Thursday, October 29, 2026

சுபம் வரும் வேளை பல 5

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
   போஸ்ட் மாஸ்டர் அப்பா:)

மாமனார் மாமியார்.


https://youtu.be/gimbqFF5D5w?si=xXJSttGRPEzOpZmB
சீவி முடிச்சு சிங்காரிச்சு '' அருமையான பாட்டு. இங்கே லின்க் வேலை
செய்யுமா தெரியவில்லை.:)

மாமனார் மாமியார் திருமணம் பற்றி சொல்லி விடுகிறேன்.
கமலம்மாவின் அப்பா   ராவ் பஹதூர் சேஷய்யங்கார். மைலாப்பூர் வக்கீல். க்ரிமினல் லாயர். அவரும் இன்னோரு சமூக அமைப்பாளரும் சேர்ந்து தொடங்கிய லேடி சிவஸ்வாமி  பெண்கள்பள்ளி இப்போது
அரசுப்பள்ளியாகி விட்டது. பள்ளியில் தாத்தாவின் படம் இருக்கிறது.

என் மாமனார் பி எஸ் பாய்ஸ் பள்ளியில் படிக்கும் 
வேளையில் சைக்கிளில் செல்லும்போது தன்னைக் கடந்து செல்லும் மாட்டு  வண்டியில் தன் தங்கையையும் தோழியையும்

பார்த்து தொடர்ந்திருக்கிறார். நடுத்தெரு( தெருவின் பெயர்)வில் 
தோழி இறங்கிக் கொள்கிறார். மாமாவுக்கு16 கமலம்மாவுக்கு 14 வயது.

என் மாமியார் மிக அழகாக ரோஜா மாதிரி இருப்பாராம்.
மாமனார் என்னிடம் சொல்வார். இப்பதான் பூசணிக்கா
மாதிரி ஆயிட்டா. அப்போ ரொம்ப  அழகா அருமையா இருப்பா.

இப்படி சொல்லும்போது மாமியார் அவரைக் கடிந்து கொள்வார்.
சில மாதங்களில் மாமியார் மெட்ரிகுலேஷன் 
முடித்து விட்டார்.

மாமனார் சைக்கிளில் இருந்து விழுந்து அந்த விபத்தில்
கையை முறித்துக் கொண்டு கட்டுப் போட்டுக் கொண்டார்.
குணமானதும்  ஆஜிப்பாட்டியும் தாத்தாவும்
 ஶ்ரீமான் சேஷயங்காரிடம் பெண் கேட்டு இருக்கின்றனர்.

இந்தத் தாத்தாவுக்கு அவர்களுடைய  அந்தஸ்து, சொத்து
இவைகளைப் பார்த்து கொஞ்சம் தயக்கம். இத்தனைக்கும் அப்போது
மதராஸ்    ஹைகோர்ட் ஜட்ஜ் பதவி வேறு அவரைத் தேடி வந்தது.

குதிரை வண்டியில் ஏறி கடற்கரையோரமாக  ஹைகோர்ட் சென்று வருவார் என்று அம்மா சொன்ன நினைவு.

அவர் போட்ட கண்டிஷன்களில் ஒன்று தன்னால் வைர நெக்லஸ்
 போட முடியாது.  40 பவுன் தான் நகை. சிறப்பாகக் கல்யாணம்.
என்பதுதான்.
அந்த நாளைய பி எஸ் ஹைஸ்கூலில் திருமணம் நடந்ததாகச்
சொன்னார் மாமியார்.
நடுவில் மதுரைப் பாட்டி ஒரு சந்தேகம் எழுப்பினாராம்.
 அடிபட்ட  கை சரியாகி விட்டதா. ஊனத்தோடு  திருமணம் செய்யக் கூடாது என்றாராம்.

மாமாவும் கோபமும் உடன் பிறந்தவர்கள். உடனே நடுத்தெரு வீட்டுக்கு வந்தாராம். அங்கே இருந்த  ஆறுக்கு இரண்டடி
பெஞ்சை  அடிபட்ட  வலது கையால் தூக்கினாராம்.!!!!!!

பாட்டி உள்ளே  ஓடிவிட்டாராம்.

மதுரைப்பாட்டி  எங்க தாத்தா, கமலம்மாவின் அப்பா, திருமதி டி வி எஸ்,   ரங்கய்யங்கார் இவர்களை ஒன்றாக வளர்த்தவர்.

மதுரைப் பாட்டியின் தங்கை மகனான எங்கள் தாத்தா சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவர்.அவர் எல்லாருக்கும்  மூத்தவர் என்பதால் முத்தண்ணா.

அவருடைய தம்பி தங்கைகளாக வளர்ந்தவர்கள் மற்றவர்கள்.
தங்கை பிற்காலத்தில் மரக்கடை சுந்தரம் ஐய்யங்காரைத் திருமணம்
செய்தார். 
அண்ணா 
தம்பிகள் அக்கா தங்கைகளை மணந்தனர். எல்லாம் திருக்குறுங்குடி மாமா அத்தை உறவுகள் தான்.

இப்பொழுது எங்கள் இருவரின் முறை. நல்ல வேளை இருவரும் 
முன்னே பின்னே பார்த்ததில்லை.

என்னை என் பனிரெண்டு வயதில் பார்த்ததாக சிங்கம் சொல்வார்.
என் தாத்தா மரணத்துக்கு அவருடைய சித்தியுடன் 20 வயது பையனாக(?)  வந்திருந்த போது அங்கிருந்த பென்ச் ஒன்றில் நான்
அழுதுகொண்டிருந்தேனாம்!!  (பாவாடை சட்டையில் இரட்டைப் பின்னலோடு ) பிறகு பேசிச் சிரித்திருக்கிறோம்.

''அப்பவே திருமணம் செய்திருந்தால் இப்போ மாதிரி 
வம்புக்கு வரமாட்டே!!! நான் உன்னை வழிக்குக் கொண்டு வந்திருப்பேன்  என்று அலட்டிக் கொள்வார்.

ஆகக் கூடி அந்த அக்டோபர் 29 , 30 தேதிகளில் புரசவாக்கம் ஹை ரோடு, கங்காதீஸ்வரர் கோவில்  வளைக்கடைகளில் கழிந்தது.

இன்னும் இரண்டு வாயில் புடவைகள் வாங்கிக் கொடுத்தார்
அம்மா. மறு நாளுக்காகக் காத்திருந்தோம். 

வெள்ளாளத் தெரு பிள்ளையாரிடம்  எல்லோருக்காகவும் வேண்டிக் கொண்டு  தோழியுடன் அரட்டை அடித்து விட்டுத்
தூங்கவும் போயாச்சு. எப்பொழுதும் போல் மாமாக்கள், அப்பா, அம்மா பாட்டி எல்லோரும் அடுத்த நாளுக்கான திட்டங்களில் 
இருந்தார்கள்.





















No comments:

சுபம் வரும் வேளை பல 5

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.    போஸ்ட் மாஸ்டர் அப்பா:) மாமனார் மாமியார். https://youtu.be/gimbqFF5D5w?si=xXJSttGRPEzOpZmB சீவி...