படங்கள் கூகிளாண்டவர் துணை.
டிஸ்கிப்பா.
துபாயில ஹெரிடேஜ் மியூசியம்னு ஒண்ணு இருக்கு.பழம் களப் பெருமைகள் அழகாக எடுத்து வைத்து விளக்கப்படும் இடம்.
இந்தப் பதிவில நான் சொல்ல வருவது அதைப் பத்தி அல்ல.
துபாய் ஹெரிடேஜ் கிராமம் ஒண்ணு எங்க வீட்டிலேருந்து கொஞ்சம் தொலவில் இருக்கு.
மம்சா பார்க்குக்கு அந்த வழியாப் போகும்போது நாந்தான் பையனிடம் இங்க ஒரு பழமையான கிராமத்தைக் கட்டி வைத்திருக்கிறார்களாமே.அதுவும் பவுர்ணமி அன்னிக்கு ரொம்ப அழகா இருக்குமே போலாமேப்பா என்றேன்.
தாய் சொல்லைத் தட்ட விரும்பாத மகனும் அப்பா மறுப்பதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் வண்டியைப் பார்க்கிங் லாட்டில் நிறுத்தினான்.
ஒரு பெரிய காம்பவுண்ட். அதற்குள் ஒட்டகங்களின் கனைப்புச் சத்தம், ஏதோ ஒரு அதீத இனிப்பு வாசனை காத்தில மிதந்து வந்தது.
ம்ம். நல்ல சாப்பாடும் இருக்கும் போல என்று நினைத்துக் கொண்டு ,நீளக்கால் ஜன்மங்கள்(என் புத்திரனும்,அவனைப் பெற்றவரும் தான்:)) உள்ளே சீக்கிரமாகப் போய் விட்டன.
மெதுவாக ஆடி அசைந்து கொண்டு அந்த இனிப்பு வாசனை வந்த இடத்துக்கு வந்து விட்டேன்.
பௌர்ணமினு சொன்னேன் இல்லையா. அங்கே நிஜமாகவே கிராமத்துப் பவுர்ணமி.
விளக்கே இல்லை. பெட்ரொமாக்ஸ் வெளிச்சத்தில் புஸ் புஸ் என்று மூச்சு விட்டுக் கொண்டு நாலைந்து ஒட்டகம். அதுக்குச் சற்றுத் தள்ளி அடுப்புகள். அடுப்புகள் முன்னால் கறுப்பு புர்கா தரித்த அழகுப் பெண்கள் அவர்கள் ஊர்த் தின்பண்டம் ஆட்டா மாவில் ரொட்டி மாதிரி செய்து அதை திறந்த அடுப்பில் வாட்டி எடுத்து அதன் மேல் பேரீச்சம்பழ சிரப்பை ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் செய்யும் அழகைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு நிமிர்ந்தால்
அப்பனையும் பிள்ளையையும் காணொம்.
சுற்றிவர ஒட்டகமும் பாஷைதெரியாத பெண்களும் இருட்டும் தான்.
இருட்டுக்கு அப்பால் சிரிப்பும் சத்தமுமாக சில யூரோப்பியர்கள்.
அந்தப் பெண்கள் செய்யும் பலகாரத்தைச் சாப்பிட்டு ஏதோ கதை பேசிக்கொண்டிருந்தார்கள்.
(இந்த ஊரில் தனியாக ஒரு பெண் நடந்து போவது அதுவும் அந்த இருட்டில்
தப்புதான். சந்தேகத்துக்கு இடமாகிறது)
நான்கு புறமும் பார்த்தபோது இன்னோரு கட்டிடம் தெரிந்தது. மெதுவாக வெளிச்சம் தெரிந்த அந்தக் கட்டிடத்துக்குள் போனதும் ஒரு குதிரையின் ஓவியத்தின் முன்னால் இவங்க இரண்டு பேரும் அலசிக் கொண்டிருந்தார்கள். பையன் நிலைமை புரியாமல் என்னம்மா அப்படியே M&B காலத்துக்குப் போயிட்டுயா அப்படீனு கேலி செய்கிறான்.
ஆமாண்டா வெள்ளைக் குதிரையும் ஆரப் ரோபும் போட்டுக் கொண்டு யாரோ வந்த மாதிரி இருந்தது. லட்சியம் செய்யாம ,என்ன இருந்தாலும் தமிழ்ப் பொண்ணாச்சேனு இங்க வந்தேன். என்ன ஆச்சர்யம் நீங்க இங்க இருக்கீங்க!!!!!
அப்படீனு பல்லைக் கடித்தபடி சொன்னதும், பையன் ஓஹோ டேஞ்சர் சிக்னல் என்று அனுமானித்தபடி,
என் கையைப் பிடித்துக் கொண்டு இன்னோரு அறைக்கு அழைத்துப் போனான். அதில் 400 வருடங்களுக்கு முன்னால் இருந்த ராஜா ராணி படம், வெள்ளைக்காரன், நாணயங்கள் எல்லாம் வரிசையாக இருந்தது. கூடவே அந்தக் காலத்தில் பயன் படுத்திய வாட்கள் எல்லாம்(படு கோரம்)
இருக்கவே இருவரும் மீண்டும் அங்கேயே மூழ்கி விட்டார்கள்.
சரி நாம் அடுத்த அறைக்குப் போகலாம் ,அவங்க வெளில வரும்போது சட்டுனு வெளில வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று நல்ல வெளிச்சமாக இருந்த அறைக்குள் போனேன்.
அங்கே ஏற்கனவே ஒரு அராபியக் குடும்ப வாசனைத் திரவியத்தில் குளித்து குஞ்சு குளுவான்களோடு குடும்பமாக பேசிக் கொண்டிருந்ததும்
நான் மறுபடி வெளியே வந்துவிட்டேன்.
இங்கதான்பா தப்பாப் போச்சு.
நான் வெளீயே வந்த அறைக்கும் உள்ளே வந்த அறைக்கும் சம்பந்தமே இல்லை. இந்த அறையிலிருந்து இன்னோரு வாசல்... அது வழியாப் போனா இன்னோரு குட்டி அறை. அதுக்கு வாசலே இல்லை.
அது பிரேயர் செய்யற இடம் போலிருந்தது.
ஆத்தாடீனு பைத்தியம் பிடிச்ச மாதிரி ஒரு ஒரு அறையாப் போக ஆரம்பித்தேன். முதல் ரூமைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை.
அந்தப் பத்து நிமிஷத்தில் எனக்கு மூச்சு நிற்கும் அளவிற்குப் பயம் தொற்றிக்கொண்டது.
மெல்ல ''பாபு'' என்று கூப்பிட்டால் ஒரு குட்டிக் குழந்தை எட்டிப் பார்த்தது. அது எப்படியும் பெற்றோரோடுதானே இருக்கும்னு அது பின்னால் போனால் அந்தப் பழைய ஒட்டக,பலகாரம் செய்கிற இடம் வந்தது.
அங்க இருக்கிற பெண்ணிடம் '' ஹமாரா பதி தேகா??'' என்று கேட்டேன். அவள் சிரித்தாள். இங்க்லீஷ் நோ நோ. '' அடப்பாவி. நீ உருது பேசுவாய், உனக்கு இந்தி தெரியும்னுதானே கேட்டேன்.
என்று நொந்தபடி லம்பா டால் பாபா,சோடா புத்தர் என்றேல்லாம் சொல்லிப் பார்த்தேன்.
தூகான் கயா?? என்றாள். ஆஹா, என்று கொஞ்ச தூரத்தில் பார்த்தால் வாட்கள், ஓவியங்கள் என்று விற்கும் கடைகள் வரிசையாக இருந்தன.
அதில் சிங்கத்தோட குரல் சத்தமாகக் கேட்டதும், கோபம் பாதி,அழுகை பாதி என்று விரைந்து அங்கே போய் நின்றேன்.
இருவரும் என்னைப் பார்த்து ஏம்மா திருப்பித் தொலஞ்சு போயிட்டியே.
அந்தக் கட்டிடமெல்லாம் பூட்டறதுக்கு முன்னாடி வந்தியே என்றனர்.
''இல்லடா அம்மா இஸ் கோயிங் த்ரூ அ டஃப் பீரியட். மறந்து போயிடறது பாவம் ''
என்று கேலி செய்கிறார் இவர்.
காருக்குப் போகும் வரை ஒன்றும் பேசவில்லை நான்.
காருக்குள் வந்து கதவைச் சாத்தியதும் இருவரையும் நான் போட்ட போடில் பையன் வாயே திறக்காமல் வண்டியை எடுத்து ஒரு நல்ல பானிப்பூரி கடை முன்னால் நிறுத்தினான்.
பசியினால் அம்மாவுக்குக் கோபம்னு நினைக்கும் மகனை என்ன செய்ய!!!.
கடவுளே காப்பாத்து என்று நெற்றியில் தட்டிக் கொண்டு
கீழே இறங்கினேன்.:)