Blog Archive

Saturday, January 22, 2022

(மீண்டும்) பாட்டி,அம்மா, நான்,பெண், பேத்தி பேரன்.

வல்லிசிம்ஹன்

Vallisimhan  October 2011
புரசவாக்கம் தெரு   
1970 வரை என் சொர்க்கமாக இருந்த இடம்:)


புரசவாக்கத்து வீடு, மூன்று அறைகளும் வீட்டுக்கு வெளியே இருக்கும் வெளிவசதிகளும் கொண்டது.

கோலம் போடும் இடத்தைத் தாண்டியதும் ஒரு பத்துக்குப் பத்து வரவேற்பறை. ஒரே ஒரு நாற்காலியும் பெஞ்சும் உண்டு:)

கம்பித்தடுப்பும் அதற்கு மூங்கில் தட்டியினாலான மறைப்பும்(கர்ட்டன்)உண்டு.
இதைத் தாண்டியதும் நான் சொன்ன கூடம். அதில் ஒரு காத்ரேஜ் பீரோ, அரிசி மூட்டை வைக்கும் ஒரு  பெஞ்ச்.

அத்ற்கு முட்டுக் கொடுக்க இரண்டு செங்கல்கள்
அந்தப்பக்கம் சுவரில் ஒரு குட்டி ஜன்னல்.
இந்தப்பக்கம் சுவரில் முப்பத்திரண்டு கடவுள் படங்கள்.:)
மூலையில் நல்ல மரத்தால் செய்த அலமாரி
ஒன்று.
மேல்தட்டில் அலங்கார பொருட்கள்.
இரண்டாவது தட்டில் தாத்தாவின் பிரபந்தம்,பாட்டியின் சிவகாமீயின் சபதம்
மாமாக்களின் எகனாமிக்ஸ் புத்தகங்கள் ,,
அந்தக் காலத்து விஞ்ஞான புத்தகங்கள்
கீழ் தட்டில் இவர்கள் பரிசாக வாங்கிய கோப்பைகள்,தட்டுகள் என்று வரிசையாக இருக்கும்.
அதற்கு
அடுத்த அறை கொஞ்சமே பெரீய புழக்கடையைப் பார்த்த சமையல் அறை.
அதீல் அடுப்பு மேடையின் கீழெ
கற்சட்டிகள் அடுக்கி வைக்கப் பட்டு இருக்கும்.
அதைத்தவிர பாட்டியின் தம்பி, ஹைதராபாத் மிலிட்டரி மாமா வாங்கி வரும்
பீங்கான் ஊறுகாய் ஜாடிகள். என் உயரத்துக்கு இருக்கும்.
கலயங்களில் காய்கறிகள் கழுவி வைக்கப் பட்டிருக்கும்.

தையல் இலைக்கட்டுகளும் இருக்கும்.
எதிர்த்த சுவரில் பருப்பு வகையறாக்களை வைக்கும் காரைக்குடி டப்பாக்கள்
வைக்க ஒரு மரத்தட்டு சுவற்றில் அடித்து வைத்திருப்பார்கள்.
அதன் அருகிலேயே காப்பிக் கொட்டை அரைக்கும் மெஷினும் இருக்கும்..

அந்தப்பலகையில் மாட்டியிருக்கும் கொக்கிகளில் நல்லெண்ணை,தேங்காயெண்ணை,
நெய், 

  நெய். டால்டாவா என்று நினைவில்லை.
ஒரு இனிய பெண்மணி, நெற்றியில் கருப்புக்கலரில் நாமம்
டாட்டூ மாதிரி போட்டிருப்பார்.
அவர் கொண்டு வந்து கொடுக்கும் பட்சண நெய்.  
எவர்சில்வர் தூக்குகளில் தொங்கும்.

சமையலறைக்கு மட்டும் ஓடு வேய்ந்திருக்கும்.
அவ்வப்போது சீனிம்மாவை மட்டும் கடிக்கும் தேள்களும் அங்கிருந்து விழுவதுண்டு.
நான் ஒன்று கூட பார்த்ததில்லை.

