Blog Archive

Tuesday, August 31, 2010

இன்று புதிதாய்....

<>
</>

வெள்ளை டிஸ்டம்பர் மினுக்குது வெய்யிலில்
வாழ்வின் ஏடுகளை அழிக்க வந்த கரையான்கள் போயின கும்மியடி'' இப்படிப் பாடலாமா என்று தோன்றியது.


இந்த ஒரு விழிப்பைக் கொடுத்த அந்தக் கரையாஙகளுக்கும் நன்றி. அரதப் பழசாக இருந்த வீடு இப்போது வெள்ளையடிக்கப்பட்டு,

சமையல் அறைக்கு மருந்து காபந்து செய்து(கரப்பான் வராது),

தண்ணீர் ஒழுகிய தளத்தில் புது தரை மேவி, அப்பாடி என்று நிமிர 60 நாட்கள் பிடித்திருக்கின்றன.

இந்தக் கோலாகலத்தில் எனக்குத் திருமணப் பரிசாக வந்த பெட்டி ,உளுத்துப் போய் காயலான் வந்து எடுக்கப்போகும் நேரம், ஐய்யொ அது அப்பா கொடுத்தது'என்று எடுத்து வைத்துக் கொண்டேன். அதைப் புதுப்பித்தாயிற்று. என்ன வைக்கலாம் அதற்குள். இனிமையான நினைவுகளை வைத்துப் பூட்டலாமா:)


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
Posted by Picasa

Sunday, August 29, 2010

குழலின் குறும்பு



மஞ்சுக்கொம்மா !
என்பா..
அங்க தண்ணி கொட்டிட்டேன் மன்சிக்கொமா
என்னடா இது என்ன சொல்ற. சாரி சொல்றேன்மா.

''மஞ்சுகோ'' அப்டின்னால்?
அவசரமா ,மன்னிச்சுகொனு   சொல்றேன்.!!ஒ!!
பரவாயில்லை. சின்ன சின்ன சமாசாரத்துக்கு மன்சிகோ வேணாம்:)
ஒகே மா  டன்!!

மைக்கேல்ஸ்   கடை. காய்கறி எல்லாம் வாங்கியாச்சு. சார் பொறுமையா ஒவ்வொரு ஷேல்பிலிருந்தும்   எட்டினதைஎல்லாம்  எடுத்து அம்மாவிடம் கொடுக்குறார். அம்மாவும் அதைத் திருப்பி வைத்த படி
பணம் செலுத்தும்   இடத்துக்கு  வந்தது,
அங்க இருக்கும் சேல்ஸ் பெண்,  இவன்  செய்யும் அட்டகாசத்தைக் கண்டு ரசித்தவள் ,
ஒ சோ யு ஆர் கிருஷ்ணா என்றிருக்கிறாள்.  என் பெண்ணிடம்
 யு ஹேவ் ஒன் மோர் ?

என் பெண்ணும்;''; எஸ் ஐ ஹாவ்  2 சன்ஸ்'' என்று சொல்லி இருக்கிறாள்.
பின்னாலயே   இந்த ச் சின்னப் பெரியவர் சொல்கிறார்,

ஈவன் மை அப்பா  ஹாஸ்  2  சன்ஸ்!!!
:))
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
Posted by Picasa

Wednesday, August 25, 2010

மா யா பஜார் பார்த்த பாதிப்பு.

ஆஹா இன்ப நிலவினிலே

அம்மா உங்களைப் பார்த்து எல்லாரும் பயப்படராங்கம்மா..


மாய எதிரிகளை அழிக்கிறேன் தாயே



நமோ கிருஷ்ணா ,வாசுதேவா.




கண்டம் துண்டம் செய்யும் கடோத்கஜன்:)





டும் இந்த இணைப்பின் கல்யாணம்:)







நேற்று எதேச்சையாக ,மதியம் தூக்கம் பிடிக்காமல் தொலைக்காட்சியைப் பார்க்கப் போனால் குட்டி வத்சலாவின் பிறந்த நாள் அமோகமாக நடந்து கொன்டிருக்கிறது.இந்தப் படத்தை எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது.எல்லாப் பாடலும் அருமை.அதில் பலே பலே தேவா. யாரோ அறிவார் உன் மாயா என்று தொடங்கும் அந்தப் பாடல் எப்போது கேட்டாலும் மன்ம் உருகும்.''உலகினில் சுகதுக்க ஊஞ்சலிலேதினம் உனது மாயை விளையாடுதய்யா.அறிவார் யார் அறியார் யாரோ...என்று செல்லும் அந்தப் பாடல். ஒரு மூன்று மணி நேரம் பழைய மவுண்ட் ரோடு தியேட்டர், கெயிட்டி என்று நினைக்கிறேன் அங்கெ போய்விட்டேன்.அம் அஹ ,இம் இஹி, உம் உஹூ!!எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.






Posted by Picasa

Tuesday, August 24, 2010

அழகு மிகு சென்னை

இது மண்ணின் பெருமை உரம்
அகற்றப் படக் கூடிய வெளிக் குப்பை
அழுக்கு என்பது என்ன? வெகு நாள் அடங்கிய
 தூசியா.


அழுக்கு வீட்டிற்குள் வரக் காரணிகள் என்ன.
வெளியிலிருந்து வரும் மாசு.

உள்ளிருந்தே மறைந்து வாழும் தூசு.

சென்னையே அழுக்கு நகரம் என்று சமீபத்தில்
 விமரிசிக்கப் பட்டதைப் பார்த்தேன்.

நமக்கும் தெரியும்.

சென்னை எப்படி இருந்தது.
அது இந்த 50 வருடங்களில் எப்படி மாறியிருக்கிறது.

எத்தனை வறுமை சூழ்நிலையில்

உழவர்கள் தங்கள் நில புலன்களை
விற்றுவிட்டு சென்னையை அடைக்கலம்

அடைந்தார்கள்..
விளைநிலங்கள் சிறுத்து வீடுகள் பெருத்து,
தண்ணீர் வளம் சுரண்டப்பட்டு,

மலைகளே கரைந்து,பெரிய நகரங்கள்
 உருவாகி இன்னும் எத்தனையோ


கணக்கிலடங்காத வினைகள் நடந்தே
இந்த நிலைமைக்கு நம் நகரம் வந்திருக்கிறது.



சிங்காரச் சென்னை உருவாவதற்கு
 முயற்சிகள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

சிங்காரமாக இல்லாவிட்டாலும் சுத்தமாக இருக்க

நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய
வேலைகள் எத்தனையோ.

பொதுவில் குற்றத்தைச் சுமத்துவதை விட,

நம் முதுகு சுத்தமாக இருக்கிறதா
என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.

நம்வீட்டுக்குப்பைகள் ஒழுங்காக
அதற்கு உண்டான குப்பைத் தொட்டியை அடைகிறதா,

இல்லை அதற்கு வெளியே விட்டெறியப் படுகிறதா.

இதைக் கட்டாயம் கண்டு கொள்ளலாம்.

இதெல்லாம் செய்யக் கூடியவை.

இப்பொழுது வீட்டிற்கு முன்னால்
நீண்ட பள்ளம் வெட்டி கிட்டத்தட்ட ஒரு மாதமாகிறது.

ஏதோ கேபிள் போடுகிறார்களாம்.



எப்பொழுது முடிக்கப் போகிறீர்கள்
 என்று (இந்தப் பள்ளங்களால் வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளயே முடங்கிய)

ஒரு பெண்மணி )) பணிசெய்பவர்களிடம் செய்த வாக்குவாதத்துக்கு நடுவில் மயங்கியே விழுந்து விட்டார்.

அவ்வளவு மன அழுத்தம் அவருக்கு.
சர்க்கரை இருப்பதால் நடைபயிற்சி செய்தே ஆக வேண்டிய கட்டாயம் அவருக்கு.

அது செய்ய முடியாமல் சர்க்கரை அதிகமாகி,ரத்த அழுத்தமும் அதிகரிக்க இது நடந்துவிட்டது.

நம்ப முடிகிறதா.

அவசர சிகித்சை அளித்து இப்பொழுது
இன்னும் இரண்டு வாரங்களில் அவரால் வீடு வர முடியுமாம்.

இதெல்லாம் எனக்கு எங்கள்
வீட்டில் வேலை செய்யும் பெண்

அளித்த செய்தி.

நகரின் நல்ல பகுதி என்று அழைக்கப் படும்
 மைலப்பூரிலேயே இந்த கதி.

இன்னும் இப்பொழுது அடாது பெய்து வரும் மழையினால்

பாதிக்கப் பட்ட ஒரு இடத்துக்குப் போக
 எண்ணினோம். எங்களுக்கு

மிகவும் வேண்டியவர் ஒருவரின்
உடல்நலம் விசாரிக்கத்தான் அங்கு

போய் வர நினைத்தோம்.

அவர்களிடமிருந்து வந்த அவசர செய்தி,
எங்க வீட்டைச் சுற்றி

தண்ணீர் நிற்கிறது. வெய்யில் வந்த பிறகு
வாருங்கள் என்ற செய்திதான் அது.

யாரைக் குற்றம் சொல்லி என்ன நடக்கப் போகிறது.

மனச்சுமை தான் அதிகரிக்கும்.

இவ்வளவு நடந்தாலும் இது நம் சென்னை. நம் மெட்ராஸ். இங்கிருப்பவர்கள் நம் மக்கள்.

அனைவரும் அவரவர் அளவில்
சுத்தமாக இருக்கத்தான் நினைக்கிறார்கள்.

மீண்டு வருவோம். ஆனால் அசுத்தத்தைக்
கூடச் சுத்தம் செய்துவிடலாம். உடலால்,சொல்லால்

ஒன்றுமே செய்யாமல் மனதில் நம் ஊரின் அழுக்கை வர்ணித்து
 நம்மை'' ஓ டர்ட்டி சென்னை'' என்கிறார்களே

அவர்கள் முதலில் தங்கள் எண்ணங்களைச்
சுத்தம் செய்து கொள்ளட்டும்.

மற்றவற்றை நம் சென்னைவாசிகள் பார்த்துக் கொள்வார்கள்.

சென்னையின் சுத்தம் வளரட்டும்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

Monday, August 23, 2010

பொன்னோணம்,ரக்ஷாபந்தன் வாழ்த்துகள்

அனைவருக்கும் ஆவணித் திங்கள் பொன்னோண வாழ்த்துகள். ஓண சத்யா சாப்பிடும்போது மகிழும் அனைத்துக் குடும்பங்களும் இதே போல என்றும் ஒற்றுமையாக இருக்க அந்த மாபலியையும், திரிவிக்கிரமனையும் பிராத்திக்கிறேன்.




அடுத்து வருவது ரக்ஷாபந்தன் எனப்படும்

சகோதர சகோதரிகளுக்கான பந்தக் கயிறு. பாச நூல். நம்மிடம் அந்தப் பழக்கம் இல்லாவிட்டாலும்.,

அனைத்துச் சகோதரர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். பரிசுகள் பெறும் சகோதரிகளுக்கும் அன்புகள். பாசம் விட்டுப் போகாமல் ஒன்றுபட்டு இருக்கவேண்டும்.

குற்றம் குறை இல்லாத சுற்றம் ஏது.

அனைத்தையும் போக்கும் அந்த இறைவன் நம் எல்லோரையும் பாதுகாக்கட்டும்.எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

Friday, August 20, 2010

இரவு போய் பகல் வந்தது

.
 என்ன செய்வதென்று யோசித்தபடியே மீனம்பாக்கம் வந்து சேர்ந்தேன். சிறிது நேரக் காத்திருப்பிற்குப் பிறகு


மார்க் மற்றும் மனைவி, இரண்டு அழகுக் குட்டி தேவதைகளைப் போல

பெண் குழந்தைகள் எல்லோரும் நீண்ட பயணத்தை முடித்த களைப்போடு,வெளியே

வந்தார்கள்.

அமெரிக்காவின் கொலராடோ மாகாண சீதோஷ்ணத்துக்கும் சென்னையின்

உஷ்ணத்துக்கும் தாக்குப் பிடிக்க முடியவில்லை, அவர்களுக்கு.



என் நீண்ட நாள் பழக்கத்தினால் உரிமையோடு பழகுவான்.

''ராக்ஸ்'(என் பெயர் ராகவன்) எங்களால் இன்று எங்கும் வர முடியாது.

நாளையும் என் சம்பந்தப் பட்ட எல்லா சந்திப்புகளையும்

ஒத்தி வைத்துவிடு.

வயிறும் சரியில்லை. வீ நீட் டோட்டல் ரெஸ்ட்'' என்றபடி அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த



வண்டியில் ஏறிச் சாய்ந்து கொண்டான். அவன் மனைவியும் என் முகத்தில் தெரிந்த கேள்விகளைப் புரிந்தவள் போல,

அவர் சாப்பிட்டது ஏதோ ஒத்துக் கொள்ளவில்லை.

ஹி ஷுட் பி ஓகே டுமாரோ. சாரி ராக்ஸ். உங்களூடன்

சாயந்திரப் பொழுதை இனிமையாக உங்கள் மனைவியுடனும் சேர்ந்து

கொண்டாட நினைத்திருந்தோம்.'' என்றாள்.

எனக்கு அப்போதுதான் மார்க் அனுப்பியிருந்த வாழ்த்துகள் நினைவுக்கு வந்தது.

அதைக்கூட ஜானுவிடம் சொல்லவில்லையே என்று என்னையே நொந்து கொண்டேன்.





அவர்கள் வண்டியைத் தொடர்ந்து என் வண்டியைச் செலுத்தியபடி ட்ரைடெண்ட் ஹோட்டலை.

வந்தடைந்தேன்.

மார்க் குடும்பத்தின் ,அறையில் அவர்களை அமர்த்திவிட்டு,ஏதாவது உதவி தேவையா என்று கேட்க ஆரம்பிக்கும்

போதே ஹெதர், மார்க்கின் மனைவி,தன் பெட்டியைத் திறந்து அழகான (பொம்மை)

ஸ்விஸ் வீடு ஒன்றை என் கையில் கொடுத்தாள்.

ம்ம். ஓப்பன் இட் '' என்ற அன்புக் கட்டளையோடு.

திறந்ததும் ஜானுவுக்கு மிகவும் பிடித்த ஆங்கிலப் படப் பாடல் எடெல்வைஸ் '' பின்னணியில் ஒலிக்க இரு சிறுவர்கள் சுழலுவது போல அமைந்திருந்த அந்தப் பரிசை பார்த்தவண்ணம் இருந்தேன்.



நீ ஒருதடவை சொல்லி இருக்கிறாய் ராக்ஸ். உன் மனைவிக்கு சவுண்ட் ஆஃப் மியுசிக்

படம் மிகவும் பிடிக்கும் என்று. நேற்று சூரிக் ஏர்போர்ட்டில் இதைப் பார்த்ததும் ஹெதர்

தனக்கும் உன் மனைவிக்கும் என்று இரண்டு வாங்கிவிட்டாள்.'' என்று

அந்தக் களைப்பிலும் சிரித்தபடி மார்க் சொன்னான்.



அறுபது ஒரு நல்ல வயது. வாழ்க்கையைப் புதிதாக ஆரம்பிக்கும் சமயம். கடமைகள் முடிந்து

நமக்கென்று நேரம் ஒதுக்க வேண்டும் இல்லையா ராக்ஸ்'' என்ற ஹெதரை நன்றியுடன் பார்த்தேன்.



நாங்கள் வார முடிவில் அவளைப் பார்க்க வருகிறோம்.

