Blog Archive

Thursday, October 28, 2010

ஹேலொவீன் வந்தாச்சு















மீண்டும் அக்டோபர் மாசம். சிகாகோ  திமிலோகப்படுகிறது.
பெண்வீட்டில் சின்னவன் பல பல காச்டியூம்களைப் பார்த்துவிட்டு. ஸ்பைடர் மேன்
வாங்கி வந்திருக்கிறான்.
அண்ணாவின் பழைய உடைகள் அவனுக்குப் பொருந்தவில்லை. உடலமைப்பில்
அண்ணா பெரிய அளவு. இவன் இன்னும் சதை போட்டால் நன்றாகப்  பொருந்தும்.
எங்க !!சாப்பிடற சாப்பாடெல்லாம் ஓட்டம் விளையாட்டுல  கரைந்துவிடுகிறது:)

கடைக்கு அழைத்து போய் ,அவனை  தேர்ந்தெடுக்கச் சொன்னதும் ,பலவற்றையும் அணிந்து பார்த்து விட்டு,
ஒ ஐ கிவ் அப் மா. நத்திங் பிட்ஸ் மி''  ன்னு    கண் கலங்கியிருக்கிறான்.(டிராமா பாதி)
கடைசியாக் ஸ்பைடர் மேன் கிடைத்திருக்கிறார்.
இப்ப எல்லாம் யாரும் தன்னைத் தொந்தரவு செய்யக் கூடாது. தானே எல்லாம் செய்து கொள்ளவேண்டும் என்ற கொள்கை.
வாங்கின  உடையை  அதற்கான அறையில் உள்ளே போய்க் சார்த்திக் கொண்டுவிட்டானாம் . எப்படியோ வளைந்து நெளிந்து  போட்டுக் கொண்டு விட்டான். ஜிப்  மட்டும் எட்டவில்லை. அம்மாவை அழைத்து அதையும் சரி
செய்துகொண்டுவிட்டான். இப்போது ஸ்பைடர் மேன் மாஸ்க் போடணுமே.

அதைப் பிரித்தபோது  தான்  ஒரு பிரச்சினை .அதில் கண்களாக  இரு நீளக் கோடுகளே இருந்தன.
சின்னவனுக்கு மூக்கை மூடினாலே பிடிக்காது. என்னதான் வலைமாதிரி  போட்டு இருந்தாலும் ,இந்த உடுப்பையும் வேண்டாம் என்று சொல்லப் போகிறான் என்று பெண் நினைத்து வீட்டுக்கு வந்துவிட்டாள்.
''அண்ணா ஐ ஆம் கோயிங் டு பி ய  ஹெட்லஸ்   ஸ்பைடர்மேன் '' என்று வருத்தப் பட்டு இருக்க்கிறான்.:(
பெரியவன் அந்த மாச்கைப் பார்த்துவிட்டு, இவ்வளவு தானா.நான் சரிசெய்து விடுகிறேன் என்று  அந்த  முகமூடியின் முன் பாகத்தை வட்டமாகக் கிழித்து எடுத்துவிட்டான்.
ஒரு புது விதமான,   ஸ்பைடர் மாஸ்க் போடாத ஸ்பைடர் குட்டியை  சின்னவன் பள்ளியில் நாளைக்குப் பார்க்கப் போகிறார்கள்.:)

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Wednesday, October 20, 2010

ஆண்டுகள் கடந்து ஆண்டு விழா(தொடர் அழைப்பு-சந்தனமுல்லை)





8:03 AM 10/20/2010

மீண்டும் கொசுவத்தி சுத்த அழைத்த முல்லைக்கு நன்றி.

எழுதத்தான் நாட்கள் எடுத்துக் கொண்டுவிட்டேன்.

எத்தனையோ காரணங்களில் முழங்கால் வலியும் ஒன்று.

ஆனால் இதே கால்கள்  ஓடிய பள்ளி நாட்களை நினைக்கும் போது இந்த வலி
ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

நன்றி முல்லை.

*****************************************************************************************

என் பள்ளிப் படிப்பு மூன்று மாவட்டங்களில் தொடர்ந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் முதல் மூன்று வகுப்புகளை முடிக்கும்போது ஆண்டுவிழா

நடந்த நினைவு இல்லை.

கோவில் அருகே இருக்கும் பால்கோவா கடை வாசனையும், ஆண்டாள்
ஸ்நான பொடி மணமும், கொட்டிக் கொடுக்கும் பூக்களின் மலர்ச்சியும்,

எந்நாளும் திருநாளாகக் காணப்படும் தெருக்களும், விரிந்து கொண்டே வரும்
கோலங்களும், ஆண்டாளின் தேரும், அவள்கைக்கிளியும்,
ஆடிப் பூர மாலையுமே நெஞ்சில் நிற்கின்றன.

இவ்வளவு அருள் காட்டிய அன்னை

கோதைக்கும் ரங்கமன்னாருக்கும் நமஸ்காரங்கள்.

*****************************************************************************************

அடுத்து இடம் பெயர்ந்தது திருமங்கலத்துக்கு . மதுரையின்

அருகே விருதுநகர் செல்லும் வழியில் 12 மைல்கள் தொலைவில்

இருக்கின்ற ஒரு சிறிய ஊர்.

அதில் கஸ்தூரிபாய் காந்தி ஆதாரக் கல்வி நிலையத்தில்
படிப்பு தொடர்ந்தது.
குறும்பும் வம்பும் அதிகமானது இங்கேதான்.
பெரிய டீச்சர் என்பவரே அங்கே ஆல் இன் ஆல்.

பெயர் நினைவில்லை.
ஆனால் என் வகுப்புக்குப் பக்கத்திலியே முற்றத்தில்
சகமாணவியரோடு அவங்களும் ஒரு கோழியை
உரித்த நினைவும்,அதற்கு மஞ்சள் தடவிய விநோதமும்

ஞாபகத்திலிருக்கின்றன. கொஞ்சம் என்னைவிட வயதான பெண்கள்

அந்த டீச்சரின் குழந்தை அழும்போது தூளி ஆட்டியதும்

நினைவுக்கு வருகிறது.
பள்ளி ஆண்டுவிழாவுக்காக
ஒழுங்காக இருந்த இரண்டு கரும்பலகைகளுக்கு,
ஊமத்தை இலை பறித்து வந்து பளபளவென்று தேய்த்து
ஒரு அழகிய ரோஜாவும் இலைகளும் வண்ண சாக்பீஸ்களால் அலங்கரித்ததும்
பார்ட் ஆஃப் த ஷோ.;)

ஆண்டு விழாவை தாலுக்கா ஆபீஸ் வளாகத்தில் நடத்த அனுமதி கிடைத்தது.
நாங்களோ ஒரு
நாற்பது பசங்கள் இருப்போம்.
பெண்கள் 15 ம், ஆண்பிள்ளைகள் 25 பேரும் இருந்திருப்போம்.

எட்டு, ஒன்பது வயதுக்கான கோலாட்டம் கும்மி பெண்கள் செய்வதாகவும்,
பசங்கள் ஒயில் கும்மி ஆடுவதாகவும் தீர்மானிக்கப் பட்டது.

ஓயாமல் வாயடித்துக் கொண்டே இடுக்கும் என்னைப் பெரிய டீச்சர்
ஒரு நாள்பார்த்துக் கண்டித்தார். ''என்ன அளந்து கொண்டே இருக்கே,

உருப்படியாக ஆண்டுவிழாவுக்கு ஏதாவது செய்யேன் என்று அதட்டினார்.

ஒரு அதிசயமான பேய்க்கதையை மசாலாவோடு சொல்லிக்
கொண்டிருந்த எனக்கு,ஒரே அதிர்ச்சி.

நான் நான் நான்...என்ற(நான் சொன்ன) உளறலை அவர் மகா எரிச்சலோடு பார்த்தாலும்

உன் கண்கள் இருக்குமிடமே தெரியவில்லை.சரியான ஜப்பான்

பொம்மைப் பொண்ணு,என்று திரும்பியவர்

''சரி மாறு வேடப் போட்டியில் நீ ஜப்பான் பெண்ணாக

வா'' அம்மா அப்பாவிடம் ஏற்பாடு செய்துகொள் '' என்று

சிரிப்பை அடக்க முடியாமல் சென்றுவிட்டார்.

அப்போது நான் எப்படி விழித்தேன் என்று எனக்கு நினைவில்லை:)

'என்னடா, ஜாலியாக ஆண்டுவிழா பார்க்கலாம், என்றால் இந்த டீச்சர்

இப்படி மாட்டிவிட்டார்களே' என்று பயம் வந்தது.

பதிவு நீண்டு வீட்டது.மற்றதை நாளை எழுதட்டுமா?
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Wednesday, October 13, 2010

நவராத்திரி நாட்கள்.

Ramalakshmiyin MURUGAN:)
Add caption



அந்நாள் கொலு பக்திக்காக. இந்நாள் கொலு நாட்டு முன்னேற்றம்,இன்னும் பல துறைகள் சார்ந்த குழு பொம்மைகள் என்று பரந்து காணக்கிடைக்கிறது.


தீம் பார்க், மிருகக் காட்சி சாலை, மலைக்கோட்டை,தெப்பக்குளம், காஞ்சி வரதராஜ சுவாமியின் உத்சசக் காட்சிகள். திருப்பதி பிரம்மோத்சவம்.....இன்னும் எத்தனையோ வித விதமான பொம்மைகளைக் கண்காட்சியில் கண்டேன்.

இன்னும் ஒரு தடவை போய்ப் பார்க்க ஆசைதான்.

ஒவ்வொன்றும் விலை தான் பக்கத்தில் போக முடியவில்லை.

எட்டாயிரம் ரூபாய்க்கு ஒரு பதினாறு கரங்கள் கொண்ட துர்காமா. அவங்களை வச்சாலே கொலு பூர்த்தியாகிடும்.:)

ஏற்கனவே இரண்டு ஆர்டர் பார்சலாகி நிற்கிறது.

நம் வீட்டில் துர்காமா ஒரு முகம் மட்டும் காட்டி வெகு அழகாகவே இருக்கிறார்கள்.

இந்த வருஷத்துக்கு ஒரே ஒரு முருகன்சாருக்கு மட்டும் பட்ஜெட் ஒதுக்கினேன்.

எங்கள் இருவருக்குமே இந்த விஷய்த்தில் பிரமிப்பும் ,தளர்வும் தோன்றிவிட்டது. குழந்தைகள் இருந்தால் அவர்கள் கற்பனைக்கு ஏற்றது போல ஏதாவது செய்வார்கள்.

இன்னும் பல பொம்மைகள் பெட்டீலிருந்தே எடுக்கவில்லை. அதை மீண்டும் காகிதங்களில் சுற்றி, டேப் போட்டு பத்திரமாக மாடியில் வைக்கணும்.



எங்கள் சின்னவயசில் மதுரையில் விதவிதமான

தெப்பக் குளங்கள், ரங்கராட்டினங்கள் எல்லாம் கிடைக்கும்.

அப்பா பொறுமையாக உட்கார்ந்து காகிதச் சங்கிலிகள் பின்னுவார்.



நவராத்திரிக்கு முந்தின நாள், கூடையோடு பொம்மை வியாபாரி வருவார்.

கிருஷ்ணன் ஒரு ரூபாய்க்குக் கிடைப்பார்:)

தசாவதாரம் பொம்மைகள் 5 ரூபாய்க்குக் கிடைக்கும்.

ஸ்ரீரங்கநாதர் மட்டும் அப்பவே முறுக்கு செய்து கொள்வார். அவருக்கு 7 ரூபாய் கொடுத்தது நினைவிருக்கிறது:)



இப்போது அதே ரங்கநாதர் பேபியர் மாஷ் பொம்மை ரூபாய் 2400ஆம்!!!

இதில் பொம்மை செய்தவர்களுக்கு எத்தனை போய்ச் சேருமோ தெரியவில்லை.



முன்னாட்களில் வெற்றிலைபாக்கு மஞ்சள் குங்குமம்,ஒரு எட்டணா,கூடவே சுண்டல் இதுதான் ''குடி பாக்''

இப்ப அப்படியில்லை. எவெர்சில்வர் கிண்ணத்தில் ஆரம்பித்து

அவரவர் பொருளாதாரத்தை உத்தேசித்து நடக்கிறது:)

எல்லா நலன்களையும் நிம்மதியையும் அந்த அம்மா பராசக்தி நமக்குக் கொடுக்கட்டும்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Thursday, October 07, 2010

நவ நவ நவ ராத்திரி வாழ்த்துகள்

 <><>
<>
<><>
அனைவரும் நலம் பெற வாழ்த்துகிறோம்.
 ல்லா  சக்தியும் பொருந்திய அன்னை தன் மக்கள் அனைவரையும் இல்லத்திற்கே வந்து இந்த ஒன்பது நாட்களும் மங்களம் பொங்கும்படி அனுக்ரஹம் செய்கிறாள்.


அகில சக்தியை வணங்குவோம்.ல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Saturday, October 02, 2010

புத்தம்புதுத் தென்றல்

நண்பர்களுக்கு ஒரு நல்ல செய்தி.

எங்கள் இரண்டாவது பையனுக்கு
இரண்டாவதாக  ஒரு மழலை  பிறந்திருக்கிறது.
அக்கா  ஆசைப்பட்டபடி ஒரு குட்டித்தம்பி நேற்று இரவு அக்டோபர் 1 ஆம்தேதி 9.50 சுவிட்சர்லாந்த் நேரப்படி
பூமிக்கு வந்துவிட்டான்.
தாயும் சேயும் நலம். பதிவுலக நல்லோர் வாழ்த்தி ஆசிகள் வழங்கும்படி பிரார்த்திக் கொள்கிறேன்.
பணிவன்புடன் ரேவதிபாட்டி, தாத்தா நரசிம்ஹன்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa