Blog Archive

Saturday, January 28, 2023

மனதைத் தொடும் சில ராகங்கள்


வல்லிசிம்ஹன்

எல்லா நேரங்களிலும் மனதை அமைதியாக
 வைத்துக் கொள்வது மிக மிக அசாத்தியமான விஷயம்.

உடலின் சங்கடங்கள் , மனதின் கவலைகள்
சூழும்  வெப்ப தட்ப நிலை
என்று பலப் பல காரணங்கள்.

நம்மூரில் 24 மணி நேரமும் கேட்கும் சாலை ஓசைகள்.
வந்து போகும் மனிதக் குரல்கள்,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
என்னை அவ்வளவாகப் பாதித்ததில்லை.
என்னுடைய  நல்ல உறக்கத்துக்கு அவை
ஏதுவாகக் கூட இருந்திருக்கின்றன.:)

இங்கோ வெளியே சத்தம் இல்லை.
குளிர் வேளையில் வீதி நடமாட்டம் கூட இல்லை.
உறைந்த பனியில் தங்கள் செல்லங்களை நடைக்கு
அழைத்துச் செல்லும்  அம்மாக்களும், அப்பாக்களையும் அடையாளம் தெரிவதில்லை.
கண் மட்டும் தெரியும் படி  சிரம் முதல் பாதம் வரை மூடிய கம்பளி
உடைகள்.
தனிமை பழகி விட்டது.
சமைப்பது ஒரு வரமாகி விட்டது.
ஓயாமல் நான் இருக்கிறேன் என்பதை நினைவூட்டும்
வலிகள். 
அதை மறக்க வைக்கும் அன்பு விசாரிப்புகள்.

எல்லாமே சரியாகி இதுவும் கடந்து போகும்.

ஆகக் கூடி நம்மை உயிர்ப்பிப்பது யூடியூபும்
அதில் கேட்கும் இசையும் தான்.
அவற்றில் சிலவற்றை இங்கே பதிகிறேன்.
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.



வராஹ ரூபம் பாடலைத் தினம் இரு தடவை கேட்கிறேன்.
கடவுள் ஏதாவது ரூபத்தில் நம்முடன் இருப்பார் என்பதற்கு

இந்தப் பாடல் ஒரு உதாரணம்.


வலைப் பதிவுகளைப் படிக்காமல் இத்தனை
நாட்களைக் கழிப்பது இதுவே முதல் தடவை.

என்னை எழுத வைத்தது ஒரு நிகழ்வு என்றால்

அதற்கு அப்புறம் எழுதியதால் நான் இருக்கிறேன் 
என்று குரல் கொடுக்கவோ, இல்லை பதிய வைக்கவோ செய்த
முயற்சியாக இருந்திருக்கிறது. 
நட்புகளைச் சேர்த்து வைத்தது.
இன்று பதிவிட்ட பிறகு பதில் பின்னூட்டம் இடுவதே
பெரிய முயற்சியாக இருக்கிறது.
அனைவரும் மன்னிக்க வேண்டும்.

மீளலாம்.நன்றி.




Thursday, January 26, 2023

ஸ்ரீ சக்கிரத்தாழ்வார்

வல்லிசிம்ஹன்


ஸ்ரீ சக்கிரத்தாழ்வார்



சக்கரத்தாழ்வாரை வழிபடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !!

மகாவிஷ்ணுவின் கைகளில் பல்வேறு ஆயுதங்கள் இருக்கின்றன. அவர் வலது கையில் இருக்கும் ஆயுதமான ஸ்ரீ சக்கரம் மிகவும் முக்கியமானது. சக்கரம் என்பது  சக்கரத்தாழ்வாரை குறிப்பதாகும். பகைவர்களை அழிக்கும் ஆயுதமாக சக்கரத்தாழ்வார் விளங்குகிறார்.


சக்கரத்தாழ்வாருக்கு ஸ்ரீ சுதர்சனர், ஸ்ரீ சக்கரம், திகிரி, ஸ்ரீ சக்கரம், திருவாழியாழ்வான் எனும் திருநாமங்கள் உண்டு. ஸ்ரீ சுதர்சனர் என்பதற்கு நல்வழி காட்டுபவர் என்று பொருள். சுதர்சனம் மங்களமானது.
 
