ராமனுக்கு ஆபத்து வந்ததோ என்ற கவலையில் சுக்ரீவனும் மறுப்பு சொல்கிறான்.
அண்ணனை விட்டு வந்தவன் உனக்கு எப்படி நன்மை செய்வான்/?
ராமா இவனை ஏற்காதே என்கிறான்.
ராமன் எல்லோருடைய வாதங்களையும் கேட்டு விட்டு அமைதியாக நிற்கும்
அனுமனையும் பார்க்கிறான்.
அனுமன் விபீஷணனின் குண நலன்களை எடுத்துச் சொல்லிவிட்டு
ராமா நீதான் தீர்மானிக்க வேண்டும் என்று
ஒதுங்குகிறான்.
ராமன் எல்லோருக்கும் பொதுவில் பதில்
சொல்ல ஆரம்பிக்கிறான்.
இவன் அரக்கன்.
ஒரு மதிகெட்ட ராவணனின் தம்பி.
தீய செயல் புரியும் நோக்கத்தோடு வந்தாலும்,
இல்லை வேறு எந்த நோக்கத்தோடோ,
ராஜ்ஜியத்தை எதிர்பார்த்தோ
வந்தாலும் என்னைச் சரணடைந்தவனைக் காப்பது என் கடமை.
இஷ்வாகுக் குலத்தில் பிறந்தவன் நான்.
வேறு எந்தவிதத்திலும் நடப்பது இழிவு''
என்று சிபிச்சக்கரவர்த்தி கதையையும்
வனத்தில் மாட்டிக்கொண்ட ஒரு மனிதனின்
சரணாகதியை ஏற்று
அவனைப் புலியிடமிருந்து சமயோசிதமாகக் காப்பாற்றிய
குரங்கின் கதையையும் சொல்கிறான்.
சிபிச்சக்கிரவர்த்தியின் வழியில் வ்அந்த என்னிடம் இவன் சரண் புகுந்தான்.
இவனே ராவணனாக இருந்தாலும் நான் அவனுக்குப் புகல் அளிப்பேன்.
என்னை இம்சைப்படுத்துவானோ என்று நீ வருந்த வேண்டாம் சுக்ரீவா
என் சுண்டுவிரல் நுனியால் இத்தனை ஆயிரம் அரக்கர்களையும் ஒழிப்பேன்.
சரணடைந்தவனை ரக்ஷிப்பது என் தர்மம்''
என்று சொல்லி அவனை அனுப்பி
விபீஷணனை அழைக்கிறான் தசரத மைந்தன்
''ராமா, மகா பாவம் புரிந்தவர்காளையும் காப்பேன் எண்ற வார்த்தை எங்களுக்குக்காகச் சொன்னாயோ?
உன் பாதம் சரணடையும் தெளிவையும் நீயே கொடு''
சுக்ரீவன்னழைத்துவர,
பாதங்களில் வீழ்ந்த விபீஷணனை
இன்னுமொரு சகோதரனாக ஏற்றுக் கொண்டதும்
விபீஷண சரணாகதி பூர்த்தியாகிறது.
இலக்குவனை விபீஷணப் பட்டாபிஷேகம்
நடத்திவைக்க அறிவுறுத்துகிறான்.
இலங்கை அந்தக் கணமே விபீஷணனிடம்
வந்துவிடுகிறது.
அடுத்து சேது பந்தனம் நடக்க
ஆயத்தம்.
கடல்காவலனிடம் முறைப்படி அனுமதி
கேட்கிறான் தர்ப்பசயன ராமன்.
மூன்று நாட்கள் உபவாசம்.
நான்காவது நாள் ராமனின் வில் பேசுகிறது.
அம்பு புறப்படுமுன் எழுந்துவருகிறான்
சமுத்திர ராஜன்.
திருமகள் கேள்வன் கோபம் எல்லை தாண்டவேண்டாம்
என்று மன்னிப்புக் கோருகிறான்.
ராமனின் அம்புக்கு இலக்கு கொடிய அரக்கர் வாழும் ஒரு தீவுக்குச் சென்று அழித்துவிட்டுத் திரும்புகிறது
அடுத்து மலைப்பாறைகள் மரங்கள்.
என்று வானரங்களால் கடல் நடுவே
இலங்கையை நோக்கி ஒரு பாலம் அமைகிறது.
உற்சாகத்துடன் கட்டப்படும் அந்தப் பாலத்திற்கு உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும்
உதவுகின்றன.
அணில்கள் கொத்தனார் வேலையாம்,
வானரங்கள் சித்தாட்களாகச் செயல் பட்டனராம்.
இவர்கள் கொண்டுவந்து போட்ட கற்களுக்கு அணில்கள் பூச்சு மணல் கொடுத்துக் கெட்டிப் படுத்தினவாம்.
சேதுராமன் இலக்குவனுடன்,
மற்ற சேனை பலத்துடன்
இலங்கையில் காலை வைத்தான்.
''விபீஷணின் நட்பைக் கொண்டான்
ராவணனை வென்றான்
வீர மாதா ஜானகி தேவியைத் தீக்குளிக்கச் செய்தான்
கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று
அயோத்திநகர் மீண்டான்.
கலங்கிய மக்கள் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான்
அரசுரிமை கொண்டான்.''
யுத்த காண்டம் சில காட்சிகளுடன்
அடுத்த பதிவில்
ஸ்ரீராமன் சீதா கருணையுடன்
பட்டாபிஷேகமும் கண்டு களிக்கலாம்.Wednesday, April 18, 2007

கதம்பமாலைக்கு வாழ்த்துக்கள்..100 பதிவுகள் ஆயிடுத்தா!!!

கதம்பம் பிடிக்காதவங்க இருக்க முடியுமா.
தஞ்சாவூர்க் கதம்பம் சொல்லுவாங்க.


இப்போ இணையத்தில கதம்பம் கட்டிக் கொடுக்க

கதம்பமாலை வந்துவிட்டது.
அது வந்து 100 பதிவுகள்
ஒரு சதமும் போட்டாச்சாம்.
எல்லாம் பெரிய கையா இருக்கு.

எழுதறவங்களைச் சொல்றேன்மா.


பலவிதப் பூக்கள் சேரும் கதம்பமாலையில் நானும்
ஒரு பதிவு போட்டுட்டேன்.

அதை நம்ம பதிவிலேயும்மிணைத்தாகி விட்டது.

பிரேமலதா-----கோம்பை பதிவும்
எழுதி இந்த சேவையையும் ஆரம்பிச்சு இருக்காங்க.

எல்லோரும் வாழ்த்தலாம்.இந்த அழகான
ஆக்கபூர்வமான முயற்சிக்கு.

அவங்களுக்கு இன்னும் நிறைய பதிவர்கள் அவங்க மாலையில்லெழுத வேண்டும் என்றுஆர்வம் .

நானும் சில வலைப்பூக்களைச் சொன்னேன்.
அதில

ரவி கண்ணபிரான்
காட்டாறு
அபி அப்பா,
கண்மணி,
கீதா சாம்பசிவம்,
ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்இவர்கள் பேரெல்லாம் கொடுக்க ஆசை.
நிறைவேறினா நல்லா இருக்கும்.

கீழே படமில்லாமல் (?????) ஒரு பதிவு எழுதி இருக்கேன் கதம்பமாலைக்கு;

வாழ்த்துக்கள் கதம்ப மாலைக்கு;


கதம்பம் பிடிக்காதவங்க இருக்க முடியுமா.
தஞ்சாவூர்க் கதம்பம் சொல்லுவாங்க
அது இப்போ என்ன மாதிரி இருக்கோ தெரியாது.

எங்க மதுரை மல்லி சேர்த்துக் கட்டிய கதம்பம்ம்ம்ம்ம்ம்ம்
அப்படியே மனசை உள்ள இழுத்துவிடும்.கதிர் பச்சை, மருக்கொழுந்து,கனகாம்பரம்,தாழம்பூமல்லிப்பூஎல்லாம் சேர்ந்து கனமாக் கட்டி ஸ்பெஷலாக் கொண்டு வரவங்க பாடவரம் அம்மா.
பாப்பானு கூப்பிட்டுக் கொண்டே உள்ள வருவாங்க.அவங்க வர முன்னாடியே எங்க திருமங்கலம் வீட்டுக் கேட்டே மணக்க ஆரம்பித்துவிடும்.
கூடவெ மருதாணி இலைகளையும் அழகா ஒரு சின்னத் துண்டில் கட்டி எடுத்து வருவாங்க.ரோஜாக்கள் தனியா வரும்.
அந்த ஊரு மண்ணுக்கு அப்படியொரு மணம்.அப்படி ஒரு நேர்த்தி.
காலையில் பள்ளிக்கூடம் போகும் முன்னரேதலையில் வைக்கப் பூ கட்டி கொண்டு வருவாங்க.
பதினோரு மணிக்குத் தயிர், வெண்ணை
கூடைல வித்துக் கிட்டு இருப்பாங்க.
சாயந்திரமானா அங்குவிலாஸ் வீட்டுக்கு எதிர்த்தாப்பில
பிள்ளையார் மரத்தடிலே வேர்க்கடலை கூறு கட்டி வச்சு இருப்பாங்க.ராத்திரி எட்டு மணீக்கு வண்டியில் மாடு இழுக்க உருளைக் கிழங்கு மசலா கொண்டு வருவாங்க.
எல்லாப் பொருளுக்கும் அன்று ஒரு ரூபாயிக்குள்வாங்கி இருப்போம்.
இந்த மாதிரி ஒரு எண்டர்ப்ரைசிங் லேடிநான் இதுவரை பார்த்தது இல்லை.அதான் 50 வருஷம் கழிச்சி அவங்க நினைவு வருது.
அதே மாதிரி ஆல் ரௌண்டராக் கதம்ப மாலையும் வரும்னு வாழ்த்துக்கிறேன்.
அது இப்போ என்ன மாதிரி இருக்கோ தெரியாது.எங்க மதுரை மல்லி சேர்த்துக் கட்டிய கதம்பம்ம்ம்ம்ம்ம்ம்
அப்படியே மனசை உள்ள இழுத்துவிடும்.கதிர் பச்சை, மருக்கொழுந்து,கனகாம்பரம்,தாழம்பூமல்லிப்பூஎல்லாம் சேர்ந்து கனமாக் கட்டி ஸ்பெஷலாக் கொண்டு வரவங்க பாடவரம் அம்மா.
பாப்பானு கூப்பிட்டுக் கொண்டே உள்ள வருவாங்க.அவங்க வர முன்னாடியே எங்க திருமங்கலம் வீட்டுக் கேட்டே மணக்க ஆரம்பித்துவிடும்.
கூடவெ மருதாணி இலைகளையும் அழகா ஒரு சின்னத் துண்டில் கட்டி எடுத்து வருவாங்க.ரோஜாக்கள் தனியா வரும்.
அந்த ஊரு மண்ணுக்கு அப்படியொரு மணம்.அப்படி ஒரு நேர்த்தி.
காலையில் பள்ளிக்கூடம் போகும் முன்னரேதலையில் வைக்கப் பூ கட்டி கொண்டு வருவாங்க.
பதினோரு மணிக்குத் தயிர், வெண்ணை
கூடைல வித்துக் கிட்டு இருப்பாங்க.
சாயந்திரமானா அங்குவிலாஸ் வீட்டுக்கு எதிர்த்தாப்பில
பிள்ளையார் மரத்தடிலே வேர்க்கடலை கூறு கட்டி வச்சு இருப்பாங்க.ராத்திரி எட்டு மணீக்கு வண்டியில் மாடு இழுக்க உருளைக் கிழங்கு மசலா கொண்டு வருவாங்க.
எல்லாப் பொருளுக்கும் அன்று ஒரு ரூபாயிக்குள்வாங்கி இருப்போம்.
இந்த மாதிரி ஒரு எண்டர்ப்ரைசிங் லேடிநான் இதுவரை பார்த்தது இல்லை.அதான் 50 வருஷம் கழிச்சி அவங்க நினைவு வருது.
அதே மாதிரி ஆல் ரௌண்டராக் கதம்ப மாலையும் வரும்னு வாழ்த்துக்கிறேன்.

Friday, April 13, 2007

சித்திரராமன்.....16 ..கண்டேன் சீதையைநான் ,முக்கண்ணனும் இல்லை,படைத்தவனும் இல்லை. காப்பவனும் இல்லை.
ஒரு சாதாரண வானரன்.
சுக்ரீவ மஹராஜாவின் சபையில் ஒருவன்.
அயோத்திமன்னன் தசரதனின் புத்திரர்கள் இராமனும்
இலக்குவனும் எங்களை
கிஷ்கிந்தையில் சந்தித்தார்கள்
மனைவியையும் வீட்டையும் இழந்த சுக்ரீவனுக்கு , இரண்டையும் அவன் அண்ணன் வாலியிடமிருந்து மீட்டுத் தருவதாக அண்ணல் ராமன் சத்தியம் செய்ய.
பதிலுக்கு இராமனின் மனைவி(சீதை அபகரிக்கப் பட்டாளாம். என்ன ஒரு அதர்மம்!!)
சீதையைக் கண்டுபிடித்துக் கொடுப்பதாகச்
சுக்ரீவன் உறுதி மொழி சொல்ல,
நாங்கள் சிலபேர் தெற்கு நோக்கி வந்தோம்.
மஹேந்திர மலை அடிவாரத்தில் சம்பாதி கழுகு
அறிவுரையின் படி இலங்கைக்கு வந்தால் என்ன அதிசயம் ராவணா! தேவி இங்கே இருக்கிறாள்.
நான் ராம்துதனாகத்தான் இங்கே வந்தேன்.
சீதையைக் கண்டேன்.
வனத்தை அழித்து இதோ உன் முன் நிற்கிறேன்''
என்று உரத்த கம்பீரமான குரலில் சொல்லி முடிக்கிறான் அஞ்சனை மைந்தன்.
வாலி மரணம் இலங்கை மன்னனைக்
கலங்க வைத்தாலும்,
ஒரு குரங்கு வந்து என்னை மிரட்டுவதா
என்ற சினத்தில் அனுமனைக் கொல்ல ஆணையிடுகிறான்.
விபீஷணன் குறுக்கிட்டு அரசியல் நீதி முறைகளை எடுத்துச் சொல்லுகிறான்.
இந்தத் தூதுவன் திரும்பினால் தான் ராமன் ம்உதலானவர்கள் இங்கே வருவார்கள்.
அப்பொது நம் வீரத்தைக் காட்டி அவர்களை வெல்லலாம்.
இப்போது வதைக்க வேண்டாம்'' என்று சொல்ல,
ராவணன்'' குரங்குக்கு அதன் வால்தான் பெருமை,
அதில் தீயிடுங்கள்'' என்று ஆணையிடுகிறான்.
ஆவேசத்தோடு அரக்கர்கள் தங்களை மிரட்டி,
திகைக்க வைத்த வானரத்தை,
இழுத்துப்போய் வாலில் எண்ணை ஊற்றி
அக்னியும் வைத்துவிடுகிறார்கள்.
அசோக வனத்திலோ சீதை இந்த செய்தியை அறிந்த
அடுத்த கணமே அக்கினி பகவானைப் பிரார்த்திக்கிறாள்.
'அக்கினியே நீ குளிர்ந்திருப்பாயாக''
என்றவுடன்
அக்கினி அனுமனை வலம் வந்து தண்மையாக எரிகிறது.
சீதையின் அருளை உணரும் வீர ஆஞ்சனேயன் வானில் சடாரென்று எழுகிறான்.
உலுக்கி விடப்பட்ட பழங்கள் போல அரக்கர்கள் வீழ,
அனுமன் விபீஷணன் மாளிகையும்,
அசோகவனத்தில் சீதாதேவி இருக்கும் இடம் தவிர
அத்தனை மாட மாளிகைகளையும் தீக்கு இரையாக்குகிறான்.
மீண்டும் அன்னையைத் தரிசனம் செய்து
அவள் ஆசியையும் வாங்கிக்கொண்டு
வான்வழி ஏறுகிறான்.
அவன் வாலில் எரிந்த தீயை, தண்ணீரில் அணைத்த இடம்
கூடக் கடலில் சிவந்து தெரிகிறதாம்.
மைனாக மலையின் உபசரிப்பை
ஏற்று மீண்டும் வான்வழி ஏகும்போது அக்கரையில் வானரக்கூட்டம் கண்களில் படுகிறது.
உடனே வீரகர்ஜனை எழுகிறது அவனிடமிருந்து.
அலையலையாக ஸ்ரீராமநாம கோஷம்
அங்கதன் முதலானவர்களைப் போய்ச் சேர்கிறது.
அதைக் கேட்டு வானரர்கள் களிப்பில் ஆழ்கிறார்கள்.
அங்கும் இங்கும் ஓடித் தாவி குதித்து
மரக்கிளைகளை உடைத்துக் கொடிகளைப்போல அசைக்கிறார்கள்.
உற்சாக வரவேற்பைக் காணுகிறான் அனுமன்.
தரையைத் தொட்டதும் அத்தனை வானரங்களும் அவன் சொல்லப் போகும் நற்செய்தியை
எதிர் நோக்கி அவனையே
சுற்றிவருகின்றார்கள்.
அவனும் சீதை இருக்கும் திசையை நோக்கி கைகூப்பி வணங்கி
'ராமனின் தேவி பத்திரமாக இருக்கிறாள்.
ராவணன் அவளைச் சிறை
எடுத்துத் தனியே வைத்து அரக்கிகள்
நடுவே வைத்து இருக்கிறான்.
துன்புற்றிருக்கும் அவளை மீட்டு ராமனுடன் சேர்ப்பது நம் பொறுப்பு ''என்கிறான்.
வானர வீரர்களின்னுற்சாகம் கட்டுக்கடங்காமல் போகிறது.
அப்படியே வானில் பாய்கிறார்கள்
கிஷ்கிந்தையை நோக்கி.
பயணத்தின் நடுவே சுக்ரீவனின் ம்அதுவனம் கனிகளுடனும் தேனுடனும் கண்களைக்கட்டி நிறுத்துகிறது அவர்களை.
அது சுக்ர்ரிவன் வெகு பாதுகாப்பாக
வைத்திருக்கும் மதுகொடுக்கும் வனம்.
தங்கள் இளவரசன் அங்கதனை அனுமதிக்காக
திரும்பிப்பார்க்கிறார்கள்.
அவனுக்கும் மனதில் ஆனந்தம் இல்லையா. வெகு வேகமாகச் சம்மதிக்க,
எல்லோரும் வனத்தில் இறங்கி மனம் நிறையும் அளவுக்கு மதுவை அருந்தி மகிழ்ச்சி கொண்டாடுகிறார்கள்.
இத்தனை நாட்கள் பட்ட சிரமங்கள், கவலை எல்லாம் மறைகிறது.
சிறிது நேரத்தில் அங்குவரும் வனக்காப்பாளன் தடிமுகன் தடுத்துப் பார்க்கிறான்.
அங்கதன் அவனை அடித்துவிரட்டுகிறன்.
ததிமுகன் தீனமுகனாய்
சுக்ரீவ,ராம லக்ஷ்மணர்களை நோக்கி விண்ணில் பறந்து வந்து கீழே இறங்கி அவனிடம் அழுத்படி,
மதுவனம் அழிந்ததை முறையிடுகிறான்.
ராமன் தன் சோகத்திலிருந்து ஒரு க்ஷணம்
விடுபட்டு இது என்ன என்பதுபோஒல் சுக்ரீவனைப் பார்க்க,
அவனோ வெற்றிக் களிப்பில் தன் வாலைச் சுழற்றிப் பாறையில் அடிக்கிறானாம்.!!!
ராமனும் லக்ஷ்மணனும் வியப்போடு பார்க்கிறார்கள்.
அவனென்னமோ அழுகிறான்.
இவன் என்னமோ கூத்தாடுகிறான் என்று அதிசயப் படுகிறார்கள்.
சுக்ரீவன் விளக்குகிறான்.
'' வானரர்கள் திரும்பி விட்டார்கள்.
சுப செய்தியோடு வருகிறார்காள். தேவிதரிசனம் அவர்களுக்குக் கிடைத்துவிட்டது.
அவளும் நலமக இருக்கிறாள்.
இதைதான் அங்கதனும் மற்றவர்களும் நமக்கு அறிவிப்பு செய்கிறார்கள்.
கவலையை விடும் ஸ்ரீராமனே. வெற்றி நமதே''
என்று ஆடுகீறான்.
மிக்க சப்தங்கள் செய்தபடி வானரர்கள் தென் திசசயிலிருந்து அஅர்ப்பரித்தபடி இறங்குகிறார்கள்.
அங்கதனும் அனுமனும்
வீற்றிருக்கும் ஸ்ரீராமனை அணுகி வணங்குகிறார்கள்.
எப்படி இருக்கும் அந்த நிலைமை என்று யோசித்தால் மனம் நெகிழ்கிறது.
ராமா எப்படி இந்த நேரத்தை எதிர்கொண்டாயோ./
மனைவி இருக்கிறாளா.
கிடைத்தாளா,.
இவர்கள் பார்த்தார்களா?
ஒன்றுமே அசைவில்லாமல் ராமன் அனுமனை நோக்க,
அனுமனும் சுக்ரீவனையும் வணங்கிவிட்டு ராமன் அருகில் வினயத்துடன் பணிந்து
''கண்டேன் சீதையை.
கற்பினுக்கு அனிகலனாய்,
இலங்கையில்''
என்று மிருதுவாகக் கூறுகிறான்.
அவ்வளவுதான் !!! ஸ்ரீராமன் ஆரத் தழுவுகிறான் அனுமனை.
நாவில் வர்த்தைகள் தெளிவில்லாமல் திண்டாடுகின்றன.
உயிர் கொடுத்த உத்தமனைக் கண்ணாரக் காண்கிறான்.
மீண்டும் அணைத்துக் கொள்கிறான்.
''என் சீதை இருக்குமிடம் தெரிந்தது. அனுமனே அவள் என்ன சொன்னாள். எப்படி இருக்கிறாள்.
எல்லா விவரமும் எனக்குச் சொல்.
துடிக்கும் என் சிந்தையை, அதன் தாகத்தை
உன் சொற்கள் அமைதிப் படுத்தும்.
என கேட்க ஆஞ்சனெயனும் தான் புறப்பட்டு, இலங்கையை
அடைந்து,
தாயைத் தரிசித்த விதத்தையும்
அனுபவங்களையும் விவரிக்கிறான்.
ஒரு சொல் கூடத் தவறி தன் வீரப் ப்ரதாபங்களை
விவரிக்கவில்லை.
இலங்கை சென்று ராவணன் சொன்ன செய்தியைச்
சொல்லி சீதை முப்பது நாட்கள்
தவணை கொடுத்து இருப்பதையும்
சொல்லி அன்னை அளித்தச் சூடாமணியை
அண்ணலின் கையில் சமர்ப்பிக்கிறான்.
எல்லோரும் பார்க்க அண்ணலின்
கண்களிலிருந்து தாபம் பிரவகிக்கிறது.
'' இந்தச் சூடாமணி சீதையின் தாயார்
தாய் வீட்டு சீதனமாகக் கொடுத்தது.
அவள் நிலைமை என்ன
என்று சொல்லுவாய்''
அனுமன் சொல்கிறான்.
''இப்பொழுது இதை உன் கையில் கொடுத்து என்னிடம் அவள் சொன்ன செய்தியும் சொல்கிறேன்
''என்னைக் காப்பாற்றுவது உன் பொறுப்பு ராமா.
அன்னையும் தந்தையையும் ச்உற்றத்தையும் விட்டு உன்னுடன் வந்தேன்.
உன்னையும் பிரியக்கூடாது என்றெண்ணி
வனமும் வந்தேன்.
இப்பொழுது இத்தனை அகலக் கடலைத் தாண்டி ஒரு தனித் தீவில் இரக்கமற்ற அரக்கியர் சூழ
ராவணனின் கொடும் சீற்றத்திற்கும் பலியாகாமல்
இருக்க ராமா உன்னில் நான் வைத்த நம்பிக்கையே காரணம்.
உன்னைச் சரணடைந்து காப்பாற்றப் படாதவர்கள் யார் இருக்கமுடியும்.?
எனக்கு
ஒரு சிறுவலி கொடுத்த காகத்தையே சுட்டெரிக்கக் கிளம்பினவன் நீ.
இப்போது இன்னும் நான் காப்பாற்றப் படவில்லை என்றால்
அதற்குக் காரணம் நான் இருக்கும் இடம் உனக்குத் தெரிந்து இருக்கவில்லை.
நான் உயிருடன் இருக்கப் போவது இன்னும்
முப்பது நாட்கள்.
அரக்கன் என்னை நினைக்கும் முன் நீ வரவில்லை என்றால் உயிர் துறப்பேன்''
என்று உரைத்து
உங்களுக்கும் இளவல் இலக்குவனுக்கும் சுக்ரிவ ராஜனுக்கும் மங்களம் உண்டாகட்டும்
என்று கல்லும் கரையும் வண்ணம் சீதையின்
வார்த்தைகளை
அனுமன் அப்படியே சொன்னவண்ணம் தருகிறான், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியிடம்.
சுந்தரமாய் இந்த சுந்தரனின் காண்டத்தைப் பூர்த்தி செய்யும் நேரம் வந்துவிட்டது.
அடியேனுடன் இது நாள் வரை
அழகன் அனுமனின் ஆற்றலையும், சொல்திறத்தையும்,செயல் வீரத்தையும்
படித்து திருப்தி அடைந்து இருந்தால் மகிழ்வேன்.
ஒரு மிகச் சிறிய அளவினால் ஆன என்
சிற்றறிவிற்கு எட்டிய அள்வில் தான் எழுதி இருக்கிறேன்.
பிழைகள் பொறுத்துப் படிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
ராமாசாமியின் தூதன் நானடா ராவணா என்றான்//
அனுமன் லங்காபுரியைத் தீக்கிரையாக்கி
கிஷ்கிந்தை சென்றான்//
கண்டேன் அன்னையய என்றே ராமனைச் சேவித்தே நின்றான்
கடலைக் கடந்து ஐய்யன் வா//னர சேனையுடன் சென்றான்//
எல்லோருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இனிய புதுத் தமிழஆண்டில் அனைவரும்
ஆரோக்கியத்துடனும்,
அளவில்லாத ஐஸ்வரியத்துடனும்
அன்னைதந்தையர் ஆசிகளுடனும்
நல்லறத்தோடு வாழ என் பிரார்த்தனைகள்.
ஜே ரகுராம் ஜானகி ராம்.
அஞ்சிலே ஒன்று பெற்ற அனுமன் நம்மைக் காப்பான்.
வானர சேனையுடன் சென்றான்.