நீ இப்போது கிளம்பு. நல்ல பொக்கே வாங்கிக் கொடுத்தாயா' என்று கண்சிமிட்டினான் மார்க்.

பதில் சொல்ல முடியாமல் தலை ஆட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

பிறகு எல்லாமே வேகமாக நடந்துவிட்டன. வீட்டை அடைவதற்கு முன்

நல்ல பூங்கொத்து ஒன்றையும், ஜானுவின் ஆல்டைம் ஃபேவரிட் சோன்பப்டி ஒரு பெட்டியும்

வாங்க நான் மறக்கவில்லை.

வீட்டை அடைந்த போது மதியம் 12 ஆகியிருந்தது.



சாப்பிடலாமா என்ற படி வந்த ஜானுவை புதிதாகப் பார்த்தேன்.

நேற்று போல இன்று ஏன் புலம்பவில்லை.எப்பொழுதும் போலவே

சிரித்தமுகம்.

சிரித்தபடியே சொன்னாள், வேற யாரும் கண்டுக்கலைன்னால் என் பிறந்த நாள் எனக்கு

முக்கியம் இல்லாமல் போய்விடுமா. சந்தோஷமாகத் தான் எழுந்திருப்பேன் என்ற முடிவுடனேயெ

நேற்று தூங்கப் போனேன்'' என்றாள்.



ஓகே இங்க பார் என்று பூங்கொத்தை அவளிடம் நீட்டினேன்.

ஒரு நொடியில் முகம் சிவந்துவிட்டது அவளுக்கு. அய்ய என்ன இது என்றபடி வாங்கிக் கொண்டவளின் கையில் இனிப்புப் பொட்டலத்தையும் பெரிய வாழ்த்து அட்டையையும் நீட்டினேன்.



அம்மாடி என்னது இது எங்க வீட்டுக்காரருக்கு என்ன ஆச்சு என்று திரும்பப் போனவளின்

கையில் 'ஹெதர்' கொடுத்த பரிசுப் பொட்டலத்தையும் திணித்தேன்.

அவள் முகம் பெரிதாக மலர்வதைப் பார்த்து எனக்கும் சந்தோஷம் தொற்றிக் கொண்டது.



பேச்சு நின்று கண்கள் கலங்குவதைப் பார்த்ததும் ,

பதினைந்து வயதில் என்னுடன் இணைந்த

என் பழைய ஜானுவே வந்தது போல என் மனம் நெகிழ்ந்தது.



''சரி.உனக்குப் பசிக்கிறதா இப்ப?. இல்லை ,வெளியில் வரத் தயாரா'' என்றதும்

போலாமே, புடவையைப் பிரிக்கக் கூட இல்லை. இதோ ஒரு நிமிடத்தில் வந்துவிடுகிறேன்' என்று உள்ளே

விரைந்தாள்.

அடுத்த பத்து நிமிடங்களில் வாழ்க்கையிலேயே முதன் முறையாகச் சட் சட் என்று

ரெடிமேட் முடிவுகளை எடுத்து , தொலைபேசியில் முடிக்க வேண்டிய சமாசாரங்களைச் சொல்லிவிட்டு

வீட்டின் ஜன்னல்கள் கதவுகள் எல்லாவற்றையும் பத்திரப் படுத்தினேன்.

சத்தம் கேட்டு வெளியே வந்த ஜானு, என்னப்பா சாப்பிடத்தானே போகிறோம். அதற்கு என்னத்துக்கு இவ்வளவு முஸ்தீபு செய்கிறீர்கள்'' என்றாள்.



சாப்பிடலாம் ,அப்புறம் வெளிலயும் போகலாம்' என்றபடி அவளை

வலுவில் இழுத்து வண்டியில் முன் சீட்டில் உட்கார வைத்தேன்.

எதேச்சையாகப் பின்னால் திரும்பியவளின் கண்கள் விரிந்தன.

'என்ன பெட்டி எல்லாம் இருக்கு' எங்க போறோம்?



வண்டி நெடுஞ்சாலையை நோக்கிப் பயணிப்பதைப் பார்த்து,

என்ன தீர்மானம். எங்கதான் போறோம்'' என்றவளிடம் சொன்னேன்.

முதலில் சாப்பிட ஹைவேயில் இருக்கும் பத்மம் ரெஸ்டாரண்ட்.

அப்புறம்...என்று நிறுத்தினேன்.

அப்புறம் மதுராந்தகமா என்று கேட்டாள்.

இல்லையே... ஸ்ரீரங்கம்.!! என்று வெகு நாட்களுக்குப் பிறகு மனசு லேசாகி வாய் நிறைந்த

சிரிப்புடன் அவளைப் பார்த்தேன். நானும் நல்லவன்தான் இல்லையா.:))