ஸ்ரீ சுதர்சனர்: ஸ்ரீ சக்கரத்தாழ்வார் முன் புறத்திலும், யோக  நரசிம்மர் பின் புறத்திலும் இருப்பார்கள். 16 கைகள், அவற்றில் சக்கரம், ஈட்டி, கத்தி, கோடரி, அக்னி,  மாவட்டி, தண்டம், சக்தி எனும் 8 ஆயுதங்கள் வலது புறம் இருக்கும். இடது புறம் சங்கு, வில், கண்ணி, கலப்பை, உலக்கை, கதை, வஜ்ரம், சூலம் போன்ற 8  ஆயுதங்களை கையில் ஏந்தியிருப்பார்.



 
சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி, "ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம" என்று சொன்னால் கிரக தோஷம் விரைவில் நீங்கி விடும். இவருக்கு உகந்த நாள், வியாழன், சனி. சனிக்கிழமை தரிசிக்க வாழ்வு வளம் பெரும்.






 
சிவப்பு மலர்களால் மாலை சூட்டி, சக்கரத்தாழ்வாரை வழிப்பட்டால் நினைத்த காரியம் ஈடேறி, வெற்றி கிட்டும். அவரை நோக்கி ஓரடி எடுத்துவைத்தால், அவர் உடனே இரண்டடி முன் வைத்து நம் பிரச்சனைகளையும், துன்பங்களையும் தீர்த்து வைப்பார்.

Wednesday, January 25, 2023

சிதம்பரம் கத்திரிக்காய் கொத்சு ஒருமுறை இப்படி செய்ங்க



வல்லிசிம்ஹன்


  கத்திரிக்காயின் பலன்

முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை பெற்றது. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் குறிப்பிடத்தக்கது. போட்டோ நியூட்ரியெண்ட்ஸ் இருப்பதால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

இதில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது.
போட்டோ நியூட்ரியெண்ட்ஸ் இருப்பதால் நினைவாற்றல் அதிகரிக்கும். இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கொழுப்பைக் கரைக்கும். உடல் பருமனைக்  குறைக்கும். மூளை செல்களைப் பாதுகாக்கும். கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. முற்றிய பெரிய காய்களைச் அதிக அளவு சாப்பிட்டால்தான் உடம்பில் அரிப்பு ஏற்படும்.


புற்றுநோய் வராமல் காக்கும். தக்காளிக்கு இணையானது, இக்காய். தக்காளியைப் போலவே எடை, புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன கத்தரிக்காயில் உள்ளன. ஆனால் வைட்டமின் ‘ஏ’யும், வைட்டமின் ‘சி’யும் குறைவாகவே உள்ளன. இவற்றை ஈடுசெய்யும் வகையில் வைட்டமின் ‘பி’ தக்க அளவில் உள்ளது. இதய நோய்கள் வருவதைத் தடுக்கும்.






 
உடலில் சேர்ந்த அதிகப்படியான இரும்புசத்தை சமன்படுத்தும். நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் உடனடியாகச் சிதைந்து சத்தாக மாறக்  கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் ‘பி’ பயன்படுகிறது. பசியின்மை அகல்கிறது. உடல் வலுவு குறைவது தடுக்கப்படுகிறது. மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது முதலியவையும் தடுக்கப்படுகிறது.
 
டைப் 2 சர்க்கரை நோயைத் தடுக்கும். முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும். காரணம், இவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, மன அமைதியைத் தரும்.
 
உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத் தவிர்ப்பது  நல்லது. உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால் அரிப்பை உண்டு பண்ணிப் புண்கள் ஆற அதிக நாள் ஆகும்.

Monday, January 23, 2023

முன்னம் ஒரு காலத்துல......

வல்லிசிம்ஹன்

ஜூன் 2008 எழுதின பதிவு.
திருவேங்கடப்
பாட்டியும் நானும்.
இடம் திண்டுக்கல் பஸார் தபால் ஆஃபீஸ்.
கச்சேரி ரோடு மலைக் கோட்டை அருகே.

