Blog Archive

Monday, May 27, 2019

அக்கம் பக்க செய்திகள்

வல்லிசிம்ஹன்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் 
 சென்னையிலிருந்து வரும் அக்கம்பக்க  செய்திகள் தண்ணீர்க் கொடுமையைப் பற்றித்தான்.
இதுவரை எங்கள் குடி நீர் மட்டும் வராமல் இருந்தது. இப்போது உள்ளே  இருக்கும் அத்தனை வீடுகளுக்கும் வரவில்லையாம். மெட்ரோ  வாட்டர் லாரிகளும் 15 நாட்கள் கழித்து வருகின்றதாம்.

நம் வீட்டில் கிணறு இருக்கிறது. ஊற  வைத்து மோட்டார் போட்டுக் கொள்கிறார்கள் காவலுக்கு இருப்பவர்கள்.

போர்வெல் நான் இருக்கும் போதே  இயங்க மறுத்தது. பழுது பார்க்க நேரமில்லாமல் கிளம்பி வந்து விட்டேன் .
இப்போது 90 அடிக்கு மேல் சென்றால் தண்ணீர் கிடைப்பதாகவும்  புது போர் போடவேண்டும் என்றும் 
சொல்கிறார்கள்.
இதுவே அதிசயம் தான்.
எட்டடுக்கு க்கு மாளிகைகள் பல வந்து விட்டன.
அவர்கள்  ஆறு வருடங்களுக்கு முன்பே 300 அடிக்கு 
நாலு   மூலைகளில்  இறக்கி  நீச்சல் குளமும் 
கட்டிவிட்டார்கள். 
ஒரு அபார்ட்மெண்ட்  8 கோடி.
 திரைப்படத் துறைக்காரர்  கட்டினார்.

மரங்களுக்குப் பதில் கட்டிடங்கள்  வந்த போது 
மழை எப்படி வரும். இறைவன்  மனம் வைக்க வேண்டும்.
++++++++++++
இங்கே   பல குழந்தைகள் பள்ளிப் படிப்பை முடித்துப் பட்டப்  படிப்பை நோக்கிச்  செல்கிறார்கள்.

ஊரே கோலாகலம் கொண்டு விருந்து வைத்துக் கொண்டாடுகிறார்கள்.
 எனக்கும் விருந்துக்குச் செல்ல வாய்ப்புக் கிடைத்தது. 
அற்புதமான சமையல்,அன்பு நட்புகள் விசாரிப்பு,
எண்ணெய் போலவே இங்கு வந்திருக்கும் பாட்டிகளுடன் அரட்டை என்று நேரம் போனதே தெரியவில்லை.
++++++++++++
நான்கு  நாட்களுக்கு முன்னால்  போலீஸ்  வண்டி எதிர்  வீட்டுக்கு வந்தது.
சுமார் 3 மணி நேரம் நின்று கொண்டிருந்தது.
அந்த வீட்டு செல்லம் காணாமல் போயிருக்குமோ என்பதிலிருந்து அந்த வீட்டில் தனியாக இருக்கும் 60 வயது அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லையா 
என்பது வரை பல ஹேஷ்யங்கள்.

அடுத்த நாளைக்கு அந்த அம்மாவே நம் வீட்டுக்கு வந்தார்.
முகம் வீங்கி இருந்தது. அந்தப் பெண்ணின் அம்மா 86 வயதில் இரண்டு வருடங்களுக்கு முன் காலமானதிலிருந்து 
இவருக்குத் தனிமை வாழ்க்கை. டிப்ரஷன்.
முதல் நாள் காலை  பல் வைத்தியம்  செய்து கொண்டு அந்த க்ளோராஃபார்ம் 
மயக்கம் தீரும் முன்னரே  வண்டி எடுத்ததால் 

சந்தேகத்தின் அடிப்படையில் காவல் வந்துவிட்டது.
அவருக்குத் தெளிவு வரும் வரை இருந்து விட்டுப் போனார்கள்.

எங்களிடம் பேசித்   தன்  வருத்தங்களை பகிர்ந்து கொண்டு 
,ஒரு மாதத்துக்கு தன தோழியின் வீட்டுக்குப் போவதாகவும் 
பிறகு ஐரோப்பாவில் தம்பி வீட்டுக்குப் போவதாகவும் சொன்னார்.
அவர் அம்மா இறந்த போதே  அடக்கம் செய்ய   போலந்து நாட்டுக்குத் தான் சென்றார்கள். பார்க்கவே மிக வருத்தமாக இருந்தது.
வித விதமான கவலைகள் விதவிதமான நிவர்த்திகள்.
பணம் மட்டும் போதாது  என்பது கண்கூடு.

Friday, May 24, 2019

வண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆

வல்லிசிம்ஹன்

😆😆😆😆😆😆😆                                  #  நேயர் விருப்பம்

  எங்கள்  ஃபியட்டும்  நாங்களும்.
1972 இல் திருச்சிக்கு மாற்றலாகி வந்த போது , எங்கள் புழக்கத்துக்கு என்று வண்டி ஒன்றும் இல்லை.
இவருக்கும் வொர்க்ஸ் மானேஜர் என்ற பதவியில்
இருக்கும் போது பைக் ஓட்டுவது அனுமதிக்கப் படவில்லை.
அதனால் வண்டி ஒன்று வாங்க வேண்டிய கட்டாயம்.

எங்கள் எல்லோருக்கும் பிடித்த வாகனம் ஃபியட்.
எங்கள் சேமிப்பைக் கணக்கில் கொண்டு
5000 ரூபாய்களுக்கு ஒரு பழைய 1100 என்று அறியப்பட்ட
ஃபியட் வண்டியை வாங்கி, அதைப் புதுப்பித்து அழகான டெசர்ட் சாண்ட் என்று அழைக்க படும்
வண்ணம் அடித்து  மேற்கொண்டு 2000 கையை விட்டுப் போனது.

1973 ஆவணி மாதம் ஒரு நாள் வீட்டுக் கொண்டு வந்தார்
எஜமானர். குழந்தைகளின் குதூகலத்துக்கு எல்லையே இல்லை.

திடீரென்று சிங்கத்துக்கு நான் வண்டி ஓட்டக் கற்றுக் கொண்டால்
சௌகரியமாக இருக்கும். என்று தோன்றிவிட்டது.

