Blog Archive

Saturday, May 30, 2009

கோபாலகிருஷ்ணன்

என் மன அமைதிக்காக அவனைப் பற்றிப் பதிந்துவிட்டேன். சிங்கம் போலப் பார்வை!
புதன் கிழமை மேமாதம்
27 ஆம் தேதி நம் அருமைச் சகோதரி துளசிகோபால் வீட்டு வளர்ப்புச் செல்லம்
(பூனை என்று சொல்ல மனம் வரவில்லை) 14 வயதான கடமை வீரன்,
எட்டு வருடங்கள் துளசியின், திரு.கோபாலின் அன்பன்
சிறிது நாளாக நோய்வாய்ப்பட்டு இருந்து ,அதிக சிரமப் படாமல், துளசி வணங்கும் திருமலைப் பெருமாளின் சரண் புகுந்தான்.

// ஜிகே பாவம்ப்பா. வீட்டுலே சாமான்களை எடுத்து அடுக்குறதையெல்லாம் கவனிச்சுக்கிட்டே ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கான்.கேட்டரியில்தான் விட்டுட்டு வரணும். //

இது துளசியும் கோபாலும் இந்தியாவோ , வெளியூரோ போகும்போது மன வருத்தத்தோடு செய்யும் விஷயம்.
இனிமே அம்மா அப்பா ரெண்டு பேருக்கும் அந்தக் கவலை வேணாம்னு நினைச்சுட்டானோ.அவனை அங்கே விட்டுவிட்டு நம்ம துளசி படும் கவலை இருக்கே,அது இன்னும் பரிதாபம்.

இந்த ஜிகேப் பையன். என்ன செய்தானோ, சரியாச் சாப்பிட்டானோ என்றேல்லாம் கவலைப் படுவார்கள்.

அதற்கு ஏற்றார்ப்போல் இவர்கள் திரும்பி அவனை அழைத்துப் போகும்போது இரண்டு நாள் கோபமாக இருப்பானாம்.

கோபால் அடிக்கடி டூர் போகும்போதும் வீட்டைச் சுற்றி நடமிட்ட படி இருப்பான் என்று துளசி சொல்லுவார்கள். வேளை முடிந்த பிறகு துளசி காலடியில் வந்து படுத்துக் கொள்ளுவானாம்.

துளசியும் கோபாலும் அவனை மறக்க முடியாது. அமைதியாக அடங்கிய அவனை மனத்தில் போற்றிக் காப்பார்கள்.

எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.
Friday, May 29, 2009

விஷமக்காரக் கண்ணன்:)


இரண்டு வயசுப் பிள்ளைகள் துறு துறு இருப்பது ஒன்றும் அதிசயம் இல்லை.
சிலது சத்தமில்லாமல் விஷமம் செய்யும்.
சிலது சொல்லிட்டுச் செய்யும்.
இதில இரண்டு வகையும் எங்க வீட்டில் இருப்பது வான் வழி வந்த செய்திகள்:)
பேத்தி சத்தம் போடாமல் இருந்தால் எதோ கிழி பட்டுக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
என்னா ராஜாத்தி செய்யறேன்னா, சமத்தா இருக்கேன் பாட்டி என்று பதில் வரும்.
அவளுடைய பிடித்த ஆசைகள்.
பிடிக்காத உணவு வகைகளைச் சாப்பிடச் சொல்லும்போது,தூக்கம் வருவது போல நடிப்பது.
பிடித்த நூடுல்ஸ் வந்தால், உடனே கண்கள் விழித்துவிடும்.:)
ஒரு பாட்டுப் பாடும்மா,என்று கேட்டால், ஓ வடை கீழே விழுந்திடுமே என்று சிரிக்கிறது.
இந்த ஸ்விஸ் மாயப் பெண் ணைத் தாண்டிப் போனால்,
அங்கே சிகாகோல இருக்கானே மாயக் கண்ணன்.
அவன் இன்னும் தாங்க முடியாத விஷமம்.
கண்மூடித்திறப்பதற்குள் சகல விஷயங்களையும் கொட்டி விடுவான்.
நேற்று அவனை அழைத்துக் கொண்டு டார்கெட் கடைக்கு வீட்டூக்கு வேண்டிய பொருட்கள் வாங்கப் போயிருக்கிறாள் பெண். கூடவே பாடிகார்ட் அண்ணனும் வந்திருக்கிறான்.
வண்டியில் போதித்துக் கொண்டே வந்திருக்கிறாள்.
ஒன்றும் எடுக்கக் கூடாது. கொட்டக் கூடாது.
எடுத்தால் அங்கயே விட்டுவிட்டுவந்துவிடுவேன், என்று சொல்லி
மால்'உக்குள் நுழைந்ததது, அங்கே இருக்கிற தள்ளு வண்டி சிம்மாசந்த்தில் உட்கார்ந்தபடிப் பார்த்துக் கொண்டே வந்தவன்,
இவள் கவனமாக எடுத்து வைக்கும் ஷாம்பூ பாட்டில்களையும் பற்பசை டப்பாக்களையும் நோட்டம் இட்டிருக்கிறான்.
''இதெல்லாம் தொடக் கூடாது . கொட்டினா வேஸ்ட் ஆயிடும்'' என்ற படி சொல்லி இருக்கிறான்.
பிள்ளை திருந்தின மகிழ்ச்சியில் அவளும் கவனத்தைச் சற்றே தளர்த்தி, கவுண்டரில் பணம் செலுத்தும்
அந்தக் கணத்தில் நொடிக்குள் அந்தப் பிரம்மாண்ட பற்பசைப் பெட்டியைப் பிரித்து ஒரு பசை டியுபைத் திருகி, பசையை அந்த கார்ட்(cart) முzhuவதும் பிதுக்கியிருக்கிறான்.
தன்னைச் சுற்றி மிந்த்(mint) வாசனை பரவுகிறதே என்று அநேகர் திரும்பி இருக்கிறார்கள். ஐயா, அவ்வளவு பசையையும் அழகாக அந்த வண்டியின் ஓரங்களில் தடவி விட்டார்,
அண்ணனுக்கு பதட்டம்.
அம்மா ''லுக் அட் ஹிம்''. என்றவாறு அவனும் அந்தப் பசையில் கைவைத்துத் துடைக்கப் பார்த்திருக்கிறான்.
அதற்குள் உதவியாளர்கள் துடைக்கும் காகிதங்களைக் கொண்டுவர.
ஒரு வேலை முடிந்த கையோடு , ஷாம்பூ பாட்டிலையும் மூடி திறந்து கொட்ட முயற்சித்திருக்கிறான். நல்ல வேளை பெண் ,அதைப் பார்த்து
பறித்துக் கொண்டுவிட்டாள்.
இன்று யாஹூவில் பேசும்போது ''ஏண்ட பையா இந்த விஷமம் செய்யறேன்னு கேட்டால்,
நல்ல வாசனையா இருக்குப் பாட்டி, உங்கிட்ட ஷாம்பூ இருக்கா'' என்று கேட்டு என்னைக் கலக்கி இருக்கிறான்.
நினைத்தாலே சில் என்று இருக்கிறது.:))))
15 நாட்களில் வருகை செய்யும் இந்த விஷமக் காரக் கண்ணனை நான் எப்படி சமாளிக்கப் போகிறேன்!!!!!!!!!!!!!!!!!!!!!
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Wednesday, May 20, 2009

