Blog Archive

Sunday, August 30, 2015

மீண்டும் திண்டுக்கல்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
ஒரு ஞாயிறின் தனிமை நினைவுகள்
++++++++++++++++++++++++++++++++++++
********************************
சனிக்கிழமை காலை தொடங்கும் துடிப்பு
கரைத்த ரசம் சாதம் விக்கலோடு உள்ளே இறங்கும்.
அம்மா தலைதட்ட,மீண்டும் தலை கோதிச்
செருப்பிட்ட கால்கள் சிநேகிதியின் வீட்டுக்கு விரையும்.
வெள்ளிவந்த   விகடன் கதைகளை
அலசி வழியில் வரும் தோழிகளுடன்
அரட்டையோடு தலை நிமிராமல்
பள்ளியை அடைந்து வாடி பௌர்ணமி
உனக்கெதற்குப் பவுடர் எனக் கேலி கேட்டு
உன்காந்தலழகு மேலாகத்தெரியத்தான்
என்று மறுமொழி சொல்லி
பன்னிரண்டு மணி வரை  பாடங்கள் பொறுத்து கண்கணவென
 மணி  ஓசை முடிவதற்குள்
பள்ளிக் கதவைத் தாண்டிவிடும் கால்கள்.
மீண்டும் பதவிசுப் போர்வை போர்த்து
பஜார் வழியாச் செல்லாதே
கேலி பேசும் காளைகள் உண்டு
எனும் தோழியின் எச்சரிக்கையைக் கேட்டு சுட்டெரிக்கும் வெய்யிலில்
வீட்டு நிழலை அடைந்ததும்
ஆரம்பிக்கும் என் வீக் எண்ட்.
அவசரமில்லாமல் தேவானையுடன் பேசி வம்படித்து
அடுத்த வீட்டு இட்லிமாவு அரைபடும் சத்தம் கேட்டு
முருங்கை பறித்து,ஓடும் பல்லிகளுக்கு நடுவில்
கிணற்றில்தண்ணீர் இறைத்துத் தொட்டி நிரப்பி
உடைமாற்றி  மலைக்கோட்டை ஏறி உலகத்தையே ஆளும்
மகராணிபோல அந்தக் காற்றைச் சுவாசித்துக்
கீழே இறங்கி அம்மா அப்பா தம்பிகளுடனும்ஸ்ரீநிவாசப்பெருமாளையும்
கண்டுகொண்டு

கழித்த சனிக்கிழமை.பிறகுவரும் ஞாயிறு.
எங்கே போயின.
 நினைவில் பசுமையாகப் பாட்டுப் பாடிக் கொண்டு இருக்கின்றன

Saturday, August 29, 2015

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்ஆவணி அவிட்டம், ரக்ஷா பந்தன், ஆவணிப் பூர்ணிமை.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1957  ஆவணி அவிட்டம்.
சீனிம்மா எழுந்ததிலிருந்து  மற்றவர்களும் பம்பரமானார்கள்.
நாலு கட்டை பிரம்மச்சாரிகள்  இருக்கு.
ஸ்வாமிகள் வரும் நேரமாகிறது.
ஆண்டாள்  ஆத்தைப் பெருக்கி  மெழுகி வை.
மாக்கோலம் போடு..  நாலு   மணைகள் போடு..

கொடியிலிருந்து   நான்கு பேரின்   வேஷ்டிகளையும் கூடையில் போடு.

அம்மா, பாட்டிக்கு உதவியாகக் காலையிலே  எழுந்து  இட்லி,அப்பம்  எல்லாம் தயார்
செய்து கொண்டிருந்தார்.
என் தம்பிகளும்  கள்ளப் பூணலுக்காக ரெடியாக இருந்தார்கள்..
 எல்லோருக்கும் பசி. 11 மணிக்குக் குளத்தூர் வாத்தியார் ஸ்வாமிகள்  வந்ததும்  முறையாக உபாகர்மா நிறைவேறியதும் கண்கொள்ளாக் காட்சி.

1964   திண்டுக்கல்
ஆரவாரமில்லாத  ஆவணி அபவிட்டம். அப்பா காலையில் எழுந்ததிலிருந்து காப்பி குடித்துவிட்டுக் குளித்துவந்து ,தன் பிள்ளைகளுக்கும் திருமண் ஸ்ரீ சூரணம் இட்டு,பட்டு வேட்டி உடுத்தவைத்துப்

பூணல்  விழா  நடத்தினார். இந்தனாளின் விசேஷத்தையும் அவர்களுக்குச்  சொல்லி வைத்தார். காயத்ரி மந்திர ஜபப் பலனை
அவர்களுக்குப் புரியும் படி சொன்னார். ஆழப் பதிந்திருக்க வேண்டும் அந்தப் பச்சை மண்களுக்கு..அப்பா நன்றி. நானும் கொஞ்சம் கற்றுக் கொண்டேன்.
பசி ஒன்றுதான் பிடிக்கவில்லை.


1976  பாரிஜாதத்தில் ஆவணி அவிட்டம்..
நழுவப் பார்த்த சிங்கத்தைப் பிடித்து நிறுத்தியது அவர்து தந்தை.
இங்கே  ஆஜிப் பாட்டியின்  மிரட்டல்
  எல்லோரும் சாமி வந்தவர்களைப் போல ஆடிக் கொண்டிருந்தோம்.. ஆசாரம் ஜாஸ்தி இங்கே.
கிணற்றங்கரையில் ஒரு கடப்பாக் கல் மேடை. அங்கே உட்கார்ந்து கொண்டு அழகாகப் புத்தம்புதுப் பூணலோடு  வந்தவர்களுக்கு,மாமியார்களும் மருமகள்கள்களும்
சிரத்தையாகப் பரிமாறினோம்.
இடையிடையே  ஆஜிப் பாட்டியின் குரல்.பொண்டுகளா ஆண்பிள்ளைகளுக்கு வருஷத்துக்கு ஒரு விழா இது. அவர்களைக் கொண்டாடி
உணவு கொடுங்கள்  ....அவர்கள் ஆரோக்கியத்தோடு, ஒழுக்கம் வழுவாமல் நன்றகச் செழிப்போடு இருக்கப் பெருமாளைப் பிரார்த்தியுங்கள்
என்று சொல்லிக் கொண்டிருப்பார்.

இன்று இங்கே  நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். மாப்பிள்ளை, பேரன்கள்
உட்கார்ந்து தந்தை சொல்படி  செய்து கொண்டு இருக்கிறார்கள். வடை வாசனை மிதந்து வருகிறது

நானும் பதிவை எழுதிவிட்டுப் பசியாறப் போக வேண்டியதுதான்.
அனைவருக்கும்   ரக்ஷாபந்தன் வாழ்த்துகள்.

Friday, August 28, 2015

இன்னும் ஒரு கல்யாண சம்பவம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அம்மா  நான் ரொம்ப ப்ரௌனா  இருக்கேனா என்று கேட்டவாறு வந்து நின்ற பெண்ணை  அதிசயமாகப் பார்த்தாள்  சுந்தரி.
இதென்ன கேள்விடா   கண்ணு. நீ அழகாக் கலராத்  தான் இருக்க.
முகம் அலம்பிக்கோ. அத்தை வீட்டுக் கல்யாணத்துக்குப் போகணுமே.

நான் வரலை.

நேத்திக்குப் போட்டுக் கொண்டதையே போட்டுக்கணும்.
மத்தவா எல்லாம்  வேற வேற போட்டுக் கொண்டு வருவார்கள்.

நீ  நேத்திக்கு வரலை.
அத்தை என்னை தானே தலை வாரிக்கோ. கொஞ்சம் முகத்தைச் சிரித்தமாதிரி வைத்துக்கோன்னு சொன்னாமா.

சுருக்கென்றது சுந்தரிக்கு. வீட்டில் தங்கியிருந்த விருந்தினர்களைக் கவனித்து முடிக்கவே நேரம் சரியாக இருந்ததால் பெண்ணை   முன் கூட்டியே அவள் தந்தையுடன் அத்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டாள் .
ஏன்  நீ அவர்களோடு சேர்ந்து ட்ரஸ் செய்து கொள்ளவில்லையா என்றால்,
அத்தை அவர்கள் எல்லாம் தானாகவே அழகா இருக்கிறார்கள். நீ மட்டும் ஏதாவது செய்து கொண்டு வா. என்று அனுப்பிட்டா.
ஏன்மா நான் கறுப்பா. என்று மீண்டும் கேட்க்கும் பனிரண்டு  வயதுப் பெண்ணைக் கட்டிக் கொண்டாள் சுந்தரி.
இல்லடா. நீ கறுப்பு இல்ல. கறுப்பா இருந்தாலும் தப்பு இல்லை. பளிச்சுனு இருந்தால் போதும்.

மனசு சந்தோஷம் தான் முக்கியம். அவர்கள் சொல்வதை எல்லாம் எடுத்துக்காதே என்ற படி,சுந்தரி செய்த அடுத்த வேலை . பீரோவிலிருந்து  கல்யாணப் புடவையை  எடுத்து  கிழித்து டெய்லரிடம் எடுத்துச் சென்றதுதான். நல்ல சந்தனத்தில் உடலும் அரை சாண் ஜரிகையுமாக அமர்க்களமாக இருந்த பாவாடையைப் பார்த்ததுமே பெண்ணின் முகத்தில் பிரகாசம் .
ப ளப ளவென்று சுடர் போல நிற்கும் பெண்ணைப் பார்த்து இரட்டிப்பு சந்தோசம்   சுந்தரிக்கு

அம்மாவின் முத்துமாலை போட்டுக்கோ.
 போட்டாச்சு. ஏயப்பா எப்படித்தான் இருக்கு உன் தலைமுடி  இரட்டை ஜடை போட்டுவிட்டாள்.
அழகுக் கண்ணம்மா. என்று நெட்டி முறித்தாள் .
கையில் பாலைக் கொடுத்துக் குடித்துவிட்டுக் கிளம்பு நானும் வருகிறேன்
 என்ற படி வீட்டில் இருக்கும் ஆட்களைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு  கம்பீரமாகக் கிளம்பினாள்.  இனி நல்ல தாயாக மட்டும் இருப்பேன். என் செல்வங்களைத் தனியே எங்கும் அனுப்புவதில்லை என்ற தீர்மானம் மனத்தில் திண்ணமாக அமர்ந்தது.
-- 

Thursday, August 27, 2015

''ராதா கல்யாணம்'' எழுதியவர் ''கீதா;''

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption

ராதா  என்கிற அன்புமனம் கொண்ட பெண்ணின் பாசப் பிணைப்பு எப்படி அவளுடைய அத்தையையும் மகிழ்ச்சி வட்டத்தில் ஆழ்த்துகிறது என்பதே
என்பதே கதை.

கீதா  எனும் எழுத்தாளர்  எழுதிய சிறுகதை.
லதா  என்ற பெயரோடு ஒரு ஓவியர்  அப்போதெல்லாம் சாண்டில்யன் கதைகளுக்கு ஓவியம் வரைவர்,. நிறைய நாட்கள்  கழித்துதான் தெரியும் அவர் ல.தாமோதரன் என்று:)

அது போல இது எழுத்தாளரும் ஆணா பெண்ணா என்று தெரியவில்லை.
கதை நன்றாக இருந்தது.
அண்ணனின்  பாசத்தை எதிர்பார்த்து அவன் பெண்ணின் திருமணத்துக்குச் செல்லும் தங்கை.

ஒரு ஆறு மாதங்களுக்கு முன் தான் தன் பதினைந்து வயது மகனை இழந்தவள்.
அப்போதெல்லாம் டைபாய்ட்  வியாதிக்குப் பிழைப்பவர்கள்  கொஞ்சமே.
கணவனின் சேமிப்பான 500ரூபாயும் கரைய மகனையும் இழக்கிறார்கள்.

ஆரம்பத்தில் அருமையாக இருந்த அண்ணன்,மத்திய சர்க்கார்  வேலை கிடைத்து டெல்லிக்குச் சென்றதும்  சிறிது மாறுகிறான்.
அவன் மனைவி நீலா  முழுவதும் மாறிவிடுகிறாள்.
  நாத்தனாரின் மகன் மறைவுக்குக் கூட அவளால் வர மனம் ஒப்பவில்லை.
ஜெயத் துக்கும்   இரண்டு பெண்குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும்.
அங்கே அண்ணனுக்கும்
17 வயதில் ராதை என்கிற பெண்ணும் இரண்டு ஆண் குழந்தைகளும் .

கனு கார்த்திகைக்கு இரண்டு ரூபாய் அனுப்புவதோடு(????????????????????)
அவன் தன் பாசத்துக்கு அணை போட்டு விடுகிறான்.
மனைவியைப் பகைத்துக் கொள்ள மனமில்லை.

இந்த நிலையில் ஜெயத்துக்குக் கடிதம் வருகிறது.
''ராதைக்குத் திருமணம் செய்யப் போவதாகவும்.சென்னையில் உள்ள
தன் பங்களாவுக்குக் குழந்தைகள் கணவரோடு வந்து   திருமணத்தில் கலந்துகொண்டு

கௌரவிக்கவேண்டும் என்று   தேதியும் குறிப்பிட்டு
அண்ணன்    எழுதி இருக்கிறான்.

ராதையின் மேல் ஜெயத்துக்கு எப்பவுமே ஒரு பிணைப்பு. இறந்த தன் அம்மா போலவே இருக்கிறாள். அமைதியான குணம்   என்று எப்பொழுதும் மெச்சிக் கொள்வாள்.
அவள் மனம் குழப்பத்தில் தவிக்கிறது.
குழந்தை இப்போதுதான்  தவறியிருக்கிறான் தான் திருமணவைபவங்களில் கலந்து கொள்ளவேண்டுமா   என்று.
இரவு வேலை முடிந்து வரும் கணவனிடமும் முறையிடுகிறாள்.

அவனும் திருமணத்துக்குப் போவதுதான் பண்பு என்று முறையை எடுத்துச் சொல்கிறான். நம் துன்பம் நம்மோடு. அந்தக் குழந்தையை நாம் வாழ்த்தாமல் யார் வாழ்த்துவது என்று அடுத்த நாள் பணத்துக்கு ஏற்பாடு செய்யவும் ஒரு வழி சொல்கிறான்.

ஜெயம் போட்டுக் கொண்டிருக்கும் ஆறு பவுன் சங்கிலியை பாங்கில்  அடைமானம் வைத்து 300  ரூபாய் கொண்டு   வருகிறான்,
இரயில் செலவு,ராதைக்குத் திருமணப் பரிசாக  தங்கமுலாம் பூசின மோதிரம்
குழந்தைகளுக்குப் புது துணிமணிகள் ,ஜெயம் கழுத்துக்கு ஒரு கவரிங்  செயின் என்று
வாங்கி வருகிறான்.
ஜெயம் முதலில் கிளம்பிக் கல்யாணத்துக்கு முன்னால் செய்ய வேண்டிய
சமாராதனை  மற்ற  நல்ல விசேஷங்களில் கலந்து கொள்ள சென்னை வருகிறாள்  குழந்தைகளுடன்.

அவள் குடும்பத்துக்கு ஒரே பெண்.
அதனால் அண்ணன் அவளை முன்பாகவே வரச் சொல்லி எழுதி இருந்தான்.

ரயிலடிக்கு வரும் அண்ணனின் மகன் சேகர் அத்தையைப் பாசத்தோடு அழைத்துச் செல்கிறான்.

அங்கே பங்களா கொள்ளாமல் மன்னி நீலாவின் தங்கைகளும் அம்மா,சித்தி என்று  நிறைந்திருக்கிறார்கள்.
வந்திறங்கும் ஜெயத்தை வந்தியா என்று வரவேற்று  உள்ளே  சென்றுவிடுகிறாள் நீலா.

கல்யாணப் பெண் ராதா ஓடிவந்து அத்தையைக் கட்டிக் கொள்கிறாள்.
இருவர் கண்ணிலும் தவறிவிட்ட மோகனின் நினைவு  கண்ணீரை  வரவழைக்கிறது.
கண்கொத்திப் பாம்பாகப் பார்க்கும் ராதாவின் அம்மம்மா(!)
'நன்னாயிருக்கடி ரெண்டு பேரும் செய்யறது. கல்யாணப் பொண்ணா லட்சணமா சிரிச்ச முகத்தோடு இரு என்ன்று ராதாவை அழைத்துச் சென்று விடுகிறால்.
வரும் இரண்டு நாட்களிலும் ஜெயம் புறக்கணிக்கப் படுகிறாள்.
ஒரு சாதாரணப் புடவை கல்யாணத்துக்கு வாங்கித்தருகிறாள்
நீலா.
அவளுக்கும் அவள் உறவினர்களுக்கும் நல்ல பட்டுப் புடவைகள்   வந்து சேருவதை ஜெயம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள். திருமணத்துக்கு முதல் நாள் ஜெயத்தின் கண்வனும் வந்து சேர அவனுக்கும் வேட்டி அங்கவஸ்திரம் வைத்துக் கொடுக்கப் படுகிறது.
திருமணம் மிக ஆடம்பரமாக நடக்கிறது.
கச்சேரி,கதாகாலாட்சேபம் என்று  மூன்று நாட்கள் போனதே
தெரியவில்லை.
திருமணம் முடிந்த கையோடு கணவனையும் குழந்தைகளையும்
அழைத்துக் கொண்டு திருச்சி திரும்பிவிடுகிறாள்.
வந்தவளுக்குத் தனக்கு நேர்ந்த அவமானங்களை நினைத்துத் துக்கம் பொங்கி வருகிறது.
பிறகு மனதைத் தேற்றிக்   கொள்கிறாள்.
பணம் ஒன்றுதானே நம்மிடம் இல்லை. மற்றபடி நல்ல கணவன்,மணிமணியாகக் குழந்தைகள் .
என்று திருப்திப் பட்டுக் கொள்கிறாள்.
இரண்டு நாளில்  ஒரு மதிய வேளையில் அத்தை.... என்று குரல் கேட்கிறது.
வாசலில் கார் நிற்கும் சத்தம் ,கதவுகள் சாத்தப் படும் சப்தம் கேட்டதும் விரைகிறாள்  கதவைத் திறக்க.
அங்கெ புதுமணம் மாறாமல் நிற்கிறார்கள் ராதையு ம்  அவள் கணவன் மாதவனும்.

ஆச்சரியம் விலகாத நிலையில் ஜெயம் நிற்க வண்டியிலிருந்து வண்டி ஓட்டுபவர் பலவித பிஸ்கட் டப்பாக்கள்,பழங்கள்  துணிமணிப் பெட்டிகள் என்று கொண்டு வைக்கிறான்.
அதில் ஒரு புடவைப் பெட்டியை எடுத்து அத்தை கையில் கொடுத்து இருவரும் வணங்குகிறார்கள்.

என்னம்மா ராதா இதெல்லாம் என்று ஜெயம் கேட்க,
ராதை சொல்கிறாள்.
'அத்தை  எங்க  மாமியார் ரொம்ப நல்லவர்.
நீங்கள் கல்யாணத்தில் நடத்தப் பட்ட விதத்தை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார்.
நானும் கல்யாணம் முடிந்த  கையோடு அவர்களுடன் மதுரைக்குச் சென்றுவிட்டேன்.
அங்கேதான் என்னை அருகில் வைத்துக் கொண்டு உறவுகளின் பெருமைகளை எடுத்துச் சொன்னார்.
உங்க அம்மா மாதிரி நீ இருக்காதே.
அன்பும் அரவணைப்பும் எப்பொழுதும் நாமும் தரவேண்டும் .பெற வேண்டும்.

நீ உடனே மாதவனை அழைத்துப் போய் உன் அத்தையைப் பார்த்துவிட்டு வா.
நம்வீட்டிற்கும்   வரச் சொல்லி அழைப்பு கொடுத்துவிட்டு,கோவில்களெல்லாம் பார்த்துவிட்டு வாருங்கள் என்று அனுப்பினார்   அத்தை'' என்று மூச்சுவிடாமல்  சொல்லி முடிக்கிறாள்.

ஜெயத்தின் வருத்தமெல்லாம் மறைந்துவிடுகிறது. ஒரு பாசம் விலகினால் என்ன.இந்தக் குழந்தையின் அன்பினால்  என் மனத்தை    நிரம்பச் செய்துவிட்டானே இறைவன் என்று  கடவுளை நினைக்கிறாள். .


கதை   எல்லார் வீட்டிலும் ஏதாவது ஒரு விதத்தில் நடந்திருக்கும்..

எனக்கு மிகவும் பிடித்தது. உங்களுக்கெல்லாம் எப்படியோ.:)
,


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Saturday, August 22, 2015

Ricki and the Flash a movie with Merryl Streep

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அம்மாவும் பெண்ணும்.
Add captionஅம்மா  தன  குடும்பத்துடன் இணைகிற நேரம்.

இந்தப் படத்தை இன்றுதான் பார்த்தேன். எப்பொழுதும் மெரில் ஸ்ட்ரீப்  மிகப் பிடிக்கும்.
அவரது  டெவில் வெர்ஸ் ப்ராடா ,அவுட் ஆகப்  ஆப்ரிகா, கிரேமர் வெர்சஸ்    படங்கள். மிகக் கவர்ந்தவை..
எப்பொழுதும் ஒரு மாறு பட்ட பாத்திரங்களில் நடிக்க அவர் அஞ்சியதே இல்லை.
இந்த ஊரில் எத்தனை  வயதானாலும்   சிக் வடிவத்தில் காண்பிப்பது மேக் அப்பின் மகிமை.

கதைக்கு வருவோம். முதலில் சொல்லி விடுகிறேன். சத்தமான  படம். ஏனென்றால் பாட்டுப் பாடுவதற்காக குடும்பத்தை விட்டுப் போன ஒரு பெண்ணின் கதை.
சிறுவயதுக்  குழந்தைகளை அப்படியே விட்டு விட்டு தன  கனவைத் துரத்திக்கொண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் வருகிறாள் லிண்டா.
அவள் குணம் அது. மறக்காமல் குழந்தைகளைப் பார்க்கவும்   பிறந்தநாட்களுக்குப் பரிசுகளை அனுப்பவும் மறப்பதில்லை.
அதற்குள் அவள் கணவன் மறுமணம் புரிகிறான்.  அவனது புது மனைவியும் குழந்தைகளை நன்றாக கவனித்து  முன்னுக்குக் கொண்டு வந்துவிடுவார்கள்.

திடிரென்று   ரிக்கி என்கிற லின்டாவுக்கு  தொலைபெசியில்ம் அழைப்பு. பெண் அவள் கணவனால் கைவிடப்பட்டதில் மனமுடைந்து   இருப்பதாகவும்,லிண்டா வந்தால் நிலைமை தெளிவடையலாம்   என்றும் பீட் ,லிண்டாவின் கணவன் சொல்கிறார்,.
மனம்  பொறுக்காமல், கையில் பணம் குறைவாக இருந்தாலும்  பயணப்பட்டு வருகிறாள் லிண்டா  .
அவள்  ஏன்  நிறையப் பணம் சம்பாதிக்கவில்லை என்பது விளங்கவில்லை.
அவளைக் காதலிக்கும் கிரேக் என்னும் சகபாடகனையும்  தன்னை அண்ட விடுவதில்லை.
ஒரு முழு சுதந்திரம் பெற்ற பெண்ணாகத் தன்னை எண்ணவில்லை.
இப்பொழுது பெற்ற பெண் சங்கடத்தில் சிக்கிக் கொண்டாள் என்றதும் பதறி வருகிறாள்..
முதலில்  பெண் அவளை ஏற்பதில்லை. நீ விட்டு வீட்டுப் போனாய். இப்போது கணவன் விட்டுப் போய்  விட்டான் என்று கசப்புடன்  பேசுகிறாள்.  தான் செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் செய்ய முற்படுகிறாள்   லிண்டா. பெண்ணுடன்  பேசி மனதை மாற்றுகிறாள். மகன்களைச் சந்திக்கும் போது  முதல் பையனுக்குத் திருமணம் நிச்சயமாகி இருப்பதைகே  கேட்டு
அதிர்ச்சி அடைந்தாலும் காண்பித்துக் கொள்ளாமல் வாழ்த்துகிறாள். மேற்கொண்டு
குடும்பத்துடன் இருக்க வகையில்லாமல்  இரண்டாவது மனைவி வந்து விடுகிறாள்.
அவளிடம் வாய்வார்த்தை   சண்டையாக உருவெடுக்க மீண்டும் புறப்பட்டு விடுகிறாள். லிண்டா.

தன்னைக் காதலிக்கும் கிரேக் உடன் இணைகிறாள். இந்த சந்தர்ப்பத்தில்  முதல் பையனின் திருமண அழைப்பிதழ் வருகிறது.  தான் போகப் போவதில்லை என்று கிரேக் இடம் சொல்லும் லிண்டாவின் உள்ளத்தைப் புரிந்து கொள்ளும் கிரேக் தன்   கிடாரை விற்று இருவருக்கும்  இந்தியானா  போக    டிக்கெட் வாங்கிவிடுகிறான்.
கிரேகும் இசைக்காகக் குடும்பத்தை விட்டவன் தான்.
இருவரும்  தங்களை யாரும் விரும்பாவிட்டாலும் தாங்கள் எல்லோரையும் விரும்பலாம்  என்ற  உண்மையைப் புரிந்து கொண்டு திருமணத்துக்கு வந்து பாடி எல்லோரையும் சந்தோஷப் படுத்துகிறார்கள்.
பல இசைக் கலைஞர்களின் வாழ்வில் நடக்கும் விஷயம் தான். விவாகரத்து செய்யாதவர்கள் கிடையாது. மறுமணம் செய்யாதவர்களும் கிடையாது. அதை விரசமில்லாமல்  எடுத்த  திரைப் படமாக  வந்திருக்கிறது. மெரில் ஸ்ட்ரீப்  நடிப்பு  எப்பொழுதும்போல் பழுதில்லாமல் உருவாகி இருக்கிறது .  பாடல்களுடன் இணைந்த படமாக இருப்பதால்  தியேட்டரே அதிரும் வண்ணம் சப்தம்.
அது ஒன்றுதான் சகிக்க முடியவில்லை. சிறுவயதினருக்குப் பிடிக்கலாம்.
பார்க்கக் கூடிய படம்தான்.

Thursday, August 20, 2015

சில நினைவுகள்,பழங்கணக்குகள்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அம்மாவுக்கு  எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டும். 

எங்கள் துணிகளை அவள் நீவி நீவி  மடித்து வைக்கும் அழகை 
இன்றும் எண்ணிப் பார்க்கிறேன். அவளின்  நல்ல பழக்க வழக்கங்கள்
 பாதிதான் எனக்கு வந்திருக்கின்றன.
 மிக நிதானமாகச் செல்லும் வாழ்க்கையில் வம்பு தும்புக்கு இடம் கொடுத்தது கிடையாது.
நாமும் வம்பு பேசக் கூடாது. மற்றவர்கள் பேசும் விதம் நடக்கக் கூடாது ...இதுதான்
அவருக்கும்  அப்பாவுக்கும் வாழ்க்கைப் பாலிசி.

அப்பாவின் அறுபது வயதில் வீடு வாங்க  திட்டம் போட்டுத் தம்பிகளோடு சேர்ந்து
தி.நகரில்  இரண்டு  வீடுகள்  ஒரு பலமாடிக் கட்டிடத்தில் வாங்கினார்கள். அருகருகில் இருந்தததால் 
இரு வீடுகளுக்கும் தேவையான உதவிகளைச் செய்து கொள்ள முடிந்தது. தம்பிகள் இருவருக்கும்
வெளியூர்  செல்லும் வேலை.
அதனால் இரண்டு வீட்டு அவசரத்தேவைகள், மருத்துவரிடம் அழைத்துச் செல்வது போன்றவற்றை 
இருவருமாகச் சேர்ந்து கவனித்துக் கொண்டனர்.

பேரனும் பேத்தியும்  தாத்தா பாட்டியிடம் இன்னும் ஒட்டுதலாக இருந்தார்கள்.
பேத்தியைப் பள்ளியிலிருந்து அழைத்துவருவது  தாத்தாவின் வேலை. அவளுக்குப் பிடித்த பலகாரம் செய்ய வேண்டியது பாட்டியின் வேலை.
அப்பாவும் அம்மாவும்  வேலையிலிருந்து வரும் வரை  அமைதியாகப் பேத்தி 
தாத்தா பாட்டியிடம் இருப்பாள். பேரனும் தனக்குக் கல்வியில்  
என்ன சந்தேகம் இருந்தாலும் தாத்தாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்வான்.
அடுத்த நாளைக்கு வேணும் என்கிற ஜாமெட்ரி  டப்பாவிலிருந்து,
சார்ட் பேப்பர்  வரை அப்பா கவனித்துக் கொள்வார்.

அப்பாவின் திடீர்  மறைவில்   மிகவும் அழுதது  சின்னத் தம்பிதான்.

பசுமலை,காரைக்குடி,ராமேஸ்வரம்  என்று அப்பாவுடன் தான் கழித்த 
அருமை நாட்களைச் சொல்லிச் சொல்லி அழுதவனுக்கு மயக்கம் வராத குறைதான்.

இருந்தும் அப்பாவின்  காரியங்கள் முடிந்த 13 ஆம் நாள்  மகிழ்ச்சியாக தாய் மாமன்
கடமைகளை,செவ்வனே  செய்தனர்.
எங்கள் பெண்ணின்  திருமணத்துக்கு இருவரும் வந்து முகத்தில் சோகம் காட்டாமல்
மாலை மாற்றலில் பங்கெடுத்துக் கொண்டார்கள்.

கடவுளுக்கு  கண்கள் கிடையாது என்று அவர்கள் இருவரிடமும் 
நான்  மனம் வருந்தியபோது  இதற்கு மேல் உனக்குச் சோகம் வரக் கூடாது என்றுதான் அப்பா தானே 
கிளம்பிவிட்டார்.
அதை நினைத்து நீ  சந்தோஷமாக இருந்தால் தான் அவர் ஆத்மா  திருப்தி அடையும் என்று
என்னைத் தேற்றிய இருவரையும்
இன்றும் எனக்கு அண்ணன்களாகத்தான் பார்க்கிறேன்.

சின்னவன் இன்று இல்லாவிட்டாலும்  அவன் கொடுத்த ஆதரவுகளை மறக்கவில்லை.
இருவரது குடும்பங்களும் ஆண்டவன் அருளில்  செழிப்புடன் இருக்கவும்  இறைவன்
அருள் புரிவான்.


Tuesday, August 18, 2015

New windows.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்  இனிய  மாலைவணக்கம்.  விண்டோஸ்  10  தரவிறக்கம் செய்திருக்கிறார் மருமகன் .மனம் நிறை நன்றி. இனி எப்படி அது என்னை இயக்குகிறது என்று பார்க்கிறேன்.

Monday, August 17, 2015

மாற்றம் ஒன்றே மாறாதது.


 • எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 • முன்பு எப்பொழுதோ  முதுமை வருவதும் ,அதை  எப்படி சமாளிப்பது என்றும் 
  • எழுதிய  நினைவு.
  • ஆறெழு வருடங்கள் இருக்கலாம்.

  • சுவாரஸ்யமான விவாதங்கள் தொடர்ந்தன.கண்முன்னே 
  •  நிறைய சம்பவங்கள் நிகழ்ந்தேறி விட்டன.
  • முதுமை முழுதாக வரவில்லை என்றாலும் அதற்கான அலுப்பு வந்துவிட்டது.

  • சென்னையில்  பக்கத்துவீட்டை இடித்துக் கட்டப் போகிறார்களம்.
  • 1972இல்  கட்டப்பட்ட  பத்து வீடுகளில் எங்கள் வீடு மட்டும் இனி
  • தனியே தெரியும். மற்றவீடுகள் ஏற்கனவே  மாறி யாச்சு,.

  • பாட்டி  எப்படித் திட்டம் போட்டாரோ .தன்னிடம் இருந்த  நிலங்களைக் கூறு போட்டு
  • விற்றுவிட்டு, வீட்டையும்  இடிக்க ஏற்பாடு செய்யும் போது  மனம் என்ன
  • பாடு  பட்டதோ.
  • அந்தப் பெரிய வீட்டை இடிக்க பத்து மாதங்கள்  தேவைப்பட்டது.

  • பாட்டி  வீட்டை  இடிக்கும்போது ஒரு தடவை கூட வந்து பார்க்கவில்லையாம்.
  • புது  வீடு கட்டும்போது மட்டும்  வந்து பார்த்து செய்ய வேண்டிய 
  •  வேலைகளைச் சொல்லி இருக்கிறார்.
  • சிறுகக் கட்டிப் பெருக வாழ நினைத்து வந்தது. அவரது 80ஆவது வயதில்.
  • அப்போது என் மாமனாரும் மாமியாரும் அவருக்குத் துணை.

  • அதற்குப் பிறகு பல மாற்றங்கள். ஓய்வெடுத்து  இருக்க நினைத்தபோது நாங்கள்
  • ஐவரும்  வந்தோம்.
  • சிங்கத்துக்குச் சென்னைக்கான மாற்றல்.

  • வேறு வீடு பார்த்துக் கொண்டு போக  பாட்டி அனுமதிக்கவில்லை. மயிலையில்
  • குழந்தைகள்  படிக்கட்டும்.
  • தன் பேரன் மவுண்ட் ரோட் போய் வர பஸ்ஸும் வீட்டு வாசலில் வந்து கொண்டு இருந்தது.
  • தங்களுக்கும் நல்லது. எங்களுக்கும் நல்லது என்று தீர்மானித்துவிட்டார்.

  • இது நடந்து  நாற்பது வருடங்கள் ஓடியாச்சு.

  • இப்போது மீண்டும் என்னை என்ன செய்யப் போகிறாய் என்று 
  • இந்த  சிறுவீடு  கேட்கும் காலம்.  ஒன்றும் செய்யப் போஅதில்லை. உனக்கு வயசாகவில்லை.
  • இன்னும் திடமாக இருக்கிறாய். எங்கள் அடைக்கலமே நீதான்.  நலமுடன் 
  • இன்னும் பலகாலம் நலமாக இரு என்ற சேதியை அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.

