Blog Archive

Wednesday, January 30, 2019

சுமையை இறக்கி விட்டோம்..4

Vallisimhan

எல்லோரும்  வளமாக வாழ வேண்டும்.

 அடுத்தடுத்து காரியங்கள் நிறைவேறின.
அம்மாவின் அதிரடி வேகத்தைப் பார்த்து அதிர்ந்து போனான் குமரன்.
ஏன் இந்த அவசரம்மா.  இன்னும் மூன்று மாசம் பொறுக்க முடியாதா உன்னால்.
என்றான்.

எதற்காக அப்பா. எனக்கு அந்தக் கோவில் முக்கியம்.
உங்களுக்குத் தகுந்த ஏற்பாடு செய்துவிட்டேன்.
என்ன நீங்கள் பணம் கொடுத்து சாப்பாடு வாங்க வேண்டும்.
நடு நடுவில் நீங்களே  வீட்டைக் கவனித்து, வேண்டியதைச் சமாளித்துக்கொள்ளலாம்

முடிந்தால் யூரப் டூர் முடிந்து நீங்கள் கூட அங்கே வரலாம். என்றவாறு சென்னையிலிருக்கும்
தம்பி, அக்காவுக்கு செய்தி சொல்ல விரைந்தாள்.

அடுத்த 15 நாட்களில்  கச்சிதமாகப்
 பாக் செய்யப்பட்ட இரு பெட்டிகளுடன்,
தோழி சாரதாவுடன் கிளம்பியே விட்டாள் நிர்மலா.

பேத்திகளிடம் அம்மாவுக்கு உதவியாக இருங்கள்
என்று மட்டும் சொல்லிவிட்டு ,விமான தளத்தில் பைபை சொல்லிக் கிளம்பினாள்.
 அடுத்த நாள் இரவு 11.30 மணிக்கு சென்னையில் இருந்தாள்.
அழைத்துப் போக வந்திருந்த தம்பி வீட்டில் ஒரு நாள் இருந்து விட்டு
 ஏற்கனவே அங்கே வந்திருந்த  உதவியாளருடன், ட்ராவல்ஸ் வண்டியில் திண்டிவனம்
அடைந்தாள்.

மாமனார்,மாமியார் இருந்து பிறகு விரிவாக்கப் பட்ட
வீட்டை அடைந்த போதுதான் அவள் அதுவரை
அடக்கி வைத்திருந்த சோகம் தாக்கியது.

பரவாயில்லை எனக்கு நானே போதும். இதோ இந்தத் தென்னை மரங்கள்
,இந்த வீடு,அதற்குள் நான் கொண்டிருக்கும்  நினைவுகள் ஆன மாளிகை
சுற்றி இருக்கும் உறவுகள்,எல்லாவற்றிற்க்கும் மேலே
மலை மேல் இருக்கும் அழகன் முருகன்  போதும்.

எண்ணியபடி மனமார வணங்கியபடி ,அடுத்தடுத்துக் காத்திருக்கும்
வேலைகளால் உற்சாகம் அடைந்தவளாய் தன் வீட்டிற்குள் நுழைந்தாள்.

புது வாழ்வு தொடங்கியது.  வீட்டுப் பாதுகாப்புக்கு ஒரு தோழமையான செல்லத்தை வாங்கிக் கொண்டாள்.
கூடவே இருக்க  தோட்டக்கார மணியும் அவன் மனைவி குழந்தைகள்.
 தன் வீட்டு உபயமாக நடக்கும் ஆராதனைக்கு
மயிலம் சென்று வந்தாள். விழாவுக்கு வந்திருந்த தம்பி அக்கா குடும்பத்துடன்
விழா இனிதே நடை பெற்றது.
படங்களைப் பிள்ளைகளுக்கும் அனுப்பினாள்.
இனி இனிதே வாழ்வு தொடரும். சுபம்.


Tuesday, January 29, 2019

MAILAM MURUGAN TEMPLE CAR FESTIVAL

Add caption
Vallisimhan

சுமையைக் கழற்றி வைத்துவிடலாம் 3

Vallisimhan

எல்லோரும் நலமாக வாழ வேண்டும் .
   வினாடி நேரம் தான் யோசித்தாள் நிர்மலா.
சரியப்பா நான் படுக்கப் போகிறேன் என்று தன்னறைக்குப்
போய்விட்டாள்.
 தன்னறையிலிருந்த தொலைபேசியில் இளைய மகனை
அழைத்தாள். ஷண்முகா, நீ இப்பதான் வேலையிலிருந்து வந்திருப்பாய்.
உன்னிடம் பேச வேண்டும் என்றாள்.

அவசரம் இல்லாவிட்டால் அழைக்க மாட்டாள் என்று தெரியும் அவனுக்கு.
சொல்லும்மா,நான் இப்போதெல்லாம் 7 மணிக்கே சாப்பிட்டுவிடுகிறேன்.
நீ சொல்லு.
என்றதும் நிர்மலா தான் இந்தியா செல்ல வேண்டிய
தீர்மானத்தைச் சொன்னதும்.
என்னம்மா திடீரென்று. என்று கேட்டான் மகன்.

மைலத்தில் நம் கோவிலில் விழா வருகிறதுப்பா.
என் தோழியும் சென்னை வரை போகிறாள்.
 குறைந்த விலையில் டிக்கட் கிடைப்பதாகச் சொன்னாள்.
நான் போகலாம் என்று நினைக்கிறேன்.
 நீ என்ன சொல்ற என்று கேட்டபோது மௌனம் தான் பதில்
அம்மா இரண்டு வருடம் முன்னாடிதானம்மா போனே. என்றான்.

அதனால் தான் சொல்கிறேன்.
மைலம் வீடு பழுதடைந்திருப்பதாக எனக்குக் கடிதம் வந்திருக்கிறது,.
இன்னும் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டி இருக்கிறது.

நான் நம் தோட்டக்கார மணியிடம்  சொல்லி
வேலைகளை முடித்துக் கொண்டு வருகிறேன் என்றாள்.

அப்பா கட்டின வீட்டை அம்மாதான் கவனித்துவருகிறாள்
என்பதை ஷண்முகம் அறிவான்...,நாளை சொல்கிறேன் அம்மா
என்றான்.
அண்ணனிடம் சொல்லிவிட்டேண்டா. அவன் ஜூன் போனால்
சரியாக இருக்கும் என்கிறான்.
எனக்குக் கோவில் வேலை வந்துவிட்டது,
பத்திரிக்கை வந்து விட்டது. நான் கிளம்பத்தான் போகிறேன் என்று
 சொல்லி ஃபோனை வைத்து விட்டாள்.

அடுத்த நாளும் எப்போதும் போல் விடிந்தது. யந்திர வேகத்தில் வேலைகளை முடித்த
கையோடு தோழிக்குத் தொலைபேசினாள்  நிர்மலா.
தனக்கும் சேர்த்து பயணச்சீட்டு வாங்கும்படியும்.
டிக்கெட்டுக்கு உண்டான பணத்தை அடுத்த சந்திப்பில்
 கொடுத்துவிடுவதாகவும் சொன்னாள்.
தோழி சந்திராவும் சரி என்று சொல்ல ,மாசி மாதப் பிறப்பை ஒட்டிக்
கிளம்பலாம் என்று தீர்மானித்தனர்.

அடுத்து இன்னோரு தோழிக்குப் பேசினாள். தான் ஊருக்குப்
 போவதால் வீட்டில் வேலைகளுக்குக்  கஷ்டப் படுவாள் என்றும்,
அவளுடைய வட்டத்தில் உணவு செய்து கொடுப்பவர்கள்
யாராவது இருந்தால் சொல்ல முடியுமா என்று கேட்டாள்.
அவளும், சப்பாத்தி, கூட்டு, சட்டினி என்று பலவித சமையல் செய்து
விற்கும் விமலா பென் நம்பர் கொடுத்தாள்.

அந்த நம்பருக்குப் பேசிய நிர்மலா,தன் வீட்டுத் தேவைகளை விளக்க
வட இந்திய சாப்பாட்டு வகைகள் தான் செய்வதாகவும் தன் பங்குதாரர்
 தென்னிந்திய சமையல் வகைகளைச் செய்வாள்
என்றதும் நிர்மலா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மீண்டும்\
 சந்தித்துப் பிறகு..... சுபம் போடலாம்.  வாழ்க வளமுடன்.

Monday, January 28, 2019

சுமையை இறக்கி வையுங்கள் 2

Vallisimhan

எல்லோரும் நலமாக வாழ வேண்டும் .

 வானொலியில் ஸ்மூத் ஜாஸ் கேட்டுக்கொண்டே, அன்றைய வேலைகளைக்
கவனிக்க ஆரம்பித்தாள். நிர்மலா.
துணிகளை பெரிய மெஷினில் போட்டு அது இயங்க ஆரம்பித்ததும்.
முந்தைய தின துணிமணிகளை
அவரவர் இடத்தில் அடுக்கிவைத்தாள்.
19 வயது பெண்களுக்கு இன்னும் பொறுப்பு
வரவில்லையே. தன் வேலையைத் தான் பார்த்துக் கொள்ளவேண்டாமா
என்றபடி மனதுக்குள் சொல்லிக் கொண்டு, தன் அறையை ஒழுங்கு செய்து குளித்துவிட்டுக் கீழே வந்து தனக்கௌ வேண்டும் சமையல் வேலைகளைக்
கவனித்தாள்.
பாதி சமயம் அவளுக்கு இரண்டு சப்பாத்தியும், கூட்டும்,கிண்ணம் தயிரும்
போதும்.

அதற்குப் பிறகு இரண்டு மணி வரை ஓய்வு தான்.

உள்ளூர் கல்லூரிகளில் சேர்ந்திருக்கும் பெண்கள்
வீடுவர ஐந்தரை மணி ஆகிவிடும்.
6 மணி அளவில் மகன் ,மருமகள் வருவார்கள்.
அதற்குள்
அவர்களுக்கு இஷ்டப்பட்ட ,பொரியல்,ரசம், துகையல் என்று செய்து
 வைத்துவிடுவாள்.
தான் இந்தியாவிலிருந்து வாங்கி வைத்த புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தால்
நேரம் போவதே தெரியாது,
அதுவும் இப்போதைய குளிர் கடினமாக இருக்கும் போது
 மீண்டும் தூங்கி ஓய்வெடுக்கவே   தோன்றும்.
களைப்பைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும்
கதவைத் திறந்துவிட்டு, சமையல் மேஜையை தயார் நிலையில் வைப்பாள்.

பெண்கள் உடை மாற்றி உடனே சாப்பிட வந்துவிடுவார்கள்.
வரும்போதே கையில் அலைபேசியில் ஏதாவது செய்தி பார்த்தபடி
வருபவர்களிடம்,
சாப்பிடும்போது அதை வைத்து விட்டு வாருங்கள் என்று
சொன்னது தப்பாகிவிட்டது.
நாளை சப்மிட் செய்ய வேண்டிய அசைன்மெண்ட் பற்றித் தெரிந்து கொள்கிறேன் பாட்டி. என்னால்,இதை ஒத்திப் போட முடியாது என்றதும் பாட்டி மௌனமானாள்.
அவர்கள் சாப்பிடும்போதே, மருமகளும் மகனும் வந்து உட்கார்ந்தார்கள்.இருவர்
கையிலும் அதே அலைபேசி. பேத்தி,பாட்டியைக் கேலியாகப்
பார்த்தாள்.
மகன் குமாரைக் கேட்டாள் //ஏன்பா, அதைவைத்துவிட்டுச் சாப்பிடுங்கள்.செய்தி எங்கே போகும்//
உணவு முக்கியமில்லையா என்று கேட்டால்
பதில் கூட வராது.

இடது கையில் பிடித்துக் கொண்டு வலது கையில் சாப்பிடும் மகனைப்
பார்த்துவிட்டுத் தானும் சாப்பிட்டு முடிப்பால்.
மகனிடம் இருந்து அப்போது பதில் வரும்.
அம்மா நீயும் இதை வாங்கிக் கொள்.
அப்போது இதன் அருமை  புரியும் என்று ,தொலைக்காட்சி
 பார்க்கப் போய் விடுவார்கள்.

எனக்கெதுக்குப்பா இந்தப் புது பழக்கம் எல்லாம்.
தொலைபேசியில் என் தோழிகளிடம் பேசிவிடுகிறேன்.
என்றபடி சாப்பாட்டு மேஜையை ஒழித்து வைத்து
அடுத்த நாள் காலை உணவுக்கு எல்லாம்
சரியாக இருக்கிறதா என்று பார்த்த பிறகு
மகனிடம் வந்தாள்.
குமரா, என் தோழி அடுத்த மாதம் சென்னை செல்கிறாள்
டிக்கெட் விலை குறைந்திருக்கிறதாம்.
நானும் சென்று இரண்டு மாதம் இருந்துவிட்டு வருகிறேன்.
வீட்டில் நிறைய மராமத்து வேலைகள் இருக்கிறது.
 அதே போல என் வங்கி வேலைகள், மருத்துவ செக் அப் எல்லாம்
பார்க்க வேண்டும். நான்  போகட்டுமா.
உங்கள் சௌகரியம் எப்படி..
என்றதும் மருமகள் ,திடுக்கிட்டுப் பார்த்தாள்.
நீங்கள் இல்லாமல் வீட்டில் வேலைகள் எப்படி நடக்கும் அத்தை.
நாங்கள் ஜூன் மாதம் ஐரோப்பிய சுற்றுலா போவதாக இருக்கிறோம்.
நீங்கள் அப்போது இந்தியா சென்று வாருங்கள்
என்றாள்.  நிர்மலாவின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது.

Saturday, January 26, 2019

சுமைகளை இறக்கி வைத்துவிடுங்கள் 1

Vallisimhan

எல்லோரும் நலமாக வாழ வேண்டும் .
2018.................
பொழுது போகவில்லை என்கிற பிரச்சினையே கிடையாது
நிர்மலாவுக்கு.
காலையிலிருந்து மகன் வேலைக்குக் கிளம்பி,
மருமகள் , பேத்திகள் அலுவலகம், கல்லூரிகள் என்று கிளம்பியதும்,

கையடக்கமாக இருக்கும் ரேடியோவைத் திருப்பிவிடுவாள்.பழைய கால டேப்
ரெகார்டரும் இணைந்த அந்த இசைப் பொக்கிஷம் கணவர் மஸ்கட்டிலிருந்து
வாங்கி வந்தது.

வீட்டிலிருப்பவர்களுக்கு இசை பிடிப்பது இல்லை.
இதுவே பெரிய அதிர்ச்சி நிர்மலாவுக்கு.
அவளுக்கு எழுந்ததிலிருந்து ஏதாவது இசை கேட்க வேண்டும்.
வேலைகள் செய்து கொண்டே  ,பாடுகள் பின்னணியில்
ஒலிக்க உற்சாகமாக அவள் நாட்கள் நகர்ந்த காலம் உண்டு.

இசையொலி கேட்டால் அங்கே நிர்மலா இருக்கிறாள் என்று அர்த்தம்.
அறுபதுகள், எழுபதுகள்,எண்பதுகள் எல்லா காலத்தின் ,தமிழ் ,
ஆங்கிலம்,இந்தி என்று பெரிய கலெக்ஷனே உண்டு..

2000ஆம் ஆண்டு மஸ்கட் பீச்சில் அவள் கணவர் சுந்தர்
ஒரு சுழலில் மாட்டி, உயிரில்லாத உடலாக கரையொதுங்கும் போது
 ,நம்பினவர்கள் யாரும் இல்லை.
நீச்சல் நன்கு தெரிந்தவர். எப்படி அந்த இடத்தில் இழுக்கப் பட்டார் என்பதே
பெரிய ஆச்சரியமாக இருந்தது.
ஆறடி உயரத்துக்கு ,நல்ல உறுதியான ,உடல் கட்டு கொண்டவர்.