சந்தேகம் சந்தோஷமான கதை..---உறுதியான உறவு.
தூத்துக்குடி வந்துவிட்டது. கண் விழித்தாள். நம் வண்டிதான் ஊருக்கு வந்துவிட்டது. நாம் ஏன் ஊர் வந்துவிட்டது என்று சொல்லணும்.
என்னவோ பைத்தியக் கார சிந்தனை இப்போது. இறங்கு!
ஆக வேண்டியதைப் பார்.திரும்பும்போது அந்தத தாத்தா பாட்டி இறங்க உதவி செய்தாள்.
தூங்கும்போது அழுதியேப்பா, ஏதாவது சொல்லணும்னா சொல்லு என்ற அந்தத் தாத்தாவின் குரல் கேட்டதும் திக் என்றது கனகாவுக்கு..
எப்பவுமே இருட்டில சிந்திக்கறதைவிட , முதல்ல பசியாறிப் பெத்தவங்களோட உட்கார்ந்து பேசும்மா.''
என்று சொன்ன அந்த அம்மாவையும் பார்த்துக் சரியென்று தலையாட்டினாள்.
நெத்தியில எழுதி ஒட்டி இருக்குமோ'என்று தலையைக் கோதியவள் கண்களில் அப்பா தென்பட்டார்.
அப்படியே வயிற்றிலிருந்து ஒரு கலக்கம் ஆரம்பித்தது.
எப்படி விளக்குவது இவரிடம்.
என்ன சொன்னால் புரியும்.பெற்றோரிடம் பேசுவதோ, நடந்த விவரம் சொல்வதோ கடினமாக இல்லை.
அவர்களும் சென்னை வந்திருந்த போது தினேஷின் காலை மாலை நடத்தையைப் பார்த்திருந்தார்கள். அப்பாவின் பெட்டியிலிருந்து பணம் பறி போயிருந்தது.
இத்தனைக்கும் தினேஷுக்கு அவர்கள் மேல் அளவு கடந்த மரியாதை உண்டு.
ஒன்றும் முடிவெடுக்க முடியாமல் அவர்கள் திரும்பி இருந்தனர்.
அவர்கள் இருக்கும் போதுதான் நிலா ஒரு நாள் வந்திருந்து கனகாவைக் 'கணவனைத் தன்னிடமிருந்து பிரிக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டி விட்டுப் போனாள்.
அப்பொழுது தினேஷும் ஒன்றும் சொல்லாமல் ஒரு பார்வையாளனாக நின்றதுதான் அவளை மிகவும் வருந்த வைத்தது.

அன்றுதான் அவளும் அவனுடன் உட்கார்ந்து மது அருந்தினாள்.
குழந்தைக்கு உணவு கொடுக்காமல் மயங்கித் தூங்கி விட்டாள்.
காலையில் தாய் தந்தையர் இருவரையும் பார்க்கக் கூட தைரியம் வரவில்லை.

ஒருவருடைய பழக்கம் அவரோடு போவதில்லை. அவரது நடவடிக்கைகள் கூட இருப்பவர்களையும் அவரைப் போலவே செயல் பட வைக்கிறது என்ற செய்துயை எப்பவோ பழைய ஆங்கிலப் பத்திரிகையில் படித்தது நினைவுக்கு வந்தது. தானும் ஒரு மது அருந்தாத ,ஆனால் போதைக்கு அடிமையான நபராக நடந்து கொள்வதும் புரிந்தது.

தான் அந்த இடத்தை விட்டு விலக வேண்டிய கட்டாயமும் புரிந்தது.
இந்தப் பிரிவு கணவனுக்கும் நல்லது என்பதையும் உணர்ந்தாள்.

