Showing posts with label அன்னை. Show all posts
Showing posts with label அன்னை. Show all posts

Thursday, September 13, 2018

கசப்பு நீங்கி பாயசம் சாப்பிடலாமா..

Vallisimhan
எல்லோரும் வாழ வேண்டும் .

சிறிது நேரம் படுத்து எழுந்திருந்த ஜானம்மாவுக்கு
ஒரு தெளிவு கிடைத்தது போல  நிம்மதி.

ஒரு நடை தன் கிராமத்து தேவதையைத் தரிசித்து வரவேண்டும்
என்ற ஆர்வம் மனதில் கிளம்பியது. வாழைத்தோப்பு அம்மன் என்ற பெயரில் 
இருக்கும் மாரியம்மன் ,ஜானம்மாவின் எல்லாத் துயரங்களுக்கும் பதில் சொன்னவள். 

கொஞ்சம் கிலேசம் ஏற்பட்டாலும் அந்த அம்மனைப் போய்ப் பார்த்துவிடுவார்.
நிம்மதி கிடைக்கும் வரை அவளிடம் தன் மன சங்கடங்களைச் சொல்லி
விட்டுத்தான் வருவார்.
பிறகு தன் கடமைகளைத் தொடருவார்.

தன் பக்கத்தில் அயர்ந்து உறங்கும் ஷண்முகத்தை ஆதுரத்துடன் 
பார்த்தார். எழுந்து சென்று தண்ணீர் அருந்திவிட்டு மீண்டும் வந்து உட்கார்ந்தார்.
சலனம் கேட்டு எழுந்துவீட்டான் மகன். அம்மா, காப்பி ஏதாவது வேணுமா
நான் வாங்கி வரவா என்றதும் சிரிப்பு வந்துவிட்டது அம்மாவுக்கு.
நாம வீட்டிலதானப்பா இருக்கோம். வாடாமல்லி உள்ளே காப்பி 
போட்டுக் கொண்டிருக்கா. 
செண்பகம் ஏதோ வேலையா வெளியே போயிருக்கா.

ஏம்மா எனக்கு ஒரு வரியாவது எழுதக் கூடாதா. 
நான் வந்து அழைத்துப் போயிருப்பேனே. இப்படி சங்கடத்தில இருக்கியே மா. உனக்கு இது தேவையா.
 நம் ஊரில் இல்லாத மருத்துவரா, கஷ்டமோ நஷ்டமோ , வாடாமல்லி
பார்த்துப்பா. 
உடம்பு இவ்வளவு தளர்ந்து போயிட்டயே என்று அலமந்து போய்விட்டான்.

நான் நல்லாத்தான் இருக்கேன். வயசானால் வரும்  ஓய்ச்சல் தான்.
நீ கவலைப் படாதே. அதற்காக என்னை அழைத்துப் போகணும்னு கட்டாயம்
இல்லை.
ஷண்முகம் வாயைத் திறக்கு முன் ,வாசலில் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது.

வியர்த்து விறுவிறுத்து குமரன் வந்தான்.
அவன் கையில் பால் பாக்கெட்களும், பழங்களும் இருந்தன.

ஃப்ரிட்ஜைத் திறந்து உள்ளே வைத்து, அண்ணா முகம் கழுவிப் புறப்படுங்க, திருவொத்தியூர்
வடிவுடை அம்மனைத் தரிசித்து விட்டு,
வெளியே  சாப்பிட்டு விட்டு வரலாம். நாளை வண்டிக்குச் சொல்லி இருக்கேன்.
உன்னுடன் வருகிறேன் வீட்டை ஒழுங்கு படுத்திவிட்டுத்தான் மறு வேலை
என்று பொரிந்து தள்ளும் தம்பியைப் பாசத்துடன் பார்த்தான் அண்ணன்.

நீ லீவு போட்டு அங்க செய்ய பெரிய அரண்மனை இல்லடா அது. எங்களுக்குத் தேவையும் குறைவு,அதற்கேற்ற  பொருட்களும் கொஞ்சம் தான்.என்றான்.
ஆஹா எல்லாம் தெரியும்.
நான் வரத்தான் செய்வேன் என்று அடம் பிடிக்கும் குழந்தை போல 
பேசும் தம்பியைப் பார்த்து சிரித்தான்.
சரிடா உன் விருப்பம். இப்போ கோவிலுக்குப் போகலாம் வா. அம்மா, தலையை வாரிக்கோமா.
நல்ல புடவை கட்டு, வா குடும்பத்தோடு போய் வரலாம் என்றான்.
 ஜானம்மாவுக்கு தன் தேவதையே அழைத்தது போல சமாதானம் பிறந்தது. 
பெரிய கால் டாக்சியை வரவழைத்த குமரன் ,மனைவியைத் தேடினான். இன்னுமா வரல அவ. ராயபுரம் போய் வரேன்னு சொன்னாளே, என்ற வண்ணம் யோசித்தவன், நாம் கிளம்பலாம். அவளை ஆட்டோவில் வரச் சொல்லலாம் என்று கிளம்பினான்.

வடிவுடைய அம்மன் கோவிலில் தாயைப் பார்த்ததும் மனம் நெகிழப் பிரார்த்தித்தாள்.
இந்தக் குடும்பம் தழைக்கட்டும் தாயே. எனக்கு  வேற என்ன வேணும் என்றவாறு, தியாகேஸ்வரரையும் வணங்கிவிட்டு,
குமரன் சொன்ன ஹோட்டலில் ,குழந்தைகள் கேட்ட அத்தனையும் வாங்கிக் கொடுத்தான்.
சாப்பிடுங்கடா. சத்தே இல்லாம இருக்கக் கூடாது 
என்று சிரித்து சந்தோஷப் படுத்தினான்.

 போன்ல சொன்னேன், யேன் இவளைக் காணொம் என்றவாறு வீடு திரும்பினார்கள்.
மணி எட்டரை தான் ஆகி இருந்தது.,
 செண்பகம் என்று அழைத்த வண்ணம் உள்ளே போனவனைச் சந்தித்தது
தன் மாமியாரைத்தான். 
மகள் ராயபுரம் அத்தைக்கு உடம்பு முடியாமல் போனதால் அங்கே தங்கிவிட்டுக்
காலையில் வருவாளாம். என்று சொன்னதும் குமரன் மனம் கொதித்தது.

சரி அத்தை நாங்க சாப்பிட்டாச்சு நீங்க இருந்து சொன்னதுக்கு நன்றி
 என்று அவளை அனுப்பினான்.
அண்ணா, பால் காய்ச்சி சாப்பிட பால் வாங்கி வந்திருக்கேன். நாளை வியாழன் எமகண்டம்
போனதும் எல்லோரும் சாஸ்திரி நகர் போறோம்.
என்று மங்களவைப் படுக்க வைத்தான்.
அசதி தாங்காமல் , எல்லோரும் பாய்களை விரித்துப் படுத்துவிட்டனர்.

 அடுத்த நாளும் விடிந்தது. அனைவரும் குளித்து,மங்களாவையும் அழைத்துக் கொண்டு
புது வீட்டுக் கிளம்பினர்.
அதுவரையில்  செண்பகத்தைக் காணோம்.
பிள்ளையைப் பத்திக் கூடக் கவலைப் படலியே என்று வருத்தப் பட்டார் ஜானம்மா.

காலைக் காற்றில் தூரத்தில் நீல வண்ணக் கடல் தெரியும் இடத்தில் வீடுகள்
அமைந்திருந்தன. முதல் மாடியில் அமைந்திருந்த வீடு
அமைப்பாக இருந்தது.அண்ணே நீங்க முதல்ல போங்க. அம்மா கூடப் 
போ. அண்ணீ உங்க வாழ்க்கை சுகமாக அமைய வாழ்த்துகள் என்றபடி கீழே
 ஸ்கூட்டர் நிறுத்திய இடத்துக்குப் போனான்.

