Blog Archive

Saturday, April 30, 2022

மலைச் சாரல் கல் பங்களா, விஸ்கான்சின் 2007 House on the Rock.




Biggest  carousel  in the world.






இதோ தெரியும் வராந்தா ஒரே ஒரு பாறையின் மேல் அமர்ந்து இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா/











































சின்னவன் பிறந்த போது, நானும் சிங்கமும் இங்கே 
தங்கின ஆறு மாதங்களில்
 
பக்கத்தில் இருக்கும் சில நல்ல இடங்களுக்கு
வீட்டு வண்டியிலேயே போய் வந்தோம்.

தண்ணீரிலிருந்து, குழந்தை உணவு ஈறாகச் சகலமும்
வண்டியில் கொண்டது.

விஸ்கான்சின் மலைப் பங்களா, புதுவிதமாக
இருந்ததே தவிர பண விரயம் என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை,.

ஒரே ஒருவரின் கனவுலகம், மற்றும் கடும் உழைப்பு.
அந்த கல்மலையின் ஒரு உயர்ந்த பாறையில்

இத்தனை பெரிய வீட்டையும் சுற்றும் தோட்டங்களையும்
வருடக் கணக்கில் உழைப்பைக் கொட்டி முடித்திருக்கிறார்.









பத்தாயிரம் விளக்குகள் ,நூற்றுக்கணக்கான வடிவங்கள் கொண்ட ஒரு குடை ராட்டினம் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்?
ஏறி உட்கார்ந்து ஒரு ரைட் போகலாம் என்றுதானே.?
அது முடியாது இந்த இடத்தில்.
பின்னணி இசை போய்க்கொண்டே இருக்கும்.
கரௌசல் சுத்தி வரும். பொம்மைக் குழந்தைகள் உட்கார்ந்திருக்க, மயில்களும் ,அன்னமும்,குதிரைகளும் யானைகளும் சுற்றி வரும்.

உலகிலேயே மிகப் பெரிய ராட்டினத்தை இந்த மலைப் பங்களா என்று நான் பேர் சூட்டின த ஹௌஸ் ஆன் த ராக், பார்த்தோம்,.
நாங்கள் இந்த ஏழு நாட்கள் விடுமுறையில், எங்கே போவது என்று தலையைப் பிய்த்துக்கொண்டு,
இணையத்தில் தேடி,

ஹோட்டல் வசதி பார்த்து கிளம்பும்போது வெள்ளியாகிவிட்டது.
மழை அதோடு கூட உபரியாக வரும் அக்கா தங்கச்சிகள் எல்லாம் எதிர்கொள்ளவேண்டி வரும்
என்று பெண்ணும் மாப்பிள்ளையும் எச்சரித்தார்கள்.
நான் செய்த பூஜாபலம் னு பாடிக்கொண்டே
வண்டி ஏறினேன்.
பீட்சாவிலும், அரையடி ரொட்டியிலும் எனக்கு
நிம்மதி கிடைக்காது என்று, கடுகு கொட்டி(வார்த்தை சிங்கம் சொன்னது) தயிர்சாதம்.
'அதென்ன, உங்க அம்மாவுக்கு தயிர் சாதத்தில்
கருவேப்பிலை,பெருங்காயம், இஞ்சி,கொத்தமல்லி,
உளுத்தம்பருப்பு இதைத தவிர சாதம்னு ஒண்ணு கலக்கணும்னு என் மாமியார் கத்துக் கொடுக்கவே இல்லை'
என்று ஒரு நாள் விடாமல் அலுத்துக் கொள்ளுவார்.:)))))))))))))))

தேவைதான்'
என்று நினைத்தாலும் நானும் விட்டுக் கொடுப்பதில்லை.
கடைக்காரனுக்கு நஷ்டம் வந்து விடாதா/ நான் கடுகு வாங்காமல் யார் வாங்குவார்கள்?
இத்யாதிகளோடு நாங்கள் ஸ்ப்ரிங் க்ரீன் போய் சேர்ந்தபோது இரவு பத்து.
காலையில்லெழுந்து '' டெல்ஸ் மைனிங்''+ இந்த மலை மேல் பங்களாவைப் பார்ப்பதாக ஏற்பாடு.
பேரனுக்குப் பாட்டியோட முட்டி கவலை.
''அப்பா, பாட்டிக்கு வேணா வீல் சேர் சொல்லலாமா'

ஏற்கனவே ஸ்ட்ரொல்லர் எப்படி எடுத்துப் போவது
என்ற யோசனையில் இருந்த மாப்பிள்ளை, இதென்னடா புது பிரச்சினை என்று அந்த மலையையும் என்னையும்
மாறி மாறிப் பார்த்தார்.
அம்மா ,உங்களால் முடியும்னு தான் நினைக்கிறேன் என்றார்.
ஆமாம், ஆமாம் இப்போதான் உடம்பு இளைத்துவிட்டதே.
இதெல்லாம் சும்மா ஊதித் தள்ளிடலாம் என்பது மாதிரி ஒரு பாவனை காட்டிக் கொண்டேன்.

மற்றவர்கள் வண்டியைப் பார்க் செய்து வரட்டும் நாம் முதலில் போகலாம் என்று இறங்கினேன்.
ஒரு ஊஉ என்று காற்று.
ஒரு பளார் மின்னல்.
காலுக்கு கீழே பாறையே நடுக்கம் கண்ட மாதிரி ஒரு இடி.
டிஸ்கவரில இந்த மானெல்லாம், சிறுத்தைக்கு முன்னால் ஓடுமே அந்த வேகத்தில் நான் அந்த முகப்பிற்குள் ஓடி விட்டேன்.
உள்ளே நுழைந்தபின்னால் தான் இந்த ஊரில் கடைப் பிடிக்க வேண்டிய அமைதி,வரிசை எல்லாம்
நினைவுக்கு வந்தது.
காலில் ஷூ,
நெத்தியில் வட்டப் பொட்டு.,
பச்சை சிகப்பு சுடிதார்,
ஒரு பெரிய பழுப்பு ஜாக்கெட்.
அடடா இந்திய அம்மாக்கள் கொடுக்கும் இமேஜ் தான்
என்ன என்ன.
அங்கே வரவேற்பறையில் இருந்தவர்கள் ஏற இறங்கப் பார்த்துவிட்டுத் தங்கள் வேலைக்குத் திரும்பினார்காள்.
எனக்கு முன்னாடியே அங்கே இன்னும் இரண்டு அம்மாக்கள் அப்பாக்கள் !
ஒரு பெண் ஒரு மகன்.
அப்பா, அந்த அம்மா முகத்தில் வந்த சிரிப்பைப் பார்க்கணுமே.
அவங்க சேலமாம்.
ஒண்ணு கவனித்துப் பார்த்தால் தெரியும்.
வரும் அப்பாக்கள் ஷூ போட்டுக் கொள்ளுகிறார்கள்/
அம்மாக்கள் செருப்புதான்.
ஏன் அவங்களுக்குக் குளிராதா?:-)

கொஞ்சம் அவங்களுடன் கதைத்துவிட்டு
வெளியில் எட்டிப் பார்த்தால் உறுமல் நின்றிருந்தது.
எல்லோருக்கும் சீட்டு வாங்கினோம்.
ஆளுக்கு 20$ பழுத்தது.
ஒரு ஆச்சரியமான உலகத்துக்குள் போனோம்.
அலெக்ஸ் ஜோர்டன் என்பவர் கட்டிய வீடாம்.
அவர் ஆரம்பித்து வைத்ததை அவரது மகன் முடித்து வைத்து இருக்கிறார்.
ஆயிரத்து தொளாயிரத்து நாற்பதில் ஆரம்பித்து இருக்கீறார்கள்.
அப்போதெல்லாம் இது வெறும் பிக்னிக் ஸ்பாட்டாக இருந்து இருக்கிறது.
இந்த அலெக்ஸுக்கு மட்டும் இங்கே வீடு கட்ட வேனும்னு ஒரு வித வெறியே வந்துவிட்டது.

அதீத ஆசையைத் தான் ஸ்ட்ராங்கா சொல்லிட்டேனோ:-0)
பதிமூன்று அறைகள் அந்த பாறைகள் மேல் கட்ட
பதிமூன்று வருஷம் ஆச்சாம்.
முதலில்,
 தானே ,   தன் உழைப்பில், கற்கள் ,மரம் எல்லாம் முதுகில் சுமந்து போய் சேர்ப்பாராம்.
பணக்காரக் குடும்பம்தான்.
இங்கேதான் எல்லாம் டி ஐ.ஒய் ஆச்சே.
அப்படி ஆரம்பித்து இருப்பார் போல.
இதைப் பார்க்க வரேனு சொல்லரவங்க கிட்ட
50 செண்ட்ஸ் கட்டனம் வாங்குவாராம்.
அவர் ஏற்கனவே 'வில்லா மரியா' என்று பெண்களுக்கான பிரத்தியேகக் கட்டிடம் ,விடுதி
ஒன்று கட்டி இருக்கிறார்.


இரண்டு லெவலில் பார்க்கப் பட வேண்டிய அமைப்பு.
ஒருலெவல் பழைய காலத்துவீடு.
இன்னோண்ணு மியூசியம் மாதிரி உலகத்தில இருக்கிற அதிசயங்களீல் பாதியை செய்து வைத்து இருக்கிறார்.
அறைக்கு அறை ஒரு இசை உலகம். காசுபோட்டால்
ஜாஸ் இசை வெள்ளம்.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இருந்த ஃபையர் ப்ளேஸ்.
அடுப்படியில் பெரிய பெரிய அண்டாக்கள்.
எல்லாம் ஒரே பளபளா.
குழந்தைகளுக்குத் தனி உலகம்.50 வருடங்களுக்கு முன்னால் தயாரிக்கப்பட்ட செல்லுலாய்டு
பொம்மைகள் பெரிய கண்களோடு சர்வ அலங்காரத்தோடு நம்மைப் பார்க்கின்றன.இன்னும் சைன பொம்மைகள், ஜப்பானிலிருந்து தயாரித்த ஓவியங்கள்,
அதுதான் கருப்பு வெள்ளை மட்டும்
வண்ணம்னு சொல்கிற ஒரு விதமான
சோக ஹைகூ மாதிரி இருக்கும்.
அதுவும் அந்த மழை பெய்யும்போது வண்டி இழுக்கும் விவசாயியின் படம் தத்ரூபம்.
மழைபெய்ய,
கால் வழுக்க, பாரம் இழுக்கக்
கஷ்டப்பட்டு வேலையை முடிக்கணும்.
சாமி ! இதுதான் வாழ்க்கையானு
தோன்றிவிடும்.
மிச்சம் டூர் அப்புறம் பார்க்கலாமா?



விதம் விதமான பொம்மைகள்.


ஒவ்வொரு  பகுதியிலும் வெவ்வேறு இசை.


Friday, April 29, 2022

--சாப்பிட்டாச்சா? அம்மா.

வல்லிசிம்ஹன்

Thank you Muguntha. 


சிறுகதை    

--சாப்பிட்டாச்சா...---

சங்கரனுக்கு மிகப் பசியாய் இருந்தது. நேற்று இரவு 7 மணிக்கு சாப்பிட்டது. இப்பொழுது மணி காலை 8.45  ஆகிவிட்டது. சங்கரனுக்கு கொஞ்சம் அசிடிட்டி பிரச்சினை  உண்டு.  ஆகவே தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாக சாப்பிட்டு விடுவார். அதனால் மறுநாள் காலை   எட்டு மணிக்கே பசிக்க ஆரம்பித்து விடும். சாப்பிடலாம் என்றால் அப்பொழுதுதான் உணவு தயாராகிக் கொண்டிருக்கும். ஏன் லேட் என்று கேட்கமுடியாது. "ஆம்பளைங்க தான் பேப்பர் படிக்கணுமா... லேடிஸ் எல்லாம் பேப்பர் படிக்க கூடாதா ?"  என்று காலையில் பெண்ணுரிமை வாதம் ஆரம்பித்துவிடும். "ஏம்மா... நீ படிக்க வேண்டியதுதானே... யாரு உன்னை தடுத்தா? " என்பதுபோல் பதில் பேசினால் " ஆமா...ஆம்பளைங்களுக்கு என்ன கவலை?  ரிட்டயர் ஆனா பேப்பர் படிக்க வேண்டியது... தூங்க வேண்டியது... டிவி பார்க்க வேண்டியது.. வாட்ஸ்அப் பார்க்க வேண்டியது... பேஸ்புக்கில் எழுத வேண்டியது... பெண்களுக்கு என்ன ரிட்டயர்மென்டா... ஒன்னா?"  என்று பேச்சு நீண்டு கொண்டே போகும். மேலே சொன்ன அனைத்து நற்குணங்களும் அவர்களுக்கும் உண்டு என்றாலும்   வம்பு இல்லாமல் சாப்பிட வேண்டும் என்றால் சாப்பிடும்போது மட்டும்தான் வாயை திறக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டிருந்தார். ஆனால் இன்றைய கதையே வேறு. காலை வழக்கம்போல் காபி குடித்துவிட்டு பிறகு வாக்கிங் போய்விட்டு வீட்டுக்கு வந்தார். வந்தவுடன் மகளிடமிருந்து தொலைபேசி அழைப்பு.  மகள் தாரணியை நகரத்தில் இருந்த  பிரபலமான மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதித்திருக்கிறார்கள்.  குழந்தை பிறந்துவிட்டது. இதோ காலை சாப்பிட்டவுடன் அங்குதான் போக வேண்டும். அதற்கு இடையே  தொலைபேசி அழைப்பு.

" அப்பா... என் பிரண்டு சுமத்திரா வீடு தெரியுமா?...  அதான்பா...டி நகர்... பசுல்லா ரோட்ல சிக்னல் இருந்து இரண்டாவது கட்டிங்...கிரி தெருவுல...  என் கூட வேலை பார்க்கிறவள் அப்பா…"
 
மகள் ஒரு அரசு அலுவலகத்தில்  வேலை பார்க்கிறாள். அங்கு சுமித்ரா வீட்டுக்கு ஓரிருமுறை  போயிருக்கிறார். 

" ம்… சொல்லு…".

"அவ வீட்ல  பேபிக்கு கிரிப் இருக்குது.  குடுக்குறதா சொன்னா. போய் வாங்கிட்டு வந்துருங்க அப்பா…"  என்றாள்.

வெளியே போக வேண்டும் என்று சொன்னதாலோ என்னவோ அவருக்கு பசிப்பது போல இருந்தது. இருந்தாலும் உடனே எட்டு மணிக்கு வண்டியை எடுத்துக்கொண்டு பசுல்லா ரோடு  வந்தாகிவிட்டது. வரும் வழியில் உள்ள ஓட்டல்களில் இருந்து வெளியே வரும் மசால் தோசை வாசமும், பூரிக் கிழங்கு, சாம்பார் வாசமும் ஏற்கனவே எழுந்து உட்கார்ந்து கொண்டிருந்த பசியை ஆட்டம் போட வைத்துக் கொண்டிருந்தன. சாதாரணமாகவே பசி தாங்க மாட்டார் சங்கரன். இதற்கிடையில் இப்படி ஒரு தூண்டுதல்.  மணி எட்டரை.  சுமித்ரா வீட்டில் சுமித்ரா இல்லை. அவர் கணவர்தான் இருந்தார். 

" கொஞ்சம் இருங்க சார்...   இங்க  ஸ்கூல்ல குழந்தையை விட இப்பதான் போயிருக்கா... பத்து நிமிஷத்துல வந்திடுவா…" என்றார்.

 மணி  ஒன்பது ஆகிவிட்டது. இன்னும் சுமித்ராவை காணோம். பத்து நிமிடத்திற்கு எத்தனை நிமிடங்கள் என்று சங்கரனுக்குத் தெரியவில்லை.  வராண்டாவில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு வயிற்றுக்குள் போராடிக்கொண்டிருந்த பசிக்கு பகவத்கீதை சொல்லிக்கொண்டிருந்தார். அவ்வப்பொழுது வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தார். கேட்டில் இருந்த கம்பிகளை பலமுறை எண்ணிவிட்டார். இருபத்தி நாலாவது முறை எண்ணும்பொழுது சுமித்ரா  வீட்டுக்குள் வந்து விட்டாள்.
 
"அப்பா நீங்களா!… சாரிப்பா...  ஸ்கூல்ல கொஞ்சம் நேரமாயிடுச்சுப்பா... ஒரு டீச்சரை பார்த்தேன்... தாரணி கூட போன் பண்ணா.. இருங்க...எடுத்து வச்சிருக்கேன்... தரேன்.."  என்று உள்ளே போனவள்தான். 

சரி, எப்படியும் இன்னும் பத்து நிமிடத்தில் வீட்டுக்கு போய்விடலாம். சாப்பிட்டுவிட்டு ஆஸ்பத்திரிக்கு போக வேண்டும் என்று வடிவேலுவை போல் 'பிளான்' பண்ணிக்கொண்டிருந்தார்.  உள்ளே போன சுமித்ராவை பத்து நிமிடமாக காணவில்லை. மணி ஒன்பதரை நெருங்கிக்கொண்டிருந்தது. பசியோ  எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகிக்    கொண்டு இருந்தது. அதற்கிடையில் அவர் கணவர் ஸ்கூட்டரில்  கிளம்பிப் போய் விட்டார்.  

சங்கரன் ஒரு குரல் கொடுத்தார் "சுமித்ரா!  என்னம்மா.. ரெடியா?".  அவரா குரல் கொடுத்தார்.  வயிற்றிலிருந்த பசி  அவரை அந்தக்  குரல் கொடுக்க வைத்தது.

 " ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க.. தா வந்தர்றேன்…" என்றாள் சுமித்ரா

. " வெயிட் அ மினிட் பார் 5 மினிட்ஸா?... முருகா! அல்லா! ஏசு! " என்று ஒரு சர்வமத பிரார்த்தனையில் இறங்கினார்.   நல்லவேளை ஒன்பதே முக்காலுக்கு சுமித்ரா வெளியே வந்துவிட்டாள். 

" ஒன்னும் இல்லப்பா... கயிறு வைத்து கட்டிக் கொடுத்தேன்…" என்றாள்.

" அப்படியா!.. பரவாயில்லை…" என்று சொல்லிக்கொண்டே இன்னும் இவளுக்கு ஆபிசுக்கு நேரம் ஆகவில்லையா என்ன? என்ற தேவையில்லாத    எண்ணத்தை ஓரங்கட்டிவிட்டு வண்டியில் பாய்ந்து ஏறி ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாமல் வண்டியை முடுக்கினர் .

வீட்டு வாசலில் அவசரமாக வண்டியை ஸ்டாண்ட் போட்டுவிட்டு கிரிப்பை தூக்கிக்கொண்டு உள்ளே  பாய்ந்த போது மணி பத்து. " என்னம்மா கோமு... சாப்பாடு ரெடியா? " என்று ஏறக்குறைய கதறினார். " ஏங்க எப்ப பார்த்தாலும் உங்களுக்கு அவசரம்தான்... சாப்பாடு எல்லாம் ரெடிதான்... அதுக்குள்ள உங்க மக போன் பண்ணிட்டா... பிரேக் ஃபாஸ்ட்  உடனே கொடுத்து விடனுமாம்... அங்க சாப்பாடு சரியில்லை... பிரேக்பாஸ்ட் கொடுத்து விடும்மான்னா..பசியோட வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்னு...பச்ச உடம்பு...  கேரியர்ல எடுத்து வைத்திருக்கிறேன்... உங்களுக்கும் சேர்த்து... எடுத்துட்டு போங்க... இங்க சாப்பிட்டுட்டு இருந்தா நேரம் ஆயிடும்…".

 அடச்சே என்றாகிவிட்டது சங்கரனுக்கு. தாரணி மகள் என்பது சங்கரனுக்குத் தெரியும். 
தெரியுமா?.

 "சரி கொடுத்து தொல.. பிஸ்கட்... கிஸ்கட் ஏதாவது இருக்கா.. அவசரத்துக்கு வாயில போட்டுக்கிறேன்…"  என்றார்.

 "வாங்கிட்டு வந்தா தான் இருக்கும்…" என்று எரியும் தீயில் தீயில் எண்ணெய்யை ஊற்றியதும் அல்லாமல் இரண்டு விறகு கட்டையும் சொருகினார் சகதர்மிணி. 

'ஏதாவது வாயில் போட்டு வை... கொஞ்சம் உள்ளே தள்ளினால்  அவசரத் தேவையை சமாளிக்கலாம் ' என்று வயிறு ஒரு செய்தியை அனுப்பிக் கொண்டிருந்தது.  துறைமுகத்தில் தொங்கும் 10ம் எண் அபாயக் கூண்டை அலட்சியம் செய்யும் மீனவன் போல கேரியரைப் பிடுங்கிக் கொண்டு வெளியே வந்தார் சங்கரன்.  எப்படியும் இங்கிருந்து ஆஸ்பத்திரிக்குப் போக அரை மணி நேரமாவது ஆகும். அதுவும் டிராபிக் ஒழுங்கா இருந்தா. அது வரை நாம ஒழுங்கா இருப்பமா?.. மயக்கம் வந்துவிடுமா? என்று வானிலை அறிக்கை போல் குழம்பிய மனதை பொருட்படுத்தாமல்  எப்படியோ தட்டி முட்டி வாகனத்தை ஓட்டி ஆஸ்பத்திரி பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு உள்ளே ஓடினார். நாலாவது மாடியில் வார்டு. லிப்டை நோக்கி ஓடினார். லிஃப்ட் க்கு வெளியே கூட்டம், குழப்பம்.

" லிப்ட் பிராப்ளம் சார்... இருக்கிற லிப்ட் ஒன்லி பார் பேஷண்ட்ஸ்.. " என்று மருத்துவமனை பணியாளர் ஒருவர் கூறிக்கொண்டிருந்தார்.  இது என்ன டிசைன்னே புரியலையே?. 'அட... போங்கப்பா... நம்ம அவசரம் உனக்கு தெரிய மாட்டேங்குது. சரி...விடு...படியிலே போய்க் கொள்ளலாம். ஆனா முடியுமா?... ' என்ற மனதை, கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த பசி "முடியும்... முடியும்... போ " என்றது. எப்படியோ தட்டுத் தடுமாறி மூச்சிரைக்க நாலாவது மாடிக்கு வந்து பெல்லை அழுத்தினார். கதவு பாதி திறந்தது.

தாரிணி மட்டும் எட்டிப்பார்த்தாள். " அப்பா!  கொஞ்சம் வெளிய இருங்க... ஃபீடிங் டைம் ….நர்ஸ் வந்துட்டாங்க…" என்றாள்.

" சாப்பாடு எனக்கும் சேர்த்துக் கொண்டு வந்திருக்கிறேன்…" என்றார் சங்கரன்.

 தாரணி அதைக் கவனித்ததாக தெரியவில்லை. கதவு மட்டும் மூடிக்கொண்டது. வெளியே இருந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு கடிகாரத்தைப் பார்த்தார். 11மணி நெருங்கிக்கொண்டிருந்தது. ஒருநாளும் இவ்வளவு தாமதமாக சாப்பிட்டதில்லை. பசி தாங்கமாட்டார். அதுவும் 12 மணி நேரத்திற்கு மேல். ஆனால் இடையில் ஒரு காப்பி குடித்திருக்கிறார் காலையில். அதெல்லாம் அவர் பசிக்கு எந்த மூலை. போகிறவர் வருகிறவர் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தார். இவனுங்க எல்லாம் நல்லா சாப்பிட்டு இருப்பானுக... என்று அவருக்கு தோன்றியது. என்ன வெட்கங்கெட்ட மனது... பசி எப்படி படுத்துகிறது?.. இவள் எப்பொழுது ஃபீடிங்கை முடிக்க... நான் எப்படி சாப்பிடுவது... அடச்சே நானும் மனுஷனா! பேரன் பசித்திருந்தா  பரவாயில்லை என்று நினைக்கத் தோன்றுகிறதே...  பசி ஒரு வெட்கம் கெட்ட விஷயம்  என்று அவருக்குத் தோன்றியது. கண்கள் கதவையே பார்த்துக் கொண்டிருந்தன. எப்பொழுது திறக்கும் என்று. சரி! சரி! கேன்டீனில் போய் சாப்பிடலாம் என்றால் ஒருவேளை கதவைத் திறந்து மகள் நம்மை தேடுவாள் என்ற எண்ணம் வந்தது. என்னப்பா... நீங்க பொறுப்பே இல்லாமல்... ஒரு பத்து நிமிஷம் இருக்க மாட்டீங்களா... என்று பொறுப்போடு கேட்பாள் மகள். சாந்தி!  சாந்தி! என்று பசியை புத்தரை போல் சாந்தப்படுத்த முயன்று கொண்டிருந்தார். "சரி... ஒரு பத்து நிமிடம் பார்ப்போம்" என்று ஒரு சமாதானம் சொல்லிக் கொண்டார். மணி பதினொன்றறையை நெருங்கிவிட்டது. கடத்தல்காரர்கள் கொடுக்கும் கெடுவைப் போல பசியும் ஏதாவது நேரக் கெடு கொடுத்து இருக்கிறதா? என்று அவருக்குப் புரியவில்லை. நல்லவேளை கதவு திறந்து விட்டது. நர்சும் வெளியே வந்துவிட்டார். கொஞ்சம்  கூட வெட்கம் இல்லாமல் கதவை தள்ளி கொண்டு உள்ளே ஏறக்குறைய ஓடினார் சங்கரன்.  எங்கே அந்தக் கேரியர்?... கேரியரை கண் கண்டுபிடித்துவிட்டது. ஆனால் அதற்கு  முன்னால் அவர் மாப்பிள்ளை சீனிவாசன்.  கொஞ்சம் சமாளித்துக்கொண்டு "என்ன மாப்பிள்ளை... இந்த நேரத்தில்…" என்றார். மாப்பிள்ளை கல்லூரியில் பேராசிரியர். 
"காலையில் ஸ்பெஷல் கிளாஸ்  இருந்தது மாமா... இப்போ ஃப்ரீ... காலையில வீட்டில் சாப்பிடல…. சரி.. தாரணியையும், குழந்தையையும்  பார்த்துட்டு வீட்டுக்கு போகலாம்னு நினைச்சேன். அப்படியே லேட்டாயிடுச்சு. தாரிணிதான் சாப்பாடு நிறைய இருக்கு. இங்கே சாப்பிடுங்கன்னா... அத்தை ரொம்ப டேஸ்டா பண்ணி இருக்கிறார்கள் இன்று…" ஒரு சின்ன ஏப்பம் விட்டுக் கொண்டு கேரியரை மூடினார். மாப்பிள்ளை.
" ஹீ… ஹீ…  " எனறு சமாளித்தாலும் சங்கரனுக்கு வந்த கோபத்தை யாரிடம் காட்டுவது என்று தெரியவில்லை. சரி கேன்டீனுக்கு ஓடுவோம் என்று முடிவு செய்துகொண்டு "வெரிகுட் மாப்பிள்ளை... " என்று அர்த்தமில்லாமல் சொல்லிவிட்டு ஒரு அசட்டு சிரிப்புடன் வெளியே வந்தார். 

அதற்குள் போன் தம்பி கணேசனிடம் இருந்து. கணேசன் இவரை விட பத்து வயது சிறியவன். வீடு நங்கநல்லூரில். அம்மா வயதான காலத்தில் கணேசனுடன் இருக்கிறாள். தம்பி ஆடிட்டர். பெரிய வீடு. சுமுகமான மருமகள், பேரன், பேத்திகள்.
அம்மா தன்னுடன் இருக்க வேண்டும் என்பது சங்கரனின் ஆசையாக இருந்தாலும் அவள் நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் அதைவிட அதிகமாக இருந்தது.
 
போனை எடுத்து "என்னடா கணேசா இந்த நேரத்துல... ஆபிசுக்கு போகலையா " என்றார்.

 "இல்லேன்னா... ஒரு பிரச்சனை... அம்மாவுக்கு…" தம்பி.
 
"என்னடா... என்ன ஆச்சு அம்மாவுக்கு ? "  என்று பதறினார் சங்கரன். 

" இல்லன்னா காலையில டிபன் சாப்பிட்டுவிட்டு அம்மா வழக்கம்போல பேப்பர் படிக்க பேப்பரை எடுத்துட்டு சேரில் உட்கார்ந்தாள். சேர்ல சரியா கவனித்து உட்காராமல் நேரா கீழ விழுந்துட்டா... பிட்டியில் அடி... நம்ம தாரிணி இருக்கிற ஹாஸ்பிடல்லதான் அட்மிட் பண்ணி இருக்கிறேன்... ஆர்த்தோ பார்த்துவிட்டார்... ஒரு ஸ்கேன் பண்ணலாம் அப்படின்னார். இப்போதைக்கு அட்மிட் பண்ணிருங்க... வயசானவங்களா இருக்கிறார்கள்... அதுதான் ஒரு ஸ்கேன் ஒரு பார்த்துட்டு அப்புறம் வீட்டுக்கு அனுப்புறேன்னு…. செவந்த் ஃப்ளோர்ல ரூம் நம்பர் பத்து...  இன்னும் பத்து நிமிஷத்துல ஸ்கேனுக்கு கூட்டிட்டு போயிட்டு வாங்க... நீ ஆஸ்பிட்டல்ல இருந்தா வா அண்ணா…" என்றான். 

"தம்பி இங்கதாண்டா  தாரணி ரூம்ல இருக்கேன்.. இதோ இப்ப வரேன்.." என்றார் சங்கரன். 

ஏற்கனவே அம்மா, தம்பி வீட்டில் இருப்பது அவருக்கு மிகுந்த குற்ற உணர்ச்சி. இப்பொழுது அம்மா கீழே விழுந்து விட்டார். தானே தள்ளிவிட்டது மாதிரி அவருக்கு ஒரு தன்னிரக்கம். ஒருவேளை நம்மிடம் இருந்தால் விழுந்து இருக்க மாட்டாளோ. சீச்சீ நம்மைவிட தம்பி வீட்டில் தான் அதிக கவனிப்பு ஜாஸ்தி. அவருடைய சிந்தனைகளிலும் குழப்பத்திலும் அவருடைய பசி இருந்த இடம் தெரியவில்லை. ஆனால் முகத்திலும், உடலிலும் சோர்வு. லிஃப்ட்டுக்கு கூட காத்திருக்காமல் மடமடவென்று ஏழாவது மாடியில் அம்மா ரூமை அடைந்து கதவைத் தட்டினார். தம்பி ரூமைத் திறந்தார். 

"என்னெண்ணா...  உடனே வந்துட்டீங்களா!  "என்று வியப்பைக் காட்டினான். 

"ஆமாண்டா... அம்மா எங்க ?" என்றார். 

அம்மா கட்டிலில் கிழிந்துபோன நாராக கிடந்தாள். 84 வயது கீழே விழும் வயதா... அம்மா அருகில் சென்று நாற்காலியில் அமர்ந்தார். கண்களை மூடி அரை மயக்கத்தில் இருந்து அம்மாவின் கையை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டு மெல்ல தடவிக் கொடுத்தார். சிகப்புக்கல் பதித்த  அந்த வளையல்கள்  கையில் தட்டுப்பட்டது. அம்மாவுக்கு 25 வருட திருமண நிறைவுக்கு வாங்கி கொடுத்திருந்தார் . அம்மா எப்பவும் சொல்வார் " சங்கரா இது கையில இருந்தா நீ என் பக்கத்துல இருக்க மாதிரி இருக்குதுடா" னு. ஸ்பரிசம்பட்டு அம்மா கண்களை மெல்ல திறந்து பார்த்தாள்.

 "சங்கரா வாடா… " என்று ஏதோ  ஈனஸ்வரத்தில் முணுமுணுத்தார். 

 "என்னம்மா.." என்றார் சங்கரன். 

" அண்ணா... அம்மா வாய்க்கிட்ட காத வெச்சு கேளு…" என்றான் கணேசன். 

காதை மெல்ல அம்மாவின் வாய் அருகே கொண்டு சென்றார்.  மெலிந்த தன் கைகளால் அவர் கைகளைப் பற்றிக் கொண்டார் அம்மா.  எங்கிருந்தோ கேட்பது போன்ற மெல்லிய குரலில் ஈனஸ்வரத்தில்  "சங்கரா சாப்பிட்டியாடா…" என்றாள். 

சங்கரனின் கண்களில் கரகரவென்று  மடை திறந்த வெள்ளம் போல் கண்ணீர். அம்மாவை பார்த்தார். வலியில் மயக்கத்தில் கண்மூடி இருந்தது. இருந்தாலும் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு கண்களை கைகளால் துடைத்துக் கொண்டார் சங்கரன். மெல்ல முதுகை கைகளால் வருடும்  உணர்வில் தலையை திருப்பினார். கையில் ஒரு டிபன் பாக்ஸுடன் தம்பி. " அண்ணா காலையில் சக்கரை பொங்கல் பண்ணினோம்... அம்மாவுக்கு உன் நினைப்புதான்... சங்கரனுக்கு ரொம்ப பிடிக்கும்...  ரொம்ப பிடிக்கும்னு  உருகிப் போயிட்டா... அப்புறம் கீழ விழுந்து ஆஸ்பத்திரிக்கு கிளம்பும்போதுகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு கண்களை கைகளால் துடைத்துக் கொண்டார் சங்கரன். மெல்ல முதுகை கைகளால் வருடும்  உணர்வில் தலையை திருப்பினார். கையில் ஒரு டிபன் பாக்ஸுடன் தம்பி. " அண்ணா காலையில் சக்கரை பொங்கல் பண்ணினோம்... அம்மாவுக்கு உன் நினைப்புதான்... சங்கரனுக்கு ரொம்ப பிடிக்கும்...  ரொம்ப பிடிக்கும்னு  உருகிப் போயிட்டா... அப்புறம் கீழ விழுந்து ஆஸ்பத்திரிக்கு கிளம்பும்போது கூட மறக்காமல்...  சங்கரன் வருவான்டா என்ன பாக்க...  கொஞ்சம்  எடுத்திட்டு வாடா ஆஸ்பத்திரிக்கு... சாப்பிடுவான்னா " என்றான் தம்பி. இப்பொழுது தாங்க முடியாமல் அழுகை வர, அடக்கமுயன்று உடல் குலுங்கினார் சங்கரன். என்னவென்று புரியாமல் மெல்ல அணைத்துக்கொண்டு தம்பி சொன்னான் "அம்மாவுக்கு ஒன்னும் இல்லண்ணா... சரியாயிடும்…".

ரா.ரவிச்சந்திரன்

 பி.கு.

இந்தக் கதையை எழுதுவதற்கு ஒரு பொறியாக அமைந்தது Ms. Uma Shashikant  அவர்களின் ஒரு பதிவுதான்

அதன் முதல் பத்தி. என்னுடைய வாழ்விலும் அது பலமுறை நடந்திருக்கிறது. அதன் பாதிப்பு தான் இந்தக் கதை. சம்பவங்கள் முழுதும் கற்பனையே.

 ஒரு குழந்தையின் "அம்மா!.." என்ற குரலுக்கும், ஒரு பிச்சைக்காரனின் "அம்மா..." என்ற குரலுக்கும் வேற்றுமை உண்டு இல்லையா ?. அதுபோலத்தான் "சாப்பிட்டாயா…" என்று அந்த வார்த்தையை உச்சரிக்கும் தாயின்  குரலுக்கும். 
அதில் இருக்கும் ஆன்ம சுத்தியும், பரிவும் வேறு யார் சொல்லும்போதும் இருப்பதில்லை.  எத்தனை வயதானாலும் தன் பிள்ளைகளின் பசி தாய்க்குத் தான் தெரியும்.
வாட்ஸ்அப் பகிர்வு.
நெஞ்சை  நெகிழ  வைத்தது. 


Tuesday, April 26, 2022

உலக புத்தக தினம் ஏப்ரில் 24 ஆம் நாள்.

வல்லிசிம்ஹன்
   அனைவரும் வளமோடு வாழ வேண்டும்.
இந்த செய்தி அனுப்பிய சின்ன தம்பி வீரராகவனுக்கு
மனம்  நிறை நன்றி. என் மாமா ராமசாமி  ,மாதிரியே 
இவனும் புத்தகங்கள் ,எழுத்து, பேச்சு எல்லாவற்றிலும்
முன்னிற்கிறான். எப்பொழுதானாலும் அவன் உதவிக்கரம் நீட்ட
மறுப்பதில்லை. நீடு நல் வாழ்வு வாழ ஆசிகள்.@VeeraraghavanRamaswamy.


புத்தகம் வாங்குவோம்!
திருப்பூர் கிருஷ்ணன்
.......................................
   *புத்தகமோ பத்திரிகையோ எத்தனை பிரதிகள் விற்கின்றன என்பதைக் குறித்து அவற்றின் மதிப்பு கணிக்கப்படுவதில்லை. விற்பனை குறைவாக இருந்தாலும் தரம் காரணமாகவே மதிப்பு கூடுகிறது. 

  கடந்த காலப் பத்திரிகை வரலாற்றில் பெரும் பத்திரிகைகளைப் போல் மணிக்கொடியோ தீபமோ, சரஸ்வதியோ, சுபமங்களாவோ விற்றதில்லை. ஆனால் அவைபோன்ற பத்திரிகைகள் தான் இலக்கிய வரலாற்றில் இடம்பிடித்திருக்கின்றன.

  புத்தகமும் பத்திரிகையும் அதிகப் பிரதிகள் விற்பது நல்லதுதான். ஆனால் அதிகப் பிரதிகள் விற்பதற்கான சமரசங்களில் எழுத்தாளரோ பத்திரிகை ஆசிரியரோ ஈடுபடலாகாது.  

   மகாத்மா காந்தி வாழ்ந்த காலத்திலேயே அவரை அவர் சென்ற இடங்களிலெல்லாம் சென்று கண்டு திரைப்படம் எடுத்தவர் ஏ.கே. செட்டியார். உயர்தர காந்தியவாதியான அவர் குமரிமலர் என்ற அற்புதமான மாத இதழை நடத்திவந்தார். மிகக் குறைவான பிரதிகள் மட்டுமே அதை அச்சிட்டார். 

  வாசகர்கள் எந்த ஊரிலிருந்து சந்தா கட்ட விரும்பிக் கடிதம் எழுதினாலும் அந்த ஊரில் ஏற்கெனவே உள்ள குமரிமலர் சந்தாதாரரின் முகவரியை அனுப்பிவிடுவார். கடன்வாங்கி குமரிமலரைப் படித்துவிட்டு ஞாபகமாக திரும்பக் கொடுத்துவிடுமாறு அறிவுறுத்திக் கடிதம் எழுதுவார்! 

   ஆனால் பொதுவாக புத்தகத்தைக் கடன் வாங்குபவர்கள் பெரும்பாலும் திருப்பித் தருவதில்லை. அக்கம்பக்க வீடுகளில் காப்பிப் பொடி, சர்க்கரை கடன் வாங்கினால் திரும்பக் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. புத்தகத்தை வாங்கினால் நம்மிடம் வாங்கிய புத்தகம் வேறு யாருக்கோ கடனாகக் கொடுக்கப்பட்டு விடுகிறது. 

  புத்தகத்தைத் திரும்பக் கொடுக்காதது பற்றிய குற்ற உணர்ச்சி கூட யாருக்கும் இருப்பதில்லை. 

 `புத்தகங்களைக் கடனாகக் கொடுக்காதீர்கள். திரும்பி வராது. உதாரணமாக என் நூல்நிலையத்திலுள்ள புத்தகங்கள் எல்லாம் பிறர் எனக்குக் கடனாகக் கொடுத்தவைதான்!` என்று அனுபவஸ்தர் சொன்ன ஒரு பொன்மொழியும் உண்டு!

  இப்போது சில எழுத்தாளர்கள் நூலகங்களில் தாங்கள் புத்தகத்தைத் திருடிய விஷயங்களை விஸ்தாரமாக எழுதிப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். எல்லாத் திருட்டும் தவறுதான். புத்தகத் திருட்டும் அப்படித்தான். 

  ஏடுகளைத் தேடித் தேடி நடந்து உ.வே.சா. பல இலக்கியங்களைப் பதிப்பித்தார். அந்த வகையில் புத்தகப் பதிப்பகங்கள் அவருக்குப் பெரிதும் கடன்பட்டுள்ளன. பல அருமையான ஏடுகளை நதியிலும் நெருப்பிலும் விட்டுவிட்ட மக்கள் மத்தியில், உ.வே.சா.வுக்கு ஏடுதந்த பெருமக்கள் நன்றியுடன் நினைவு கூர்வதற்கு உரியவர்கள்.

  எழுத்தாளர் பிரேமா நந்தகுமாரின் தந்தை கே.ஆர். ஸ்ரீனிவாச ஐயங்கார் புத்தகப் பிரியர். உலக அளவில் நடைபெற்ற ஷேக்ஸ்பியர் மாநாட்டுக்கு ஆசியாவிலிருந்து அழைக்கப்பட்ட ஒரே ஆங்கில அறிஞர் அவர். 

  90 வயதுக்கு மேல் வாழ்ந்த அவருக்குக் கடைசிக் காலத்தில் கண்பார்வை போய்விட்டது. அப்போது கூட புத்தகங்களைத் தடவிக்கொடுத்துக் கொண்டிருப்பார். புத்தகங்களைத் தொட்டுப் பார்ப்பது ஒரு பாதுகாப்புணர்வைத் தருகிறது என்பார் அவர்.

  மறைந்த எழுத்தாளர் அநுத்தமா ஒருமுறை சொன்னார், `புத்தகங்களைப் படிப்பது மட்டுமல்ல, அடுக்கிவைப்பது, அட்டை போடுவது போன்றவை கூட சுகம்!` என்று. செல்லப் பிராணிகளைப் பராமரிப்பதில் உள்ளது மாதிரி புத்தகங்களைப் பராமரிப்பதிலும் தனி சுகம் உண்டு.

  தம் கடைசிக் காலங்களில், கண்பார்வை இல்லாமல் பல ஆண்டுகள் வாழ்ந்த அ.ச.ஞா., பெரியபுராண நூலின் மேற்கோள்களைப் பக்க எண்ணோடு சொல்வார். தம் புதல்வி செல்வி மீரா வாசித்துக் காட்டும்போது பக்க எண்ணையும் சேர்த்து மனத்தில் வாங்கிக் கொள்வார். 

  அவரும் சரி, பல ஆண்டுகள் கண்பார்வை இல்லாமல் வாழ்ந்த சாதனையாளரான கோவை ஞானியும் சரி - இவர்கள் இருவரும் வேறு வழியில்லாததால் அடுத்தவர்களிடம் வாயால் சொல்லி எழுதியவர்கள். 

  சொல்லி எழுதும் முறைக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் பிள்ளையார் தான். வியாசர் சொல்லச் சொல்ல பிள்ளையார் தந்தத்தை ஒடித்து மகாபாரதத்தை எழுதியதாகச் சொல்கிறது புராணம். 

  வை.மு. கோதைநாயகி தொடக்கத்தில் தமது சில நாவல்களைச் சொல்லி எழுதினார். காரணம் அப்போது அவருக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. பிறகுதான் தாம் சொன்னவற்றை எழுதிய தம் தோழி பட்டம்மாள் மூலம் அவர் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டார். 

  பத்திரிகையாளர் எஸ்.எஸ். மாரிசாமி வயோதிகத்தின் காரணமாகச் சொல்லி எழுத யாராவது ஆள் கிடைப்பார்களா என்று தேடிக் கொண்டிருந்தார். அப்படி ஆள் கிடைப்பதற்குள் அவர் காலமாகிவிட்டார். 

  அப்போது `முன்பே தெரிந்திருந்தால் நான் போய் உதவி செய்திருப்பேனே, நான் எழுதுவதை விடவும் அவர் எழுதுவதல்லவா முக்கியம்` என்று பெரிதும் மனம் வருந்தினார் வண்ணநிலவன். 

  கோவை போன்ற பெருநகரங்களில் செல்வந்தர்கள், ஆயிரம் ரூபாய்க்கு மேல் அடிக்கடி புத்தகங்கள் வாங்குவார்கள். நல்ல புத்தகம் என்று தோன்றுவதையெல்லாம் வாங்கி வீட்டில் அடுக்கி வைப்பார்கள்.

  படிக்காமல் புத்தகத்தை அடுக்கி வைப்பதால் என்ன பிரயோஜனம் என்று தோன்றும். ஆனால் அப்படி வாங்கி வைப்பவர்களால்தான் புத்தகங்கள் தொடர்ந்து வியாபாரம் ஆகின்றன. அப்படி வியாபாரம் ஆவதால் தான் பதிப்பகமும் அதையொட்டி எழுத்தாளர்களும் பிழைக்க முடிகிறது. 

  எனவே படிக்க நேரமில்லாவிட்டாலும் கூட புத்தகம் வாங்கும் சக்தி படைத்தவர்கள் நிறைய வாங்கவேண்டும். வாங்கியவர் படிக்காவிட்டாலும் படிப்பவர்களுக்கு அந்தப் புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுக்கலாம். 

  தவிர வீட்டைக் கலைப்பொருட்கள் அழகு படுத்துவது மாதிரிப் படிக்காவிட்டாலும் கூடப் புத்தகங்கள் வீட்டை அழகுபடுத்தத் தான் செய்யும். வாங்கியவர் படிக்காவிட்டால் என்ன? அவரது வாரிசுகள் எதிர்காலத்தில் படிக்கக் கூடும்.

  புத்தகங்கள் படிக்க மட்டுமல்ல, நல்ல நிமித்தம் சொல்லும் நண்பனாகவும் இருந்ததுண்டு.. நூல் போட்டுப் பார்த்து வரவிருப்பது நல்லதா கெட்டதா என்று ராமாயணத்தை வைத்து அறிந்து கொள்ளும் பழக்கம் முன்பு இருந்ததுண்டு.

   சாவியின் புகழ்பெற்ற நாவலான வழிப்போக்கனில் ஒரு காட்சி. கதாநாயகன் சென்னைக்குப் புறப்படும்போது அவன் அப்பா ஒரு ராமாயணப் புத்தகத்தை அவனிடம் கொடுத்து `கஷ்டம் வரும்போது இதைப் பிரித்துப் படி. உன் கஷ்டம் தீர்ந்து ஆறுதல் கிட்டும்` என்று சொல்வார். 

  அவன் ரொம்ப காலம் அதைப் பிரித்துப் படிக்க நேரமில்லாமலே இருந்துவிடுவான். 

  உண்மையிலேயே ஒருமுறை கஷ்டம் வரும்போது அப்பா சொன்னது நினைவு வர, அதைப் பிரித்துப் படிப்பான். படிக்க முற்படுவதற்கும் முன்பாகவே அவன் கஷ்டம் தீர்ந்துவிடும். 

  அந்த ராமாயணப் புத்தகத்தின் பக்கங்களின் இடையே நூறு ரூபாய் நோட்டை வைத்திருப்பார் அப்பா. கதாநாயகனின் பொருளாதாரக் கஷ்டத்தை நீக்க அந்த நூறு ரூபாய் பயன்படும். (அந்தக் காலத்தில் நூறு ரூபாய் என்பது பெரியதொகை.)

  இப்போது ஈ புக் எனக் கணிப்பொறிப் புத்தகங்கள் வரத் தொடங்கிவிட்டன. கணிப்பொறியின் மூலம் பழைய இலக்கியங்கள் முழுவதையும் நாம் `ப்ராஜக்ட் மதுரை` போன்ற தளங்களில் வாசிக்க முடிகிறது. 

  ஆனாலும் அச்சிட்ட புத்தகங்களில் இருக்கும் செளகரியம் இதில் கிடையாது. முக்கியமாக சாய்வு நாற்காலியில் மல்லாந்து படுத்துக் கொண்டு கணிப்பொறியை வாசிக்க இயலாது. 

  எதிர்காலத்தில் கூட அச்சிட்ட புத்தகங்களுக்கு இருக்கும் மதிப்பு குறையும் என்று தோன்றவில்லை. 

  நம் மரியாதைக்குரிய முதுபெரும் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் தமக்கு ஆங்கிலம் தெரியாது என்று பொய்சொல்வார்! ஆனால் பல ஆங்கில நூல்களைப் பற்றி அற்புதமாக உரையாடக் கூடியவர் அவர். 

 பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம், ஆங்கில இலக்கியம் எல்லாமே நம் அறிவை விசாலப்படுத்தக் கூடியவை. ஓர் உண்மையான வாசகன் எந்த மொழியையும் வெறுக்க இயலாது. 

  ஜெயகாந்தன் தாம் பள்ளியில் அதிகம் படித்ததில்லை என்பார். அவர் பள்ளியில் படித்ததில்லை என்பது உண்மையாக இருக்கலாம். 

  ஆனால் தனிப்பட்ட முறையில் ஏராளமாகப் படித்த பெரிய படிப்பாளி அவர். பாரதியையும் கம்பனையும் அவரைப் போல் எழுத்தெண்ணிக் கற்றவர்கள் இன்று சொற்பம்.  

  கவிஞர் வைதீஸ்வரனை ஒரு தொலைக்காட்சியில் ஒரு பெண்மணி பேட்டி கண்டார். தாம் தொடக்கத்தில் கையெழுத்துப் பத்திரிகை நடத்தி அதன் மூலம் இலக்கிய ஆர்வம் பெற்றதாகச் சொன்னார் வைதீஸ்வரன். 

  `கையெழுத்துப் பத்திரிகை`யை எத்தனை பிரதி `அச்சிட்டீர்கள்` என்று தம் அடுத்த கேள்வியைத் தொடுத்தார் பேட்டி கண்ட பெண்மணி! இந்த அற்புதமான அறிவுசார்ந்த வினாவுக்கு வைதீஸ்வரன் விடைதெரியாமல் விழிக்க நேர்ந்தது அவரின் துர்ப்பாக்கியமே!

  கல்வெட்டு, ஓலைச்சுவடி, அச்சு, இன்று மின் ஊடகம் எனப் புத்தகத் தொழில் பல்வேறு பரிணாம வளர்ச்சியைப் பெற்றுக்கொண்டே வருகிறது. விரைவில் இன்னும் என்னென்ன விதத்திலெல்லாம் புத்தகங்கள் வருமோ தெரியாது. 

Saturday, April 23, 2022

எங்க மதுரை............

வல்லிசிம்ஹன்

  அனைவருக்கும் எல்லா  நலங்களும் கிடைக்க இறைவன் அருள வேண்டும்.
எங்கள்  அழகர் மலை கள்வர் பெருமாள்.
செய்தி அனுப்பிய தம்பி முகுந்தனுக்கு    நன்றி.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


 மதுரைல பைக்கை எடுத்தா இருபது நிமிஷத்துல அழகர் கோவிலுக்குப் போயிடலாம். 
 வருஷம் பூராம் அழகரு அங்கேயே தான் இருக்காரு.  ஆனால், 
அழகரு வருஷத்துல ஒரு தடவ மதுரைப் பக்கம் வந்துட்டுப் போவார்
தங்கச்சி மீனாச்சி கல்யாணத்தப் பாக்க ஆசப்பட்டு அழகர்மலையில இருந்து மதுரைக்கு கிளம்புவார சும்மால்லாம் கிளம்பிட முடியாது, அங்க காவல் தெய்வமான பதினெட்டாம்படிக் கருப்புகிட்ட உத்தரவு வாங்கிட்டு தான் கிளம்ப முடியும். அங்க இருக்கிற ஒத்த கருப்ப சாமி
ஓராயிரம் கருப்பசாமியா மாறி பக்தர்களுக்குள்ள இறங்கி பாதுகாப்புக்குக் கூடவே வரும். சாமி இறங்கினவங்க ’திரி’ப் பந்தம் ஏந்தி, கையில் மொரட்டு அருவாளைத் தூக்கிக்கிட்டு கருப்பன் அருளோட சாமியாடிட்டு வருவதை எதிரில் நின்னு பார்த்தா அடிவயித்துல அமிலம் சுரக்கும்.
வருஷத்துக்கொரு தடவ வெளியே வர்றவர சும்மா விட்டுட முடியுமா? 
வர்ற வழியில கள்ளந்திரி, அப்பன் திருப்பதின்னு எல்லா  ஊர்லயும் மண்டகப்படி போட்டு மரியாத பண்ணி கொஞ்சிக் கூத்தாடும் பக்தர்கள் அன்புல தங்கச்சி கல்யாணத்துக்கு நேரத்துக்குப் போகணும்ங்கிறதையே மறந்துடுவாரு. 

 இந்தப் பக்கம் எங்க ஆத்தா மீனாச்சிக்கும்,  எங்கப்பன் சொக்கனுக்கும் கல்யாணம் நடந்திடும். 
எங்க வீட்டுக் கல்யாணக்
கொண்டாட்டத்துல அந்தப் பக்கம் அழகர் இன்னும் வரலைங்குறதையே இவய்ங்களும் மறந்துடுவாய்ங்க… மங்கையர்க்கரசி திருக்கல்யாணத்துக்காகவே வருஷம் பூராம் காத்திருந்து மதுரை மகராசிக பூராம் மாங்கல்யம் மாத்துவாங்க. 

அதாவது,  அன்னிக்கு அம்புட்டு வீட்லயும்
கல்யாணம்தான் ஆத்தாவையும் அப்பனையும் தேர்ல வச்சு ஊர்வலம் சுத்தி வந்தப்புறம் தான், 
ஐயய்யோ அழகரு வாராம எல்லாம் நடந்துடுச்சேன்னு இவங்களுக்கு சுருக்குனு இருக்கும். 
இருந்தாலும் எப்படியாவது சமாதானப் படுத்துவோம்னு தென்கரையில நினைச்சுட்டு இருக்கிற நேரத்துல, வடகரையில அழகரு ஆடி அசஞ்சு மதுரைக்குள்ள வந்துடுவாரு.

இராத்திரி கொஞ்சம் காலாறுவோம்னு தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு போயிட்டு, அங்க ஏற்கனவே வந்து காத்திருக்கும் நம்ம ஆண்டாள் நாச்சியின் மாலைய தோளில் வாங்கிச் சாத்திக்கிட்டு,  
மறுபடி தங்கக் குதிரையில ஏறி கோயில விட்டு வெளியே வரும் அழகைப் பார்த்ததும்,  கோயிந்தா கோய்ய்ந்தோவ்வ்வ் ”னு இலட்சக்கணக்கான குரல்கள் ஒன்னா கூப்பிடும் பாருங்க
ஆத்மா சிலிர்த்தெழுறதுன்னா என்னானு அப்ப தெரியும்.

சித்திர மாசக் கத்திரி வெயிலுல இத்தன இலட்சம் பேரு கூடியிருந்தா வெந்து போயிட மாட்டீங்களானு வெளியூர்க்காரங்களுக்கு தோணலாம். ஆனால்,  தண்ணீர் பீச்சும் பக்தர்கள் தோள் வலிக்க வலிக்க சந்தோசமா
தோப்பறையில தண்ணிய
 நெப்பிக்கிட்டு ரோட்டிலேயும் ஆகாசத்திலும் தண்ணியப் பீச்சிப் பீச்சு மதுரையவே குளிர வச்சுடுவாங் (தோலினால் செய்யப்பட்ட பை. ஒரு பக்கம் பெரிய துவாரம் வழியாக நீரை ஊற்றி அடைத்துவிட்டு இன்னொரு பக்கம் சின்னதா ஒரு துவாரம் வழியாக நீரினைப் பீச்சி அடிப்பது).