ஒன்றே ஒன்றை அவளால் செய்ய முடியவில்லை. கணவனை நினைவிலிருந்து ஒதுக்க முடியவில்லை.
அவன் சாப்பிட்டானா, தூங்கினானா, பண இருப்பு போதுமா இப்படி எல்லாம் யோசனை.
இந்த நிலைமைக்கு விடிவு தேடினாள்.
மன வைத்திய நிபுணரைக் கண்டு விசாரித்த போது தெரிய வந்த விஷயங்களைத் தொகுத்து வைத்து,
பெற்றோரிடம் தொடர்ந்து பேசி ,தந்தையுடன்
சென்னை வந்து சேர்ந்தாள்.
இந்திரா நகரில் இயங்கிக் கொண்டிருந்த திருமதி சாந்தி ரங்கனாதனின் போதையிலிருந்து விடுபடும் சிகித்சைக்குத் தான் முதலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்..
மதுவுக்கு அடிமையானவர்களின் ஸகல விவரங்களையும் விரிவாகத் தெரிந்து கொண்ட பிறகுத் தூத்துக்குடிக்கே திரும்பினாள்..
அடுத்தமுறை சென்னைக்கு க் குழந்தையூடும் பெற்றோருடனும் வந்தவள் ,கணவனை
முதலில் கண்ட கோலம் மனத்தைக் சிதைத்தாலும்,
தன்னை அந்த சூழலில் உட்படுத்தாமல், கணவனின் அலுவலகத்துக்கே சென்று
அவனது மேலாளரைக் சந்தித்துத் தான் மேற்கொள்ளப் போகும் நடவடிக்கைகளுக்கு உதவி கேட்டாள்.
 
அவர்களும் நல்ல திறமையுள்ள பயிற்கி பெற்ற நிர்வாகியை இழக்க விரும்பாததால்
சம்மதித்தனர்.
அடுத்த கட்டமீ அவள் பொறுமையைவக் சோத்தித்தது. தினேஷ் சிகித்சை செய்து கொள்ள மறுத்தான்.
வேறு வழியில்லாமல் அவனை வலுக்கட்டாயமாக மருத்துவ மனையில்
சேர்த்த பிறகுதான் நிம்மதிப் பெருமூச்சு விடமுடிந்தது..
மூன்று வார தீவிர சிகிக்கைக்குப் பிறகு, தெளிவான முகத்துடன் வெளி வந்த கணவனைப் பார்த்து
அளவில்லாத ஆனந்தம் கொண்டாலும்,
தான் கற்றறிந்த பக்குவத்தில் அவனிடம் நடந்து கொண்டாள். குழந்தை ரித்துவையும்,
அப்பாவிடம் மீண்டும் நட்புடன் பாசத்துடன் அணுகக் கற்றுக் கொடுத்தாள்.
சிறிது சிறிதாகக் கவிழ்ந்திருந்த அவள் உலகத்தை நிலையாக நிமிர்த்த அவளுக்கு இரு வருடங்கள் தேவைப்பட்டன. முதல் மாறுதல் அவர்களுக்குத் திரு நெல்வேலிக்கு இடம் மாற்றம் கிடைத்ததுதான்..
பழைய நட்புகள் பற்றிய விவரங்களைப் பற்றி அவ்வப்போது காதில் விழும். ஏற்றுக் கொண்டாள்.
நிலாவும் சந்திரனும் பிரிந்து விட்டது தெரிந்து வருத்தம்தான் ஏற்பட்டது..
அவளுக்குக் கிடைத்தப் புது பரிசான மழலைக் செல்வம் அவளை மேலும் அமைதியிலும்,வாழ்வின் அருமையையும் உணர்த்தியதால் அவள் எந்த ஒர் கணத்தையும், தொலைக்காமல் அனுபவித்தாள்.
இப்போது ரித்துவுக்கு திருமணமாகி ஒரு களங்கமில்லாத வாழ்க்கையும் கிடைத்திருக்கிறது.
அவர்கள் எல்லோருக்குமே வெறுப்பைத்தள்ளி, மகிழ்ச்சியை வாழ்க்கையில் மலர வைக்க நிறையப் பாடுபடத்தான் வேண்டி இருந்தது.
இந்தப் பதிவு
டி.டி.ரங்கனாதன் சேவை மையம்,அதை வெற்றிகரமாக நடத்திவரும் சமூக சேவகி திருமதி சாந்தி ரங்க நாதன் என்கிற உயர்ந்த மனுஷிக்கும் சமர்ப்பணம்
 
 
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Monday, May 18, 2009

சந்தேகம் என்னும் கிரகம்------3


கதிர் வெளியே வருவதைப் பார்த்துக் கொஞ்சம் தெளிவானாள்.
எல்லாம் தூங்கிட்டீங்களே. பிள்ளைகளை அழைத்துக் கொன்டு நாமாவது கடற்கரைக்குப் போகலாமா என்றாள்.


