Blog Archive

Sunday, April 30, 2017

சர்க்கரை இனிக்கிற சர்க்கரை

Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

இதெல்லாம் மற்றவர்களுக்குத்தான் எனக்கில்லை சொக்கா.
இப்ப எல்லாம்  வருத்தம் விலகிவிட்டது.. சர்க்கரை பதப்  படுத்திவிட்டது.
2004 ஆம் வருடம் ஒரு எதிர்பாராத நாள் தம்பி  மறைந்தான்.
சின்னவன். காலை  சுற்றி வந்தவன்.
 பத்து நாட்களில் மகன் களுக்குத் திருமணம்.
முதல் நாள் அத்தனை மாடிகள் ஏறி இறங்கி
எல்லோரையும்  அழைப்பிதழ் கொடுத்து  மனைவியும் கூட அழைத்துப்போய், மயில்கண் வெட்டி புரள புரள அவன் வந்த காட்சி,என்னை திகைக்க வைத்தது.
   டே ,,, யாருக்கு கல்யாணம்   . உனக்குன்னு யாராவது தப்பா
நினைத்துக் கொள்ளப்  போகிறார்கள், என்று கேலி செய்தது நினைவுக்கு வருகிறது .

பிறகு வந்ததெல்லாம் கனவு.  திருமண முதல்நாள் தலை சுற்றி விழுந்தது
காலை உடைத்துக் கொண்டது எல்லாம் முன்னுரை.
முழுப் பரிசோதனை தொடர்ந்தது.
கண்டு பிடித்தார்கள்  என் உடலில் ஓடும் இரத்தத்தில்  சர்க்கரை அளவு 400
எட்டி இருந்தது. அதுவும்   ஃ பாஸ்டிங் 😈
ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் எல்லாம் பக்கவாத்தியம் .
டி  ஜெ. செரியன்  முதல் டாக்டர்.  என்  குடும்பத்துக்கு  காட் ஃ பாதர்.
அவர் போட்ட மிரட்டலில்  45 நிமிடம் தினம் நடக்க ஒத்துக் கொண்டேன்.
சிங்கத்தையும் மிரட்டினார். அவ  விழாம கூட நட .
நான் சிரித்துக் கொண்டேன்.
மெல்லநட சரோஜாதேவி நான்.  நாலு கால்  ஓட்டம் அவருடையது.
வண்டியில் மெரினா போவோம்.
கடலைப் பார்த்தே நிற்பேன்.
சைலன்ட் உரையாடல் அதனுடன். அதற்குள் அவர் நேப்பியர் பாலம் வரை போயிருப்பார். நானும் ஆடித்தேர் மாதிரி  வேக நடைக்காரர்களுக்கு வழிவிட்டு  கிரேசி மாது, பாலாஜி, மொட்டை பாஸ்கி, நம்பியார், சிவக்குமார் அவர் மனைவி   எல்லோருக்கும்  வணக்கம் போட்டுவிட்டு நடப்பேன். தி எம்  எஸ் கூட நடக்க வந்திருக்கிறார்.
விஸ்வநாதன் சார்.  ஒரு மகிழ்ச்சியான வேலைகள் அவை.
நான் பாதி தூரம்  கடக்கும் போது  சிங்கம் திரும்பி வந்து கொண்டிருக்கும்.
  எனக்குப் பசி எடுக்கும். முகத்தைப் பார்த்து சரவணபவன்
போலாமா  என்பார். ஆமாம் கால் வலிக்கிறது. திரும்பிடலாம் 😊
என்று சிரிக்காமல் சொல்வேன்.

இப்படி ஒழுங்காக நடந்ததால்  இரண்டு வருடங்கள் கழித்து ஒரு மாதிரி  ஒரு லெவலுக்கு வந்தது.      
 இந்த புராணம் இப்ப எதுக்குன்னு சொல்கிறேன்.
ஊரை வீட்டுக் கிளம்பும்போது ஒரு பத்துமாதத்துக்கான மருந்துகளை எடுத்துக் கொள்வது வழக்கம்.
அப்படியும் ஒரு தேசம் போய் அடுத்த தேசம் போவதற்குள், நடுவில்
அங்கங்கே மேற்கொள்ளும் பயணங்கள்
எல்லாம்  சர்க்கரையை மேலே கீழே தள்ள ஆரம்பித்தன.
நயாகரா போகும்போது மருந்தெடுக்க மறந்தேன். அங்கே இருந்த வைத்தியரிடம் சொல்லி அவர் மிக நல்லவராக  இருந்த காரணத்தால் எப்படியோ சமாளித்தேன்.
கூட வருபவர்கள் பாடு யோசித்துப் பாருங்கள். பாவம் இல்லையா
இதோ ஹிஸ்டரி  ரிப்பீட்டிங் .இங்கே  செப்டம்பர்  மாதம் வரும்போது ஆறு மாதத்துக்கான  மருந்துகளே எழுதி எடுத்துக் கொடுத்தார்.
இதோ ஏழு  மாதங்கள் கடந்து விட்டன.
மருந்து தீரும் நேரம். மகன்  வேலை பொறுப்புகள் நிறைய. அவன் என்னைக் கூட்டிப் போய்  மீண்டும் திரும்ப வேண்டும் மருந்துகளை வாங்கிக்  கொண்டு.
 கடவுளே தவிப்பு அதிகமானது/ அப்போதுதான் எழுத்தாள திருமதி வித்யா சுப்பிரமணியம் இந்தோனேசியா வர போவதைச் சொன்னார்.
எனக்கு அப்போ கூட உரைக்கவில்லை.
பெண் தான் உற்சாகம் கொடுத்தால். நீ அவர்கள் உதவியைக் கேளும்மா. மறுக்க மாட்டார் என்று.
மிகத்தயக்கமாக இருந்தது.
தைரியம்  வரவழைத்துக் கொண்டு உள்பெட்டியில் கேட்டேன்.
உடனே சரி என்றுவிட்டார். மருந்துகளைக் கடையில் சொல்லி வல்லபா ஸ்ரீனிவாசனி டம் கொடுத்து அது வித்யா அம்மாவையும் அடைந்து இதோ அவர் மகள்  வீட்டில் இருக்கிறது.  முக நூல்  அறிமுகம் மட்டுமே. நேரில்  இன்னும் பார்க்கவில்லை. வல்லபா எங்க ஊர்ப் பெண். வீட்டுக்கும் வந்திருக்கிறார். அவர் செய்த உதவி சொல்லில் அடங்காது.

