


ஆலமரம் என்று ஒரு கதை படித்த நினைவு.
அதை அப்போது பிரபலமான எழுத்தாளர்களில் ஒருவரான கிருஷ்ணாவோ
அல்லது அனுத்தமாஎனும் புனைபெயரில் எழுதும் பெண்மணி யோ அதைக் கவிதையாக வடித்து இருந்தார்.
ஒரு தொண்ணித்திநான்கு வயதான பாட்டிம்மா.
தானும் தன் கணவரும் சேர்ந்து வாழ்ந்த,
ஆண்ட, புத்திரச் செல்வங்கள் பெற்ற
ஒரு பெரிய வீட்டின் திண்ணைக்கு வந்துவிட்ட
நேரம்.
பாட்டி மனதார எடுத்த வானப்ரஸ்த வாழ்க்கை.
பாட்டியை விட்டு விடத்தான் வீட்டில் இருப்பவர்களுக்கு மனசில்லை.
அத்தனை அழகான குடும்பம்.
பாட்டி பெற்ற பிள்ளைக்கே எம்பதுக்குப்
பக்கம் வயதாகிறது.
அவருக்குப் பிள்ளைகள், மருமகள்கள்,
பேரன்கள்,பேத்திகள்.
இப்படி வயிறு பிழைக்கப் போனவர்களைத் தவிர பெரிய குடும்பம் அங்கே இயங்குகிறது.
பாட்டியின் வீட்டு முனையில் ஒரு ஈசன் கோவில்.
அதில் நடkகும் அத்தனை பூசை நேரங்களிலும் பாட்டி சுருங்கிய தன் சரீரத்தை எழுப்பிக் கைகளை
உயர்த்திக் கும்பிடுவாள்.
அவளுக்குத் தெருவில் போகிற வருகிற அத்தனை நபர்கள் குடும்ப விவகாரமும் தெரிந்து இருக்கும்.
தங்கள் நிலத்தில் களை எடுக்கும் நபர்,மருத்துவச்சி,
புரோகிதம் செய்பவர்
என்று அனைவரும் தோழர்கள்.
பாட்டியின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு பேத்தி.
பாட்டியைக் குளிப்பதற்காக உள்ளே அழைத்து(தூக்கி)ச்
செல்லும் ஒரு முரட்டுப் பேரன்.
இன்னும் குஞ்சுகுளுவான்களாக
ஒரு நான்கு பரம்பரையைக் கவனித்துப் பெருமை கொள்ளும் பாட்டிம்மா,
அவ்வப்போது தட்டிக் கேட்பதும் செய்வாள்.
அவளுடைய நினைவுகள் வலம் வரும் நேரங்களில் பாட்டியை யாரும் அணுக முடியாது.
வேறு உலகத்தில் உலாவிக் கொண்டிருப்ப்பாள்.
ஒரு நாள் காலையில் பாட்டியின் சரித்திரமும் பூர்த்தியாகிறது.
இதற்கு நேர்மாறாக இன்னொரு கதை 'யாருக்கு வேணும் இந்தப் பூசணி' என்ற
சிறுகதை.
திரு.தி.ஜானகிராமன் எழுதியது.
இதில் வரும் அம்மா தான் பெற்ற செல்வங்களிடமே அவதிப் படுவாள்.
சுவீகாரம் கொடுத்த மகன் உதவி செய்வான்.
கடைசியில் தான் இன்னும் ஏதாவது அவமானம் சம்பாதிக்க வேண்டுமோ என்ற நிலையில் ஒரு மாட்டுவண்டிப் பயணத்தில் உடலைத் துறப்பாள்.
இந்த இரண்டு கதைகளும் என்னை வெகுவாக ஆக்கிரமிக்கும்.
வயதான பிறகு ஏற்படும்
மன உளைச்சல் தொந்தரவுகளுக்கு யார் காரணம்?
சரியாகத் திட்டம் போடத் தெரியாத பெற்றோர்களா.
இல்லை சமுதாய அமைப்பு மாறியதாலா..?
இரண்டுமேதான்.
சமூகம் புதிதாக மாறவில்லை.
பாசமாக இருக்கும் பிள்ளைகளும்,
கவனிப்பு கொடுக்காத பெற்றோர்களும் அப்போதும் இருந்தார்கள்.
அதே போல பாசத்தயும் பணத்தையும் கொட்டிவிட்டு
பின்னால் இரண்டிற்குமே ஏங்கும்
பெற்றொர்களும் இருக்கிறார்கள்.
வாங்கி வந்த வரம் என்று சொல்வதை
நான் நம்புகிறேன்.
'நெஸ்ட் எக்' என்பது போல முதுமைக்காகப் பிறர் கையை எதிர்பாராமல்
சேர்த்துவைத்துவிடுதல் நலம்.
எங்கள் வீட்டுப் பாட்டிகளில் ஒருவர் இருந்த நிலபுலன்களில் இருந்து எல்லா சொத்துக்களையும் அழகாகப் பிரித்து,
தனக்கும் கொஞ்சம் வைத்துக் கொண்டு
88 வயது வரை பந்தங்களோடு
சுகமாக இருந்து விட்டுப் போனார்.
இன்னொருவர் அவர் காவேரித் தண்ணீர்
பாயும் ஊரைச் சேந்தவர்.
இன்னும் இருவர் தாமிரபரணி
ஊர்க்காரர்கள்.
ஐந்தாறு பிள்ளைகள் நான்கு மகள்கள்
என்று பெரிய சம்சாரம் பெற்றும்
தனக்கு என்று ஒன்றும் வைத்துக் கொள்ளாமல்
மன வருத்தமும் அடைந்து பின்
தெளிந்து மறைந்தனர்.
வாத்தியார் ஐய்யாவைத் தான் கேட்க வேண்டும்.
முதுமை வரமா,
கடனா என்று.
யோசித்து வைத்துப் புத்திசாலியாக இருக்க முயற்சி செய்யலாம்.
உடல் நலனைப் பேணி தகுந்த விதத்தில்
ஆரோக்கியமாக இருக்கலாம்.
சரியான பாட்டையில்
நிதானமாகப் போய் இறைவனிடம் சேர வேண்டும்.
முற்பகல் செய்யும் நல்முயற்சி பிற்பகலில் காக்கும் என்றே நம்புகிறேன்.