ஒன்றும் பேசாமல் அருகே நடந்துவந்துக்குழந்தைகளோடு கடலோரம் வந்தான் கதிர்.
அண்ணி நாளைக்கே நான் ஊருக்குப் போகிறேன்.இங்க ஒத்து வராது. இவர்கள் எல்லா விதத்திலும் அளவு மீறுகிறார்கள் என்று சுருக்கமாக முடித்துக் கொன்டான்.சரியென்று தலையாட்டிய கனகாவின் பார்வையில் தினேஷும் நிலாவும் பட்டார்கள்.
தங்களைப் பார்த்து நடப்பார்கள் என்று நினைத்தபோது அவர்கள் எதிர்த்திசையில் போவதைப் பார்த்துக் குழம்பினாள்.கதிரைப் பார்த்து ''நாம் போய்க் காப்பி டிபன் ஏதாவது குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து நாமும்சாப்பிட்டு வரலாம் வாருங்கள்'' என்று அழைத்துச் சென்று உணவு விடுதியில் உட்காரவும்சந்திரன் உள்ளே வரவும் சரியாக இருந்தது. குரலில் ஒரு கரகரப்போடு தன் பெண்களைப் பார்த்து''எங்க உங்க அம்மா'' என்று ஒரு அதட்டும் தொனியில் கேட்கவும் ''தினேஷ் மாமாவோட வாக் போயிருக்காங்க'' என்று ஒருமித்த குரலில் அந்தக் குழந்தைகள் கூறின.
அதற்கப்புறம் நடந்ததெல்லாம் ஒரு பயங்கரக் கனவாகப் பதிந்தது கனகாவின்
மனத்தில்.அவள் கொண்ட அதே கோபம் இப்போது சந்திரன் கண்களில் பார்த்தாள்.நாகரீகம் விடை பெற்ற நேரம் அது. பெண்டாட்டியைப் போதையில் திட்டும் கணவனையும், அதற்கு சமமாக மறு பதில் கொடுக்கும் மனைவியையும், உதவி செய்யப் போய் மாட்டிக் கொண்ட தன் கணவனையும் ,மலங்க விழித்த குழந்தைகளையும் சமாளிக்க வெகு பாடுபட்டுத் தோற்று, கதிரின் துணையுடன் பஸ்ஸேறி வீடு வந்து சேர்ந்தாள்.
இரன்டு மணி நேர அவகாசத்துக்குப் பிறகு உறுமி வந்து நின்றது தினேஷின் வண்டி.


நீ இவ்வளவு அனாகரிகமாக நடந்து கொண்டிருக்க வேண்டாம் கனகா. நிலா மிகவும் வருத்தப் பட்டாள்.
ஒரு நல்ல விடுமுறை இப்படி நஷ்டப்பட்டதே என்று மனம் நொந்து விட்டாள்'' இதுதான் முதலில் தினீஷ் சொன்ன வார்த்தைகள்.
குழந்தைகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த கனகா,அவனை நம்ப முடியாமல், .
பார்த்தாள்.
எங்களாலா இப்படி ஆச்சு?' நீங்கள் மூவரும் குடித்து நடந்து கொண்டது அல்லவா கேவலம். அவளை அழைத்துக் கொண்டு தனியே போகவேண்டிய அவசியம் என்ன.
அனாவசியமாகச் சந்திரன் சந்தேகிக்கும்படி ஆயிற்றே'' என்று பொரிந்தாள்.
நிலாவிற்குச் சந்திரன் போக்கு பிடிக்கவில்லை. அவர்கள் பொருளாதாதார நிலைமையும் சரியில்லை. அதனால் அவர்களுக்கு உதவுகிறேன் என்று சொல்லத்தான் போனேன், அதிலென்ன தவறு.'

என்றவனைப் பார்த்துப் பரிதாபம்தான் வந்தது கனகாவிற்கு.
இன்னொருவர் குடும்பத்தில் எடுக்கும் அக்கறை நம் குடும்பத்தின் மீது வேண்டாமா, தம்பி ஊருக்குக் கிளம்புகிறான். அவன் சந்தோஷமாக இருக்கிறானா என்று கவனித்தீர்களா.
நாம் என்ன மேல் நாட்டவரா, தினம் குடித்தே ஆக வேண்டுமா.ஒரு அளவு திரவம் தொண்டையில் இறங்கினாலே நீங்கள் அனைவரும் மாறி விடுகிறீர்கள்!!
அதுவும் சிறு குழந்தைகள் முன் நடந்து கொள்ளும் முறையே மறந்து போகும் அளவு போதை தலைக்கேறி விடுகிறது.
இந்த வழியில் பணம் எப்படிப் போதும் ஒரு குடும்பத்துக்கு.
அவர்கள் அந்த வழியில் போய்த்தான் இப்போது உங்கள் உதவியைத் தேடும் வரை வந்து விட்டது.

பேசிக் கொண்டே வந்தவளின் கவனம் மைத்துனன் பக்கம் திரும்பியது.
'வரேன் அண்ணி, வரேன் அண்ணே'' என்றபடி அவன் கிளம்பி விட்டான். தினேஷ் என்ன சொல்லியும் நிற்கவில்லை.
கனகாவுக்கும் வருத்தம் மேலிட்டது. இயலாமையால் கண்களில் கண்ணீர்.
அதைப் பார்த்து தினேஷுக்குக் கோபமே மேலிட்டது.
''இப்ப இங்க என்ன அப்படித் தப்பு நடந்து போச்சு! போனாப் போகட்டும், என்றவனிடம்,
சந்திரனின் குழந்தைகளைகாட்டி,
இவர்கள் வீட்டிற்குப் போக வேண்டாமா என்றாள்.
நாளைக் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்றபடி அவன் தூங்கப் போய்விட்டான்.
அடுத்த ஆறு மாதங்களில் வீட்டு நிலைமை தரம் மாறியது.
சந்திரனின் வீட்டில் மது அருந்திவிட்டு வருவது வழக்கமாவிட்டது. சாலை விபத்தில்
வாகனம் நொறுங்கியது.
வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப் பட்டான்.
ரித்துவின் பள்ளி வாழ்க்கை பாதிக்கப் பட்டது.
கனகாவின் மன நிம்மதி போய், அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை,.
தினேஷின் பெற்றோர் வந்தும் ஒன்றும் சரியாகவில்லை.எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