எல்லோருக்கும்  மேலே  இருக்கும்  கடவுளின்  கருணை.
குருவாயூரப்பன் பக்தை வழியாக  வந்த வைத்தியம்.
அனைவரும் நலமே வாழப் பிரார்த்தனைகள்.
Saturday, April 29, 2017

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  சமீபத்தில் கிடைத்த வாட்ஸாப் செய்தி. 
 நீ என்ன சொல்கிறாயோ, அதுவே உன்னைத் தேடி வந்து அடைகிறது.
 தினமும்  காலையில் எழுந்து கண்ணாடி முன் நிற்கும்போது
நான் நன்றாக இருக்கிறேன். எனக்குக் குறை ஏதும் கிடையாது.
ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றும்,
எல்லோரையும் நேசிக்கிறேன்,, எல்லோரும் என்னை நேசிக்கிறார்கள்
உலகம்   முழுவதும் நன்மைகள் நடக்கின்றன.
என்று இது போல பாசிடிவ் நினைவலைகளை நம்மைச் சுற்றிப் பரப்ப வேண்டும்.
இதுதான் அந்த செய்தி. ஏற்கனவே ரெய்க்கி கற்ற போது இந்த ஐ ஆம்.
கொள்கை கற்றது மறந்துவிட்ட நிலையில்
இது உற்சாகம் கொடுப்பதாய் இருந்தது.

எதிர்மறை எண்ணங்களைத்தவிர்த்தாலே  பாதி வாழ்க்கை நிமிர்ந்துவிடும்.
ஆனால் முதலில் மந்தில் உதிப்பதென்னவோ, இப்படி ஆகிறதே
  விடிவே கிடையாதா. இன்னும் எத்தனை நாள் இப்படி
என்கிற எண்ணங்களே. 
நினைப்புதான் பொழைப்பைக் கெடுக்குதுன்னு யாரோ 
எப்பவோ சொன்னது நினைவுக்கு வருகிறது.
எத்தனை உண்மை அதில்.

நடப்பவை இருக்கட்டும் நல்லவற்றை நினைப்பதில் தவறு இல்லையே.
நடந்த நல்லது அல்லாதவைகளை நினைத்து வருந்தி
அதிலேயே உழல்வதில் என்ன லாபம் இருக்க முடியும்.

எல்லாம் இருக்கட்டும் நீ எப்படி என்கிறீர்களா.
இதோ முயன்று கொண்டிருக்கிறேன்.
 பிறருக்குப் புத்திமதி சொல்வது வெகு சுலபம்
இல்லையா.

Tuesday, April 25, 2017

எங்கள் ப்ளாகிற்கு எழுதிய கதை ஒரு நாள் மயக்கம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மழையும் மந்தாரமாக இருக்கும் வானத்தை ஜன்னல் திரை வழியாகப் பார்த்த சுதாவுக்கு, உற்சாகம்  மனம் சுறுசுறுப்பானது.
குழந்தைகளின் படுக்கை அறையில் எட்டிப்ப் பார்க்கும்போது
இரண்டு பெண்களும் அழகு தேவதைகளைப் போல் ஒரே ரஜாய் அடியில் நல்ல உறக்கம் போட்டுக் கொண்டிருப்பது பார்த்து சந்தோஷப் புன்னகை வந்தது.


அடுத்து கணவனின் படிப்பறைக்கு வந்ததும் ,அவன் கைகளிலிருந்த கண்ணாடி
கிண்ணத்தைப் பார்த்ததும் அவள் மனம் சட்டென்று நின்றது.


அழகான புன்னகையோடு பாசு அவள் கை பிடித்து இழுத்தான். என்ன மழையைப் பார்த்ததும் அம்மாவுக்கு என்ன யோசனை வருது, என்ற கேலிக்குரலோடு அவளை வளைக்க முனைந்தான்.

''கட்டாயம் இந்த யோசனை இல்ல:)


...............................

வெளில போய் இந்த கோவை காற்றை ,சிலுசிலுப்பை அனுபவிக்க ரொம்ப ஆசையா இருக்கு. வாங்களேன்.  ராஜம்மாவிடம் குழந்தைகளை விட்டுவிட்டு ஒரு குட்டி ட்ரைவ் போய் விட்டு வரலாம்.  இல்லாவிட்டால் அதுகளயும் அழைத்துக் கொண்டு மேட்டுப்பாளையம் ரோடில் ஒரு நீள மழை ஊர்வலம் போலாமே என்றாள்.

'கொஞ்சம் வயசு ஆன பிறகு உன்னைக் கல்யாணம் செய்திருக்கணும்.'
யாருக்கு?
'ஏன் உனக்குத்தான் 'என்றவனைப் பார்த்து சிரித்தபடி ,அவன் கையிலிருந்த பானத்தைத் தனிப்படுத்தினாள்.
'சரி இது உள்ள போனால் வண்டி ஓட்ட வேணாம். நானும் குழந்தைகளோடு குட்டித் தூக்கம் போட நீங்களும் கொஞ்சம் தூங்குங்கள்' என்றபடி செல்பவளை யோசனையோடு பார்த்தான் பாசு.
ஏன் இவள் இப்படி இருக்கிறாள்? எல்லாத் திருமணங்களும் குழந்தைகள் பிறந்ததும் தேக்கமடைகின்றதா, இல்லை எனக்கு மட்டுமா இப்படி என்று ஏமாற்றத்தை மறக்க மீண்டும் பாட்டிலைத் தேடினான்.

சற்றே கிறங்கிய நிலையில் தோழனின் வருகையை அறிவித்தது அவனது பெரிய வண்டியின் ஹார்ன் சத்தம்.
ஹேய் பாஸ் ,வாடா வெளில போலாம் 'கெட் யுர் ஃபாமிலி' என்ற சத்ததோடு உள்ளே நுழைந்தான் சுரேஷ்.
சுரேஷ் பாசுவின் அலுவலகத்துக்கு மென்பொருள் சப்ளையர்.  இரண்டு மூன்று வருடப் பழக்கம்.  அவனால் தான் பாசு குடிக்கக் கற்றுக் கொண்டான் என்று சுதாவுக்கு அந்தக் குடும்பத்தை அவ்வளவாகப் பிடிக்காது.
அதுவும் அவர்கள் கல்கத்தாவிலிருந்து நவநாகரீகமாக வந்து இந்தியும் ஆங்கிலமும் கலந்து பேசுவது ,அதற்கு பாசுவும் தாளம் போடுவது, எல்லாரும் சேர்ந்து இரவுக் காட்சிகளுக்குப் போய் குழந்தைகளின் தூக்கம் கெடுவது இப்படி நீண்டு கொண்டே போகும் அவள் லிஸ்ட்.
சுரேஷின் மனைவி வட இந்தியப் பெண்.அழகி. விதம் விதமாக சமைக்கத் தெரிந்தவள்.  அடிக்கடி இவர்களை அவர்கள் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பார்கள்.
தான் வரவில்லையென்றால் தனக்கு தாழ்வு மனப்பான்மை என்று நினைத்து விடுவார்களே!! சுதாவும் குழந்தைகளை அழைத்துச் செல்வாள்.

அவர்கள் மூவரும் பானங்களோடு இருந்து உரையாட,  பழைய இந்திப் பாடல்களைப் பாடி முடிக்கும்போது,குழந்தைகளைக் கவனித்து அவர்களை உண்ண உறங்க வைப்பாள்.
11 மணி அளவில் 'ஓ ஐ அம் ஃபைன் என்றபடி பாசு கிளம்ப அரவமற்ற வீதிகளில் புகுந்து வீடு வந்து சேருவார்கள்.
 
இதே போல ஒரு சனிக்கிழமை இரவு.  அடுத்த நாள் சுதா பாசு இருவருக்கும் திருமண நாள்.
கோவை ராம் நகர் ஸ்ரீராமனைத் தரிசிக்க இருவரும் யோசித்துவைத்து, முதலில் சுதாவுக்கும் தனக்குமாக உடைகள் எடுத்து வந்தான் பாசு. அவனுடைய அலுவலகமும் அங்கேயே இருந்ததால் சுலபமாக முடிந்தது வேலை. தனக்குப் பிடித்த மாதிரி,ஆரஞ்ச் வண்ண டெர்கோசா பெரிய பூக்களோடு இருந்த புடவையும், ஸ்கைப்ளூ வண்ண லிபர்டி டெரிகாட்  சட்டையும் வாங்கி வண்டியில் வீட்டுக்கு விரைந்தான்.

தெருமுனை திரும்பும் போதே சுரேஷின் வண்டியைப் பார்த்ததும் மனம் திக் என்றது.
நண்பனைக் காண்பதில் சந்தோஷம் என்றாலும் ,சுதாவின் அதிருப்தியை 
இன்று சம்பாதிக்க வேண்டாமே எனும் யோசனை முன் நின்றது.
வண்டியை நிறுத்தியதும் சுரேஷின் சிறுவர்களும், தன் மழலைகளும் ஆடும் ஆட்டத்தைக் கண்டு மனமகிழ்ச்சியோடு உள்ளே நுழைந்தான்.