  Wednesday, August 12, 2015

  பயணங்களின் நினைவுகள்

  எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  பயணங்களில் இனிய நினைவுகள்
  ***************************************************
  திருச்சி, சேலம் நகரங்களில் இருக்கும் போது
  அடிக்கடி சென்னைக்கு  வந்து சிங்கத்தின் பெற்றோரைப் பார்த்துவிட்டு வருவோம்.
  அப்படித் திரும்பி வரும் அழியில் விக்கிடரபபாஅண்டி அருகே எங்கள் ஃபியட்டுக்கு
  உடம்பு அரியில்லாமல் போயிட்டது. அப்போதெல்லாம்  மரங்கள் அடர்ந்த  சாலை ஒரு வழிப் போக்காக்த்தான் இருக்கும்.
  சிங்கம்  பானெடைத் திறந்து பார்க்கவும் ஒரு ஓரமாக வண்டியை நிறுத்தவேண்டுமே. அங்கேயே வயலருகில்  குடிசையில் அமர்ந்திருந்த
  பதம்பதிகள் வெளியே வந்தார்கள்.
  சாமிக்கு தண்ணி ஏதாவது வேணுமா. சூடேறிக்கிடுச்சா என்றபடி வந்தான் அந்த இளைஞன்.

  பிள்ளைங்களும் ,அம்மாவும் இப்படி பெஞ்சில  உக்காரட்டும்  வாங்கம்மா
   என்றழைத்தாள் அந்த இல்லத்தரசி.

  முதலில் தயக்கமாக இருந்தாலும் வெய்யில் சகிக்காமல்
  அந்த வேப்ப மரத்தடி பெஞ்சுக்கு வந்துவிட்டோம்.
  அதற்குள்  சிங்கம்  கார்புரேட்டர்  கோளாறாகிட்டதும்மா. நான் திண்டிவனம்  வரை போய் ரிப்பெர்  செய்து எடுத்துவரணும்.
  வுட் யூ  பி ஓகே  என்றார்  கவலையோடு.

  இரவு நெருங்கிக் கொண்டிருந்தது.  நான் அவரைத் துரிதமாகப் போய் வரச் சொன்னேன்.

  மீண்டும் அருகில் வந்து எங்கள் சுக நலங்களை விசாரித்தனர் தம்பதியர்.
  எங்க சாப்பாடு உங்களுக்கு ஒத்துக்காதே  என்னப்பா சாப்பிடுவீங்க என்றாள்
  அந்தக் கறுப்பழகி  வனமல்லி.
  நான் மதுராந்தகம் போய் இட்லி வடை  வாங்கி  வரவா என்றான் அந்த வாலிபன் புருஷோத்தமன்.

  நான் இருவரிடமும் அன்பைத்தான் பார்த்தேன்.
  இரவுக்கு என்ன சாப்பிடுவீர்கள் என்றதும்
    கத்திரிக்காய்  கடைஞ்சு,சாதம் வடிச்சிடுவேன் மா.
  புழுங்கலரிசிதான்  என்றாள்.
  எங்களுக்குக் கொடுத்துவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்றேன்.
  இல்லமா. இந்தக் காணி முழுவதும் எங்களதுதான்.
  நாங்க சாமி புண்ணியத்தில் செழிப்பாகத் தான் இருக்கிறோம் என்றாள் மல்லி.
  சிறிது நேரத்தில் நானும் அவளுடன் குடிசைக்குள் வந்துவிட்டேன்.
  அழகான அமைதியான் இடம். இருள் தெரியாமல் சிம்னி விளக்குகள்.
  இறகு நிதானமாக எரிய  45  நிமிடங்களில் அமுதமாகச் சமத்து இட்டாள்.
  தொட்டுக்க (உணக்கையாக!)  மிளைகாய்,கருவேப்பிலைத் துவையல்.
  பத்து மணி அளவில் சிங்கம்  வந்தார் வெற்றிகரமாக.
  கையில் குழந்தைகளுக்கான  பிஸ்கட், சாக்கலெட்,ப்ரட்.

  அதில்  சாக்கலட்டை அந்த இனிமையான தம்பதிகளுக்குக் கொடுத்து,
  பெட்டியிலிருந்து  புதிதாக வாங்கி இருந்த கண்ணாடி வளையல்கள் ,குங்குமம்
  எல்லாவற்றையும் ஒரு  சொளகில் வைத்து அவளிடம் நீட்டினேன்.
  அவள்  கொண்ட நாணமே அழகாக இருந்தது.
  ஐயா  சாப்பிடலீங்களா என்றார்.
  நான் அங்கேயே   சாப்பிட்டுவிட்டேன்  மா.
  இப்ப கிளம்பினால் திருச்சி   சேர 1  மணி ஆகீடும்.
  என்றார்.
  பாரதியின் காணி நிலமும் பத்தினிப் பெண்ணும்,அந்தக் காளையும் என் மனதில் இன்னும் இருக்கிறார்கள்.
  பசி அமர்த்தின அன்னபூரணியாயிற்றே.

  பிறகு அந்த வழி செல்லும்போதெல்லாம்  தேடுவேன். குடிசை சென்று நால்வழிப் பாதை ஆகி இருந்தது.
  அவர்களும் வீடு கட்டிக் கொண்டு  சென்றிருப்பார்கள். குழந்தைகளும் பிறந்திருக்கலாம். அவர்கள் வாழ இன்றும் பிராத்திக்கிறேன்.