Showing posts with label பாசம். Show all posts
Showing posts with label பாசம். Show all posts

Thursday, July 15, 2010

தொடரின்...3 ஆம் பாகம்

ராதாவும் பாமாவும் பேச ஆரம்பிப்பதைப் பார்த்து,சின்னப் பொண்ணு பெட்டிகளைத் தனிதனி அறைகளில் கொண்டு வைத்தாள். படுக்கை விரிப்புகளை மாற்றி, மீண்டும் அறைகளைச் சுத்தம் செய்தாள்.

'அம்மா வெந்நீர் எல்லாம் ரெடி. பிள்ளைங்க குளிக்கடுமா'' என்கிற கேள்வியோடு வந்தவள்,

பாமாவின் கண்களில் கண்ணீரைக் கண்டதும்'
அந்த இடத்தைவிட்டு அகன்றாள்.

பாமாவின் கைகளைப் பிடித்த வண்ணம் காவிரியைப் பார்த்தபடி இருந்த வராண்டாவுக்கு வந்தாள் ராதா,

'ஏன் இந்த மாதிரி ஆச்சு பாமா,உன் பசங்க இருவரும் மிக நல்ல பிள்ளைகளாகத்தான்
எனக்குத் தெரியும்.

பதினைந்து வருஷம் இருக்குமா திருமணமாகி.? அதற்குள் நம் வீட்டில் இத்தனை மாற்றமா.

என்னிடம் கூடச் சொல்லவில்லையே.''
எவ்வளவு ஒற்றுமையாக நாம் இருந்தோம். இப்படி ஆவதற்கு வந்த பெண்களா காரணம்?''

என்ன சொல்கிறாய்.''அடுக்கிக் கொண்டே போனாள் ராதா.

பாட்டி பசிக்கிறது,நாம போலாமா என்ற வண்ணம் வந்த பட்டுவைப் பார்த்ததும்,தன்னைச் சமாளித்துக் கொண்ட

பாமா,''பாரேன் உங்களை இப்படியே நிக்க வச்சிட்டேனே,

ஒரு நிமிஷம்..''
என்றவாறு அந்த வீட்டின் சமையலறைக்குப் போய்ப் பாலைச் சுட வைத்து ,
காஃபியும்,

சின்னப் பொண்ணுவின் உதவியோடு நிமிடங்களில் அனைவருக்கும்
ப்ரெட் சாண்ட்விச்சும் தயார் செய்துவிட்டாள் பாமா.

குளித்துவந்த கோவிந்தன், ''வாய்க்கு வாய், கைக்கு கை,''

''தான்க் யூ பாமா''
பசி வந்தாச்சு எல்லாருக்கும் ''என்றவாறு சாப்பாட்டு மேஜையருகில் வந்தார்.

கூடவே வந்த குழந்தைகளும்,கண்ணன்,க்றிஸ்டினா,ஸ்ரீராம்,கிருஷ்ணாவும்
உடனே சாப்பிட ஆரம்பித்தனர்.

பட்டம்மா, நீயும் எடுத்துக்கோடா என்று குழந்தையை விளித்தாள் ராதா.

வேண்டாம் அத்தை நான் வீட்டுக்குப் போய்த்தான் சாப்பிடணும். இல்லாட்ட அம்மா
கோவிச்சுப்பார்'' என்ற குழந்தையை,

ஒரு நிமிடம் பார்த்துவிட்டுச் சரி இந்த பிஸ்கட்டாவது எடுத்துக்கோ என்றவாறு கைப்பையில் வைத்திருந்த

பிஸ்கட்டைக் கொடுத்ததும் பட்டு அதை மறுக்காமல் சாப்பிட்டாள்.
villas apartments


சாப்பிட்டு முடித்தவுடன் குழந்தைகள் குதூகலமாகக் காரை நோக்கி நடந்தனர்.


ஸ்ரீரங்கத்து வீதிகளைக் கடந்து,கொஞ்சம் காவேரிக் கரையோரம் நடந்துவிட்டு மீண்டும்

மேற்கு உத்தர வீதியில் இருந்த தன் பிறந்த வீட்டுச் சிந்தனைகளோடு

ராதாவும்,மேற்கொண்டு என்ன செய்வது என்ற யோசனையோடு பாமாவும்

அந்தப் பெரியவீட்டை வந்து அடைந்தனர்.