முகம்,மனம் நிறைந்த காதலோடு கணவனையும் அவன் கைகளில் இருந்த பைகளையும் எதிர்கொண்டாள் சுதா. அடிக்குரலில் அவர்களைச் சீக்கிரம் அனுப்பிவையுங்கள் என்ற வேண்டுகோளோடு.
ஹ்ம்ம். நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே.
சுருக்கமாகச் சொல்லப் போனால் விபரீதமாக முடிந்தது.
இரண்டு மூன்று மடக்கு விஸ்கி உள்ளே போனதும் , எல்லோருக்கும் குஷி பிறந்து
பாடல்கள் ஆரம்பிக்க ,சுதா மணியைப் பார்த்தாள் 9 ஆகி இருந்தது.
கண்வனின் அருகில் நின்று தோசை தட்டில் தோசையைப் போட்ட வண்ணம், சீக்கிரம் ஆகட்டும் என்று கிசுகிசுத்தாள்.
சுரேஷின் மனைவி பலமாகச் சிரித்தபடி  நோ சீக்ரெட்ஸ் நவ் என்று பாசுவின் அந்தப்பக்கம் நின்று அவன் தோள் மேல் கைவைத்தாள்.
அவன் அதை உணர்ந்தானோ இல்லையோ, அவன் கை தன்னிச்சையாக அவளை வளைத்தது.  சுதாவின் வயிற்றில் இடி இறங்கியது போல ஒரு உணர்வு.

சரேலென்று கொந்தளிப்போடு கையிலிருந்த பீங்கான் தட்டை விட்டெறிந்தாள்..சுக்கு நூறாக உடைந்த தட்டை வெறித்தவள்,
தன் பெண்களை அழைத்துக் கொண்டு படுக்கை அறைக்குள் சென்று கதவை சத்தமில்லாமல் சாத்தினாள்.
கொஞ்ச நேரத்தில் சுரேஷ் வண்டி புறப்படும் சத்தமும், பாசு தன் அறைக்குள் செல்லும் சத்தமும் கேட்க. குழந்தைகள் உறங்கும் வரை தட்டிக் கொடுத்தவள் ,அழுத கண்களோடு உறங்கச் சென்றாள்.
காலை எழுந்தவள் கலக்கத்தைக் களைந்துவிட்டுக் கடவுளிடம் விளக்கேற்றி நிம்மதி வேண்டினாள்.
யந்திரத்தனமாக டோஸ்ட் செய்து, தோசை எல்லாம் வார்த்து, ஆரஞ் கிசான் கலந்து மூவருக்கும் சாப்பாட்டு மேஜையில் வைத்துவிட்டு, தன் துளசி, மல்லி என்று செடிகளொடு நேரம் கழித்தாள்.
பின்னால் பாசு வரும் சத்தம் கேட்டதும் தோசை வைத்திருக்கிறேன்.  குழந்தைகளோடு சாப்பிடுங்கள். நான் கோவில் போகவேண்டும் என்று திரும்பினாள்.

அழகான பாசுவின் முகம் சிவந்த கண்களோடு தன்னைப் பார்ப்பதும் தெரிய கண்ணில் தயாராக இருந்த துளிகள் கீழே சிந்தின.
 

சுதா மா. ஸாரி. ஐ டிட் நாட் know what came over me.  நாம் அனைவரும் கோவிலுக்குப் போகலாம். பத்துவருடம் முன் நாம் சேர்ந்த சிறந்த தினம் இல்லையா.
ஆமாம் ஆனால் அந்தப் புனிதம் இருக்கிறதா தெரியவில்லை.
நான் திருச்சி போய் வருகிறேன். எனக்கு அகிலாண்டேஸ்வரியிடம் முறையிட ஆசை என்று கலங்கிய மனைவியின் கரங்களைப் பிடித்தான் பாசு.

நீ போனால் நானும் வருவேன்.  எனக்கும் அவளிடம் கேட்கவேண்டும் என் மனைவி ஏன் என்னிடம் நெருங்க மறுக்கிறாள் என்று.
 மது அரக்கனை அழித்த மாதவன் கிடைத்தால் இந்த லக்ஷ்மியும் பாசுவிடம் வருவாள் என்கிற பதில் சட்டென்று வந்தது.
அன்று ராமர் கோவிலில் இருவரும் தரிசனம் செய்யும் போது மங்கையும் மணாளனும் சேர்ந்திருக்க மது வேண்டாம் என்கிற கையெழுத்திடாத ஒப்பந்தம் நிறைவேறியது.
மது இல்லாத புது இரவு வந்தது.

Monday, April 24, 2017

பாலியின் வீடுகளில் கோவில்கள். அவர்கள் கலாசாரம்

விருந்தாளிகளுக்குத் தனி இடம்.
வாஸ்து முறைப்படி அமைந்த கிராமம்.
  வீட்டுக்குள் நுழைவது நல்ல சக்தியாக இருக்க வேண்டும் என்ற முறைப்படி இலைகளில் கொஞ்சம் சாதம், எள்ளு, மலர்கள்,தானிய ம் ,ஊதுபத்தி மணம்  கமழப்  பச்சையும்,மஞ்சளுமாக  அழகுக் காட்சிகள்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பழைய முறைப்படி கட்டப்பட்ட வீடு.
வீட்டுக்குள் சந்நிதி முன்னோர்களுக்கு.

வண்டியோட்டி சுதாமா  சொல்லி நான் புரிந்து கொண்ட
விவரங்கள்... சில கோவில்களுக்கு அருகேயே  இறந்தவர்களுக்கு எரியூட்டும் இடம் இருக்கிறது.

இந்து மதத்தையும் புத்தமதத்தையும்  கலந்து
வாஸ்து முறைப்படி வீடுகள் அமைகின்றன.
எரிமலை அவர்களுக்குத் தெயவங்கள் வசிக்கும் இடமாம். கடல்
நாகம் முதலிய  அசுரர் சக்திகள் வசிக்கும் இடம்.
இரண்டுக்கும் நடுவில் அமைந்த சமவெளியில் வீடுகளில் எடுத்த திசைகளின்   சக்திக்கு மதிப்புக் கொடுத்து
அறைகள் அமைக்கப் படுகின்றனவாம்.
தெற்கு   கழிவறைகள் இருக்குமிடம். வடகிழக்கு நல்ல சக்தி இருக்கும் இடமாம்.
வீட்டுக்கு   காம்பவுண்டு சுவர்கள் நல்ல உயரத்தில் எழுப்பப் பட்டிருக்கின்றன.
வாயில் குறுகலாக இருக்கிறது.  இரு புறமும்
சின்னைச்ச்சின்ன  கல்லாலான வடிவங்கள் திருஷ்டி பொம்மைகளாக மிரட்டுகின்றன.

எல்லோரும் வளம் பொருந்தியவர்களாக இல்லை. சிலர் வசதி படைத்தவர்கள். பார்க்கப் பளிச்சென்று  தங்க முலாம் பூசிய வண்ணக் கதவுகள்.
சில கதவுகள்  இல்லாத வாசல்கள். அவ்வாறு ஒரு வாசல் வழியே  ஒரு சந்நிதியில் அனுமன் மஞ்சள் வர்ணத்தில் பளிச்சிட்டார்.
உள்ளே போகத்  தயக்கமாக இருந்தது.
இங்கேயும் ஜாதி,வர்ணங்கள் வழக்கத்தில் இருக்கின்றன.
என்னுடன் படம் எடுத்துக் கொண்ட பெண் தன்னை  உயர் ஜாதி பெண் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார்.
 அவரவர் ஜாதிக்கு  ஏற்ற கோவில்களுக்குத் தான் செல்ல வேண்டுமாம் .
அட சாமி என்று  வருத்தமாக இருந்தது.
நல்லவேளை நம்மூரில்  அப்படி இல்லை. இவர்கள் 5000 வருடங்களுக்கு முன் இருந்த வழக்கத்தைப் பின் பற்றுகிறார்களோ. நீண்டு விட்டது பதிவு. இன்னும் விஷயங்கள்   நிறைய. பிறகு பார்க்கலாம்.😇😇😇

Friday, April 21, 2017

பாலி,மஹாபலி, வாலி, ராமாயணம்...பாலி 4

இராமாயண இறுதி கட்டம்.
கருடன் 
அசோகவனத்தை நினைவு படுத்தும் கேன்கனா  வனம் 
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
சரஸ் வதி 

  பாலி சென்ற பிறகு தெரிந்த  வரலாறு என்னைக் குழப்பியது . கடோத்கஜனுக்குப் பிரம்மாண்ட சிலை. மஹாபாரதத்தில் அனைவரையும் எதிர்ப்பது போல தத்ரூபமாகச் செதுக்கப்பட்டது ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்து நூசா தூவா போகும் வழியில் இருந்தது.
பிறகு ராவண வாலிக்கான யுத்தம் என்று சில சிலைகளை எங்கள் காரை ஓட்டிய சுதாமா சொன்னார்.

மஹாபலி  ராஜ்யமும் இங்கே  இருந்தது என்றும்,விஷ்ணுவும் மஹாபலியும்
போர் புரிந்தார்கள் என்றும் சொன்னார்.
ஒன்று புரிந்தது.
கோடரி வைத்திருந்தால் அசுரர்கள். வில்லேந்தினால் ராமன் ,இல்லையானால் பாண்டவர்கள்.

இங்கிருக்கும் கோவில்கள்  மஹாபலிபுரம்....மாமல்லபுரம் போலவே இருக்கின்றன.
கடலோரக் கோவில்கள் ஏழு.
இதைத் தவிர ஜாவாவில் ஒரு பிரம்மாண்டமான  கோவில் ஒன்றும் இருக்கிறது.
அங்கே போக முடியவில்லை
இங்கு வந்து குடியேறியவர்கள் பெயர் எல்லாம் மீரா,சித்ரா, காந்தா  என்று இந்தியப் பெயர்களாக இருக்கின்றன.
இங்கே  உள்ள கலாசாரம் ராமாயண காலத்தில் பரவியது போல ஒரு
தோற்றம்.

பாலி ராமாயணம் சீதையே அரக்கியருடன் போர் புரிவது போல 
அமைந்திருக்கிறது.  வீரப் பெண்மணியாகச் சித்தரிக்கப் படுகிறாள்.