கிணற்றில் நான் தண்ணீர் சேந்திக் கொண்டிருக்க,
சுவரைத் தாண்டிப்
பக்கத்து வீட்டுப் பின்புறத்தில் இருந்து ,தோழி இந்திராவின் குரல்


''எத்தனை தடவைம்மா சொல்றது.புத்திமதி சொல்லறதுல்லாம் உன் காலத்தோட போச்சு.
இன்ஃபாக்ட் உன் அப்பா காலத்தோட ஓவர் மா.
இப்ப எல்லாருக்கும் எல்லாம் தெரியும்.
நின்னு, பாட்டி சொல்கிறதை எல்லாம் கேட்டுக் கொண்டு பின்பற்ற
நேரம் இல்லை.''

இது நாங்கள் தினம் கேட்கிற வசனம், அதுவும் காலை வேளைல
அம்மியில் தேங்காய்ச் சில்லுகளைத் தட்டிக் கொண்டூ இந்திராவோட
அம்மா தாழ்ந்த குரலில் பேசுவதும்,
இந்திரா அதைக் கேட்டுப் பொரிந்து கொட்டுவதும்,
உள்ளே இருந்து அவளுடைய பாட்டியின் அழைப்பும்
எங்க வீட்டுத் தாழ்வாரத்தில் கேட்கும்.
நான் அப்போது வீட்டுக்குத் தேவையான தண்ணீரைக் கிணற்றிலிருந்து
இழுத்துக் கொட்டிக் கொண்டிருப்பேன்.
எங்க பாட்டி ஒரு தூணில் சாய்ந்து கொண்டு கால்களை நீட்டி
தைல எண்ணையைத் தடவிக்கொண்டு இருப்பார்.
எனக்கோ எட்டுமணிக்கு வரும் ஒரே ஒரு டவுன் பஸ்ஸைப் பிடித்துப்
பள்ளிக்குப் போக வேண்டும்.
பாட்டிக்கோ பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆசை.:)
''அந்தப் பொண்ணு , அவ அம்மா சொன்ன பேச்சைக் கேக்காதோ?.என்ன பிரச்சினை ஆண்டாள்??''
என்று என்னை விளிப்பார். பாட்டிக்கு  குசும்பு ரொம்ப ஜாஸ்தினு எனக்கு அப்பத் தெரியாது.:)
ஐயோ சத்தம் போட்டுப் பேசாதே பாட்டீஈஈஇ
நான் அவளோட தான் ஸ்கூலுக்குப் போணும். அப்புறமா உள்ள வந்து சொல்றேன். ''
 என்று ஓடி விடுவேன்.
திருப்பி சாயந்திரம் வீட்டுக்கு வந்ததும், பாட்டி ரெடியாக வாசல் திண்ணையில் உட்கார்ந்திருப்பார். என்ன ஆச்சு.அப்புறம் அந்த சண்டை தீர்ந்துதா?"
 என்று ஆவலோடக் கேட்கும் அந்த 70 வயசுக் குழந்தையைப் 
பார்த்தால் கோபம் தான் வரும்:)

மாலைப்பசி,உப்புமா காத்துக் கொண்டிருக்குமோ என்கிற கோபம்,
அத்தனை அல்ஜீப்ராவையும் போட்டு முடிக்கணுமே என்கிற தாபம்,
பாட்டிக்குப் பின்னால் மெயில்(தபால்) மூட்டைகளைக் கட்டி சீல்
 வைத்துக் கொண்டிருக்கும் தங்கப்பத் தாத்தாவின் நமுட்டுச் சிரிப்பு.
''பாப்பா மாட்டிக்கிட்டியா'' என்கிற மாதிரி கேலி செய்யும்.

வர்ரேன் பாட்டி என்று கடித்த பற்களுக்கிடையே பேசிவிட்டு உள்ளே போய்விடுவேன்.
அங்கே போய் அம்மாவிடம் புலுபுலுவென்று ஒரு சண்டை போட்ட பிறகு
மீண்டும் வாசலுக்கு வந்தால் அங்கே மீண்டும் பாட்டி!!
சரி இன்னிக்குச் சொல்லாமல் தீராது,அப்புறம் அப்பா வரை விஷயம் போய்விடும் என்கிற பயத்தில் ,''இல்ல பாட்டி...''.என்று ஆரம்பித்தால்.,
இந்த ' 'இல்லை,வந்து '' ரெண்டு வார்த்தை இல்லாம உன்னால பேச முடியாதா
என்று கேலியாகக் கேட்பார்.:)

நமக்குத்தான் ரோஷம் நெத்திக்கு நடுவில உட்கார்ந்திருக்குமே:)
முறைப்பேன் பாட்டியை.
இப்படியெல்லாம் முறைச்சா நாளைக்கு எப்படி கலெக்டராப் போவ. ?
நாலு பேர் நாப்பது பிராது கொடுப்பார்கள். எப்படித் தீர்த்து வைப்ப.' பொறுமை
 என்னும் நகை அணிந்து 'அப்படீனு அவ்வையார் பாடியிருக்கார் தெரியுமா" என்பார்.

