Blog Archive

Friday, September 28, 2007

தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே...

கண்ணன் வந்து பிறந்து ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது.
இப்போது அவன் பற்றின விசாரம் எங்கே வந்தது என்று யோசிக்கலாம்.
நண்பர்களுடன், நான் கேட்டதைப் பகிர்ந்து கொள்ளத்தான்.

எல்லோருக்கும் வேளுக்குடி திரு. கிருஷ்ணன் பொழுதுவிடிந்து பொதிகையில் வந்து கண்ணன் அமுது வழங்கும் நிகழ்ச்சி தெரிந்திருக்கும்
.
அந்த வார்த்தைகள் மனதை நெகிழ வைக்கின்றன.
அதில் ஒரு பாகமாகத் தேவகியின் வாழ்வைச் சொல்கிறார்.
தேவகியும் வசுதேவரும் திருமாலை வேண்டித்தான் ,அவர் அவர்களுக்குக் குழந்தையாக
அவதரிக்கிறார்.

தேவகி,
கண்ணனையும் பலராமனையும் கருத்தரித்தவள்.
கண்ணனைப் பெற்றவள்.
கம்சனுக்குத் தங்கை. திருமணத்தேரில் ஏறிப் புக்ககம் கிளம்பும்போது அசரீரி ஒலிக்கிறது
''கம்சா, உன் தங்கையின் எட்டாவது கருவில் தோன்றும் சிசுவின் கைகளில் உன் மரணம்.''
என்ற சப்தம் கேட்டதும், வாளை உருவுகிறான், தன் சகோதரியைக் கொல்ல.
வசுதேவர் பதட்டமில்லாமல் அவனை சம்யோசிதமாகக் கையாளுகிறார்.
கம்சா, இப்போது தேவகியால் உனக்கு ஆபத்தில்லை, அவளது குழந்தை அதுவும் எட்டாவது மகவினால் தானே உனக்கு அழிவு என்று தெரிகிறது. இப்போது இவளைக் கொன்ற பாபம் உனக்கு வேண்டாம்,பிறக்கும் குழந்தைகளை உன்னிடம் கொடுக்கிறேன் '' என்கிறார்..
சமாதானம் அடையும் கம்சன் கையில் ஆறு சிசுக்களும் மறைகின்றன. ஏழாவது
கரு உருவாகிறது.
திருமால் மனக்குறிப்பின்படி , யோக மாயா அந்தக் கருவை தேவகியினிடமிருந்து பிரித்து
கோகுலத்தில் ,வசுதேவரின் இன்னொரு மனைவியான ரோஹிணியின் கருவில் பலராமனாகச் சேர்த்துவிடுகிறாள்.அப்போதே அந்த யுகத்திலேயே
சங்கர்ஷனணாகப் பலராமன் உருவாகிறார்.

இங்கே ஏழாவது கரு கலைந்ததாகத் தேவகி உணர்ந்து சொல்கிறாள். அடுத்ததாக
எட்டாவது கருவும் உருப்பெற்றுத் தேவகி பொலிவுடன் இருக்கிறாள்.
இப்போதும் யோகமாயாவுக்குத் திருமாலிடமிருந்து செய்தி வருகிறது,கோகுலத்தில் யமுனை நதிக்கரையில் நந்த கோபன் அரண்மனையில் அவன் யசோதையின் வயிற்றில் பெண்ணாகப் பிறக்கவும்,
வசுதேவர் கண்ணனைக் கொண்டுவருகையில்
அவருடன் சென்று கம்சன் கைகளை அடையவும் உத்தரவாகிறது.
கண்ணனும்
அவதரிக்கிறான்,ஆவணி ரோகிணி தேய்பிறை அஷடமியில் சங்கம்,சக்கரத்தோடு,நான்கு திருக்கைகளோடு,பீதாம்பரதாரியாய்ச்
சிறையில் பிறக்கிறான்.
இவனுக்கும் ராமனுக்கும்தான் என்ன வித்தியாசம்.
ராமன் அரசன் தசரதச் சக்கிரவர்த்திக்கு மூத்த புதல்வனாய்,காத்திருந்து பெற்ற வரமாய்ப் பகலில் சூரியவம்சம் செழிக்கத் தோன்றினான். அரச மரியாதைகள் ஆர்ப்பாட்டாங்கள், அன்புமழை அவனுக்கு.
இங்கே நம் கண்ணனோ நட்ட நடு இரவில்,கட்டுண்ட தாய்தந்தையருக்கு, சிறையில் பிறக்கிறான். அதுவும் கண்கட்டும் மாயனாக, ஒளிவெள்ளத்தில் அவர்களை மூழ்கவைத்து, அவர்களைக் கட்டியிருந்த சங்கிலிகள் அறுபட,
பிறப்பறுக்கும் பெருமானாக, துன்பம் களையும் குழந்தையாக,
மாயை அகற்றும் மாயாவியாக
வருகிறான்.
வசுதெவருக்குக் குழந்தையை எப்படியாவது யமுனையின் அக்கரைக்கு நந்தகோபன் அரண்மனைக்குக் கொண்டு போய்விடத் துடிப்பு.
கம்சன் கைகளிலிருந்து காப்பாற்றவேண்டுமே.
தேவகிக்கோ, குழந்தையின் அருகாமை ஆறுதலை விட மனதில்லை.
அழுகிறாள்.
குழந்தையைக் கையிலேந்தும் வசுதேவரோடு பின் நடக்கிறாள்.
இந்தக் குழந்தையாவது தன்னிடம் நிலைக்காதா,மீண்டும் எப்போது பார்ப்போம், இவனை?
பெற்றோமே,
அவன் லீலைகளை அனுபவிக்க முடியாதே.
என்ற மாயைச் சட்டென்று அவளை விட்டு வீலகக் கண்ணன் அருள் அவளைக் காக்கிறது
சுய நிலைக்கு வருகிறாள்.
கண்ணன் கடவுள். அவன் எங்கிருந்தாலும் நலம் பெறுவான்.
எல்லோரையும் காப்பான்.
காப்பதற்காகவே அவன் கோகுலம் ஏக வேண்டும் என்று உண்மை நிலை புரிந்து
சிறைக்குள் அமைதியாகிறாள்.
வசுதேவர் நடக்கக் ,குழந்தை அவர் தலையில் ஒரு கூடையில் ,தளிர்க்கால்கள் வெளியே தெரிய,அடர் மழை பொழிய, ஆதிசேஷன் குடை பிடிக்க,
யமுனை அவன் குட்டிப்பாதங்களை வருடி நம்ஸ்கரித்து வசுதேவருக்கு வழிவிட
வசுதேவரும் நந்தன் அரண்மனையை அடைகிறார்.
அங்கு பிரசவித்த மயக்கத்தில் இருக்கும் யசோதையின் அருகில் குதுகலமாகக் கிடக்கிறாள்
யோகமாயா சின்னக் குழந்தையாக.
கண்ணனை முத்தமிட்டு யசோதையின் அருகில் கிடத்தி, யோக மாயாவைக் கையில் தழுவி ,மீண்டும் கம்சன் அரண்மனை வந்ததும் விழிக்கின்றனர் காவலாளிகள்.
பெண் குழந்தை என்று தெரிந்ததும் தயங்குகிறானாம் கம்சன்.
ஒரு நிமிடம்தான். அடுத்த கணமே
வாளை உயர்த்திக் குழந்தையை மறுகையில் பிடிக்கிறான்.
அவள் மாயாதானே.!!!! நழுவுகிறாள் வானத்தில் எட்டாத தூரத்திலிருந்து கம்சனை விளிக்கிறாள்.
''அறிவு குறைந்த கம்சனே, உன்னை அழிக்கப் போகிறவன் மறைந்து வளருகிறான் ''
என்று கலகல சிரிப்புடன் மறைகிறாள்.