Wednesday, April 19, 2017

சித்திரச்சோலை ....பாலி 3

Add caption
Add caption
இந்த ஓவியத்தைப் பற்றி கேட்ட பொது க்ரிஷ்னா என்றார்கள். திரௌபதி வஸ்திராபஹரணமோ  என்று யோசித்தேன். எல்லா மங்கையர் கையிலும் இந்த விசிறி இருக்கிறது. நாங்கள் பார்த்த  மாரீச,ராவண ,சீதை நாடகத்திலும் சீதை கையில் விசிறி. அந்த விசிறியால் சூர்ப்பனகையை விரட்டுகிறாள். பிறகு ராமனுடன் நடனம்.
இந்தக் கோலங்கள் மிக  கச்சிதம் .எல்லா இடங்களும் நம் ஊரை நினை செய்கின்றன. இந்த ஓவியங்களில் அநேகமாக ராமனும் ,சீதையும், ராவணனும், வானரங்களும்  காணப்படுகின்றனர் . 
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Tuesday, April 18, 2017

சிற்பம் சித்திரம் ....பாலி 2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
சிற்பக  கலைஞர் கவனமாகச் செதுக்குகிறார்.
  இந்த பெயிண்டுகள், உளிகள் எல்லாம் எங்கள் வீட்டிலும் இருக்கின்றன.அவரிடம் நான் ஆங்கிலத்தில் சிங்கம் பற்றி சொல்ல அவரும் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் எனக்குத் தான் செய்யும் விதத்தை விளக்கினார். மிக அற்புத வடிவங்கள் அந்தக் கடை முழுவதும் இருந்தன. புகை பிடிக்கவேண்டாம் என்று அறிவுறுத்தினதற்குச் சிரித்துக் கொண்டார். அவருக்குப் பசி மறக்க புகை பிடிக்கவேண்டுமாம்.
செதுக்குவதற்குத்  தேவை உளியும் சிற்பியும் மரமும்.
 மிருதுவான நளினமான கைகள் .மனதில் உருவானது மரத்தில் வடிவெடுக்க
உரம் கொண்டு வலுவாயின.
அர்த்தநாரி 
 

Sunday, April 16, 2017

பாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.

கிட்டத்தட்ட 16  தீர்த்தங்கள் எண்ணினேன்.
எல்லா இடங்களிலும்  கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட
புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள்.
சிவபிரானுக்கான கோவில்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 பேத்திக்கு ஈஸ்டர் விடுமுறை. இரண்டு வாரங்கள்.
அருகில்  இரண்டு மணி விமானப் பயணத்தில் போய் வரலாம் என்று தீர்மானம் .
எல்லாரும் ஒத்துக்க கொள்ள கிளம்பினோம்.
படங்கள் 

Saturday, April 08, 2017

. திருமங்கலம் திண்டுக்கல் காட்சிகள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
நாங்கள் குடியிருந்த உசிலம்பட்டி மதுரை ரோடு
Thirumangalam Busstand.
Dindugal Junction
எங்கள் பள்ளி.
பல பயணங்களுக்கு வழிகாட்டி.
 ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடங்கிய பயணம் இதோ இந்த ஜாகர்தாவில் நிற்கிறது.
இடைப்பட்ட வருடங்கள்  திருமங்கலம், திண்டுக்கல்,பசுமலை,புதுக்கோட்டை ,சேலம்,கோயம்பத்தூர்,திருச்சி,சென்னை என்று  வந்து சேர்ந்தது.
கற்றகாலம், அனுபவப்  பாடம் கற்றகாலம், சிரித்துக் கழித்த காலம். உறவுகள் சேர்ந்த காலங்கள் ,அவர்களுடன் களித்த  காலம்,அவையே பிரிந்த காலம்,
புதுப்புது நட்புகள்
அங்கங்கே நடப்பட்ட தூண்கள்

ஆதரவுகள் .
காலம் மாறிக் காட்சி மாறி,
வந்தது வருவது எல்லாவற்றையும் ஏற்றுச்  சிரிக்கவும் ஏற்கவும் அதே காலம் கற்றுக்கொடுக்கிறது.
அனைவரும் வாழ்க வளமுடன்.

Tuesday, April 04, 2017

மறக்க முடியாத சிலர்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

களக்காட்டம்மை
++++++++++++++++++++
   நாங்கள் சென்னையில்  பாட்டி வீட்டுக்கு வரும்போதெல்லாம்
நான் எதிர்பார்ப்பது எதிர் வீட்டுக்கு வருகை தரும் விருந்தாளியான
களக்காட்டம்மை.
 ஒரு  சிரித்த முகத்தோடு,தன் கஷ்டங்கள் எத்தனையோ இருந்தாலும்
அதைப் பற்றி  முகத்தில் ஒரு துளி கூடக் காண்பிக்காமல்
கதைகள்  சொல்வார்.
 எதிர்வீடு  என்பது பெரிய குடும்பத்தைக் கொண்டது. அப்பா
ஒரு ஹோட்டல் வைத்து நடத்திக் கொண்டிருந்தார்.
மனைவி சிறிது நோயாளி.