அதுவும் மஸ்கட் கடற்கரை ரொம்ப சாதுவானது என்பது அனைவருக்கும்
தெரிந்ததே.
பையன்கள் அப்போது அமெரிக்காவுக்கு மேல் படித்துக் கொண்டிருந்தார்கள்.
பெரிய கம்பெனியில் நல்ல வேலையில் இருந்தவர்,
சகல மரியாதைகளோடு பிரத்தியேகமாகத் தயாரிக்கப்
பட்ட பெட்டியில், சென்னைக்குக் கொண்டுவரப்பட்டபோது
கதறிய
பெற்றோர்களுக்கு ஆதரவாக இருந்தது நிர்மலாவும்
அவள் மகன்களும் தான்.

வாழ்க்கை மாறியது. அதே வருடத்தில்  திருமணங்கள்
நடந்தன. மனைவிகளுடன் படிப்புக்குத் திரும்பினர்.
ஐந்தாறு வருடங்களில், தாத்தா பாட்டி மறையவே

திரும்பி வந்து தனியே இருந்த அம்மா நிர்மலாவை
அழைத்துக் கொண்டு திரும்பினர்.
இதோ 12 வருடங்களாக கனெக்டிகட்டுக்கும் சியாட்டிலுக்குமாக,இந்தியாவுக்குமாக
யார் சுமை 
மாறி மாறி இருந்து வருகிறாள்  62 வயது நிர்மலா.

அவள் தான் மாறவில்லை.அவள் பெற்ற செல்வங்கள்
பாதி அமெரிக்கன்களாக மாறி இருந்தனர்....

18 வயதில்  பையன்களாக அனுப்பி வைத்ததிலிருந்து
அவர்கள் மாறி இருக்க வேண்டும்.

தன் சோகம், மாமியார்,மாமனாரின் இழப்பு இந்த சுமைகளில்
இவள் உளைந்து கொண்டிருக்கும் போது அவர்கள்
 வாழ்வு மாறி இருக்க வேண்டும்.
ஏதாவது இவள் பேச முற்பட்டால்,ஏதாவது மாற்றுக்
 கருத்து சொல்ல வந்தாலே அவர்களுக்குத் தப்பாகப்
பட்டது.+++++++++++++++++++++++++++மீண்டும் பார்க்கலாம்


Thursday, January 24, 2019

.முதுமை சீர் 4

Vallisimhan

எல்லோரும் இன்பமாக வாழவேண்டும்.

  அடுத்த நாள், பத்மா தன் பெரியம்மா,சித்திகளை அழைத்து வந்தாள்.
என்னடி வஞ்சி, இப்படி தளர்ந்து போய் விட்டாய்
என்று ஆதங்கப் பட்ட அவர்களை
வரவேற்று,
அம்மாவுடன் பேசவிட்டாள்.
வெளியே போய் அண்ணாவுக்குத் தொலைபேசினாள்.

மருத்துவர் சொன்ன புத்திமதிகளை அவனிடம் சொன்னதும் கலவரப்
பட்டான். என்ன செய்வது பத்து. இங்க வசதி போதாதுதான்.
அம்மா சந்தோஷமாகத்தான் இருக்கிறாள்.

அவள் ஒன்றும் சொல்லவில்லைடா அண்ணா.
அங்கே போக வேண்டும்  என்ற நினைப்பில தான்
வந்திருக்கிறாள்.

அடிக்கடி தலை சுற்றல் வருகிறது. அங்கே படி இறங்கும் போது
விழுந்துவிட்டால்  என்ன செய்வாய் நீ. இந்த வாரம்
டிசம்பர் லீவு ஆரம்பிக்கிறது. நீ மன்னியோடும், குழந்தைகளுடனும்
வா.  உன்னைப் பார்த்தாலே அவளுக்குத் தெம்பு வந்துவிடும்.

மாப்பிள்ளைகூட உன்னுடன் பேச ஆசையாகக்
காத்துக் கொண்டிருக்கிறார்.
ஓய்வும், நல்ல தூக்கமும், மருத்துவரின் கண்காணிப்பும் அவளுக்குத்
தேவை டா.
அவளுடன் துணைக்கு இருக்க, உதவி செய்ய ,பேச
சிதம்பரத்திலிருந்து  அம்மாவின் சித்தி பெண்ணை
வரச் சொல்லி இருக்கேன்.
 திருப்பி ஃபோன் செய்கிறேன். நீ சாதாரணமாக
அம்மாவிடம் பேசு என்று வைத்துவிட்டாள்.

உள்ளே ஒரே உற்சாகமான பேச்சுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது.
அம்மா, அக்கா தங்கையைப் பார்த்தால்
உனக்கு எத்தனை சந்தோஷம்மா
உனக்கு. எங்களைக் கூட மறந்து விடுவாய்
 என்று கேலி செய்தவள். கையோடு
கொண்டு போன காப்பி, பலகார வகைகளை வைத்தாள்

அம்மா இந்தா உன் சாக்ரின் மாத்திரை என்று
அம்மாவிடம் கொடுத்தாள்..
டீ பத்மா, எங்களோடு அனுப்பி வையேன். இராத்திரி இருந்துவிட்டு வருவாள்
என்று பெரியம்மா சொன்னதை அன்பாக மறுத்தாள்.
அம்மாவுக்கு ஓய்வு தேவை பெரியம்மா. இன்னும் இரண்டு
நாள் போகட்டும் அழைத்து வருகிறேன்.
 அம்மாவுக்கு பிள்ளைக்கு மாகாளிக்கிழங்கு, சுண்டைக்காய்,
நார்த்தங்காய் எல்லாம் வாங்க வேண்டுமாம்.

ஸரிதான். எங்களுக்கெல்லாம் இல்லாத உடம்பு உனக்கு எப்படி வந்தது.
என்று கேட்ட அவர்களிடம் ,பத்மா பதில் சொன்னாள்.
ராஜாமணி மாமாவுக்கு இருந்ததாமே. பொன்னா பாட்டிக்கும் இருந்துதானே
அம்மியில் அரைத்துக் கொண்டிருந்த போதே
பகவான் கிட்டப் போனா என்று கேட்டாள்.

அதென்ன அதிசயமோ. வனஜாப் பாட்டி எதற்கும் அலுக்கவில்லை.
எல்லாம் சரியாகிடும் .நீங்க போயிட்டு வாங்கோ.
நாளைக்குப் பார்க்கலாம் என்று  ஈசிச்சேரில் சாய்ந்து கொண்டாள்
 வெள்ளி சாயந்திரம் பஸ்ஸில் வந்துவிட்டது நடராஜன் குடும்பம்.

கால்களைக் கழுவின அடுத்த நிமிடம் அம்மாவிடம் சென்ற அந்தக் குடும்பத்தை
மகிழ்ச்சியுடன் வரவேற்றால் வனஜாப் பாட்டி.
நால்வரும் அவளை கீழே விழுந்து நமஸ்கரித்தார்கள்.
அம்மா,பாட்டி  என்று குரல்கள் சூழ அதீதப் புன்னகையுடன்
கேட்டுக் கொண்டிருந்தார் அவர்.
உள்ளே வந்த மாப்பிள்ளை,பத்மா, அவள் குழந்தைகளைக்
கண்டு இன்னும் சத்தம் அதிகமானது.
பசங்களா வெளியில் போய் விளையாடுங்கள்
என்று விரட்டிவிட்டு,
அம்மா நீயும் கூடத்துக்கு வா. புதுசா எம்.எஸ் அம்மாவோட
 ரெகார்ட் வந்திருக்கு.
வா கேக்கலாம் என்று கைபிடித்து அழைத்து வந்தாள் பத்மா.
ஒரு வாரத்தில் அம்மாவுக்கு  என்ன ஆச்சு இப்படி இளைத்திருக்கிறாரே என்று
கலங்கினாள்
நீலா,  நடராஜனுக்கோ பிரமை பிடித்தால் போல ஆச்சு.
ஆனால் அம்மா மகிழ்ச்சியாக இருந்தாள்.
 தெளிவாக இருந்தாள்.
நடராஜனை அருகே வைத்துக் கொண்டு விவரங்களை விசாரித்தாள்.

நீலாவிடம் பெரிய குளத்தில் என்ன வம்பு. பக்கத்து 
அகத்து விசாலி, கடைசி அகத்து  ஐய்யங்கார் மாமி 
என்று ஒவ்வொன்றாக விசாரிக்க நிலமை தெளிந்தது.

இரவு சாப்பாட்டிற்குப் பிறகு, பத்மா
 தன் அண்ணாவிடம்
 அம்மாவின் இதயம் கொஞ்சம் பலவீனமாக  இருப்பதால் டாக்டர்
மருந்துகள் அதிகரித்திருப்பதாகச் சொன்னாள்.
அதில்தான் உடம்பு இளைத்திருப்பதாகவும் இன்னும்
 இரண்டு மாதங்களில் முன்னேற்றம் இருக்கும் என்றும் 
சொன்னாள்.
கிரஹித்துக் கொள்ள நடராஜன்,நீலாவுக்குக் கொஞ்சம்
நேரம் ஆச்சு.

பத்மாவின் கணவர் வெங்கட், அவனுடன் உட்கார்ந்து
அன்புடன் பேசினார்.
நீதான் அம்மா இங்கே இருக்க வேண்டிய அவசியத்தைச் சொல்லணும் பா.
இங்கே இருப்பதே தப்பு என்று யோசனை அவருக்கு என்றார்.

அம்மாவை அவள் அறையில் பார்த்த நடரஜனுக்கு,
அவள் முகத்தில் நிலவிய அமைதி தெம்பு கொடுத்தது.

அடுத்த நாள் அம்மாவை ,தங்கள் திட்டத்துக்குச் சம்மதிக்க
வைக்க அக்கா,தம்பிக்கு சுலபமாகிற்று.
இன்னும் இரண்டு மாதங்களில் தனக்கே மதுரைக்கு மாற்றலாக
சந்தர்ப்பம் வரும் என்றும்.
பங்குனி மாத முடிவில் 
குடும்பத்தோடு  பக்கத்திலேயே வீடு பார்த்துக் கொண்டு
வந்துவிடுவதாகச் சொன்னான்.
அம்மா இங்கயும் அங்கேயுமாக இருக்கலாம் 
என்று அம்மாவை அணைத்துக் கொண்டான்.
இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் கிளம்பும்போது
கூடவே வந்தது, அம்மா போட்டுக் கொடுத்த சுண்டைக்காய், மாகாளி,
நார்த்தங்காய் ஊறுகாய்கள்.
டேய் நீ வரும்போது, மாவடு 15 படி வாங்கிண்டு வந்துடு. எல்லோருக்கும் 
வேண்டும் இல்லையா என்ற அம்மாவைப் பார்த்து மனம்
பொங்கச் சிரித்தார்கள் நீலாவும் நடராஜனும். மங்களம் எங்கும் தங்கட்டும்..
   சுபம்.

Wednesday, January 23, 2019

முதுமை சிறப்பு .3

Vallisimhan
எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும்.
  வந்து இரண்டு நாட்களுக்குப் பேச நிறைய விஷயங்கள் இருந்தன அம்மாவுக்கும் பெண்ணுக்கும்.
பாட்டியோட வண்டியில் வந்த குழந்தைகள் , திங்கள் காலை
வீடு திரும்பினர்.
அத்தையின் வீட்டை விட்டுப் போகவே மனமில்லை.
தோட்டம், அங்கிருக்கிற மாமரம், ,அதில் அத்திம்பேர் தொங்க விட்டிருந்த
ஊஞ்சல்,
நல்ல நட்பு காட்டிய அத்தையின் பெண்கள் எல்லாமே
குழந்தைகளுக்கு  வெகு இனிமையாக இருந்தன.
வசதியான வீடும்,அலங்காரமும், எங்கும் வீசிய இனிமையான வாசம்

எல்லாம் பிடித்து இருந்தன. அடுத்த ஞாயிறு அவர்கள் பெரிய குளம் வருவதாகக் கூறியதும் இவர்கள் கிளம்பினர்.
அடுத்த நாள் மருத்துவரோடு சந்திப்பு.
 வனஜாபாட்டியை அன்புடன் வரவேற்றவர் எல்லாவற்றையும் விசாரித்துத் தெரிந்து கொண்டார்.
இன்னும்  இதய பரிசோதனை செய்ய வேண்டும் அம்மா.
நீரிழிவு நோயால் வரும் பாதிப்புகளைச் சொன்னதும் பாட்டிக்கு
வருத்தம் அதிகரித்தது.

டாக்டர் ,பாட்டியின் அண்ணா 51 வயதிலியே இருதய நோயில் இறைவனடி
சேர்ந்ததை நினைவுக்கு  கொண்டு வந்தார்.
தனக்கு மருந்துகள் கொடுக்கும் படியும்,பரிசோதனை எல்லாம் வேண்டாம் என்றும் சொல்லிவிட்டார்
வனஜா பாட்டி.
தன் மருமகள் நன்றாகப் பார்த்துக் கொள்வதாகவும்.
உணவுக் கட்டுப்பாடில் இருப்பதாகவும், அடிக்கடி நீர் கழிப்பதுதான் வேதனையாக இருப்பதாகவும்
சொன்னார்.

இங்கு மகள் வீட்டில் பாட்டிக்கு அந்த வசதிகள் இருப்பதை
டாக்டர் அறிவார். இங்கேயே இருந்துவிடுங்கள்.
அவர்கள் உங்களை வாராவாரம் வந்து பார்க்கலாமே என்று யோசனை
சொன்னார்.
மகனை விட்டுக் கொடுக்க விரும்பாத பாட்டிம்மா
யோசனை செய்வதாகச் சொன்னார்.
கூட வந்த பத்மாவிடம்  விஷயங்களைக் கண்டிப்பாகச் சொன்னார்.
வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கட்டாயத்தையும் சொன்னார்.
பத்மாவைப் பயம் சூழ்ந்தது.
வீடு திரும்பும்போது களைப்புடன் சீட்டில் சாய்ந்து
உறங்கிவிட்ட அம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.
வீடு வந்ததும் பழைய உற்சாகத்துடன்
தன் அறைக்குச் சென்று பெட்டியைத் திறந்தார்  பாட்டி.
அம்மா அவசரம் இல்லை .நீ கொஞ்ச நேரம் படுத்துக் கொள்.
என்ற பத்மாவிடம், சும்மா இருடி,
இதுக்காகத்தான் வந்தேன்.
நீ வேண்டாம்னு சொல்லாதே.
உன் கணவர் நன்றாக எல்லாம் செய்கிறார். இருந்தாலும் பாட்டியின் ஆசீர்வாதமாக
உன் குழந்தைகளுக்கு நான் கொடுக்க வேண்டும்.
இந்த காசிமணி மாலை இரட்டை வடம், 20 பவுன் தேறும்.
சிகப்பு அட்டிகை நீலாவுக்குக் கொடுக்கிறேன்.
இந்தக் கெம்பு ராக்கொடியும், தோடுகளும்
புது மோஸ்தரில்  செய்து உன் பெண்களுக்குக் கொடு.
அப்பாவுக்கு  மலேயாவிலிருந்து  வைரம் கொண்டுவந்து கொடுத்தார்
ஒரு நண்பர். அதான் சாமினாதன்.  அவர்தான்.

அதை இரண்டு பதக்கமாக்கி வைத்திருக்கிறேன்.
உனக்கும் ,நீலாவுக்கும் ஒவ்வொன்று.

ஒரு மோதிரம் பேரனுக்கு செய்து வைத்துவிட்டேன்.
அப்பாவுக்கும் இதெல்லாம் தெரியும்.
என்று சொல்லி ஓய்ந்தாள்.
சரிம்மா. இப்ப சாப்பிடவா. காரமில்லாத கூட்டும், வேக வைத்த கொண்டக்கடலை சுண்டலும் கீரையும் இருக்கிறது.
உனக்குப் பிடித்ததைச் சாப்பிடு.
உன் பாத்ரூம் சௌகர்யமா இருக்கா.
ஆமாம் பத்மா. அறைக்கு வெளியிலேயே அழகாகக் கட்டி இருக்கியே.
ரொம்ப சௌகரியம்.
இதோ கைகால் அலம்பிக் கொண்டு வந்துவிடுகிறேன்.
உன் அண்ணா கிட்ட பேச வேணும். பக்கத்துத் தபால் ஆபீஸிற்கு வந்து அவன் பேசணும்.

சாயந்திரமா அவனைக் கூப்பிடு. நான் இல்லாமல் அவன் இருந்ததே இல்லை.
பாவம் குழந்தை என்று சொல்லும் அம்மாவைப் பார்த்து சிரித்துவிட்டாள்
பத்மா.  அடுத்த பதிவில் பூர்த்தியாகும்.

Monday, January 21, 2019

முதுமை ...2

Vallisimhan

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் .
 வனஜா பாட்டியின் மகள் பத்மா ,மதுரையில் இருந்தார்.
பெரியகுளத்திலிருந்து வண்டியில் அழைத்துப் போய்.
அங்கிருக்கும் பெரிய டாக்டரிடம் பார்த்துக் கொள்ளவேண்டும்
என்று பாட்டிக்கு ஆசை.
நீலா நீயும் கொஞ்ச நாள் நிம்மதியா இரு. நான் மதுரைக்குப் போய் டாக்டர் கிட்டுவைப் பார்த்துவிட்டு,

மருந்து வகையறா வாங்கி வருகிறேன் என்று சொல்லிப் பார்த்தார்.
அவரது மகனுக்கு அம்மா அவ்வளவு தூரம் சென்று
 அவஸ்தைப் பட வேண்டாமே என்றிருந்தது.
பாட்டிக்கு  சகோதரிகள் அங்கே இருந்தார்கள்.

மகளும் பெரிய இடத்தில் வாக்கப் பட்டிருந்தாள்.
வாகனம்,பங்களோ,வேலைக்காரர்கள் என்று வசதியான இடம்.
பத்மாவுக்கும்.
கணவர் அங்கு போக்குவரத்து நிறுவனம் ஒன்றில்
உயர் பதவியில் இருந்தார்.
அவளுக்கும் இரு மகள்கள். அங்கே ஆங்கிலப் பள்ளியில்
படித்துவந்தார்கள்.
மதுரையில் அப்போது,பாடல் பள்ளிகளும், நடனப் பயிற்சிக் கூடங்களும்
 இருந்ததால் பொதுவாகவே கலகலப்பு மிகுந்த இடமாக இருந்தது
பத்மாவின் அகம்.
 மதுரை விஜயத்துக்கு முக்கிய காரணம்,
பாட்டிக்குத் தன் பாரம்பரிய வெள்ளிப் பாத்திரங்கள்
 நகைகள் புடவைகளை, மூன்று பேத்திகளுக்கும்
பிரித்துக் கொடுத்துவிடவேண்டும் என்பதே.
அதுவும் மகனுடைய பெண் சுந்தரியிடம் பாசம் அதிகம்.
ஏற்கனவே தன்னிடம் இருந்த காசுமாலையை அந்தப் பெண் கழுத்தில் அணிவித்து அழகு
பார்ப்பார்.
இன்னும் பவழ மாலை, கெம்புத் தோடு,காஞ்சிரக்காய் மாலை,
காசிமணிமாலை இரட்டைவடம் என்று
வரிசையாக இருந்த நகைகளை மகளுக்கும் மருமகளுக்கும்
 பிரித்துக் கொடுக்க எண்ணம்.
மகனிடம் சொல்லி மகளை வண்டி அனுப்ப சொன்னார்.
மனமில்லாமல் தங்கைக்குத் தொலை பேசினார் நடராஜன்.

அவளும் வார இறுதியில் வண்டியை அனுப்புவதாகவும்,
அம்மாவுக்குத் துணையாக நீரஜா,குமார் இருவரையும் அனுப்பும்படியும்
சொன்னாள்.
குழந்தைகளுக்குக் கார் பயணம், அத்தை வீட்டுக்குப் போவது
என்று இரட்டை சந்தோஷம்.. பயணத்திற்கு வேண்டிய உணவு,
தன் மாமியாருக்கான மருந்துகள்,நல்ல பட்டுப் புடவைகளாக
நான்கு, அவசரத்தேவைக்குத் துண்டுகள் என்று
தயார் செய்தாள் நீலா. மனம் முழுவதும் கவலை.
அம்மா ஒரு வாரத்தில் வந்துவிடுங்கள்
என்று கேட்டுக் கொண்டாள். ஓ. அப்படியே
செய்துடறேன். நீ கவலைப் படாதே. பத்மா எட்டூருக்குப் பாத்துப்பாள் என்று
கிளம்பியே விட்டார் வனஜாபாட்டி.

முதுமை 1963...1

Vallisimhan

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

அம்மா..... பாட்டி படிலயே ஈரம் செய்துட்டார்.
பெண்ணின் குரல் கேட்டு பின்புறம் விரைந்தாள் நீலா.

ரொம்ப அவசரம். படி இறங்கி கொல்லைப்பக்கம் போவதற்குள்
வந்துவிட்டது.
உனக்கு வேலை வைத்து விட்டேன் மா என்று சொல்வதற்குள்
மாமியாரின் கண்களில் நீர்.
சர்க்கரை ரத்தத்தில் சேர்ந்ததிலிருந்து 65 வயது வனஜாம்மாவுக்கு
பழக்க வழக்கங்கள் மாறின.
அதிக பசி, அதிக தாகம்,அடிக்கடி சிறு நீர் கழித்தல் என்று நீண்டது பட்டியல்.

எது கொடுத்தாலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டி இருந்தது.

குளித்து வெகு ஆசாரமாக ஸ்வாமிக்குப் பூஜை செய்பவர்.
கணவர் தவறியதும் இன்னும் தீவிரமாக எல்லா விரதங்களையும் கடை பிடித்தவருக்கு
இந்த சர்க்கரை மிக அதிர்ச்சியைக் கொடுத்தது.

ஒன்பது கஜம் கட்டிக் கொள்வதே அசௌகரியமாக இருந்ததால்
மாம்பழக்கட்டு என்று அவர் சொல்லும் ஆறுகஜப் புடவைக்கு மாற வேண்டி வந்தது.
எல்லா நேரமும் அசதி வந்து தொந்தரவு கொடுத்தது.

நல்ல கனத்த சரீரம் இப்போது பாரமாகியது.
மருமகள் நீலா, மாமியாரிடம் அதிக அளவு மரியாதை வைத்திருந்தது தான் அவரைப்
பல நேரங்களில் ஆறுதல் அடைய வைத்தது.
இன்சுலின் ஊசி போட வைத்தியர் ஏற்பாடு செய்த நர்சம்மா தினம் ஒரு வேளை
வந்து ,சகல விதத்திலும் கண்காணித்து மருந்தும் கொடுத்துப் போனார்.
இப்போது இன்னும் ஐந்து வருடங்கள் கழிந்த நிலையில்
உடல் மிகவும் பலவீனமாகிவிட்டது.
பேரன், பேத்தி பாட்டியுடன் தாயக்கட்டம், சோழி என்று விளையாடுவதில் பாதி
சோகம் மறைந்தாலும், தலைசுற்றலும், இந்த சிறு நீர் உபாதையும்
மனசை அலைக்கழித்தன.
நீலா வேளை தவறாமல் ,உணவும், நீர் மோரும்,உப்பு குறைவான
 பலகாரங்களும் கொடுத்து கவனித்துக் கொண்டாள்.

வியாதியின் தீவிரம் இப்பொழுது ,இந்த நிலமையில் வந்து நின்றது.

Monday, January 14, 2019

தைத்திங்கள் வாழ்த்துகள்.

Vallisimhan

  இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்.
அனைத்து நலன்களும் பொங்க இயற்கைத்தாய் வளம் வழங்கட்டும்.
வாழ்க வளமுடன் 
இறை அருள் எப்பொழுதும் இருக்கட்டும்.

30ஆவது பாசுரம் வங்கக் கடல் கடைந்த...மாதவன்.

Vallisimhan
 எல்லோரும் இனிதாக வாழவேண்டும்.

ஸ்ரீ கோதை நாச்சியார் திருவடிகளே சரணம்.

30ஆவது பாசுரம் வங்கக் கடல் கடைந்த...மாதவன்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++உனக்கே நாமாட்செய்வோம் என்று உறுதியிட்டுக் கூறிய பின் , தன்னை இடைச்சி நிலையிலிருந்து
வில்லிபுத்தூர் ஆண்டாளாகப் பாட ஆரம்பிக்கிறாள்.

மாதவா, ஆரவமுதனாகிய உன்னையே,
கூர்மாவதரம் எடுக்க  வைத்து அமுதத்தை எடுத்தனர் தேவர்கள்.
நீ நிச்சயத்திப்படி செந்திருவான மஹலக்ஷ்மியே வந்தாள். உன்னை வந்தடைந்தாள் நீயும் மாதவனானாய்.
 அப்படிக் கடலைக் கடைந்த போது உம் கேசம் தளர்ந்து கடல் நீரில் அலைய
  நீ கேசவனும் ஆனாய்.

உன்னிடமிருந்து பெற்ற பரிசுகள் எல்லாம் நாங்கள் அணிந்தோம்.
என் தந்தையோ குளிர்ந்த மாலைகள் அணிந்த பட்டர்பிரான்
பெரியாழ்வார்.
அவருடைய கோதை நான் சொன்ன,சங்கத்தமிழ் மாலை
முப்பதையும் தினமும் சேவிப்பவர்கள்,
செவ்வரியோடிய உன் தாமரைக் கண்களின் அருள் கடாக்ஷம் பெற்று
திருவருள் நிறைந்து இன்புறுவர் என்று உறுதி அளிக்கிறாள்.

நாமும் அவள் சொன்ன  அத்தனை பாசுரங்களையும்
மறவாமல் பாதித்த துதித்து  அவள் அருளை பெறுவோம்.

திருவாடிப்பூரத்து ஜகத்து உதித்தாள்  வாழியே
திருப்பாவை முப்பதும் செம்பினால் வாழியே
பெரியாழ்வார் பெற் றேடுத்த பெண்பிள்ளை வாழியே.
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூ ன்றுரைத்தாள்  வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி  உகந்து அளித்தால் வாழியே
மறுவாரும் திருமல்லி வளநாடு வாழியே
வண்புதுவை நகர்க்
கோதை மலர்ப்பதங்கள் வாழியே. //
ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார், பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.

Vanga kadal kadaintha ~ Dr. M.L. Vasanthakumari ~ Sri Aandal Thiruppavai

Vallisimhan

Sunday, January 13, 2019

ஸ்ரீஆண்டாளின் சரணாகதிப் பாசுரம் 29

Vallisimhan
எல்லோரும் இனிதாக வாழவேண்டும் .
Add caption
 ஸ்ரீஆண்டாளின் சரணாகதிப் பாசுரம் 29
 இடைச்சியாகத் தன்னை  எண்ணியபடியே ஆண்டாள் கண்ணனை விழிக்கிறாள்.
இன்னும் உங்களுக்கு என்ன எல்லாம் வேண்டும் என்று அவன் இனிமையாகக் கேட்கிறான்.

எங்களுக்கு வேண்டியது உன் திண் சரண் தான்.

அதையே வரித்து வந்திருக்கிறோம். இனி எமக்கு வேண்டியதெல்லாம்
உன்னிடம் சரணாகதி அடைவதே.

வேறு பரிசுவேண்டாம்.
எங்கள் கைங்கரியங்களை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வேறு எந்த ஆசைகளும் எங்களுக்கு கிடையாது.

எந்நாளும் , எத்தனை பிறவிகள் எடுத்தபோதும் உனக்கு உற்றவராகவே
நாங்கள் இருப்போம்.
உன் பணிவிடைகளில் எங்கள் பிறவிகள்
பூர்த்தியாகும்.
இந்த வரத்தை அங்கீகரித்து அருள் செய்வாய் கோவிந்தா என்று பூர்த்தி செய்கிறாள்.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே தொல்பாவை பாடி அருள வல்ல பைவளை யாய், நாடி நீ வேங்கடவற்கு எம்மை விதி
என்ற இம்மாற்றம்  யாம் கடவா வண்ணமே நல்கு.Saturday, January 12, 2019

28 ஆவது நாள்பாசுரம் கறவைகள்

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
++++++++++++++++++++++++++++++++++++++ 28 ஆவது நாள் பாசுரம்
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்.
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்துந்தன்னை
பிறவிப் பெருந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறையொன்றும் இல்லாத கோவிந்தா உந்த
ன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளொம் அன்பினால் உன் தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்//

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கோதையின் இடைச்சி அவதாரம் இன்று கண்ணனுடன்
உணவருந்துவதில் பேரானந்தமாக நிறைவேறுகிறது.
கண்ணா, நாங்களும் உன்னுடன் கறவைகள் மேய்க்க வருகிறொம்
கோதுளி எங்கள் பாவங்களை விலக்கும்.
உன் நாமம் நாங்கள் எப்படிச் சொன்னாலும் எங்களைக் காக்கும்.
 எங்கள்
வலது இடது தெரியாத ஆய்ச்சியர் நாங்கள்.
உன்னைப் போற்றிப் பாடும்போது கூட பிழைகள்
எழ வாய்ப்புண்டு. ஆனால் உனக்கு அது ஒரு பொருட்டல்ல.
கருணை வள்ளலான கோவிந்தன் நீ
எங்களுக்குக் கொடுக்கும் பரிசு இந்தக் கலந்த உணவை
எங்களுடன் உண்ணுவதுதான். எங்களுக்கான பறை.

கோவிந்தன்,கோதை பாதங்களில் சரணம் புகுவோம்.

கொசுறு செய்தி,பாட்டி செய்யும் ,பெருமாளுக்குக் கண்டருள
வைக்கும் தயிரன்னம் ,அவரது பெரியவர்களிடம் கற்றது.

குழைய வடித்த அன்னத்தில் , அன்று கறந்து அன்று காய்ச்சிய
பாலைக் கலந்து,துளி உப்பைப் போட்டு வைப்பார்.
கூடவே கொஞ்சம் வெண்ணெய் கலக்கப் படும்.
கொஞ்ச நேரம் கழித்து ஒரு தேக்கரண்டி த்யிர் கலந்து,
கடுகு,பெருங்காயம், கருவேப்பிலை,வெள்ளரித்துண்டுகள்
மாங்காய்த்துண்டுகள்  கலந்து பெருமாள் சன்னிதிக்குச் சென்றுவிடும்.

திருப்பாவை முப்பதும்சொல்லி,பல்லாண்டு பாடப்பட்டப் பின்னர்,

ஆராதகர் மணியடித்து நிவேதனம் செய்து மூடிய பின்னர்,
அதிகாலை ஏழுமணிக்குச் சுடச்சுட தயிர் சாதம்
கைக்கு வரும். அந்த அமிர்தம் போல் இதுவரைக்கும் வாய்க்கவில்லை.

THIRUPAVAI PASURAM 28 SUNG BY M L VASANTHAKUMARI DIVYADESANGAL FOR THOU...

Vallisimhan

Friday, January 11, 2019

மார்கழி 27ஆம் நாள் பாசுரம் கூடாரை வெல்லும்

Vallisimhan  எல்லோரும் நலமாக வாழவேண்டும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
 அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு  திருப்பாவை பல்பதியம்

இன்னிசையால் பாடிக்கொடுத்தாள்
  நற்பாமாலை பூமாலைச் 
சூடிக் கொடுத்தாளை சொல்லு.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கூடாரை வெல்பவன் கோவிந்தன். அன்பினால் அரவணைத்து அவர்களின் பகைமையை மட்டும் அழித்து ,தன்னுடன் சேர்த்துக் கொண்டுவிடுவானாம்.

கோதை அவனை அணுகிக் கூடாரையே அணைக்கின்ற கோவிந்தா ,உன்னை நாங்கள் இத்தனை நாட்களாகப் பாடி வந்தித்திது வந்திருக்கிறோம்.
அதுவும் நீ அருளிய பல்கலையும் அணிந்து ,புத்தாடை உடுத்தி,
நோன்பு முடிந்ததற்கு அடையாளமாகக் குதூகலத்துடன் வந்திருக்கிறோம்.
உனக்காகவே  பாலில் பொங்கிய அடிசில்.அக்காரம், நெய் சேர்த்துக் கொண்டு வந்திருக்கிறோம்.
எங்களை அங்கீகரித்து உன் அன்பை எங்களுக்குப் பகிர்ந்து கொடுத்து
எங்களுடன் கூடுவாய்.
நோன்பிருந்து உனக்காகத் தவமிருந்தோம்.
எங்களுடன் கூடி இருந்து குளிரவேண்டும்.என்று கோரிக்கை விடுக்கிறாள்.
கோவில்கள் எங்கும் அக்காரவடிசில் மணம் பரவி இருக்கும் இன்று.
கண்ணனையும் கோதையையும் ,, கோதையின் பிரார்த்தனையை நிறைவேற்றின
அண்ணா என்று ஆண்டாளால் அழைக்கப் பெற்ற ஸ்ரீ ராமானுஜ முனியையும்
தியானிப்போம்.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே
 நீ பாடிக்கொடுத்த பாமாலையையும் பூமாலையையும்
உன் வேங்கடவனையும் நாங்கள் என்றும் மறவாமல் இருக்கவேண்டும்.
ஸ்ரீ கோதை நாச்சியார் திருவடிகளே சரணம்.

Koodarai Vellum

Vallisimhan

Monday, January 07, 2019

முதுமை நம்மை அண்டும்போது ..2

Vallisimhan
எல்லோரும் இனிதாக வாழவேண்டும்

பழைய பதிவில்  இந்த ஊர்த்  தோழிகள் சிலர்  சந்தித்தோம் இன்னொரு தோழி  வீட்டில்  யாரும் இல்லாத சூழலில் பேசுவது இனிதாக இருந்தது.
அதைப்  பற்றி  எழுதி இருந்தேன்.
பிரேமாவுக்கு  யாருக்காவது எதாவது சாப்பிடக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் .
 எங்களுக்கும்  டீ ,குணுக்கு என்று கொண்டு வந்து வைத்தாள் .

இன்னொரு பெண்   வருகிறார்கள்  AUNTY .திருமதி  ஸ்ரீபதி. ஓ அவர்களுக்கு 80 வயது இருக்குமே  என்றேன்.
பிரச்சினைகளுக்கு வயது வித்தியாசமே கிடையாது
என்று சிரித்தார் பிரேமா.

சரி உன் கஷ்டம்  என்ன. நீ எதற்காகக்  கோவை போகணும்.
இங்க இருக்கிற சௌக்கியம் அங்கே வருமா என்றார் சுசிலாபென்.

வசதி மட்டும் வாழ்க்கையா பென் .கோவில்களுக்குப் போகணும். நினைத்தால் சமையல் இல்லாவிட்டால்
வாங்கி கொள்ளலாம்.
வண்டியும் டிரைவரும் வைத்துக் கொள்ளலாம்.
இந்தக் குளிரிலிருந்து ஓடிவிடலாம்.
அக்கா,தங்கை ,தம்பி என்று பார்த்துக் கொள்ளலாம்.
எனக்கு சமைத்து அலுத்துவிட்டது.

இரண்டு இடத்திலும் பேரன் பேத்திகள் வளர்ந்து கல்லூரிப் பருவம்  வந்தாகிவிட்டது.

மாமியார் மாமனாருக்காக வந்தோம். எங்கள் வழியே இவர்கள் வந்தார்கள். இனி விலகிக் கொள்ள வேண்டியதுதான்.
என்று பெருமூச்சு விட்டார்.
வாசல் மணி ஒலித்ததும் சென்று  சாராம்மா ஸ்ரீபதியை
உள்ளே அழைத்து வந்தார்.
ஒரு வருடத்தில் அடையாளம் தெரியாமல் இளைத்திருந்தார்.

அவருக்கு ஒரே மகன்.பாலக்காட்டைச் சேர்ந்தவர். மகன் வங்காள பெண்ணை மனந்திருந்தார்.
நல்ல சந்தோஷமான குடும்பத்தைத்  தான் நான் சென்ற வருடம் சந்தித்தேன்.  மகனுக்கு  வேறு வேலை வந்துவிட்டதால் வாரம் முழுவதும் தான் தனியாக இருப்பதாகவும் மருமக்களுக்குத் தன்னைப் பராமரிப்பு சிரமமாக இருந்ததால், ஒரு கேர்டேக்கரை நியமித்திருப்பதாகவும் சொன்னார்.

என்னிக்கு ஈதொண்ணும் வேண்டா. ஞான்  பாலக்காட்டுக்கு மடங்கணும். கோட்டக்கல் வைத்திய சாலால
தேக அபிவிருத்தி  செய்யலாம். மடுத்துப் போயி இ சிகாகோ.
என்றபடி வந்தவருக்குத் தேனீர்  கொஞ்சம் தெம்பு கொடுத்தது.
  யேது  ஒரு வழிக்கும் சம்மதிச்சான் பாடில்லா எண்டே  மோன் //என்று முடித்தார்.

அவருக்குப் பாலக்காட்டில் உறவினர்களும் வீடும் இருந்தது.
அடுத்து  என் நினைப்பு .  என்னைப்  பார்த்தார்கள்.

ரேவதிக்குப் பிரச்சினை இல்லை.  உடம்பை மட்டும் கவனிக்கணும்.
ஊருக்குப் போய் இருக்க  அங்கே ஒன்றும் இல்லை.
 துணை இல்லாமல் இருக்கவும் முடியாது.
இங்க விட்டால் இன்னொரு மகன் வீட்டுக்குப் போயிடலாம் .
அருமையாகக் கவனித்துக் கொள்ளும் மக்கள்.

இல்லையா ரேவதி என்றார் சுசிலா பென் .
நானும் ஆமாம் என்றேன்.

உண்மையும் அதுதானே .
எல்லோர் பிரச்சினைக்கும் விடிவு உண்டு. கொஞ்சம் தாமதமாகலாம்.
காத்திருக்கலாம்.

Saturday, January 05, 2019

முதுமை நம்மை அண்டும் போது

Vallisimhan
 அனைவரின் புதுவருடமும் ஆனந்தமாக இருக்க வாழ்த்துக்கள்.

முதுமை 70 ஐ எட்டிய இரு தோழிகளோடு நானும் புது வருடத்தன்று  பேசிக்கொண்டிருந்தேன்.
சொல்லி வைத்தால் போல் தங்கள் தங்கள் வீட்டுப் பெரியவர்களைத் தாங்கள் கவனித்துக்   கொண்ட விதமும்

இப்போது அந்த நிலைமைக்குத் தாங்களே வந்து
விட்ட நிலையில்  தங்கள் வாழ்க்கை நடக்கும் விதமும்
சொல்ல நானும் அவ்வப்போது
என் பங்கைச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

முக்கிய  ஆற்றாமை  தாங்கள் பல விஷயங்களில்
கலந்து கொள்ளப்  படாததே.
THEY  were told . Their uptake on any matter  கேட்கப் படவில்லை. என்பதே.
  அதில் இருவர் குடியுரிமை வாங்கியவர்கள். கணவனோடு இங்கே மகன் வீட்டுக்கு வந்து 30 வருடங்களுக்கு மேல் ஆகிறது.
நான் தான் புது வரவு. ஒண்ணரை வருடங்கள் தானே ஆகிறது.

நானிருப்பது மகள் வீட்டில். வானப்ரஸ்த நிலையில் என்னைச் செலுத்திக் கொண்டுவிட்டேன்.
என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களூக்கும் எனக்கும் பல சமயங்களில் சம்பந்தப் படுத்துக் கொள்வதில்லை.
அவஸியமில்லை என்ற ஒரே காரணத்தால்.

நாம் நம் குடும்பத்தை நடத்தி முடித்தாச்சு.
இப்போது இவர்கள் நம்மைவிடப் புத்திசாலிகளாகத்தான் இருக்கிறார்கள்.

இதில் நாம் தலையிடுவதே தவறு.
ஏதாவது விஷயத்தில் அபிப்பிராயம் கேட்டால் சொல்லலாம்.
கேட்கவில்லை என்றாலும் பாதகமில்லை.

திண்ணையிலிருந்து குரல் கொடுத்த பாட்டிகள் காலம்
மலைஏறிவிட்டது.
மற்ற இருவரும் ஏன் அல்லலுறுகிறார்கள் என்று யோசித்தேன்.
பிள்ளையின் மேல் வைத்த அதீதப் பாசமும் கட்டுப்பாடும் தான் காரணம்.

 எத்தனை விதமாகக் காலம் மாறினாலும்  சில அம்மாக்கள்
மாறுவதில்லை. நம் ஊரிலாவது அக்கம்பக்கம் தோழிகள் இருப்பார்கள்.
ஆற்றாமையைச் சொல்லிக் கொள்ளலாம். இங்கே அப்படி எல்லாம்
பேச முடியாது.
இந்த சந்திப்பில் முதலில் பேசியது திருமதி.வாத்வானி.
வீட்டில் மருமகள் தன்னை சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபிப்பதாகச் சொன்னார்.
என்னவாக இருக்கும் என்று யோசித்ததில், அந்தப் பெண்ணுக்கு வேலைக்கும் போய்
வீட்டையும் கவனிப்பது சிரமமாக இருந்திருக்கிறது.
சுசீலா வாத்வானிக்கு கைகளில் நடுக்கம் கொஞ்சம் உண்டு.
அதனால் காப்பியோ தேனீரோ சிந்துவது வழக்கமாகிவிட்டது.
மருமகளுக்கு உதவப் போய்  , சமையல் முடிந்ததும்
அடுப்பை அணைக்க மறந்திருக்கிறார்.
அது பெரிய தவறு தான். நல்லவேளை அவரது கணவர் கவனித்து
அணைத்திருக்கிறார்.இதை அங்கே வேலை செய்ய வந்த ,
சுத்தம் செய்யும் பெண் பார்த்து மறு நாள்
கைபேசியில் மருமகளிடம் சொல்லிவிட்டாள்.
பலன் 72 வயது சுசீலாபென் எங்களை அழைத்து அழுதது.
என்ன செய்வது என்றே எனக்குத் தெரியவில்லை.

 அல்சைமர் வந்துவிட்டதா எனக்கு என்று தெரியவில்லையே
என்று புலம்பும் சுசீலாபென்னை சாந்தப் படுத்தியது இன்னோரு தமிழ்ப் பெண்மணிதான்.
பிரேமா ஸ்ரீனிவாசன்.

இந்தக் குளிர் நம் எல்லோரையும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கிவிட்டது
சுசீலாபென். நீங்கள் வருந்த வேண்டாம்.
சிம்பிளாக ஒரு பரிசோதனை செய்தால் உடல் நிலை தெரிந்துவிடும்.
எனக்குப் போன வருடம் இருந்த நிலையில் எத்தனை ஆப்பரேஷன் நடந்தது. அத்தனையும் மீறிவர என் மருமகளே ஆதரவாக இருந்து எல்லாம் செய்தாள்.

பெண் பிறகே வந்தாள் என்றார்.
ப்ரேமா ,தன்னுடைய மாமியார் மாமனார் இருக்கும் போதே இங்கே வந்துவிட்டார்.
மச்சினர் ஓர்ப்படி என்று பெரிய குடும்பமாக
இருந்து பழக்கப் பட்டவர். அவர் சந்தித்த பிரச்சினைகளைச் சொல்லி முடியாது.
மாமியார் மாமனாரைக் கரையேற்றி, இப்போது மகன், மகள் இருவரிடமும் மாற்றி மாற்றி
இருக்கிறார்.
எங்கு சென்றாலும் முழு சமையல் பொறுப்பு அவரிடம் தான்.
அலுப்பே காட்டாமல் உழைப்பார். அவர் கணவருக்கு 80 வயதாகப் போகிறது.
தன்  சேமிப்பால் கோவையில் அபார்ட்மெண்ட் வாங்கி விட்டார்.
இந்தியா சென்று விடவேண்டும் என்ற துடிப்பு எங்கள் எல்லோருக்குமே உண்டு.

வருடத்துக்கு ஒரு முறை சுசீலாபென் அஹமதாபாத், த்வாரகா என்று போய்விடுவார்.
ப்ரேமா இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கோவை, திருச்சி என்று போய்
வந்துவிடுவார்.
எதிலும் அவருக்குத் திருப்தி உண்டு. கம்ப்ளையினே செய்ய மாட்டார்.
ஸ்ரீனிவாசனுக்கோ சுத்தமாகக் காது கேட்காது.
மாடியில் பக்தி டிவி போட்டுக் கொண்டு அதிலேயே மூழ்கிவிடுவார்.
பிரேமா தான் ஒவ்வொரு காப்பியோ டீயோ கொண்டு போய்க் கொடுப்பார்.               பிரேமாவுக்கு என்ன கவலை என்று கேட்கிறீர்களா. பார்ப்போம்.    .தொடரும்.

Tuesday, January 01, 2019

இனிய புத்தாண்டு இன்பமாக மலரட்டும்.

Vallisimhan


இனிய புத்தாண்டு இன்பமாக மலரட்டும். 2019ஆம் வருடமும் பிறந்துவிட்டது.
நாட்கள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.
அவற்றுள் நாம் என்ன பொக்கிஷங்களை வைத்தோம் என்று
யோசித்துப் பார்க்கிறேன்.

அமைதி,ஆரோக்கியம் ,பிறர் மனம் நோகாமல் பேசுதல், அனைவரிடமும் அன்பு பாராட்டுதல்
,குழந்தைகளை மதித்து உரையாடுதல் என்று எத்தனையோ நற்காரியங்களை பொட்டலம் கட்டி வைத்துவிட்டால் இந்த வருடமும் அடுத்த வருடம் வரை மணக்கும்.
மீண்டும் நினைவுப் பாதைகளில்  நல்ல செடிகளை வளர்க்க ஏதுவாகும்.

வருடத்தில் நான்கு  பருவங்கள் வருவது போல வாழ்விலும்
பலவிதத் திருப்பங்கள். ஆனால் அனைத்தையும் சமாளிக்க
அன்பு கொண்ட மனங்களை இறைவன் அருளி இருக்கிறன் ஆதரவு காட்ட. இத்தனை நட்புகள் எனக்குப் பதிவுலகம் வரும் வரை இருந்ததில்லை.
ஒன்றையும் கைம்மாறு எதிர்பாராமல் அம்மா,அக்கா என்று அழைக்கும் நல்ல உள்ளங்கள் என்றும் வலமாக இருக்க வேண்டும்.
இறைவன் அனைவருக்கும் ஆரோக்கியம்,அமைதி கொடுக்க வேண்டும்.
வாழ்க வளமுடன்.