எனக்கு அதுவரை இருந்த நல்ல குணமெல்லாம் அப்படியே மறைந்துவிடும்!!
''போ உன்கிட்ட ஒண்ணுமே சொல்ல மாட்டேன். 
எனக்குத்தான் பொறுமை இல்லையே '' என்று வேறு பக்கம் திரும்பினால் எதிரே இருக்கிற லாரி ஆபீசைப் பார்க்கணும்,:)))அதனால் மீண்டும் பாட்டியைப் பார்ப்பேன்.

''தாழ்ந்த இடத்திலதான் தண்ணீர் தங்குமே, தெரியுமா? என்பார்.
ஆமாம் தண்ணியும் தங்கும் கொசுவும் வளரும்' அப்டீனு "தொச்சு"க் கொட்டுவேன்;)
இந்த மாதிரி ரெண்டு மூணு ஸ்டாக் டயலாக் முடிஞ்சதும் பக்கத்து வீட்டுச் சமாசாரமும் சொன்னேன்.
எப்படி அந்த இந்திராவுக்கு ஒரு பையன் லவ் லெட்டர் கொடுக்கப் பார்த்தான். அவ எப்படி வாங்கிக்காம கல்யாணப் பரிசு சரோஜாதேவி மாதிரி நடந்து கொண்டா, அது தெரிந்து (அவளுடைய) பாட்டி அவளைப் பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டாம்னு சொல்கிறார் என்று முடித்தேன்.
எல்ல்லாத்தையும் கேட்டுவிட்டு,  ''சூ!! இவ்வளவுதானா''. என்பது போல் 
எங்க பாட்டி மட்டும்தான் முகத்தை வச்சுக்க முடியும்:)
நீ என்ன சொல்றே பாட்டி. அவ ஸ்கூலுக்குப் போலாமா வேண்டாமா என்றதும்,
பாட்டி வினோதமாப் பார்த்தார்.
இது என்னடீ உலக அதிசயமா. பசங்களுக்கும் பொண்களுக்கும் இப்படித்தான் இருக்கும்.
எங்களை மாதிரி எட்டு வயசில கல்யாணம் ஆனா ஒண்ணும் தெரியாது.
நீங்கள்ளாம் குமுதம்,சாண்டில்யன் படிச்சே கத்துண்டாச்சு. அப்புறம் இப்படித்தான் நடக்கும்.
நீங்க எல்லோரும் ஒத்துமையா ஒரே குருப்பா போய் வந்தா யாரும் வாலாட்ட மாட்டான்.
ஒரு தடத்தை விட்டு இன்னோரு வழியாப் போங்கொ.
அப்படியும் பின்னால வந்தா என்னடானு அதட்டுங்கொ.
நாங்களும் இப்படி அப்படி யெல்லாம் பார்த்து இருக்கோம்.
எங்களுக்கும் தெரியும் என்று மறுபடி அதே நக்கல் சிரிப்பு.

'போ பாட்டி உனக்கு ஒண்ணும் புரியலை'' என்று எழுந்து விட்டேன்.
இப்பவெல்லாம் நிலைமை மாறிவிட்டதாக் கேள்வி.:)
,
இன்னோரு டிஸ்க்ளெய்மர்..
அதே பையனை இந்திரா கல்யாணமும் பண்ணிக் கொண்டார்கள். ஏன்னா அது அவளுக்கு அத்தை பையன்.:)

Sunday, January 22, 2023

தை அமாவாசையும் அம்மாவும்


வல்லிசிம்ஹன்
அமாவாசை ,திருவோண நட்சத்திரம் சேர்ந்து வரும் நாள் அம்மாவுக்கு 94 வயது 
பூர்த்தியாகிறது.
நான் இப்போது நினைப்பதெல்லாம்,
;நல்ல வேளை நிறைய சிரமம் பார்க்காமல்
போய் சேர்ந்தாள் என்பதை மட்டும் தான்.

சிரித்த முகத்துடன் மகாலக்ஷ்மியாக இருந்த
 அம்மா, 
எத்தனையோ சோதனைகளுக்கு நடுவில் தான் புன்னகை முகம் 
காட்டினார்.

அசராத மனோ தைரியம், சலிக்காத கடவுள் பக்தி,
கணவரின் மேல் வைத்திருந்த நம்பிக்கை,
குழந்தைகளின் மேல் திடமான பாசம்

சிக்கன வாழ்க்கை, தினமும் கணக்கு எழுதும் 
வழக்கம், ஹிண்டு பேப்பரை அத்தனை பக்கங்களில் வரும்
 செய்திகளையும் மதிய தூக்கத்துக்கு முன்  படிக்கும் சாமர்த்தியம்

தினமும் அலுக்காமல் சமைக்கும் அழகு, அவளைச் சுற்றீ 
அத்தனை பொருட்களும் மின்னும்.
அவ்வளவு சுத்தம். சோம்பல் என்ற வார்த்தைக்கு
அர்த்தமே தெரியாது.

இப்போது எழுதும் இந்தப் பதிவை அவள்
உயிருடன் இருக்கும் போது எழுதிக் கொடுத்திருந்தால்
மகிழ்ச்சியுடன் கொஞ்சம் வெட்கப் பட்டிருப்பால்.

இனிய பிறந்த நாள்.வாழ்த்துகளும், வணக்கங்களும் அம்மா.
நீயே எப்பொதும் துணை.

Thursday, January 19, 2023

ப்ரதோஷம்

வல்லிசிம்ஹன்


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ப்ரதோஷ நாளில் ப்ரதோஷ காலமான மாலையில் சிவன் பார்வதியுடன் நந்தி தேவரின் கொம்புகளுக்கு நடுவே நின்று காட்சி அளிப்பார்.
அவ்வேளையில் மும்மூர்த்திகள் முதற்க்கொண்டு சகல கடவுள்களும் நவக்கிரகங்களும் இந்திராதி தேவர்களும் எட்டு திசை மன்னர்களும் சகல தேவ பூத கணங்களும் தேவாதி தேவர்களும் மற்றும் எல்லா ஜீவராசிகளும் ஈசனைக்காண சிவாலயங்களில் திரண்டிருப்பதால் அந்த வேளையில் சிவா
லயம் சென்று நந்தி தேவரை நாம் வணங்கிணால் சகல தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கண்டு வணங்கிய பலன் கிட்டும்.


ப்ரதோஷம் என்றால் என்ன பொருள்? சிவ வழிபாட்டுக்கும் அதற்கும் என்ன தொடர்பு? இந்த ப்ரதோஷ வழிபாட்டை எந்த வகைகளில் சிறப்பாகச் செய்யலாம்?




நந்தி கேஸ்வரருக்கும் ப்ரதோஷ வழிபாட்டுக்கும் என்ன தொடர்பு?

‘சோம சூக்த ப்ரதக்ஷிணம்’ எவ்வாறு செய்ய வேண்டும்?

ப்ரதோஷம் தொடர்பான அனேகத் தகவல்களையும் இங்கு தொகுத்துத் தந்துள்ளேன்:

நந்தி தேவர்க்கு அல்ப ஆயுள் என்று அறிந்த அவர் தந்தை, ஸ்ரீருத்ர ஜபத்தை ஒரு கோடிமுறை ஜெபிக்கச் சொல்லி தன் பிள்ளையைப் பணித்தார்.

இந்த ஜபத்தின் முடிவில் நேரில் வந்த சிவபெருமானிடம் நந்தி கோரிய வரம்: ‘எனக்கு இன்னொருமுறை ஸ்ரீருத்ரத்தை ஒருகோடி முறை ஜெபிக்க அனுமதிக்க வேண்டும்’ வரம் தரப்பட்டது.

இவ்விதம் ஒருமுறை, இருமுறை அல்ல. ஏழுமுறை ஸ்ரீ ருத்ர ஜபம் செய்யும் வாய்ப்பு பெற்றார் நந்தி தேவர். இப்போது நேரில் வந்த சிவபெருமானே ‘ஏழு கோடி முறை ஸ்ரீருத்ர ஜபம் செய்தது போதும். உனக்கு தேவையான வரத்தைக் கேள்’ என்றார். ‘என் தந்தை வரையிலான எனது பித்ரு வர்க்கத்தினர் அனைவரும், பித்ரு கார்யங்கள் தேவைப்படாத, விதமாக அவர்கள் அனைவரும் சாம்ராஜ்ய பதவி அடைய வேண்டும்’ என்று கோரினார் நந்தி. மகிழ்ச்சி அடைந்தார் சிவபெருமான். ஏழு கோடி முறை ஸ்ரீ ருத்ர ஜபத்தை ஜபம் செய்து முடித்த உனக்கு நீ கோர வேண்டிய வரம் ஏதுமில்லை. உன் பித்ருக்களுக்கு அற்புத சாயுஜ்ஜியமும், உனக்கு ப்ரளய காலத்திலும் அழிவில்லாத, அந்த நேரத்திலும் என்னைத் தாங்கி நிற்கும் வாகனமாக இருக்க அருள் செய்கிறேன். இந்தப் பூமியில் சகல அதிகாரங்களும் கொண்ட அதிகார நந்தியாக, செழிப்பான ராஜ்யத்தை நீ நிர்வகிக்க வேண்டும்’ என்று சொல்லி, அவருக்கு ஏற்ற துணைவியைத் திருமணமும் முடித்து வைத்தார் சிவ பெருமான். ஸ்ரீ ருத்ர ஜபத்தால் நந்திகேஸ்வரர் அடைந்த மேன்மை இது.











ப்ரதோஷத்தின் முக்கியத்துவம்:

 ப்ரதோஷம் என்றால் சந்தியாக்காலம். சூரியன் அஸ்தமிக்கும் நேரம் பிரதோஷ காலம். பாற்கடலை கடைந்து அமுதம் பெற விழைகின்றனர் அசுரர்களும் தேவர்களும். வாசுகி எனும் பாமப்யே கயிறாகக் கொண்டு மந்திர மலையில் மத்தாக்கி பெரும் பாற்கடலைக் கடைகின்றனர். அமுதின் ஊடே நஞ்சும் எழும்ப, வாசுகி என்ற பாம்பு கக்கிய விஷமும் சேர்ந்து கொண்டு எங்கும் கடும் விஷம் கருமையாய் எழும்பி நின்றது. அஞ்சிய தேவர்களும் அசுரர்களுக்கும் ஈஸ்வரன் கருணை உள்ளம் கொண்டு அபயம் அளித்தார். தம் தொண்டர் சுந்தரரை விட்டு விஷம் கொணரச் செய்தார். சிவன் அதனை உட்கொண்ட பின்னர், சற்றே கலங்கிய பார்வதி, சிவனின் தொண்டையில் அழுத்தி விஷத்தை கீழறங்காமல் செய்து விடுகிறாள். திருநீலகண்டன் ஆகிய ஈசனின் கருணை உள்ளத்தை போற்றித் துதித்து சகல ஜீவராசிகளும் வழிபட்ட அந்த நேரம் ப்ரதோஷ நேரம்.

சகலரையும் காத்து நின்ற ஈசன் மனம் குளிர்ந்து அனைவரின் பயமும் வருத்தமும் போக நந்தி பெரிய ரூபம் எடுத்து நிற்க அதன் கொம்பின் நடுவே ஆனந்த நடனம் புரிகின்றார். இதன் பொருட்டே ப்ரதோஷ காலத்தில் நந்தியின் கொம்பின் வழியே இறைவனை தரிசிப்பது சாலச் சிறந்தது. வளர்பிறை / தேய்பிறையின் பதிமூன்றாம் நாள் பிரதோஷமாக பாவிக்கப்படுகிறது. சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் மூன்றரை நாழிகையும் அஸ்தமனம் ஆன பின் மூன்றரை நாழிகையும் ப்ரதோஷ காலம். இந்நேரத்தில் ஈஸ்வர தியானத்தில் இருப்பது சிறந்தது.




ப்ரதோஷம் என்பது ஒடுங்கும் நேரம் என்ற கோணத்திலும் பார்க்கப்படுகிறது. ஜீவராசிகள் தங்கள் கூட்டுக்குள் அமிழ்ந்து அடங்கும் நேரம். ப்ரதோஷத்தை, நித்திய ப்ரதோஷம், பக்ஷப் ப்ரதோஷம், மாதப் ப்ரதோஷம், மஹா ப்ரதோஷம், பிரளய ப்ரதோஷம் என்று பலவாக வகைப் படுத்துகின்றனர்.

நித்திய ப்ரதோஷம்: என்பது தினமும் சந்தியா நேரத்தில் சிவனை வணங்கி அவன் தியானத்தில் இருப்பது.

பட்சப் ப்ரதோஷம்: சுக்லபட்ச[வளர்பிறை] சதுர்த்தி ப்ரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.


Thursday, January 12, 2023

கறவைகள் பின் சென்று.........28 Margazhi 2023



வல்லிசிம்ஹன்,






கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்

அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்//


 ஆய்க்குலத்து இடையர்கள் இடைச்சியர் போல எங்களுக்கும் 
உன் பரிபூரண மகிமை தெரியாது. பீஷ்மரைப் போல ஆயிரம் நாமம் சொல்ல
இயலாத அறியாத பிள்ளைகள்
நாங்கள். உன்னைச் சிந்தையில் வைத்து பலவிதமாக அழைக்கிறோம்
''கோவிந்தா! மாடுகளுடன் அன்பாகக் கருணையுடன்
அவைகளைத் தழுவி , மகிழ்ச்சியுடன் மோக்ஷம் அளிக்கப் 
போகிறாய்.
உன்னையே பின் தொடர்கிறோம் நாங்கள்.
உனக்குப் பிடித்த தயிர் அன்னத்தை
இந்தக் காடுகளின் நிழலில் உட்கார்ந்து
உன் கை பட்ட சோற்றை 
உண்ண வந்துள்ளோம்.

சிறுபிள்ளைகளான எங்களின் அறியாத் தமிழைக் கேட்டு 
நீ சினம் கொள்ள மாட்டாய். பசுக்களின் பார்வை மொழி அறிந்த 
உனக்கு எங்களின் கள்ளமில்லாப் பாசமும் புரியும்.

அதை உணர்ந்து 'கேசவா எங்களை நீ ரட்சிக்க வேண்டும் என்று
மனமுருக யாசிக்கிறாள். ஆண்டாள் நாச்சியாரின்
நேசமும் பக்தியும்  என்றும் நம்முடன்.

இந்தப் பாசுரம், எனக்கு என் பாட்டிகளை எப்பொழுதுமே நினைக்க வைக்கும்.
அவர்களின் அன்பையும் தயவையும் எப்பொழுதும் நினைக்கக்
கடமைப் பட்டிருக்கிறேன்.

கண்ணன் நாமம் வாழி. ஆண்டாள் திருவடிகளே சரணம். 
அடுத்தாற்போல் வரும் போகி,பொங்கல், கனு நாட்களுக்கான் இனிய வாழ்த்துகள்.

ஆரோக்கியமும் ஆனந்தமும் நம் வாழ்வில் பொங்கட்டும்.


ஸ்ரீ கோதையின் திருப்பாவை 28 ஆம் பாசுரம்.

முந்தைய பாசுரத்தில் கோவிந்தனைக் கண்ட உற்சாகத்தில்
அவனிடமிருந்து பரிசாகப் பெற்ற  ஆடை அணிகலன் களை

அணிந்து,
அடுத்த வேலையாக அவன் மாடுகளை
மேய்க்கும் கானகத்துக்கு அவனுடனேயே 
சென்று  வீட்டில் தயார் செய்த தயிர் சாதம் முதலானவைகளை
உண்டு அவனுடன் களித்திருக்க வேண்டுமாம்.

ஒரு சிறுமி உல்லாசப் பயணம் செய்யும் ,  தோழிகளோடும் கண்ணனுடனும் அனுபவிக்கும்
பூரண மகிழ்ச்சியைக் கண்கூடாக உணர்த்துகிறாள்.
நாச்சியார்.
எல்லோரும் வாழ்க வளமுடன்.

Wednesday, January 11, 2023

பாவையும் 108 திருப்பதிகளும்

வல்லிசிம்ஹன்

interesting details on Thiruppavai and Divya Desams.
 திருப்பாவையில் திவ்ய தேசங்கள்

1. மார்கழித் திங்கள் - நாராயணனே நமக்கே பறை  தருவான் - பரமபதம்.

2. வையத்து - பாற்கடலில் பையத் துயின்ற - க்ஷீராப்தி.

3. ஓங்கி - ஓங்கி உலகளந்த உத்தமன் - திருக்கோவலூர்.

4. ஆழிமழை  - பாழியம் தோளுடை பத்மநாபன் - திரு அனந்தபுரம் .

5. மாயனை - வடமதுரை மைந்தன் - மதுரா .

6. புள்ளும் - வெள்ளத்ரவில் அமர்ந்த வித்து - திருவண் வண்டூர்.

7. கீச்சு கீச்சு - கேசவனைப் பாடவும் - திருவாய்ப்பாடி.

8. கீழ்வானம் - தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் - வரதராஜ பெருமாள் கோயில், காஞ்சி.

9. தூமணி மாடம் - குன்றின்மேல் விளக்கு - திருக் கடிகை. 

10. நோற்று சுவர்க்கம் - நாற்றத் துழாய்முடி நாராயணன் - திருக்காட்கரை.

11 கற்றுக் கறவை - முகில் வண்ணன் பேர் பாட - காளமேகப் பெருமாள் திருமோகூர்.

12. கனைத்திளம் - தென் இலங்கை கோமானை சேற்ற மனத்துக்கு கினியான்- தில்லை திரு சித்திர கூட்டம். 

13. புள்ளின்வாய் - பள்ளிக் கிடத்தியோ - திருக்குடந்தை.

14. உங்கள் புழக்கடை - நாவுடையாய் - செந்தமிழும் வடுக்கலையும் திகழ்ந்த நாவர் - தேரழுந்தூர்.

15. எல்லே - மாற்றாரை மாற்றழிக்க வல்லான் மாயன் - திருவல்லிக்கேணி.

16. நாயகனாய் - மாயன் மணிவண்ணன் - திருக்குறுங்குடி.

17. அம்பரமே - அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமான் - சீர்காழி.

18. உந்து மத களிறு - பந்தார் விரலி மைத்துனன் - திருநறையூர்.

19. குத்து விளக்கு - மலர்மார்பா - திருவிடவெந்தை.

20. முப்பத்து மூவர் - செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன் - திருப்பாடகம்.

21. ஏற்ற கலங்கள் - ஊற்றமுடையாய் பெரியாய் - பெரும்புறக் கடல் - திருக்கண்ண மங்கை.

22. அங்கண்மா ஞாலம் - அரசர் அபிமான பங்கமாய் வந்து தலைப்பெய்து - திருமாலிருஞ் சோலை.

23. மாரி மலை முழஞ்சில் - பூவை பூ வண்ணா - திருவரங்கம்.

24. அன்றிவ் உலகம் - குன்று குடையாய் - கோவர்த்தனம்.

25. ஒருத்தி - கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமால் - திருக்கண்ணபுரம்.

26. மாலே மணிவண்ணா - ஆலின் இலையாய் - பூரி ஜெகன்நாதர்.

27 கூடாரை வெல்லும் - சீர் கோவிந்தா - (திருவேங்கடம்).

28 கற்றுக் கறவை - குறை ஒன்றுமில்லாத கோவிந்தா - (விருந்தாவனம்)

29 சிற்றம் சிறுகாலை - பறை கொள்வான் கோவிந்தா - (துவாரகை.)

30 வங்கக் கடல் - அணிபுதுவை - (ஸ்ரீவில்லிபுத்தூர்).  

(P B அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி தொகுத்ததில் எடுத்தது)

Sunday, January 01, 2023

திருப்பரங்குன்றம் மலையில் இவ்வளவு இடங்கள் இருக்க..!! - Thiruparankundram...

இனிய புத்தாண்டு 2023 எல்லோருக்கும் மகிழ்ச்சியையும் 
ஆரோக்கியத்தையும் தர வேண்டும்.
எல்லோரும் நலமுடன் இருக்க வாழ்த்துகள்.