Blog Archive

Sunday, January 28, 2007

வானமுட்டிப் பெருமாள்,கோழிக்குத்தி ஊர்

படத்தில் பார்க்கும்போதே இந்த உயரம் தெரிகிறாரே!?
இன்னும் நேரே பார்த்தால் எப்படி இருப்பாரோ?
காவிரிக்கரைக்கு என்ன அப்படி ஒரு புண்ணியம்!

எங்கும் இல்லாத உயரத்தில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள்
எப்படி இங்கே வந்தார். என்றெல்லாம் எனக்குத் தோன்றிய கேள்விகள்,

திரு.ஏ.எம்.ராஜகோபாலன் ,எழுதிவந்த காலச்சக்கரம்
வெள்ளிமணி (தினமணி பத்திரிகை)

இதழ்களைப் படிக்கும்போது மனதில் உதித்தன.
இந்த விஸ்வரூபப் பெருமாளைப் பற்றிக்
குமுதம் ஜோதிட இதழில் மிக்க வருத்ததுடன் குறிப்பிட்டு இருந்தார்.

காண்பதற்கு அரிய கலை நுட்பத்துடன் கட்டப் பட்ட இந்தக் கோவில் தல புராணமும்
நேரே போய்விட்டு வந்த தன் அனுபவத்துடன் எழுதி இருந்தார்,
அந்தப் பெரியவரிடம் எனக்கு மிகுந்த மரியாதையும்
அவரின் உழைப்பைப் பார்த்து வியப்பும் தோன்றியது.
நம் தென்னாட்டில்
சிதில மடைந்த கோவில்கள் ஏராளம்.

அவற்றை மீட்டுக் கொடுக்கும் பணியைச் செவ்வனவே
செய்துவருகிறார் இந்த மூத்த (83 வயது என்று நினைக்கிறேன்) பண்பாளர்.
அவர் விவரம் தந்த கோவில்களில் என்னை மிகவும் பிரமிக்க வைத்த கோவில் இந்த வானமுட்டிப் பெருமாளின் திருக்கோயில்.
நாங்கள் இன்னும் இந்தக் கோவிலுக்குப்
போகவில்லை.:(
கூகிளில் தேடிய போது கிடைத்த படங்களைக்
கீழே கொடுத்து இருக்கிறேன்.
இவரின் இருபதடி விஸ்வரூபக் காட்சியும் அப்போது
பத்திரிகையில் வந்திருந்தது.
அழகோ அழகு.
என்ன ஒரு கருணை முகத்தில்.!
அவர்...இந்தப் பெருமாள் ,பிபால என்ற முனிவரின் கனவில் தோன்றித் தானிருக்குமிடத்தைக் காட்ட
போகும் வழியில் இருந்த சிவபெருமானின் உதவியோடு,இந்த ஆஜானுபாகுவைத் தரிசனம்
செய்தாராம்.
சுமார் 1500 வருடங்களுக்கு முன்னால்
கட்டப் பட்ட கோவிலாம்.
அதைப் புதுப்பிக்க ஒரு சோழ மன்னன் வரவேண்டி இருந்தது.

தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று படித்தேன்.
திரு.ராஜகோபாலன் எழுதினபோது மிகச் சிதிலமான நிலைமையில் இருக்கும் கோவிலைப் பற்றி எடுத்து எழுதியிருந்தார்.
மூலவருக்கு இருபது முழங்கள் கொண்ட வேட்டிதான் உடுத்த முடியுமாம்.
மாற்று உடைகளுக்கு வழியில்லை என்று குறிப்பிட்டு
வருத்தப் பட்டிருந்தார்.
இப்போது ஊர்மக்கள், இந்தப் பத்திரிகைச் செய்தியைப்
படித்தவர்கள்
எல்லோரும் கோவில் புனருத்தாரணத்தில் ஈடுபட்டு இருப்பதையும் படங்கள் மூலம் சொல்லி இருந்தார்.

இந்த முதியவர் வார்த்தைகளுக்கு சிறப்பு
ஏராளம்.
ஏழைமக்களுக்கும் நிறைய உதவிகள்
செய்வதிலும் சளைத்தவர் அல்லர்.

மாயவரம் -கும்பகோணம் சாலையில் காவிரியின் கரையில் இந்த கிராமம் இருக்கிறது.
நமது வலை நண்பர்கள் யாராவது இந்தத் திருமகள் கேள்வனைப் பார்த்து இருப்பார்களொ?
தெரிந்தால் சொல்லுங்கள்.

Sunday, January 21, 2007

ரங்கா ரங்காஸ்ரீரங்கநாதனை அடைய,
ஜய விஜயரிடம் வணங்கி அனுமதி கேட்டு,
தாயாரிடம்'அம்மா உன் நாயகனைத் தரிசித்துப்
பரிசு வாங்க வேண்டும்.
பக்திப் பரிசு. அடியார் படுதுயர் அகற்றும் பரிசு. நீ, இந்த சப்தப்பிரகாரங்களை நாங்கள் சுற்றும் நேரம்,
அவரிடம் சொல்லி வை. எங்களை , நெடுமால் அங்கண் இரண்டும் கொண்டு பார்த்து அருள் செய்யட்டும்''
என்று வேண்டிக்கொள்ளவேண்டும்,
என்பது பெரியோர் வாக்கு.
பிறகு அரங்கனை அந்த வாயில்களின் அருகே நின்று பார்த்து ,
அழகனின் அருகாமையை அனுபவிக்க வேண்டும்
என்று கேட்டும் இருக்கிறேன்.

ஒரு நான்கு வருடங்கள்(2003) முன்னால் அவனைத்
தரிசிக்கப் போன போதும் வெளியே வரும்வரை அரங்கன் அமுதமே மனதில் நிறைந்து இருந்தது.

பிறகுதான் அவன் செய்த வேலை பிடிக்கவில்லை.
தன் பெயர் கொண்ட என் தம்பியையும் தன்னிடம் அழைத்துக் கொண்டான் ஒரே இரவுத் தூக்கத்தில்.

அப்போதிலிருந்தே நான் அரங்கனை நினைக்கும் போதெல்லாம் இவனையும் கூப்பிடுகிறேனோ என்று சந்தேகமாய் இருக்கிறது.

நாமும் அங்கேதானே போகப் போகிறோம்,
கேட்டு விடலாம் என்றுதான் நினைக்கிறேன்.
ரங்கா உன்னை மறக்கலையப்பா.Wednesday, January 17, 2007

மீண்டும் பாட்டி......

ஊருக்கு வந்ததும்,
இருக்குமிடம் பழக இந்த ஊரில் நான்கு நாள் ஆகுமே.

அதை மறவாமல் கடைப்பிடித்தாச்சு.
அதாவது பகலில் தூங்கி,
இரவிலும் தூங்கி காலத்தைக் கழித்து
மறக்காமல் தமிழ்மணம்,தினமல்ர், ஹிண்டு ஆன்லைன்,
ஆபிச்சுவரி காலம்
எல்லாம் பார்த்தேன்.
இவங்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது.
''அது எப்படிம்மா உனக்கு கம்ப்யூட்டர் பக்கம் போனால் முழிப்பு வருகிறது,
சோஃபா பக்கம் வந்தால் தூக்கம் வரதே '' என்று கேட்டார்கள்.

என்னைக் கொண்டுவிட வந்த கடைசிப் பையன்
சொன்னான்,''அம்மா முன்ன மாதிரி இல்லை.
எட்டு வருட இண்டர்னெட் மெயிலம்மா இல்லை.
இப்போது புதிய வல்லியம்மா.''

என்றான். என்னடா இது நியூ, இம்ப்ருவ்டு
சர்ஃப் மாதிரி கமெண்ட் வரதேனு பார்த்தேன்.

ஏனெனில் ஏற்கனவே இந்த வயதில் இதென்ன புதிதா
அப்படினு கேக்கறவங்களை

ஆசிய,ஐரொப்பாக் கண்டங்களில் பார்த்த அனுபவம் இருந்ததால்,
''என்னதான் நடக்கும் நடக்கட்டுமே''
என்று தமிழ், தேன்கூடு என்று சொல்ல
ஆரம்பித்தேன்.
நீ எழுதுவதை யாரும்மா படிக்கிறாங்கனு
கேள்வி.
தொடர்ந்து நீ ஒரு ஆண் பெயரில் எழுதலாமேனு ஒரு யோசனை,
வீட்டு சமாசாரமெல்லாம் எழுதிவிடுவாயோனு ஒரு சந்தேகம்.''
ஹ்ம்ம். என்னதான் பிரபலமாயிருந்தாலும்(!!)
படிக்கிறவங்களைக் கண்டுபிடிக்கிற யுக்தி இன்னும் தெரியலை என்று அவர்களைச்
சமாதானப் படுத்தினேன்.

அப்பொழுதுதான் ஒரு பழைய எழுத்தாளரின்
மனைவி என்னிடம் புலம்பியது நினைவு வந்தது.
அந்த அம்மா ''இவரு நான் நின்னா உக்கார்ந்தா, யாரவது வீட்டுக்கு வந்தா எழுதிடுவாரும. எதுக்கும் அவரிடம் பேசும்போது சாக்கிரதையா இருங்க.
அதை வைத்து ஒரு சரித்திரமே எழுதிடுவாருனு''
சொன்னாங்க.:-0)

அப்போதுதான் எனக்கு,அட இது கூட நல்லா , சிந்தனைக்குரிய ஐடியாவா இருக்கே '

என்று தோன்றியது.
இப்படியாகத் தானே நாட்கள் கழிய
கண்ணன் பிறக்கும் நாளும் வந்தது.

இராமஸ்வாமி கோவில் கும்பகோணம்

Posted by Picasaஸ்ரீ ராமசுவாமி கோவில் கும்பகோணம் போக வாய்ப்புக் கிடைத்தது ஒரு சம்பவம்.
எங்கள் அப்பாவுக்கு, சுந்தர காண்டம் ஒரு வாரத்தில் படித்து முடித்தால், தீராத பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்கும் என்பதில் தீவிரமாக நம்பிக்கை.

உடல், மனம்,சுகம் என்று எல்லோருக்கும் வேண்டிய தருணங்களில் மிகவும் சிரத்தையுடன் ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை ஆரம்பித்து ஓரொரு நாளும் ஒன்பது அத்தியாயமாகப் படித்து அடுத்த வெள்ளிகிழமை சுந்தர காண்டம் பூர்த்தி செய்து ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகமும் படித்து முடிப்பார்.
அந்த வெள்ளியன்று இனிப்பு வகையறா ஏதாவது கண்டிப்பாக இருக்கும்.
அப்பா படித்து முடிக்கும் அழகும் அம்மா பக்கத்தில் இருந்து பக்தியோடு கேட்கும் அழகும், அப்பா உட்கார்ந்து இருக்கும் இடத்தின் அருகில் அனுமனுக்கு ஒரு இருக்கை போடப்பட்டு, கோலமிட்டு பழஙகள் சமர்ப்பிக்கப் பட்டு இருக்கும்.
ஓரோரு தடவையும் சீதை, ராமர் படும் துன்பங்கள் வரும் கட்டங்களைப் படிக்கும் வேளைகளில் எங்கள் அப்பா கண்கலங்காமல் படித்ததாக எனக்கு நினைவே இல்லை.

சீதா அசோகவனத்தில் ஸ்ரீராமனை நினைத்து கலங்கும் நேரம், அனுமன் ராமர் நாமத்தை உச்சரித்து அவள் கவனத்தைக் கவர்ந்து அவளை அமைதிவழியில் இருத்தி கணையாழி கொடுத்து,
சூடாமணி பெற்றுக்கொண்டு, அரக்கரை அழித்து,இராவணனிடம் வாதிட்டு, இலங்கையை தீக்கிரையாக்கி மீண்டும் சீதையம்மாவைப் பார்த்து ஆறுதல் சொல்லி, ராமலக்ஷ்மணரோடு வருவேன் என்று உறுதி கூறி,
மீண்டும் வானில் பாய்ந்து ஸ்ரீ ராமரை வந்து அடைகிறார்.
சீதையைப் பார்த்து வரும் அனுமனை ராமன் நெஞ்சாரத் தழுவிகொள்கிரார்.
இவ்வளவும் எங்கள் அப்பா படிக்கும்போது மீண்டும் அந்தக் காலத்துக்கே போன உணர்ச்சி வந்துவிடும்.
அதே இன்பம் அவர், திருராமர் சீதை பரத,லக்ஷ்மண சத்ருக்னன் அனுமன்,அங்கதன்,விபீஷணனுடன் நடைபெரும் பட்டாபிஷேக காட்சி மனத்தில் உறுதியோடு படிந்துவிடும்.
இந்தக் காட்சிதான் அப்படியே திரு இராமசுவாமி கோவிலில் கல்சிற்பஙகளாகக் கம்பீரமாகக் காணக் கிடைக்கிறது.
வேறு எங்கேயும் காணக்கிடைக்காத காட்சி இது.
மிகப்பெரிய சிலா ரூபங்கள் அரியணையில் ராமனும் சீதையும் வீற்றிருக்க, பரதன் குடை பிடிக்க,சத்ருக்கினனும்,இலக்குவனும், (சில படங்களில் இலக்குவன் கை கூப்பி நிற்பது போல் இருக்கும்) சாமரம் வீச
அனுமன் பக்கத்தில் ஒரு கையில் வீணையை மீட்டிக் கொண்டு( வழக்கம் போல் ராமாயணம் படிக்கவில்லை) காட்சி.
எவ்வளவு தரம் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கவைக்கும் அருமையான சிறப்பு மிக்க தரிசனம்.
இங்கெ நிகழ்ந்த அதிசயங்கள் எவ்வளவோ இருக்கலாம்.
நம்மைப் பாதிப்பது நமக்கு நிகழும்
நடப்புகள் தானே.
முன்பே சொன்னது போல் கும்பகோணம் முதல் டிரிப்பின் போது சாரங்கபாணியைக் கண்ட பிறகுப் பார்க்கப் போன,உணரப் போன அடுத்த அதிசயம் இந்த சாமி தான்.


நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று இடியுடன் கூடிய மழை.
இதில் என்ன அதிசயம் இருக்கிறது.? கோடை மழை எப்போது வேண்டுமானாலும் வரும், அது என்ன டிவி சானல் பார்த்து விட்டு வரலாமா வேண்டாமா என்று யோசிக்குமா, இல்லையென்றால் இந்த(நான்) அம்மா வருதே, இடியும் மின்னலும் இவங்களுக்கு ஆகாதே.
கண்ணூ காது மூடிக்கொண்டால் சாமியைப் பார்ப்பது எப்படி என்று எல்லாம் வருண பகவானுக்கு நினைவு இல்லை.

யேதோ நல்லவங்க கும்பகோண்த்துக்கு வந்துட்டாங்கன்னு பார்க்க வந்துட்டார்.(நீங்கள் இங்கே சிரிக்க உரிமை உண்டு)
சைகிள் ரிக்சாவில் இருந்து இறங்க முடியாதபடி பிரளய மழை.
ஒரே ஒட்டம் கோவிலுக்குள். (ஆமாம் ,நானும் ஓடினேன்.)!
உள்ளே சிற்பங்கள் வரிசையாக நின்றன. அறுபத்தினாலு கால் மண்டபம் வேறு. ஒவ்வொன்றிலும் அற்புதமான சிற்பங்கள்.
எந்த சிற்பி கொடுத்து வைத்தானொ, ராமனையும் சீதையையும் சேர்த்து வைத்துப் பார்க்கிறான். என்ன கருணை அவனைத் தேடி வந்ததோ.
ஸ்ரீ ராமனின் பரிவு அவனை அணைத்திருக்கும்.

எல்லா கற்களும் உயிர் பெற்று அங்கெ ராமன் புகழ் பாடின.
நமது மெயின் கதை நம்மளைச் சுற்றித் தான்.

அங்கெ சன்னிதியை அடைந்ததும் மஹா பெரிய இடி, மின்னலோடு நுழைந்தது.
அவ்வளவுதான் என் பக்தி பின்னடைந்தது. பயம் பிடித்தது.
அங்கே இருந்த பட்டாச்சாரியாருக்கு இந்த மழை பத்தி எல்லாம் பயம் இல்லை போல.
அவர் சாவதானமாக. பெரிய விளக்குகளை ஏற்றி ,ஒளி ஏற்றி எங்கள் எல்லோருக்கும் கர்பக்ருஹத்தைக் காண்பித்தார்.
என்ன அழகுடா ராமா நீ?
உண்மையான ராமராஜியத்தினுள் வந்து விட்ட உணர்வு.
உடனேயே எங்கள் அப்பாவின் குரல், காதில், பயம் வரும் போது சொல்ல சொன்ன பஞ்ஜாயுத ஸ்தோதிரம் நினைவு வருகிறது.
அங்கெயெ கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து விட்டேன்,.
என்னுடன் வந்த தம்பிகள்,அவர்களின் மனைவிகள்,குழந்தைகள் மற்றவர்கள் சுற்றிப்பார்க்கக் கிளம்பினாலும் எனக்கு மனம் வரவில்லை. இடி வேறு பயமுறுத்தியதால் அந்த தெய்வக் குடும்பத்தையே பார்த்து என் பயம் போக்க வேண்டினேன்.


(இப்போது சிரிப்பு வரலாம். அப்போது அதுதான் என்னை கவ்விக்கொண்டு இருந்தது .பயம். பயம். )
உடனேயெ மனதில் அச்சம் குறையத் தொடங்கினது. நம்ப முடிகிறதா.
அனலைசிங் இங்கே வேலை செய்யாது. முடியாது.
எனக்குக் கிடைத்தது ஒரு காப்பு.
ஒரு அம்மாவும் அப்பாவும் ஒரு குடும்பமே எனக்குக் கருணை செய்ததாக உண்ர்வு.
நான் என் நினைவுகளில் இருந்து நான் மீண்டபோது மழை
நின்று இருந்தது.
சுற்றுப் பிரகாரங்களில் எல்லாம் தண்ணீர். மின்னல் இன்னும் வெட்டிக் கொண்டுதான் இருந்தது. ஆனால் என் பயம் தான் வேறு எங்கோஒளிந்து கொண்டது.
வெளி சுற்று எல்லாம் ராமாயணக்காட்சிகள்.
ஒரே ராம மந்திரம் ஒலிக்கிறது.
நீங்களும் இந்த மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டாமா?
ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராமா.

Tuesday, January 16, 2007

ரசமும்,நானும் பில் வாக்கரும்

அந்தக் c
பழைய பின்னூட்டங்கள்:

;பரவாயில்லை மனு, துளசி உங்க ப்ளாகிற்கு ரெகுலர் விசிட்டர் ஆகிட்டாங்க போல் இருக்கு(காதிலே இருந்து புகை, தெரியுதா?).காமெடியிலே பிச்சு உதறுவீங்க போல இருக்கே, நல்லாவே காமெடி வருது. கொஞ்சம் என்னையும் நினைவிலே வச்சுக்கோங்க. என் மெயில் 2-ம் வந்ததா?>ஹெல்லொ கீதா, இப்போ காமெடி மாதிரி தெரியரது. அப்பொ அப்படி இல்லை. திருப்பி ஊருக்கே போய்விடலாம் சாமினு நினைச்சேன். என்னப்பா, காது புகை. ? நன்றி கீதா.<

Monday, January 15, 2007

குலசேகர ஆழ்வார்சீறிவிழும் தாயே போல் நீ இருந்தாலும்,
தாயை நினைத்து அழும் சேய் நான் என்று சொன்ன ஸ்ரீ குலசேகர ஆழ்வார் பற்றி எழுதலாம் என்று தோன்றியது.
மலையாள அரசனாக இருந்து
மாலின் மேல் கொண்ட பக்தியால் நாடு துறந்தவர்.
அவர் வணங்கிய தெய்வங்களில் ஒன்றான
வித்துவக்கோட்டு அம்மான் இதோ கருடன் மேல் எழுந்து அருளுகிறான்.

கண்ணனுக்கும் ஒரு கோவில் கட்டி இருக்கிறார் இவர்.
கேரளாவில் செங்கணூர் அருகில்
இந்தக் கோவில் இரூக்கிறதாம்.

இந்த ஆழ்வார் பக்தி நினைக்க நினைக்க அற்புதமாக இருக்கிறது.

முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மிந்ருசிம்ஹாச்சாரியார் ஸ்வாமிகளின் கதைகள் குறையொன்றுமில்லை
என்ற பெயருடன் இதுவரை 7 பதிவுகள் வந்து இருக்கின்றன.
அது எல்லோருக்கும் தெரிந்து இருக்கும்.
அழகாகக் கதைகள்

சொல்வதில் அவருக்கு நிகர் அவர்தான்.
அந்த சொற்பொழிவுகளில் ஒன்றில்
குலசேகர ஆழ்வார் பற்றி சொன்னது
பின் வரும் நிகழ்ச்சி.

குலசேகர ஆழ்வார் ராஜாவாக இருந்த போது,
ராமர் மேல் கொண்ட அதீத பக்தியால்,
அடிக்கடி பண்டிதர்களைக் கூப்பிட்டு ஸ்ரீராமாயணத்தைப் படிக்கச் சொல்லுவாராம்.

அப்படி ஒரு பாராயணத்தின் போது கதையில் மூழ்கிவிட்ட ராஜா காதில்

ராமனைக் கொல்லும் நோக்கோடு கரதூஷணர்கள்
சேனை ஜனஸ்தானத்தில் திரண்டதாகக்
கேட்டதும்,
அரசன் உடனே எழுந்துவிட்டான்!!
ஆணையிடுகிறான் தன் சேனைகளை
உடனே ராமன் உதவிக்கு விரையும்படி.

சபையில் இருப்பார் விரைந்துவந்து அரசனைச் சமாதானப்
படுத்துகிறார்கள்.
நாம் இருப்பது கலியுகம்.

ஸ்ரீராமன் சக்கரவர்த்தி ஆனது திரேதாயுகத்தில்.
கரதூஷணவதம் முடிந்தது.
ராமன் க்ஷேமமாக இருக்கிறான் என்றெல்லாம்
சொல்லி அவரைச் சமாதானப் படுத்துகீறார்கள்.

இப்படி ஒரு பக்தியா என்று ஆச்சரியமாக இல்லை?

எல்லா ஆழ்வார்களுக்கும் தனிக் கோவில்கள் இருக்க
இவருக்கு மட்டும் அப்படி ஒரு ஏற்பாடு இல்லாமல் இருந்ததாம்.

சில பல பேர் முயற்சியில் அந்தக் குறையும் தீர்ந்தது.

வாழி குலசேகரன் நாமம்.
வாழ்க சீர் அடியாரெல்லாம்.

Saturday, January 13, 2007

ஆடினானே கண்ணன் ஆடினானே

சிற்றம்சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன் பொற்றாமரை அடியே
போற்றும் பொருள் கேளாய் .
வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கப் ப்அறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்டெரியல்
பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உறைப்பான் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.


திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே1
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயர் அரங்கற்கே கண்ணி உகந்து அளித்தாள் வாழியே!
மருவாறும் திருமல்லி வளநாடு வாழியே!
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப்பதங்கள் வாழியே!
ஆண்டாள் திருவடிகளே சரணம்.


மார்கழி முப்பதும் மகிழ்வித்த ''கண்ணன் பாட்டும் '' வாழியே என்று சேர்த்துக் கொள்ளுகிறேன்.

நாச்சியார் கோவில் கல் கருடன்

Posted by Picasa

பக்ஷிராஜா,கல் கருடன்,திருநரையூர்,

திருநரையூர் ஸ்ரீ வஞ்சுளவல்லி சமேத சீநிவாசப் பெருமாள் கோவில் கும்பகோணம் டவுன்ஷிப்பிலிருந்து
3 மைல் தொலைவில் இருக்கிறது.
இந்த ஊரின் பழைமையான பிரசித்தமான இன்னோரு பெயர், நாச்சியார் கோவில்.


இங்கே தாயாருக்குத்தான் முக்கியத்துவம் நிறைய.
சன்னிதியில் பெருமாளுக்கு ஒரு அரையடி முன்னால் தாயாரின் சிலா ரூபம் இருக்கிறது.
முதல் தடவையாகப் பார்க்கும் போது ஒரே அதிசயமாக இருந்தது.இப்படிகூட அந்தக் காலத்தில் சிலை வடிக்க மனம் வந்ததா என்று. அப்புறம் தலபுராணத்தைக் கேட்ட பிறகுதான் புரிந்தது.
இங்கே இருக்கும் அருள் பாலிக்கும் தாயார் வஞ்சுளவல்லி , கணவராக வ்ரப்போகும் ஸ்ரீநிவாசரை விட மிகச் சிறியவளாக இருந்ததால், திருமகளை வளர்த்த ஹேமமஹரிஷி,
கேட்டுக்கொண்டாராம்.

அப்படி என்ன கேட்டாராம்?
என் பெண்ணுக்கு அவ்வளவாக உலகம் தெரியாது.நீங்கள் தான் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று சொல்ல,
பெருமாளும் அவ்வாறெ தாயாரை முதன்மைப் படுத்திப் பார்த்து கொள்வதாக சொல்ல,


அன்றிலிருந்து தாயாருக்குத் தான் எல்லா மரியாதையும் முதலில் தரப்படும். திரு வீதி உலா கிளம்பினால் முதலில் தாயார் அப்புறம் தான் பெருமாள்.


இங்கே எழுந்து அருளி இருக்கும் கல்லினால் ஆன கருடன்தான் நம் இந்தக் கதையின் நாயகன்.
எந்த வைணவக் கோவில்கள் எதிலும் காணக்கிடைகாத காட்சி இங்கேதான் கிடைக்கும்.
ச்ரி கல் கருடன் என்று அழைக்கப்படும் பக்ஷிராஜா அவரெ விக்கிரகமாகவும் இருப்பார். அவரே வாகனமாகவும் புற்ப்பட்டு விடுவார்.


மிகப்பெரிய கருணையான உருவம்.இரண்டு கைகளும் தாயார் பெருமாளை ஏளப் பண்ணுவதற்கு தயாரான நிலையில் இருக்க, இறக்கைகள் விரித்து அவர் காட்சி தருவது மனத்தை பக்தியால் நிரப்பும்.இவருடைய விசேஷம் என்ன வென்றால், உத்சவ காலங்களில் தாயாரையும் பெருமாளையும் தன் கைகளில் ஏந்திக்கொண்டு அவர் கிளம்பும்போது முதலில் ஒரு அடிக்கு நால்வர் போதும். 2ஆவது அடிக்கு எட்டு பேர். மூன்றாவது அடிக்கு 16 பேர் என்று கோவில் வாயிலை அவர்கள் அடையும்போது 64 நபர்கள் கருட வாகனனையும் அவனது பிராட்டியையும் தூக்கி நடப்பார்கள்.

வீதிஉலா முடிந்து கருடனைப் பார்த்தால் அவருக்கு முகத்தில் வியர்த்து விட்டு இருக்குமாம்.ஏன் தெரியுமா?
பெருமாளும் தாயாரும் உண்மையாகவெ அவர் மேது ஏறி ஊர்வலம் வருவதால் தான் இப்படி ஆகிறது
என்று சொல்கிறார்கள்.
திரும்பும் போது இதெ போல் கோவிலுக்குள் அடி எடுத்து வைதததும் 64, நபர்கள் 32 ஆகும்,பிறகு 16,8, 4 என்று சன்னிதி வந்ததும் கருடாழ்வார் கனம்
குறைந்துவிடுவாராம்.
.
சும்மா பார்ப்பதற்கே பக்ஷிராஜா நல்ல உயரமும் ஆகிருதியுடனும் இருப்பார். அவர் அணியும் ஆபரண்ங்களாக ஒன்பது நாகங்கள் இருக்கின்றன.

அவை அவருக்கு அடங்கி இருப்பதால் எல்லா விதமான தோஷம் தீர்க்கும் கருடாழ்வாராக காட்சி அளிக்கிரார்.
பக்ஷிராஜயதே நமஹ.

Friday, January 12, 2007

பொங்கல் நாள் நல் வாழ்த்துகள்அன்பு வலை நண்பர்களுக்கும்
பதிவர்களுக்கும்

புத்தம்புது பால் வைத்துப் பொங்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துகள்.
ஒரு புதிய நல்லுலகத்தைக் காண்பித்துக் கொடுத்தத் தமிழ்மணம், தேன்கூடு
மற்றும் அனைத்து இணைய இதழ்களுக்கும் நன்றி.

தமிழே பால்
தமிழே அன்னம்
தமிழே சர்க்கரை.

அனைத்தும் ஒன்று கூடி இனிய பொங்கல் உருவாவதுபோல்
நம் தமிழ் மேலும் வளர்ந்து இனிமை பரப்ப வேண்டும்.

Wednesday, January 10, 2007

சாரங்கபாணி கோவில்,கும்பகோணம் ஒரு மீள்பதிவு

Posted by Picasaமுதல் தடவை இந்த கோவில் போகும்போது ,நடந்து எல்லா சன்னிதியும் பார்க்க முடியுமா என்ற நினைவு வந்து மலைப்பாக இருந்தது.
அந்த நினைப்பு இந்த யானையைப் பார்த்ததும் ஓடிவிட்டது.
சோழ அரசன் கட்டின எத்தனையொ கோவில்களில் ஸ்ரீ சாரங்கபாணி கோவிலும் ஒன்று. சோழ அரசன் ஆரம்பித்து அவன் பரம்பரையால் பாதுகாக்கப்பட்ட இந்த கோவில் நிர்மாணப் பணி,
சமீபத்தில் புனருத்தாரணமும் கண்டது.
இங்கே எழுந்து அருளியிருக்கும் அப்பன் ஆராவமுதன் பள்ளிகொண்ட பெருமாளாய் காட்சி கொடுக்கிறான்.

கும்பகோணம் கோவில்கள் பற்றி எழுத ஒரு பதிவு போதாது என்று எல்லோருக்கும் தெரியும்.
ஆனாலும் அடிப்படையில் ஒரு தென் மாவட்டத்தைச் சேர்ந்தவளாக இருப்பதால் எனக்கு முதல் முறையாக இத்தனை கோவில்களையும் பார்ப்பது நிறைய பிரமிப்பாக இருந்தது.
பிரயாணத் திட்டமோ 2 நாட்களுக்கு. பார்க்க வேண்டிய கோவில்களொ 7, 8 இருக்கும்.
10 வருடங்களுக்கு முன்னால் :-)))))))
திடம் நிறைய. இருந்தாலும், திட்டம் போடும் திறன் என்னவோ இப்போது இருப்பதுதான். மாறவில்லை என்றுதான் சொல்கிறேன்.

கும்பேஸ்வரர்,இராமசாமி கோவில், நாச்சியார் கோவில்,
திருவிண்ணகரம் ஒப்பிலிஅப்பன், திருநாகெஸ்வரம்....
இதைத்தவிர கும்பகோண்த்தைச் சுற்றி உள்ள கோவில்கள் வேறு.
சாரங்கபாணி அப்பனை உடனே பார்ப்பதற்குக் காரணம், நாஙகள் தங்கி இருந்த விடுதி அதை ஒட்டி இருந்ததால் தான்.
விடுதி சன்னலில் இருந்து பார்க்கும்போது கண்ணீல் பட்ட விமானமே கம்பீரமாக மனதுக்கு இதம் அளிப்பதாக இருந்தது.

கோபுர வாசலைத் தாண்டி ஸ்ரீ கோமளவல்லித் தாயைத் தரிசிக்கிறோம்.
அவளைப் படிதாண்டாப் பத்தினி என்றுதான் அழைக்கிறார்கள். கோவில் பிரகாரத்தை விட்டு வெளியே வரமாட்டர்களாம்.ஏன் இந்த ஏற்பாடு என்று எஙளுக்கு விளக்கப் படவில்லை.


ஆனால் எல்லா ஐயமும் தாயின் அழகையும், ஐச்வர்யத்தையும், கருணையையும் உணர்ந்தபோது விலகிவிட்டது. பெயருக்கு ஏற்றபடி கோமளமாகத்தான் காட்சி தருகிறாள் அன்னை.
அப்படியே நம்மை அரவணைத்துக் கொள்ளும் தாய்மை.
தாயைப் பார்த்த பெருமையுடன் வெளியே வருகிறோம். தந்தையின் சன்னிதி கண்ணில் படுகிறது. கம்பீரமான யானைகளும், குதிரைகளும் இழுக்கும் தேர்தான் கருவறையாகக் காட்சி தருகிறது.

அதைதான் இந்த பதிவுக்குக் கொடுக்க வேண்டும் என்றுதான் தோன்றியது. அப்பன் சாரங்கபாணியாக வில்லேந்திய கையுடன் மணமகளைக் கைத்தலம் பற்றுகிறான்.
கருவறையில் பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கும் பெருமான் சற்றே எழுந்தகோலத்தைப் பற்றீகேட்டபோது,
அங்கிருந்த பட்டாசாரியர் சொன்னது இது.
பெருமாளைத் தரிசனம் செய்ய ஆவலோடு வரும் திருமழிசை ஆழ்வார் உற்ங்கிக் கொண்டிருக்கும் அப்பனைப் பார்த்துத் தான் வந்து இருப்பதை அறிவிக்கிறார்.
உடனே அதுவரை சயனித்து இருந்த மால் சற்றே எழுந்து பார்க்கிராராம்.
ஏற்கனவே களைத்து உறங்கும் உன்னை மீண்டும் எழுப்ப எனக்கு மனம் வரவில்லை ,அதனால் மறுபடி உறங்கப்போ என்றாராம். அதனால் பெருமாள் அப்படியே இருந்து விட்டார்.இப்போதும் அதே பாதி சயனித்தப், பாதி எழுந்த நிலையில் இருக்கிரார்.
ஆராவமுதனும், கோமளவல்லித்தாயும் எல்லொரையும் சுகமாக வைத்திருக்கட்டும்.

கூடாரை வெல்லும் கோவிந்தன்கோவிந்தனுடன் கூடிக் களித்த மார்கழி மாதம் நிறைவடைய இன்னும் ஐந்து நாட்கள்
உள்ளன.
மாலே மணிவண்ணா மார்கழி நீராடினோமா,
உன் கோவில் வாசலில் தவமிருந்தோமா,

உன் நப்பின்னையைக் கூவி அழைத்தோமா
அவளை மகிழச் செய்தோமா.
ஏதும் தெரியாது.
ஏனென்னில் வலம் இடம் எது என்றே தெரியாத இடைக்குலம்.
நல்லது எது கெட்டது எது தெரியாது.

ஆனால் உன்னைத் தெரியும்.
உன் வார்த்தைகள் தெரியும்.
நீ எங்களைக் காப்பற்றத்தான் இருக்கிறாய்
என்றும் தெரியும்
கூப்பிட்ட குரலுக்கு வருவான் கோவிந்தன் அல்லவா.
ஆதலால் கோவிந்தா,மாதவா, கேசவா,ரிஷிகேசா
என்று எப்பவுமே உன்னைக் கூப்பிடும் குரல் வேண்டும்.

உன் நினைவு வேண்டும்.
உன் நாமம் நாவில் வேண்டும்.
அகத்தில் உன் உருவம் வேண்டும்.
அந்தக் கருணைமழையில் நனைந்து நனைந்து
உன் கை படும் பசுப்போல் உன் சொற்படி நாங்கள் நடந்து உன்னை வந்து அடைய வேண்டும்.
கோவிந்தன் நாமம் வாழி.

Saturday, January 06, 2007

மீண்டும் பாட்டி...உதவியா..உபத்திரவமாஒரே இருட்டாக இருக்கிறதே மணி நாலரை தானெ ஆகிறது என்று நினைத்ததை(நான்) வாய்விட்டு சொல்லிக் கொண்டே வெளியே வந்து காரில் ஏறி வீட்டுக்குத்
திரும்பினோம்.
இங்கே குளிர்காலம் இன்னும் ஆரம்பிக்கலையாம்.
ஆனாலும் இலையுதிர்காலத்திலேயெ இதுபோல

சீக்கிரம் சூரிய அஸ்தமனமாகிவிடுமாம்.

'சரி போ, நாம என்ன யோகா பண்ணப் போறோமா
எப்போ சூரியன் உதிக்கும்,, எப்போ சன்செட் என்று யோசிக்க ?'
கூடவே வந்த பேரனின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டே வந்தேன்.

பயணம் நீண்டு ஒரு மணி கடந்து வீட்டுக்கு வந்தோம்.சென்னையில்,
மீனம்பாக்கத்துக்கும் நம்ம வீட்டுக்கும் மிஞ்சி மிஞ்சி 30 நிமிடம் ஆகும்.

போக்குவரத்து அதிகமான நாட்களில் இன்னும்
கொஞ்ச நேரம்.

இங்கு எல்லாமே பெரிய அளவு.
குரல்,சில மனிதர்கள்,
அவர்கள் வீட்டு நாய்கள்,சுற்றிவரும் முயல், அணில்
எல்லாம் ஆ,'என்றுதான் பார்க்க வைக்கின்றன.

அக்கம்பக்கத்தில் நம்ம ஊர்க்காரர்களும்
நிறைய. எல்லாம் பத்துவருடங்கள் முன்னமே
இங்கே வீடு வாங்கிக் கொண்டுவந்துவிட்டவர்கள்.

ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதைப் பார்க்கும்போது மிகவும் இனிமையாக இருக்கிறது.

எல்லாருமே சமவயதினர்.அதனால்
நோக்கம்,முன்னேற வேண்டும் என்ற துடிப்பு
ஒன்றாகத்தான் இருக்கிறது.

அவர்களில் ஒரு பெண் என்னைக் காய்கறிக்கடைக்கு அழைத்துப் போவதாக ஏற்பாடு.
அவரும் தன் வண்டியை எடுத்து வந்து விட்டார்.
நானும் குளிருக்கு மாற்று உடைகளைப் போட்டுக்
கொண்டு
(ஆமாம்மா, இங்கே,, இந்தக் காலிலே செருப்பு மாட்டு,
கடைக்குப் போ'' வழக்கமெல்லாம் கிடையாது.)
காய்கறி அங்காடி என்று பேரு. எல்லாம் இருந்தது அங்கே.
முறுக்கு,லட்டு,மிக்ஸர் எல்லா இந்தியப் பண்டங்களும்

அரிசி மாவு,உளுந்து மாவு,கடலை மாவு என்று வகை வகையாக மாவுகள் வரிசை,
மசாலா பொடிகள் இன்னும் எத்தனையோ.
அம்பிகா அப்பளம் ஏன் இன்னும் கடை விரிக்கலை
என்று தெரியலை.

கொள்வோர் ஏகம்.
மசாலாமோர்(more) ஒரு இந்தியக் கடை.
அங்கே காலையில் பக்கோடா பார்த்தால்
உடனே வாங்கிடணும். அப்புறம்னு நினைச்சால் வெறும் தட்டைப் பார்த்து விட்டுத் திரும்பலாம்.

இப்ப மட்டும் எனக்கு முறுக்கு சுத்த வந்தால்
(அத்தைக்கு மீசை)
எவ்வளவு சம்பாதிக்கலாம்னு நினைச்சுப் பெருமூச்சு வந்தது.
காய்கறி, அரிசி,பருப்பு வகையறா எல்லலம் வாங்கி வீட்டில் வைத்துவிட்டதும்,
ஒரு டிபன் செய்யலாமேனு ஐடியா.
கொத்தமல்லி ,கருவேப்பிலை,பச்சைமிளகாய், அரிசிமாவு கடலை மாவு
கலந்து மிளகாய் பஜ்ஜி செய்யலாம்.
எல்லோருக்கும் பிடிக்கும் என்று
இந்த ஊரில் விற்கும் ஒரு தாவர எண்ணையை
அடுப்பில் வ்ஆணலியை ஏற்றினேன்.
நல்ல அழகான ரத்னா ஸ்டோர் பிடி வைத்த
வாணலி.

மற்ற பண்டங்களைக் கலந்து ரெடி செய்து
மிளகாயை மாவில் தோய்த்தேன்.
அடுத்த நிமிடம் விபரீதமாக ஒரு அலார்ம் அடிக்க ஆரம்பித்தது.
மாடியிலிருந்து பேரன்,
என் வீட்டுக்காரர்,மாப்பிள்ளை,பெண் வந்து இருந்த உறவு எல்லோரும்
ஃபையர் அலாரம். ''''நிறுத்துங்கொ நிறுத்துங்கோ''
என்றால் எனக்கு அது எங்கே இருக்கு என்றே
தெரியவில்லை.

மாப்பிள்ளைதான் நிறுத்தினார்.
அதற்குள் பெண் வந்து அடுப்பை நிறுத்தினாள்.
இப்பொ எதுக்கும்மா இந்தக் கோட்டை அடுப்பை ஏத்தினாய் என்று ஒரே சிரிப்பு.
கோட்டை அடுப்பா இது என்று ஆராய்ந்தேன்.


''ஆமா, இருக்கீறதிலேயே இதுதான் பெரிய பர்னர்.
அதுல நல்ல புகையிற எண்ணை, அதுக்கு
மேலே ஒரு பைத்தியக்கார பிடி வச்ச பாத்திரம்.
மணி அடிக்காம என்ன பண்ணும்!!'''

ஆனால் அதிலேருந்து(அலார்மிலிருந்து)தண்ணீர் ஒன்றும் தெளிக்கலியே என்று கேட்டேன்.

அது டெட்ராய்ட் கதைமா.
(அங்கே கற்பூரம் காட்டி அபாய அறிவிப்பு செய்தேன்:-0)
இங்கே வெறும் அலார்ம் மட்டும்.
பாட்டரியைப் பிடுங்கினால்தான் நிக்கும்

கையெடுத்துக் கும்பிடாத குறையாக
எனக்கு மத்த பாத்திர அடுப்பு
விசேஷங்களையுமெடுத்துச்
சொன்னாள்.

பார்க்கலாம்....

ரொம்பக் கவனமாகக் கேட்டுக் கொண்டேன்.

Friday, January 05, 2007

ஆரம்பம்...மீண்டும் பாட்டி...புதிதுஇரண்டு நாள் ஸ்விஸ்ஸில் தங்கல்.
கிளம்பும்போது கூட வருவது சின்னவன்.
அவனுக்கு இங்கெ வேலை இருந்தது.
அம்மாவின் பயணத்துக்கு ஏற்றவாறு
நாட்கள் பதினைந்தையும் அமைத்துக் கொண்டான்.

காலை கிளம்பி சுரிக் வந்தோம்.
பரிசோதனை எல்லாம் முடிந்து
வெளியே வந்து என்னை எப்போதும் பிரியாத தண்ணீர் பாட்டில், தயிர் ,பால் வீட்டுக் கலந்த ததியன்னம்,(பின்ன!
ஏமாறுவேனா மறுபடி?)
எடுத்து போர்டிங் கேட் அருகே வரும்போது
மறுபடி ஒரு அம்மா வழியில் நின்றார்கள்.

மேம், நோ வாட்டர்,என்றாள்.
அப்புறம் என் தயிர் சாதத்தை விடுவார்களா.
சரி உள்ளதானே எடுத்துப் போகக் கூடாது,

வெளில லௌஞ்சில் சாப்பிடலாம்ப்பா என்றேன்.
அவனுக்கு தயக்கம் தான்.
வாசனை தூக்குமே.
பெருங்காயம்,கடுகு,கொத்தமல்லி,கருவேப்பிலை கொஞ்சமாவா
கொட்டி இருக்கிறேன்!!:-0)

அம்மா பாவம் என்று கூட உட்கார்ந்து கொண்டான்.
டப்பாவைத் திறந்ததும் சுற்று முற்றிலும் பார்வை
பதித்தேன்.
யாரும் கவலைப்படவில்லை.

இரண்டு வயதான் தம்பதியர் அருகில் வந்து'' போன் அப்பிட்டீட்''
என்று சொல்லி விட்டுப் போனார்கள்.

நறுமணம் மூக்கை எட்டியதும்
சின்னவனும் நானும் சாப்பிடுகிறேன் என்று

இன்னோரு தட்டில் எடுத்துக் கொண்டான்.
வயிறார சாப்பிட்டு விட்டுக் கிளம்பினோம்.

தனிப் பரிசோதனையையும் முடித்துக் கொண்டு

விமானம் அருகே வந்துவிட்டோம்.
வாயிலில் இருக்கும்,வரவேற்பாளினி(?)
என் பெயரைப் படித்தாள்.
ஒரு வியப்பு கலந்த ஏதோ ஒன்றுடன்
கலந்த புன்னகையோடு''
ஓ the VIP from India''

என்றாளே பார்க்கலாம்.

அசடு வழிவதைதவிர வேறு தெரியவில்லை.
நகரும்மா என்றவாறு எங்கள் இருக்கைக்குக் கூட்டி வந்தவன்
சொன்னான்''
அம்மா நம் விவரம் கணினியில் பதிவாகி இருக்கும்.
அதுதான் உனக்கு எஸ்கார்ட் நியமித்ததும்
அவர்கள் உன்னை( உதவி தேவைப்படும் அம்மா)
சரியாகப் புரிந்து கொள்ளாமல் வி.ஐ.பி
என்று நினைத்துவிட்டார்கள்.

நான் கேட்டேன் ஏனப்பா, வி.ஐ.பி என்றால்
'இகானமி'யிலா பயணிப்பார்கள்?
என்று.

அவன் சிரித்துவிட்டான்.
ஒருவேளை நான்தான் உன்

மெய்க்காப்பாளர் என்று நினைத்து
நீயும் பாதுகாப்புக்காக

இப்படி வருவதாக நினைத்து இருப்பார்கள்.
''Enjoy the attention maa''

என்று தூங்கப் போய்விட்டான்.
அந்த வயதான உதவியாளர் (தலைமை)
அடிக்கடி அருகில் வந்து
so how are we?
do you like this airline?
என்று விசாரித்தார்.
கொஞ்ச நேரத்துக்குப் பிறகு நானும் விளையாட்டில்
ஈடுபட்டு விட்டேன்.

நிறையப் பிடித்து இருக்கிறது. இந்த
ஏர்லைன் மாதிரி பார்த்தது இல்லை'
என்று கூறித் தூங்கிவிட்டேன்.
பத்து மணிநேரம் கழித்து சிகாகோ வந்து சேர்ந்தோம்.

தொடரும் குளறுபடிகள்---------3நான் நினைத்தது, பழகின இடம் தானே. ஒன்றும் தொந்தரவு இருக்காது.

எளிமையான இடம்.

விமானத்தை விட்டு இறங்கினதும், கஸ்டம்ஸ் பிறகு வெளியே நடக்க வேண்டியதுதான்.
கீழே போனால் ரயில்வே ஸ்டேஷன்.

நேரே எங்கே போய் இறங்க வேண்டுமோ அங்கே போக வேண்டியதுதான்.
இங்கே உதவி என்று நான் எதிர்பார்த்தது
நம்மூர் போர்ட்டர் மாதிரி ஒரு ஆளை.
இந்த மாதிரி ஒரு நல்ல
அழகான வாட்டசாட்டமான பெண்ணைப் பார்த்ததும்., ஒன்றும் புரியவில்லை.
ஸ்விஸ்காரங்களுக்கு அவ்வளவாக ஆங்கிலத்தின்
மேல் ஈடுபாடு இல்லை.
அதனால் அவள் என்னைக் கையைப்பிடிக்காத குறையாக ,

'will you follow me?'
என்றதும் யோசனையாக இருந்தது.

விடி விடுவென்று நடந்த அந்தப் பெண்மணி நான்
பின்னால் வருகிறேனா என்று கண்காணித்த வண்ணம்
முன்னே போய் ஒரு சின்ன பிளாஸ்டிக் கார்ட்
வைத்து மடமட வென்று வெளியே கொண்டு
வந்துவிட்டாள்.
அங்கெ இருந்தது ஒரு சின்னக் கார்.

அதில் ஏறிக்கொள்ளச் சொல்லிக்
கதவையும் திறந்து விட்டாள்.

கார் போய் நின்றதும் நமது பெட்டிகள் வரும்
இடத்தில்,
என்னுடைய பெட்டிகளை அடையாளம் கண்டு
எடுத்துத் தள்ளுவண்டியில் வைத்துக் கொண்டாள்.

அத்தனை பயணிகள் நிற்கும் இடத்தில் நான் மட்டும் தனிப் படுத்தப் பட்ட நினைவு எனக்குப் பழக்கமில்லாத
கோபத்தைக் கொடுத்தது.

மறுபடியும் அவளுடன் நடக்க வாயிலில்
என் மகனைப் பார்த்தேன்.

''என்னடா பையா இது''
என்று கேட்டதற்கு இதுதாம்மா இங்கே கிடக்கிற
எஸ்கார்ட் சர்வீஸ்.
என்ன நம்ம ஊரில 20ரூபாயோட போற
செலவு இங்கே கொஞ்சம் ஜாஸ்தி'' என்றான்.
மேலே கேட்கப் பயமாக இருந்ததால்
நநன் அமைதியாகி விட்டேன்.


காப்பி குடிக்கும் இடத்திற்குப் போனதும்,
''தம்பி எனக்கு இதெல்லாம் இனிமேல் வேண்டாம்.
அம்மா நல்லாதான் இருக்கேன்.''
என்று சொல்லி நிறுத்திவிட்டேன்.
இரண்டு நாள் கழித்து சிகாகோ
பயணித்தோம்.

Wednesday, January 03, 2007

கொஞ்சமே கனமான சரீரம்ஆனைமுகத்தோனே
ஆதிமுதலானவனே
பானை வயிற்றோனே
பக்தர்களைக் காப்பவனே.....
மோனைப்பொருளே
மூத்தவனே கணேஸாஆஆஆஆஆஆ
ஏனென்று கேளூமய்யா
இந்த ஏழை முகம் பாருமய்யா

ஆஆஆஆ''
இப்படிப்போகும் பாகப்பிரிவனை படத்தில் ஒரு
பாட்டு.
இந்தப் பாட்டு அடிக்கடி எனக்கு நினைவு வரும் மெரினாவில் நடக்கப் போகும்போது.
அது சம்பந்தப்பட்ட மீள் பதிவுதான் இது.

ஏனெனில் இது நம்ம நூறாவது பதிவுங்க.

இப்போது ஒல்லியாக,ஸ்லிம்மாக, தின்னாக,எதையுமே தின்னக்கூடாத உடம்பு வாகுதான் கொண்டாடப்படுகிறது.


ஒரு மணியன், ஒரு சேவற்கொடியோன்,கொத்தமங்கலம் சுப்பு சார், சாவி சார் கதைகளில் வளர்ந்த எனக்கு அப்போது இருந்த வருத்தம் நாம் எப்போது அந்த மாதிரி இருப்போம் என்று ஒரே கவலை.


எந்த மாதிரி? ஜயராஜ் சார் படம் போடுவாரே,, அதாவது வடிவோடு, அழகாக,பார்க்கிற மாதிரி!!அதுவும் கோபுலு சார் போடும் படங்கள் பார்த்துவிட்டு

நானும் சூடு போட்டுக்கும் பூனை போல், வரைந்து பார்த்ததில்( கை வளைந்தால் உடம்பும் வளையும் என்று யாரவது சொல்லி இருப்பார்கள்) எங்க அம்மா அப்பாவுக்கு ஒரு மாதிரி சந்தேகம் வந்து விட்டது.

ஓஹோ நம்ம பொண்ணுக்கு சின்னக் கண்ணாக இருப்பதால் இந்த வில் போன்ற புருவம் வரைந்து மனதைத் தேற்றிக் கொள்ளுகிறாளோ,


ஒட்டடை குச்சி என்று அழைக்கப்படுவதால் இந்த மிஸ் நிம்புபானி ஓவியங்கள் நோட்டுபுக் தாள்களில் நிரம்புகிறதோ என்று சீக்ரெட்டாகக் கவலை.

அப்பா அம்மாவிடம் கலந்து பேசி,ஒரு இரவு சாப்பாட்டுக்குப் பின்னர் எங்கள் மூன்று பேரையும் அழைத்துப் பொதுவாக உடல் ஆரோக்கியக்
குறிப்புகளைக் கொடுக்க ஆரம்பித்தார்.

சின்னதம்பிக்கு தூக்கம் வந்தாலும் ஏதோ கதை போல என்று தலையை ஆட்டினான்.பெரிய தம்பி அப்பாவிடம் நிறைய மரியாதை, அதனால் உன்னிப்பாக கேட்டுக்கொண்டான்.


எனக்கு as usual புரியாததால் ஜெனெரலாக ஆமாம்பா சொல்லிக் கொண்டு இருந்தேன். "ஆகையினாலே மனசு ஹெல்தியாக இருக்கணும்னால் நிறையப் படிக்கணும்,பேசணும், இதோ நீ கூட படம் வரயறே.உனக்கு நல்ல ஓவியராக வர ஆசைனு தெரியரது. ஆனால் ஏன் கண் மாத்திரம் போடறே?" என்ற கேள்விக்குறியொடு நிறுத்தினார்.

( அவரிடம் எனக்கு சொல்ல சாமர்த்தியம் போதவில்லை,, அப்பா எனக்கு கண் வரைக்கும் தான் ஒழுங்காக வரது அதுக்கு அப்புறம் கோணல் மாணலாப் போகிறதுனு)

அம்மாவும் அன்னை படத்தில் வரும் சந்திரபாபு பாட்டுப்போல்'',புக்கைக் கண்டா கண்,ஹிண்டு பேப்பரில கண்,ஆனந்தவிகடன்லெ கண்ணு,மளிகை சுத்தி வர பேப்பரில் கண்ணு கண்ணு ''என்று பாடாத குறையாகச் சொன்னார்.

திடீரென முழித்துக் கொண்ட என் தம்பி, அப்பா அதே கண்கள் சினிமாப்பா என்றான்.பெரியவனும் ஆமாம் மா,எல்லா கண்களும் நம்மையே பாக்கிற மாதிரி இருக்கு, ஜேம்ஸ்பாண்ட் மூவி மாதிரி''


.எனக்கு வந்த கோபத்தில் ஏதாவது ரூமில் போய் விழுந்து அழலாம்னா தனி பெட் ரூம் கூட இல்லியே என்றுதான் தோன்றியது.

அப்புறம் ஒரு மாதிரி எனக்கு ஒருவிதமான கோளாறும் இல்லை என்று சாதித்து கொஞ்ச காலம் பென்சில், ரெட் பென்சில் ஒன்றும் தொடவில்லை.(அப்போதெல்லாம் கலர் கலராகப் பென்சில் வாங்கித்தர மாட்டார்கள்.)அதனால் நான் வரையும் பெண்கள் எல்லாம் சிவப்புப் புடவையும் கருப்பு டிசைனும் போட்ட ப்ளௌசுமாகத் தான் இருப்பார்கள். இவ்வளவு ஸ்தூலமான பாடிலைனைத் தேடி நான் அலைந்து மேலும். இளைத்தேன்.

இவ்வளவு கதை இப்போது எதற்கு தெரியுமா?இரண்டு நாட்கள் முன்னால் நடந்த எங்க வீட்டு விழாவில் என்னைப் பார்த்த என் அத்தை ''


ஏன் நீ இளைக்கவே இல்லை?வாக்கிங் போறியோ? சாப்பாடிலே கட்டுப்பாடு வேணும்மா.வயசாயிடுத்து பார்த்தியா.... என்றெல்லாம் அடுக்கவும், (அவங்களுக்கும் என் வயசுதான்.அது வேற கடுப்பு. அவங்க இன்னும் ஸ்லிம் ஜேன்.அதுக்கு வித்தியாசமான காரணங்கள் உண்டு.)(அதற்காக நான் காலை எழுந்தவுடன் காப்பி, பின்பு கனிவுடன் ஆறு தோசை, மதியம் முழுதும் தூக்கம் ,இரவில் கலந்த சாதங்கள் என்று பூந்து வெள்ளாடலியே.அடடா எப்படி இருக்கும் அந்த லைஃப்?)


எனக்கு வந்த வெறியில் என் சுகர் கட்டுப்பாட்டையும் மீறி, அங்கே இருந்த மைசூர் பாகு, தட்டை, முறுக்கு ஜாங்கிரி எல்லாவற்றையும் கல்யாண சமையல் சாதம் பண்ண ஆசை வந்தது.


பிறகு தான் என் உரிமையான இந்த ப்ளாக் பதிவில் போட்டு மனதை சமாதானப் படுத்திக்கொண்டேன்.48 கேஜி இருந்தவங்க 74கேஜி ஆவதற்கு 40 வருடம் ஆச்சு. அதனாலே இங்க சொல்ல வரது எல்லாம்இப்படி இருந்தவங்க அப்படி ஆவதும் உண்டு. அப்படி இருந்தவங்க இப்படி ஆவதும் உண்டு.


எல்லாம் காலம் செய்யும் கோலம். எனக்கு இப்பொ கூட ஆசை தான் கச்சேரி பண்ண,அதிர்ஷ்டம் என்னவோ டிரெட்மில் மேய்க்கறபடிதான் இருக்கு.பரவாயில்லை நான் வெகு சந்தோஷமாகக் குண்டாகவே இருக்கிறென். யாருக்கு என்ன நஷ்டம்?நீங்களெல்லாம் எப்படி?// 7:46 AM


Comments:சில பேருக்கு உடல்வாகே அப்படிதான், அவங்க ஒன்னும் செய்யமுடியாது."ஊசி போல உடம்பு இருந்தா தேவையில்லை ஃபார்மசி" என்ற மருத்துவ கருத்துப்படி உடல் எடையை குறைத்துக்கொண்டோமானால் நலம். வயசாக ஆக உடல்பருமனால் தொல்லை அதிகமாகிடும், அதுக்கு பல காரணங்கள், முடிந்தவரை காலை, மாலை வேக நடை பயிலுங்கள் மிக நல்லது, சர்க்கரை நோயாளி பண்ணிக்கிட்டு தான் இருப்பீங்க இருந்தாலும் சும்மா சொல்லி வைத்தேன். :-) //அவங்க இன்னும் ஸ்லிம் ஜேன்// இந்தி & ஆங்கில படம் அதிகம் பார்ப்பீர்களோ?அப்புறம் ஊசி மாதிரி இருந்தா தமிழ்நாட்டு சனங்களுக்கு பிடிக்காது. கொஞ்சம் பூசுனாப்ல இருக்கனும். :-))# posted by குறும்பன் :


6:08 PM ஹெலோ குறும்பன், வாருங்கள். வந்ததுக்கு நன்றி. ஆமாம் ஆங்கிலப் புத்தகங்கள் நிறையப் படிக்கப் பிடிக்கும். அதோட பாதிப்பு தெரிகிறது என் பேச்சிலும் எழுத்திலும்.பூசினாப்பிலெ இருந்தால் நல்லதுதான். இப்பொ நான் இரண்டு மூணு தரம் பூசின மாதிரி இருக்கேன்:-)) நடையும் உண்டு. பசியும் அதை விட அதிகம். பார்க்கலாம் யார் விட்டா.நானாச்சு என்னோட ஃபாட் ஆச்சு. கைகலப்பு தான்.மறுபடியும் தான்க்ஸ்.# posted by manu : 6:46 PM சில வருடங்களுக்கு முன்னர் என்னுடைய அத்திம்பேர்: என்னிடம் “சந்துரு உடம்பைக் கொஞ்சம் கவனி. இளைக்கப்பார் என்றதுக்கு, நான், “குண்டாக இருப்பதால் நான் என்ன ஆரோக்கியகுறைவாக இருக்கிறேன். ஒல்லியாக இருப்பதால் நீங்க என்ன ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்?”(அவருக்கு sugar, BP, cholesterol இத்யாதிகள்) என்று கேட்டது ஞாபகம் வருகிறது. என்னைப் பொருத்ததவரையில் குண்டாக இருக்கிறீர்களோ ஒல்லியாக இருக்கிறீர்களோ - ஆரோக்கியமாக இருந்தால் சரி!பி.கு. என் அத்திம்பேர் குண்டு ஒல்லி என்று என்னிடம் பேசியது அதுவே கடைசி!# posted by chandar : 7:34 AM ஹா ஹா,.இதுவல்லவோ பதில்.இந்த ஒல்லியா இருக்கிறவர்களுக்கு குண்டாக இருப்பவர்களைப் பார்க்கும்போது ஏதோ ஆகிவிடுகிறது. நமக்குத்தான் நல்ல மனசு ஆச்சே. அதனாலே விட்டு விடலாம்.பூனைக்கு ஒரு காலம் வந்தால் யானைக்கு ஒரு காலம் வராதா?:-))# posted by manu : 9:03 AM கணக்குச் சரியா வருதான்னு தெரியலையே மானு.48- 40- 74 வச்சுப் பார்த்தா,37.5 - 32- 72 சரியா?பூனைக்கு ஒரு காலம் வந்துருச்சு. இன்னும் 'யானை'க்குத்தான் வரலை:-)))குண்டோ ஒல்லியோ மனசு சந்தோஷமா இருந்தாச் சரி. ஒல்லியா இருந்துக்கிட்டு, ஒண்ணும் திங்காம,'கண்ணுலே பசி'யோடு இருக்கற நிறையப்பேரைப் பார்த்து மனசு சமாதானப் பட்டுருது:-))))கொஞ்சமாத் தின்னாலும், மனசுலே களங்கம்

தொடரும் குளறுபடிகள்.........2 ----வி.ஐ.பிதுபாயில் ,குளிர்காலத்துக்குத் தேவையான வேஷங்களை எல்லாம் வாங்கிக் கொண்டு
கிளம்பும் நேரம் அம்மா
தனியாகப் போறதுனாலே
சூரிக் ஏர்போர்ட்டில் அஸிஸ்டன்சுக்கு சொல்லுடா
என்று தம்பியிடம்
உத்தரவு போட்டான்.

காலை 5.30 மணிக்கு இறங்கும் நேரத்தில் இரண்டு டெர்மினல் கடந்து வருவதற்குள் அம்மா தொந்து போயிட்டா என்ன செய்யறது என்று பயம்.
இல்லைன்னால் திருவிழாக் குழந்தை
மாதிரி திரு திருனு பயணப் பெட்டி எடுக்கும்
இடத்திலேயே நின்று விடப் போகிறேன் என்று நினைப்போ.

எப்படியோ போய் சேர்ந்தால் போதும் என்று
விமானத்தில் உட்கார்ந்தாச்சு.
''மேம்/?
ஏசியன் டையபடிக்?
என்று ஸ்விஸ் தேவதை கேட்டாள்.
ஓ யெஸ் அது நான் தான் என்றேன்,.

அனுசரணையாக தட்டில் வைத்து விட்டுப் போனதைத் திறந்தால்
அதில் பச்சையாக ஏதோ ஒன்று.
கீரையோ தெரியவில்லை.
பிறகு வளைவு வளைவாக ஒருமாதிரி பழுப்புக் கலரில் ஏதோ ஒன்று.
மிக்க ஜாக்கிரதையாக அதை ஸ்பூனால் குத்தினால் வழுக்கியது.
நம்ம சாப்பாடு வழுக்காதே என்று நினைத்து,
அந்த அம்மாவை விளித்து
உணவின் பெயரைக் கேட்டேன்.

முட்டையும் டூனாவும் சேர்ந்த ஒரு கலவை.
அது உனக்கு நல்லது.

உனக்காகச் செய்த சுகர் ஃப்ரீ.
என்றாளே பார்க்கலாம்.

அப்போதுதான் பெரியவன் அம்மா எதாவது பூந்து விளையாடப் போகிறாரே என்று
சொன்ன சர்க்கரை நோய்க்கான சாப்பாடு இப்படி வந்துவிட்டது என்று புரிந்தது.
என் முணுமுணுக்கும் வயிற்றையும்
மனசையும் சமாதானப் படுத்தி

உறங்க முயற்சிப்பதற்குள் விமானம் தரை இறங்க ஆரம்பித்தது.
எதிரே உள்ள கணினி+டிவியில் இறங்க வேண்டிய டெர்மினல்,போகும் பாதை,வெளியே போகும் வழி என்று
எல்லாவற்றையும் விளக்கமாக வரைபடமாகக் காண்பித்தாலும் சரியாகக் கண்டுகொள்ளவில்லை.
எல்லாம் இறங்கிய பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று
மேலே இருந்த உடமைகளை எடுத்துக் கொண்டேன்.
'மாம் நீட் ஹெல்ப்? ' என்று புன்னகைத்த
பக்கத்துசீட்டுக்காரர், எனக்கு லக்கேஜை
எடுத்துக் கொடுத்தார்.
நன்றி சொன்னபடியே வாயிலுக்கு வந்தால் அங்கு நின்ற இன்னொரு பணிப்பெண்,
நீங்கதான் ஸொ &ஸோ/ என்று விசாரித்தார்.
எனக்கு முதலில் தோன்ரியது லேசான பயம்.

பெட்டியில்ல் ஏதாவது தகராறொ?
அப்படி ஒண்னும் கொண்டு வரலியே. அப்பளம்,மாவு,எண்ணை, திரவ பதார்த்தம்
என்று கணக்குப் போட்டுக் கொண்டே
நிமிர்ந்தால் எதிரே நீல வர்ண சீருடையில்
இன்னோரு பெண்.
அவளிடம் என்னை ஒப்படைத்த விமானப் பெண் கொஞ்சம் புன்னனகைத்தாள்.

நானும் பலியாடு மாதிரி மற்றவர்கள் என்னை ஏதோ மாதிரிபார்க்க புதிதாய் வந்த பெண் பின்னால் நடந்தேன்...

Tuesday, January 02, 2007

படம் படம்
நாங்கள் இங்கே ஸ்விட்ஸர்லாண்ட் போன

காலம் அவங்களோட 'ஹாட்
சம்மர்.'
எங்களுக்கு அதுவே குளிர்.
இந்தப் படங்கள் வீட்டுக்குப்பக்கத்தில் இருந்த
இடங்கள்.
முந்தைய பதிவில் போட்டு இருக்க வேண்டியவை.

ஒரு மீள் பதிவு--தேன்நிலவு போனகதை

தேன்நிலவு படம் வந்த போது நாங்கள் பள்ளிப்படிப்பை முடித்திருக்கவில்லை. காஷ்மீர் காட்சிகள், ஹவுஸ் போட்,வைஜயந்திமாலா,ஜெமினி கனேஷ்,தங்கவேலு என்று ஒரு அற்புதமான கதையுடன் பொழுதுபோக்கு சித்திரமாக இந்தப் படம் வந்த போது காஷ்மீரைக் கண்டு மயங்காதவர்கள் கிடையாது.எல்லோருக்கும் கல்லூரியைப் பார்ப்போமா என்று தெரியாது. ஆனால் திருமணம் என்பது சீக்கிரம் நடக்கும் என்று மட்டும் தெரியும். அதனால் 11 ஆவது வகுப்பு தேர்வுகள் முடிந்து தோழிகளின் பட்டாளமே கூடி, அப்போது திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த புதிய பறவை பார்த்து விட்டு வந்தோம். எல்லோருக்கும் சோகம். படமும் சுபமாகப் போகவில்லை. எங்களுக்கும் நாயக நாயகி(எங்கள் இஷ்டப்படி) சேராததால் திருப்தி இல்லை.

அப்போதைக்குஎங்களுக்கு ஆதரவு சொல்லி மகிழ்ச்சியைக் கொடுத்தது 2 வருடம் முன்னால் பார்த்த "ஓஹொ எந்தன் பேபி "காட்சிகள் தான். அந்தக் கணத்தில் முடிவு செய்தோம். திருமணம் முடிந்ததும் தேன் நிலவு போக வேண்டும். ஏதாவது மலை பிரதேசமாக இருக்க வேண்டும். குதிரை சவாரி, போட்டிங் எல்லாம் செய்து விட்டு , முடிந்தால் டூயட் பாடிப் பிறகு தான் சமையல் அறைக்குள் நுழைவது என்று.


பதினைந்து வயதில் அவ்வளவு தான் கற்பனை. திருமணத்தைப் பற்றி மேற்கொண்டும் ஒன்றும் தெரியாது அதனால் தான் எங்கள் தலை முறையில் அதுவும் தென் மாவட்டங்களில் பெற்றவர்கள் பேச்சுக்கு மறுபேச்சும் கிடையாது.

என் தோழிகளில் சிலர் திருமணம் முடிந்தே ஸ்கூலுக்கு வந்தார்கள். நிறையப் படிக்க நினைத்த நான், கல்லூரியில் ஒரு வருடத்துடன் திருமண வாழ்வில் புதுக்கோட்டை வந்தேன். பட்டம் முடித்த தோழி 4 வருடங்கள் கழித்து காஞ்சிபுரம் அருகெ ஒரு கடை முதலாளீயை மணம் முடித்தாள்.


இன்னொருவள் எங்கள் ஊருக்கும் மிஞ்சிய கிராமம் ஒன்றில் வயல்வெலி, மாடுகள் என்று குடி சென்றாள். 15 வருட இடைவெளிக்குப் பிறகுத் தங்க மாளிகையில் ஒரு சினேகிதியை வங்கி மேலாளராகப் பார்த்து பிரமித்தேன். இவர்கள் ,என்னையும் சேர்த்து ஒருவருக்கும் எங்கள் திட்டமும் நினைவு இல்லை. ,தேன்நிலவுபோக வேண்டும் என்ற எண்ணமும் பொய்யாய்ப் போய் விட்டது.பிறகு எதற்கு இந்த தலைப்பு/? இது நாங்கள் இருவரும்(புருசனும் பொஞ்ஜாதியும்) திருமணம் முடிந்து36 வருடம் கழித்து, சுவிட்சர்லாந்துக்குப் போகும் எதிர்பாராத பயணம் அமைந்தது, எங்கள் மகன் அங்கே வேலையாகிப் போன போது. அப்போது அவன் வீட்டிலிருந்து எடுத்த புகைப்படம் இது.

20 வயதில் போயிருந்தால் கூட இத்தனை நிதானமாக அனுபவிக்க முடிந்திருக்காது. ஓட முடியாத, முழங்கால் கெஞ்சும் நேரம், நின்று தான் எல்லா காட்சிகளையும் கண்டோம். இப்போதும் கனவு காண நான் ரெடி. யோசித்து எந்த மண்டலத்துக்குப் போகலாம்னு பார்க்கிறேன்.நீங்க தான் சொல்லுங்களேன்.

தொடரும் குளறுபடிகள்

இது ஒரு தொடர் பதிவு. இதன் முன்னோடி சில மாதங்களுக்கு முன்னால்
எழுதிய நானும் ,ரசமும், நண்பர் பில்லி வாக்கரும்

பதிவுக்கு sequel என்று வைத்துக் கொள்ளலாம்.
அப்போதாவது பட்டிக்காடு,பட்டணம் என்று பாவப் பட
ஒரு இது? இருந்தது.

இன்னோரு எட்டு வருடம் கழித்து வந்தாலும்
செய்த கோளாறையே திருப்பியும் செய்தால்??????
பாவம் என் குடும்பம்.

இங்கெ வருவது என்று தீர்மானித்ததும்,
முதல் கேள்வி ' அம்மாவைத் தனியா அனுப்பக் கூடாது.'
எஸ்கார்ட் தேவை.
ஏன்னெனில் எந்த ஊருக்குப் போனாலும் அங்கெ இறங்கினது அந்த ஊர் மண்ணை விழுந்து
கும்பிடுவது
என் வழக்கம்.
அடடா மண் பாசம் இல்லை...
காலுக்கும் உடலுக்கும் சம்பந்தம் விட்டுப் போய்விடும் சில நேரங்களில்.
அது பாட்டுக்கு ஒரு இடம் போகும்.கண் வேறே எங்கேயோ பார்க்கும்.
அப்புறம் தடுக்கி விழக் கேட்பானேன்.

amma, ''why do do you stop in the midway so suddenly?''!!
இது என் மகன் அடிக்கடி கேட்கும் கேள்வி.

பெண்டாட்டி கூட வரும்போது அம்மாவையும் ஒரு
கை,ஒரு கண் பார்த்துக் கொள்ள வேணும்னால் கஷ்டம்தானே:-)
எங்க வீட்டுக்காரர் அதை செய்யலாமேனு கேக்கக் கூடாது.
அவரோ நீளக் கால் காரர்.
அவர் ஒரு அடி எடுத்துவைத்தால்,
நான் பின்னாடி வர நாய்க் குட்டி மாதிரி
நாலு கால் பாய்ச்சலில் வரணும்.

'உங்கம்மாவுக்கு நடக்கக் கத்துக் கொடுக்கணும்டா' என்பார்.
''நீர்தானெ சப்தபதியின் போது பார்த்து
வாம்மா என்றீர்கள்னு'' கேக்க முடியுமா?

சரி, இப்ப நாம சென்னை விட்டு,துபாய் வந்து
மீண்டும் ஸ்விஸ் ஏர் பயணம் ( தனியாக).

ஆச்சா?
அதுக்குப் பிறகு நடந்தது என்ன என்பதை அடுத்த கட்டத்தில் பார்க்கலாமா?

இன்னும் பல சில காரணங்களால்

சின்னவன் என்னை அமெரிக்கா கொண்டுவிடும்,
சேர்க்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டான்.

Monday, January 01, 2007

2007,ஜனவரி முதல்தேதி


புது வருடம் பிறந்தாச்சு.
இன்று புதிதாய்ப் பிறந்தது போல், நேற்றைய
சுமைகளை மறப்பதற்கும்
புதிதாய் சுமைகளை ஏற்றாமல் இருப்பதற்கும் இறையை வேண்டிக் கொள்ளலாம்.

சங்கடத்தில் இருப்பவர்க்குச்
சமாதானம் வரப் பிரார்த்திக்கலாம்.

எப்போதுமே இரவுக்குப் பகல் உண்டு.
அப்போது தெரியும் வெள்ளிக்கீற்று உதயம்
எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.

சான்றோர் வளம் பெற வேண்டும்.
தமிழ் வளம் பெற வேண்டும்.
எல்லோருக்கும் நல் புத்தாண்டு வாழ்த்துக்கள்.