Blog Archive

Thursday, February 29, 2024

மன நலம் வாக்கு நலம் செயல் நலம் 2



வல்லிசிம்ஹன்

 அடுத்த இரண்டு நாட்களில் நிறைய விஷயங்கள் நடந்தேறின.

அடுத்த வீட்டு வினிதாவைக் கோவிலில் சந்தித்த போது

அழாத குறையாக மேக்னா குழந்தைகளை 
அழைத்துக் கொண்டு தாய் நாட்டுக்குத் திரும்பும் செய்தியைச் 
சொன்னாள். 

நீங்கள் இருவரும் அவளை சந்தித்துப் பேச வேண்டும். குடும்பத்தைப் 
பிரிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்  என்று 
வேண்டிக் கொண்டாள்.
இதில் நாம் தலையிடுவது சரியில்லை என்று 
தோன்றினாலும் அந்தப் பெண்ணுக்கு ஆதரவு சொல்ல வேண்டும்
என்று நினைத்துக் கொண்டேன்.

அதேபோல  அடுத்த நாளே நாங்கள் மேக்னாவைச் சந்திக்கச் சென்றோம்.

எங்களைக் கண்டதும், அமைதியாக வரவேற்றவள்
எப்பொழுதும் போல்  டீ போட்டுத் தரட்டுமா என்று கேட்டாள்.
எல்லாமே விசித்திரமாக இருந்தது.
என்ன ஆச்சுமா பெட்டிகள் எல்லாம் எடுத்து வைத்திருக்கிறாய்
என்றேன்.

'ஆமாம் ஆண்ட்டி, முகேஷ் எனக்க மன நிலை சரியில்லை
என்று என் பெற்றோரிடம் சொல்லி 
இருக்கிறார். 
கடந்த வருடங்கள் நாங்கள் வாழ்ந்த வாழ்கைக்கு
அர்த்தம் இல்லாமல் போகிறது.
 திருமணத்துக்கு முன் இருந்தவர் வேறு
இப்போது இருப்பவர் வேறு.

குழந்தைகளையும் கவனிப்பதில்லை.
எப்பொழுது பார்த்தாலும் மௌனமாக இருக்கிறார்
இல்லை என்றால் என்னைக் கண்டபடி
ஹிஸ்டீரியா வந்த பெண் என்று பேசுகிறார்.

இப்போது எனக்கே என் மேல் சந்தேகம் வந்து விட்டது.
அலுவலகத்திலும் வேலைப் பளு அதிகம்.
குழந்தைகள் எங்களுக்குள் நடக்கும் தகராறுகளைப் 
பார்த்து மிரண்டு போகிறார்கள்.
+++++++

வீடு பெட்டிகளும் உடைகளுமாக இறைந்து கிடந்தது.
வீட்டைப் பொன் போல வைத்திருப்பவள் மேக்னா.

 அவள் வீடா இப்படி இருக்கிறதா? மனம் குழம்பினால் வீடும் நிலையில்லாமல் போகுமோ!

நீ மன நலமருத்துவரைப் பார்க்கப் போனியா அம்மா என்று கேட்டோம்.
நான் ஹாஸ்பிடலில் இருக்கும்போது என்னை
மன நல மருத்துவர் பார்க்க வந்தார்.

அவர் என்னிடம் குறை எதையும் சொல்லவில்லை. அளவுக்கு
அதிகமான மன அழுத்தம் இருப்பதாகவும் 
நான் சில நாட்கள் வீட்டுக் கவலை இல்லாமல்
ஓய்வெடுக்க வேண்டும் என்றும் சொன்னார்.
அதனால் தான் அம்மா வீட்டுக்குக் குழந்தைகளோடு 
போக முடிவெடுத்திருக்கிறேன்.'' என்றாள்.

முகேஷ் எதனால் உன்னிடம் மனஸ்தாபப் படுகிறார்
என்றும் விசாரித்தேன். .......

Tuesday, February 20, 2024

மனமும் செயலும்...சில நிகழ்வுகள்.....



வல்லிசிம்ஹன்

எல்லோரும் ஆரோக்கியம் அமைதியோடு வாழ இறைவன்
அருள வேண்டும்.பேசுவதில் இனிமை, பொறுமை,பேசுபொருள்
அந்தத் தருணத்துக்கு ஏற்றார்ப்போல்
இருத்தல் எல்லாமே அவசியம்.

நல்லவராக இருப்பதைவிட நம் நன்மை 
பிறருக்குக் கடத்தப் படவேண்டும் 
என்றால் மனது, வாய்மைக்கு உட்பட்டு
நாவன்மை இருக்க வேண்டும்.

நன்மை கொடுக்கும் எனில் பொய் சொல்லலாம்
என்று படித்திருக்கிறோம்.
பொய் சொல்லவும் ஒரு திறமை வேண்டும்.

பொய் சொல்லிவிட்டு மறந்து போய்
மாற்றி சொல்லி மாட்டிக் கொள்பவர்களையும்
பார்த்திருக்கிறேன்.:)

புதிதாக இப்போது ஒரு நாவல், (தலையணை அளவு பெரிது)
வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
அதில் வரும் சட்ட மன்ற நிகழ்வுகள்
என்னை மேலே இருக்கும் சிந்தனையில் கொண்டு விட்டன.

இந்த ஊரில் நடக்கும் கொலை, அது தொடர்பான
சாட்சியங்கள் , நேர் விசாரணை, குறுக்கு விசாரணை
என்று திடீர் திருப்பங்கள், வழக்கு மும்முரத்தில் வீட்டைக் 
கவனிக்காத அதிகாரியின் மனைவி பிரிந்து போவது,
ஜூரியாக வந்தவர்கள் மிரட்டப் படுவது
என்று படு சுவாரஸ்யமாகப் போகும் நாவல் ஜேம்ஸ் பாட்டர்சன்
எழுதிய ''ஜட்ஜ் அண்ட் ஜூரி."
ஒரு நாளைக்குப் 30 பக்கங்களுக்கு மேல்
படிப்பதில்லை.

சுவாரஸ்யத்தை இழக்க விரும்பாவிட்டாலும்
மனதில் அழுத்தம் இல்லாமல் படிக்கவே விரும்புகிறேன்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அண்மை நிகழ்வுகள்.
முன்பு  வெகு நாட்களுக்கு முன்பு பிரியப் போகிற
ஒரு தம்பதியைப் பற்றி எழுதி இருந்தேன்.
காலமும் சூழ்னிலைகளும் மாறும் போது 
மனங்களும் மாறுகின்றன என்பதுதான்
யதார்த்தம்.
 அந்தக் கணவன் மனைவி இப்பொழுது மீண்டும் இணைய
முடிவெடுத்திருக்கிறார்கள்.

இத்தனை நாட்களாக அவர்களைக் கவனித்து வந்த பெற்றோர்கள் மீண்டும்
 சொந்த இடத்திற்குத் திரும்புவதாக
என்னிடம் சொல்லிச் சென்றார்கள்.
தம்பதியர் , குழந்தைகளுடன் இனிதே வாழ வாழ்த்துவோம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சொல் பற்றியே மீண்டும் சொல்ல வருகிறேன்.
இனிய உளவாக நேர்மையான பேச்சுக்கு என்றும் பலனுண்டு.
வாய் மட்டும் மரியாதையாகப் பேசிச் செயலில் வன்முறை காட்டும்
மனிதர்களின் குடும்பங்கள்
சிதறு படுகின்றன.
கணவனின் இனிய பேச்சால் அவனையே நம்பி வந்த 
பெண்ணுக்கு
அவனுடைய செயல்கள் அதிச்சியூட்ட
இனி அவர்கள் வாழ்வு என்னாகுமோ என்ற கவலை
வருகிறது. இந்தக் கதைதான் அடுத்து வரப் போகும் பதிவு.

கணவன்,மனைவி இருவருக்கும் 35 வயதுக்குள் தான் இருக்கும்.
திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகின்றன.

அந்தப் பெண்  அவள் கணவன் இருவரும் ஒரே கல்லூரியில்
படித்துக் காதலித்து மணம் முடித்தவர்கள். மேக்னா முகேஷ் தம்பதியர்.
அடுத்தடுத்து இரு குழந்தைகளும் பிறந்தன.

சென்ற மாதம் ஒரு நாள் காலையில் 
அந்தப் பெண்ணிடம் இருந்து தொலைபேசி வந்தது.

இன்று ஒரு நாள் குழந்தைகளைக் கவனித்துக்
கொள்ள முடியுமா என்று உதவி கேட்டாள்.
குழந்தைகள் வழக்கமாக ஒரு பாதுகாப்பகத்துக்குப்
போய் விடும் , இவளும் கணவரும் வேலைக்குக் 
கிளம்பிப் போவார்கள்.
ஒன்றும் புரியாததால் நாங்கள் சரியென்று விட்டோம். 
குழந்தைகளைக் கொண்டுவிட வந்த மேக்னாவின்
முகம் வெளிறிப் போய் இருந்தது.
சில மாதங்களாக அவர்கள் யார் வீட்டுக்கும் வருவதில்லை.
முகேஷ் மட்டும் எப்போதும் போல்
எங்களை வீட்டுக்கு வெளியே பார்த்தால் கையசைத்து விட்டு செல்வான்.

  ஏதாவது உடல் நலம் சரியில்லையா என்று புரியாமல் அவளைப் பார்த்த போது 
காலையிலிருந்து மூச்சு விடுவதே சிரமமாக இருப்பதாகவும்

மருத்துவரிடம் அப்பாய்ண்ட்மெண்ட் கிடைத்திருப்பதால் இப்போது செல்வதாகவும் சொன்னாள்.
அவளை உட்காரச் சொல்லி 
அக்குப்ரஷர்  வைத்தியம் செய்து அனுப்பினோம்.
இரண்டு மணி நேரம் கழித்து வருவதாகச் சொல்லி அவளும் 
சென்றாள்.

சற்று நேரத்தில் முகேஷின் கார் வந்தது.
படபடப்பாக உள்ளே வந்தவன். குழந்தைகளைக் கண்டதும் 
நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

என்னா ஆச்சு ஏன் இந்தப் பதட்டம் என்று விசாரித்தோம்.
மேக்னாவின் டாக்டர் அவள் இரண்டு நாட்கள்
மருத்துவமனையில் தங்கிப் பரிசோதனை
செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்
என்ற செய்தியச் சொன்னான்.

மேற்கொண்டு அவன் சொன்னதுதான் பதட்டப் பட வைத்தது.
To be continued....






Sunday, February 04, 2024

நேற்று இன்று என்றும்

வல்லிசிம்ஹன்
அனைவருக்கும் இனிய தினங்களுக்கான  வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.

புத்தகங்கள் துணையாக இருக்கும் குளிர்காலம்.
அடுத்து வரப்போகும் இளவேனிலுக்காக காத்திருக்கும் வேளை.

குளிரில் மனமும் சுருங்கி விடுகிறது.

அன்புத் தோழி எனது எழுத்துக்களைப்
பதிப்பித்து வெளியிடலாம், என்று மிக மிக
விருப்பம் தெரிவித்தார்.

புத்தகம் போடுவது இருக்கட்டும். 
அது எத்தனை நபர்களைப் ;போய் அடையும்?

என்னைவிடப்பெரிய திறமை வாய்ந்த
 எழுத்துலகின் அருமையான  எழுத்துகள்
சீக்கிரம் விற்றுப் போக வழியுண்டு.
எனக்கு இருக்கும் பயம், ஒரு 500 புத்தகங்கள் எங்கள் வீட்டு வரவேற்பறையில் காவல்
இருக்க வந்து விடுமோ என்பதுதான்:)))))))

கணவர் இருந்தால் கருத்து சொல்லி இருப்பார்.
47 வருடங்களை என்னுடன் இருக்க வைத்துவிட்டு
அவரும் கிளம்பிவிட்டார்.

இந்தத் தைமாத திருமண நாளில் 
எனக்கே நான் வாழ்த்து சொல்லிக்
கொண்டு மிச்சம் இருக்கும் நாட்களை வலி இல்லாமல்
கடத்த வாழ இறைவனை வேண்டி நிற்கிறேன்.
அன்பு நட்புகளுக்கு நன்மைகள் வளரட்டும்.