Wednesday, April 11, 2007

சந்தோஷம் இது சந்தோஷம்
இன்ரு சந்தோஷமாக இருப்பது எப்படி என்று எல்லோருக்கும் அறிமுகமான ஓப்ரா ஒரு நிகழ்ச்சி நடத்தினார்.
அதில் ஐந்து நபர்களை மேடையில் அறிமுகம் செய்து ,அவர்களின்
வாழ்க்கை பற்றி சுருக்கமாகச் சொல்லி,
அவர்களின் மன சந்தோஷத்தின்(ஹாப்பினஸ்) லெவலை
அளவிடச் சொன்னார்.
ஒரொருவருக்கும் ஒரு அளவு. பிறகு இங்கிலாண்திலிருந்து வந்திருக்கும் ஒரு ஸ்பெஷலிஸ்ட்
ஆனந்த நிலையை அடைவது எப்படி,
மனதுக்குப் பயிற்சி கொடுப்பது ,என்று நிறைய புத்திமதிகள் சொல்லி, நிகழ்ச்சி முடிந்தது.
நிகழ்ச்சி ஒரு விதத்தில் நிறைவாக இருந்தாலும்,
நம்ம கலாசாரம், பெரியவர்கள் ஆசீர்வாதங்கள்,
கோவில்கள், யோகக் கலை
இதெல்லாம் இவர்களுக்குக் கிடைக்கவில்லையே.
எல்லோரும் ஏதாவது புத்தகம் எழுதி, ஒரு சிடி போட்டுச்
சொன்னால் தான் வெளிச்சம் கிடைக்கிறது என்று புரிந்தது.
ஏன்னு கேக்கிறதுக்கு யாராவது இருந்தாலே பாதி துன்பம் போய் விடுகிறது.
மற்றவர்களைக் கவனிக்க எல்லோருக்கும் எங்கே
நேரம்?
அவர்களுக்கு,
ஒரு நாளுக்கு உண்டான வேலைகளைப் பார்த்தால்
என் பிரமிப்பு இன்னும் அதிகரிக்கிறது.
நடுவில் 'டேக் அ பிரேக்''
என்று சொல்லக் கூட ஒரு புத்தகம் வாங்கி விடுவார்கள் போலிருக்கிறது.
highly stressed.
இதுதான் சின்னக் குழந்தையிலிருந்து
70 வயது பெரியவர் வரை நிலைமை.
ஒரு வேளை நம்ம ஊரிலும் இப்படி ஆகிவிட்டதோ?
நான்தான் கவனிக்காமல் விட்டேனோ.
காத்தாட ஒரு நடை,
கோவில் தரிசனம்,
நல்ல பாட்டு,
அறிஞர்களின் உரையாடல்,
ஆத்மார்த்தமான, தெய்வம் சம்பந்தப்பட்ட
உபன்யாசங்கள்
குழந்தைகளோடு சம்பாஷணை,
நண்பர்களின் அன்பு
இவை இருந்தால் போதும்னு தான் தோன்றும்.
அவரவர்களுக்கு ஆனந்தம் கொடுப்பது எது என்று
கேள்வி கேட்கலாம்னுதான் நினைத்தேன்.
இப்போதுதானே அழகு சுற்றில் இருக்கிறார்கள்!!
பிறகு பார்த்துக் கொள்ளவேண்டியதுதான்.:-)
Monday, April 09, 2007