வரிசையாகக் குழந்தைகள்  பெற்றதால் வந்த களைப்பு அது.
இந்தச்  சிரமமான நேரங்களில் களக்காட்டம்மை வந்து உதவி செய்வார்.
பெரிய பையன் கல்லூரியிலும் ,கடைசிப் பையன் ஒன்றாம் வகுப்பிலும்
 இருந்ததாக நினைப்பு. நடுவில் மூன்று பெண்கள்.. பாப்பா,தைலா,லக்ஷ்மி.  கையில் இரண்டு புடவைகள். தலை தோட்ட துண்டு  என்று  சிறிய பையில்  வைத்து  கூடவே  குழந்தைகளுக்கான  முறுக்கு, தட்டை  என்று ஏதாவது.  சூளையிலிருந்து வருவதால் சூளையம்மை  என்றும் கூப்பிடுவார்கள்.      அவரிடம் மிகப் பிடித்த   விஷயம் அவர்  இந்த   மடி, ஆசாரம்  எல்லாம் பார்க்க  மாட்டார்.   எப்பொழுது வேணுமானாலும் அருகில் போகலாம் . கதை கேட்கலாம். அவருடைய ஊரில் நடந்த திருமணம், மறைந்த தன் கணவர், ஊரின் செழிப்பு  என்று  ஏகப்பட்ட   கதைகள் அவரிடம் கேட்கலாம். எந்த   வீட்டில் அப்பளம் ,வடாம்  இடுவதாக இருந்தாலும் முதல் அழைப்பு அம்மைக்கு தான். அங்கே  நாங்களும் போய் விடுவோம்.  எண்ணி வைக்கப் பட்ட அப்பள  உருண்டைகள எங்கள எல்லோருக்கும் அளவோடு கிடைக்கும்.  மொட்டை  மாடியில் அப்பளம் உலர்த்த,  அதைத் திருப்பிப் போட, காகம் கொத்தாமல்  குடை  பிடித்துக் காவல் இருக்க  இந்த வேலைகளை  செய்ய எங்கள் பட்டாளத்தின் உதவி  அவர்களுக்கு வேண்டி இருந்தது.                      


வேலை முடியும்  நேரம்  அம்மையும் மற்றவர்களும்  வந்து விடுவார்கள். சொளகு, முறம்   இவைகளில் அப்பளங்களும், வேஷ்டியில் மடித்து வடாம் வற்றல் களும் கீழே  இறங்க,
நாங்களும் களக்காட்டம்மையோடு   வீட்டுக்கு வந்துவிடுவோம்.  ஒருவரும் அவரவர் வீட்டுக்குப்  போகமாட்டோம்.

அம்மை கையால்  வேகவைத்த நேந்திரம் பழம், புட்டு எல்லாம் கிடைக்கும். குறைந்த வெளிச்சமே இருக்கும் சமையல் அறையில் கிட்டத்தட்ட 10 குழந்தைகளுக்கு  பசி தணித்துவிடுவார்.

அந்த வெள்ளைச் சுருட்டமுடியும் ,கழுத்தின் அடியில் பம்மென்று  முடியப்பட்ட  கூ ந்தலும் வெகு அழகாக இருக்கும்.

நிதானமாகக் குளித்து குருவாயூரப்பன் படைத்து முன் விளக்கேற்றி. வணங்கும் பொது நாங்கள் வெளியே விளையாடப்  போவோம்.

இரவு இந்தப் பாட்டி வீட்டு முற்றத்தில்  அனைவருக்கும்
பெரிய கற்சட்டியில்  பிசையப்  பட்ட குழம்பு சாதமும்  சுட்ட அப்பளமும் உண்டு.
அது மாயமான வுடன் கெட்டி மோர் விட்டுப் பிசைந்த சாதம்
மாவடு, சாறு என்று தனித்தனியாக வாழைப்பூ  இதழில்
பாட்டி கொடுப்பார். அமிர்தமான கோடை நாட்கள்.

ஒருநாள் மதியம் அனைவருக்கும்  உணவு கொடுத்துவிட்டு
தலைக் கோசரக் கட்டையில் ஈரத்தலையை உலர்த்தியபடி இருந்த   அம்மைக்கு, நெஞ்சுக்குத்தும் வழியும். முதல் நாள் அப்பள மாவு இடிக்கும் போதே  நிறைய வியர்த்துக் கொட்டியதாம் .
 உடனே  ஆச்சார்யா டாக்டர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று  ஜிஹெச்சிலும் சேர்த்தாச்சு.

எங்களுக்கெல்லாம் ஒரே பயமாக இருந்தது.
யாருக்கும் ஒன்றும்   செய்யத் தோன்றவில்லை.

ஆனால் நல்ல வேலையாக அம்மைக்கு ஒன்றும் ஆகவில்லை.  20 நாட்கள் கழித்து வீட்டுக்கு ஆம்புலன்சில் வந்துவிட்டார்.
பழைய குண்டுக்கு காட்டுது தேகம் மெலிந்து
 களைப்புடன் வந்தவர் முகத்தில் சிரிப்பு மட்டும் மாறவில்லை.
நாங்களும் அவரோட அதிகமாகப் பேச முடியவில்லை.

தான் சூளைக்குத் திரும்புவதாகவும்,களக்காட்டுக்கே
  ரயிலில்  சென்று விடுவதாகவும் பாட்டியிடம் சொன்னாராம்.

