'எப்ப பார்த்தாலும் அப்பா அப்பா!!''
நான் மனுஷியாத்தெரியலையா உனக்கு?
பேரனைக் கடிந்துகொண்ட மருமகள் சுதாவைக்
கவலையோடு பார்த்தாள் மாலதி.
'விட்டுடும்மா அவனை. மாதத்துக்கு 20 நாள் பரத்
ஊர்ல இருக்கிறதில்ல. குழந்தைக்கு அப்பா மேல
ஏக்கம் வரத்தானே செய்யும்..'
இல்ல அத்தை இதுக்கு அவரும் ஒரு காரணம்.
எப்பவும் இவனோட விளையாடறது, வெளில
அழைத்துப் போவதுன்னு இங்க இருக்கிற
நாட்களைச் செலவழிக்கிறார்.என்னிடம் கூட நிறைய நேரம் எடுத்துப் பேசறதில்ல
அதுதான் அவர் ஊருக்குக் கிளம்பும்போது, இவனைச்
சமாதானத்துக்குக் கொண்டு வரது படு சிரமமா இருக்கு.
அலுப்புமா... நானும் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கேன்,
இவர் கொஞ்சம் அதீதமாப் பிள்ளையைக் கொண்டாடிக்கிறார்.
பாட்டியையும் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்த
ரஞ்சன் ஓடித் தன் அறைக்குப் போனான்.
நான் ஸ்கூலுக்குப் போமாட்டேன்.
அப்பா வந்ததான் போவேன்.
அழுகைக் குரலைக் கேட்டதும்,மாலதியின் மனம் இளகியது.
ஐந்து வயதுக் குழந்தையை இப்படிக் கணவனும் மனைவியும்
பங்கு போட வேண்டாமே என்ற வருத்தம் மேலிட்டது.
தன் மகனை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
அதை மருமகளை உணர வைக்கப் பழைய கதையை எல்லாம்
அலச வேணுமே என்ற மன அழுத்தம் தோன்றியது.
மெரினாவுக்கு நடக்கப் போயிருக்கும் கணவர் வரும்
வரைப் பேரனோடு செஸ் விளையாடி அவன் மனத்தை மாற்றினாள்.
அவருடன் பேசி இதற்கு ஒரு வழி செய்ய வேண்டும்
குழந்தை கஷ்டப் படக் கூடாது இப்படி ஓடியது அவள்
சிந்தனை.
சொல்லிவைத்தாற்போல் கதவு திறக்கும் சத்தம்
கேட்டதும் ரஞ்சன் தாத்தாவைக் கட்டிக் கொள்ள
ஓடிவிட்டான்.
என்ன ராஜா, என்ன செய்யறே முகமெல்லாம் சிவந்திருக்கு
என்றபடி அவனை அணைத்துக் கொண்டார் ரகுநாதன்.
அவருக்குப் பருக பழரசத்தைக் கொண்டு வந்த மாலதி
'நீங்கள் வெளியே போகும் போது குழந்தையை அழைத்துப் போகணும்.
சின்னதுதானே,போரடிக்கிறது அவனுக்கு.
எங்க அவன் கொண்டு வர வீட்டுப்பாடம் முடிஞ்சத்தானே
அவன் அம்மா வெளியிலியே விடுவாள்,நம்ம காலம் மாதிரியா
என்று சிரித்தவண்ணம் சாயந்திரவேளை விளக்கு
வழிபாடு செய்யச் சித்தமானார் ரகு. நிரஞ்சனா!
நீயும் தாத்தாவோட ஸ்வாமி நமஸ்காரம்
செய்யறியா என்ற வண்ணம் அவனை
அழைத்துப்போனார்.
கொஞ்சம் அமைதி கண்டவனாக ,ரஞ்சனும்
சென்றான். மாமியாரும் மருமகளும் கொஞ்சம்
ஓய்வாக அமர்ந்து இரவு சமையலை முடித்து
தாத்தாவும் பேரனும் வந்ததும் சாப்பிடத் தயார் ஆனார்கள்.
மீண்டும் ஆரம்பிக்கப் போன மருமகளைக்
கண் காட்டி நிறுத்தினாள் மாலதி. வயிறு ரொம்பக்
குழந்தை சாப்பிடட்டும்,நானும் அப்பாவும் உன் கிட்டப்
பேசணும் என்று சைகையில் சொன்னாள்.
பள்ளியில் நடந்ததை எல்லாம் தாத்தாவிடம்
சொல்லிவிட்டுச் சந்தோஷமாகச் சாப்பிட்டு முடித்தது குழந்தை.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்