அவர்கள் உள்ளே போய் பத்து நிமிடங்களில் மீண்டும் ஸ்கூட்டர் சத்தம்
கேட்டது. கையில் கொண்டு வந்திருந்த வாழைத்தோப்பு அம்மன் படமும், பிள்ளையார்
படத்தையும் சமையல் மேடையில் வைத்துக் கோலமிட்டாள்.
அழகான ஜோடி விளக்குகளை ஏற்றி வைத்தாள்.
ஆட்கள் வரும் சத்தம் கேட்க எல்லோரும் திரும்பினர்.
வரிசையாக வைக்கப் பட்ட பொருட்களைக் கண்டு ஆச்சரியம் அலையாகத் தாக்கியது.
அண்ணி முதல்ல பாலைக் காய்ச்சுங்க.எல்லாரும் சாப்பிடலாம்.
அண்ணா ,அழகாக் காஸ் கனெக்ஷன் எல்லாம் கொடுத்திட்டியா.

இதோ வரான் பாரு என் நண்பன் என்று கூச்சத்தோடு நின்றிருந்த
செல்வத்தைக் காண்பித்தான்.
பாலும் காய்ச்சப் பட்டது. மனதார வாழ்த்திக் கொண்டே பாலைக் குடித்தனர்.
குமரன் கொண்டுவந்த மின்விசிறிகள் இரண்டு படுக்கை அறையிலும் கூடத்திலும்
பொருத்தப் பட்டன.
அடுத்து வந்தது புது தொலைக்காட்சிப் பெட்டி.
அண்ணா ஒண்ணும் சொல்லாத. நீ அனுப்பின பணம் அப்படியே இருந்தது.
பயிரறுவடை ஆன பணத்தைச் செலவழிக்கவில்லை.
 இதோ அப்பா ஆசியா உனக்கு வந்துவிட்டது
என்று சொன்ன தம்பியைக் கண்ணீரோடு தழுவிக் கொண்டான் 
ஷண்முகம். 
சிலையாக நின்ற அம்மாவின் கால்களில் மொத்தக் குடும்பமும்
 விழுந்து ஆசி வாங்கிக் கொண்டது.
வாடாமல்லி மங்களாவுக்கு , தான் கொண்டு வந்த தாழம்பூவை 
வைத்துப் பின்னினாள். பக்கத்திலிருந்த உணவுவிடுதியிலிருந்து காலை உணவு வாங்கி வந்த குமரன், அண்ணி நீங்க சமைத்து நான் சாப்பிடணும், மத்த வேலைகளை நாங்கள் 
பார்த்துக் கொள்ளுகிறோம் என்ற போது,
 வாடாமல்லி திக்கு முக்காடிப் போனாள். 
மாயாபஜார் படம் போல எல்லப் பொருட்களும்  அதற்கான அலமாரிகளில் அமர்ந்தன.
பிள்ளைகளின் யூனிஃபார்ம் அடுத்த நாள் தான் வரும் என்பதால், திங்களிலிருந்து
பள்ளி போவதாக ஏற்பாடு.
அண்ணி,நீங்களும் அம்மாவும் இங்க இருக்கிற எல்லாக் கோவிலுக்குப் 
போய்வரலாம், கடைகண்ணி, டாக்டர் எல்லாம் இருக்காங்க.

நடப் பயிற்சிக்கு பீச் இருக்கு என்று அடுக்கின கொழுந்தனைப் 
பார்த்துச் சிரித்தாள் அண்ணி.
அப்ப நீங்களும் குடும்பத்தோட இங்கே இருக்கலாம்.