தேள் கொட்டினால்,சீனிம்மா,தன் வேலையெல்லாம் முடித்துக் கொண்டுதான்,
டாக்டரைப் பார்க்கப் போவார்.
இல்லாவிட்டால் வீட்டுக்கே வந்து ஊசி போடும்  டாக்டரை
அவர் பெயர் நடராஜன் என்று நினைவு.
எல் எம் டி என்று ஞாபகம்.
 வரவழைப்பார்.

இதே வீட்டில் அம்மாவைப் பெண் பார்க்க அப்பா குடும்பம் வந்திருக்கிறது.
மாமாக்கள் திருமணங்கள்,
பிறகு என் திருமணம் எல்லாம் நடந்தன.
வாசல் சிமெண்ட் தரையில் கட்டில்கள் போட்டு ஆண்களும்,
வீட்டின் உள்ளே பெண்களும்,முதல் அறையில் குழந்தைகளும் படுப்போம்.
சரி பாத்திரங்கள் அலம்பற சீனுக்குப் போவோமா::)

அப்போதெல்லாம் சமையலறைக் குழாயில்
சரியாக காலை மூன்று மணி அளவில் கொட கொட
சப்தத்துடன் தண்ணீர்
வரும் சப்தம் கேட்டு நான் விழித்துக் கொ;வேன்.
அதற்கு முன் சீனிம்மா,சமையல் அறையில் பாத்திரங்கள் போட்டு வைத்திருக்கும் இடத்தில்
ஔ மணை போட்டு
அங்கிருக்கும் பாத்திரங்களுக்கு
வேண்டிய உபசாரங்கள் செய்து அலம்ப ஆரம்பிப்பார்.
நடு நடுவில் பக்கத்து மேடையின் மீதிருக்கும் சிமெண்ட்
தொட்டியில்
நல்ல தண்ணீரைப்
பிடித்துச் சேமிப்பார்.
எத்தனை உழைப்பு. (கடைசி வரை இடுப்பு
வலி இருந்தாலும் முகத்தில் காண்பித்துக் கொள்ள
மாட்டார்.)
06.00 Am.
அப்போது மணி ஆறு ஆகியிருக்கும். ஒவ்வொருவராக மாமாக்கள்,தம்பிகள்,அம்மா எல்லோரும் எழுந்து கூடத்தில் அவரவர் படுக்கைகளில் உட்கார்ந்து ,பேசிக்கொள்ள ஆரம்பிப்பார்கள். அது நாட்டு நடவடிக்கைகளிலிருந்து ஊர் நடப்பு,யாருக்குக் கல்யாணம்,என்ன படம்,சிவாஜி மாதிரி உண்டா இப்படி போகும்.


நானும் சீனிம்மா குளிக்கப் போகும்போது இங்கே வந்துவிடுவேன். அம்மாவுடன் ஒட்டியபடி அவர்கள் பேச்சைக் கேட்பதில்,அந்தக் குரல்களின் அன்பு மொழியில் ஒருவிதப் பாதுகாப்பு இருக்கும்.

சீனிம்மா தான் மட்டும் சில்லென்ற பச்சைத்தண்ணீரில் குளித்துவிட்டு,மற்றவர்களுக்கு பெரிய வென்னீர்த்தவலையில் தண்ணீரை நிரப்பிவிட்டு
அடுப்பு மூட்ட அம்மாவைக் கூப்பிடுவார்.
''போறும் பாப்பா, அதுகள் இன்னும் வெளியே கிளம்பணும். பேச்சு நிறுத்திக் கொள்ளுங்கள்''
என்று குரல் கதவுக்குப் பின்னாலிருந்து வரும்.

அத்தனையூண்டு மூன்றே அறை கொண்ட வீட்டில் அத்தனை பேர் எப்படி இருந்தோம்!!

உடமைகள் கொஞ்சம். மனம் பெரிய விசாலமானது.அது ஒன்றுதான் காரணமாக இருக்க முடியும்.
மீண்டும் சீனிம்மா ஒரு பெரிய பாத்திரத்தோடு வாசலில் பால் வாங்கக் கிளம்புவார்.

மாடு ஒன்று கட்டியிருக்கும். தோலால் தைத்த கன்று ஒன்றும் நிறுத்தி இருக்கும்.நானும்
அந்தக் கோபாலுக் கோனாரிடம் கேட்பேன். '' இந்தக் கன்னுக்குட்டி கத்தாதா '' என்று அவரும் சலிக்காமல் சொல்லுவார். அது புல் மேயப் போயிருக்கு. நான்
 திரும்பிப்  போகும்போது இந்த உடம்புக்குள்ள வந்துவிடும் என்று.

