Blog Archive

Thursday, February 28, 2008

அன்பு திருமதி சுஜாதா,

அன்புள்ள சுஜாதா(ரங்கராஜன்)

பின்னணியிலேயே இருந்து நீங்கள் காத்த பொக்கிஷம் இன்று தன் எழுத்தை முடித்துக் கொண்டதாகச் சொன்னீர்கள்.

இந்த இழப்பில், உங்கள் மனதிலிருந்து வரும்
இந்த

இலக்கிய வரிகளை என்ன என்று சொல்வது.
ஒரு அறிவாளியின், ஒரு மாபெரும் புகழ்படைத்த
மனிதருக்கு மனைவியாக இருந்து ,

காரியம் யாவிலும் கைகொடுத்த
இணை நலம் நீங்கள்.

அவர் எழுத்துக்களில் அவ்வப்போது நீங்கள் தலை காட்டும்போது இப்படி ஒரு வெகுளிப் பெண் உண்டா
என்று வியப்பேன்.

நேரில் பார்த்ததும்தான்
ஒரு பெரிய மனிதரின்,,
புத்தியே உரு எடுத்த ஒரு விஞ்ஞானியின்
மனைவியாக இருக்க வேண்டிய
தகுதி அனைத்தும் படைத்த ஒரு
பெண்ணாகவே பார்த்தேன்.

உங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் கிடையாது.

குழந்தைகளுக்கும், பேரனுக்கும் எங்கள் அனுதாபங்கள்.
உங்கள் கணவர் ஸ்ரீ ரங்கராஜனுக்கு எங்கள் அஞ்சலி.

அவர் வார்த்தைதிறனை இனிமேல் எங்கே பார்க்கப் போகிறோம்.???Tuesday, February 26, 2008

மஞ்சி விரட்டு

அண்மையில் குடும்பத்தில்
உற்சாகத்தைக் கூட்டும் நிகழ்வுகள்
நடக்கும்போதே
அதைக் குறைக்கும் நோக்கில் சில உடல் பாதிப்புகள்.

இந்த சமயங்களில் அருமருந்தாக அமைவது புத்தகக் கடைகளுக்குப் போவதுதான்.

அப்படி ஒரு நாளில் வாங்கியவை சில புத்தகங்கள்.

நம் கவிதாயினி மதுமிதாவின் சுபாஷிதமும் அவைகளில் ஒன்று.
கொஞ்சம் கொஞ்சமாகப் படித்துக் கொண்டிருக்கிறேன்,.
கவிதைகள் ஒருதடவை படித்தால் ஒரு அர்த்தம் மட்டும் பிடிபடும்.
மீண்டும் ஒரு தடவை அதையே படிக்கும்போது வேறு விதமாகக் காட்சி கொடுக்கும்.
நம்பெருமாளின் அலங்காரக் காட்சிகள் போல.
அடுத்த புத்தகம் கொத்தமங்கலம் ஸ்ரீசுப்பு ஐய்யாவின்
ராவ் பகதூர் சிங்காரம்.

அதில் வரும் செங்கமலம்,கதை நாயகி,அவளின் அழகை
வர்ணிக்கும் போது,
கோபுலு அய்யாவின் கைவண்ணத்தில்
அந்தச் செங்கமலம் கண்வண்ணம் கைவண்ணம் காட்டி
வடிவுடன் வருகிறாள்.
இந்தக் காவியம் நம்நாட்டுப் பொக்கிஷம்.
அந்தக் காலத் தமிழ்நாட்டின் கிராமங்களின் உயிரை மீட்டுக் கொடுத்தவர்களில் சுப்பு சாரும் ஒருவர்.
எனக்கு இந்த அத்தியாயங்களைப் படிக்கும் போது நினைவில் வந்தவர்
தாயார் பத்மாவதிதான்(திருமதி பாலாஜி,திருமலை)
அவர்தான்
நினைவுக்கு வந்தார்.

இப்போது கூட தனியார் டிவியில் காலையில் ஒரு நாள்
திருச்சானூர் தாயார் உத்சவ மூர்திக்கு அலங்காரம் செய்து
ஊஞ்சலில் ஆடும் காட்சி.
அதென்ன காந்தி இந்த அம்மாவுக்கு. வெறும் மஞ்சளாடை அணிந்து திருமஞ்சனத்துக்கு ஆயத்தமான நேரத்திலேயே அருள் பொழியும் அந்த முகத்தை வடித்தவர்தான் யார்?

அதற்குப் பிறகு செய்யப்படும் அலங்காரத்தில் ஏகப்பட்ட விதங்களில் மாலைகளும்,மணிகளும் ஜொலித்தாலும்,
நடுவே உள்ள அன்னையல்லவா கண்ணைக் கவருகிறாள்.

அவள் கண்மலர்ந்து நோக்கும் பார்வை எப்படி நம்மை அரவணைக்கிறது.!!


டிராக் மாறி வேறேங்கோ போகிறேன்,.
நான் எழுத வந்தது, சுப்பு அய்யா மஞ்சி விரட்டு பற்றி எழுதின வார்த்தைகளும் அருமையான் சொற்கட்டும்
அப்படியே கண்முன் நிறுத்துகின்றன அந்தக் காட்சியை!!

இதோ. அந்தப் புத்தகத்திலிருந்த எடுக்கப் பட்ட சில வரிகள்,பாராக்கள்.
படித்து இன்புறலாம்.

ஒரு வேலையும் செய்யாமல் சாப்பிடுபவனை நம் நாட்டில் சோற்றாள் என்பார்கள்.
அதுபோலகத்தாழையிலும் சோத்துக்கத்தாழை என்று ஒன்று இருக்கிறது.
ஆனால் இது மருந்துக்காவது உபயோகப்படும்.
இந்தச் சோத்துக்கத்தாழைக்குப் போட்டி ரயில் கத்தாழை.
ரயில் வருவதற்கு முன்னால் இது நாட்டில் எங்கெங்கொ சிதறிக் கிடந்தது.
பாவம்.. பட்டிக்காட்டுப் பிறவி.ஆதலால் ரயிலைப் பார்க்கும் ஆசையில்
தண்டவாளத்தின் இரண்டு பக்கமும் குடியேறிவிட்டது,அதனாலேயே ரயில் கத்தாழை என்ற நாமகரணத்தை அடைந்தது!
முக்கியமாக இந்தக் கத்தாழையில் இருந்து எடுக்கப்படும் நாருக்குப் பேர்தான் மஞ்சி என்பது!!