மனைவி எல்லாவிதத்திலும் மாடர்னாக இருக்க அவ்ருக்கு ஆசை.

அது ஒரு ஞாயிறன்று பொன்மலை சந்தை போகும்போது,
வண்டியை நிறுத்தி என்னை ஓட்டுனர் இடத்தில் உட்கார வைத்து, இது க்ளட்ச், இது
ப்ரேக், இது ஆக்சிலேட்டர் ,ஃபர்ஸ்ட் கியர்,செகண்ட் ,கியர்,தேர்ட் கியர் எல்லாம் சொல்லி
திருப்பி என்னை சொல்லச் சொல்லி திருப்திப்
பட்டார்.
சாவியைக் கொடுத்து ஆன் பண்ணு.கியர் போடு என்றார்.
சாவியை நடுங்கிக்கொண்டே வைத்துத் திருப்பினேன்.

வண்டி ஒரு குலுங்கு குலுங்கியது.
க்ளட்சிலிருந்து காலெடும்மா என்று சத்தம்.
நான் எடுத்தேன் வண்டி தவ்விப் பாய்ந்தது.
ப்ரேக் ல காலை வை. ஓகே பட்டென்று நின்றது.

பின்னாலிருந்து மகள். இந்த வண்டிக்கு ஃப்ராகின்னு பேர் வச்சுடலாம் என்றாள் சிரிப்புடன்.
நான் சாலையைப் பார்த்தேன். மதிய வேளை. போக்குவரத்து ஒன்றும் இல்லை.
மீண்டும் தைரியமாக ஆரம்பித்து
தவ்வித் தவ்வி முன்னேறியது வண்டி.

எதிர வண்டி வருது லெஃப்ட்ல ஒடிம்மா என்றார்.
அதாவது ஸ்டீரிங்கைதிருப்ப வேண்டும்னு அர்த்தம்.
நானும் ஒடித்தேன். சாலை ஓரத்துக்கு ஓடிவிட்டது வண்டி.
 ரைட் ரைட் என்றதும் ஒரே திருப்பு வண்டி  அடுத்த பக்கத்துக்கு

ஓடிவிட்டது. வீ என்று குழந்தைகள் கத்தல்.
பொறுமையாக ஸ்டீரிங்கைப் பிடித்து சரி செய்தார்.
எனக்குப் படபடப்பு.
ஆக்சிலேட்டர்ல இருந்து காலெடுமா.
நிதானமாக் கத்துக்கோ.ஒரு கால் க்ளட்ச், ஒரு கால் ப்ரேக் வைத்தால் வண்டினின்னிடும். பிறகு ஆக்சிலேட் பண்ணலாம்.30 மைல் போனாப் போதும் என்று சொல்லி மீண்டும் வண்டியை ஸ்டார்ட்
செய்தோம். கொஞ்ச தூரம் சமாதானமாகச் சென்றது.

சாலையோடு வந்த கான்ஸ்டபிள் எங்களை வேடிக்கை பார்த்தார்.
உடனே கவனம் மாறிய நான் வண்டியை இடது பக்கம் திருப்ப
அது வயலில் இறங்கி ஒருமரத்தின் மீது மோதுவதற்குள்
சிங்கம் ப்ரேக் போட்டார்.
சின்ன வண்டி யாக இருந்ததால் இருவர் உதவியோடு வண்டி மேலே வர சுலபமானது.
சற்றுத் தொலைவு சென்ற கான்ஸ்டபிள்.
திரும்பி வந்து ஐய்யா அவ்வ்வளவு நல்லா வண்டி ஓட்டுவாரே
 அவரே ஓட்டட்டும் என்று ஆசி சொல்லிவிட்டுப் போனார்.

பசங்களா என்னா ஆகும் தெரியும் இப்ப என்றார் சிங்கம்.
என்னப்பா.
அம்மாவுக்கு இன்னிக்கு அனேகமா ஜெயில் தான் என்றதும் அச்சச்சோ.
என்றனர்.
பரவாயில்லை ஜங்க்ஷனுக்குப் போயி காமிக்ஸ் எல்லாம் வாங்கிக் கொண்டு
ஜெயிலுக்குப் போய் அம்மாவுக்கு ப்ரெட் கொடுத்துட்டு வரலாம்
என்றவரை முறைப்பதைத் தவிர வேறு வழியில்லை எனக்கு.
குழந்தைகள் சிரித்துக் கொண்டார்கள்.
அதெப்படிம்மா நீ ஆக்சிலேட்டர் ப்ரேக் ரெண்டுலயும் கால் வச்சே என்று குபீரென்று சிரித்தாரே பார்க்கணும். இதுதான் நான ஸ்டீரிங்கைப் பிடித்த முதலும் கடைசியுமான் நிகழ்ச்சி.
பியட் 1100

ஆதாரம் நீயே 😇

வல்லிசிம்ஹன்எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் .
சென்ற வாரம்  நான் இந்த ஊர் ஆளு என்பதற்கு 
ஆதாரம்  வேண்டும் என்பதற்காக 
ஒரு   விலாசம், புகைப்படம் ,ஒரு நம்பர் எல்லாம் 
எடுக்க இந்த ஊர் அலுவலகத்துக்குச் சென்றோம்.

கவுண்டடரில் டோக்கன் வாங்கி  உட்கார்ந்ததும் 
பக்கத் து   இருக்கையில்  உட்கார்ந்திருந்த  அம்மா, நான் ட்ரைவர் லைசென்ஸ் 
புதுப்பிக்க வந்திருக்கிறேன் என்று நினைத்து விட்டார்.

ஹௌ  ஓல்ட் ஆர் யு என்றார். 71 என்று சொன்னதும் 
என்  வயசென்ன தெரியுமா  என்று கேட்டார்.
60 இருக்குமா என்றேன்.
76 ஆகிறது.//
சிரித்துக் கொண்டே சொன்னவர்  நீ நல்லா ஓட்டுவியா  என்றார் .

திடுக்கிட்ட நான்  ,இல்லை  என்றேன். சோ ,ஹவ் டு யூயூ கெட் 
அரவுண்ட்  என்று கேட்டார்.
என் பெண் என்று சொன்னேன்.
 இப்பவும் ஒன்னும்  லேட் இல்லை. வண்டி ஓட்டக்  கற்றுக்கொள். என்று  புத்தி சொல்லியபடி  எழுந்தவர்,
இந்தியாவில் ஒரு 85 வயதுக்கு கிழவர், சாலை யோரம் மரம் நட்டு ,தண்ணீர் விட்டு வளர்க்கிறார் தெரியுமா. 