ஆறு வயதில் எனக்கேன் இந்தச் சின்ன விஷயம் கூட எட்டவில்லை என்று,
இப்பொது யோசிக்கிறேன்.

இப்போது என்றால் காலமே வேறு. பெரிய பேரன் (2006)சொல்கிறான்
 ,150 வருடங்கள் வாழ மருந்து கூடிய சீக்கிரம் வந்துவிடுமாம். முடிந்தால் அவனே கண்டு பிடீக்கப்போகிறானாம்

''நோ படி ஹேஸ் டு டை பாட்டி'':)

இப்போது இந்தக் கதை எழுத என்ன காரணம்???
இருக்கு.அது அடுத்த பகுதியில்

வரும்:))))
அன்று சீனிம்மா எங்களைப் பராமரித்ததற்கும், இப்போது இங்கே நாங்கள்
 வந்து இங்கு(சிகாகோ)

இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இல்லை.
பாட்டிகள் மாறுவதில்லை.
அநுபவங்கள் மாறுகின்றன. அவ்வளவுதான்.

அன்றைய பாட்டிக்கு வேலை செய்ய ஆள் கிடையாது.
இங்கே பேத்திக்கும் அதே நிலைமை.

அவளும் பாத்திரம் தேய்த்து,துணி உலர்த்தி,
வீடு பெருக்கித் துடைத்து எல்லாம் செய்தாள்.
இங்கு பேத்தியும் அதையே இன்னும் கொஞ்சம் நாகரீக லெவலில் செய்கிறாள்.
அப்பளம் வடகம் வத்தல் எல்லாம் செய்ய நேரம் இருந்தது.
இன்றைய பாட்டியான எனக்கு இங்கே வந்தால்தான் அந்த வேலை.
நம்ம ஊரில்தான்
க்ராண்ட் ஸ்நாக்ஸ் எனக்காகவே திறந்திருக்கிறார்களே;)
மேலும் எங்க வீட்டு மொட்டை மாடிக்கு தூசிதும்பு அதிகம் வரும்.
ரோட்டு மேல வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம்.
இந்த ''ஐக் புயல்'' சூறாவளி வருவதற்கு முன்பே கொஞ்சம் ஊறுகாய் வடாம் எல்லாம் போட்டாச்சு.
இரண்டு நாட்களாக சூரியனைக் கண்ணால் பார்க்கவில்லை.
நடுநடுவே பேஸ்மெண்ட் செக்கிங் வேற. அங்க தண்ணீர் சரியாக
வெளியேற்றப் படுகிறதா என்று பார்க்க வேண்டுமாம்.
சரி இந்த தற்கால நிகழ்வுகளுக்கும் சீனிம்மாவுக்கும் என்ன சம்பந்தம்.
அவருக்கு இந்த அமெரிக்க மனிதர்கள் பற்றிய நாவல்கள் ரொம்பவும் பிடிக்கும்.


எல்லா
எழுத்தாளர்கள்,ஆர்தர் ஹெய்லி,டானியல் ஸ்டீல்,ஜெஃப்ரி ஆர்ச்சர் இவர்களுடைய ஆக்கங்களைத் தமிழ்ப் படுத்தி ராகி.ரங்கராஜன் அவர்கள் குமுதத்தில் எழுதும்போது ஒரு வரி விடாமல் படிப்பார்.
எதைப் பற்றியுமோ யாரைப் பற்றியுமோ அவசரமாகக் கணித்து விடமாட்டார்.
எல்லோருடைய செய்கைகளுக்கும் ஏதாவது காரணம் இருக்கும்,
என்று நிதானமாக அதர்சைட் ஆஃப் மிட்னைட் கதாநாயகியை அலசுவார்.
என்னுடைய திருமணத்தின் போது இருந்த சீனிம்மாவுக்கும்,இப்போது
30 வருடங்கள் கழிந்த நிலையில் புத்தம் புதிதான சீனிம்மாவைப் பார்ப்பதற்கும்
ஏகப்பட்ட வித்தியாசம்.
சந்தோஷமாக இருந்தார். நான் முதல்தடவை டெட்ராய்ட்டுக்கு (1998)வந்த போது நிறைய விவரங்கள் எனக்குக்
கொடுத்தார்.அவரையும் அழைத்து வந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாரோ.
வருவதற்கு சம்மதித்திருக்க மாட்டார்;)பிள்ளைகளை விட்டு வரவேண்டுமே!!
காரணங்கள் இவ்வளவுதான் இந்தக் கொசுவத்திக்கு.
இந்தச் செல்லப்பாட்டி   என்  வாழ்வின்   வெகு முக்கிய அங்கம்
அவளை நட்சத்திரப் பதிவில் கவுரவிக்கணுமா இல்லையா.