கத்தாழையை ஊறப் போட்டு கல்லில் நாலு தட்டினால்,கையில் மஞ்சிதான் நிற்கும்.
இந்த மஞ்சியிலே சப்பாத்திக் கள்ளிப் பழத்தின் சாற்றைப் பூசினால் சிவப்பு வர்ணம் தோய்ந்து விடும்
மஞ்சள் பொடியும்,சுண்ணாம்பும், மருதோன்றியும்,அவுரியும்,ஆவாரையும் நிறைந்த தமிழ்நாட்டில் வர்ணங்களுக்கா பஞ்சம்? இந்த வர்ணங்களை மஞ்சியில் பூசி குஞ்சம் கட்டி,
மாட்டின் கழுத்தில் கட்டிவிடுவதுதான் மஞ்சி விரட்டு//
//
இந்த நாட்டில் விவசாயம்தான் அதிகம்.மாடில்லாதவன் விவசாயம்,மனைவி இல்லாதவன் குடும்பம் நடத்துவது போலத்தான்
இருக்கும்
ஆகவே மாட்டை நன்றாக பராமரிப்பதற்கும் இந்த வீர விளையாடூ உபயோகப் படுகிறது...//


ஹ்ம்ம்ம் இது எழுத்து.
நீங்களும் படிக்கலாம நம் சிங்காரத்தை.......

உயிரோட்டம் ஓரொரு வரியிலும்.
மேலோட்டமாகப் படிக்கவே முடியாது.
ஏனென்றால் ஏதாவது அற்புத சிந்தனை பளிச்சென்று எந்த மூலையில்
தெறித்து வரும் என்று சொல்ல முடியாது.
அற்புதமான கலைஞர்களால் படைக்கப் பட்ட அருமையான
இலக்கியங்கள், காவியங்கள்.
நன்றியுடன்...


Friday, February 22, 2008

மாசி(ல்லாத ) பௌர்ணமி அலைகள்,இன்று


வட்டப் போட்டிக்கு அனுப்பலைப்பா. அதான் இன்னிக்குப் பவுர்ணமி நிலா எப்படி இருக்கும்னு யோசித்து
கூகிள்ள தேடிப் படமும் போட்டாச்சு.
உண்மையிலேயே நிலாவும் கடலும் மேஜிக் தான்.
லுனடிக் ,லூசுத்தனமான நடவடிக்கை இன்னிக்கு அதிகரிக்கும்னு சொல்றதை நான் நம்புகிறேன்.
உண்மையாகவே நாம் அதிகமாக உணர்ச்சி வசப் படுகிற நாட்கள் எப்போதுனு ஒரு சார்ட்(?) போட்டு வைத்தோமானால் அமாவாசை அன்னிக்குக் கோபமும்
முழுநிலா அன்னிக்குச் சோகமும் கொஞ்சம் மிகைப் படுகிறதோனு தோன்றும்:)
இல்லாட்டத் தான் என்ன!. சாதாரணமாவெ அமைதியா இருக்கறவங்க அமாவாசை அன்னிக்கு மட்டும் அம்மனோ சாமியோ செய்வாங்களா?
இதில எவ்வளவு லாபம் இருக்குனு பார்க்கலாம்.
யாராவது நம்மளை தொந்தரவு(விடாக் கண்டன்) செய்தாங்கனு வச்சிக்கலாம்.
அப்போ ரெண்டு போடு போடலாமானு தோணுமா தோணாதா?(மனசளவில தான்)
இப்போ அமாவாசை , பௌர்ணமின்னால் நிஜமாவே கம்பால சாத்தினாக் கூட யாரும் ஒண்ணும் நினைக்க மாட்டாங்க. எல்லாம் லூனார் சைக்கிள் செய்கிற வேலைனு சொல்லிடுவாங்க.
ஆனா அடிபட்ட ஆளு திருப்பி அடிச்சான்னால் அதையும் வாங்கிக்கொள்ள சக்தி வேணும்;)
அவனுக்கும் அதே லேசா கலங்கி இருக்கிறதுனாலத் தானே முதல்ல நச்சுப் பண்ண வரான்.
இதெல்லாம் ஏன் இன்னிக்கு எழுதணும்னு நீங்க கேக்கலாம்.
காரணம் இருக்கு.
எங்க வீட்டுக்கு அமாவாசை, வெள்ளிக்கிழமை,ஆடிக் கூழ், கோவில்,கும்பாபிஷேகம்னு ஒரு சில பேர் அப்பப்போ தரிசனம் கொடுக்க(வாங்க) வருவாங்க.
முடிந்த வரை உறுதியாக தர மாட்டேன் என்று சொல்லிவிடுவேன்.
ஏனெனில் செமையாக ஏமாந்த நிகழ்ச்சி ஒன்றினால், யாரைப் பார்த்தாலும் சந்தேகம்.
தர மாட்டேன்னு தெரிந்ததும் அவர்கள் பாடும் வசவு இருக்கே !!ஆஹா:))
அந்த மாதிரி இன்னிக்குத் திருவண்ணாமலை பேரு சொல்லிட்டு இரண்டு பேரு வந்தார்கள்.
நீட்டி முழக்கி லட்சுமியை அழைத்துவிட்டு, நான் வெளில வந்து என்னனு கேட்டதும் பௌர்ணமி மகிமை, தானம் செய்ய வேண்டிய அவசியம், எல்லாம் சொல்லி முடித்து ஒரு திருமணப் பத்திரிகையும் கொடுத்தார்கள். அவர்கள் தங்கைக்காக,
சென்னையைச் சுற்றிப் பணம் சேகரித்து
பங்குனி மாதம் கல்யாணம் செய்யப் போவதாகச் சொன்னார்கள்.
நாம தான் ஏற்கனவே சூடு கண்ட பூனையாச்சே(சாரி துளசி)
வாசலிலேயே நிறுத்தி, பொறுமையாகக் கேட்டுக் கொண்ட பிறகு அவர்களிடம் இன்னும் 10 அழைப்பிதழ்களைக் கேட்டேன்.
என் சினேகிதிகள் ,உறவுகளிடம் சொல்லி பணம் வசூலித்துக் கொடுப்பதாகச் சொன்னதும் அவர்கள் மேற்கொண்டு பேசவில்லை. சென்னை முழுவதும் வினியோகம் செய்ய ஒரு பத்திரிகை எப்படி போதும் என்று கேட்டுக் கொண்டே பத்திரிகையைப் பிரித்தால்,
அவசரத்தில் காப்பி எடுக்கப்பட்ட இன்னோரு பத்திரிகை.
அதுவும் ஏற்கனவே நடந்த திருமணத்துக்கானது.!!
எங்க மாமியார் சொல்லுவார்கள், தனக்கு கோபம் வந்தால்
எப்படி ரத்தம் கொதிக்கும்(அநியாயத்தைக் கணும் சமயம்) என்று;)
எனக்கு தற்போது அந்த அளவு கோபம் வரவில்லை.
இப்படி மதச்சின்னங்கள் தரித்து,எல்லோரையும் ஏமாற்றுகிறார்களே என்றுதான் வருத்தமாக இருந்தது.
கதவைச் சாத்தியபிறகுதான்,
சுர்ரென்று கோபம் ஏறியது.
கோபமும் தாபமும் நமக்குச் சர்க்கரை அளவைக் கூட்டி விடும். அதனால் நிறையத் தண்ணீரைக் குடித்து
நிதானத்துக்கு வந்தேன்.
பின்ன 'இதுதான் உலகமா'னு பாடவா முடியும்!!
அதான் சமாதான நிலாப் படங்கள் போட்டுப் பதிவும் எழுதியாச்சு.
ஏமாற்றாதே , ஏமாறாதேனு சும்மாவா சொன்னாங்க:).

Friday, February 15, 2008

காதல் என்பது


“சூடிக் கொடுத்தசுடர்க்கொடி வந்தாள்

சுரும்பார்க் குழற்கோதை வந்தாள்.

திருப்பாவைபாடிய செல்வி வந்தாள்.

தென்னரங்கனைத் தொழும் தேசியள் வந்தாள்.”


ஆகிய முழக்கங்களோடு அழகிய மணவாளன் திருமண்டபத்தைஅடைந்தனர்.

அங்கே பாண்டிய மன்னன் வல்லபதேவன் போன்ற சீடர்களும் கோவிற்பரிவாரமும் பார்த்திருக்க பல்லக்கின் திரைச்சீலையை ஆழ்வார் திறந்தார்.

ஆண்டாள் தட்டுச் சேலையணிந்து,

பருத்த செங்கழுநீர் மாலை சூடி,

சீரார்வளையொளிக்க,

சிலம்புகள் ஆர்க்க,

அன்ன நடையிட்டு அரங்கன் பால்சென்று நின்றாள். அவனைக் கண்களாரக் கண்டு அவன் அரவணை மீதுகால் மிதித்தேறி அவனடி சேர்ந்தாள்.

அங்கிருந்த அனைவரும் வியக்கமறைந்து போனாள். அரங்கனின் மாமனாரான ஆழ்வார் அவன் தீர்த்தப்பிரசாதங்களைப் பெற்று வில்லிபுத்தூர் திரும்பி வட பெருங் கோயில்உடையான் பொன்னடி பூண்டு வாழ்ந்தார்.//


இது நான் படித்த உரை.


இதுதான் காதல். அரங்கனை மணப்பேன்.அவனைத் தவிர வேறு எவரையும் என் மனம் தீண்டாது என்று திண்ணமான எண்ணத்துடன் காதலித்து அந்த உரத்தோடு,


நேர்முறையில் அவனை அடைந்தும் விட்டாள்.
இந்த வாக்கியங்களை எத்தனை தடவை படித்தாலும்
அலுக்காது .
இது என்ன காதல்? அது எந்தக் காலமாயிருந்தால் என்ன.. எப்படி இது சாத்தியமாயிற்று என்று மீண்டும் மீண்டும் எங்கள் தந்தையைக் கேட்பேன்.
அவரும் அவருக்குத் தெரிந்த வகையில்
எனக்குப் புரிய வைக்கப் பாடுபடுவார்.
மனசு வைத்தால் நடக்க முடியாது என்று ஒன்றும் கிடையாது என்பதில் அவர் உறுதியாய் இருப்பார்.
நேற்று இந்தக் காதலர்தின நிகழ்ச்சிகள், பாடல்கள்,வாழ்த்துகள், வாக்குவாதங்கள் இவைகள்,பத்திரிகை,,மற்ற ஊடகங்களில் பார்த்து ரசித்தாகிவிட்டது:))
ஆண்டாள் அரங்கன்,
சீதை ராமன்,
ஊர்மிளை இலக்குவன்,
மீரா கிருஷ்ணன்(அவங்க இல்லை)
இவர்களுக்கெல்லாம் இருந்த காதலின் திண்மை,
இன்னும் இப்போது இருக்கிறதா?? என்று கேட்டால் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அது தொலைக்காட்சி
சன் ம்யூசிக்கிலோ, லாண்ட்மார்க்கிலோ,மெரினா கடற்கரையிலோ கண்ணால் பார்க்க முடியவில்லை.
மருத்துவ மனையிலிருந்து கணவனை , ஆட்டோவில் முதலில் உட்கார வைத்துவிட்டு,
மற்ற பொருட்களையும்,பணத்தையும் குழந்தைகளையும்
பிறகு தானும் ஏறிக்கொண்டு
வீட்டுக்கு அழைத்து வந்து இறங்கும்
மனைவியிம் கண்களில் இருக்கிறது.
தன்னை இத்தனை நைந்து நூலாக்கிய பின்னாலும்
சூடா சாப்பிட்டா என்னா என்று கடியும் மனைவியைக் கணவன் பார்க்கும் புன்னகைப் பார்வையில் இருக்கிறது.
கமலம், கொஞ்சம் கையைப் பிடித்துவிடேன் என்ற, தன் வலிமையான கரங்களை நீட்டும்
என் மாமனார் கையை ஐயொடக்ஸ் போட்டுத் தடவிக் கொண்டே சொற்களில் (நாற்பத்தேழு வருஷமா இதே பொழப்பாப் போச்சு மாமா!)அலுப்புக் காட்டும் என் மாமியாரின்
கண்களில் இருந்தது.
இன்னும் எங்கெ யெல்லாமோ ஒளிந்து கொண்டிருக்கிறது:)
காலமெல்லாம் காதல் வாழ்க.
Tuesday, February 12, 2008

திண்டுக்கல்,சென்னை .. மதுரை1965திண்டுக்கல்லை விடும் நேரம் வந்தது. 'பசுமை நிறைந்த நினைவுகளே' பாடல் வெளிவந்த நேரம்.:)
கேட்க வேண்டுமா சோகத்துக்கு:)
பள்ளி ஓஏடியில் மாண்டிசோரி குழந்தைகள் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி(கைதி கண்ணாயிரம் படம்)பாட்டுக்கு வண்ணமயமாக ஆடினார்கள்.
எட்டாம் வகுப்பினர் அடுத்த வீட்டுப் பெண் படத்திலிருந்து ஒரு பாடலுக்கு நடனம்!
பின்னணியில் அப்போது பிரபலமான கம்செப்டம்பர் இசை.
விளையாட்டுப் பந்தயங்கள் நடைபெறும் திடலுக்கு அவ்வப்போது வந்து உற்சாகப் படுத்தும் நாட்கள், மேடையில் பரிசு வாங்கும் நாட்கள் இதைத் தவிர நெருக்கத்தில் பார்க்க முடியாத தலைமை ஆசிரியை
ஒவ்வொருவரையும் சந்தித்து ஆசீர்வதித்தார்.தமிழ்,
கணக்கு, புவியியல், ஆங்கிலம், விஞ்ஞானம் என்று எல்லாப் பாடங்களையும் போதித்த மிஸ்.க்ளாரா ஜேம்ஸ், மிஸ் நவமணி,மிஸ்லீலா செல்லையா,தமிழ் ஆசான் திரு ரெட்டியார் என்று அனைவரும் கூடி அமர்ந்திருக்க, அன்றைக்குப் புதிதாக ஒரு வேடம் நாங்கள் எல்லோரும் புனைந்தோம்.
பழக்கமே இல்லாத பட்டுப் புடவை அணிந்தோம்:)
பதினாறு வயது பொம்மைகள் நிற்பது போல அந்த கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தில் வேடிக்கையாக இருக்கும். ஆனால் அது ஒரு பொக்கிஷம்.
இந்ததோழிகளில் சிலரைக்
காலங்கள் கடந்த பிறகுச் சந்திக்க முடிந்தது.
ஒருவர் ரிசர்வ் வங்கியில் பணி செய்கிறார். ஒருவர் ஜில்லா கலெக்டர் ஆனதாகக் கேள்விப்பட்டேன். இன்னோரு
அமைதியான தோழி, கணவன் குழந்தைகள் நலனுக்காகவே பிறவி எடுத்தது போல விருது நகரில் இருக்கிறாள்.
என்னை விட வயதில் சிறியவர்கள் இருவரும் அறிமுகம் ஆனார்கள்.ஒருவர் நம் வலை உலகப் பத்திரிகையாளர் அருணா ஸ்ரீனிவாசன்.
இன்னோருவர் எனது ஓரகத்தியாகவே வந்துவிட்டார்.
அப்போது திண்டுக்கல்லில் கல்லூரி கிடையாது.
அதனால் படிக்க ஆசைப்படுபவர்கள் திருச்சிக்கோ மதுரைக்கோ போக வேண்டும்.
பரீட்சைகள் முடிந்து மதிப்பெண்களும் வந்த பிறகு,
அப்பாவுக்கு என்னை எங்கேயும் அனுப்ப மனமில்லை.
சென்னையிலிருந்த எனக்கு என் முதல் கைக்கடிககரம் கொடுக்க வந்த மாமா அப்பாவுக்கு என்னை நன்றாகக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுவதாகச் சொன்னதால்,
அம்மாவும் நானும் ரயில் ஏறினோம், அது ஒரு ஜூன் மாதம் 19ஆம் தேதி என்று நினைக்கிறேன்.
மறுநாள் அம்மா என்னை அழைத்துக் கொண்டு எதிரரஜ் கல்லூரிக்கு வந்தால் அனேகமாக அட்மிஷன் முடிந்த நிலையில்,
எங்கள் இருவரின் முக தாட்சண்யத்துக்காகவும் ப்ரின்சிபல் மிஸ் .மேத்யூஸ் கடைசி வகுப்பில் இடம் கொடுத்தார் என்று நினைக்கிறேன்.:)
அந்த மாதிரி இப்போதெல்லாம் குரூப் இருக்கா என்று கூடத் தெரியாது.
சிபாரிசு எதாவதுஎன்றால் என் ஆங்கில மதிப்பெண்கள் மட்டுமே!!
(தத்துவம்,தர்க்கம்?)
(அட்வான்ஸ்ட் ) ஆங்கிலம், இயற்கை விஞ்ஞானம்(பாடனி சுவாலஜி)
இன்றளவும் எனக்கு இந்தக் குறிப்பிட்ட காம்பிநெஷன் புரியவில்லை.
ஏற்கனவே நிறையப் பேசி பேசி எல்லாரையும் அறுப்பது வழக்கம். இதில லாஜிக் வேறு கேட்கணுமா;)
ரொம்ப நாளைக்கு கண்ணில பட்டவர்களையெல்லாம் ,
வகுப்பில் படிக்கும் வரிகளைச் சொல்லி அவர்களைக் கண்டபடி விரட்டி இருக்கிறேன்:)
அம்மா வழிப் பாட்டி நான் எப்படித் தெருவில் நடக்கிறேன், அக்கம்பக்கம் பார்க்கிறேனா என்றேல்லாம் கணிக்க அவ்வப்போது வீட்டை விட்டு வாசல் வரை வந்து பார்ப்பார். பாவம்.
நமக்கு அப்போது பொது அறிவு ஏன் இப்பவும் போதாது.
சினேகிதியோடு ஒரே போல நடந்து பஸ் நிறுத்தம்.
கையில் புத்தகங்கள், தயிர் சாத டிபன் பாக்ஸ்:)
பாட்டிக்கு கண்மை இடுவது கூடப் பிடிக்காது;))
எப்படியோ நானும் ஒரு வருடம் கல்லூரிக்குப் போனேன்.
நடுவில் அப்பாவை மதுரைப் பசுமலைக்கு மாற்றிவிட்டார்கள்.
மீண்டும் மதுரைக்கு வந்தது மகிழ்ச்சியான அனுபவம்.
அது என்ன மாயம், ஏன் இந்த உணர்வு எல்லாம் கேட்க முடியாது.
மதுரை,மீனாட்சி,மல்லி,மக்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
சின்னவன் சேதுபதி பள்ளியில் சேர்ந்தான்
நானும் வெற்றிகரமாக பியூசியை(இரண்டாம் க்ளாஸ்) முடித்துவிட்டு
மேற்படிப்புக்கு லேடி டோக்கா,ஃபாத்திமா கல்லூரியா என்ற கனவுகளோடு பசுமலைக்கு வந்து சேர்ந்தேன்.
மக்களே!
இனி வருவதெல்லாம் அங்கங்க எழுதி வைத்து இருக்கிறேன்.:))
இதோ லின்க்.
பதினெட்டு வருட வாழ்க்கை உங்களுக்குப் பாகம் பாகமாக வந்து சேர்ந்தது. ஏன் எழுதவேண்டும் என்கிற கேள்வியைவிட,
ஏன் கூடாது? என்ற நினைப்புதான். வரும் அடுத்த தலை முறைக்காக.
தமிழ் படிக்கும் பேரனுக்காக:)
கடந்ததை நினைத்தால் இப்போ வாழும் வாழ்க்கை இன்னும் மதிப்பு கூடும் என்ற நினைவும்தான்.
எதையும் மறக்கக் கூடாதில்லையா...
நன்றி.
மங்களம் சொல்லிடறேன்!!!

Thursday, February 07, 2008

திண்டுக்கல் கிருஷ்ணாராவ் தெரு1961


மதுரைப் புதுமண்டபம், பாட்டியுடன் போய் வளையல்கள், ரிப்பன், தலநுனியில் வைக்கும் குஞ்சலம் என்று!!
திண்டுக்கல் மலைக்கோட்டை
எங்களுக்கு ஒரு பீச் மாதிரி.
சிறிய மலைப்படிகள். வேகமாக ஏறினால் அரைமணியில் கோட்டைக்குப் போகலாம்.
இதமான காற்று.கையில் பட்டாணி, அந்தக் கையில் ஏதாவது கதைப் புத்தகம். நடுவில் தம்பி நக்ஷத்ரேயன் படுத்தாமல் இருந்தால் நன்றாக இருக்கும். வா போலாம்னு இழுத்துக் கொண்டு கிழே வந்து விடுவான்.

கோட்டை மாரியம்மன் கோவில், இந்த இடங்கள் எல்லாம் மறக்க முடியுமா.!!
எங்கள் பள்ளியின் படம் கிடைக்கவில்லை:((
காதல் என்று ஒரு படத்தில் ஒரு பெண்கள் உயர் நிலைப்பள்ளி காண்பிப்பார்கள். எங்கள் பள்ளியும் ,அச்சு அசல் அப்படியே இருக்கும்;))
தாத்தா மறைவுக்குப் பிறகு பாட்டி எங்களுடன் வசிக்க வந்ததால் அப்பா வேறு வீடு பார்க்க ஆரம்பித்தார்.அதனால் வீடு மாற்ற வேண்டிய அவசியம் வந்தது.
அப்போ இருந்த வீட்டிலிருந்து ரோடுக்கு வரும் வழி கொஞ்சம் சிக்கல்.
அதுவுமில்லாமல் பக்கத்து வீட்டுக் கோழிகள்,முயல்கள்
எல்லாம் அடிக்கடி வரும்.
பாட்டிக்கு அவ்வளவாகப் பிடிக்காது:)
வாசல் காலை நீட்டி உட்காந்து இருப்பார்.
வேலியைத் தாண்டி வரும்முயல்குட்டி அவ்வளவு அழகா இருக்கும்...அது வந்து பாட்டியைக் குசலம் விசாரிக்கும்!!
பாட்டிக்குச் சுத்தபத்தமா இருக்கணும்.
கூடவே தன் சர்க்கரை நோயைப்பற்றிக் கவனமாக இருப்பார்.ஏதாவது சுகவீனம் வந்துவிடக்கூடாதுனு உஷாராக இருப்பார்.

Wednesday, February 06, 2008

திண்டுக்கல் 1960..1964

தாத்தாவின் சதாபிஷேகம் 1960 மார்ச் நடந்தது.
அதற்குமுன்னரே அவரது இரண்டாவது மகன் திடீரென இறந்தது அவரை மிகவும் பாதித்து விட்டது.அதனால் தன் எண்பது வயது பூர்த்தியை மற்றவர்கள் மகிழ்ச்சிக்காக நடத்திக் கொண்டார்.
கொஞ்ச நாளில் தாத்தாவுக்கு அடிக்கடி காய்ச்சல் வர ஆரம்பித்து அவருடைய பழைய கம்பீரம் கொஞ்சம் தொலைந்தது.
தாத்தாவுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் எங்கள் அப்பாவின் முகத்தைப் பார்க்கவே பிடிக்காது எங்களுக்கு,
''முத்தண்ணாவுக்கு எல்லாம் நேரப்படி நடக்க வேண்டும் என்று
விழைந்து விழைந்து தன் அப்பாவைக் கவனித்துக் கொள்வார்.
அடிக்கடி நொந்து கொள்ளும் பாட்டியையும் சமாதானப் படுத்துவார்.
'தப்பு வார்த்தைகள் வேண்டாம்மா.
உனக்கு எவ்வளவு நல்ல மனசு, வாயால கெட்டுப் போயிடாதே; என்பார்.
தாத்தாவின் இறுதி நாளும் வந்துவிட்டது.
எங்களை எல்லாம் மட்டும் அருகில் அழைத்து விதுர நீதி சொல்வது போல ஒரு அரைமணி நேரம் ராமநாம மகிமை, பெற்றொர் சொல்படி நடத்தல் என்றெல்லாம் அவர் சொன்ன வார்த்தைகள் இன்னும்நினைவிருக்கின்றன.
பிறகு ,,தான் பெற்ற பிள்ளைகளைய்ம் இரண்டு பெண்களையும் அழைத்து ஏற்கனவே தான் எழுதி வைத்த சொத்து விவகாரங்கள் அவற்றை நிறைவேற்றவேண்டிய கடமை நாராயணனுக்கு என்று சொல்லி முடித்தார்.
பிறகு அப்பாவை மட்டும் தனியே அழைத்து,
'நாராயணா, உனக்குப் பொறுமை அதிகம். ஆனா உன்னைச் சோதிக்கிற மாதிரி குற்றம் ஏதாவது நடந்தா கோபிக்கத் தயங்காதே.!
உன் அம்மா பேசுவா. மனசில ஒண்ணும் கெட்ட நினைப்பு கிடையாது. அவளைக் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு என்று அசதியில் கண்களை மூடிக்கொண்டார்.
பிறகு ஆக்சிஜன் வைக்கப் பட்டது.
அடுத்த நாள் காலையில் தாத்தா அமைதி கொண்டார்.ராமன் வந்து அழைத்துப் போயிருப்பான்.;(
தாத்தாவும் பாட்டியும் குடியிருந்த அந்த ஸ்டோர் வீடுகளில் தாத்தாவின் தெளிவைப் பார்த்து வியக்காதவர்கள் இல்லை.
நாளைக்கு இருக்க மாட்டேன்னு ஒரு மனுஷன் எப்படி முதல் நாளே சொல்லுவார் என்ற அதிசயம்.
தாத்தா இனிமேல் வாய்ப்பாடு கேட்கமாட்டடர், அறிவுரை சொல்ல மாட்டார் என்ற எண்ணமே என்னை அழுத்தியது. இத்தனூண்டு மெலிந்த தேகத்தில் எத்தனை உரம்! என்றும் நினைத்தேன்.
பேரப்பிள்ளைகள் அனைவரையும் அப்பா வேறு வீட்டில் இருக்க வைத்ததர்.
வீட்டைச் சூழ்ந்த சோகத்தில்,அந்தப் பெண்கள் அழும் காட்சியை எல்லாம் பார்க்க விடவில்லை. இருக்கவும் விடவில்லை.
தாத்தாவுக்குக் கடைசியாக போய்ட்டுவான்னு சொல்லிட்டுப் போயிடுங்கோ எல்லோரும் என்று சொல்லிவிட்டுத் தன் மேல்துண்டில் கண்களை மறைத்துக் கொண்டுவிட்டார்.
ஏன் இத்தனை விவரம் என் மனதில் பதிந்தது என்றும் புரியவில்லை.
அதற்குப் பிறகு திருக்குறுங்குடி நிலம்,வீடு எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்திவிட்டு எங்கள் திண்டுக்கல் நகர மாற்றலையும் ஏற்று,
திண்டுக்கல் நகரம் வந்து சேர்ந்தோம்.
மேட்டுப்பட்டி என்று ஒரு இடம். அங்குதான் புனித ஜோசஃப் மகளிர் பள்ளி இருந்தது. பக்கத்திலேயே ஒரு மிகச் சிறிய வீட்டையும் வாடகைக்கு எடுத்தார்.
நானும் சின்னத்தம்பியும் அந்தப் பள்ளியில் சேர்ந்து கொண்டோம் .இந்தத் தடவை அப்பா என் கூடவே வந்து
அங்கே தலைமை ஆசிரியை ஆக இருந்த சிஸ்டர் ரெவரண்ட்.ரெடம்ப்டா மேரியிடம்,
''இது வரைத் தமிழில்தான் படித்து இருக்கிறாள்.
ஆங்கிலத்தில் பிழையிருந்தாலும் நீங்கள்தான் கவனித்துக் கொள்ள வேண்டும்'
என்றதும் எனக்கு மகா ரோஷமாக இருந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை.
எட்டாம் வகுப்பறை வரை என்னைக் கொண்டு வந்துவிட்டுப் போன அப்பாவை இப்போதூம் நினைக்கிறேன். யாருக்குக் கிடைப்பார் இந்த மாதிரி ஒரு தந்தை!!
பெரியவன் புனித மரியன்னைப் பள்ளியில் ஏழாவது வகுப்பில் சேர்ந்தான்.
படிக்காத மேதை படம் அங்குதான்(சோலைஹால் தியேட்டர்?) பார்த்தோம்.

Tuesday, February 05, 2008

துளசிதளம்


துளசி இலைகளின் பெருமைகளை உறவினர் எடுத்துச் சொல்ல கேள்விப்பட்ட விஷயங்கள்.
தினம் இரண்டு இலை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகுமாம்.
குழந்தைகளின் நுரையீரல் சுத்திகரிக்க,கபம் கட்டினால் அதைப்
போக்க,
வாய்,பற்கள் சுத்தத்திற்கு என்று பலவிதமாகச் சொல்லிக் கொண்டே போனார்.
அவர் துளசியைப்பற்றி இவ்வளவு விவரம் சொன்னது எனக்கு அதிசயமாக இருந்தது.
அதுவும் இன்று போன் செய்து எங்களுக்கு வாழ்த்துகள் சொல்லிவிட்டு, 'துளசி வீட்டில இருக்கோ?' என்றும் கேட்டார்.
நானும் அம்மா பாட்டி காலம் தொட்டு துளசி மாடம் வைக்கிறதும் கோலம் போடுவது விளக்கேற்றுவதும்
வழக்கம்தான் என்று சொன்னேன்.
அவருக்குத் தெரியுமா நம்ம வீட்டில பல வகைத் துளசிச் செடி சேகரிப்போம் என்று:))
இப்பவும் திருப்பதி திருமலை போய் வரும் போதும் கிருஷ்ணதுளசிச் செடி வாங்கி வந்தோம்... அதெல்லாம் அவரிடம் சொல்லவில்லை.
புத்திமதி சொல்ல வருபவரிடம்,பெருமை பீற்றிக் கொள்ள முடியுமா:)
இல்லை, இந்த அம்மா துளசி,கிருஷ்ண துளசி போலவே கோபால் துளசி ஒருத்தரை எங்களுக்குத் தெரியும்னோ,
சொல்லலை.
இங்கே இப்போது சொல்கிறேன்
அவரும் இன்று இந்த ஃபெப்ருவரி ஐந்தாம் தேதி பிறந்து....இத்தனை வருடங்களாகத் தமிழில் ,நல்ல தமிழில் நல்ல விஷயங்களை இணையத்தில் சொல்பவர்.
நகைச்சுவை நாயகி,
பின்னூட்ட அரசி நம்ம துளசிக்கு இன்னிக்குப் பிறந்தநாள்.
அவரும், அவரது மறுபாதியும் ,மகளும் ஜிகேயும் அவரது நண்பர்களான நாமும் நீண்ட நெடுங்காலம் நல்வாழ்வு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ஹேப்பி பர்த்டே துளசி.
பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.

Sunday, February 03, 2008

கவிதையே !! தெரியுமா

பதினைந்து வயதில் என்ன கனவு இருக்கும்?
பள்ளிக்கூடத்தின் கடைசி நாள்!
அது ஒரு மார்ச் மாத நாள் வருடம் 1964.
கல்லூரி,படிப்பு,எதிர்காலம்,தோழிகள்,அவர்களைப் பிரிவது.
இதை எல்லாம் எழுதவேண்டும் என்று ஒரு நாள் வடித்த கட்டுரை இது.

வெற்றுரை என்பதைவிட இதில் அப்போது எனக்கு
என் மனதில் உதித்த உற்சாகம் தான்
இதைக் கட்டுரை என்று சொல்ல வைத்தது.கவிதைனு சொல்ல துணிவு இல்லை:)

நினைவலை
----------------------------
அலைகடல் பொங்குமா அலைபோலே
நிலையிலா நினைவுகள் பொங்கும் மனதில்
நின்று நிலைக்கட்டும் இன்பம் எந்நாளும்
பொன்னென்னும் நன்மை தரட்டும்


கற்பனைக் குதிரை பறக்கட்டும்
கணக்கிலா இடங்களைக் கடந்தவாறு
கண்காணவியலா இடங்களுக்கு
கண்மூடிச் செல்லட்டும் பாய்ந்தோடி
இன்பம்தான் எத்தனை எண்ணும்போதே!
ஈடேறா எண்ணங்கள் இனி இல்லை
கோடானுகோடி துன்பமெல்லாம்
கேளாமல் நமை விட்டுப் பறந்து செல்லும்!
ஆகையால் நண்பீரே
ஆச்சரியம் வேண்டாம்
ஆனந்தம் கொள்வீர்!
மனதால் இணையும்போது
பிரிவில்லைஎன்றும் நமக்கு.
*************************************************
-----------------------------------------------------------------------------
இதில் நிறைவான வார்த்தைகள் இருக்கும் என்றால் அது எங்கள் தமிழ் மாஸ்டரின் பொறுப்பு.
இலக்கணம் சரியில்லை என்று இருந்தால் அது கட்டாயம் என் தவறு தான்.
யாப்பிலக்கணம் சொல்லிக் கொடுக்கும் நேரம் எனக்கு கடைசி பென்ச் சொந்தமாகிவிடும்.:))

Saturday, February 02, 2008

264 திருமங்கலம் காம்ப்....


நின்று நிதானமாக அசை போட்டு எழுதுவது என்று தீர்மானம் போட்டதில்(உதவி....இ.கொ, மதுரையம்பதி:)...)


திருமங்கலத்தில் காம்ப் போட வேண்டிய நிலை.
திருமங்கலத்திலிருந்து 12 மைல் தொலைவில் பழங்கானத்தம்.


அங்கே தாத்தா பாட்டி, சித்தப்பா,சித்தி அவர்களுடைய மூன்று குட்டிக் குழந்தைகள்.
தாத்தா எல்லாத் தாத்தாக்களையும் போலக் கண்டிப்பானவர். அதில் என் பெரிய தம்பியை மட்டும் ரொம்பவே பிடிக்கும்.


கேட்ட கேள்விக்கு டக் டக்னு பதில் சொல்வானாம்.


அதுவும் டார்ச் ஆன் செய்ததும் வெளிச்சம் வருகிறாப்போலப் பளிச்சுனு சொல்லிடுவானாம்:))
அதனால் தாத்தா பக்கம் அதிகம் நானும் சின்னவனும் போகமாட்டோம்.


அநேகமாகக் காலை தினமணி படிக்கவேண்டியது என் வேலை. காலைப் பால் குடித்ததும் கிணற்றங்கரை.


அங்கு கிணர்ரிலிருந்து தண்ணீர் இழுகும் வேலை தாத்தாவுடையது. அவர் அங்கேயே குளித்து தன் துணிமணிகளைத் தோய்த்து விடுவார்.


அவர் தண்ணீர் நிரப்பும் குடங்களையும் வாளிகளையும் வீட்டுக்குக் கொண்டு வருவது எங்கள் பொறுப்பு.


தாத்தாவுக்கு அப்போது வயது எழுபத்தைந்து. பாட்டிக்கு எழுபது.

அபூர்வமான தம்பதிகள். பாட்டிக்கு வெடுக் நிறைய உண்டு.

எங்கள் சாப்பாடு முடிந்ததும் என்னை அழைப்பார். 'தாத்தா தூங்கியாச்சா பாரு ''என்பார்.