பெரிய முகப்போடு அழிகள் போட்ட வராந்தா,இரு பக்கத் திண்ணைகளோடு அழகிய ஓவியமாகக்

காட்சி அளித்த தன் பிறந்த வீட்டைப் பார்த்ததும் ராதாவுக்கு மீண்டும் தொண்டையில் கரகரப்பு.



இரு வண்டிகளும் விருந்தாளிகளும் பெரியம்மாவும் இறங்குவதைக் கண்ட ரங்கநாதன்,அந்த வீட்டுக் காரியக்காரர்

நீண்ட பெரிய கதவுகளைத் திறந்தார்.

வாங்க பசங்களா பாட்டிதாத்தா வீட்டைப் பார்க்கலாம் என்றபடி கோவிந்தன் உள்ளே நுழைந்தார்.

சத்தம் கேட்காததால் திரும்பிப் பார்த்தார்.நிகிலும் நிதினும் அந்தப் பெரிய வேலைப்பாடுகள் கொண்ட கதவுகளையே பார்த்தவண்ணம் இருந்தனர்.

அவர்களை ரசிக்க விட்டு விட்டு குளிர்ந்த பெரிய கூடத்தில் நுழைந்தனர் மற்றவர்கள்.
எல்லோரும் வாழ வேண்டும்.


Posted by Picasaஒரு எண்பதாண்டு சரித்திரம் கொண்ட வீடு அது.


கூடம் அதைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் நடமாடும் இடம். கூடத்தின் நடுவே நல்ல ரோஸ்வுட் ஊஞ்சல்.

பளபளக்கும் பித்தளைச் சங்கிலிகள்.

கூடத்திலிருந்து பிரியும் அறைக்கதவுகள். கதவுகளுக்கு மறைக்காமல் தொங்கும் திரைச்சீலைகள்.

கூடத்தின் கடைசியில் ஒரு வாயில் ,அங்கு நுழைந்தால் பக்கத்துக்கு இரண்டு வாசல். ஒன்று ஸ்டோர் ரூம், இன்னொன்று சமையலறைக்குச் செல்லும்.

அந்தக் காலத்துத் தொட்டி ஒரு சுவற்றோடு ஒட்டிக் கட்டப் பட்டிருக்கும். கம்பிகள் இல்லாத ஜன்னல் வழியாகக் கிணற்றுத் தண்ணீர் இறைத்துக் கொட்டுவார்கள்.



ராதா பார்த்துக் கொண்டிருக்கும் போதே உள்ளே இருந்து நாணிப்பாட்டி வந்தார். ஒரு எண்பது இருக்குமா மாமிக்கு!

ராதாவுக்கு இன்னோரு வியப்பு. இவர்களுக்கு எல்லாம் உழைப்பைத் தவிர வெறொன்றும் தெரியாதா' என்று நினைத்தவாறு,

அந்த மாமியின் அருகில் சென்றாள்.

ராதாக் குட்டி எத்தனை நாளாச்ச்சு பார்த்து,எப்படிடா கண்ணு இருக்கே.

உனக்குப் பிடிச்சதெல்லாம் பண்ணி வச்சிருக்கேன் வா வா. ''என்று உச்சி மோந்தார் அந்த மூதாட்டி.



பாமாவைப் பார்த்தாள் ராதா. ரிடையராகலியா மாமி? எலும்பும் தோலுமா இருக்காளே

என்றாள்.

உனக்காக வந்திருக்கிறார். இப்போ சமையல் செய்வது அவருடைய மருமகள் தான்

என்று புன்னகை காட்டினாள் பாமா. அப்புறம்''எங்க உன் பையன்களும் மாட்டுப் பொண்களும்

என்று சுற்றுமுற்றும் கண்ணைச் செலுத்தினாள் ராதா.

''அத்தைப் பாட்டி ! பெரியப்பா பெரியம்மா ரெண்டு பேரும் காலேஜில வேலை செய்கிறா.

''அம்மாவும் அப்பாவும் சி.ஏ வகுப்புகள் எடுக்கிறார்கள் அடுத்த தெருவில''

என்று சொல்லிவிட்டுத் தன் சிநேகிதர்களை அழைத்துக் கொண்டு

புழக்கடைத் தோட்டத்துக்கு ஓடினாள் பட்டு.

''அண்ணா எங்க பாமா? ஏன்   வரலை எங்களைப் பார்க்க என்றபடி அண்ணா, என்ன உனக்கும் வயசாயிடுத்தா

இங்க வா''என்று கூவினாள்.
ராதா அண்ணாவால வர முடியாதும்மா. போன வாரம்தான் பக்கவாதம் மாதிரி வந்துட்டது. வயல் பக்கம் போனவர் வெய்யிலில் ரொம்ப நேரம் நின்றிருந்திருக்கிறார்.

இரத்த அழுத்தம் அதிகமாகி இப்படி ஆகிவிட்டது.
இப்போ பரவாயில்லை.
ப்ரைவேட் நர்ஸ் போட்டு இருக்கு.
அவர் குளித்து சுத்தமானதும் நாம் வாசல் அறைக்குப் போகலாம்,''என்ற தன் அண்ணியைக் கலக்கத்துடன் பார்த்தாள் ராதா.

Monday, July 12, 2010

தொடரும்..2 ஆம் பகுதி




எல்லோரும் வாழ வேண்டும்.
பட்டு என்கிற பத்மினிக்கு எல்லாமே ஆச்சரியமாக இருந்தது. எட்டு வயதுக்கு உண்டான கூர்ந்து ஆராயும் தன்மை,,வியப்பு எல்லாம் அவளைக் கவ்விக் கொண்டது.


அடுத்தாற்போல் இறங்கின இன்னோரு ஆண்ட்டி,அன்கிள் என்று உலகம் விரிந்து கொண்டே போனது.

ராதா அத்தையின் மகள் கிருஷ்ணா,

''கிருஷ்ணாவா'' என்று இன்னும் ஆச்சரியப்பட்டாள். பொண்களுக்குக் கிருஷ்ணான்னு பேரு வைப்பாளா பாட்டி, என்று தன் பாட்டியின் கைகளை உலுக்கினாள்.

வைப்பாம்மா. இந்த ராதா அத்தையின் மாமா பேரு என்ன தெரியுமா,கோவிந்தன்!'' என்று

சிரித்தாள்.



ஓஓஒ!!இன்னும் அகலமாகக் கண்ணும் வாயும் விரிந்தன பட்டுவுக்கு.

ராதா அத்தையின் பேரன்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.

இரண்டு பெயர்கள் ஒவ்வொருத்தருக்கும்.

ஒரு பையன் 10 வயது இருக்கும் அவன் கைகளை நீட்டி'' ஹை ,ஐ யாம் நிதின் நிகொலஸ் கண்ணன்''

என்றான்.அடுத்த பையன் ''ஹை ஐ யாம் நிகில் நிகோலஸ் கண்ணன்'' என்றான். அவனுக்கு எட்டு வயது இருக்கும்.



மூணு பேரா உனக்கு என்று இருவரையும் கேட்டவள்,அவர்களுக்குத் தமிழ் தெரியுமோ என்ற கேள்வியோடு பாட்டியைப் பார்த்தாள்.

வீட்டுக்குப் போய் எல்லாம் பேசிக்கலாம் வா என்று அனைவரும் ,

பாமா வாடகைக்கு எடுத்திருந்த இரண்டு பெரிய வண்டிகளில் ஸ்ரீரங்கம் நோக்கி விரைந்தனர்.

ஸ்ரீரங்கம் கோபுரம் கண்ணில் பட்டதும் கைகளை உயர்த்தி வணங்கிக் கொண்டாள், ராதா. அவள் செய்வதையே அவள் மருமகள் க்றிஸ்டினாவும், பேரன்களும் செய்தனர்.

நம் பக்க பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறாள் போலிருக்கிறது என்று அன்போடு தன் நாத்தனாரை நோக்கிய பாமா, தன் பேத்தி வந்திருக்கும் பையன்களோடு சரிசமமாக ஆங்கிலத்தில் வளவளப்பதைப் பார்த்துப் பூரித்தாள்.

எத்தனை நாட்களாச்சு இந்தக் கலகலப்பைக் கண்டு என்று மனம் நிறைந்தது.

ஸ்ரீரங்கம் தாத்தாச்சாரி தோட்டம் அருகில் வந்திருக்கும் புதுக் குடியிருப்பு வளாகத்தில் வண்டி நுழைவதைப் பார்த்து



கேள்விக் குறியோடு பாமாவைப் பார்த்தாள் ராதா. நம் வீட்டுக்குப் போகலையாப்பா? இங்க யரு இருக்கிறார்கள் என்றதும்,

இங்க ஒரு அபார்ட்மெண்ட் ஒரு மாதத்துக்கு வாடகைக்கு எடுத்திருக்கிறேன் ராதா, உங்கள் அனைவருக்கும் இந்த இடம் சௌகர்யமாக இருக்கும். ஏசி,கொசு நெட் எல்லாம் போட்டிருக்கிறது.

தண்ணீரும் நிறைய வாங்கி வைத்திருக்கிறேன்.

குளியல் எல்லாம் முடித்துக் கொண்டு சாப்பிட நம் வீட்டுக்கு வந்துவிடலாம் என்றாள்.

நம்ம பாஷா ட்ராவல்ஸ் வண்டிதான். ட்ரைவர் ரொம்ப மரியாதையாக இருப்பார். கார் இங்கயே இருக்கட்டும்''

சரியா என்றபடி அவர்களை வீட்டை நோக்கி அழைத்துச் சென்றாள் பாமா.

ராதா ஒன்றும் சொல்லவில்லை.

படு நேர்த்தியாகக் கட்டப் பட்டிருந்த அந்தக் குடியிருப்பு இன்னும் வியப்பாக இருந்தது. நல்ல பாதுகாப்போடு

விசாலமான இடமாக இருந்தது. லிஃப்டில் பெட்டிகளை அடுக்கிக் கொண்டு முன்னே சென்று கதவைத் திறந்து வைத்து அவர்களுக்காகக் காத்திருந்தாள் பாமா.

இன்னும் அகலாத சிந்தனையோடு ராதாவும்,அவரவர் எண்ணங்களோடு மற்றவர்களும்

அந்த அபார்ட்மெண்டின் உள்ளே நுழைந்தார்கள். அங்கே காத்திருந்த ''சின்னப் பொண்ணு''வைப் பார்த்ததும் அவள் முகம்

மலர்ந்தது. ஏய் எப்படி இருக்கே. இன்னும் நம் வீட்டில் தான் வேலை செய்கிறாயா. உனக்குக் கல்யாணம் ஆகிக் குழந்தைகள் லாம் இருக்கா என்ற வண்ணம்,அவளை அப்படியே அணைத்துக் கொண்டாள்.

அவள் அணைப்பில் கூச்சத்தோடு நெளிந்த சின்னப் பொண்ணூ ,நீ நல்லா இருக்கியாப்பா,இதில்லாம் உன் பேரப் பசங்களா, வெள்ளைக்காரத் தொரை மாதிரி இருக்குங்களே'' என்றபடி அவர்களை நெருங்கி,''கண்ணூங்களா, நானும் உங்களுக்கு ஒரு ஆயா மாதிரித்தான்'' என்று அன்புடன் சிரித்தாள்.
Posted by Picasa

அன்புடையார் என்றும் ,பகுதி --1




ரயில் வருவதற்கான அறிகுறிகளாக ப்ளாட்ஃபாரத்தில் பரபரப்பு அதிகமானது.


திருச்சி ஜங்ஷனின் காலை பரபரப்பு பாமாவுக்கு மிகவும் பிடிக்கும்.



சென்னையிலிருந்து வரும் மலைக்கோட்டை எக்ஸ்ப்ரசின் மீது ஒரு கண்ணும்,

கையில் பிடித்திருக்கும் பேத்தியின் மேல் ஒரு கண்ணுமாக,வெகு ஆண்டுகளுக்கப்புறம் வரும்

தன் நாத்தனாரையும் அவர் கணவர்,பையன்களையும் வரவேற்க ஆயத்தமானாள்.

 இந்த அத்தைப் பாட்டி உன்னைவிடப் பெரியவரா'என்னும் பேத்தியின் கேள்விக்கு ஆம் என்று தலையை ஆட்டிவிட்டுப்

பெட்டிகளில் தெரிந்த முகத்தைத் தேடினாள்.

பளிச்சென்று சிரித்த ராதாவின் முகத்தைப் பார்த்ததும்

பாமாவுக்கும் உற்சாகம் பிடித்துக் கொண்டது.

'ஹேய்! என்று பழைய சிநேகிதிகளைப் போல இருவரும் கைகளைப் பிடித்துக்

கொள்வதைப் பார்த்துப் பேத்தி

பட்டு, தன் விழிகளை விரித்தாள்.

அத்தைன்னு சொன்னியே பாட்டி, இது உன் ஃப்ரண்டா?

ஆமாம் ஃப்ரண்டும், அத்தையும் தான்:)

என்று பட்டுவை ராதாவுக்கு அறிமுகப் படுத்தினாள்.


இத்தனை கார்த்தாலைல எழுந்து உன்னோட வந்துடுத்தா,
அட பட்டுக் குட்டி, என்று தன்னை அணைக்க வரும் இந்தப் புதிய உறவை மிகவும் பிடித்துவிட்டது

பட்டுவுக்கு.!

அத்தை நீ இங்கயே இருக்கப் போறியா என்று கேட்கும் குழந்தையைப் பார்த்து
சிரித்த ராதா, உம்மாச்சி சேவிச்சுட்டுப் போயிடுவேண்டா செல்லம்'

என்றாள்.

பக்கத்தில் திரும்பி வயதான தன் கணவருக்கு கைலாகு கொடுத்தாள்.
பின்னால் வரும் மகன் குடும்பதையும்,மகள் குடும்பத்தையும்

கவனமாக இறங்குமாறு பார்த்துக் கொண்டாள்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த பாமா' இன்னும் உன் பால்யத்திலியே இருக்கியா

ராதா,அவர்களுக்கு வயதாகி விட்டது.

அம்மாப் பறவை மாதிரி கவனிக்கிறீயே என்று கேலி செய்தாள்.



புன்னகையோடு கேட்டுக் கொண்ட ராதா,

''இதுகள் வெளியூர் போய் இருபது வருஷமாச்சு

பாமா, இப்பத்தான் நம்ம ஊருக்கு வருகிறார்கள். ஆரம்பத்திலியே

அவர்களுக்கு ஜாக்கிரதை செய்து விட்டால் சமாளித்துக் கொள்வார்கள்.''



என்றபடி மகன் கண்ணனையும்,மாப்பிள்ளை ஸ்ரீராமையும் பாமாவுக்கு அறிமுகம் செய்தாள்.

ஹலோ பாமா மாமி! நீங்க அப்படியே தான் இருக்கிறீர்கள் என்று

புன்னைகையோடு அணுகும் மருமகனை அன்போடு பார்த்தாள் பாமா.
நீயும் அப்படியே தான் இருக்கேன்னு நான் சொல்ல மாட்டேன் என்று

அவன் தலை முடி,தொப்பை என்று கண்ணோட்டம் விட்டு சிரித்தாள்.
என்ன ஆச்சு உன்னோட எக்ஸர்சைஸ் ரொடீன் எல்லாம்,
என்றபடி அவன் மனைவி க்ரிஸ்டினாவையும் வரவேற்றாள்.

அவர்களின் குழந்தைகளும் பட்டுவைச் சுற்றிக் கொண்டார்கள். சமவயதுடைய

அவர்களின் ,பழுப்பு நிறத்தலைமுடியை, நீல நிறக் கண்களை

ஆச்சரியத்தோடு பார்த்தாள் பட்டு.

எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa

Thursday, November 26, 2009

அக்கா நலமா ?

அன்புள்ள அக்கா , நிறைய வருடங்கள் ஆகிவிட்டன . எப்படி இந்தப் பிரிவு வந்தது , இதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தேன் நேற்று. மீண்டும் மீண்டும் ஊட்டியில் மண்சரிவு என்று படிக்கும் போதுவருத்தமாகவும் கவலையாகவும் இருந்தது.