at October 23, 2011 7 comments:  

என் பேத்தியும் நானும்.  2010
+++++++++++++++++++++++++++++
'பாட்டி,நான் உனக்கு காயெல்லாம் கட் செய்து கொடுக்கிறேன்.
காஃபி கூட மைக்ரொவேவ்ல போடுவேன்.
உன்னோடயே இருந்துடறேனே. அம்மா அப்பா மட்டும் போட்டும்''
இது ஸ்விஸ் பேத்தியின் கொஞ்சல்.
''இந்த ஊர்ல கொசு இருக்குடா,, கால் வைக்கிற இடமெல்லாம் அழுக்கு இருக்கும்,
தோட்டத்திலிருந்து பூச்சியெல்லாம் உள்ள வந்துடும்''
நீதான் அந்த பெரிய புஸ் புஸ் வச்சிருக்கியே, நாம அதெல்லாம் விரட்டிடலாம்.
நான் சமத்தா சாப்பிடறேன்.

அப்புறமா புதுப் பாப்பா வந்தாட்டு நாம ''பாசல்'' போகலாம்.

இப்படி விதமா விதமாகப் பேசி இங்கேயெ இருக்கேன்னு சொன்ன குழந்தை இதோ கிளம்பப் போகிறது:)

நீ கோவிந்தா உம்மாச்சி,சாயித்தாத்தா உம்மாச்சி எல்லார்கிட்டயும் பெசிண்டிரு பாட்டி.
நான் அப்புறமா வரேன்.
அப்பா பாவம் ,தனியா இருக்கப் பயமா இருக்கும். நான் அவாளோடயே போகிறேன் என்று
''டோரா'' பையையும் தூக்கிக் கொண்டது.

வசந்தமெல்லாம் கொஞ்ச நாட்கள் தான் என்று நமக்குத் தெரியாதா என்ன!!!எல்லோரும் வாழ வேண்டும்.
Friday, January 21, 2022

அதிசயம்ஒற்றுமை,அன்பு.

வல்லிசிம்ஹன்


எல்லோரும் என்றும் வளமாக வாழ வேண்டும்.
எது  விந்தை ...எது அதிசயம்.
இவை காலங்காலமாக 
நான்  ,நாம் ஆராய்ந்து வரும் உண்மை.
அன்பின் சகோதரி கமலா ஹரிஹரன் சொல்லி இருக்கும் கவிதை
போல பெற்றோர் பிள்ளைகள் 
உறவு மாறிக் கொண்டே தான் இருக்கிறது.

நான் சிறியவளாக இருக்கும்போது எனக்குக் கிடைத்த கூட்டுக் குடும்பம்
என் குழந்தைகளுக்குக் கிடைக்கவில்லை.
அவர்களுக்கு ஆதரவாக இருந்தது பெரும்பாலும் என் பெற்றோர்.

அதனால அங்கே ஆகர்ஷணை அதிகம்.

சிங்கத்தின் அம்மா மிக அருமையாக இருப்பார். இருந்தாலும்
12 பேரன் பேத்திகளுக்கு நடுவே
நம் குழந்தைகளுக்குக் கிடைக்கும் சலுகை
கொஞ்சம் மட்டுப் படும்:)

அதனாலயே அவர்கள் இன்னும் உரம் பெற்றார்கள்.
அதனால் நஷ்டம் ஒன்றும் இல்லை.

இப்போது நான் பாட்டியாக இருக்கும் போது
இளைய தலைமுறைகளின் சொற்களைக் கேட்டுக் 
கொள்கிறேன். அவர்களுக்கே உண்டான வேலை அழுத்தம், படிப்பு அழுத்தம்
எல்லா வற்றையும் பார்க்கும் போது இன்னும்
கொஞ்சம் பரிவுதான் காட்ட வேண்டி இருக்கிறது.

மிகவும் பிடித்த படங்கள் ஆனந்தம், பாண்டவர் பூமி,
எங்கள் குடும்பம் பெரிசு, மக்களைப் பெற்ற மகராசி 
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

நாம்  நம் குடும்பத்தைக் கவனித்தது போலவே
இப்பொழுது நம் மக்கள் அவர்கள் குடும்பத்தை க்
கவனிக்கிறார்கள்.

நம்மைக் கண்காணிக்க வீட்டில் மாமியார்,பாட்டி எல்லோரும் இருந்தார்கள்.
இப்போது இவர்களுக்கு அந்தத் தொந்தரவும் இல்லை.:)

சம்சாரம் மின்சாரம் படத்தில் வரும் அழும் லக்ஷ்மி மாதிரி
இருக்க இப்போது யாரும் தயாரில்லை.

பெற்றோர்களே முதலில் அவர்களைத் தனிக் குடித்தனம்
வைக்கவே ஆசைப் படுகிறார்கள்.:)

எப்படியோ எல்லோரும் அவரவர் கணவனையும், பெண்டாட்டியையும்
,குழந்தைகளையும் நல்லபடியாகக்
கவனித்துக் கொண்டால் போதும் என்று நினைக்கிறார்கள்.
இருக்கலாம் தான். நமக்கும் வயது 80க்கு மேல் ஆகும்போது?

யாராவது வேண்டாமா. தனி வீட்டில் குடி இருக்கும் மூன்று
பெண்களை எனக்குத் தெரியும். 80க்கு மேல் வயதானவர்கள்தான்.

நலம் வாழப் பிரார்த்தனைகள்.
Wednesday, January 19, 2022

நிலவைப் பார்த்து...வல்லிசிம்ஹன்எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

நிலாப் பைத்தியம் என்னை விடுவதாக இல்லை:)

இரவு  நேரம் பனி மூட்டத்தில் மறையும்
நிலா அன்னை காலையில்
படி இறங்கி வருகையில்
 வாசல் கண்ணாடிக் கதவுகளுக்கு அப்பால்
வந்து குதிக்கிறாள்.
உன்னை விட்டு நான் ஓட மாட்டேன்.
என்றும் உன்னுடனே நான் என்று சொல்கிறாளோ.!

15 வருடங்களாகப் படங்கள் எடுத்து வருகிறேன்,
அலுக்கவில்லை.
அப்படியே ஒரு கனிவான முகம் அதில் தெரிகிறது.

அப்படியே கதவோரம் ஒரு நாற்காலியைப் போட்டுக் 
கொண்டு உட்கார்ந்து பார்க்க ஆசைதான்.
கண்ணாடியைத் தாண்டி வரும்  குளிர்
என்னை நகரச் சொல்கிறது.

குளிர் கிரணங்களால் நிலத்தை அணைக்கும் அன்பு.
மலையோ மடுவோ, வீடோ ,காடோ
எதுவுமே  அவளுக்கு வேறுபாடு இல்லை.
மனித மனங்களின் காயங்கள் ஓடிப் 
போவதும் அவளால் தான். 
பழைய நினைவுகளைக் கொண்டு வந்து கொட்டி
அசை போட வைப்பதும் அவள்தான்.
நன்றி நிலாவே.


எல்லோரும் வளமுடன் வாழவேண்டும்.

யாரோடு....யார்.வல்லிசிம்ஹன், 

 நான் யார் என்ற கேள்வி 
அடிக்கடி தோன்றிக் கொண்டே இருக்கும் சில சமயம்.:)

நிறைய ஆன்மீக சிந்தனைகளைக் கேட்பதனால் 
இருக்கலாம்.
கேட்டால் மட்டும் பதில் கிடைத்துவிடுமா என்ன.!!!

மன இறுக்கம் போக்க சில பாடல்கள்.
மிகப் பிடித்தது "யார் அந்த நிலவு. "
இந்தப் பாடல் காட்சியின் அமைப்பு,
சிவாஜியின் நடை, விஸ்வனாதன் ராமமூர்த்தி இசை,
கவிஞரின் பாடல்வரிகள்...