அதற்குள்  எங்கள் விடுமுறை நாட்களும் முடிந்ததால்.
நாங்களும் கிளம்பினோம்.
களக்காட்டம்மையைப் பிறகு பார்க்கவில்லை.

நான்கைந்து ஆண்டுகளில் என் திருமணம் நிச்சயிக்கப்பட்டபோது அவருக்கும் கடிதம் எழுதி போட்டேன்.
ஆசைகளுடன் 25 ரூபாய்ப் பணமும் மணி ஆர்டரில் வந்தது.
Monday, April 03, 2017

பொறுமை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

கோபம்,பாபம்  இது அடிக்கடி என் மாமியார்
உபயோகிக்கும் வார்த்தைகள்.

காலையில் எழுந்ததிலிருந்து எங்கள் இருவருக்கும்  மேலாண்மையாக
ஆஜிப் பாட்டி.
நான்கு மணிக்கே  எழுந்து தான் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து வடுவூரார்
த்ரில்லர் படித்துக் கொண்டிருப்பார்.

மாடியிலிருந்து நான் இறங்கும் சபதம் கேட்டதும்,
எனக்குக் கட்டளைகள் பறக்கும்.
என் மாமியார் அதற்கு முன் எழுந்து
காய்கறிகள்  நறுக்கி வைத்திருப்பார்.

பாட்டிக்கு தனி சமையல்.
எங்கள் குடும்பத்துக்குத் தனி சமையல்.
எட்டரை மணிக்கு அம்மா தயாராக எல்லாவற்றையும் செய்து வைத்து
தன் மாமியாருக்கு இலை போடும் அழகே தனி.
அப்போதே 60ஐத்தாண்டிய  வயது.
மனத்திண்மை ஒன்றே அவரை இருத்தி வைத்தது.

அந்தக் குணத்தில் கொஞ்சமாவது என்னில் படிந்திருக்க வேண்டும்.
தன் மாமியார் வார்த்தைக்கு மறு வார்த்தை சொன்னார்
என்பதே கிடையாது.
 கோபத்தில் ஒரு நொடியில் நூறு தவறு இழைத்துவிடலாம்.
அதை அந்த நேரம் கட்டுப் படுத்தினால்
நூறு நன்மைகளுக்கு வழிவகுக்கலாம் என்பார்.

பாட்டியே என் மாமியாரை பொறுமையில் பூமாதேவி என்றே அழைப்பார்.
 நேற்று நான் படித்துமுடித்த அனுத்தமா அவர்களது நாவலில் வரும் பாரதி என்கிற
பாத்திரம் அப்படியே என் மாமியாரை நினைவுக்குக் கொண்டு வந்தது.

கூட்டுக் குடும்பத்துக்கு உண்டான அத்தனை லட்சணங்களும் அந்த நாவலில்.
 இப்பொழுது அதைப் போல் எதிர்ப்பார்க்கவும் முடியாது. எதிர்பார்க்கவும் கூடாது.

இருந்தும் கடந்த காலத்துக்கு அது ஒரு சாம்பிள்.
படிக்கவும் பொறுமை வேண்டும்.

Saturday, April 01, 2017

1200, Naachiyaar.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


 12 வருடங்களுக்கு முன்  மனதில் ஓடும் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்தேன்.
அதுவும் ஒரு ஏப்ரில் மாதம். என்னுடன் எழுதியவர்கள் அனைவரும் எத்தனையோ சாதித்து ,இன்னும் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
என் அன்புத் தோழிகள் துளசி கோபால்,கீதா சாம்பசிவம் ,கோமதி அரசு, கலா ஸ்ரீராம். 

சமகால எழுத்தாளர்கள். என் எழுத்துக்கு உரம் இட்டவர்கள்.
எனக்கு முன்பிருந்து எழுதத் துவங்கி ஓயாமல் உழைப்பவர்கள். 

அப்பொழுது இருந்த இணைய தளங்கள் எல்லாமே 
நன்றாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
பத்திரிக்கையில் எழுதிக் கொண்டிருந்த பலரும் 
இணையத்திலும் இருந்தது எனக்கு மிகப் பெரிய
ஆச்சர்யமும்,சந்தோஷமும் கொடுத்தது.

பல போட்டிகள், பல தொடர்கள்,பல அழைப்புகள் 
எழுதுவதற்கான  சந்தர்ப்பங்கள்,சந்திப்புகள் இப்படி எத்தனையோ  என்
சிறிய  மனஓட்டத்தை விரிவு படுத்தின.
 சில நண்பர்கள் இப்போது இல்லை.
மற்றவர்கள்  எப்போதும் போல் என்னுடன்
நட்புடனே, ஆதரவாக என் துன்ப வேளையில்
தூணாக இருந்து கொண்டு
என் சுணக்கத்திலிருந்து விடுவித்தவர்கள்.
அத்தனை நல் இதயங்களையும் இங்கே எழுதக் கூட இப்போது
எழுத வலுவில்லை.
என் மனம்  எதையும் மறக்கவில்லை. மீண்டும் சுறுசுறுப்பாக
இயங்க இறைவனை வேண்டுகிறேன்.
அனைவருக்கும் என் நன்றி. வாழ்க வளமுடன்.