இன்னுமொரு டிஸ்கி

*******************************
அன்புத் தோழி துளசியின் சந்தேகம், பொட்டி இருந்தால் பெண்டாட்டிக்குத் தேவையானதை எடுத்து வைத்தார்னு எப்படிச் சொல்ல முடியும். நமக்கு என்ன வேணும்கறது நமக்குத்தானே தெரியும்? என்பதுதான் அது.இவர்கள் கையில் க்ரெடிட் கார்ட் இருக்கிறது. அப்படியே ஏதாவது வேண்டுமானால் வாங்கிக் கொள்ள கடைகள் ஏராளம். ராகவனுக்கு என்ன பயமென்றால், கொஞ்சம் தயங்கினாலும் தன் மனம் மாறிவிடப் போகிறதே என்பதுதான்.:)அதுதான் நொடியில் தீர்மானிக்கப் பட்ட நல்ல பயணம் இது.
**************************
அவர்கள் இருவரும் இரவே சென்று ஸ்ரீரங்கனைத் தரிசித்து,மலைக் கோட்டைப் பிள்ளையாரையும் சேவித்துவிட்டு அடுத்த நாள் பகலில் கிளம்பி ,புதிதாகப் போடப்பட்டிருக்கும் நல்ல சாலையில் 5 மணி நேரப் பயணத்தில் தங்கள் வீட்டுக்கே வந்து விட்டார்கள்:)

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

Thursday, August 19, 2010

இரவும் பகலும்..வரும்...3

TRICHY
காலையில் எழுந்ததிலிருந்து ஜானு சுறுசுறுப்பாக


இயங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

மனசு சமாதானமாய் விட்டது போல என்று என் பேப்பர்,ஃபைல்ஸ்,கணினி

என்று மூழ்கிவிட்டேன்.

ஆஹா, மறக்காமல் வாங்கி வந்திருந்த சந்தேரி பட்டுப் புடவையையும் கொடுத்துவிட்டுத்தான் காப்பியே

குடித்தேன்.

ஹ்ம். என்ன எல்லாம் செய்ய வேண்டி இருக்குப்பா, என்று என் மனசிலியே

ஒரு அலுப்பு தட்டியது.

ஆவலோடு புடவையைப் பிரித்தவளின் முகத்தில்

முதலில் ஏமாற்றம் ,பிறகு போனால் போகிறதென்ற உணர்ச்சி!!



'ஏம்மா உனக்குப் புடவை பிடிக்கலையா. என்ன ஆச்சு??''

ரொம்ப நன்றாக இருக்கு. நல்ல சாரி. இந்த நீலக்கலர் கட்டி ரொம்ப நாளாச்சு.'' ரொம்ப தான்க்ஸ் பா,''

என்று,எனக்கு கைகொடுத்துவிட்டு உள்ளே எடுத்துக் கொண்டு போய் ஸ்வாமி சந்நிதியில் வைத்தாள்.

அப்பாடி ஒரு சங்கடம் தீர்ந்தது. அவளிடம் இருக்கும் வர்ணத்தையே வாங்குவதே

எனக்கு ஒரு பழக்கமாகி யிருந்தது.

இந்தத் தடவை அப்படியில்லை என்று மனசு திருப்தி யாக இருந்தது.

அன்று பார்த்து வெளியூரிலிருந்து வரும் அமெரிக்கன் கஸ்டமர்

மார்க்'' ஐ வரவேற்று, திரிசூலம் ட்ரைடெண்ட் ஹோட்டலில் தங்க வைக்க  வேண்டிய பொறுப்பும் இருந்தது.

மார்க் உடன் அவன் குடும்பமும் வருகிறது. அவர்கள் எங்கயாவது

டின்னருக்கு அழைத்துப் போக வேண்டும்.

மகிழ்ச்சி!
அப்படியே ஜானுவின் பிறந்த நாளையும் கொண்டாடின மாதிரி இருக்கும் என்று நினைத்தேன். வரிசையாக மகன்களும்,மருமகள்களும்,பேரன்,பேத்தி


எல்லோரும் வாழ்த்துகள் சொல்ல தொலைபேசியில் அழைத்தார்கள்.

மகிழ்ச்சியாக அவர்களுக்கு ஆசிகள் சொல்லி வாழ்த்தினாள்.

உண்மையாகவே சந்தோஷம் தெரிந்தது அவள் முகத்தில்.



நானும் அவள் செய்த இட்லி,காரமில்லாத சட்டினி ,எல்லாம்

சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினேன்.

ஒண்ணும் ஸ்வீட் கிடையாதா என்று கேட்க நினைத்தேன்.

சரி நாமே வாங்கி வந்தால் போகிறது. என்ற நினைப்பு .

வண்டியை எடுத்துக் கொண்டு மீனம்பாக்கத்துக்கு விரைந்தேன்.
பாதிவழியில் மகனிடமிருந்து கைபேசியில் அழைப்பு ஒலித்தது.

அப்பா, அம்மாவை கோவில் எங்கயும் அழைத்துக் கொண்டு போகலியா''

இல்லடா,எனக்கு அமெரிகன் க்ளையண்ட் வரான். அவனை

செட்டில் செய்துவிட்டு வீட்டுக்குப்

போக மதியத்துக்கு மேல் ஆகிவிடும். சாயந்திரம் வேணா பார்க்கலாம்.

நீங்கள் எல்லாம் எப்ப வருவீர்கள்? என்று கேட்டேன்.

அதைச் சொல்லத்தான் போன் செய்தேன் பா.
நாங்கள் வர இரவாகிவிடும்.வேலூர் தங்கக் கோவில்

பார்க்கணும்னு சொன்னதால் அங்கே கிளம்பிவிட்டோம்.அங்க அம்மா பேரில அர்ச்சனை செய்யலாம்னு சித்ராவும் சொன்னாள் பா.''

சரிப்பா,பத்ரம் .டேக் கேர்,என்று சொல்லிவைத்த போது மனம்
கொஞ்சம் தளர்ந்தது. பாவம் ஜானு.
அடுத்தாற்போல சொல்லிவைத்த மாதிரி இரண்டாம் பிள்ளை,

'அப்பா நாங்க கோனே ஃபால்ஸ் போலாம்னு இருக்கோம்பா.

இன்னிக்கு ஒரு நாள் தானே மாலினிக்கும் லீவு.

இரவு வந்துடுவோம். சாப்பிட்டுவிட்டே வரோம்.

பிறந்தநாள் அன்றாவது அம்மாவுக்கு வேலை இல்லாமல் இருக்கட்டும்''

என்று சொன்னான்.

சட்டென்று என்னை யாரோ இடித்தது போல உணர்ந்தேன்.
மனம் ,கை இரண்டும் சேர்ந்து செயல் பட,
என் பர்சனல் காரியதரிசியை அழைத்தேன்.

''சீனு,ஒரு உதவி செய். உடனே கிளம்பி மீனம்பாக்கம் வா.''

மார்க்கையும் குடும்பத்தையும் நாம் வரவேற்கலாம்.

நான் வீட்டிற்குத்

திரும்பி விடுவேன்.
நீ மற்ற வேலைகளைக் கவனித்துக் கொள். அவனும் குடும்பமும்
இன்று உன் பொறுப்பு. எங்கே போகணும்னு
சொன்னாலும் அழைத்துப் போ.''

என்று சொன்னதும் அவன் தயங்கினான்.

எங்களுக்கு இன்று திருமணநாள் சார். மனைவி ரொம்ப எதிர்பார்ப்புகளோடு இருக்கிறாள்.

சினிமா,டின்னர் என்று சொல்லிவைத்திருக்கிறேன் சார். முதலிலேயெ தெரிந்திருந்தால்
அட்ஜஸ்ட் செய்திருப்பேன். இப்ப எப்படி.....''
என்று இழுத்தான்.......................தொடரும்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

Tuesday, August 17, 2010

இரவும் வரும் பகலும் வரும்---2

இத்தனைக்கும் உங்க அம்மாவோட அறுபதுக்கு சம்பந்திகள் வரலைன்னு ஒரு இஷ்யூ ஆச்சே அதுமாதிரி ஏதாவது கேட்டேனா'' என்று மீண்டும் புலம்பலை ஆரம்பித்தவளைப் பார்த்து எனக்குக் கோபம் வந்தது.


''அம்மா அம்மானு நீயும் தான் எங்க அம்மாகிட்டப் பாசமாயிருந்த. அவளும் பெருமாள் கிட்டப் போய் 15 வருஷம் ஆச்சு . இப்ப என்னத்துக்கு அவளை இழுக்கிற??



'அப்ப எல்லாரும்(என் அக்கா,தங்கை,பாட்டி) சேர்ந்து நான் அன்னிக்கு சாயந்திரம் காரைக்குடிக்குப் போறேன்னூ

சொன்னதுக்கு'' ..........,சரி வேண்டாம் நான் ஒண்ணும் சொல்லலை. விடுங்கோ.

என்னைக்கு ஏழை சொல் அம்பலம் ஏறியிருக்கு.!

இவள் ஏழையா:)

ஒரு தனியார் கம்பனியின் தலைமை அதிகாரியின் பெண்டாட்டி. வாழ்க்கைத்துணை.

அண்ணா நகர்லியே முதலாக வீடு வாங்கின பெருமை. ஊஞ்சலென்ன, போர்ட்டிகோ என்ன,

தோட்டம் என்ன. மாடு ஒன்றுதான் இல்லை.

அலுக்காமல் என் உயர்வுக்கு துணை இருந்தவள் தான். எத்தனை வெளிநாடுகள்

போய்வந்தாலும் அலுக்காமல் துணிமணிகள் ,மருந்துகள் மொத்தமும்

அழகாக அன்போடு எடுத்து வைப்பாள்.

'எங்க இரண்டு பேருக்கும் இதுதான் சரிப்படும். அவரோட ஸ்டைலே வேற. நானே வேற.

கூடவே இருந்தால் தகறார் வரச் சந்தர்ப்பங்கள் அதிகம்''னு வேற சொல்லுவாள்..
இதோ ரிடயரும் ஆகி   இரண்டு வருஷங்கள் போயாச்சு.
அதிலயும் அவளுக்கு ஆதங்கம்.
''ஊர்ல  உலகத்தில  ரிடயராவதற்கும் ,எங்க வீட்ல ரிடயராகரதுக்கும் வித்யாசம் உண்டு  தெரியுமோ   விமலா.?
இவர் இன்னமும் ஆஃபீஸ் போகிறார்..என்னன்னால்  கன்சல்டண்டாம் !!
நினைத்த பொது போகலாம் வரலாம் .மீட்டிங் இருக்கிற அன்னிக்கு முழு நாள்  என்று யாரிடமோ  அளந்து கொண்டிருந்தாள்.
என்  கதையை யார்கிட்டயோ சொல்றியே 'என்று கேட்டால்  '' நிஜத்தைத் தானே சொல்றேன்.
நீங்க ரிடையரானால் என்ன கோவிலுக்குப் போகணும், எந்த பாக்கேஜ் டூர்  எடுக்கனும்னு கனவு கண்டு கொன்டிருந்தால், நீங்கள்  இப்படி செய்து இருக்கிறீர்கள்.''
என்கிறாள் .
''நான் வீட்டிலிருந்தால்  உனக்குத் தான்  சிரமம்.
இப்பப் பாரு   சுலபமா கார்ந்ப்லேக்ஸ்   சாப்பிட்டு விட்டு  ,மதியம் அலுவலக காண்டீனில்  பத்திய சாப்பாட்டை  முடித்துக் கொள்கிறேன்.
சாயந்திரம் நானும் நீயும் பேரக்குழந்தைகளும் பார்க் போகிறோம்.
உனக்கு நடையாச்சு.எனக்கு  குழந்தைகளோடு இருக்கும் சந்தோஷம்.
இதில கஷ்டப்பட என்ன இருக்கு ?''

''அதானே!!   நான் செய்ததையே  செய்துண்டு இருக்கேன்.  ஒரு மாற்றமும்
இல்லை. நாப்பைந்து  வருஷம்  இப்படியே போயாச்சு.
செக்கு மாடு மாதிரி  சுத்தி வந்து.''....முடிக்காமல்  அழ ஆரம்பித்துவிட்டாள்  ஜானகி.
என்னையும் பட்டம் படிக்க விட்டிருந்தால் , வேலைக்குப் போயிருக்கலாம்.
இப்ப  இந்தப் பெண்கள் ,
பறக்கிற மாதிரி  நானும் ஏதாவது சாதிச்சிருப்பேன்.''

''அதுக்குப்புறம்  எனக்கும் என் வயசுக்கு ஏத்த தோழிகள், எனக்கு என்று ஒரு
குழு, சிரிக்க,பேச,அழ எல்லாத்துக்கும்தான். ''
எனக்குப் புரியலை  ஜானு. இப்ப இந்த வாழ்வுல என்ன குறை ?
நீ சந்தோஷமாத் தான  இருக்க.
இந்த அறுபதாவது பிறந்த நாளுக்கு மட்டும் ,  உனக்கு திடீர்னு
என்ன ஆச்சு.
பிள்ளைகள் உன்னிடம் அன்பாகத் தான் இருக்கிறார்கள்.
பெரியவன்  நுங்கம்பாக்கம்  ஸ்ரிநிவாசர்  கோவிலில்  சர்க்கரைப் பொங்கல் சொல்லி இருக்கிறான். சின்னவன்   புரசைவாக்கம்  பிள்ளையார் கோவிலில் நூத்தி எட்டு கொழுக்கட்டைக்கு சொல்லி இருக்கிறான்.
நாளை சாயந்திரம் வந்துவிடுவார்கள்.
நேத்திக்கு  நடந்த  சமாசாரத்துக்கு இன்னிக்கு வருத்தப் படாதே.!  என்றேன்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

இரவும் வரும் பகலும் வரும்....1


இந்தப் பதிவு என்னுடைய வில்லிபுத்தூரில் பதிவிட்ட கதையின் ஆரம்பம்.
தமிழ்மணத்தில் சேர்க்க முடியாததால்
நாச்சியாரிடம் சரணடைந்தேன்:0) தொடர். பயப்படவேண்டாம். மூன்று பதிவுக்கு மேல் போகாது என்று நினைக்கிறேன்:)






கதை ஆரம்பம்.

***********************
''வாழ்வென்றால் சிரித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று ஏதாவது சட்டம் போட்டு இருக்கா என்ன? எனக்கு கோபம்தான். அதைக் காண்பிக்க எனக்கு ரைட்டு இருக்காக்கும் ''
முணுமுணுக்கும் ஜானு என்கிற ஜானகியை அலுப்போடு பார்த்தேன்.
'பின்ன என்ன முணுக்'னால் பிறந்த வீட்டுக்கு ஓடறது எந்த விதத்தில நியாயம்?
புருஷன் பொண்டாட்டிக்குள்ள இதுவரை சண்டையே வந்தது கிடையாதா .


அப்படிப் போவதானால் நானே நானூறு தடவை காரைக்குடிக்கு ஓடி இருக்கணும்.'

'எதுடி, அப்ப எல்லாம் நீ பொட்டி கட்டரத்துக்குள்ள ,சின்னத்துக்கு சளி பிடிச்சுக்கிம்,
பெரிசுக்கு வயத்தவலி வந்துடும்.
சரி நாளைக்குப் போலாம்னு பொத்துன்னு உட்கார்ந்துடுவே.
கார்த்தால உனக்கு கோவம் வந்தது கூட நினைவில்லாம, இட்லி வேக வைத்துண்டு இருப்பன்னுதும் ஜானுவுக்கே சிரிப்பு வந்தது. கூடவே சுய பச்சாத்தாபமும் சேர்ந்து கொண்டது.

அடச்சே கோவிச்சுக்கரத்துக்கூட நேரமில்லாமல் என்ன தான் குப்பை கொட்டினேனோ'' என்றாள்.
சரி 35 வருஷம் கழிச்சு இப்ப வருத்தப் படாதே. எதுக்காக இவ்வளவு கோபம்.
சனி ஞாயிறு வந்தால் நடக்கிற கூத்துதானே.?