எப்படித்தான் இப்படி ஒரு காட்சியை
அமைத்தார்களோ.டி எம்  எஸ் அவர்களின் 

மிக மிக நிதானமான குரல்,இரவின் அமைதிக்கு ஏற்ற
கவிதை.


மேலே இருக்கும் மோஹன் பாடல்  எஸ்பி பி
அவர்களின் குரலில் மிதந்து வரும்போது
1980 களில் பார்த்த படம் நினைவில் வருகிறது.60களில் வெளிவந்த பார்த்தால் பசி தீரும் 
படப் பாடல். இதிலும் அந்த நாளையக் கனவுக் கன்னி சரோஜாதேவி
அவர்களின் நடிப்பும்,
சிவாஜி அவர்களின் முக பாவமும், நடையும்
சுசீலா அம்மாவின் குரலும்
சேர்ந்து படைத்த காவியம்.
எப்பொழுதும் அனுபவிப்பது.


1998 எங்களைச் சுற்றி வந்த மஹராஜபுரம் சந்தானம் அவர்களின்
குரலில் இந்தப் பாடல் எப்பொழுதும் பிடிக்கும்.
பாடலின் வரிகளில் உள்ள ஊக்கம்
அனைவரையும் கவரும்.ஆஸ்வாஸப்படுத்தும்.

யாரை நம்பி யார்,
இந்தப் பாடலுக்கு சிவாஜி சாரின் நடிப்பு,
டி எம் எஸ்ஸின் குரல்

எந்த நாளும் உண்மை. இந்த நிலைமை எல்லோருக்கும்
கிடைத்தால் அது பெரிய விடுதலையாக
இருக்கும்.
ஆனால் யாரும் இல்லாமல் இருப்பது மிக மிகக் கஷ்டம்.


பாசமலர் சாவித்ரி இல்லாமல் பதிவு இருக்குமா.

இந்த  ஜோடியின்  நடிப்பு, இயற்கையின் அருமை

பி பி எஸ், மற்றும் சுசீலாம்மா குரல்,
கண்ணதாசன் கவிதை, மெல்லிசை மன்னர்களின் இசை
எல்லாவற்றையும் சேர்த்துக் கேட்பதே அருமை.
எப்படிப் பாடினரோ  என்று தான் தோன்றுகிறது.
அனைவரும் வாழ்க நலமுடன்.

Tuesday, January 18, 2022

Prathapa Mudhaliar Charithiramஒலிப்பதிவின் ஒன்பது பாகங்கள்.

ஒன்பது பாகங்களும் இதில் இருக்கின்றன.

அன்பின் மதுமிதா ராஜா அவர்களுக்கு 
நன்றி.
அரிய நூலின் ஒலிப்பதிவை நட்புகள்
இவைகளைக் கேட்க வேண்டும் என்று

வேண்டிக் கொள்கிறேன்.

பழைய படப் பாடல்கள் புதுமைப் பித்தன்

வல்லிசிம்ஹன்

இனிய இசையும் நல்ல திரைக் கதையும்
அமைந்த படம்.
இனிய இசையும் நல்ல திரைக் கதையும்
அமைந்த படம்.

புதுமைப் பித்தன் படம் 1957இல்  வெளியானது.

ராஜா ராணி கதை தான்.

திரு ஜி.ராமனாதன் இசையில் வந்த பாடல்கள்.

 பாடல்கள்  திரு தஞ்சை ராமதாஸின் கைவண்ணம்.

எம் ஜி ஆர், டி ஆர் ராஜகுமாரி,
பி எஸ் சரோஜா, ஈவி சரோஜா, சந்திரபாபு, பாலையா
என்று பிரபல நடிகர்களின் அசத்தலான நடிப்பு.

அப்போதெல்லாம் கிடைக்காத சான்ஸ் இப்போது
யூடியூப்  சேவையில் கிடைக்கிறது.:)

ஏதோ பழைய ஷேக்ஸ்பியர் டிராமா
பார்ப்பது போல இருந்தது.
இரண்டு மூன்று ஆங்கிலப் படங்கள் சாயல்.

இருந்தாலும் அருமையான உழைப்புடன்
எடுக்கப் பட்டிருக்கும் திரைப் படம்.