கோவையில் நம் நட்பு துளிர் விட்ட நேரம் வார விடுமுறைகள் உங்களுடனும் உங்கள் குழந்தைகள் கணவர் இவர்களிடமும் எங்கள் குடும்பம் களிப்பாகக் கழித்த நேரங்கள் இன்னும் பசுமையாக மனதில் இருக்கின்றன,.





நாங்களும் சென்னைக்கு வந்தோம். அடுத்த இரண்டு வருடங்களுக்குள் உங்கள் மகன் மகள் படிப்பு திருமணம் என்று சென்னைக்கு வரவேண்டிய அவசியம்

வந்தது.

நாம் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அதுவும் பக்கத்திலேயே வீடும் அமைந்தது. மிகவும் வசதியாகப் போயிற்று.

உங்கள் கணவரும் இவரும் மிகச்சிறந்த உயிர்க் சிநேகிதர்களா இருந்தது நமக்கு இன்னும் இன்பம் கூட்டியது.
அவரவர் ,வேலைகள் முடிந்ததும் ஒன்றாக கடைகளுக்குப் போவதும், குழந்தைகளையும் கணவர்களையும் ஒன்றாக விட்டு விட்டு விட்டு சினிமா பார்க்கப் போவதென்ன தீபாவளிக்கு நீங்கள் எங்களுக்கு பரிசுகளும் உடைகளும் கொடுப்பதும் ,

டிசம்பரில் கிறிஸ்துமஸ் வரும்போது விதம் விதமான பலகாரங்கள் எங்கள் வீட்டிலிருந்து, உங்கள் கணவருக்குப் பிடித்த கொழுக்கட்டை yஇலிருந்து வீட்டிற்கு நடக்கும் மகிழ்வு....

எட்டு வருடங்கள் ஓடுவது போல பறந்தன. உங்கள் மகன்,மகள் திருமணங்களும் முடிந்து குழந்தைகளும் பிறந்தார்கள்.

அப்போது வந்தது ஒரு இறுதி ஒலை உங்கள் கணவருக்கு. அந்த அன்பும் ஆதரவும் தந்த செழுங்கிளையைக் ,கனவானைக் கொண்டு போவதற்கு காலனுக்குத்தான் எத்தனை கொடூரம்..



உங்கள் இறைநம்பிக்கை இவைகளையும் மீறி . இந்தப் பயங்கர விபரீதம் நம்மையும் கலைக்கப் பார்த்தது. அதை மீறி நாம் நல்ல தோழியராகவே இருந்தோம். இதோ அப்போது நீங்கள் எழுதிய கடிதங்கள் இன்னும் மணி மணியான எழுத்துக்களோடு ,அனுசரணையோடு என்னைப் பார்க்கின்றன அந்தக் கடிதங்கள்.




அதற்குப்பிறகு இந்த வீட்டில் பிள்ளைகள் படிப்பு,வேலை, திருமணம் என்று நானும் கவனத்தைத் திருப்பினேன்.
நீங்களும் ஆன்மீகத்துறையில் ஆழமாக இறங்கி, நீங்கள் உண்டு, உங்கள் காப்பித் தோட்டம், உங்கள் பெற்றொர் பிரிவு,
அவர்களுக்காக நீங்கள் எடுத்துக் கொண்ட சிரமம்
எல்லாம் நம்மை மெதுவாகப் பிரித்தனவா.

எத்தனையோ மகிழ்ச்சிகளையும் துன்பங்களையும் பகிர்ந்து கொண்ட நல்ல தோழிகள் ஏன் மாறினோம்.
கடலில் ஒரு கப்பலின் விளக்குகள் , கொஞ்சம் தள்ளிச் செல்லும் இன்னோரு கப்பலின் விளக்குகளுக்கு ஒரு குட்டி ஹலோ சொல்லுவது போல ஆகிவிடக் கூடாது
அக்கா., நம் நட்பு.

இதை ஒரு மீட்புப் பணியாக நான் தொலைத்த தோழியைத் தேடப் போகிறேன்.



எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

சுதந்திரம் அடைய என்ன தேவை?

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் . விடுதலை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன். குடும்பத் தளையிலிருந்து விடுபடுவது கூட அவ்வளவு சிரமம் இல...