பூனையாய் தாத்தா அருகில் போய், அந்த ஈசிசேர் அருகில் நின்று,

தாத்தாவின் விசிறி இப்படி அப்படி போகிறதா,

இல்லை தாத்தா மேல இருக்கா என்று பார்ப்பேன்.


ஒரு நாளாவது தாத்தா கண் திறந்து என்னைப் பார்க்காமல் இருந்தது இல்லை.:)


'என்ன வேணும்? உங்க பாட்டிக்கு டவுனுக்குப் போணூமா?

என்று கேட்பார்.

'ஆமாம்னு சொல்லுனு' பின்னாலிருந்து குரல் வரும்.


வடக்கில மின்னலடிக்கிறது. காத்தோட மழை வரும். நாளக்குப் போலாமே சுண்டைக்காயும் மணத்தக்காளியும் நாளைக்கும் இருக்கும்'' என்பார்.

பாட்டியிடமிருந்து பதிலே வராது.

ஒரு அழகிய அரக்குப் பட்டுப்புடவை கட்டி எப்பவோ பாட்டி ரெடி.

அவருக்குத் தங்கைகள் மதுரை புதுத்தெருவில் குடியிருந்தார்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் அங்கே போய் அரட்டையும் டிபனும் உள்ளே போக வேண்டும் பாட்டிக்கு.

அநேகமாக நெல்லையில் ஒருவருமே இல்லாத நிலையாகி விட்டது.


பாட்டியின் வயது ஒத்தவர்கள் வக்கீல் புதுத்தெரு, நாயக்கர் புதுத் தெரு, சொக்கிகுளம், நரிமேடு,வசந்தநகர் என்று

குடி புகுந்து விட்டார்கள்.


தாத்தாவிற்கு பூஜையும் ராமனும் அவன் நாமமும் போதும்.

அவரைப் பார்க்க எல்லோரும் வந்த வண்னம் இருப்பார்கள். அதனால் உலக செய்தி அத்தனையும் அவருக்கு வந்துவிடும்.


தனது நெருங்கிய செல்வந்தராயிருந்த உறவிடம், அவர் வாங்கிக்கொண்ட உதவி டிவிஎஸ் பஸ் பாஸ் ஒன்றுதான்.

அதுவும் பாட்டிக்கு மட்டும்.

தான் எங்கயாவது போக வேண்டும் என்றால், சித்தப்பாவிடம் சொல்லி வண்டி ஏற்பாடு செய்து கொள்ளுவார். அதுவும் வெகு அபூர்வம்.
மிக உயர்ந்த கொள்கைகள். நேர்மை., இவைதான் தாத்தாவின் அடையாளங்கள்.
எங்கேயிருந்தெல்லாமோ தாத்தாவுக்குத் தபால் வரும்.
பாரதீய வித்யா பவன் பத்திரிகை பவன்ஸ் ஜர்னல்.
மஞ்சரி பத்திரிகை,ஜே அண்ட் ஜே டீசேன் என்ற மருத்துவ பத்திரிகை. இவைகள் எல்லாம் சில.
இந்த மருத்துவத்தில் அவருக்கு இருந்த நம்பிக்கை ,அம்மா வழியாக எங்களையும் பிடித்துக் கொண்டது.
பழங்கானத்தத்திலிருந்து திருப்பரங்குன்றம் வரை நடந்தே வருவார்.
அங்கிருக்கும் தபால் அலுவலகத்திலிருந்து, எங்கள் தந்தாஇயுடன் கட்டுக் கட , கட தந்தி மொழியில் பேசுவார்.;))
எங்களுக்கும் அதை எப்படி மொழி பெயர்ப்பது என்று சொல்லியும் காட்டுவார்.
பாட்டிக்கு அப்போது மண் சட்டிச் சமையல் தான் வழக்கம்.
அதில் செய்யும் கீரைக் குழம்பும்,தோய்த்த கட்டித் தயிரும்,
ம்ம்ம்.நினைக்கத்தான் வேண்டி இருக்கிறது.
கைமுறுக்கு, திரட்டிப்பால் இதெல்லாம் பாட்டி கையால்
செய்து வந்து வெண்கலப் பானையில் அடைக்கலமாகும்.
பரணுக்கு ஏறிவிடும்.
தினம் மதியம் மூன்று மணிவாக்கில் ஆறு குழந்தைகளுக்கும்,
இரண்டு சிறுமலைப் பழங்களும் வாழைச்சருகில் திரட்டிப்பாலும்,இரண்டு முறுக்குகளும் விநியோகம் ஆகும்.:)
ஆறு மணிக்கு விளையாட்டு முடிந்தால் கைகால் கழுவி சஹஸ்ரநாம பாராயணத்துக்கு வந்து விட வேண்டும்.
ஏழரை மணிக்கு பாட்டி பெரிய அரிக்கஞ்சட்டி நிறைய மோர் சாதம் பிசைந்து கூடத்துக்குக் கொண்டுவருவார்.
நாள் முழுவதும் ஆடின ஆட்டம் வயிறு கூப்பாடு போடும்.
பக்கத்தில் சித்தி உட்கார்ந்து மாய மோதிரம், மந்திரக்குதிரை என்று கதைகள் சொல்ல, எல்லோர் கைகளிலும் சோறு வைத்து நடுவில் குழித்துக் கொண்டால்
மதியக் குழம்போ,இல்லை மாவடுவோ கிடைக்கும்.
சாப்பிட்ட இடத்தைச் சுத்தம் செய்ய(செய்யாமலிருக்க:)))
எனக்கும் தங்கைகளுக்கும் வாக்குவாதம் நடக்கும்.
தாத்தா சிரிப்புடன் எங்களை விலக்கி டைம்டேபிள் போட்டுக் கொடுப்பார்.
பிறகென்ன, ஒரு பெரிய கல்யாண ஜமக்ககளம் விரிக்கப்பட்டு ஒரு தலையணைக்கு இருவர் என் , தாத்தா கட்டிலருகில் படுப்போம்.
தாத்தா ராம நாமம் சொல்ல உறங்கிவிடுவோம்.
அடுத்த பதிவில் திண்டுக்கல்லுக்குப் போகலாமா:)