அதுவும் நடக்கும் அண்ணி. தண்டையார்ப் பேட்டையைவிட்டுக் கிளம்ப வேண்டிய நாள் வந்துவிட்டது என்று மலர்ந்த முகத்துடன் நிற்கும் குமரனை இன்னோரு லக்ஷ்மணனாகவே 
பார்த்தாள். 
மாமியார் முகம் முழுவதும் மகிழ்ச்சி.
இனி என்ன வந்தாலும் தன் தாயாக அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டிய
பொறுப்பு அவள் மனதில் இறங்கியது.
செண்பகத்தின் மனமும் குளிர்ந்து நல்லுறவு நீடிக்க அம்மனே அருள்வாள்
என்ற உறுதியும் தோன்றியது. 
அனைவரும் வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Wednesday, September 12, 2018

வேப்பம்பூ ரச ருசி.....2

Vallisimhan
   அசதியில் சாய்ந்த வண்ணமே தூங்கி விட்ட ஜானம்மாவை எழுப்பியது
பெரியமகன் ஷண்முகத்தின் குரல். உடல் பரபரக்க, எழுந்து உட்கார்ந்தார். கண்ணில் உடனே நீர் கட்டியது.
வந்தியாப்பா, எப்போ புறப்பட்டீங்க இத்தனை நேரமாச்சே. 
பசி தாங்காதேப்பா உனக்கு என்று மகனையும் பேரன்களையும் அணைத்துக் கொண்டார்.

எங்களை வரச் சொல்றது இருக்கட்டும் . வெய்யில் திண்ணை ஏறிச் சுடுவது கூடத்தெரியாமல் என்னம்மா  உனக்கு உறக்கம் என்று அன்புடன் கேட்டான் மகன். அத்தை  வணக்கம் என்று கால்களைத் தொட்டு கும்பிட்டாள் வாடாமல்லி.
நல்லா இருங்க பசங்களா, உள்ளே போங்க நானும் வரேன்
என்று இறங்க முற்பட்டவளின் தலை சுற்றியது.

சட்டெனப் பிடித்துக் கொண்டான் மகன்.
ஏம்மா சாப்பிடலியா மணி ரெண்டாகப் போகுதே 
என்று கடிந்தபடி அவளைக் கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் செல்லக் குடும்பம் பின் தொடர்ந்தது.

அப்போதுதான் கண் விழித்தவள் போல செண்பகா வந்தாள். குழந்தை மங்களா
தன் சகோதர்களைப் பார்த்துக் குதியாட்டம் போட்டது.
அடங்கி இருடி என்று விரட்டியவள், 
நீங்க எப்ப வரீங்கன்னு தெரியல.
நான் சாப்பிட்டுவிட்டேன். உங்க தம்பி சாயந்திரம் தான் வர முடியுமாம்.
அவசரப் பட்டு புது வீட்டுக்குப் போக வேணாம்னு சொன்னாரு.
இலை போடட்டுமான்னு திரும்பினாள்.
வாங்க என்று ஒரு வார்த்தை சொல்லாததைக் கவனித்த வாடாமல்லி,
செண்பகம், இந்தா உனக்கும், மங்களாவுக்கும்,
தாழம்பூ, மருக்கொழுந்து, மல்லி எல்லாம் நம் தோட்டத்திலிருந்து 
கொண்டு வந்திடருக்கிறோம். இந்தா, என்று ,பெரிய பெரிய மொந்தன் வாழைப்பழம், அறுவடை செய்த மணிலாக் கொட்டை என்று பைகளை வைத்தாள்.

எங்கக்கா இவ பூ வைக்கிறா. பள்ளிக்குப் பூ வைக்கக் கூடாது. தாழம்பூ
கை குத்துமே, பக்கத்து வீட்டம்மா இதெல்லாம் வச்சிக்கும் அவங்களுக்குக் கொடுக்கிறேன்
என்றபடி, தரையில் இலைகளை வைத்தாள். 
அம்மா உங்களுக்காகக் காத்திருந்தாங்க அவங்களைச் சாப்பிடச் சொல்லுங்க.
எனக்கு ரத்த அழுத்தம் இருக்காம். முன்ன மாதிரி ஒண்ணும் முடியல என்று கீழே உட்கார்ந்து கொண்டாள்.

அமைதியாகப் பார்த்த ஷண்முகம், குழந்தைகளைப் பின்புறம் அழைத்துச் சென்று கைகால் கழுவ வைத்து அழைத்து வந்தான்.
நீங்க சிரமப் படவேண்டாம் நாங்களே பார்த்துக்கறோம் என்று
அம்மாவுக்கு முதலில் சாதத்தை அளித்து,
சாப்பிடும்மா என்றான்.
அச்சத்துடன் அங்கு வைத்திருந்த சாப்பாட்டு பாத்திரங்களைப் பார்த்தார்
ஜானம்மா.
அம்மாவுக்குப் பத்திய சாப்பாடு, உங்களுக்கும் அதே செய்து விட்டேன்
என்றாள் சின்ன மருமகள்.
ரொம்ப நல்லா இருக்குமா என்று வாடாமல்லித் தானும் சாப்பிட்டுப் 
பிள்ளைகளையும் கவனித்தாள்.
மாமியாரின் தட்டில் சாதத்தைப் பிசிந்து குழம்பை விடும் போது 
அவள் கண்கள் கலங்கியது.

பையன் களும் அமைதியாகச் சாப்பிட்டு எழுந்தார்கள்.
 அனைவரும் இடத்தைச் சுத்தம் செய்யவும்,
சின்ன மகன் முத்துக் குமரன் வரவும் சரியாக இருந்தது.
அண்ணே, அண்ணி, சாப்பிட்டீங்களா வாங்க வாங்க 
இதோ வரவழியில் அல்வா பகோடா எல்லாம் வாங்கி வந்தேன், டேய் பசங்களா வாங்கடா சித்தப்பா கிட்ட என்று வாரி அணைத்துக் கொண்டான்.
என்ன படிக்கிறீங்க. 
இங்க பக்கத்திலியே நல்ல பள்ளி இருக்குது
மங்களா படிக்குது. அங்கேயே  நீங்களும் சேர்ந்துக்கலாம் டா
என்ற கணவனைச் சுட்டெரிப்பது போலப் பார்த்தாள் அவன் மனைவி.
ஏங்க அவங்க தாம்பரத்திலிருந்து தினமுமா இங்க வருவாங்க.
என்னமோ சொல்றீங்களே என்று கேலி காட்டினாள்.
ஷண்முகம் வாய் திறந்தான்.
தம்பி ,எனக்கு அடையாறு டிப்போவில் சூப்பர்வைசராகப் போட்டு இருக்காங்க.
பக்கத்திலியே சாஸ்திரி நகரில் வீடும் பார்த்துக் கொடுத்திருக்காங்க. 
 MIG  flats ல. சின்னதா இருந்தாலும் புதுசா இருக்கு. 
தன்னீர் பிரச்சினை எல்லாம் இல்லை, அங்கயே 
ஹிண்டு ஹை ஸ்கூலில் ,நண்பன் ஒருவன் தயவில் இடமும் கிடைத்துவிட்டது.
நான் பயந்தது போல நிறையக் கட்டணமும் இல்லை.

உன்னையும் அம்மாவையும் பார்த்துட்டு இன்னிக்கே அங்க போறோம்.
லாரியில் சாமான்கள்  வந்துவிட்டன. அவற்றை இறக்கிவிட்டு வரத்தாம் நேரமாகிவிட்டது.

நீ சிரமப் படாதேடா.
அடுத்த வாரம் வந்து அம்மாவையும் அழைத்துப் போகலாம்னு இருக்கேன்.
நீ என்ன சொல்லற.
அம்மாவுடன் இருந்து நாட்களாகி விட்டது.
வாடாமல்லியும் சேர்ந்து கொண்டாள். எப்பவும் அம்மா நினைப்புதான். சர்க்கரைக்கு மருந்து எடுத்துக் கிட்டாங்களா, சாப்பிட்டாங்களா என்று. சொல்லிக் கிட்டே இருப்பாங்க 
என்றாள்.
குமரன் அமைதியானான்.

பிள்ளைகளுக்கு ஏதாவது சினிமா போடு செண்பகா.
அப்படியே எனக்கும் சாதம் குழம்பு எடுத்துவை. 
இன்னிக்கு  வங்கியில் நேரமே கிடைக்கவில்லை என்று உள்ளே போனான்.
தட்டில் சாதமும் ,குழம்பு, பாவக்காய் கறியும், வேப்பம்பூ ரசமும் அவனை எதிர் நோக்கின.

இதுவா சமையல் என்று குரல் உயர்த்தினவனின் கண்களைச் சந்திக்கத் தயங்கினாள்
செண்பகம்.
அம்மாவுக்காக செய்தேங்க..
நீங்களும் வருவீங்கன்னு எதிர்பார்க்கல என்றாள். தயங்கியபடி.

அண்ணன் ,அண்ணி 2 வருஷம் கழிச்சி வராங்கன்னு நினைவிருக்கா உனக்கு
என்று அழுத்தமான குரலில் கேட்டான்.

குமரா என்று அண்ணன் விளிப்பது கேட்டதும் கசந்த உணவைச் சாப்பிட்டு முடித்தான்.

இதோ வரேன் அண்ணே  என்றபடி வெளியே வந்த
குமரன், அண்ணே நீங்க கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க,

நான் வெளிய போயி முக்கிய வேலையை முடிச்சுட்டு வரென்,
அம்மா நீங்களும் படுத்துக்கங்க மா.
என்றபடி அவசரமாய் வெளியேறினான்,

தம்பியின் போக்கு புரிபடாமல் அம்மாவோடு பேச உட்கார்ந்தான்
ஷண்முகம். 
நிமிடத்தில் புரிந்து கொண்டான் அம்மாவின் தள்ளாமையையும், சோகத்தையும்.
தந்தை இறந்த போது கூட இத்தனை தளர்வாக இல்லை அவள்.

கிராமத்தில் இருந்த போது ,வயல் வெளி, தன் தோழிகள், உறவுகளுடன்
வரவு செலவுக் கணக்கு எல்லாம் கவனித்துச் சுறு சுறுப்பாக இருந்தாள்.
சென்னை அவளுக்கு மாற்றம் கொடுக்கவில்லை. ஏமாற்றமே 
ஆலயம்.
கிடைத்திருக்கிறது.... நல்ல முடிவுடன் அடுத்து சந்திக்கலாம்.
திருவொற்றியூர் வடிவுடை அம்மன்.

Tuesday, September 11, 2018

வேப்பம்பூ ரசம்.....கதை.

Vallisimhan
எல்லோரும்  இன்பமாக வாழ  என்  வாழ்த்துகள்.


ஜானம்மா   திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்திருந்தார்.
 காலையில் உள் சென்ற காப்பி செரித்துவிட்டு மறு பசி வந்துவிட்டது.

பாட்டீ.... வேப்பம்பூ ரசம் எப்படி வைக்கணும். அம்மா கேட்கிறாங்க
என்று கீச்சிட்டாள் பேத்தி குயிலி.

சிரமப்பட்டு கீழே இறங்கி உள்ளே சென்ற ஜானம்மா, மருமகளிடம் 
ரசம் வைக்கும் விதத்தைச் சொல்லிவிட்டு,
ஏம்மா கொஞ்சம் கஞ்சி கொடுக்கிறாயா தலை சுத்தற மாதிரி
இருக்கு என்று சொன்னதும் முகம் சுளுக்கினாள் மருமகள் செண்பகா.

ஏற்கனவே உங்க பெரிய மகனும் குடும்பமும் வராங்கன்னு
போன் வந்திருக்கு. இந்த ஊரோட வரப் போறாங்களாமே.

கண்டிப்பா சொல்லி வைங்க ஊருக்கு வெளிய தாம்பரம்
 பக்கத்துல வீடு பார்த்துக்கச் சொல்லி.
அடிக்கடி வரப் போக இருக்க வேண்டாம் என்று சிடுசிடுத்தாள்.

அப்படியா, எனக்குத் தெரியாதே எப்ப வராங்க என்றார்.
மதியம் சாப்பாட்டுக்கு வராங்க.
வேப்பம்பூ ரசம் வைக்கப் போறியா. கசப்பாயிடுமே தாயி என்று கெஞ்சினாள்
மாமியார்.
கசக்கட்டும். பாவக்காய் கறியும், வெறும் குழம்பும் இன்னிக்கு செய்தாச்சு.
அவங்களே புரிஞ்சுக்கட்டும் என்று சமையலறைக்குள்
புகுந்து கொண்ட மருமகளைத் திகைப்போடு பார்த்தார்.
தனக்குக் கஞ்சி கிடைக்காது என்று புரிந்து கொண்டு 
வாசல் திண்ணையில் படுத்துக் கொண்டார்.
பேத்தி மங்களா ,பாட்டியிடம் இரண்டு பிஸ்கட்டைக் கையில் வைத்து அழுத்தினாள்.
ரகசியக் குரலில் சாப்பிடு பாட்டி. மோர் கொண்டுவரேன் என்று ஓடிவிட்டாள்.

உள்ளே செண்பகா தன் தாயிடம் உரக்கப் பேசுவது கேட்டது. 
அந்த அம்மாவும்  இல்லாதப் பட்டவங்க கண்ணுல படாம முக்கியமான
பொருளை மறைச்சு வச்சிடு.
கெட்டும் பட்டணம் சேருன்னு வராங்க போல என்று மகளுக்குப்
புத்திமதி சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஜானம்மாவின் பெரிய மகன் கொஞ்சம் அப்பாவி. 
ஏதோ போக்குவரத்துக் கழகத்தில்  சிறிய வேலையில்
இருந்தான். அவனுக்கும் இரண்டு மகன்கள்  பத்து,எட்டு வயதில் இருந்தார்கள்.

மருமகள் வாடாமல்லி, ஜானம்மாவின் சொந்த ஊரான செய்யாறிலிருந்து வந்தவள்.
கிராமப் பழக்க வழக்கங்களோடு கட்டுப் பெட்டியாக இருப்பாள்.
அதுவே செண்பகத்துக்கு இளப்பமாகத் தெரியும்.
சென்னையில்  தண்டையார்பேட்டையில் வளர்ந்தவளுக்கு
பள்ளி இறுதி வரை படிக்க வாய்ப்பு கிடைத்தது.
கணவனுடன் பேசிப் பழகி ,தனக்குப் பிடித்த பொருட்களை
 வாங்கிச் சேமித்து வைத்திருந்தாள். மாமியாரை வீட்டுக்குக் காவல் வைத்துவிட்டு, சினிமா
,உறவினர் வீடு என்று சென்று வர ஒரு ஸ்கூட்டரும் 
வாங்க வைத்திருந்தாள்.
மருமகளின் சாமர்த்தியத்தை மெச்சினாலும்,
தன்னை ஒதுக்கி வைப்பதைப் புரிந்து பல நேரம் வருந்துவார் ஜானம்மா.

பெரியவனுக்கு வருமானம் போதாது. தான் அவனுக்குப் பாரமாக இருக்கக்
கூடாது என்றே சிறியவனுடன்  இருந்தார். தொடரும்.

Saturday, May 12, 2012

வெள்ளிநிலவே எந்தன் அன்னையே

அமெரிக்காவில் வந்த நிலா.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
நீ  கடைப்பக்கம் போவியாம்மா.
உம்ம் போவேன்  .
என்னவேணும்மா.
தயங்கியவாறு தனக்கு வேண்டிய அத்தியாவசியப் பொருளை அம்ம சொன்னார்.
நான் அதிர்ச்சியோடு பார்த்தேன்.
ஏன்மா  உனக்கு அந்தப் பிரச்சினையெல்லாம் நின்று விட்டதே .

இது என்ன புதிதா.டாக்டரைப் பார்க்கணுமா.
இல்லைமா அப்பா அழைத்துக் கொண்டு போனார்.
எனக்கு அவரிடம் இதை வாங்கிக் கொண்டு வரச் சொல்ல கூச்சமாக இருக்கிறது.

நீ அடுத்த தடவை வரும்போது,  இம்ப்காப்ஸிலிருந்து
ஸ்வாஸ்  மாத்திரையும்,
இந்தப் பாக்கேட்டையும் வாங்கிண்டு வருகிறாயா என்றபடி ஒரு நூறு ரூபாயை என் கையில் வைத்தார்.

என்ன கஷ்டம் அம்மா உனக்கு?
அடிக்கடி நீர் கசிகிறது. வெளியே போகவே பயமா இருக்கு.
டாக்டர் ஆபரேஷன் செய்துக்கலாம்னு சொல்கிறார்.
  நீ சரின்னு சொன்னால் கல்யாணி  நர்சிங் ஹோமில் செய்து கொள்கிறேன்.

ஐய்யோ  அம்மா, பெண்ணிடம் பேசவே உனக்கு இவ்வளவு பயமா.
என்னை ராட்சசி   வம்சத்தில்   சேர்த்து  பயந்திருக்கிறாயா.

இது நடந்தது    23 வருடங்களுக்கு முன்.
அப்போது இந்த   சங்கடத்துக்கு மருந்து மாயம் ஒன்றும் இல்லை. சிறுநீரக  ப்ளாட்டர் அருகே ஒரு மைனர்    அறுவை சிகித்சை.

ஆனால் அது செய்தும்   பயன் படவில்லை. இந்தப் பிரச்சினையும் வாங்குவதும் தொடர்ந்தது.

சுத்தம் படு சுத்தம் என்றிருக்கும் அம்மாவுக்கு
இது பெரிய    விஷயமாக மனதைப் பாதித்தது.

உடல் தளர்ந்ததால் வந்த    சிரமம்.
பிறகு அதையும் தைரியமாக எதிர் கொண்டார்.
சிரித்த முகத்தை எந்தக் காரணம் கொண்டும் மாற்றிக் கொள்ளவில்லை.
இப்போது எத்தனையோ மாற்று சிகித்சைகளும்

உதவிகளும் பலவடிவில் வந்துவிட்டன.

நாற்பது வயதிலேயே அவதிப் படுபவர்களும் இருக்கிறார்கள் என்பதைப் பத்திரிகை  வாயிலாக அறிகிறேன்.
இதோ நானும் அந்த லிஸ்டில் தான்.

அம்மா உன்னளவிற்கு எனக்கும் பொறுமையும் தைரியமும் கொடு.
அத்தனை உயிரையும் நேசிக்கும் பண்பையும் கொடு.

.

உலகில் அன்னை பெண்வடிவத்தில் மட்டும் இல்லை. தந்தையரும் குழந்தைகளைப் பேணும் காலம் இது.
வாழ்த்துகள். உங்கள் ஆரோக்கியத்தைப் பேணுங்கள். குடும்பம் நன்றாக இருக்கும்.

Posted by Picasa

சுதந்திரம் அடைய என்ன தேவை?

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் . விடுதலை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன். குடும்பத் தளையிலிருந்து விடுபடுவது கூட அவ்வளவு சிரமம் இல...