இப்படி ஒவ்வொரு மண்டகப்படியா அழகரை இழுத்துப் பிடிச்சு வாங்கய்யா வாங்கய்யானு மதுரக்காரய்ங்க பாசத்தைக் கொட்டிக் கொட்டி அலைக்கழிச்சு ஆத்துக்குள்ள இறங்கிறப்ப விடிஞ்சுடும்
விடியக்காலம் அழகர் ஆற்றில் இறங்கும் போது ஒட்டு மொத்த மதுரையும், 
இலட்சக்கணக்கான குரலில்
அடிமனசிலிருந்து  கோவிந்தாஆஆஆஆனு கூப்பிடும் போது பாற்கடலிலிருந்து பரந்தாமன் லேசா திரும்பி மதுரையைப் பாப்பாரு எங்க அழகர் தங்கக் குதிரையில் பட்டுடுத்தி,  பவனிக்கும் அழகில் மயங்கி மறுபடி சயனத்துக்கே போயிருவாரு

இதான் எங்க ஊரு திருவிழா 
உலகில் வேறெங்கும் இவ்வளவு உயிரோட்டமாய் ஒரு திருவிழா சாத்தியப்படுமா?
தெரிலை
 எங்க  பெண் வாரிசுகளை மீனாட்சியாகவும்..ஆண் வாரிசை அழகராகவும் கொண்டாடுவோம்பா
ஒட்டு மொத்த மதுரை மக்களின் பொதுவான குலதெய்வமாய் அழகரும் மீனாட்சியும் கொண்டாடுவோம்
எங்க மதுரை எங்கள் சொர்க்கம் பா.

Thursday, April 21, 2022

நயாகரா பயணம் 4


வல்லிசிம்ஹன்

எங்க நிறுத்தினேன் கதையை. ஆ! வண்டியை இடித்து பிறகு வீட்டிற்குப் போகும் சமயம் அந்த பொண்ணு(நம்ம வண்டி கிட்ட ராங் செய்த பொண்ணு வந்து''கான் ஐ டிராப் யூ சம்வேர், ஏதாவது வாங்கிக்கொடுக்கட்டுமா'' என்று வேறு கேட்டாள்.

நாங்கள் தர்மசங்கடமாக முகத்தை வைத்துக் கொண்டு வேணாம்ம்மா.நாங்களே பார்த்துக்கறோம். எங்களுக்கு இங்கே நண்பர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டோம். பிறகு எண்டர்ப்ரைசஸ் என்ற கம்பெனிக்கு போன் செய்து ஒரு டாட்ஜ் வண்டி வாடகைக்கு எடுத்து அடுத்த நாள் மதியம் கிளம்பி டெட்ராய்ட்டிலிருந்து டொரண்டோ வந்தோம்.




ஆர்ச்சார்ட் லேக் ரோட்+ மைலைத் தாண்டும் போது எல்லோருக்குமே படபடப்பாகத்தான் இருந்தது. சரி ஏதோ போதாத நேரம்தான். ஒரு நாள் வீணாகிப் போனது. லயன் சஃபாரி போக முடியவில்லை. குழந்தைகளும் நாங்களும் மிகவும் எதிர்பார்த்தது இந்தக் காட்டுப் பயணத்தைத்தான்.
டொரண்டோ வந்து சேர்ந்த போது ஆறு மணியாகிவிட்டது. விடுதியில் உடை மாற்றிக்கொண்டு 'சப்வே ' தேடிப்போனோம்.
ஒரு இந்தியர்தான் அந்தக் கடையை நடத்திக் கொண்டிருக்கிறார். அவ்வளவு சுமுகம் இல்லை. போனால் போகிறது. எங்களுக்கு வானவில்லையும், ஏர்போர்ட் அழகும், பிளேன் வந்து இறங்கும் அழகும் பற்றிப் பேசவே நேரம் சரியாக இருந்தது . 



அடுத்த நாள் சிஎன் டவர் பார்த்து விட்டு நயாகரா கிளம்ப வேண்டும் என்கிற ஆவலே உற்சாகமாக இருந்தது. காலையில் எழுந்து கீழே வந்து இலவச காலை உணவையும் உள்ளே தள்ளி, இணையத்தையும் பார்த்து முடித்தபோது 11 மணியாகிவிட்டது.

சிஎன் டவர் கூட்டம் நிறைய இருக்கும்.அன்று ஞாயிற்றுக்கிழமை வேறு.
நினைத்தது போலவே கியூ நீளமாக இருந்தது டவர் அடிவாரத்தில்.
இரண்டரை மணி நேரமாவது நிற்கவேண்டும் என்றார்கள். என்னடா செய்யலாம் என்று யோசித்தபோது மாப்பிள்ளைக்கு நல்ல யோசனை ஒன்று தோன்றியது.



'இந்த டவர் கூட பார்க்கவில்லைன்னா நம்ம பயணம் குறையாகவே இருக்கும். இதன் முக்கால் உயரத்தில் ஒரு சுழலும் ரெஸ்டாரண்ட் இருக்கு. அங்கே போகலாம். அத்ற்கு வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை'என்றார். அதாவது சிஎன் டவர் என்கிற இந்தக் கோபுர சுமார் 1800 அடி உய்ரம் என்றால், இந்த உணவு விடுதி 1500 அடியில் இருந்தது. அதற்கு 360 டிகிரி என்று பெயர். அது ஒரு சுற்று முடிக்க 72 நிமிடங்கள் ஆகிறது என்று எழுதி வைத்திருந்தார்கள். இதைவிட உயரமானது நம்ம துபாய் டவர்தான். (ஆமாம் நாம்தானே கட்டினோம்:) 

மேலே இருக்கும்
அந்த உணவு விடுதியில் வெஜிடேரியன் உணவு கேட்ட போது ''இருக்கு' ''என்றார்கள். எல்லாம் பெரிய சைஸ். குடமிளகாய், எக்ப்லாண்ட்,தக்காளி எல்லாவற்றையும் ஆலிவ் எண்ணெயில் வதக்கிக் கொண்டு வந்து வைத்தார்கள். நாங்கள் ஏறி வரும்போது நகரத்தின் ஒரு பக்கத்தை கண்ணாடிச் சுவரில் பார்த்தபடியே (லிஃப்டில்) ஏறினோம். அங்கு சாப்பிட்டால் அந்த ஸ்கை வாக் பகுதியும் பார்க்கமுடியும் என்றார்கள். படு கமர்ஷியல்மா. இல்லாவிட்டால் இவ்வளவு பணம் இங்க சேருமா!!

View from CN Tower


சைவ உணவுதான்:)  வயிற்று கெடுதல் செய்யவில்லை.


சரிதான் நாம் க்ராண்ட் கான்யானிலியே அந்த ஸ்கைவாக் பார்க்கவில்லை. இங்கயாவது பார்க்கலாம். என்று சாப்பிட்டு முடித்தவுடன் அங்கே போனோம். ஒரு முப்பது சதுர அடி இருக்கும் ன்று நினைக்கிறேன். நானும் அந்தக் கண்ணாடித் தரையில் நின்று பார்த்தேன். என் பெண் வர மறுத்து விட்டாள். நானும் இரண்டு பேரன்களும் நின்று படம் பிடித்துக்கொண்டோம்.திகில்தரைதான் அது எல்லோரும் படுத்துக் கொண்டு படமெடுத்துக் கொண்டார்கள். அதில் தமிழ் அம்மாக்கள் அதிகமாகவே இருந்தார்கள். நமக்கெ வீரம் அதிகம்தான்:)
கீழே பார்த்துவிட்டால் கொஞ்சம் நடுக்கம்.கீழே சாலையில் போகும் கார் மற்றவாகனங்கள் எறும்பாகத் தெரிந்தன,.
அப்போது எப்பவோ கேட்ட ஜோக் ஞாபகத்துக்கு வந்தது.''பாருடா கீழே காரெல்லாம்,மனிதரெல்லாம் எறும்பாகத் தெரிகிறார்கள் என்று ஒரு அப்பா தன் முதல் விமானப் பயணத்தில் சொல்ல ,அது நிஜ எறும்புப்பா. இன்னும் ப்ளேன் கிளம்பவே இல்லை என்று பையன் சொல்லுவான்:)''
இது அந்த மாதிரி இல்லை. உண்மையாகவே பூமிக்கும் நமக்கும் இடையில் இந்தக் கண்ணாடித்தரைதான். த்ரில்லிங்காக இருந்தது.




கீழே வந்து வழக்கமா வாங்குகிற குட்டி சூவனீர்கள் எல்லாம் வாங்கி கனடியன் டாலரைக் கொடுத்து வெளியே வந்தோம்.

மாப்பிள்ளை வண்டி ஓட்ட, அவருக்குத் தூக்கம் வராம இருக்க சிங்கம்

 பேசிக்கொண்டு வர நான் கிருஷ்ணாவின் பக்கத்து சீட்டில் அமர்ந்து வன் மழலையோடு பேசுவதைக் கேட்க, பெரிய பேரனும் பெண்ணும் அதற்குப் பின்னால் இருந்த சீட்டில் ஹாரி பாட்டர் பார்க்க, வந்து சேர்ந்தோம் நயாகராவுக்கு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


   என் பதிவுகளுக்கு நிறைய பின்னூட்டங்கள் 
வருவது கிடையாது.
முன் கை நீண்டால் தானே முழங்கையும் நீளும்:)












எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

Wednesday, April 20, 2022

நயாகரா மறக்க முடியாத அனுபவம் 3


வல்லிசிம்ஹன்

அனைவரும் வளமாக வாழ வேண்டும்.இது ஒரு மீள் பதிவு. 
ஆகஸ்ட் 2008 இல் நயாகராவை இரண்டாம் தடவையாகக்
காணச்சென்ற போது,
படங்கள் மட்டும் தான் எடுத்தேன்.
அப்போது வீடியோ எடுத்துப் பதிவு செய்யத் தெரியாது.

அருவியின் பல படங்களில் மகளும்,அவள் குழந்தைகளும் 
இருப்பதால்  இங்கே பதிய முடியவில்லை.

back to old:)😑😏😐😆😈😖😕😔
ஆகஸ்ட் 8ஆம் தேதி காலை அம்மாவின் மறதி தெளிவாக எல்லாராலும் விலாவாரியாக
விவாதிக்கப்பட்டது.
மற்ற இரண்டு பேரும் தொலைவில் ஐஎஸ்டி பேசும் தூரத்தில் இருந்ததால் அவர்களுக்கு செய்தி போகவில்லை.
பெண் உடனேயே நீ உட்கார்ந்துக்கோம்மா .விழுந்துவிடாதே ஏதாவது செய்து உன்னை க் காப்பாற்றி விடுகிறேன்'' என்று ஆறுதல் சொன்னாள்:). எனக்கு பெரிய கஷ்டமாக இல்லை. உள்ளூர கொஞ்சம் பயம்.
அடுத்த பிளான் நாங்கள் கனடா விசாவுக்குப் போவது,
மகள் சிகாகோவில் அவளுடைய வைத்தியரிடம்(  டாக்டர் லதா நாக்பால்)
 நிலைமையைச் சொல்லி மருந்து ப்ரிஸ்க்ரிப்ஷன் கேட்பது.
அவள் சிகாகொவுக்குப் போன் போடும்முன் நான் வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டுவிட்டேன்.