சந்தேகம் என்னும் கிரகம்--2


இரண்டாம் பாகம்..
அன்றிரவு, விருந்தினர் உபசாரம் முடிய 1 மணியானது. கொஞ்சம் தடுமாறிய தம்பதிகளையும் அவர்களது இரு பெண் குழந்தைகளயும் வண்டியில் ஏற்றிக் கொண்டு போய் விட்டு விட்டு வந்தான் தினேஷ்.
அவன் வரும் வரை விழித்திருந்த கனகா வண்டி சத்தம் கேட்டதும்,
குழந்தை படுத்திருந்த அறையில் போய்ப் படுத்துக் கொண்டுவிட்டாள்..
கனகா என்று உரத்த குரலில் அழைத்தபடி வந்த தினேஷை அடக்கியபடி, மெல்லப் பேசுங்கள் என்று கையமர்த்தினாள்.
அவர்களுக்கு இருக்கிற தாராளமனசு உனக்கில்லையே. ஏன் இப்படி பாப்பா பின்னால் போகிறாய். எங்களுடன், சந்தோஷமாக இருந்திருக்கலாமே என்றான்.
எனக்கு கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை பிடிக்காது என்று உங்களுக்கும் தெரியும்.
நேரமும் இளமையும் கை நழுவினால் பின்னால் வருந்திப் பயனில்லை.
இந்தப் பெண் சரியாக வளர வேண்டும் என்றால் வீட்டில் இந்த மாதிரி நடக்கக் கூடாது. உங்களை நிதானமாக இருக்கச் சொல்லித்தான் கேட்கிறேன் என்றாள்.
பத்து நாட்கள் அமைதியாகக் கழிந்தன.
தினேஷின் தம்பி கதிர் விடுமுறைக்கு வந்தான். கல்லூரி முடித்து வேலை தேடும் நேரம். புத்திசாலிப் பையன். அண்ணன் அண்ணி யிடையே ஏதோ சரியில்லை என்று மட்டும் புரிந்தது.
குழந்தையைப் பள்ளிக்கு அழைத்துக் சென்று கூட்டி வந்து அண்ணிக்கு வேண்டும் போது வங்கி வேலைகளைக் கவனித்துக் கொண்டு கலகலப்பாக அவன் இருந்தது கனகாவுக்கும் ஆறுதலாக இருந்தது.
அண்ணனின் புதுப் பழக்கத்தைச் சொல்லலாமா வேண்டாமா என்று நினைக்கும் போதே
சனி ஞாயீறு வந்துவிட்டது.
தம்பி இருப்பதால் தினேஷ் பழக்கத்தை மாற்றிக்கொள்ளுவான் என்று நினைத்த கனகாவின் நினைவு பொய்த்தது.
இந்தத் தடவை நண்பன்,மனைவி,குழந்தைகள் எல்லோரும் பெரிய வண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு காலை பத்து மணிக்கே வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.
என்ன கனகா கிளம்பலை,??மஹாப்ஸ் போகணுமே, அங்க காட்டேஜ் புக் செய்தாச்சு.
நாளை இரவு வந்தால் போதும் என்றதும், நிலாவை அதிர்ச்சியுடன் பார்த்தாள் கனகா.
இவர் ஒன்றும் சொல்லவில்லையே. அவர் தம்பி வேற வந்திருக்கார்' என்று அவள் இழுப்பதைப் பார்த்துச் சிரித்து விட்டாள் நிலா. அவனுக்கும் சேர்த்துதான் மூன்று இடங்கள் பதிவு செய்திருக்கிறோம்,
சீக்கிரம் கிளம்பு என்றவளை விட்டுக் கணவனை நாடினாள்.
என்னிடம் சொல்லவில்லையே. என்று அவனிடம் கேட்க ''நீ தான குழந்தை வெளியில் கூட்டிப் போகணும்னு சொன்ன,, நிலாதான் ஏற்பாடு செய்தாள். உனக்கென்ன கஷ்டம். பேசாமல் கிளம்பு என்றான்.
சாப்பாடு ? என்று கேட்டவளுக்கு எல்லாம் ஏற்பாடாகி விட்டது. ரிதுவும்,தம்பியும் ரெடியானால் கிளம்ப வேண்டியதுதான் என்றபடி கூடத்துக்குப் போய்விட்டான்.
அடுத்த நிமிடம், சிரிப்பும் ,பாட்டும் ஆரம்பித்து விட்டது.
தன்னையே நொந்தபடி கனகா குழந்தைக்குத் தேவையானவைகளையும் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள்.
அங்கே, தம்பி கதிருக்கு அவர்கள் பியர் குடிக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அண்ணியைப் பாற்த்து முகம் சிவந்த கதிர், வேணாம்னு சொன்னேன் அண்ணி.
தமாஷ் செய்யறாங்க்க, என்று கோரிக்கை வைத்தான்.
அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காதுப்பா. நிறுத்திக்கோ'' என்று மட்டும் சொல்லிவிட்டு வண்டியை நோக்கி நடந்து விட்டாள்.
மஹாபலிபுரம் பயணம் ஆரம்பம் எப்படியோ அப்படியே தொடர்ந்தது.
முதல் இரண்டு வரிசையில் நிலா,சந்திரன்,கதிர்,தினீஷ் என்று உட்காரவும், கடைsi இருக்கைகளில் குழந்தைகளோடு பேசி விளையாட்டுக்
காட்டிய வண்ணம் கனகா வந்தாள்.
மஹாபலிபுரம் சேர்ந்த நேரம் நல்ல வெய்யில்.
சரி சாப்பிட்டு ,ஓய்வெடுக்கலாம், கடற்கரைக்குப் பிறகு செல்லலாம் என்று முடிவாகியது.
கனகா மீண்டும் குழந்தைகளோடு ஒரு காட்டேஜுக்குள் சென்று விட்டாள்.
அவர்கள் நால்வரும் என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளட்டும் என்ற நினைப்புதான்...
ஒரு நான்கு மணி அளவில் அடுத்த அறைக்குப் போய் அவர்களை எழுப்பலாம் என்றால், சுகமான குறட்டை ஒலிதான் கேட்டது.

அலைகள் தொடரும்.........

எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Saturday, May 16, 2009

சந்தேகம் எனும் ஒரு கிரகம்---1அமைதியாகப் பெட்டிகளை ஏற்றி , ரிதிகாவையும் வாடகை வண்டியில் அமர்த்திய மனைவியைக் கவனித்தான் தினேஷ். அடுத்த வீட்டுக்குப் போகக் கூடத் தன்னிடம் காலையில்
சொல்லிவிடும் கனகா, இப்போது போகிறேன் என்று ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் புறப்பட்டுச் சென்றும் விட்டாள்.
திடீரென்று ஏற்பட்ட நிகழ்வில்லை இது. நான்கு வருடங்களாகப் புகைந்து இன்று வெடித்திருக்கிறது.
வண்டியை எழும்பூருக்கு ஓட்ட வண்டியோட்டியிடம் சொல்லிவிட்டு வாயே திறக்காமல் வரும் மகளைக் கவனித்தாள்.
எப்போதும் ஏன் என்ன என்று நச்சரிக்கும் குழந்தை ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் வெறித்த வண்ணம் இருப்பது கண்டு கொஞ்சம் கலக்கம் ஏற்பட்டது.
''பேபிக்கு என்ன வேனும்,பிஸ்கட்??''
''அப்பா வேணாம்மா.. தாத்தா போலாம்'' என்று தீர்மானம் தோய்ந்த குரலைக் கேட்டதும் கனகாவின் கண்கள் கலங்கின. சரிம்மா.அப்படியே செய்யலாம்.'' என்றபடி வரும் நாட்களை யோசித்தாள்.


அழகாக ஆரம்பித்த வாழ்க்கையில் எது நம்மை இங்கே நிறுத்தி இருக்கிறது என்ற எண்ண ஆரம்பித்தாள். அலுப்பில் தூக்கம் தான் வந்தது.
ரயில் நிலையத்தில் இறங்கிக் குழந்தையைக் கையில் பிடித்துக் கொண்டு ''தூத்துக்குடி முத்து நகர வேக'' வண்டியில் ஏறினாள்.
குழந்தைக்கு உட்கார வசதி செய்து விட்டுத் தானும் உட்கார்ந்து,மரத்துக் கிடந்த மனத்தைத் தட்டினாலும் கண்ணில் நீர் வரவில்லை. அன்று என்னவோ அந்த வண்டியில் கூட்டத்தைக் காணோம்.
வயதான தம்பதியர் இருவர் இருந்தனர்.
ஏதோ சிகிச்சைக்கு வந்துவிட்டுப் போவது தெரிந்தது.
கணவரைக் சௌகரியமாகப் படுத்துக் கொள்ளவைத்து விட்டு அந்த அம்மாள் அவரது தலை மாட்டில் உட்கார்ந்து கொண்டாள்.
வழக்கமான விசாரிப்புகளில் விவரங்கள் தெரிந்து கொண்டு அந்தப் பாட்டியும் தூங்க ஆயத்தம் செய்துகொண்டார்.
சத்தம்,ரயிலோடும் சத்தம்,ஏதோ நிலையத்தில் நிற்கும் சத்தம் கனகாவை அயர்ந்த தூக்கத்திலிருந்து எழுப்பியது.
இரவு மணி இரண்டைக் காட்டியது. எதிர்த்த இருக்கையில் பாட்டி, தாத்தாவுக்கு ஹார்லிக்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்..
நீயும் குழந்தையும் ஒண்ணும் சாப்பிடலையேம்மா.கொஞ்சம் ஹார்லிக்ஸ் எடுத்துக்கறியா என்று கேட்கும் அந்த அம்மாவைப் பார்த்து,வேண்டாம் என்று தலையாட்டினாள் ..
கிளம்பும் முன்தான் சாப்பிட்டோம்மா. .விடிந்ததும் பால் கொடுத்தா போதும் என்று அயர்ந்து உறங்கும் மகளைத் தட்டினாள்.
இறங்கியதும் ,அப்பா முகத்தில் தோய்ந்திருக்கும் இரக்கத்தை எதிர்கொள்ளவேண்டும். அம்மாவின் கலக்கத்தை அமைதிப் படுத்த வேண்டும்.
நான் மீண்டு வந்துவிட்டேன்,சந்தோஷப்படுங்கள் என்று சிரித்துக் காட்டவேண்டும். ரிதிகாவுக்கு நல்ல மன நல மருத்துவரைத் தேடவேண்டும்.எனக்கும் வேண்டுமோ கவுன்சிலிங்க்.
ஏன் இவ்வளவு நடந்த பிறகு அமைதியாக இருக்கிறேன்?மீண்டும் கண்முன் அந்தக் காட்சி வந்து உட்கார்ந்தது.
தினெஷின் வண்டி சந்திரன் வீட்டு வாசலில் அந்த மதிய வேளையில் நின்றதும்,தான் படபடப்போடு உள்ளே போனதும், சந்திரன் மனைவி நிலா சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததும் ,...
ஏன் தன்னால் நிதானமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
எப்போதும் இறுகின முகத்தோடு இருக்கும் தன் கணவன் இன்னோரு பெண்ணிடம் சிரித்துப் பேசினதாலா,
இல்லை நிலாவின் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்றா.தெரியவில்லை. புயல் போல் உள்ளே போனவள் மீண்டும் அதே வேகத்தில் திரும்பியதும், அவமான உணர்ச்சி மனதில் வெள்ளம் போல் ஓட, உள்ளம் கொதித்தது.
அலுவலக பியூன்,காய்கறிகள் கொண்டு வந்து வைக்கும் போது ''அம்மா சந்திரன் ஐயா வீட்டுக்கும் மீன் வாங்கிக் கொடுத்துட்டு வரேன்மா'' என்றதும் கனகாவுக்குப் புரியவில்லை. ஏன் நீ வாங்கற? அவங்க ஐயா இல்லையா என்று கேட்டதற்கு
அவன் அவரு டூர் போயிருக்காராம்மா என்றான்.
இது ஒரு நிகழ்வு.
அடுத்து மஹாபலிபுரம் போனது. தினம் தினம் குழந்தையை எங்கயாவது அழைத்துப் போகணும் , இது கனகாவின் வேண்டுகோள். தினேஷ் வீட்டுக்கு வரவே இரவு எட்டாகிவிடும். ரித்து தூங்கும் நேரம் வரும். கனகாவுக்குக் சீக்கிரம் சாப்பிடும் பழக்கம்.
சிலசமயம் அவன் வரும்போதே சந்திரன் குடும்பமும் வந்துவிடும். சும்மா இல்லை. சைட் டிஷ் என்று ஏதாவது அசைவம் வீட்டுக்குள் வரும். சுத்த சைவமான கனகாவுக்குக் கதியே கலங்கிவிடும்.
அதற்குக் காரணம் வண்டியிலிருந்து இறங்கும் பானங்கள் தான்.
தோழமையும் தோழர்களும் வேண்டியதுதான். அதற்காக இப்படியா.
இப்படிக் சேர்ந்து கொண்டு குடித்தால்தான் நட்பா.
சாதாரணமாக உலகத்தில் சினேகிதர்கள் இல்லயா.
வள்ளலாரை வணங்கும் வழக்கம் கொண்ட குடும்பம் கனகாவின் பிறந்த இடம்.
தினேஷ் வீட்டிலும் அந்த வழக்கம் தான். வெளியூரும் ,கூடா நட்பும் இப்படி அவனை மாற்றி இருந்தது.
தொடரும் ...,கதை ....ஒரு வாரத்துக்குள்ளயோ, இல்லை இன்றைக்கோ:)
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa

Wednesday, May 13, 2009

தேர்தல் 2009
தேர்தல் முடிந்துவிட்டது. சரிதான்..
எங்களுக்கும் இன்னும் எங்கள் போல நூற்றுக்கணக்கானவர்களுக்கும் ஓட்டுப் போடுவதற்கான அடையாளம் இருந்தும் , ஓட்டுப் போட முடியவில்லை.
நடிகர் கமலஹாசனுக்குக் கூட அந்த லிஸ்டில் பெயர் இல்லையாம்.
நாங்கள் இதெ
தெருவில், வீட்டில் இருந்து வருகிறோம் கிட்டத்தட்ட 35 வருடங்களாக இருக்கிறோம்.
எங்கள் வரிகளை ஒழுங்காகக் கட்டுகிறோம்.
2006 ஆம் வருடம் எல்லோரையும் போல போட்டோ ஐடிக்காக படம் எடுத்துக் கொண்டு,
பெயர்,விலாசம்,வார்டு எண் எல்லாம் பொறித்த அட்டையும் கொடுக்கப்பட்டு,
அந்தத் தேர்தலில் ஓட்டும் போட்டோம்.
நடுவில் இருந்த மூன்று வருடங்களில் என்ன மாற்றம் வந்தது என்றுதான் தெரியவில்லை.
புதிதாக லிஸ்ட் எடுத்தால் அதில் எங்கள் பெயர்கள் விட்டுப் போன காரணம் என்ன.
புதுலிஸ்டிலும் இருக்கும் பல பேர்களுக்கும் ஓட்டுப் போட முடியவில்லை. அது ஏன்.?
பிறகு எப்படி இந்த கட்டமைப்பில் நம்பிக்கை வரும் தெரியவில்லை:(

எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Saturday, May 09, 2009

Photo for PIT May 2009

தமிழில் எழுத முடியாதது போலத் துன்பம் வேற இல்லை. இந்தத் தமிழ் எழுதி எனக்கு இப்போது உதவிக்க வந்துவிட்டது. இதன் மூலமே பதிவு போடலாமா என்று பார்க்கிறேன்.
நம் மீனாட்சியைப் போட்டோ போட்டிக்கு அனுப்ப‌ இந்த ''தமிழ் எழுதியைப் பயன்படுத்துகிறேன்.
போட்டிக்கு அனுப்பலாமா என்பதை நீங்கள் சொல்லுங்கள்:)எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Thursday, May 07, 2009

நாமக்கல் நரசிம்மனும் ஆஞ்சனேயனும்உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோமுகம்

ந்ருசிம்ஹம் பீஷ்ணம் பத்ரம்ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்//இன்று நாள் நல்லதொரு நிகழ்ச்சியோடு தொடங்குகிறது .
தங்கை திருமணத்துக்கு வந்த அழகர் ஆற்றில் இறங்கியிருப்பார். வழக்கமாக் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் காண்பிப்பார்கள்.
இன்றொ ஒன்றும் காணக்கிக்டைக்கவில்லை. நமக்கும் அவ்வப்போது சஞ்சயன் போல ஞானக்கண் இருந்தால் தேவலையே என்று நினைத்து, தொலைக்காட்சியைத் திருப்பினால்,
வந்துவிட்டார் அழகர்.!!!!!!
 
இந்தக் கருணையை என்ன சொல்வது!!!!
ஆஹா அந்த தங்கக் குதிரையைச் சொல்லவா,அழகனின் அழகைச் சொல்லவா. தோளழகு கொண்ட சுந்தர ராஜனைச் சுமந்த குதிரையின் கம்பீரம்!! அந்தப் பச்சைப் பட்டாடையின் செய்தியைச் சொல்லவா. கள்ளழகனைச் சுமந்து வந்துவிட்டேனே. நம்பிக்கை இழக்கப் பார்த்தாயே என்பது போலப் பார்வை அழகனின் குதிரைக்கு.
இந்தக் காட்சியைக் கொடுத்தவர்களுக்கு நன்றி.

சித்திரை பவுர்ணமியும், ஸ்ரீ நரசிம்மனின் ஜயந்தியும் ,எதிர்சேவையும் இணைந்த தினம் இன்று.
அஞ்சேல் அஞ்சேல் என்று அபயம் கொடுத்தவனின் அவதார நாள்.
மானசீகமாக எல்லா நரசிம்மர்களையும் போய்ப் பார்க்கமுடியாவிட்டாலும், சில சுந்தரநரசிம்மர்களைப் பதிவில் இடலாம் என்று
நாமக்கல் ஸ்ரீலக்ஷ்மிந்ருசிம்ஹனைப் படம் எடுத்து,கூகிளார் உதவியால் இங்கு கொடுத்திருக்கிறேன்.
நாமக்கல்லில் அஞ்சனை மைந்தனுக்கு அருள் புரிந்தவன் இந்த நரசிம்மன்.
அவனுடைய
(அரக்கனைக் கொன்ற )உக்கிரம் தணிய,
தன் பதிக்காக லக்ஷ்மி தேவி தவமிருந்த இடம். கமலாலயம்.
அவள் தவம் இருக்கும் குளக்கரையில்
ஆஞ்சனேயன் கையில் இருக்கும் சாளக்கிராமத்தை வைக்க,அது விஸ்வரூபம் எடுக்கிறது.
அந்த மலையே நாமம் சொல்லும் நாமக்கல் ஆகிறது.

ஆஞ்சனேயனுக்கு சிங்கப்பிரான், ராகவனாகக் காட்சி தருகிறான்.
அவனை அப்போதே பார்த்துக் கரங்கள் குவித்தநிலையில் அனுமன் நிறக நமக்கு இரண்டு சக்திகள் நாமக்கலில் கிடைத்துவிட்டன.
ஒங்கி விஸ்வரூபனாய் ஆஞ்சனேயனும், அவன் கைகூப்பி வணங்கும் வண்ணம் அழகியசிங்கனும் எதிர் எதிரே இருக்கிறார்கள்.
இந்தக் கோவிலில் ப்ரஹலாத வரதனும்,மற்ற சகல தெய்வங்களும் இருப்பதால் நாம் தனித் தனியே தேடி அலைய வேண்டாம்.
சிவன்,பிரம்மா,அவர்களின் தேவியர்,சிறுவன் பிரகலாதன்
எல்லோரும் அந்தப் பிரம்மாண்டமான நரசிம்ம மூர்த்தியை வணங்கிய வண்ணம் இருக்கிறார்கள்.

எளிமையாக இந்தப் பதிவைத் தட்டச்சி விட்டேன்.
மேலும் விபரங்கள் நாமக்கல் நரசிம்மன் பற்றிய விக்கிபீடியா,மற்றும் கூகிள் தளத்தில் கிடைக்கும்.
எனக்குத் தெரிந்த ஒரே ஒரு விஷயம், எளியவர்க்கு அந்தக் க்ஷணமே அருள் புரிபவன் நம் நரசிம்மன். தயாபரன். கருணாமூர்த்தி.
நம்மிடம் இதைக் கொடு அதைக் கொடு என்று கேட்க மாட்டான்.
இரண்டு துளசி போதும், ஒரு புஷ்பம் போதும். இரண்டு துளி தண்ணீர் போதும்.
அவன் அவதாரதினத்தன்று மட்டும்,
எங்கள் வீட்டு வழக்கப்படி பானகமும்,கேசரியும், தயிர் கலந்த அன்னமும் செய்வோம்.
அதுவும் அவனுக்கு அந்த அந்தியும் இரவும் கலக்கும் நேரம் தான் உகந்தது.
ஒரு ஆறுமணிக்குச் சாயந்திர வேளையில் தீபங்களை ஏற்றி அவன் முன்னிலையில் படைத்து அவன் பிரசாதமாக அந்த அன்னத்தை உண்ணும்போது கிடைக்கும் ஆனந்தமும் ருசியும் தனியோ தனிதான்.
மற்ற நாட்களில் செய்யும் தயிர் அன்னத்துக்கும் இன்று படைக்கப் பட்டு உண்ணும் தயிர் அன்னத்துக்கும் அபரிமிதமான வித்தியாசம்.!!
அன்புடன் படைத்த அனைவருக்கும் நன்றி.
அவன் அருள் நம்மிடம் நிலைக்கட்டும். அவன் அன்புக்கு நாமும் பாத்திரர்கள் ஆவோம்.
அவன் தாள் சரணம்.
 

எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Sunday, May 03, 2009

அன்னையருக்கு அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்துகள்


அன்னை என்பவள்
அமுதம்,
அமைதி,
அறிவு
அடக்கம்
அன்பு.
இத்தனையும் ஒன்றாகக் குழைத்துச் சந்தனத்தில் கரைத்துத்
தேனில்
வடிவமைத்து,
நிமிர்ந்து நிற்க வீரம் என்னும் முதுகெலும்பையும் கொடுத்து
இறைவன் எமக்காக அனுப்பினான்.
அந்த இறையையும் காப்பவள் அவளே.
ஆகையால் அம்மா நீ என்றும் வாழ்.
 
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.