''வாராவாரம் நடக்கணும்னு எங்கயாவது காலட்சேபத்தில கேட்டுண்டு வந்தீர்களா,
அதென்ன அகங்காரம். ?
நாளைக்கு எனக்கு அறுபது வயசாகப் போகிறதுன்னு தெரியாதா.
பிரமாதமா பட்டும், வைர நெக்லஸும் கேட்டேனா.

எல்லாரும் ஒண்ணா இங்க இருக்கற மதுராந்தகத்துக்குப் போய் வரலாம்னு தானே

சொன்னேன்.
புளிக்காய்ச்சல் கூட காய்ச்சி வச்சுட்டேன். இட்லிமாவு பந்து பந்தா உருட்டி
வச்ச மாதிரி அரைச்சு வைத்தாச்சு. ராத்திரி சாதம் வடிச்சு, தயிர் சாதத்துக்கு

ரெடி செய்யணும். அவ்வளவுதான்.

இப்ப இந்த வெள்ளிக்கிழமை சாயந்திரம் ரெண்டு பையன்களுக்கும்
காரைக் கிளப்பிக் கொண்டு மாமனார் மாமியாரை
அழைத்துக் கொண்டு அந்த ரிசார்ட் ,இந்த ரிசார்ட்னு போகணுமா.?""
குமுறியவளை அநுதாபத்தோடு பார்ப்பதைத் தவிர என்னால் ஒன்றும் முடியவில்லை.
அவளது ஆற்றாமைக்கும் காரணம் உண்டு.

இரண்டு பிள்ளைகளக் கொடுத்த கடவுள் இன்னோரு பெண்ணையும்
கொடுத்திருக்கலாம்.
பெற்றோர்கள் நாலு பெற்றுக் கொண்டால் , eங்கள் காலத்தில் இரண்டு பெற்றுக் கொள்வது தான் அளவாக இருந்தது.!!
ஜானுவின் உடல் நிலையும் ஒத்து வரவில்லை. அதனால் இரண்டோடு
போதும் என்று நிறுத்தி ஆச்சு .

Sunday, August 15, 2010

என்றும் சுதந்திரம் வாழ்க

எங்கள் இந்தியக் கொடி என்றும் சுதந்திரமாகப் பறக்கட்டும்
தாயின் மணிக்கொடி 
தாயின் மணிக்கொடி பாரீர்


அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்.

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்.

அதன் உச்சியில் வந்தேமாதரம் என்றே

பாங்கின் எழுதிச்செய்ய

பட்டொளி வீசிப் பறக்குது காணீர்.

அனைவருக்கும்

இந்தச் சுதந்திர தினம்

சுதந்திரமாக இருக்க வாழ்த்துகள்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

Thursday, August 12, 2010

திருவில்லிபுத்தூர் நாயகி வாழி.



பூங்கோதை.

பூச்சூடிய கோதை.

பூவைச் சூட்டிய கோதை.

அரங்கனின் அரங்கத்தில் அரவ அணையில் ஏறி அவனுடன் ஐக்கியமானவள்.

ஒரு மானிடக் குலத்தில் பிறந்து,தோன்றி கண்ணனையே மணப்பேன் என்று மனதில் வரித்து, நடுவில் வந்த இடர்கள் களைந்து ,தூயவளாய் வந்து,தூமலர்த் தூவித் தொழுது வாயினால் பாடினாள்.

பாமாலையான திருப்பாவையையும் அவன் தோள் மாலையாக்கினாள். அவள் தோள் கிளி இப்போது ஸ்ரீரங்கம் பிரகாரத்தில் ரங்கா ரங்கா என்று அழைத்துக் கொண்டிருக்கிறது.

அவள் பெருமை பாடவும் ஒரு தகுதி வேண்டுமே.

சீதை என்றோ பூமாதாவிடம் அடைக்கலம் தேடினாள். அவளே நல்வாழ்வு தேடித் தன் மணவாளனுடன் லயிக்க ஆண்டாளாகப் பெரியாழ்வாரின் கரங்களில் தவழ வந்தாள். ஸ்ரீராமனின் ரங்கவிமானத்துள் துயில் கொள்ளும் ஸ்ரீரங்கனிடம் நிரந்திரமாகக் குடியேறினாள். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே

தொல்பாவை பாடிக்கொடுத்தபை வளையாய்

நாடி நீ வேங்கடவர்க்கு எம்மைவிதி என்ற
மாற்றம்
நாம் கடவா வண்ணமே நல்கு



ஸ்ரீ ஆண்டாள் கோபுரம்



ஆண்டாளின் தந்தையானதால் பெரிய ஆழ்வார்.


ஸ்ரீ ஆண்டாள், ரங்கமன்னார்,பெரியாழ்வார்






எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.




Posted by Picasa
Add caption

Saturday, August 07, 2010

பச்சை நிறமே பச்சை நிறமே!

பச்சையும் சிவப்பும்
பச்சைத் தண்ணீர்
FOR   PIT  AUGUST?
பச்சையும் மஞ்சளும்
பச்சையும் வெள்ளையும்



எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa
அரக்குப் பச்சையில் கறுப்புக்குயில் தெரிகிறதா

புகைப்படப் போட்டி,ஆகஸ்ட்.PIT


அனுப்பலாமா போட்டிக்கு?
எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa