- வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
பறக்கும் பாவை படம் வந்த போது குடும்பத்தோடு போய்
பார்த்தோம்.சிங்கத்துக்கு மிகப் பிடித்த பாடல்களில் ''கல்யாண நாள் பார்க்க சொல்லலாமாவும் ஒன்று.
இப்போது அந்த 1965 நவம்பர் மாதத்துக்குப் போவோம்.
கமலம்மாவுக்கும் என் தந்தைக்கும் இடையே போக்கு வரத்து அதிகரித்தது.
அவர்களுடைய எதிர்பார்ப்புகள் எங்களது 'எது முடியும்' என்ற
கடிதங்கள்.
நடுவில் அப்பாவின் கசின்+கமலம்மாவின் தம்பி வீட்டுக்கு
அப்பாவும் அம்மாவும் சொக்கி குளத்துக்குப்
போய்த் திருமணம் நடக்கப் போவதையும்
சொல்லிவிட்டு , சீர் விவரங்களைக் கேட்டு வந்தார்கள்.
அவர் நடுனிலை மனுஷி.
எங்க அப்பாவை ஆதி நாட்களிலிருந்து அறிந்த அன்பு மன்னி.
தன்
மச்சினரிடம் உங்களால் எது முடிகிறதோ அதைச் செய்யலாம்.
அவர்கள் உயரத்துக்கு உங்களால் போக முடியாது. அவர்கள் வைரத்தில் பேசுவார்கள் . நீங்கள் தங்கத்தோடு முடிக்கப் பாருங்கள் என்று புத்திமதி சொன்னார்.
இத்தனைக்கும் என் மாமியார் தங்கமனுஷி. ஆனாலும் அவர் இருக்குமிடம் ஜட்ஜுகள் நடமாடும் வீடு:) அவர்களுக்கு
தங்கள் பேரனுக்கு வருபவள் கொண்டு வரும் சீர் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டிருந்தனர்.
நடுவில் தூதாக ஒரு அம்மாமி, ஒரு அத்திம்பேர்:)
அம்மா அப்பாவுக்கு உண்மையில் கவலை தலைக்கேறியது.
எப்படி சமாளிக்கப் போகிறோம்.? எப்படிக் கடக்கப் போகிறோம்
என்று சித்தப்பா, என் மாமாக்கள் இவர்களுடன்
ஆலோசனைகள் போய் வந்தன.
இத்தனை பின்னணிகள் போய்க் கொண்டிருக்கும் போது
என் நினைவுகள் புதுக்கோட்டையைச் சுற்றி வந்தன.
இதற்குப் பதில் சொல்வது போல ஒரு செய்தித்தாள்
வீடு தேடி வந்தது.
புதுக்கோட்டை டி வி எஸ் செய்திகள் அடங்கிய ஒரு மாத இதழ்.
அதன் நிர்வாகி புதுக்கோட்டை அஸ்ஸிஸ்டண்ட் மானேஜர் சமயத்தில் செய்த ரத்த தானம் பற்றி சிலாகித்து எழுதி
அவர் புகைப்படமும் போட்டிருந்தார்.
அந்தப் படத்தில் இருந்த புன்னகை முகம்
இன்னும் என் கண்ணில் .இந்தப் பத்திரிக்கை படித்ததும் அப்பாவின் போக்கே மாறி விட்டது.
எங்க மாப்பிள்ளை என்று அலுவலகம் முழுவதும் காண்பித்து மகிழ்ந்தார்.
1964: ~₹6.32 per gram (₹63.25 per 10g):)))))))))))))))))))))))))))))) தங்கம் விற்ற விலை. ஆபரணத் தங்கம் சற்றே கூட இருக்கலாம்.
கையிருப்பு தங்கம், வாங்கிய சங்கிலி, காசுமாலை
என்று வளையல்கள் என்று எல்லாம் சேர்ந்து
30 சவரன் இருந்திருக்கும். பின் பித்தளை வெங்கலப்
பாத்திரங்கள். வெள்ளி வகையறா ஒரு 16 உருப்படி.
எவர்சில்வர் எனும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் வாங்கி
ரேவதி நரசிம்ஹன் என்று பொறிக்கப்பட்டது.
சிலவற்றில் என்.ரேவதி நரசிம்ஹன் என்று தன் இனிஷியலையும் பாதுகாப்பாகச் சேர்ப்பார் அந்த வினோத மனிதர்.
முஹூர்த்த நாள் குறிக்கப் பட்டு பத்திரிக்கை
அச்சிடப்பட்டது.
தை பிறந்த பிறகு ஏற்பாடுகள் துரிதப்பட்டன.
ஆஜிப்பாட்டிக்கு(என்) வைரத்தோடுகள் செய்யவும்
பணம் அனுப்பினார். வெறும் 2000 ரூபாய் ஒன்றரை காரட்
வைரம்.:)
ஜனவரி மாதம் சென்னைப் பயணம் நிச்சயிக்கப் பட்டது. நானும்
அம்மாவும் முதலில் சென்று புடவைகள் வாங்குவதாகவும், திருமணத்துக்கு ஒரு வாரம் முன்பு
அப்பாவும் தம்பிகளும் கிளம்பி வருவதாகவும் தீர்மானம்.
அம்மாவின் தம்பிகள் திருமணத்தின் எல்லா ஏற்பாடுகளிலும் பொறுப்பு எடுத்துக் கொண்டார்கள்.
நடிகை சாவித்திரியின் எஸ்ஜி எஸ் சபா மூன்று
நாட்களுக்கு ரிசர்வ் செய்தார்கள்.
அப்போது 2500 ரூபாய் என்று நினைக்கிறேன்.
திருமணத்துக்கு மொத்தமே 12000 ரூ செலவு என்று நினைக்கிறேன்.
நகைகள் புடவைகள் தனி.
இதில் டாக்சி செலவு , ஃபோட்டோ , பந்தல் அலங்காரம்
மாமாக்கள் செலவு.
பட்சணம் முழுவதும் பாட்டி வீட்டில் செய்யப் பட்டது.
கை முறுக்கு ரேவதி,நரசிம்ஹன் என்று பெயர் பொறித்து
பெரிதாகச் செய்த நினைவு. வெகு நாட்களுக்கு என் மாமியார் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
ஒன்று கூட என் கையில் சிக்கவில்லை.
அப்போது அதைப் பற்றி ஆதங்கப் படவும் இல்லை.
தொடரும் நினைவுகள்.
No comments:
Post a Comment