இந்தக் கண்ணன் சரிதை,அவன் பிறந்த வண்ணம்... சொன்னால் படித்தால் நமது முற்பகல் வினைகளும்
அழியும், இனிப் பிணைக்க முடியாத தூரத்துக்கு நம்மை அழைத்துப் போய்விடும், அஞ்ஞானம்,
நாம்தான் எல்லாவற்றையும் நடத்திச் செல்லுகிறோம் என்ற அறியாமை இருள் விலகும் என்று, கீதை உரை வழங்கும் ஸ்ரீ வேளுக்குடி உரைத்தார்.
பின்குறிப்பு.
அவர் சொன்ன வண்ணமே கொடுக்க முயற்சித்தும் ,,முடியவில்லை.சில பல குறைகளை மன்னிக்க வேண்டும்.
இது இன்று 55ஆவது பிறந்தநாள் கொண்டாடியிருக்கவேண்டிய என் இளைய தம்பிக்குச் சமர்ப்பிக்கிறேன்.
இந்தப் பதிவை எழுத மௌலியாகிய மதுரையம்பதி ஒரு காரணம்.
அவர்தான் பிணைக்கும் சங்கிலிகள் பற்றி வினா எழுப்பி இருந்தார்.
நன்றி மௌலி.
Friday, September 21, 2007

வார்த்தைகள் திரும்பும்
தட தடவென்று வாயில் கேட் சத்தமிடுவதைக் கேட்டு அவசரமாக எழுந்த கருணா, கணவனின் தூக்கம் கலையாமல் வெளியில் வந்து , ஜன்னல் வழியே பார்த்தபோது


அதிர்ச்சியாக இருந்தது.


ஜயம்மாதான் நின்று கொண்டிருந்தார்.


காலை இன்னும் வெளிச்சம் போடவில்லை. கடிகாரம் 5.30


என்று காட்டியது.
என்ன அவஸ்தையோ தெரியவில்லையே என்று நினைத்தபடி வாசலுக்கு விரைந்தாள்.


இந்த வாரத்தில் இது இரண்டாவது தடவையாக பக்கத்துவீட்டு அம்மா வருகிறார்.
தயங்கி நின்றவரை உள்ளே அழைத்தவள்


அவரின் முகத்தில் இருந்த கண்ணீர்த்தடங்களைப்


பார்த்து நடந்ததை ஒருவிதமாக ஊகித்து,


'மறுபடியுமா? 'என்றாள்.'
'ஆமாம்மா. ராத்திரி சாப்பாடு கிடைக்கலை.


சக்கரை அதிகமாயிடுச்சி போல. மயக்கமா வரதுப்பா'
அவசரமாக உள்ளே சென்ற காந்தா,


இரவு உணவில் மீதி இருந்ததைத் தட்டில்


கொண்டுவந்து ஜயம்மாவைச்


சாப்பிட வைத்தாள்.
இப்படிக்கூட ஒரு பெண் இருப்பாளா?
மனம் கோணாமல் வீட்டு வேலைகள் அத்தனையும் பார்த்து இந்த அம்மா சாப்பிடும் நேரம் சொல்லாலயே வாட்டுவது இவர்களுக்குத் தெரிந்த விஷயமே. பிரச்சினை புரியாமல் இவர்கள் விலகி இருப்பார்கள். அந்ததாம்மாவுக்கு ஆதரவாக அவ்வப்போது ஆறுதல்வார்த்தைகள் சொல்லியோ,
மருந்து வாங்கிக் கொடுப்பதோ செய்வார்கள்.


வயதான மூதாட்டியை இப்படியா வதைப்பது.?
உடை மாற்றி,கணவனை எழுப்பி விஷயத்தைச் சொல்லிவிட்டுப் பறந்தாள் தன்அலுவலகத்துக்கு.

வீட்டில் இருந்து தன் அலுவலக வேலை செய்யும்
கணேஷ்,
தர்மசங்கடமாக உணர்ந்தான்.
அடுத்தாற்போல் விசாரித்து வரப் போகும்
வேணுவை நினைத்து, வாயிலை நன்றாகத் திறந்து
வைத்தான்.

சுத்தம் செய்து வேலைகளை முடித்துத் தன் கணினியை எடுத்து வைத்த போது, வந்தான் வேணு.

''வேற வேலையே இல்லியா உங்களுக்கு,நல்லா இருக்கிற கிழவி மனசை இப்படிக் கெடுத்து வச்சிருக்கீங்களே??

ஆனா ஊன்னா உங்க வீட்டுக்கு வந்துடுது."

வா அத்தை, வீட்டுக்குப் போலாம்"

என்று சினத்தோடு வரும் வேணுவைப் பார்த்து மிரளும் ஜயம்மாவை நோக்கி இரக்கத்தோடு,''அம்மா வேணும்னா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரட்டுமே, நானே கொண்டு விடறேன்' என்றான் கணேஷ்.

ஏன் கிழவி கழுத்தில ரெட்டைவடம் உங்களை உறுத்துதோ'
என்றபடி தள்ளாடும் மாமியாரை அழைத்துப் போய் விட்டான் வேணு.

அதற்குமேல் யோசிக்கக் கூட நேரமில்லை கணேஷுக்கு.


என்ன சங்கடம்ப்பா. இருக்கவும் விட மாட்டேங்கறாங்க.

போகவும் விட மாட்டேங்கறாங்க.
நமக்கு வயசானா என்ன பாடோ தெரியலையே சாமி!!
என்று நினைத்தபடி,
அன்று இரவு மனைவியிடம் நடந்ததை விவரிக்கையில்,அவளும் வருந்தினாள்.
''
எழுபது வயசுக் கிழவிக்கு ஏன் இத்தனை மனக் கஷ்டம்.
வச்சிருந்த பணத்தையும் கொடுத்துட்டு உடம்புல வலுவும் இல்லாம
போக இடம் இல்லாத அனாதையா ஆகிட்டாங்களே'
நாளைக்கு இதற்கு ஏதாவது வழி செய்யணும். நாம பார்த்துகிட்டு சும்மா இருக்ககு கூடாது
என்று முடிவெடுத்து இருவரும் உறங்கினர்,.
காலையில் மறுபடி அமளி. கூச்சல்,அழுகை.
ஜயம்மாவை எதிர்பார்த்து இருவரும் வாசலை பார்த்தார்கள்.
அவரும் வந்தார் கையில் பெட்டியோடு.
இவர்களின் திகைப்பைப் பார்த்துவிட்டு, '' நான் முதியோர் இல்லத்துக்குப் போறேன்பா.
இன்னும் ஒரு சந்தர்ப்பம் அவங்களுக்குக் கொடுக்கணும்னு நினைச்சேன்,
இனிமே தாங்க முடியாது. ஆண்டவன் நல்ல வழி விடட்டும்,அவங்களைக் காப்பாத்தட்டும்''
என்ற வண்ணம் கீழே உட்கார்ந்த கிழவியை இருவரும் பார்க்க அவர் மேலே தொடர்ந்தார்.
''எனக்குத் தெம்பு இன்னும் இருக்கும்மா. சர்க்கரை ஒண்ணைக் கட்டுப் படித்திட்டேன்னால் உயிர் இருக்கும் வரை
உருப்படியா ஏதாவது செய்து நாளைக் கழித்துவிடுவேன்.
என்ன,, நான் படுகிற கஷ்டத்தை மகள் பட வேணாமேனு பொறுத்தேன். விதி வேற நினைத்துவிட்டது''
என்றாள்.
ஜயம்மா சொல்வது புரியாமல் இருவரும் அவளைப் பார்க்க, அந்த அம்மாவே
''பழைய கதைப்பா.
நான் என் மாமியாரை மனசு நோகடிச்சேன்.எனக்காவது இன்னுமொரு மக இருக்கு ஆத்தாமை சொல்லிக்க, எங்க மாமியாருக்கு அதுவும் கிடையாது.எங்க வீட்டுக்காரர் ஒரே மகன்.
அவரு என் பக்கமும் பேச முடியாம,அவங்க அம்மாவோடையும் சொல்லாம,
மருகிப் போயிட்டார்.
நான் எங்க அவரைப் பேச விட்டேன். ஏம்பானு மாமி கூப்பிட முன்னாடியே
நானு போயி நின்னுடுவேன்,ஆதரவா எங்கியாவது ஏதாவது சொல்லிப்பிடுவாரோனு ஒரு பொறாமை....
இருந்துச்சு,

உடம்புக்கு நோவுனு தெரிஞ்சும் சொல்லாமலே சகிச்சுக்கிட்டு
நெஞ்சு வலி மிஞ்சிப் போனதும் மயக்கம் போட்டுடுச்சு.
ஆசுபத்திரிக்கு அழைச்சுட்டுப் போனாரு
எங்க வீட்டுக்காரரு, பலன் இல்லை. கொடுத்த வைத்த உயிரு, ஏழு நாள்ள போய்ச் சேர்ந்துடுச்சு.
அத்தை அனுப்பிட்டு வீட்டுக்கு வந்ததிலிருந்து வாயை மூடினவருதான் எங்க வீட்டுக்காரரு,ஆத்தாவை நினைச்சே நாலு வருஷத்தில போயிட்டாரு.
பணத்துக்குக் குறைவில்ல ரெண்டு மகளையும் கண்ணா வளர்த்தேன்.
அதுங்க மனசில என்ன குரோதம் ஏறிக்கிச்சோ தெரியலை
ரெண்டுமா என்னை சொல்லாலேயெ அடிக்குதுங்க.
ஏண்டி இப்படி செய்யறீங்கனு கேட்டா, அப்பத்தாவைக் கொஞ்சமா நீ வதச்சே,
உன்னை வச்சிருக்கிறதே பாவம்னு சொல்லுதுங்க.
சரி எனக்குத்தான் இப்படி ஒரு நோயும்,சொல்லும் வந்திட்டதே இதுங்களுக்காவது உழைச்சுப்
புண்ணியம் தேடுவோம், பாவத்தைக் கழிப்போம்னு நினைச்சு இருந்தேன்.
ஆனா சாமி என் பாபத்தை இவங்க தலையிலேயும் ஏத்திட்டாரு, மனசு கெட்டு அலையுதுங்க,.
இதுங்களுக்குப்
புள்ளையும் பொறக்கலை..என்ன செய்யலாம்?
நாந்தான் விலகணும்.
.மனசு கோணாமத்தான் நான் போறேன் அம்மா. இதுங்களை
நானும் சபிக்க வேணாம்.
இந்தத் தலமுறையோட பாபம் ஒழியட்டும்,
என்னை திருவான்மியூர்ல முதியோரில்லத்தில கொண்டு போய் விட்டுருப்பா. அங்கதான் அறுபத்து ஐந்து
வயசுக்கு மேல சேர்த்துக்கிறாங்களாமே, இங்க செய்யுற வேலையை அங்க செய்யறேன்,
கையில இருக்கிற சங்கிலியையும் கொடுத்துடறேன்.
நோய் வருத்தாம நான் உயிரை விட மாட்டேன்,ஏன்னா எனக்கு உண்டான் தண்டனைதான் நோயா வந்திருக்கு. சந்தோஷமா ஏத்துக்கறேன்... .
இன்னோரு ஜன்மம் எடுத்துக் கேடு நினைக்க எனக்கு ஆசையில்லை.
அனுபவிச்சிட்டே போறேன்''
என்று கிளம்பத் தயார் ஆனார் ஜயம்மா.
இதுவும் நடந்ததுதான்

Monday, September 17, 2007

குட்டிப் பூனை, பெரிய எலி


எங்க வீட்டில எலியார் மழை நாள் ஒன்றில் குடி வந்து இருக்கிறார்.இது ஒரு மே மாத அக்னி நட்சத்திர மழைக்காலம் வருமே(?:))அப்போது...தான் இவர் உள்ள வந்து இருக்கிறார்.


அவர் வந்தது தெரிந்து அதுவரை வெளியில் மிடுக்கு நடைபோட்ட பூனையார்,இப்போது வீட்டுக்குள் சகஜமாக உலவ ஆரம்பித்து இருக்கிறார்.மேலே .இருக்கிற படப்பூனை மாதிரி இல்லை. இது கறுப்புக்கும் சற்றே குறைந்த ,வெள்ளை வரிகள் போட்டுக்கொண்ட சாம்பல் பூனை.


சரியான சம்பல் பூனை கூட:))வந்தது முதல் ஒவ்வொரு மின் சாதனத்தையும்
சரி செய்துவிட்டுத் தான் இயக்க வேண்டி இருக்கிறது.

எ னக்கும் மின்சாரத்துக்கும் அத்தனை ஒத்துப் போகாது.எல்லா வசதிகளும் கொடுக்கும் பஜாஜ்,விஜய்,இன்னும் எத்தனையோ விளம்பரங்கள்


ஆதிகாலத்திலிருந்தே வருவது வழக்கம்.


பத்திரிகையில் பார்க்கும்போது கூட, கொஞ்சம் தள்ளி வைத்தே பார்ப்பேன்:)) தொட்டால் ஷாக் அடிக்குமோ என்கிற பயம்தான்.மேலே மொட்டை மாடியில் தேங்கின தண்ணீர் கசிந்து
கீழே உள்ள சாப்பாட்டு அறை விளக்கைச் சுற்றிச் சொட்ட ஆரம்பித்தது. இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் இவ்வளவு

மோசமாக வீட்டை வைத்து இருக்கிறீர்களா என்று கேட்காதீர்கள் .


அது அப்படித்தான்.
இப்போ பூனை எலி சமாச்சாரத்துக்கு வரலாம்.
நாங்க வந்து இறங்கி அடுத்த நாள் மழை வந்தது.
நம்ம வனாந்திரம் போயி வருஷக்கணக்கு ஆச்சா.??
அதில வீட்டு விஷயங்கள் மறந்து போச்சு.

அதிலையும்இந்த மழை சுகமான மழை.சத்தமில்லாத அழகான மழை... அதனால் ரசிப்பதில் இருந்து விட்டேன்.

திடீரென்று பூனை சீறும் சத்தம், எலி சார் தாவி அப்பள டப்பா உருண்டூ கீழே விழுந்து கடகட..

சாம்பனும் செல்லியும்(அவங்க பேரு) சண்டையில் சுற்றி வர,(அந்தத் தண்ணீரசொட்டி இருந்த இடத்தை மட்டும்


விட்டார்கள்.)


இவர்களை விரட்ட சிங்கம், போட்ட சத்தம் இன்னும் பெரிதாக இருந்தது.:)அதுவரை ஜாக்கிரதையாக இருந்த சாம்பன் திடீரென ஒரே தாவலில் கிறீச்னு சத்தம் போட்டு ஓடீ விட்டான்.


என்னடா இது திகில் சண்டையா இருக்கேனு, விளக்கை அணைக்க வந்த போது ச்விட்ச் போர்ட் கர்ர் என்று கர்ணகடூரமாக கத்தியது.


ஆளைவிடு!! இது ஏதோ மின் இணைப்பு வேலை. தப்பு கனெக்ஷன், ஷார்ட் சர்க்யூட் எல்லாம் புரிந்து,

வெளியில் ,மழையில் வழுக்காமல், போயி மெயின் போர்ட் (தடித்த) ஸ்விட்சை அணைத்தோம்.


பிறகு எப்போதும் செய்வது போல குழல்விளக்கைக் கழட்டி வைத்துவிட்டு,ட்ரிப் ஸ்விட்ச் ஆன் செய்து,

எலெக்டீஷியனைக் கூப்பிட்டு சரி செய்தாச்சு.
அதிலிருந்து, இப்ப இன்னிக்கு கம்யூட்டர் (எலி) மௌஸைக் கூட நான் திட்டுவதில்லை. அது மாட்டுக்கு திரை பூராவும் பயணம் செய்கிறது. போனால் போகட்டும் என்று விட்டு விட்டேன்:)))Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Saturday, September 15, 2007

வெவ்வினை தீர்ப்பான் விநாயகன்

சென்னை வந்ததில் விநாயக சதுர்த்தியை ரசிக்க அனுபவிக்க முடிந்தது. வேறு ஊராக இருந்தால் இன்னுமொரு பொழுதாகக் கழிந்து இருக்கும்.

வந்ததும் வீட்டுக்குள் ஓடிய பல்லி,கரப்பான் பூச்சி அதுகளொடு ஒண்டுக் குடித்தனம் இருந்த எலியார் எல்லோரையும் நோட்டீஸ் கொடுத்து வேறு இடத்துக்குப் போகச் சொன்னோம்.:))


என்ன இருந்தாலும் அவர்கள் சௌகரியங்கள் வேற,
நம்ம வாழ்க்கை முறை வேற இல்லையா?

தூசி நிறைய என்று சொல்ல முடியாது.
ஒரு வாளித் தண்ணீரில் இரு பாதங்களையும் கழுவி விடலாம்.

தரையில் இருந்த ஜீவ ராசிகளைவிட மேலே தொங்கிய சிலந்தி சார் எல்லாம் அவ்வளவு பயமுறுத்தவில்லை.
வந்த அன்று இரவே சுனாமி பயம் சொன்னார்கள். அதுவும்
கொஞ்ச நேரத்தில் வாபஸ் ஆகிவிட்டது.
என்னடா நாம வந்த நேரம்னு யோசிப்பதற்குள்
நிலைமை மாறியதால் நல்ல நேரமே என்று நினைத்துக் கொண்டேன்.

வீட்டில் இரு பூட்டிய வாடை போக நான்கு நாட்கள் ஆகி இருக்கு.
பின்ன போகும் பொது வைத்துவிட்டுப் போன அம்பிகா
அப்பளம், இரண்டு வெங்காயம் இதெல்லாம்
வாசமிகு மலர்ச்சோலையாக மாற்றி இருக்கிறது.
எலி மட்டுமா வரும்!!
அவங்களைத் தேடி பூனையாரும் நடமமடுகிறார்.
ஏதோ நம்ம ஜிகே உறவாக இருக்கப் போகிறதே என்று
அதன் மேல் தண்ணியைக் கொட்டாமல் இருந்தேன்P:))
அப்படி முறைக்கிறது அந்த சாம்பல் கலர் பூனை.
வசதியா மாடி ஜன்ன்ல் வழியாக உள்ளே வந்து
கூடத்தில் இருக்கும் சோஃபாவில் ஐய்யா தூங்கி இருக்கார்.

அன்பே வா அருகிலேஏஏனு கனகா பாடாத குறையா
ஏகப்பட்ட மாடி வளைவுகள் இல்லாமல் சின்னதாக அளவாக வீடு கட்டிக் கொடுத்த பெரியவர்களைச் சொல்லணும்.
இன்னும் மாடிக்குச் சுத்தம் செய்யப் போக வில்லை. என்னென்ன ஆச்சரியம் காத்து இருக்கோ.

தாய் மண்ணே வணக்கம்!!


Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Tuesday, September 11, 2007

நம்மூர் மக்கள் வெளிநாட்டில்

ஊரை விட்டு வெளியில் வந்து உழைக்கும் எல்லோருக்கும் இந்தப் பதிவைச் சமர்ப்பிகிறேன்.

இது ஒன்றும் சுலபமான வேலை இல்லை.
நம் சுயத்தைக் கொஞ்சமாவது விட்டுக் கொடுத்துத் தான் வெளிநாடு வர வேண்டி இருக்கிறது.

யாரும் சும்மா இருப்பதற்குப் பணம் கொடுக்கப் போவதில்லை. 500டிர்ஹமோ
5000 டாலரோ, இல்லை 10000 fரான்க்ஸோ ஏதாக இருந்தாலும் ஒவ்வொரு துளி நேரத்துக்கும் உழைத்தால் தான் பிழைக்க முடியும்.

நேற்று ஒரு கடைசி நேர வேலையாக வெய்யிலில் வெளியே போக நேர்ந்தது.
இங்குதான் டாக்ஸி காரர்கள் கொஞ்சம் கலர் பார்த்துத் தான் நிறுத்துகிறார்கள். அவர்களுக்கு மேற்கத்தியர்களால் லாபமும் நிறைய.
அவர்களைக் குறை சொல்ல முடியாது.
எங்க்ளுக்காக வண்டியை நிறுத்திய இளைஞன்
பக்கத்து ஊர்க்காரன்.

நீங்கள் வெய்யிலில் நிற்பதைப் பார்த்து நிறுத்தினேன்.
என்று சொல்லிவிட்டு சொந்தக் கதை சோகக்கதையைச் சொல்லி முடித்தார்.
ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பிடத் தான் தனக்கு நேரம் இருப்பதாகவும் மற்ற நேரம் அலைவதற்கே சரியாக இருப்பதாகவும் சொன்னார்.

இவர் தனி ஆளில்லை. இது போல நம் அண்டை மானிலக்காரர்களும் ஒரு தமிழ்க்காரரையும் பார்த்தொம்.
அவர்களாவது குளிரூட்டப்பட்ட வண்டியில் பயணம் செய்து , காவலுடன் மல்லுக்கட்டி, வண்டி சொந்தக்காரருக்குப் பணம் கட்டிப்
பிழைக்கிறார்கள்.
மற்றொரு நாள் இந்த ஊரு பஸ்ஸில் வர வேண்டிய கட்டாயம்.
டாக்ஸி கிடைக்கவில்லை.
அங்கே பஸ் நிறுத்தத்தில் காத்திருப்போர்கள் அனைவரும்
அத்தனை பொறுமையாக வெய்யிலில் வாடுவதைப் பார்த்தால் கஷ்டமாக இருந்தது.
குறித்த நேரத்துக்கு வண்டி வருமா தெரியாது.

அத்தனைக்கும் நடுவில் ஊருக்குப் போன் செய்து பெண்டாட்டியோ, அம்மாவொ பேசிவிட்டால் முகத்தில் அத்தனை மலர்ச்சி.
நம்மைப் பார்த்தால் பாபா,மாஜி என்று நிழலில் உட்கார இடம் தந்து
தாங்கள் வெய்யிலில் நிற்கும் குணம்.

இதற்கு நேர் மாறாக இறங்கும்போதே வண்டியை ஓட்டிவிட்ட பஸ் ஓட்டுனர்,
எந்த தேசமோ தெரியாது, நம்மூராக இருக்க முடியாது...

ஒரு செகண்ட் தாமதித்து இருந்தாலும் நடந்திருப்பது வேறாக இருந்து இருக்கும்.
சிங்கம் விழாமல் பிடித்துக் கொண்டார்.
திகில் அனுபவம்:(((


நாங்களாவது கொஞ்ச நாட்கள் இருந்து விட்டு,
வந்துவிடுகிறோம்
.
இங்கெ இருப்பவ்ர்கள் பிழைப்புக்காக வந்த இடத்த்தில்
முன்ஜாக்கிரதையோடு
எச்சரிக்கையாக இருந்து நல்ல வளத்தோடு வாழ வேண்டும்.அக்கரைப் பச்சை செழிப்பாகவே இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இந்திய நாட்டை விட்டு ,சொந்த மக்களைப் பிரிந்து வாழும் எல்லோரும் சுகமாக இருக்கட்டும்.Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Sunday, September 09, 2007

தேரோட்டியவன்

கண்ணனையும் பாகவதத்தையும் படிக்க நேரம் இருக்கிறதோ இல்லையோ நோக்கம் வேண்டும்.
எப்பவோ இந்த ஊருக்கு வரும்போது எடுத்த வந்த ஆன்மீகப் பத்திரிகை
கைக்குக் கிடைத்தது.
என் மருமகள் மாமியார் சம்பந்தப்பட்ட எல்லா பொருட்களையும் அருமையாகப் பாதுகாத்து வைக்கும் குணம் கொண்டவர்.

அம்மா நீங்க எப்போ எதைக் கேட்பீர்கள் என்று தெரியாது, அதனால்
ஒரு பேப்பர் கூடத் தூக்கிப் போடாமல் வைத்து இருக்கேன் என்று
சொல்வார்கள்.

இந்த மாதிரிக் காப்பாளிகள் இல்லாவிடில் என் வாழ்க்கை கொஞ்சம் தகறாரு செய்யும் என்றுதான் நினைக்கிறேன்.

அப்படிக் கிடைத்த புத்தகத்தில் ரதாங்கபாணி என்ற கட்டுரை
நம் இராஜாஜி எழுதியது ஒன்று பார்த்தேன்.

கோதண்டபாணி, சாரங்கபாணி எல்லாம் சரி.
சக்கரபாணிப் பெருமாளும் கும்பகோணத்தில் கோவிலில்
வணங்கியது நினைவில் இருக்கிறது.

அவனுடைய ஆயிரம் நாமத்தில் இந்தப் பெயரும் எழுதி அவன் நம்மை
ரட்சிப்பான் என்றும் சொல்லி இருக்கிறது.

ரதாங்கபாணி என்றால் ரதத்தை அங்க மாக ஏற்றவன்,
அவன் பார்த்தசாரதி.
மஹாபரதத்தில் போரில் பார்த்தனுக்கு
அருள் புரிந்து ,அவனைக் காக்கத் தனியொருவனாகத்
தேரொட்டியாகப் பணி புரிந்தான்.

இது நானாகப் புரிந்து கொண்டது.

திரு.ராஜாஜி எழுதிய அழகுத் தமிழ் இன்னும் தெளிவாகப் புரிய
வைக்கிறது.
எளிமையாகக் கண்ணனைப் பற்றி எடுத்துக் காட்டுகிறார்.


போரின்போது கர்ணன் விடும் சரம் அர்ஜுனனை
அழிக்க வரும்போது,தன் பாதத்தால்,

தேரை அழுத்துகிறான் கண்ணன்.
அது ஐந்து அங்குலம் கீழே பூமியில் பதிந்து விடுகிறது.
தலைக்குக் குறி வைத்த சரம் தலைப்பாகையைக், கிரீடத்தைக் கொண்டு போய் விடுகிறது.
அர்ஜுனன் பிழைத்துவிட்டான்.
கண்ணன் கீழே இறங்கித் தேர்க்காலை , தோள் கொடுத்து உயர்த்துகிறான். மறுபடியும் தேர் நிலைப்படுகிறது.

இதனாலேயெ அவன் ரதாங்கபாணியாகிறான்.
அவனுடைய பஞ்சாயுத ஸ்தோத்திரத்தில் சங்கம், சக்கிரம்,வில்,கட்கம்,கதை எல்லாம் அடைக்கலம் கொடுக்கும் பொருட்களாகப் பார்க்கிறோம்.

சங்கப்ருநந்தகி சக்ரி சார்ங்கதன்வா கதாதர
ரதாங்கபாணி ரக்ஷோப்யக சர்வப் ப்ரஹணாயுத..
அவனை நான் வணங்குகிறேன்.

இவ்வளவையும் என் நினைவுக்குக் கொண்டுவந்தது ஒரு நினைவுதான்.
அந்த நினைவு, மீண்டும் சொந்த நாட்டுக்குத் திரும்பும்
நாள் வந்தது ஒன்றே காரணம்.

பத்துமாதங்கள் வெளியே இருந்துவிட்டு த் தமிழ்நாடு திரும்புவது
என்னைப் பொறுத்தவரையில்.
மிகப் பெரிய விஷயம்.
இத்தனை மாதங்களும் கூடவே இருந்து காத்தவன் இனியும்
எங்களோடு இருப்பான்.

என் அமீரக நண்பர்களிடமிருந்து விடை பெறுகிறேன்.
சென்னையில் மீண்டும் பார்க்கலாம்.

எல்லோருடைய அன்புக்கும் நன்றி.
Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Tuesday, September 04, 2007

எங்கும் கண்ணன்

தேவகி பெற்று,,
யசோதையிடம் வளர்ந்து,
பாண்டவருக்கு அடைக்கலம் கொடுத்து,
திரௌபதி மானம் காத்து,
அர்ஜுனனுக்கு ஞானம் அளித்துக்
கண்ணா எத்தனை வேலையடா உனக்கு.

கொஞ்சமெ கொஞ்சமானாலும் எங்க வீட்டுக் குட்டி தொட்டிலில் நீ தவழ்ந்து ஓய்வெடுத்துக்கொள்.

பாலும்,தயிரும்,வெண்ணையும்,அவலும்,
ஜீரணத்துக்குச் சுக்கும் தருகிறேன்.

வந்துவிடு.

என்றும் இருக்கும் உனக்கு இன்று மத்திரம் வாழ்த்துக்கள் சொன்னால் போதாது. என்றும் உன்னை நினைக்கும் மனம் மத்திரம் கொடு.
கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் நம் அனைவருக்கும்.

கண்ணனை நினைக்காத நாள் இல்லை.
நினைக்காவிட்டால் நாம் இல்லை.


Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Monday, September 03, 2007

கனாக் காணலாம்...2

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal
கனவுகள் இலவசம் என்று முன்பு எங்கேயோ படித்த ஞாபகம்.
இலவசமோ விலை கொடுத்தோ கனவு காண்பது
ஒரு இன்பம் தான்.:))
கனவு மெய்ப்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும்,
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் கண் திறக்க வேண்டும்,கை கொடுக்க வேண்டும்//
இந்த வரிகள் சின்ன வயதில் படித்து மனத்தில் உறுதி கொடுத்தவை.
முன் பதிவில் கனவுகளை எழுதும்படி சக பதிவர்களுக்கான
tag ஒன்றை ஆரம்பித்தேன்.
அதற்குப் பதில் எழுதிப் பின்னூட்டமும் போட்டு வருகிறார்கள்.
கண்மணி சொல்லி இருக்கும்படி குறிப்பிட்ட சிலரை
நான் குறிப்பாகச் சொல்லிவிட்டால்
மற்றவர்களுக்கும் வேறொருவரை அழைக்கச் சௌகரியமாக இருக்கும்.
என் கனவையும் நான் சொல்ல வேண்டும் அல்லவா.
இதோ வெகு நாட்களாக நான் ஆசைப்பட்டுக் காணும் கனவு, அதாவது நினைவு.
ஏனெனில் என் கனவுகள் ரயிலை ஓடிப் பிடிக்க முடியாமலோ, படிகளில்
வேகமாக இறங்குவது போலவோ,
கால் தடுக்கி விழுவது போலவோ,
இல்லை எப்பவோ மேல் உலகம் போனவர்கள்
இப்போது என்னை வந்து கேள்வி கேட்பது போலவோ,
இப்படி ஒரு அத்து இல்லாமல் பயமுறுத்தும்.
இல்லாவிட்டால் நாற்பது வருடங்கள் முன்னல் தேர்வு நட்களில், கேள்வித்தாளைப் பார்த்து விழித்தது கனவாக வரும். அதிசயமாக நானே கனவை நல்லபடியாக மாற்றி,
எழுதி முடித்து வெளியில் வந்துவிடுவேன்.
இந்தக் கனவுகள் போலில்லாமல்,
உண்மையாகவே ஆசைப்படுவது உண்மையான நட்புகளுக்கு.
ஒருவருக்கு ஒருவர் போலித்தனம் சிறிதும் இல்லாமல், எதிர்பார்ப்புகள்
இல்லாமல் பழகும் உறவுகள்.
தப்பு நடந்தால் கண்டித்து,உரிமையோடு எடுத்துச் சொல்லும் நட்புகள்.
நம்பும் நட்புகள்.
பின்னால் விமரிசிக்காமல் அம்மா நீ இப்படியும் எழுதலாமே, செய்யலாமே என்று
கூற, நேரம் இருக்கும் நட்புகள்.
ஏன் இப்படி ஒரு கனவு ,நினைவு என்று தெரியாது. ஆனால் இது போல நம் இணையம் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசிப்பது உண்டு.
அந்த மாதிரி நட்புகள் எனக்குக் கிடைத்து இருக்கிறது.
ஒரு கீதா, ஒரு துளசி, ஒரு டெல்ஃபின், ஒரு காட்டாறு, மதுரா, கோம்பை பிரெமலதா,நானானி
கொத்ஸ்,ரவி,அம்பி, அபி அப்பா,தம்பி ,குமரன்,தி.ரா.ச என்று என் பட்டியல் நீண்டு கொண்டு
போகிறது.
அவர்கள் கனவையும் அறிய ஆவலாயிருந்ததால்தான்
இந்த கனவு விளையாட்டை ஆரம்பித்தேன்.
இந்தக் கனவுக்கு விதிமுறைகளோ
கட்டுப்பாடுகளோ வேண்டாம்.
ஒருவர் நான்கு நண்பர்களை அழைத்தால்
விவரமாக எழுத வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
நான் நண்பர்களின் நீண்ட பட்டியல் போட்டு விட்டேன்.
முன்பு அழகு ஆறு பதிவின் போதும் நிறைய அழைப்புகள் ஒருவருக்கே
வந்தது நினைவுக்கு வருகிறது.
பின் வியர்டூ'' விளையாட்டுக்கும் அது போலவே.
அது ஏன் இது போல் நடப்பது என்றால் நாம் அழைக்கும் அனைவருமே
Very Preciuos Bloggers.
நல்ல கருத்துப் பரிமாற்றம் செய்பவர்கள்.
ஆகையினால் நண்பர்களைத்தான் ஒருவர் விடாமல் பட்டியலிட்டு அழைத்தேன்.
அதில் ராகவனும், வடுவூர் குமாரும், அம்பியும் ,மௌலியும் ஏற்றுக் கொண்டு
கௌரவித்து விட்டார்கள்.
இன்னும் அமீரகப் பதிவர்கள் பெயர்களை முழுவதும் இணைக்கவில்லை.
பாசக்காரக் குடும்பம் இல்லையா.
அவர்களை எல்லாம் அவர்களின் நண்பர்கள் அழைத்துக் கொள்ளுவார்கள்.
அதனால்
The game starts only now.:)))
நண்பர்களுக்கு நல்வரவு.
உங்களுக்கும், உங்கள் கனவுகளுக்கும் வாழ்த்துக்கள்.

Sunday, September 02, 2007

கனவுகளே,, ஆயிரம் கனவுகளே!!!

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal
நேற்று, டிஸ்கவரி சானலின் ஒரு வீடியோவைப் பார்த்துக் கொண்டு இருந்த போது
தோன்றியது.
நாம் எல்லோரும் கனவு என்று ஒரு நினைவு வைத்திருப்போம்
இல்லையா.
அதைப் பற்றித்தான் உங்கள் அனைவரையும் அழைத்து எழுத ஆவல்.
தொடர் பதிவுகளாக இருந்தாலும் சரி. இல்லை நாலு நாலு பேராக
குறிப்பிட்டு எழுதினாலும் நல்லது.
உங்கள் கனவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒரே ஒரு வேண்டுகோள்.
இது உங்கள் தனிப்பட்ட கனவாக இருக்க வேண்டும்.
அது சமூகத் தொடர்போ, இல்லை உங்கள் வாழ்க்கை பற்றிய தொடர்போ,
கட்டாயம் எழுத வேண்டும்.
முடியும் என்றே நம்புகிறேன்.
கனவில்லாத வாழ்வு சுமை.
எதிர்பார்த்தல்தான் சுவை. அந்த நம்பிக்கை நம்மை நடத்திச் செல்லுகிறது என்றே நம்புகிறேன்.
எல்லாப் பதிவர்கள் பெயரையும் பதிந்துவிட ஆசை:))உங்கள் பின்னூட்டங்களைப் பார்த்து,
கனவு இனிதெ நிறைவேற
வாழ்த்துகிறேன்.


அடுத்தகட்டம்...
அழைப்பு.
அன்பு துளசி,
இலவசக் கொத்தனார்,
ரவி கண்ணபிரான்,
ஜி ராகவன்,
மதுரையம்பதி,
அம்பி,
கீதா சாம்பசிவம்,
அபி அப்பா,
வடுவூர் குமார்,
உஷா ராமச்சந்திரன்(நுனிப்புல்)
மற்றவர்களும் அழைக்க நபர்கள் வேண்டும்
அதனால்
அவர்கள் அழைக்க,
நானும் அழைக்க நினைக்கும் பதிவர்கள்


டெல்ஃபின்,
தருமி சார்,
எஸ்.வி.ஆர் சுப்பையா சார்,
கண்மணி,
முத்துலட்சுமி
மங்கை,
ஜெஸீலா,
லக்ஷ்மி,
மதுரா,
காட்டாறு,
பொன்வண்டு,
தீபா
மிஸ். congeniality
இன்னும்
........................................................................................................................
உங்கள் எண்ணங்களை எழுதுங்கள்.