Showing posts with label நாம். Show all posts
Showing posts with label நாம். Show all posts

Tuesday, October 18, 2011

பசுமை என்றும் வாழ்வில் நிலைக்கப் பகிர்ந்து கொள்ளவேண்டும்




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
    சற்றே    நீண்ட  கதை.:)  தீபாவளி  ஸ்பெஷல்(நாற்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு தீபாவளி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 
வாயிலைப் பார்த்தபடி போட்டிருந்த சாய்வுநாற்காலியில்
சாய்ந்த வண்ணம் தன்னைத் தாண்டி போகிறவர்களையும்
இருந்து பேசுபவர்களையும் கவனித்த வண்ணம் இருந்தார் விஜயாப் பாட்டி.

கண்சதை வளர்ச்சிக்கான அறுவைசெய்த பிறகு கண்கள் மிக நன்றாகத் தெரிந்தன.
குப்பையைக் கொட்டும் பாவனையில்  பக்கெட்டையும்
 எடுத்துச் செல்லும்  ரங்கம்மா,

விளையாட்டுக்காக புளி உப்பு இரண்டையும் சமையலறையிலிருந்து எடுக்கும் கொள்ளுப் பேத்தி

பென்சில் வாங்கக் காசு கேட்பதற்காகத் தயங்கி நிற்கும்  கொள்ளுப் பேரன்,

விசாலமாக எழுப்பப் பட்ட  ஆஸ்பெஸ்டாஸ்  கொட்டகையின் கீழே
நான்கு ஐந்து  கார்களை (உதவிக்கு வைத்திருக்கும் மெக்கானிக்குகளின் துணையோடு)

ரிப்பேர் செய்து கொண்டிருக்கும்  பேரன்.


ஸ்வாமி அறையில் இராமாயணம் படித்துக் கொண்டிருக்கும்  மருமகள்.
வசந்தா.

அந்த மருமகளின் மருமகள்(பேரனின் பெண்டாட்டி) சந்திரா  ஒருஅறையிலிருந்து
 இன்னோரு அறைக்கு விரைந்து கொண்டிருப்பதையும்
 ஒரே  நோட்டத்தில் பார்த்துவிட்டுக் கையில்  இருக்கும் புத்தகத்தின் பக்கத்தைப் புரட்டினார்.
தீபாவளிக்கு இன்னும் ஒரு நாலு நாள் தான் இருக்கிறது.

பேரன் குடும்பத்துக்கு  என்ன வாங்கித் தரப் போகிறான். இந்த ரேசன் காலத்தில் பா(ல்)ம் ஆயில்  கிடைக்குமா.
என்னவெல்லாமோ கவலை பாட்டிக்கு.

சாப்பிட உள்ளே வந்த பேரனிடம் ,
''தீபாவளி வருதேடா, குழந்தைகளுக்கு ஜவுளி எடுக்கவேண்டாமா?"
என்றாள்.
ம்ம்  வாங்கலாம். கஸ்டமர் வண்டி இன்னிக்குப் போய்விடும்'
ஒரு ஆயிரம் ரூபாய் கிடைக்கும். வேலை செய்யும் பசங்களுக்கு ஐன்னூறு ரூபாய் கொடுத்துவிட்டால்
 மிஞ்சும் ஐன்னூறில் குழந்தைகளுக்கு ரெடிமேட் எடுத்துவிடலாம்'' என்ற வண்ணம்
நகர்ந்த பேரனைச் சலிப்போடு பார்த்தாள் பாட்டி.
மருமகள் வசந்தாவை விளித்தாள்.
நீயாவது ஏதாவது செய்யக் கூடாதாமா. அந்தப் பெண்(பேரன் பெண்டாட்டி)
புதுசு போட்டுக்க வேண்டாமா. ஒரு ஒக்கோரையாவது
மனோகரமாவது  செய்யவேண்டாமா.


கேட்டார்.
கோ ஆப்டெக்ஸ்  அட்டை இருக்குமா. சிரமம் ஒண்ணும் இல்லை.
எல்லாம் சமாளிக்கலாம்மா என்ற வண்ணம் மதியம் காப்பி டிபனுக்கு ஏற்பாடு செய்யச் சந்திரா
விரைந்துவிட்டாள்.

 பாட்டிக்குப் பிடித்த குணுக்குப் பலகாரத்தையும், இலையில் வைத்து
அப்போது இறக்கின டிகாக்ஷனில் போட்ட காப்பியை வெள்ளி டம்ப்ளரிலும்
ஒரு மரத்தட்டில் கிண்ணத்தில் வைத்துக் கொடுத்தாள்.'

பேசாம இருக்கியே அவன்கிட்டக் கேட்டு நல்ல புடவையா வாங்கிக்கக் கூடாதோ என்று
 ஆதங்கத்தோடு கேட்கும் பாட்டியை
 ஏதாவது  வாங்கிடலாம்   பாட்டி''சமாதானப் படுத்திவிட்டுக் குழந்தைகளின்
 வீட்டுப் பாடத்தைக் கவனிக்கச் சென்றாள்.

அடுத்தநாள் குழந்தைகள் வந்ததும்  பெண்ணுக்குப் பிடித்த பாவாடை சட்டையும்  மகன்கள்

 இருவருக்கும் பாண்ட்  சட்டைகளும் முந்நூறு ரூபாய்க்குள் வாங்கி வந்துவிட்டாள் சந்திரா.

டியூசிஎஸ் கடையில் விற்ற நல்லெண்ணெய், சீயக்காய்த் தூள்,  விதவிதமான பட்டாசுகள்,

 மத்தாப்புகள் எல்லாம் வீடு வந்து சேர்ந்ததும் குழந்தைகளின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

பக்கத்துவீட்டு மருதாணி மரத்திலிருந்து ஒரு பை நிறைய இலைகளைப் பறித்து வந்த பெண்ணிற்கு
இரவு சாப்பாடு முடிந்ததும்,
கைகள் கால்களில் மருதாணி இட்டுவிட்டுத் தானும் வைத்துக் கொண்டாள்.

மருதாணிவைக்கும்போது அம்மாவின் நினைவு வர ,பழைய தீபாவளிகளைப் பற்றிக்
குழந்தைகளிடம் சொல்லியபடியே அன்றிரவு  கழிந்தது.

மறுநாள்  பாட்டியிடம் கேட்டுக் கொண்டு  பச்சரிசி,உளுந்து,கடலைப் பருப்பு ,பயத்தம்பருப்பு இவையெல்லாம்
 கொடுத்துவிட்டு வீதிமுனையில் இருக்கும் மாவு மெஷினில்
 ரங்கம்மாவிடம் சொல்லி அரைத்து வைத்தாள்.
அன்று பகல்தான் எல்லோருக்கும் ஒரு ஆச்சரிய அதிர்ச்சி காத்திருந்தது.

வாசலில் ஆட்டோ நிற்கும் சத்தம் கேட்டுப் பாட்டி'யாரூன்னு போய்ப் பாரு.
 தீபாவளிக்கு முதல்நாள் யார் வரப் போகிறா என்றதும்,

கதவைத் திறந்த சந்திராவுக்கு ஒரு நிமிடம் பேச்சே வரவில்லை.
''சம்பந்தியா  வாங்கோ வாங்கோ  வாம்மா ஜயா, நாராயணன்
வாங்கோ.
வசந்தா உன் சம்பந்திகள் வந்திருக்கா பாரு''என்று பாட்டியின் குரல் உச்சஸ்தாயியில்
சென்றது.

அம்மாவின் கையில்  இருந்த  வயர் கூடையில் பழங்களும் வெற்றிலை பாக்கு மஞ்சள்
இருப்பது தெரிந்தது.
அப்பாவும் மெதுவே உள்ளே வந்தார்.
இருவரும் பாட்டியை நமஸ்கரித்தனர்.
''எங்களுக்கு  சென்னைக்குப் பக்கத்தில் அச்சரப் பாக்கத்துக்கு மாற்றலாகி இருக்கிறது..இப்பதான் ஒருவாரம் ஆகிறது.
ஜயாவின் தம்பிக்குத் திருமணம் நிச்சயம் ஆகிறது.
அதற்காக  மாம்பலம் கிளம்பிவந்தோம். அப்படியே மைலாப்பூருக்கும் வரலாம் என்று வந்தோம் என்றார்.

''சந்திரா கொஞ்சம் ஒரு தாம்பாளம் எடுத்து வரயாம்மா என்றதும்,
முதலில் அவர்களுக்குக் காப்பி ஏதாவது கொடு. என்ற வண்ணம் வசந்தம்மாவின் குரல்
 கேட்டுச் சந்திரா தன்னிலைக்குத் திரும்பினாள்.
எப்படிம்மா இருக்க அப்பா நீ எப்படி இருக்க. வயிற்று வலி தேவலையா,
என்றபடி தாம்பாளத்தையும் கொண்டுவந்தாள்.
உன் தம்பி சிங்கப்பூரிலிருந்து மருந்து வரவழைத்துக் கொடுத்தான்மா.அவனுக்குத்
தெரிந்த பைலட் தினம் அங்கு சென்று வருவாராம்
என்று சொல்லித் தன் கையிலிருந்த்க பையிலிருந்து ஒரு எட்டு முழ வேட்டியும்,
ஒரு  பாம்பே டையிங் துண்டும் எடுத்து வைத்தார்.
சந்திராவுக்கு மிகவும் பிடித்த கடாவ் டெரகோசா  புடவை அடுத்ததாக வெளியே வந்தது.
மனதை அள்ளும் மெல்லிய மஞ்சள் நிறத்தில் பச்சைக் கொடிகள் சுற்றி வரும் அந்தப் புடவையின் அழகு
இதமாக இருந்தது.

என்ன மாமா என்று கேட்டபடியே  க்ரீஸ் படிந்த கைகளோட வந்த மாப்பிள்ளையைப்
பார்த்து இருவரும் எழுந்தார்கள்.

கூடத்தில் வைக்கப் பட்டிருந்த   பொருட்களைப்
பார்த்து  எனக்கு என்ன வேண்டும் என்று எங்க மாமாவுக்குத்தான் தெரியும் என்ற வண்ணம் சிரித்தபடி
உள்ளே சென்ற  மகனை  அம்மா'' வந்து உட்காருடா''' என்று அழைத்தார்.
அதற்குள்  வேட்டி துண்டுக்கு மேல் மாப்பிள்ளைக்குச் சட்டை வாங்க ஒரு நூற்றியோரூ
 ரூபாயும் வைத்தார் நாராயணன்.
அதன் பின்னே ஒரு எவர்சில்வர் டப்பாவில்  திரட்டிப் பாலும், இன்னோரு டப்பாவில்
 தேங்காய் பர்ஃபியும் அம்மா வைத்தார். இன்னோடு குட்டி டப்பாவைப் பார்த்ததுமே சந்திரா என்னவென்று  கண்டு கொண்டாள். ''மருதாணியாம்மா'' என்று அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

''தீபாவளி  அமர்க்களமா  இப்பவே வந்தாச்சு. வந்தாச்சு. நாராயணா, ஜயா இரண்டு பேரும் இருந்து சாப்பிட்டு விட்டுப் போங்கோ
என்று வாயார  அவர்களை உபசரித்தார் .
தயங்கியவர்களை  மாப்பிள்ளை வற்புறுத்த  பிறகு சம்மதித்தனர்.

அன்று  இரவு அவர்களை பஸ் நிறுத்தத்திற்குச்  சென்று 12 பி  பஸ்ஸில் ஏற்றிவிட்டுத் திரும்பிய
சந்திராவின் மனம்
சுற்றிவெடிக்கும் பட்டாசுகள் மத்தாப்புகள் வெளிச்சத்தை விட பல மடங்கு ஒளிர்ந்தது.

வருடம் தவறாமல் இந்த வழக்கத்தைக் கடைப் பிடித்த பெரிய தம்பி,சின்னத்தம்பி இருவரின் நினைவுக்கும் நன்றியுடன் எழுதப்பட்ட பதிவு.








Posted by Picasa

Saturday, February 02, 2008

264 திருமங்கலம் காம்ப்....














நின்று நிதானமாக அசை போட்டு எழுதுவது என்று தீர்மானம் போட்டதில்(உதவி....இ.கொ, மதுரையம்பதி:)...)


திருமங்கலத்தில் காம்ப் போட வேண்டிய நிலை.




திருமங்கலத்திலிருந்து 12 மைல் தொலைவில் பழங்கானத்தம்.


அங்கே தாத்தா பாட்டி, சித்தப்பா,சித்தி அவர்களுடைய மூன்று குட்டிக் குழந்தைகள்.




தாத்தா எல்லாத் தாத்தாக்களையும் போலக் கண்டிப்பானவர். அதில் என் பெரிய தம்பியை மட்டும் ரொம்பவே பிடிக்கும்.


கேட்ட கேள்விக்கு டக் டக்னு பதில் சொல்வானாம்.


அதுவும் டார்ச் ஆன் செய்ததும் வெளிச்சம் வருகிறாப்போலப் பளிச்சுனு சொல்லிடுவானாம்:))




அதனால் தாத்தா பக்கம் அதிகம் நானும் சின்னவனும் போகமாட்டோம்.


அநேகமாகக் காலை தினமணி படிக்கவேண்டியது என் வேலை. காலைப் பால் குடித்ததும் கிணற்றங்கரை.


அங்கு கிணர்ரிலிருந்து தண்ணீர் இழுகும் வேலை தாத்தாவுடையது. அவர் அங்கேயே குளித்து தன் துணிமணிகளைத் தோய்த்து விடுவார்.


அவர் தண்ணீர் நிரப்பும் குடங்களையும் வாளிகளையும் வீட்டுக்குக் கொண்டு வருவது எங்கள் பொறுப்பு.


தாத்தாவுக்கு அப்போது வயது எழுபத்தைந்து. பாட்டிக்கு எழுபது.

அபூர்வமான தம்பதிகள். பாட்டிக்கு வெடுக் நிறைய உண்டு.

எங்கள் சாப்பாடு முடிந்ததும் என்னை அழைப்பார். 'தாத்தா தூங்கியாச்சா பாரு ''என்பார்.

பூனையாய் தாத்தா அருகில் போய், அந்த ஈசிசேர் அருகில் நின்று,

தாத்தாவின் விசிறி இப்படி அப்படி போகிறதா,

இல்லை தாத்தா மேல இருக்கா என்று பார்ப்பேன்.


ஒரு நாளாவது தாத்தா கண் திறந்து என்னைப் பார்க்காமல் இருந்தது இல்லை.:)


'என்ன வேணும்? உங்க பாட்டிக்கு டவுனுக்குப் போணூமா?

என்று கேட்பார்.

'ஆமாம்னு சொல்லுனு' பின்னாலிருந்து குரல் வரும்.


வடக்கில மின்னலடிக்கிறது. காத்தோட மழை வரும். நாளக்குப் போலாமே சுண்டைக்காயும் மணத்தக்காளியும் நாளைக்கும் இருக்கும்'' என்பார்.

பாட்டியிடமிருந்து பதிலே வராது.

ஒரு அழகிய அரக்குப் பட்டுப்புடவை கட்டி எப்பவோ பாட்டி ரெடி.

அவருக்குத் தங்கைகள் மதுரை புதுத்தெருவில் குடியிருந்தார்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் அங்கே போய் அரட்டையும் டிபனும் உள்ளே போக வேண்டும் பாட்டிக்கு.

அநேகமாக நெல்லையில் ஒருவருமே இல்லாத நிலையாகி விட்டது.


பாட்டியின் வயது ஒத்தவர்கள் வக்கீல் புதுத்தெரு, நாயக்கர் புதுத் தெரு, சொக்கிகுளம், நரிமேடு,வசந்தநகர் என்று

குடி புகுந்து விட்டார்கள்.


தாத்தாவிற்கு பூஜையும் ராமனும் அவன் நாமமும் போதும்.

அவரைப் பார்க்க எல்லோரும் வந்த வண்னம் இருப்பார்கள். அதனால் உலக செய்தி அத்தனையும் அவருக்கு வந்துவிடும்.


தனது நெருங்கிய செல்வந்தராயிருந்த உறவிடம், அவர் வாங்கிக்கொண்ட உதவி டிவிஎஸ் பஸ் பாஸ் ஒன்றுதான்.

அதுவும் பாட்டிக்கு மட்டும்.

தான் எங்கயாவது போக வேண்டும் என்றால், சித்தப்பாவிடம் சொல்லி வண்டி ஏற்பாடு செய்து கொள்ளுவார். அதுவும் வெகு அபூர்வம்.
மிக உயர்ந்த கொள்கைகள். நேர்மை., இவைதான் தாத்தாவின் அடையாளங்கள்.
எங்கேயிருந்தெல்லாமோ தாத்தாவுக்குத் தபால் வரும்.
பாரதீய வித்யா பவன் பத்திரிகை பவன்ஸ் ஜர்னல்.
மஞ்சரி பத்திரிகை,ஜே அண்ட் ஜே டீசேன் என்ற மருத்துவ பத்திரிகை. இவைகள் எல்லாம் சில.
இந்த மருத்துவத்தில் அவருக்கு இருந்த நம்பிக்கை ,அம்மா வழியாக எங்களையும் பிடித்துக் கொண்டது.
பழங்கானத்தத்திலிருந்து திருப்பரங்குன்றம் வரை நடந்தே வருவார்.
அங்கிருக்கும் தபால் அலுவலகத்திலிருந்து, எங்கள் தந்தாஇயுடன் கட்டுக் கட , கட தந்தி மொழியில் பேசுவார்.;))
எங்களுக்கும் அதை எப்படி மொழி பெயர்ப்பது என்று சொல்லியும் காட்டுவார்.
பாட்டிக்கு அப்போது மண் சட்டிச் சமையல் தான் வழக்கம்.
அதில் செய்யும் கீரைக் குழம்பும்,தோய்த்த கட்டித் தயிரும்,
ம்ம்ம்.நினைக்கத்தான் வேண்டி இருக்கிறது.
கைமுறுக்கு, திரட்டிப்பால் இதெல்லாம் பாட்டி கையால்
செய்து வந்து வெண்கலப் பானையில் அடைக்கலமாகும்.
பரணுக்கு ஏறிவிடும்.
தினம் மதியம் மூன்று மணிவாக்கில் ஆறு குழந்தைகளுக்கும்,
இரண்டு சிறுமலைப் பழங்களும் வாழைச்சருகில் திரட்டிப்பாலும்,இரண்டு முறுக்குகளும் விநியோகம் ஆகும்.:)
ஆறு மணிக்கு விளையாட்டு முடிந்தால் கைகால் கழுவி சஹஸ்ரநாம பாராயணத்துக்கு வந்து விட வேண்டும்.
ஏழரை மணிக்கு பாட்டி பெரிய அரிக்கஞ்சட்டி நிறைய மோர் சாதம் பிசைந்து கூடத்துக்குக் கொண்டுவருவார்.
நாள் முழுவதும் ஆடின ஆட்டம் வயிறு கூப்பாடு போடும்.
பக்கத்தில் சித்தி உட்கார்ந்து மாய மோதிரம், மந்திரக்குதிரை என்று கதைகள் சொல்ல, எல்லோர் கைகளிலும் சோறு வைத்து நடுவில் குழித்துக் கொண்டால்
மதியக் குழம்போ,இல்லை மாவடுவோ கிடைக்கும்.
சாப்பிட்ட இடத்தைச் சுத்தம் செய்ய(செய்யாமலிருக்க:)))
எனக்கும் தங்கைகளுக்கும் வாக்குவாதம் நடக்கும்.
தாத்தா சிரிப்புடன் எங்களை விலக்கி டைம்டேபிள் போட்டுக் கொடுப்பார்.
பிறகென்ன, ஒரு பெரிய கல்யாண ஜமக்ககளம் விரிக்கப்பட்டு ஒரு தலையணைக்கு இருவர் என் , தாத்தா கட்டிலருகில் படுப்போம்.
தாத்தா ராம நாமம் சொல்ல உறங்கிவிடுவோம்.
அடுத்த பதிவில் திண்டுக்கல்லுக்குப் போகலாமா:)




















Thursday, January 24, 2008

261,கயத்தாறு ..ஸ்ரீவில்லிபுத்தூர்...1946


அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எட்டு வயது வித்தியாசம்.
அதைப் பெரிதாக நினைக்காத காலம் அது.
அம்மாவுக்குத் தெரிந்தது, அப்பா நன்றாகச் சாப்பிட வேண்டும்.
தன்னால் அவருக்கு ஒரு தொந்தரவு வரக் கூடாது.
கண்ணைக் கட்டிக் காட்டில விட்ட மாதிரி இருந்தாலும்,
அக்கம் பக்கம் வீடுகள் என்று எதுவும் இல்லாத போதும்,
அதைக் கண்டு சிந்திக்கவோ பயப்படவோ தெரியாத குணம்.
தபாலாபீஸ் ப்யூன் மூலம் காய்கறி வாங்கவும், மற்றபடி சென்னையிலிருந்து தனக்கு வேண்டும் என்கிற
எம்ப்ராய்டரி விஷயங்கள்,துணிகள் இவற்றைத் தன் அம்மாவுக்கு
எழுதி போஸ்ட் பார்சல் என்று வரவழைத்துக் கொண்டார்.
அப்பொழுது கல்கியிலு, ஆனந்த விகடனிலும்
வந்து கொண்டிருந்த தொடர் கதைகளின் சுருக்கம் சீனிம்மா(அம்மாவோட அம்மா)
மூலம் வாராவாரம் அப்டேட் செய்து கொண்டு விடுவார்.
அப்போது கல்கியில் அலை ஓசை வந்திருக்குமோ.
வீட்டு வைத்தியம் என்று ஸ்ரீஹரி என்பவர் எழுதிய வார அத்தியாயங்களை
அப்பா பைண்ட் செய்தது இப்போதும் அப்பா வீட்டில் இருக்கிறது.
இருவருக்கும் பத்திரிகை படிக்கும் வழக்கம் இருந்ததால் த ஹிண்டுவோ ,
இண்தியன் எக்ஸ்ப்ரசோ வாங்கினார்கள்.
அம்மாவுடைய ஆங்கில அறிவு வளர்ந்தது ஃப்ரான்க் மொரேஸ் இது போன்ற
அரசியல் எழுத்தாளர்களீன் சிந்தனைகள்,எப்பவாவது நெல்லை,தூத்துக்குடி போன்ற
பெரிய ஊர்களிலிருந்து அவ்வப்போது கிடைக்கும் ரீடர்ஸ் டைஜஸ்ட்,மஞ்சரி என்றுதமிழ்ப் பத்திரிகை
இவற்றால் தான்.
பிற்காலத்தில் நான் அம்மாவின் தெளிவான பேச்சைக் கேட்டு அதிசயித்திருக்கிறேன்.
இருவருக்கும் ஒரே மாதிரி விருப்பங்கள். கட்டுப்பாடுகள். கயத்தார்றில் கட்டபொம்மன்
தூக்கில் போடப் பட்டது கூட அம்மாவிடம் அப்பா சொல்லவில்லையாம்.வருத்தப் படுவாரோ என்று.
பிற்காலத்தில் 1957ல் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் பார்த்துவிட்டு ,வெளியே வரும்போது நான்
மிகவும் அழுது தலைவலி வரவழைத்துக் கொண்ட போது,
அம்மா ''எல்லாவற்றிலும் என்ன பலன் கிடைத்தது என்று யோசிக்கணும் அவர் அந்த மாதிரி இறந்ததால் நமக்குச் சுதந்திரம் கிடைத்தது. அதே போல நம்மால் பயனுள்ள செயல் ஏதாவது செய்ய முடியுமா என்று யோசிக்கணும்னு
சொன்ன போது அப்பா நமட்டுச் சிரிப்பு சிரித்தது இப்பவும் ஞாபகம் வருகிறது.:))
கொஞ்ச நாட்களில் செர்ருப்புப் போட்டுக் கொண்டு வெளியில் நடந்தால் அதிசயமாகப் பார்க்கும்
மற்றப் பெண்களையும்,
பாறைக் கிணாற்றிலிருந்து ஊறின
தண்ணீரை 'சேந்தி' எடுப்பதும் பழகிவிட்டது.
காலையில் குருணைக் கஞ்சி சாப்பிட்டு விட்டுக் காரியாலயம் செல்லும் அப்பா,
மதியம் உணவுக்கு 12 ம்ணிக்கு வருவதற்குள் விறகடுப்பில் வெண்கலப் பானையில்
சாதமும்,கரியடுப்பில் ஒரு குழம்பும்,ரசமும்,பொரியலும் செய்துவிடுவார்களாம்.
விறகு யார் வாங்கிக் கொடுப்பார்களோ என்று நான் கேட்டால் ,விறகு வெட்டும் இடம்தான் பக்கத்தில் இருந்தது.
அதில் நான்கு விறகு(காய்ந்தது) வாங்கினால் ஒரு வாரம் வரும் என்பார்கள்.
அம்மாவுக்கு கதை எழுதவும் பிடிக்கும்.
மதியம் தூங்க ரொம்பவே பிடிக்கும்.
பின்னாட்களில் ,தன் நீண்ட கூந்தலுக்கு ஒரு குட்டி முடிச்சுப் போட்டுக் கொண்டு
கையில் ஹிண்டு பத்திரிகையைப்(பிடித்து) படித்தவாறே தரையில் தூங்கும்
அம்மாவை சீண்டுவதும் நினைவில் இருக்கிறது;)
அப்பா அம்மா குடித்தனம் அழகாக நடப்பதற்கு சாட்சியாக ஒரு சிசு உருவானது.

அதற்கு வழமையாகச் செய்ய வேண்டிய பூச்சூட்டல்,ஸ்ரிமந்தம்,வளைகாப்பு
என்று சகலமும் அழகாகச் செய்து வைத்துத் திருவேங்கடம் பாட்டி சென்னைக்குச் செய்தி சொன்னதும்,
அங்கிருந்து ஸ்ரீ வீரராகவனும் ருக்குமணி அம்மாளும் வந்து செங்கோட்டை எக்ஸ்ப்ரஸ்ஸில்


சேச்சிப் பாப்பாவைப் பூப் போல் அழைத்துப் போனார்கள்.
தன்னைப் போலவே அடக்கமாக இருக்கும் அங்கவஸ்திரத்தைப் பிடித்த கையோடு அப்பா ரயில்வே
ப்ளாட்ஃபார்மில் நிற்கும் காட்சி எனக்குத் தோன்றுகிறது..
அம்மாவுக்கு அப்போது பதினாறு வயது.

பின்குறிப்பு. ;
சென்னையில் அழகாக சுருள் சுருள் முடியாகப் பிறந்த ஆண் குழந்தை சரியாக ஆறாம் மாதம் தலையில்
கரப்பான் எனப்படும் தோல்வியாதி வந்து
குணப்படுத்த முடியாமல் இறைவனடி சேர்ந்தது ஒரு தீராத வருத்தம்.
அதை மறக்க ஒரு வருடம் ஆனது அந்த இளம் தம்பதிக்கு.
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மாற்றலாகி வந்துவிட்டார் அப்பா.

இரண்டு வருடங்கள் கழித்து, திருவேங்கடவல்லி என்கிற ,ஆண்டாள் ரேவதி பிறந்தாள்:)


ஃபிசியோ தெரபி 15 வருடங்களுக்கு முன்னால்.......

வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் கால் புராணம் +++++++++++++++++++++++ ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடி:( பிசியோ வலியோ தெரபி 199...