மறுபடியும் கிறுக்கா?
பேசாமல் இருந்து இருப்பேன்.
இந்த செல்லிதான்  ....இவங்க வேற 
என்னை மீண்டும் கூப்பிட்டாங்க.
அவங்களுக்கு சந்தேகம் நிஜமாவே நான் வியர்டூதானா.
இல்லை சும்மாக்காட்டியும் நானும் நானும்னு சொன்னேனா?
அப்படினு உங்க பேரைப் போட்டுட்டேன்.
எழுதிடுங்கனு ஒரு வார்த்தை சொல்லிட்டாங்க.
நமக்கென்ன,
கிறுக்கா எழுதறது கஷ்டமே இல்லை.
உண்மையைச் சொல்றதில என்ன வம்பு?
இல்லை.
எதைச் சொல்ல எதைவிட?
எப்பவும் இருக்கிற கிறுக்குத்தனத்தைவிட பசிக் கிறுக்கு
அதிகம்.
பசி வந்தால் இருபது முப்பதும் பறந்து போய் விடும்.
கண்டது ,காணாதது எல்லாம் சாப்பிடத் தோணும்.
முக்கால்வாசி சாப்பிடமுடியாததாக இருக்கும்.
இதற்காகவே பசங்க உஷாரா
கொஞ்சம் ரஸ்க், தண்ணீர் பாட்டில் எல்லாம் எடுத்து
வைத்துக் கொண்டுதான் வெளில கூட்டிப் போறது.
அதுவும் ஸ்விஸ்ல சாகலேட் கடைப் பக்கம்
போகிறபோது சின்னவன் தான் போட்டு இருக்கிற தொப்பிய என்தலைமேல போட்டே கூட்டிப் போவான்.:-)
கொஞ்ச தொலவு நடந்தப்புறம் தெரியும்
ஏன் அப்படிப் பண்ணினான் என்று
தாகமும் தாங்காம சுகர்ஃப்ரீ ட்ரின்க்னு எதையோ அவசரத்துக்குக் குடிச்சுட்டு,
அன்னி ராத்திரி எல்லாரையும்
பதைக்க வச்ச பெருமையும் எனக்கு உண்டு.
திகிலரசினு என்னை மருமகள் இருவரும் பார்க்க இதே காரணம்.
பெரிய மகனோட போகும் போது
ஒரு பாட்சாவும் பலிக்காது.
சாப்பிடு, அப்போதான் வெளில போகமுடியும்னு
கறாரா சொல்லிடுவான்.
அவன் ஊரிலேயோ பானிப்பூரி
(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்)
ஃபலாபல் நல்லாவே இருக்கும்.
அதுவும் ,கராமா,டெய்ரா சைடு போயிட்டாக் கேக்கவே வேண்டாம்.
மாமியாரை நாலு இடம் கூட்டிப் போகணூம்
என்கிற ஆசையில் என் மருமகள்
தங்கம் விற்கும் கோல்ட்சூக் பக்கம்
போகும்போது எனக்கு கண்ணில் பட்டது
என்னவோ மிளகாய்பஜ்ஜி
ஸ்டால்தான்.
விளைவு கனடியன் ஹஸ்பிடலில்
8 மணி நேர ஸ்டே.
இனிமே எல்லாரும் படு உஷாராயிடுவாங்க.
சொல்லாம விட்டது, வாசலில் நன்கொடை கேட்டுவரும்
நபர்களுக்குக் கர்ணி வேஷம் போடுவது.
நான் பணம் கொடுத்துப் படிக்காத மாணவன்,
திருப்பதி போகாத(என்னைவிட) வயசான அம்மா
திருமணம் நடத்தாத இன்னும் அதே இடத்தில் பூ விற்கும் பூக்காரி,
சூறைத்தேங்காய் உடைக்க எப்போதுமே 50ரூபாய் என்னிடம் வாங்கிவிடும் பிள்ளையார் கோவில் பையன்,
இன்னும் என் லூசுத்தனத்தால்
பிழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நம்ம வீட்டுமாங்காய் அறுக்க வருபவனிடமே ஏன்ப்பா இங்கே கொஞ்சம் 30 மாங்காய்
வச்சுட்டுப் போறீயானு கேக்கிற அப்பிராணிப்பா:-)
இது போதும் இப்போதைக்கு.
அப்புறம் எனக்கு இத்தனை நாளா
கிடைச்ச கிறுக்கு அதிலேயும் அசட்டுக் கிறுக்கு
என்கிற பெருமையோடு நிறுத்திக்கலாம்:-)
.


Saturday, April 07, 2007

மலைப் பங்களா--2 ..house on the rock/WISCONSIN
இதோ தெரியும் வராந்தா ஒரே ஒரு பாறையின் மேல் அமர்ந்து இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா/


பத்தாயிரம் விளக்குகள் ,நூற்றுக்கணக்கான வடிவங்கள் கொண்ட ஒரு குடை ராட்டினம் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்?
ஏறி உட்கார்ந்து ஒரு ரைட் போகலாம் என்றுதானே.?
அது முடியாது இந்த இடத்தில்.
பின்னணி இசை போய்க்கொண்டே இருக்கும்.
கரௌசல் சுத்தி வரும். பொம்மைக் குழந்தைகள் உட்கார்ந்திருக்க, மயில்களும் ,அன்னமும்,குதிரைகளும் யானைகளும் சுற்றி வரும்.
உலகிலேயே மிகப் பெரிய ராட்டினத்தை இந்த மலைப் பங்களா என்று நான் பேர் சூட்டின த ஹௌஸ் ஆன் த ராக், பார்த்தோம்,.
நாங்கள் இந்த ஏழு நாட்கள் விடுமுறையில், எங்கே போவது என்று தலையைப் பிய்த்துக்கொண்டு,
இணையத்தில் தேடி,
ஹோட்டல் வசதி பார்த்து கிளம்பும்போது வெள்ளியாகிவிட்டது.
மழை அதோடு கூட உபரியாக வரும் அக்கா தங்கச்சிகள் எல்லாம் எதிர்கொள்ளவேண்டி வரும்
என்று பெண்ணும் மாப்பிள்ளையும் எச்சரித்தார்கள்.
நான் செய்த பூஜாபலம் னு பாடிக்கொண்டே
வண்டி ஏறினேன்.
பீட்சாவிலும், அரையடி ரொட்டியிலும் எனக்கு
நிம்மதி கிடைக்காது என்று, கடுகு கொட்டி(வார்த்தை சிங்கம் சொன்னது) தயிர்சாதம்.
'அதென்ன, உங்க அம்மாவுக்கு தயிர் சாதத்தில்
கருவேப்பிலை,பெருங்காயம், இஞ்சி,கொத்தமல்லி,
உளுத்தம்பருப்பு இதைத தவிர சாதம்னு ஒண்ணு கலக்கணும்னு என் மாமியார் கத்துக் கொடுக்கவே இல்லை'
என்று ஒரு நாள் விடாமல் அலுத்துக் கொள்ளுவார்.
தேவைதான்'
என்று நினைத்தாலும் நானும் விட்டுக் கொடுப்பதில்லை.
கடைக்காரனுக்கு நஷ்டம் வந்து விடாதா/ நான் கடுகு வாங்காமல் யார் வாங்குவார்கள்?
இத்யாதிகளோடு நாங்கள் ஸ்ப்ரிங் க்ரீன் போய் சேர்ந்தபோது இரவு பத்து.
காலையில்லெழுந்து '' டெல்ஸ் மைனிங்''+ இந்த மலை மேல் பங்களாவைப் பார்ப்பதாக ஏற்பாடு.
பேரனுக்குப் பாட்டியோட முட்டி கவலை.
அப்பா, பாட்டிக்கு வேணா வீல் சேர் சொல்லலாமா'
ஏற்கனவே ஸ்ட்ரொல்லர் எப்படி எடுத்துப் போவது
என்ற யோசனையில் இருந்த மாப்பிள்ளை, இதென்னடா புது பிரச்சினை என்று அந்த மலையையும் என்னையும்
மாறி மாறிப் பார்த்தார்.
அம்மா ,உங்களால் முடியும்னு தான் நினைக்கிறேன் என்றார்.
ஆமாம், ஆமாம் இப்போதான் உடம்பு இளைத்துவிட்டதே.
இதெல்லாம் சும்மா ஊதித் தள்ளிடலாம் என்பது மாதிரி ஒரு பாவனை காட்டிக் கொண்டேன்.
மற்றவர்கள் வண்டியைப் பார்க் செய்து வரட்டும் நாம் முதலில் போகலாம் என்று இறங்கினேன்.
ஒரு ஊஉ என்று காற்று.
ஒரு பளார் மின்னல்.
காலுக்கு கீழே பாறையே நடுக்கம் கண்ட மாதிரி ஒரு இடி.
டிஸ்கவரில இந்த மானெல்லாம், சிறுத்தைக்கு முன்னால் ஓடுமே அந்த வேகத்தில் நான் அந்த முகப்பிற்குள் ஓடி விட்டேன்.
உள்ளே நுழைந்தபின்னால் தான் இந்த ஊரில் கடைப் பிடிக்க வேண்டிய அமைதி,வரிசை எல்லாம்
நினைவுக்கு வந்தது.
காலில் ஷூ,
நெத்தியில் வட்டப் பொட்டு.,
பச்சை சிகப்பு சுடிதார்,
ஒரு பெரிய பழுப்பு ஜாக்கெட்.
அடடா இந்திய அம்மாக்கள் கொடுக்கும் இமேஜ் தான்
என்ன என்ன.
அங்கே வரவேற்பறையில் இருந்தவர்கள் ஏற இறங்கப் பார்த்துவிட்டுத் தங்கள் வேலைக்குத் திரும்பினார்காள்.
எனக்கு முன்னாடியே அங்கே இன்னும் இரண்டு அம்மாக்கள் அப்பாக்கள் !
ஒரு பெண் ஒரு மகன்.
அப்பா, அந்த அம்மா முகத்தில் வந்த சிரிப்பைப் பார்க்கணுமே.
அவங்க சேலமாம்.
ஒண்ணு கவனித்துப் பார்த்தால் தெரியும்.
வரும் அப்பாக்கள் ஷூ போட்டுக் கொள்ளுகிறார்கள்/
அம்மாக்கள் செருப்புதான்.
ஏன் அவங்களுக்குக் குளிராதா?:-)
கொஞ்சம் அவங்களுடன் கதைத்துவிட்டு
வெளியில் எட்டிப் பார்த்தால் உறுமல் நின்றிருந்தது.
எல்லோருக்கும் சீட்டு வாங்கினோம்.
ஆளுக்கு 20$ பழுத்தது.
ஒரு ஆச்சரியமான உலகத்துக்குள் போனோம்.
அலெக்ஸ் ஜோர்டன் என்பவர் கட்டிய வீடாம்.
அவர் ஆரம்பித்து வைத்ததை அவரது மகன் முடித்து வைத்து இருக்கிறார்.
ஆயிரத்து தொளாயிரத்து நாற்பதில் ஆரம்பித்து இருக்கீறார்கள்.
அப்போதெல்லாம் இது வெறும் பிக்னிக் ஸ்பாட்டாக இருந்து இருக்கிறது.
இந்த அலெக்ஸுக்கு மட்டும் இங்கே வீடு கட்ட வேனும்னு ஒரு வித வெறியே வந்துவிட்டது.
அதீத ஆசையைத் தான் ஸ்ட்ராங்கா சொல்லிட்டேனோ:-0)
பதிமூன்று அறைகள் அந்த பாறைகள் மேல் கட்ட
பதிமூன்று வருஷம் ஆச்சாம்.
முதலில் தானே கற்கள் ,மரம் எல்லாம் முதுகில் சுமந்து போய் சேர்ப்பாராம்.
பணக்காரக் குடும்பம்தான்.
இங்கேதான் எல்லாம் டி ஐ.ஒய் ஆச்சே.
அப்படி ஆரம்பித்து இருப்பார் போல.
இதைப் பார்க்க வரேனு சொல்லரவங்க கிட்ட
50 செண்ட்ஸ் கட்டனம் வாங்குவாராம்.
அவர் ஏற்கனவே 'வில்லா மரியா' என்று பெண்களுக்கான பிரத்தியேகக் கட்டிடம் ,விடுதி
ஒன்று கட்டி இருக்கிறார்.
இரண்டு லெவலில் பார்க்கப் பட வேண்டிய அமைப்பு.
ஒருலெவல் பழைய காலத்துவீடு.
இன்னோண்ணு மியூசியம் மாதிரி உலகத்தில இருக்கிற அதிசயங்களீல் பாதியை செய்து வைத்து இருக்கிறார்.
அறைக்கு அறை ஒரு இசை உலகம். காசுபோட்டால்
ஜாஸ் இசை வெள்ளம்.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இருந்த ஃபையர் ப்ளேஸ்.
அடுப்படியில் பெரிய பெரிய அண்டாக்கள்.
எல்லாம் ஒரே பளபளா.
குழந்தைகளுக்குத் தனி உலகம்.50 வருடங்களுக்கு முன்னால் தயாரிக்கப்பட்ட செல்லுலாய்டு
பொம்மைகள் பெரிய கண்களோடு சர்வ அலங்காரத்தோடு நம்மைப் பார்க்கின்றன.இன்னும் சைன பொம்மைகள், ஜப்பானிலிருந்து தயாரித்த ஓவியங்கள்,
அதுதான் கருப்பு வெள்ளை மட்டும்
வண்ணம்னு சொல்கிற ஒரு விதமான
சோக ஹைகூ மாதிரி இருக்கும்.
அதுவும் அந்த மழை பெய்யும்போது வண்டி இழுக்கும் விவசாயியின் படம் தத்ரூபம்.
மழைபெய்ய,
கால் வழுக்க, பாரம் இழுக்கக்
கஷ்டப்பட்டு வேலையை முடிக்கணும்.
சாமி ! இதுதான் வாழ்க்கையானு
தோன்றிவிடும்.
மிச்சம் டூர் அப்புறம் பார்க்கலாமா?

Monday, April 02, 2007

மலைப் பங்களா.....1
''தண்ணீர் எடுத்துவைத்தாச்சா??

நொறுக்குத் தீனி?

இட்லி பார்சல் இதோ.

தோசை, மிளகாய்ப்பொடி தடவியாச்சா?


கை துடைக்கக் குற்றால நேரிழைத்துண்டு.

சாப்பிட்டபிறகு போட்டுக் கொள்ள

ரசிக்லால்.


குழந்தைகளுக்கு வழியில் சாப்பிட முறுக்கு, தட்டை.

கொஞ்சம் அந்த ப்ரிட்டானியா பொட்டியையும் வைங்கோ.

சின்னவனுக்கு வேணும்.


பெரியகுடம் ரெடி. சின்ன மணிவச்ச குடம் குழந்தைகளுக்கு.

மகராஜி! நன்னா இருக்கணும். இத்தனை பெரிய வண்டியையும் கொடுத்து, பெட்ரோலும் போட்டு,

ஓட்டறவரையும் அனுப்பி இருக்காளே.எத்தனை பாசம் பெரியப்பா மேலே!

மதுரையிலிருந்து கன்யாகுமரி.

எத்தனை தூரம் இருக்கு!


அப்பா திருமங்கலம் வழியாப் போவோமா?

பஸ்ஸ்டாண்ட் வழியாகப் போவோம். ஊருக்குள்ள போக மாட்டொம்.

திரும்பி

வரும்போது ஸ்ரிவில்லிபுத்தூர் போகணும்.

சரி.

எல்லொரும் தயாரா.

இப்பவே மணி நாலேகால்.


கிளம்பினால் கோவில் திறக்கும்போது ஸ்ரீ வைகுண்டம் போய்விடலாம்


தாத்தா,பாட்டி,பெரியப்பா,பெரியம்மா

ஆண்டாள்(அடியேன்) முரளி,ரங்கன்

சுப்பி,ஜெய்யி,முகுந்து

சம்பந்தி,சித்தப்பா,சித்தி

இத்தனை பேரும் அந்தக் காலத்து சந்தனக் கலர்

ப்ளிமத் படகுக் காரில் ஏறிப் பயணமானோம்.


இது நடந்தது 1957இல் .


அதுதான் நினைவு வந்தது இப்போது

ஸ்ப்ரிங் பிரேக் எனப்படும் விடுமுறை நாட்களில்


கார்சீட்,ஸ்ட்ரோலர் சகிதம் மேடிசன்,

ஸ்ப்ரிங் க்ரீன் என்னும் இடத்துக்கு இரண்டு நாட்கள்


போய்த் திரும்பி வந்தது.


வசந்தம் வந்துவிட்டது.