Blog Archive

Monday, January 21, 2019

முதுமை 1963...1

Vallisimhan

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

அம்மா..... பாட்டி படிலயே ஈரம் செய்துட்டார்.
பெண்ணின் குரல் கேட்டு பின்புறம் விரைந்தாள் நீலா.

ரொம்ப அவசரம். படி இறங்கி கொல்லைப்பக்கம் போவதற்குள்
வந்துவிட்டது.
உனக்கு வேலை வைத்து விட்டேன் மா என்று சொல்வதற்குள்
மாமியாரின் கண்களில் நீர்.
சர்க்கரை ரத்தத்தில் சேர்ந்ததிலிருந்து 65 வயது வனஜாம்மாவுக்கு
பழக்க வழக்கங்கள் மாறின.
அதிக பசி, அதிக தாகம்,அடிக்கடி சிறு நீர் கழித்தல் என்று நீண்டது பட்டியல்.

எது கொடுத்தாலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டி இருந்தது.

குளித்து வெகு ஆசாரமாக ஸ்வாமிக்குப் பூஜை செய்பவர்.
கணவர் தவறியதும் இன்னும் தீவிரமாக எல்லா விரதங்களையும் கடை பிடித்தவருக்கு
இந்த சர்க்கரை மிக அதிர்ச்சியைக் கொடுத்தது.

ஒன்பது கஜம் கட்டிக் கொள்வதே அசௌகரியமாக இருந்ததால்
மாம்பழக்கட்டு என்று அவர் சொல்லும் ஆறுகஜப் புடவைக்கு மாற வேண்டி வந்தது.
எல்லா நேரமும் அசதி வந்து தொந்தரவு கொடுத்தது.

நல்ல கனத்த சரீரம் இப்போது பாரமாகியது.
மருமகள் நீலா, மாமியாரிடம் அதிக அளவு மரியாதை வைத்திருந்தது தான் அவரைப்
பல நேரங்களில் ஆறுதல் அடைய வைத்தது.
இன்சுலின் ஊசி போட வைத்தியர் ஏற்பாடு செய்த நர்சம்மா தினம் ஒரு வேளை
வந்து ,சகல விதத்திலும் கண்காணித்து மருந்தும் கொடுத்துப் போனார்.
இப்போது இன்னும் ஐந்து வருடங்கள் கழிந்த நிலையில்
உடல் மிகவும் பலவீனமாகிவிட்டது.
பேரன், பேத்தி பாட்டியுடன் தாயக்கட்டம், சோழி என்று விளையாடுவதில் பாதி
சோகம் மறைந்தாலும், தலைசுற்றலும், இந்த சிறு நீர் உபாதையும்
மனசை அலைக்கழித்தன.
நீலா வேளை தவறாமல் ,உணவும், நீர் மோரும்,உப்பு குறைவான
 பலகாரங்களும் கொடுத்து கவனித்துக் கொண்டாள்.

வியாதியின் தீவிரம் இப்பொழுது ,இந்த நிலமையில் வந்து நின்றது.

No comments: