சுற்றிச் சுழலும் அக்டோபர் காற்று. அத்துடன் சுழலும் காய்ந்த
இலைகள்.
இயற்கையே கண் முன் ஆடும் நாடகம்.
இன்னும் கொஞ்ச நாட்களில் மரம் தன் இலைகள் எல்லாவற்றையும் துறந்து
தன் உடலை மட்டும் உறுதியாக நிறுத்தும் காட்சி வருடா வருடம் கண்டாலும் அலுக்காது.
நம் வாழ்க்கையின் பலபகுதிகளை மரம் வாழ்ந்து காட்டுகிறது.
ஒரே ஒரு பைன் மரம் மட்டும் தன் இலைகளை உதிர்ப்பதில்லை.
அதன் பாதுகாப்பை உணர்ந்து அங்கே குடியிருக்கும் பறவைகள்
பரம்பரையாக வாழ்ந்து வருகின்றன.
ஒரு குடும்பம் பறந்து போகும் மறு குடும்பம் அங்கே அடைக்கலமாகும்.
சில வீடுகள் மட்டும் தனிமைப் படுகின்றன. இங்கும் மலை நேரத்தில்
விளக்குகள் ஏற்றப்படுகின்றன. சூரியன் எழுந்ததும் அணைக்கப்
படுகின்றன. கண்ணுக்குத் தெரியாத நினைவுகள்
மனதால் உணரப்படும். சுற்றி இருக்கும் மரங்களும் செடிகளும்
தோட்டக்காரர் கைகளில் பாதுகாப்புப் பெறுகின்றன.
அவரது குடும்பத்துக்கு மழையின் போதும் வெய்யிலின் போதும்
அடைக்கலமாகிறது வீடு.
முன் இருந்த உயிரோட்டம், பின் வரும் தலைமுறையால்
காப்பாற்றப்படும். இதுதானே வாழ்க்கை.
காக்க வேண்டியவர்கள் நம் மூதாதையர். காப்பார்கள்.