டி ஆர் ராமண்ணா இயக்கியிருக்கிறார்.
ஒவ்வொருவர் வரலாற்றையும் படிக்கும் போது ஆச்சரியமாக
இருக்கிறது.

சீக்கிரமே ஒரு ஆராய்ச்சிப் பட்டம் வாங்கும்
அளவுக்குத் தேறிவிடுவேன் என்று நினைக்கிறேன்:))

எல்லோரும் நலமுடன் நோய்த் தொற்று 
பயமில்லாமல் வாழ வேண்டும்.

Sunday, January 16, 2022

பிரதாப முதலியார் சரித்திரம் 8 | Prathapa Mudhaliar Charithiram | Audio b...

அன்புத் தோழி ஆடியோ பதிவாக வெளியிட்டு வரும்
பிரதாப முதலியார் சரித்திரம்,

தமிழ் நாட்டின் முதல் நாவல்.
எழுதியவர் திரு. மாயூரம் வேத நாயகம் பிள்ளை.

இந்த புதினத்தைப் பற்றி

பழைய க்விஸ் நிகழ்ச்சிகளுக்காகத் தெரிந்து கொண்ட
நினைவு.

இதை ஒரு பெரிய ப்ராஜெக்ட்டாக  அன்பு மதுமிதா
எடுத்துப் பொறுமையாகப் படித்து வருகிறார்.
அந்த ஏற்றத் தாழ்வுடன் , இதமான குரலில் 
அவர் படிக்கும் அருமை ,
அந்தக் கதையை வேத நாயகம் அவர்கள்
எழுதி இருக்கும் சிறப்பு  எல்லாமே  

அசர வைக்கிறது.
இந்த எழுத்து நடை நான் இது வரை படிக்காதது.

நிறைய பேரை சென்றடைய வேண்டும்
என்பதற்காக  இங்கே பதிகிறேன்.
இவ்வளவு ஈடுபாட்டுடன்  ஒருவர் முனையும் போது அதைக்
கேட்டுப் பயன் அடையலாமே என்ற ஆசைதான்.

படிக்க முடியாதவர்கள் கேட்டுப் பயன் அடையலாம்.
அந்தக் கால வாழ்வு எத்தனை உன்னதமாக
நேர்மையாக இருந்திருகிறது என்று உணர முடிகிறது.

நிகழ்வுகள் நடந்த காலத்தின் சரித்திரம்
கண்முன்னே நிகழ்வுது போல ஆசிரியர் எழுதி இருக்கிறார்.

அனைவரும் கேட்க வேண்டிய ஆடியோ புத்தகம்.

ஒரு இழப்பிலிருந்திலிருந்து வெளி வந்திருக்கும் தோழி
எடுத்திருக்கும் நல்ல திடமான முயற்சி வெற்றி பெற வேண்டும்
என்பதே என் ஆசை.

நன்றி.

Saturday, January 15, 2022

காணும் பொங்கல் வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன்

நம் நாட்டுக்கே உரிமையான
சகோதரபாசம் கொண்டாடும் நாள் இன்று.
கனுப்பொங்கல். 
சிலபேருக்கு இன்றுதான் பொங்கல் விழா.
தை மகள் தினந்தோறும் பிறக்கிறாள்
போல இருக்கிறது.

எப்படியோ
ஆதவன் செழிப்புடன் நம்மைக் காக்கட்டும்.
நீர் வளம் நிரம்பி,பயிர் வளம் செழித்து,
மக்கள் மனம் நிறைய நல் வாழ்வு கிடைக்க வேண்டும்.

இறைவன் நம் அனைத்து சகோதரகளையும் 
சகோதரிகளையும்
பாசம் குன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அனைத்து நட்புகளுக்கும் வாழ்த்துகள்.

Friday, January 14, 2022

பொங்கல் வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன்


அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். வாழ்வில் வளம் பெருக இறைவனிடம் பிரார்த்தனைகள்.
பால் வளம் பொங்கி இதயங்கள் நலம் பெற வேண்டும்.

Thursday, January 13, 2022

மிஸ்ஸியம்மா. மீண்டும் மீண்டும்.
வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் பார்க்கிறேன்.
அலுக்கவே இல்லை. அதுதான் சுத்த சினிமாவின் லட்சியமும் லட்சணமும்.