வடைப் பிரியர்களால் நிறைந்தது இந்த உலகம்.
எலியிலிருந்து ஏந்தி பவன் வரை
மடைப் பள்ளியிலிருந்து மரினா கரைவரை எங்கும் வடை மணம்.
என் மாமா எனக்கெழுதிய கடிதத்தில் மாமி செய்த கீரைவடையை வெகுவாகச் சிலாகித்து
என்னை இன்ஸ்டண்ட் கீரை வடை மோகத்தில் ஆழ்த்திவிட்டார்.
கூடவே நீ தில்லி வந்தால் வடை கிடைக்கும் என்று சவால் வேற.
இது ஒரு வருடக் கல்லூரி வாழ்க்கை முடிந்து ,மதுரையில்
ஃபெமினா,பொம்மை,பழைய தொடர்கதைகள், ரேடியோ சிலோன்
என்று நேரம் கழிந்த காலம்.
இந்தக் கீரைவடை படித்ததும் அம்மாவிடம் சொன்னேன். மாவில் கீரையை அலசிப் போட்டு
வறுத்தெடுத்தால் போதும் என்பதோடு நிறுத்திக் கொண்டார்.
அம்மாவுக்கு என் சமையலறை வேகம் விவேகம் இரண்டுமே தெரியும்.:)
ஒரு நாள் செய்கிறேன் என்றார்.
அதற்குள் வாழ்க்கை திருமணத்தைப் பார்த்துத் திரும்பிவிட்டது.
தில்லியிலிருந்து வந்திருந்த மாமியிடம் கேட்டேன். கீரை வடை சாப்பிடலாமலியே ரயில் ஏறுகிறேன் என்று சொல்லப் போய்
மாமி அழுதுவிட்டார்.:(((((((
இதை நான் எதிர்பார்க்கவில்லை. ''அச்சோ மன்னி அந்தவடையை நான் போகுமிடத்தில் எப்படியாவது பழகிக் கொள்கிறேன் '' என்று சொல்லி சமாதானப் படுத்தினேன்.
கீரைவடையை மறந்தும் போனேன்.
பிறகு பத்துவருட தனிக்குடித்தனம் முடிந்து மாமியார் வீட்டுக்கும் வந்துவிட்டோம்.
கீரை வடை மட்டும் அங்கிருந்த சமையற்காரர் செய்யவில்லை.
வேறு என்னவெல்லாமோ டிபன் காஞ்சீவரம் இட்லி, அழகர் கோவில் தோசை,
சேம்பு இலை அடை என்றெல்லாம் வந்தாலும் எனக்கு ருசிக்கவில்லை.
கொக்குக்கு ஒண்ணே மதி..
அப்பொழுது கிண்டி அருகே (சின்னமலை) தனி பணிமனையும், லேத் பட்டறையும் வைத்து நடத்தி வந்தார் சிங்கம்.
மதியம் சாப்பாடு வீட்டில் தான்.
அப்போது ஒரு நாள் வாசனையாகப் பொட்டலம் ஒன்று கொண்டுவந்தார். ஆஹா மிளகாய் பஜ்ஜி
என்று பிரித்தேன். அங்க இருந்ததோ வண்ண மயமான பச்சைப் பசெல் என்ற கீரைவடை.
மசாலா வடைதானேமா என்று அவரிடம் கேட்டதற்கு, ''கீரை சேர்த்திருக்கான் மா. அதுவும் ஸ்பினச்''
என்றதும் ஆ வென வாய் பிளந்தேன்.
கிண்டி ராஜ் பவன் அருகே ராஜ்பவன் என்றே ஹோட்டல் ஒன்று இருக்கும். அங்கு போனபோது, பார்த்ததைக்
குடும்பத்துக்கும் கொண்டு வந்துவிட்டது சிங்கம்.
என் வடை மோகம் பற்றி அவருக்குத் தெரியாது.ஏதோ நல்ல அலைவரிசை இருவருக்கும் இருந்ததால் அவர் வழியாக எனக்குக் கீரைவடை கிடைத்தது.
பிறகு கேட்பானேன். தினசரி வடை பஜ்ஜியோடு சாப்பாடு.
இதுவரை நான் கீரைவடை செய்யவில்லை. எப்போதோ பதிந்தது:)