..அவங்க கிட்டெ என் மருந்து பேரை மட்டும் எழுதிக் கொடுத்துவிட்டு கிடைக்கணுமே சாமின்னு பிள்ளையார்கிட்டச் சொல்லிட்டு அப்புறம் ராகவேந்திரர் கிட்ட ஒரு அப்ளிகேஷன் கொடுத்துவிட்டுக் கனடியன் அலுவலகத்துக்குப் போனோம்.
எல்லாவற்றையும் ஆராய்ந்து ஒரு மணிநேரத்தில் விசா
வந்து வாங்கிக் கொள்ளச் சொல்லவும் நாங்கள் அங்கியே உட்கார்ந்துவிட்டோம்.
ஒருவழியாக வீடு வந்து சேரும்போது மணி ஒன்று.
அதற்குள் மகள் டாக்டரிடம் பேசி,திரும்பிப் போனதும் அவளுக்கு உண்டான குசல விசாரிப்புகளைச் சொல்லுவதாகச் சொல்லி(KIND Enqueries and  thank you money gift:) )

ப்ரிஸ்க்ரிப்ஷனை லோக்கல் சிவிஎஸ் மருந்துக்கடையில் சொல்லிவிட்டாள்.


எனக்கு வெட்கம் ஒரு புறம் அவமானம் ஒரு புறம். பிரச்சினை தீர்த்துக் கொடுத்தாளே மகராஜின்னு நன்றி ஒரு புறம்.
நண்பருக்கு நன்றிகள் சொல்லிவிட்டு வண்டியை எடுத்து பெட்ரோல் ஸ்டேஷனுக்கு வந்தோம்.
அங்கேயிருந்து மருந்துக்கடையில் அவர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி, 30 டாலர் மனசு
ஆகாமல் கொடுத்துவிட்டு வெளியே வந்தோம்.
'ஆம்லாங் ஏ' நம்ம ஊரில இந்த விலைக்கு ஐந்து ஸ்ட்ரிப் வாங்கி இருக்கலாம்.
எப்படியோ நிலைமை கட்டுக்கு மீறாமல் காப்பாற்றித் தந்த அந்த டாக்டரம்மாவைச் சொல்லணும்.
இவ்வளவு முயற்சியும் எடுத்துக் கொண்ட மகளையும் சொல்லணும்.

present tense  pun intended.
அவளுக்கு இப்பவும் அந்த வேலை இருக்கிறது.(2022)
மாதா மாதம் எனக்கு வேண்டும் என்கிற  இரண்டு மருந்துகளுக்கும் 
கடைக்கு  ஞாபகப் படுத்தி எடுத்து
வைக்கச் சொல்லி வெளியே போகும் போது 
வாங்கி வந்துவிடுவாள்.
மற்ற மருந்துகள் இந்தியாவிலிருந்து வரவழைப்பதும் அவளே.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இப்போத  2008க்குப் போகலாம்.
மருந்துக்கடையிலிருந்து வெளி வந்து சூசன் அம்மா சொல்கிறதைக் கேட்டுக் கொண்டு ஆர்சார்ட் லேக் அண்ட்
13 மைல் ரோடில்  (அதுதான் பெயர்) திரும்பினோம்.
இந்த ஒரு திருப்பத்துக்கப்புறம் இனிமேல் ஒரே நகைச்சுவைதான் சரியா.

இந்தத் திருப்பத்தில் பின்னாலிருந்து வந்த ஒரு வெள்ளைக்கார அம்மா எங்க வண்டி பம்பரை ஒரு தட்டு தட்டிவிட்டு
வண்டியைக் குறுக்கே போய்க் கொஞ்சம் தள்ளி நிறுத்தினாள்.
நாங்கள் அலறிவிட்டோம்.
அவள் இடித்த சைடில் இருந்த சின்னது அதோட கார்சீட்டில் ஷாக் அடித்த மாதிரி அழ ஆரம்பித்துவிட்டது.
அன்று நாங்கள் டொரண்டோ கிளம்பப் போவதில்லை என்பது தெளிவாகியது.
ஏனெனில் கொஞ்ச நேரத்தில் போலீஸ் மாமாவும் வந்துவிட்டார். மிசிகன் சட்டப்படி இரண்டு பேரும் ம்யுச்சுவல்
செட்லிங் செய்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டுப் போனார்.
மாப்பிள்ளை இன்ஷுரன்ஸுக்கும், கார் ரிப்பேருக்கும் போன் செய்ய ஆரம்பித்தார்.
நாங்கள் வண்டியில் உட்கார்ந்து கொண்டு கேட்டுக் கொண்டிருந்தோம்.
சிங்கம் நடுரோடில் நின்ற காருக்கு அவசிய சிகித்சை செய்தார்.
ஒரு இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும், கிளம்பி வந்த நண்பர் வீட்டுக்கேப் போய்ச் சேர்ந்தோம்.
விருந்தோம்பலில் சலிக்காத அந்தப் பெண்ணை நான் மறக்க முடியாது.

மீண்டும் பார்க்கலாம்.


அதனால் நயாகராவின் முக்கிய அங்கங்களை
யூடியூபிலிருந்து எடுத்துப் பதிவிடுகிறேன்.
கீதா சாம்பசிவம் சொல்வது போல
சில வீடியோ வரவில்லை என்றால் 

நேரே  இணையத்தில் பார்க்கலாம். 
வாழ்வின் மறக்க முடியாத நீர்வீழ்ச்சியும் அதனுடைய
magical attraction   உம் மறக்க முடியவில்லை.
நான் இன்னும் நம் ஊர் குற்றாலம் கூடப்
பார்த்ததில்லை என்பதை இங்கே சொல்ல வேண்டும்:))))))))))))))))))))))))))))))))


Tuesday, April 19, 2022

ஆட்டத்திலே பல வகை," Niagara 2

அனைவரும் வளமாக வாழ வேண்டும். Vallisimhan
Toranto   scene 1



நயாகராவில் முதல் நாள் இப்படியாகச் சென்றது.
இரண்டாம் காலையிலேயே  சூரிய உதயம் காண
 
ஜன்னல் அருகில் உட்கார்ந்து கொண்டோம்
நானும் சிங்கமும்.
காப்பி சாப்பிடாமல் வெளியே போக முடியாத குளிர்.
நாங்கள் அங்கே சென்றது ஒரு 
குளிர் தாங்க, வயிற்றுக்கு ஈய வேண்டிய கடமை
இருந்தது. 



 மேலே இருப்பது தான் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்
சொன்ன பணம் கட்டி செய்யும் காம்ப்ளிங்க்.
அது பெரிய படுகுழி.
பத்து டாலர் பந்தயம் கட்டுவதிலிருந்து
லக்ஷக் கணக்கில் பணம் தோற்பார்கள் 
ஜயிப்பார்கள்.
நாங்கள் அந்தப் பக்கம் போகவில்லை:)
பாகப் பிரிவினையில் இந்தப் பாடல் வந்தபோது

நம்பியார் இந்த மாதிரி சர்க்கஸ் நடத்திப் 
பணம் இழப்பதையும்,
அதற்கு எம் ஆர் ராதா வழிவகுப்பதையும் கண்டு 
இந்த ஆட்டத்தின் மேல் ஒரு வெறுப்பே
வந்தது.
திரைப்படங்களைக் கண்டு நன்மை கற்றது அந்த நாள்.














பயண ஆரம்பம் சிகாகோ

இப்படியாகத்தானே பலவித டீல்களையும் பார்த்து ஒரு வார ஆராய்ச்சியில் ஹோட்டல் விடுதிகளை இணையத்தில் தேடி,ரிவார்ட்ஸ் பாயிண்டுகளைப் பயன்படுத்தி மாரியாட்(டொரண்டோ) விடுதியில் இரண்டு அம்மா அப்பா,இரண்டு குழந்தைகள் தங்க ஒரு அறை ஏற்பாடு செய்தார்கள். முதல் கட்டம் முடிந்தது.
அடுத்தது நயகரா புக்கிங். நயகரா கொட்டும் அழகைப் பார்த்தவாறு ஒரு அறை வேண்டும் என்று தேடி அதுவும் கிடைத்தது:)
14ஆம் தேதி ஒரு மணிக்கு மதியம் கிளம்ப நினைப்பு. ம்ஹூம் நாங்கள் கிளம்ப மணி நாலு ஆச்சு. டெட்ராய்ட் போய்ச் சேர 5 மணிநேரம் பிடிக்கும்.
மாப்பிள்ளையின் நண்பர் அங்கெ இருக்கிறார்.
அவர் வீட்டில் இரவு தங்கி,அடுத்தநாள் கனடியன் விசா எடுப்பதாகவும்,எடுத்த கையொடு பயணம் தொடர உத்தேசம்.
நடுவில் சூசன் அம்மா(GPS)வை வேற வாங்க வேண்டி வந்தது. அவங்க கூடவே வந்து வழிகாட்டியதால் தான் எல்லா இடங்களையும் ஒழுங்காகக்
கடந்தோம்! அதான் இந்த ஜிபிஎஸ்ஸின் மகிமை.

ஆனால் ஒன்று கொஞ்சம் ரோடு மாறினாலும் அந்த அம்மா,'கீப் ரைட் 'சொல்ல ஆரம்பித்துவிடுவார்,.
அப்படியெல்லாம் மகா சௌகரியமாக ஆரம்பமான பயணம்,பாதியில் நிதானப் படவேண்டி வந்தது.  சாலையில்
ஒரு பெரிய 'மாக்' ட்ரக் மழையில் கண் மண் தெரியாத வேகத்தில் வந்து,
கவிழ்ந்து விட்டது.
நல்ல வேளை அந்த வண்டி ஓட்டுனருக்கு அடியில்லாமல் தப்பித்திருந்தார்.
அந்த விஷயத்தில் போக்குவரத்தை ஒழுங்கு செய்த சாலைப் போலீசாரை மெச்சவேண்டும்.
ஒரு வண்டி அந்த இடத்தைக் கடப்பதற்கே 10 நிமிடம் ஆகியது.
வெகுஜாக்கிரதையாக மழையில் ஒளிபாய்ச்சியபடி நின்றவர்களைப் பார்த்து
அதிசயப் பட்டேன்.
இப்படி அப்படியாக நண்ப்ர் வீட்டுக்குப் போய்ச்சேர இரவு 1 மணி ஆகியது.
அவர்களும் கதவைத் திறந்த நொடியிலிருந்து எம்க்களுக்கு படுக்க வசதி செய்து கொடுத்து தூங்கப்போகையில் மணி இரண்டு!
இதெல்லாம் இருக்கட்டும்.
என்னுடைய மறதி மகிமை அடுத்த நாள் காப்பியுடன் வெளிவந்தது.
இரத்த அழுத்த மாத்திரை மட்டும் எடுத்துவர மறந்திருந்தேன்.
அலுப்பாக இருக்கிறதா:)
நாளை பார்க்கலாம்.




Sunday, April 17, 2022

இணையம் படுத்தும் நேரம். April 17.2022

வல்லிசிம்ஹன்இணையம் படுத்தும் நேரம்.

பாட்டு இல்லை.
சாட்டு இல்லை

நெட்ஃப்ளிக்சும் இல்லை. ப்ளாகர் இல்லை.
ஜி  மெயிலும் இல்லை.

கடவுளே நன்றி. 
இதை எழுதி சேமிக்க ஒரு அழகி இருக்கிறாள்.
6.33 காலை ஏப்ரில் 17.

நம் ஊரானால் பக்கத்தில் இருக்கும் எக்ஸேஞ்சை 
அழைத்து என்ன தொந்தரவு என்றால்
ஏதாவது பதில் வரும் .கம்ப்ளைண்ட் கொடுங்கம்மா
வந்து பார்க்கச் சொல்கிறேன்.

கொஞ்ச நேரம் கழித்து மணி வருவார்.
வீட்டை சுத்தி முத்தி பார்ப்பார்.
டெலஃபோன் கம்பி தவிர எல்லாம் அவர் கண்ணில்
படும்.
எலி இருக்குதாம்மா? இல்லையே அப்பா. எல்லா
வேரையும் கெல்லி வச்சிருக்கே மா.
நான் ஒரு நல்ல எலிபோக்கி வச்சிருக்கேன்
வாங்கி வரட்டுமா.?

வேண்டாம்ப்பா. நீ கனெக்ஷன் மட்டும் பாரு.
நீங்க ஒருத்தர்தான் இங்கே கணினி
பயன்படுத்துகிறீர்களா. 
உங்களுக்குக் கொடுத்த நேரம் எல்லாம் தீர்ந்து
போச்சோ?
இதுக்குன்னு கம்ப்ளைண்ட் கொடுக்கணும்னா
மந்தைவெளி தலமை போஸ்ட் ஆஃபீஸ் 
போகணும்மா.
இதெல்லாம்  20 வருடங்களுக்கு  முந்தின செய்தி.
அப்புறம் மொபைல் ஃபோனில் தம்பிகளொடு
பசங்களோடு ,தோழிகளோடு பணம் கொடுத்து
வாங்கிய இணைப்பில் பேசிய நாட்கள் தொடர்ந்தன.

நோகியா உலகை இணைத்த காலம்.
இணையம் இருக்கும் போது ஸ்கைப், யாஹூ மெசஞ்சர்,
எல்லாம் குடும்பங்களை இணைத்தன.
பேரங்களோடு, பேத்திகளோடு பார்த்து பேசி,
இணையம் கிடைக்காத காலங்களில் 
நெட் கஃபே சென்று, ஒரு மணிக்கு 
இத்தனை ரூபாய் என்று பேசி வந்த நேரங்கள்.


இணையம் இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு 
வீட்டுக் காரும், வீட்டுக்காரரும்.:)
அவர் அவரது வேலை முடிந்த போது 
என் மேல் இரக்கப் பட்டு வாகனத்தில் அழைத்துக் கோவில்கள், ராசியில் சீட்டுக் கட்டுவது, காஞ்சீவரம் சில்க்கில் காட்டன் புடவைகள் வாங்குவது, ஸ்ரீவித்யா ஸ்டோர்சில்
குங்குமம்,அகர்பத்தி,சாம்பிராணி,மஞ்சள் பொடி, லஸ் டெய்லர் 
கடை என்று அழைத்துச் சென்று
மயிலை ரவுண்ட் அப் முடிப்பார்.

அவருக்கும் தோதுப் படவில்லையானால்
இருக்கவே இருக்கு ஸ்ரீராம் டிராவல்ஸ், ஒரு பார்த்தசாரதியோ,
ஒரு கிருஷ்ணசாமியோ, ஒரு செல்வமோ
 நல்ல வண்டியுடன் வந்துவிடுவார்கள்.

வண்டி எடுத்துக் கொண்டு எங்கு செல்ல வேண்டும் 
என்று அவனுக்கும் தெரியும்.
அம்மா ஹிக்கின்பாதம்ஸா ? என்று கேட்பான்.
ஆமாம் என்றதும்

போகிற வழியில் நம்ம வீட்டுப் பாப்பாக்கு துணிமணி
எடுக்க ஃபாப் இந்தியா போகணுமா என்று வேறு
கேட்பான்.

அதுவும் முடிந்த பிறகு,கை நிறைய புத்தகங்கள், துணிமணிப்
பைகள் என்று வண்டியில் ஏறியதும்,
அம்மா? க்ராண்ட் ஸ்னாக்ஸ் போக வேண்டுமா என்பான்.
அச்சோ அது மறந்து போச்சே..
என்றபடி அங்கேயும் போய்,
சிங்கத்துக்குப் பிடித்த பாதாம் அல்வா, தட்டை ,முறுக்கு
என்று வாங்கி வருவேன்.
நமக்கும் ஒரு காஜி கிடைக்கும்.

சின்ன மகனுக்குத் தான் அப்போது 
இந்தப் பண்டங்கள் கிடைக்காது. உடனே ஒரு
தொலைபேசி(எஸ்டி டி) அனுப்பறேண்டா என்றால்
சரிம்மா போஸ்ட் ஆஃபீஸ் வழியாவே அனுப்பு. டிஹெச் எல் எல்லாம்
நிறைய காசு ஆகும் என்பான்.
என் அப்பா வளர்த்த பையன் ஆச்சே. பணத்தின் 
மதிப்பு தெரிந்தவன்:)


 எல்லாம் செய்து முடித்து
வீட்டுக்கு வந்தால், சிங்கம் வேலை  முடித்து
தன்னோட நேஷனல் ஜியோக்ரஃபிக்குப் போய்
விடுவார். அதற்கப்புறமும் ஐயாவை
எதற்கும் அசைக்க முடியாது.
எட்டு மணிக்கு சாப்பாடு, 9 மணிக்குத் தூக்கம்.

நான் மட்டும் இணையம் கிடைத்ததா
என்று பார்த்து இருப்பதை
உறுதி செய்து கொண்டு ஒரு புலம்பல்
பதிவும், இதோ இந்தப் பதிவு மாதிரியே
செய்துவிட்டு சாயி நாதன், லக்ஹ்மி நரசிம்ஹன் 
எல்லோரையும் வணங்கி உறங்கச் சென்று விடுவேன். இதை எழுதி 
முடிக்கையிலும் கடந்த 5 மணி நேரமாக வைஃபை இல்லை.

ஹாட்ஸ்பாட் ஏற்படுத்திக்கிறான் பேரன்.
இதோ இன்னோரு இணையம் இல்லை பதிவும் ரெடி
அனைவரும் தொடர்பில் இருப்போம்.

+++++ Points:)
  ஒரு புத்தகம் படித்து முடித்தேன்.
இந்த வீட்டு வானொலியில் பாடல்கள் கேட்டேன்.
நம்ம ஊர் மாதிரி  நெட் இணைப்பை
நிறுத்தி ரீஸ்டார்ட் செய்து
செய்து பார்த்தேன்.

குளிர்பெட்டியைத் துடைத்து வைத்தேன்:)
மகள் இறங்கி வந்து இந்த சப்டிவிஷன் முழுவதும் 
இண்ட்டர் நெட் இல்லை என்று உறுதி செய்து விட்டுப் போனாள்.
காலை எழுந்ததும் வேர்டில் போடாதது கையைக் கட்டிப்
போட்ட மாதிரி ஆச்சு:)


நயாகரா 2008 பயணம்


வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
2008இல் மகள் மருமகன் , நான் சிங்கம் 
பேரக்குழந்தைகள் என்று சென்று வந்த இடங்களில் 
கனடா நாட்டின் நயாகரா நீர்வீழ்ச்சியும் ஒன்று.
இறைவனின் கொடைகளில் மிகப் பெரிய இயற்கை வளம்
இந்த பிரம்மாண்ட அருவி.இந்த  இடத்தில் எம்பசி டவர்ஸ் என்ற விடுதி
நயாகரா அருவிக்கு மிக அருகில் 
அறையிலிருந்து எட்டிப் பார்த்தால் அருவியின் சத்தமும் 
பச்சை நீல நிறமும் 
தெரியும் வண்ணம் மாப்பிள்ளை அறை
பதிவு செய்திருந்தார்.
அவருக்கு இன்றும் நன்றி சொல்கிறேன்.
அருவியுனூடே சென்ற படகுப் பயணம் இன்னும்
நினைவில்.

அனைவரும் நலமுடன் இருக்க இறைவன் அருள வேண்டும்.
இப்போ நயாகராவுக்கு வந்துவிடுவோம்:) (ஆகஸ்ட்  2008) மீள் பதிவு
வாடகைக்காரில் வந்து எம்பசி ஸ்வீட்ஸில் 34ஆவது மாடிக்குப் போகையில் பேரனுக்கு இருந்த சந்தோஷம் சொல்லீ முடியாது:))))))
அதுவும் அறைக் கதவைத் திறந்ததும் தெரிந்த காட்சி ....நயாகரா நயாகரா.
எல்லோரும்
ஓடிவிட்டோம் அந்த ஜன்னல் பக்கம்.
அப்போதிருந்து எடுத்த படங்கள்
இன்னும் (வலையில் ஏற்றாதது) நிறைய இருக்கின்றன.முதல்
நாள்நாங்கள் போக விரும்பிய இடம் காசு நிறைய புழங்குமே காசினோ...அங்க.
ஆளுக்கு பத்து கனடியன் டாலர் மாற்றிக் கொண்டோம்.
நான் கவனமாக கைக்கடிகாரத்தைக் கழட்டீவைத்தூவிட்டேன்.
எல்லாம் ஒர்
முன்னேற்பாடு தான். நம்மை மீறி தர்மபுத்திரர் வெறி வந்துவிட்டால்:)

மாப்பிள்ளை அழைத்துப் போனார். அப்ப நேரம் இரவு10 இருக்கும். பெண் அரை மணி
நேரத்தில் வரலை என்றால் கதவு திறக்கப் படாது என்று சிரித்தாள்.
பெரிய பேரனுக்கு ஒரே வருத்தம்.
இதெல்லாம் தப்பு தாத்தா. யூ ஷுட் நாட் டூ இட். வேனுமானால்
நான் ஹெல்புக்கு வரேன். என் கிட்ட 100 டாலர் இருக்கு என்றானே பார்க்கணும்:)
அவன் வயசுப் பையன்களை விட மாட்டார்கள்
என்று தெரிந்ததும் சப்பென்று போய் விட்டது:)

அத்தனாம் பெரிய இடத்தை நான் பார்த்ததே இல்லை.
வரிசை வரிசையாக ஸ்லாட் மெஷின்கள். இரவு பகல் என்று பாராமல் விளையாடும் மனிதர்கள் மனுஷிகள். பாட்டி தாத்தாக்கள்.
அவர்களுக்கு வேண்டும் என்பதை தர பணியாளர்கள். பூம் பூமென்று அலறும் இசை.
கர்மமே கண்ணாயினாராக ஏதோ ஒரு கணக்கோடு விளையாடும்
அவர்கள், ஒரு ஆயிரம் பேராவது இருக்கும்.

மாப்பிள்ளை எப்படி விளையாடவேண்டும் என்று காண்பித்தார்.
பத்தே நிமிடத்தில் எங்கள் பத்து டாலரை அந்த யந்திரம் முழுங்கிவிட்டது.
சரி நமக்குக் கட்டுப்படியாகாது என்று நினைத்தவாறு எழுந்துவிட்டோம். பக்கத்திலிருந்த
பணக்காரப் பாட்டி, இன்னோரு நூறு டாலரை
மாற்றிக்கொண்டிருந்தாள்.:)
ஏற்கனவே ஜெயித்த பணத்தை அழகாகப் பையில் போட்டுக் கொண்டாள்.அவள் அநேகமாக அடுத்த நாள் காலை வரை இருப்பாள் என்று நினைத்தபடி ,காலாற அருவியைப் பார்க்க நடந்தோம்.










Labels: நயாகரா முதல் நாள்
Friday, August 29, 2008