   ஹி  இஸ்  ரியலி கிரேட்.
நான் தலை ஆட்டினேன். 
அவரால் முடியும் என்றால் உன்னால் முடியாதா என்ற  வண்ணம்,
கவுண்ட்ட்ருக்குச் சென்று டெஸ்ட் எடுத்துக் கொண்டு 

  லைசென்ஸ் புதுப்பித்துக் கொண்டு , என்னைப்  பார்த்துக் கையசைத்து விடை பெற்றார்.

பெருமூச்சு விட்டுத் திரும்பினேன்.

பெண் சிரித்துக் கொண்டாள் . அம்மா கார் ஓட்டக்  கற்றுக் கொண்டதை  நினைத்துப் பார்த்திருப்பாள் .

இந்த ஊர் ஆதார் கார்ட் வாங்கித் திரும்பினோம்.😉😉😉 


Thursday, May 23, 2019

கசப்பு நீங்கி பாயசம் சாப்பிடலாமா....3

வல்லிசிம்ஹன்


Vallisimhan
எல்லோரும் வாழ வேண்டும் .

சிறிது நேரம் படுத்து எழுந்திருந்த ஜானம்மாவுக்கு
ஒரு தெளிவு கிடைத்தது போல  நிம்மதி.

ஒரு நடை தன் கிராமத்து தேவதையைத் தரிசித்து வரவேண்டும்
என்ற ஆர்வம் மனதில் கிளம்பியது. வாழைத்தோப்பு அம்மன் என்ற பெயரில் 
இருக்கும் மாரியம்மன் ,ஜானம்மாவின் எல்லாத் துயரங்களுக்கும் பதில் சொன்னவள். 

கொஞ்சம் கிலேசம் ஏற்பட்டாலும் அந்த அம்மனைப் போய்ப் பார்த்துவிடுவார்.
நிம்மதி கிடைக்கும் வரை அவளிடம் தன் மன சங்கடங்களைச் சொல்லி
விட்டுத்தான் வருவார்.
பிறகு தன் கடமைகளைத் தொடருவார்.

தன் பக்கத்தில் அயர்ந்து உறங்கும் ஷண்முகத்தை ஆதுரத்துடன் 
பார்த்தார். எழுந்து சென்று தண்ணீர் அருந்திவிட்டு மீண்டும் வந்து உட்கார்ந்தார்.
சலனம் கேட்டு எழுந்துவீட்டான் மகன். அம்மா, காப்பி ஏதாவது வேணுமா
நான் வாங்கி வரவா என்றதும் சிரிப்பு வந்துவிட்டது அம்மாவுக்கு.
நாம வீட்டிலதானப்பா இருக்கோம். வாடாமல்லி உள்ளே காப்பி 
போட்டுக் கொண்டிருக்கா. 
செண்பகம் ஏதோ வேலையா வெளியே போயிருக்கா.

ஏம்மா எனக்கு ஒரு வரியாவது எழுதக் கூடாதா. 
நான் வந்து அழைத்துப் போயிருப்பேனே. இப்படி சங்கடத்தில இருக்கியே மா. உனக்கு இது தேவையா.
 நம் ஊரில் இல்லாத மருத்துவரா, கஷ்டமோ நஷ்டமோ , வாடாமல்லி
பார்த்துப்பா. 
உடம்பு இவ்வளவு தளர்ந்து போயிட்டயே என்று அலமந்து போய்விட்டான்.

நான் நல்லாத்தான் இருக்கேன். வயசானால் வரும்  ஓய்ச்சல் தான்.
நீ கவலைப் படாதே. அதற்காக என்னை அழைத்துப் போகணும்னு கட்டாயம்
இல்லை.
ஷண்முகம் வாயைத் திறக்கு முன் ,வாசலில் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது.

வியர்த்து விறுவிறுத்து குமரன் வந்தான்.
அவன் கையில் பால் பாக்கெட்களும், பழங்களும் இருந்தன.

ஃப்ரிட்ஜைத் திறந்து உள்ளே வைத்து, அண்ணா முகம் கழுவிப் புறப்படுங்க, திருவொத்தியூர்
வடிவுடை அம்மனைத் தரிசித்து விட்டு,
வெளியே  சாப்பிட்டு விட்டு வரலாம். நாளை வண்டிக்குச் சொல்லி இருக்கேன்.
உன்னுடன் வருகிறேன் வீட்டை ஒழுங்கு படுத்திவிட்டுத்தான் மறு வேலை
என்று பொரிந்து தள்ளும் தம்பியைப் பாசத்துடன் பார்த்தான் அண்ணன்.

நீ லீவு போட்டு அங்க செய்ய பெரிய அரண்மனை இல்லடா அது. எங்களுக்குத் தேவையும் குறைவு,அதற்கேற்ற  பொருட்களும் கொஞ்சம் தான்.என்றான்.
ஆஹா எல்லாம் தெரியும்.
நான் வரத்தான் செய்வேன் என்று அடம் பிடிக்கும் குழந்தை போல 
பேசும் தம்பியைப் பார்த்து சிரித்தான்.
சரிடா உன் விருப்பம். இப்போ கோவிலுக்குப் போகலாம் வா. அம்மா, தலையை வாரிக்கோமா.
நல்ல புடவை கட்டு, வா குடும்பத்தோடு போய் வரலாம் என்றான்.
 ஜானம்மாவுக்கு தன் தேவதையே அழைத்தது போல சமாதானம் பிறந்தது. 
பெரிய கால் டாக்சியை வரவழைத்த குமரன் ,மனைவியைத் தேடினான். இன்னுமா வரல அவ. ராயபுரம் போய் வரேன்னு சொன்னாளே, என்ற வண்ணம் யோசித்தவன், நாம் கிளம்பலாம். அவளை ஆட்டோவில் வரச் சொல்லலாம் என்று கிளம்பினான்.

வடிவுடைய அம்மன் கோவிலில் தாயைப் பார்த்ததும் மனம் நெகிழப் பிரார்த்தித்தாள்.
இந்தக் குடும்பம் தழைக்கட்டும் தாயே. எனக்கு  வேற என்ன வேணும் என்றவாறு, தியாகேஸ்வரரையும் வணங்கிவிட்டு,
குமரன் சொன்ன ஹோட்டலில் ,குழந்தைகள் கேட்ட அத்தனையும் வாங்கிக் கொடுத்தான்.
சாப்பிடுங்கடா. சத்தே இல்லாம இருக்கக் கூடாது 
என்று சிரித்து சந்தோஷப் படுத்தினான்.

 போன்ல சொன்னேன், யேன் இவளைக் காணொம் என்றவாறு வீடு திரும்பினார்கள்.
மணி எட்டரை தான் ஆகி இருந்தது.,
 செண்பகம் என்று அழைத்த வண்ணம் உள்ளே போனவனைச் சந்தித்தது
தன் மாமியாரைத்தான். 
மகள் ராயபுரம் அத்தைக்கு உடம்பு முடியாமல் போனதால் அங்கே தங்கிவிட்டுக்
காலையில் வருவாளாம். என்று சொன்னதும் குமரன் மனம் கொதித்தது.

சரி அத்தை நாங்க சாப்பிட்டாச்சு நீங்க இருந்து சொன்னதுக்கு நன்றி
 என்று அவளை அனுப்பினான்.
அண்ணா, பால் காய்ச்சி சாப்பிட பால் வாங்கி வந்திருக்கேன். நாளை வியாழன் எமகண்டம்
போனதும் எல்லோரும் சாஸ்திரி நகர் போறோம்.
என்று மங்களவைப் படுக்க வைத்தான்.
அசதி தாங்காமல் , எல்லோரும் பாய்களை விரித்துப் படுத்துவிட்டனர்.

 அடுத்த நாளும் விடிந்தது. அனைவரும் குளித்து,மங்களாவையும் அழைத்துக் கொண்டு
புது வீட்டுக் கிளம்பினர்.
அதுவரையில்  செண்பகத்தைக் காணோம்.
பிள்ளையைப் பத்திக் கூடக் கவலைப் படலியே என்று வருத்தப் பட்டார் ஜானம்மா.

காலைக் காற்றில் தூரத்தில் நீல வண்ணக் கடல் தெரியும் இடத்தில் வீடுகள்
அமைந்திருந்தன. முதல் மாடியில் அமைந்திருந்த வீடு
அமைப்பாக இருந்தது.அண்ணே நீங்க முதல்ல போங்க. அம்மா கூடப் 
போ. அண்ணீ உங்க வாழ்க்கை சுகமாக அமைய வாழ்த்துகள் என்றபடி கீழே
 ஸ்கூட்டர் நிறுத்திய இடத்துக்குப் போனான்.

அவர்கள் உள்ளே போய் பத்து நிமிடங்களில் மீண்டும் ஸ்கூட்டர் சத்தம்
கேட்டது. கையில் கொண்டு வந்திருந்த வாழைத்தோப்பு அம்மன் படமும், பிள்ளையார்
படத்தையும் சமையல் மேடையில் வைத்துக் கோலமிட்டாள்.
அழகான ஜோடி விளக்குகளை ஏற்றி வைத்தாள்.
ஆட்கள் வரும் சத்தம் கேட்க எல்லோரும் திரும்பினர்.
வரிசையாக வைக்கப் பட்ட பொருட்களைக் கண்டு ஆச்சரியம் அலையாகத் தாக்கியது.
அண்ணி முதல்ல பாலைக் காய்ச்சுங்க.எல்லாரும் சாப்பிடலாம்.
அண்ணா ,அழகாக் காஸ் கனெக்ஷன் எல்லாம் கொடுத்திட்டியா.

இதோ வரான் பாரு என் நண்பன் என்று கூச்சத்தோடு நின்றிருந்த
செல்வத்தைக் காண்பித்தான்.
பாலும் காய்ச்சப் பட்டது. மனதார வாழ்த்திக் கொண்டே பாலைக் குடித்தனர்.
குமரன் கொண்டுவந்த மின்விசிறிகள் இரண்டு படுக்கை அறையிலும் கூடத்திலும்
பொருத்தப் பட்டன.
அடுத்து வந்தது புது தொலைக்காட்சிப் பெட்டி.
அண்ணா ஒண்ணும் சொல்லாத. நீ அனுப்பின பணம் அப்படியே இருந்தது.
பயிரறுவடை ஆன பணத்தைச் செலவழிக்கவில்லை.
 இதோ அப்பா ஆசியா உனக்கு வந்துவிட்டது
என்று சொன்ன தம்பியைக் கண்ணீரோடு தழுவிக் கொண்டான் 
ஷண்முகம். 
சிலையாக நின்ற அம்மாவின் கால்களில் மொத்தக் குடும்பமும்
 விழுந்து ஆசி வாங்கிக் கொண்டது.
வாடாமல்லி மங்களாவுக்கு , தான் கொண்டு வந்த தாழம்பூவை 
வைத்துப் பின்னினாள். பக்கத்திலிருந்த உணவுவிடுதியிலிருந்து காலை உணவு வாங்கி வந்த குமரன், அண்ணி நீங்க சமைத்து நான் சாப்பிடணும், மத்த வேலைகளை நாங்கள் 
பார்த்துக் கொள்ளுகிறோம் என்ற போது,
 வாடாமல்லி திக்கு முக்காடிப் போனாள். 
மாயாபஜார் படம் போல எல்லப் பொருட்களும்  அதற்கான அலமாரிகளில் அமர்ந்தன.
பிள்ளைகளின் யூனிஃபார்ம் அடுத்த நாள் தான் வரும் என்பதால், திங்களிலிருந்து
பள்ளி போவதாக ஏற்பாடு.
அண்ணி,நீங்களும் அம்மாவும் இங்க இருக்கிற எல்லாக் கோவிலுக்குப் 
போய்வரலாம், கடைகண்ணி, டாக்டர் எல்லாம் இருக்காங்க.

நடப் பயிற்சிக்கு பீச் இருக்கு என்று அடுக்கின கொழுந்தனைப் 
பார்த்துச் சிரித்தாள் அண்ணி.
அப்ப நீங்களும் குடும்பத்தோட இங்கே இருக்கலாம்.

அதுவும் நடக்கும் அண்ணி. தண்டையார்ப் பேட்டையைவிட்டுக் கிளம்ப வேண்டிய நாள் வந்துவிட்டது என்று மலர்ந்த முகத்துடன் நிற்கும் குமரனை இன்னோரு லக்ஷ்மணனாகவே 
பார்த்தாள். 
மாமியார் முகம் முழுவதும் மகிழ்ச்சி.
இனி என்ன வந்தாலும் தன் தாயாக அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டிய
பொறுப்பு அவள் மனதில் இறங்கியது.
செண்பகத்தின் மனமும் குளிர்ந்து நல்லுறவு நீடிக்க அம்மனே அருள்வாள்
என்ற உறுதியும் தோன்றியது. 
அனைவரும் வாழ்க வளமுடன்

Wednesday, May 22, 2019

வேப்பம்பூ ரசம் இனிக்கும்..2

வல்லிசிம்ஹன்
வேப்பம்பூ ரச ருசி.....2
Vallisimhan

   அசதியில் சாய்ந்த வண்ணமே தூங்கி விட்ட ஜானம்மாவை எழுப்பியது
பெரியமகன் ஷண்முகத்தின் குரல். உடல் பரபரக்க, எழுந்து உட்கார்ந்தார். கண்ணில் உடனே நீர் கட்டியது.
வந்தியாப்பா, எப்போ புறப்பட்டீங்க இத்தனை நேரமாச்சே. 
பசி தாங்காதேப்பா உனக்கு என்று மகனையும் பேரன்களையும் அணைத்துக் கொண்டார்.

எங்களை வரச் சொல்றது இருக்கட்டும் . வெய்யில் திண்ணை ஏறிச் சுடுவது கூடத்தெரியாமல் என்னம்மா  உனக்கு உறக்கம் என்று அன்புடன் கேட்டான் மகன். அத்தை  வணக்கம் என்று கால்களைத் தொட்டு கும்பிட்டாள் வாடாமல்லி.
நல்லா இருங்க பசங்களா, உள்ளே போங்க நானும் வரேன்
என்று இறங்க முற்பட்டவளின் தலை சுற்றியது.

சட்டெனப் பிடித்துக் கொண்டான் மகன்.
ஏம்மா சாப்பிடலியா மணி ரெண்டாகப் போகுதே 
என்று கடிந்தபடி அவளைக் கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் செல்லக் குடும்பம் பின் தொடர்ந்தது.

அப்போதுதான் கண் விழித்தவள் போல செண்பகா வந்தாள். குழந்தை மங்களா
தன் சகோதர்களைப் பார்த்துக் குதியாட்டம் போட்டது.
அடங்கி இருடி என்று விரட்டியவள், 
நீங்க எப்ப வரீங்கன்னு தெரியல.
நான் சாப்பிட்டுவிட்டேன். உங்க தம்பி சாயந்திரம் தான் வர முடியுமாம்.
அவசரப் பட்டு புது வீட்டுக்குப் போக வேணாம்னு சொன்னாரு.
இலை போடட்டுமான்னு திரும்பினாள்.
வாங்க என்று ஒரு வார்த்தை சொல்லாததைக் கவனித்த வாடாமல்லி,
செண்பகம், இந்தா உனக்கும், மங்களாவுக்கும்,
தாழம்பூ, மருக்கொழுந்து, மல்லி எல்லாம் நம் தோட்டத்திலிருந்து 
கொண்டு வந்திடருக்கிறோம். இந்தா, என்று ,பெரிய பெரிய மொந்தன் வாழைப்பழம், அறுவடை செய்த மணிலாக் கொட்டை என்று பைகளை வைத்தாள்.

எங்கக்கா இவ பூ வைக்கிறா. பள்ளிக்குப் பூ வைக்கக் கூடாது. தாழம்பூ
கை குத்துமே, பக்கத்து வீட்டம்மா இதெல்லாம் வச்சிக்கும் அவங்களுக்குக் கொடுக்கிறேன்
என்றபடி, தரையில் இலைகளை வைத்தாள். 
அம்மா உங்களுக்காகக் காத்திருந்தாங்க அவங்களைச் சாப்பிடச் சொல்லுங்க.
எனக்கு ரத்த அழுத்தம் இருக்காம். முன்ன மாதிரி ஒண்ணும் முடியல என்று கீழே உட்கார்ந்து கொண்டாள்.

அமைதியாகப் பார்த்த ஷண்முகம், குழந்தைகளைப் பின்புறம் அழைத்துச் சென்று கைகால் கழுவ வைத்து அழைத்து வந்தான்.
நீங்க சிரமப் படவேண்டாம் நாங்களே பார்த்துக்கறோம் என்று
அம்மாவுக்கு முதலில் சாதத்தை அளித்து,
சாப்பிடும்மா என்றான்.
அச்சத்துடன் அங்கு வைத்திருந்த சாப்பாட்டு பாத்திரங்களைப் பார்த்தார்
ஜானம்மா.
அம்மாவுக்குப் பத்திய சாப்பாடு, உங்களுக்கும் அதே செய்து விட்டேன்
என்றாள் சின்ன மருமகள்.
ரொம்ப நல்லா இருக்குமா என்று வாடாமல்லித் தானும் சாப்பிட்டுப் 
பிள்ளைகளையும் கவனித்தாள்.
மாமியாரின் தட்டில் சாதத்தைப் பிசிந்து குழம்பை விடும் போது 
அவள் கண்கள் கலங்கியது.

பையன் களும் அமைதியாகச் சாப்பிட்டு எழுந்தார்கள்.
 அனைவரும் இடத்தைச் சுத்தம் செய்யவும்,
சின்ன மகன் முத்துக் குமரன் வரவும் சரியாக இருந்தது.
அண்ணே, அண்ணி, சாப்பிட்டீங்களா வாங்க வாங்க 
இதோ வரவழியில் அல்வா பகோடா எல்லாம் வாங்கி வந்தேன், டேய் பசங்களா வாங்கடா சித்தப்பா கிட்ட என்று வாரி அணைத்துக் கொண்டான்.
என்ன படிக்கிறீங்க. 
இங்க பக்கத்திலியே நல்ல பள்ளி இருக்குது
மங்களா படிக்குது. அங்கேயே  நீங்களும் சேர்ந்துக்கலாம் டா
என்ற கணவனைச் சுட்டெரிப்பது போலப் பார்த்தாள் அவன் மனைவி.
ஏங்க அவங்க தாம்பரத்திலிருந்து தினமுமா இங்க வருவாங்க.
என்னமோ சொல்றீங்களே என்று கேலி காட்டினாள்.
ஷண்முகம் வாய் திறந்தான்.
தம்பி ,எனக்கு அடையாறு டிப்போவில் சூப்பர்வைசராகப் போட்டு இருக்காங்க.
பக்கத்திலியே சாஸ்திரி நகரில் வீடும் பார்த்துக் கொடுத்திருக்காங்க. 
 MIG  flats ல. சின்னதா இருந்தாலும் புதுசா இருக்கு. 
தன்னீர் பிரச்சினை எல்லாம் இல்லை, அங்கயே 
ஹிண்டு ஹை ஸ்கூலில் ,நண்பன் ஒருவன் தயவில் இடமும் கிடைத்துவிட்டது.
நான் பயந்தது போல நிறையக் கட்டணமும் இல்லை.

உன்னையும் அம்மாவையும் பார்த்துட்டு இன்னிக்கே அங்க போறோம்.
லாரியில் சாமான்கள்  வந்துவிட்டன. அவற்றை இறக்கிவிட்டு வரத்தாம் நேரமாகிவிட்டது.

நீ சிரமப் படாதேடா.
அடுத்த வாரம் வந்து அம்மாவையும் அழைத்துப் போகலாம்னு இருக்கேன்.
நீ என்ன சொல்லற.
அம்மாவுடன் இருந்து நாட்களாகி விட்டது.
வாடாமல்லியும் சேர்ந்து கொண்டாள். எப்பவும் அம்மா நினைப்புதான். சர்க்கரைக்கு மருந்து எடுத்துக் கிட்டாங்களா, சாப்பிட்டாங்களா என்று. சொல்லிக் கிட்டே இருப்பாங்க 
என்றாள்.
குமரன் அமைதியானான்.

பிள்ளைகளுக்கு ஏதாவது சினிமா போடு செண்பகா.
அப்படியே எனக்கும் சாதம் குழம்பு எடுத்துவை. 
இன்னிக்கு  வங்கியில் நேரமே கிடைக்கவில்லை என்று உள்ளே போனான்.
தட்டில் சாதமும் ,குழம்பு, பாவக்காய் கறியும், வேப்பம்பூ ரசமும் அவனை எதிர் நோக்கின.

இதுவா சமையல் என்று குரல் உயர்த்தினவனின் கண்களைச் சந்திக்கத் தயங்கினாள்
செண்பகம்.
அம்மாவுக்காக செய்தேங்க..
நீங்களும் வருவீங்கன்னு எதிர்பார்க்கல என்றாள். தயங்கியபடி.

அண்ணன் ,அண்ணி 2 வருஷம் கழிச்சி வராங்கன்னு நினைவிருக்கா உனக்கு
என்று அழுத்தமான குரலில் கேட்டான்.

குமரா என்று அண்ணன் விளிப்பது கேட்டதும் கசந்த உணவைச் சாப்பிட்டு முடித்தான்.

இதோ வரேன் அண்ணே  என்றபடி வெளியே வந்த
குமரன், அண்ணே நீங்க கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க,

நான் வெளிய போயி முக்கிய வேலையை முடிச்சுட்டு வரென்,
அம்மா நீங்களும் படுத்துக்கங்க மா.
என்றபடி அவசரமாய் வெளியேறினான்,

தம்பியின் போக்கு புரிபடாமல் அம்மாவோடு பேச உட்கார்ந்தான்
ஷண்முகம். 
நிமிடத்தில் புரிந்து கொண்டான் அம்மாவின் தள்ளாமையையும், சோகத்தையும்.
தந்தை இறந்த போது கூட இத்தனை தளர்வாக இல்லை அவள்.

கிராமத்தில் இருந்த போது ,வயல் வெளி, தன் தோழிகள், உறவுகளுடன்
வரவு செலவுக் கணக்கு எல்லாம் கவனித்துச் சுறு சுறுப்பாக இருந்தாள்.
சென்னை அவளுக்கு மாற்றம் கொடுக்கவில்லை. ஏமாற்றமே 

.. நல்ல முடிவுடன் அடுத்து சந்திக்கலாம்.

Tuesday, May 21, 2019

வேப்பம்பூ ரசம்.....கதை...1

வல்லிசிம்ஹன்

வேப்பம்பூ ரசம்.....கதை.

Vallisimhan
எல்லோரும்  இன்பமாக வாழ  என்  வாழ்த்துகள்.


ஜானம்மா   திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்திருந்தார்.
 காலையில் உள் சென்ற காப்பி செரித்துவிட்டு மறு பசி வந்துவிட்டது.

பாட்டீ.... வேப்பம்பூ ரசம் எப்படி வைக்கணும். அம்மா கேட்கிறாங்க
என்று கீச்சிட்டாள் பேத்தி குயிலி.

சிரமப்பட்டு கீழே இறங்கி உள்ளே சென்ற ஜானம்மா, மருமகளிடம் 
ரசம் வைக்கும் விதத்தைச் சொல்லிவிட்டு,
ஏம்மா கொஞ்சம் கஞ்சி கொடுக்கிறாயா தலை சுத்தற மாதிரி
இருக்கு என்று சொன்னதும் முகம் சுளுக்கினாள் மருமகள் செண்பகா.

ஏற்கனவே உங்க பெரிய மகனும் குடும்பமும் வராங்கன்னு
போன் வந்திருக்கு. இந்த ஊரோட வரப் போறாங்களாமே.

கண்டிப்பா சொல்லி வைங்க ஊருக்கு வெளிய தாம்பரம்
 பக்கத்துல வீடு பார்த்துக்கச் சொல்லி.
அடிக்கடி வரப் போக இருக்க வேண்டாம் என்று சிடுசிடுத்தாள்.

அப்படியா, எனக்குத் தெரியாதே எப்ப வராங்க என்றார்.
மதியம் சாப்பாட்டுக்கு வராங்க.
வேப்பம்பூ ரசம் வைக்கப் போறியா. கசப்பாயிடுமே தாயி என்று கெஞ்சினாள்
மாமியார்.
கசக்கட்டும். பாவக்காய் கறியும், வெறும் குழம்பும் இன்னிக்கு செய்தாச்சு.
அவங்களே புரிஞ்சுக்கட்டும் என்று சமையலறைக்குள்
புகுந்து கொண்ட மருமகளைத் திகைப்போடு பார்த்தார்.
தனக்குக் கஞ்சி கிடைக்காது என்று புரிந்து கொண்டு 
வாசல் திண்ணையில் படுத்துக் கொண்டார்.
பேத்தி மங்களா ,பாட்டியிடம் இரண்டு பிஸ்கட்டைக் கையில் வைத்து அழுத்தினாள்.
ரகசியக் குரலில் சாப்பிடு பாட்டி. மோர் கொண்டுவரேன் என்று ஓடிவிட்டாள்.

உள்ளே செண்பகா தன் தாயிடம் உரக்கப் பேசுவது கேட்டது. 
அந்த அம்மாவும்  இல்லாதப் பட்டவங்க கண்ணுல படாம முக்கியமான
பொருளை மறைச்சு வச்சிடு.
கெட்டும் பட்டணம் சேருன்னு வராங்க போல என்று மகளுக்குப்
புத்திமதி சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஜானம்மாவின் பெரிய மகன் கொஞ்சம் அப்பாவி. 
ஏதோ போக்குவரத்துக் கழகத்தில்  சிறிய வேலையில்
இருந்தான். அவனுக்கும் இரண்டு மகன்கள்  பத்து,எட்டு வயதில் இருந்தார்கள்.

மருமகள் வாடாமல்லி, ஜானம்மாவின் சொந்த ஊரான செய்யாறிலிருந்து வந்தவள்.
கிராமப் பழக்க வழக்கங்களோடு கட்டுப் பெட்டியாக இருப்பாள்.
அதுவே செண்பகத்துக்கு இளப்பமாகத் தெரியும்.
சென்னையில்  தண்டையார்பேட்டையில் வளர்ந்தவளுக்கு
பள்ளி இறுதி வரை படிக்க வாய்ப்பு கிடைத்தது.
கணவனுடன் பேசிப் பழகி ,தனக்குப் பிடித்த பொருட்களை
 வாங்கிச் சேமித்து வைத்திருந்தாள். மாமியாரை வீட்டுக்குக் காவல் வைத்துவிட்டு, சினிமா
,உறவினர் வீடு என்று சென்று வர ஒரு ஸ்கூட்டரும் 
வாங்க வைத்திருந்தாள்.
மருமகளின் சாமர்த்தியத்தை மெச்சினாலும்,
தன்னை ஒதுக்கி வைப்பதைப் புரிந்து பல நேரம் வருந்துவார் ஜானம்மா.

பெரியவனுக்கு வருமானம் போதாது. தான் அவனுக்குப் பாரமாக இருக்கக்
கூடாது என்றே சிறியவனுடன்  இருந்தார். தொடரும்.

Monday, May 20, 2019

நீண்ட பயணம்

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக   வாழ வேண்டும்.

உலக வாழ்க்கைப் பயணம் 
நீ ஒப்புக்கொண்ட பயணம் 
அது முடியும் பொது தொடரும் 
தொடரும்போது முடியும்.
இது ஒரு  அவசிய நாடகமே.

Wednesday, May 15, 2019

வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன்
எல்லோரும் இனிதாக  வாழ வேண்டும்.
 இந்த மாதம் கல்யாண  மாதம்

என் பெற்றோர்  திருமண நாள்
என் முரளியின் மே  14
என் தம்பி ரங்கனின், மே  31
என் நாத்தனார் கல்யாணி ஹேமா இவர்களின் திருமண நாட்கள் மே  23
 எல்லாவற்றையும்  கொண்டாடும் விதமாக
அவர்களுக்குப் பிடித்த பாடல்களை  பதிவிடுகிறேன்.

முரளி வசந்தி தம்பதியருக்கு


தம்பி ரங்கன் வைதேஹிக்கு


என்னால் அவர்களுக்குக்  கொடுக்க முடியும் வான் வழி பரிசு.

Sunday, May 12, 2019

அன்னையர் தின நல்வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன்

 அம்மா அப்பா....1988  பாகம் 4.

அம்மாவுக்கு சொல்ல முடியாத பிரச்சினை வந்த போது
அறுவை சிகித்சையால் குணப்படுத்தலாம்
என்று முடிவெடுத்தோம்.
ஸுலப அறுவை தான். மயக்கம்  தெளிந்த பிறகு வந்த
இருமல் தான் மிக்க வலி கொடுத்தது.
அப்பா அம்மா பக்கத்தை விட்டு நகரவே இல்லை.

இரவு படுத்திருந்து விட்டு,என்னை அம்மாவுக்குத் துணை வைத்துவிட்டு,
வீட்டுக்குப் போய்க்
குளித்து சாப்பிட்டு அம்மாவுக்கும் சாப்பாடு கொண்டு வருவார்.
ஒரு நாள் இரவு இருமல் அதிகமாகி நெஞ்சு பக்கமாக வலி.
நானும் ரங்கனும் மட்டும் இருந்தோம்.
அம்மா டாக்டரை அழைக்கச் சொன்னார்.
இது வெறும் இருமல் இல்லை. கொஞ்சம் சீரியஸ் தான்.
டாக்டர் அம்மாவைக் கூப்பிடு.
உடனே பார்க்காவிட்டால் தவறாகி விடும் என்று வற்புறுத்தினார்.
ஸ்டாஃப் நர்ஸிடம் சொல்லி
விழயத்தை விளக்கினேன் .
அவர் கொஞ்சம் அலுப்போடு டாக்டரை அழைக்கப் போனார்.
டாக்டர் வந்ததும் இசிஜி எடுக்கச் சொல்லி,
லேசான மார்படைப்பு
உடனே கவனிக்க வேண்டும்
என்று உடனே இஸபெல் ஹாஸ்பிட்டலில்
சேர்க்கும்படி தொலைபேசியில் ஆம்புலன்ஸ் வரவழைத்து
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த 4000 ரூபாய் ஊசி போடப்பட்டு
ஐசியுவில் அனுமதித்து விட்டார்.
 ஒரு மாறுதலுக்காக வீட்டுக்குப் போயிருந்த அப்பா,தம்பியுடன் வண்டியில் வந்துவிட்டார்.
48 மணி நேர கெடுவுக்குப் பிறகு அம்மா கண் திறந்தார்.
அந்த வருடம் அம்மாவுக்கு 60 வயது பூர்த்தியாகி
இருந்தது.
ஏப்ரில் 3 ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப் பட்ட அம்மா 4 வாரம் அங்கே சிகித்சை
எடுத்துக் கொண்டார்.
நடுவில் வந்த என் பிறந்த நாளையும் மறக்கவில்லை.
சைகையினால் என்னை உள்ளே அழைத்து
அப்பாவோடு போய் ரங்காச்சாரியில் நல்ல புடவை வாங்கிக் கொள்.
என்றதும் என்னால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

எப்பொழுதும் பெற்ற மக்களின் நினைவுதானா உங்கள் இருவருக்கும்./
நீ நலம் அடைந்த பிறகே புதிது உடுத்துவேன்
என்று உறுதியாகச் சொல்லி விட்டேன்.

அம்மாவும் நலம் பெற்றார்.
அப்பாவின் முகத்தில் தெளிவு பிறந்தது.
எங்கள் குடும்பம் முழுவதும் ஈ ப்ளாக்கில் 21 ஆம் நம்பர்
அறையில் இருப்பதும்
பக்கத்தில் இருந்த எங்கள் வீட்டுக்கு காப்பி,டிபன்
வகையறாவுக்கும் வருவதும்
ஓய்வு எடுப்பதுமாக கடத்தினோம்.
எங்கள் எல்லோருடன் இருந்ததாலோ என்னவோ அம்மா விரைவில் தேறி
சிங்கம் வண்டி ஓட்ட,தன் வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தார்.

எந்த வித சோதனையிலும் அம்மா அசந்து போனதே இல்லை.
மீண்டு விடலாம் என்ற நம்பிக்கையே அவருக்கு ஆதாரம்.

அனைவரிடமும் இந்த பாசிட்டிவ் எண்ணங்கள் பெருகவேண்டும்.
அம்மாவின் சார்பிலும் என் சார்பிலும்,என் மகள் சார்பிலும்

எல்லோருக்கும் அன்னையர்  தின நல்வாழ்த்துக்கள்.. 

Saturday, May 11, 2019

அம்மா 1970 ........3

வல்லிசிம்ஹன்
அம்மா  1970  ஏப்ரில்  மாதம்,
எனது  மூன்றாவது  கரு ஆறு மாதம் என்ற நிலையில் உடல்
முழுவதும் சிவப்பு சிவப்பாக  ராஷஸ் .
கோவைக்கு மாற்றலாகி வந்த புதிது.

இவருக்கு என் நிலைமை பயத்தைக் கொடுக்க அப்பா அம்மாவுக்கு தொலை பேசியில் விஷயத்தைச் சொல்லி விட்டார்.

காரைக்குடியில் இருந்தவர்கள் இரண்டு நாட்களில்  கோவை வந்து விட்டார்கள்.
மணல்வாரியாக இருக்கப் போகிறதே
என்று பயந்து விட்ட அம்மா,முதலில் வேண்டிக்கொண்டது ஷீர்டி பாபாவிடம் தான். யார் சொல்லி அதுபோல் செய்தாரோ தெரியாது.

வைத்தியரிடம் அழைத்துக் காட்டியபோது உப்பு,புலி,காரம் சேர்க்காமல் முயன்று நாட்கள் இருக்கச் சொன்னார்.
மணல்வாரியாக இருந்தால் குழந்தையைப் பாதித்து இருக்கும்.
நல்ல வேலை அது இல்லை என்றதும்  அம்மா என்னை படுக்கையில் இருக்க வைத்து, மற்ற இரண்டு குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு  சமையலும் செய்து
ஒரு வழியாக  அந்த ஒவ்வாமை மறைந்ததும்,
பக்கத்தில் இருந்த சாயிபாபா காலனி  அழைத்துச் சென்று உப்பும் மிளகும் என் கைகளில் கொடுத்து கோவில் பின்னால் இருந்த தொட்டியில்    போடச்  சொன்னார்.

அம்மாவுக்குத்

தெய்வத்திடம் இருந்த பரிபூரண நம்பிக்கை
எனக்குப் பின்னாட்களில் வந்த சோதனைகளை
சமாளிக்கத் துணை இருந்தது.

மூன்று மாதங்கள் கழித்து   பெரிய தம்பி வந்து என்னையும் குழந்தைகளையும்
அழைத்துச் சென்று காரைக்குடியில்  விட்டான்.
அப்போது அவனுக்கு இருபது,
எனக்கு 22.

ஆவணி மாதத்தில் சின்னவன் பிறக்கும் சமயம் பாட்டி வந்து சேர

ஒரு நல்ல பௌர்ணமி  நாளில் மூன்றாவது பையன்
ஜனனம்.

ஒரு குறையும் வைக்காமல்  என் உடம்பைத் தேற்றி,

என்னைப்  பார்க்க வந்த கணவருடன், சின்னக்குழந்தையையும் என்னையும் அனுப்பி வைத்து,
மற்ற இரண்டு குழந்தைகளைத் தானே
கவனித்துக் கொண்டார்கள்  அந்த  அருமைப்
பெற்றோர்கள்.
இத்தனைக்கும்  அப்பாவுக்கு  வயிற்றில் அல்சர் இருந்தது.
அவரையும் பத்திய சாப்பாடு கொடுத்துக் கவனித்துக் கொண்டு,
என் குழந்தைகளையும் ஆறு மாதங்கள்
கவனித்துக்  கொண்ட  பெருந்தன்மையை  என்ன சொல்வது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thursday, May 09, 2019

அன்னை. 1956

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்.
அன்னை. 1956

அம்மாவுக்குத் தாரக் நாத் என்கிற பெயர் மிகப் பிடிக்கும்.
திருமங்கலத்தில் இருக்கும் போது பக்கத்து வீட்டு வைகுந்தம்
மாமாவீட்டுக்கு வந்திருந்த இளம் தம்பதிகளுக்கு
ஒரு சின்னப் பாப்பா, ஒரு மூன்று மாதம் இருக்கலாம்.
அதன் பெயர் தாரக நாத்.

அம்மாவுக்கு அந்தக் குழந்தையிடம் அத்தனை பிரேமை.
நானும் சின்னத்தம்பி ரங்கனும் அம்மாவுடன் போவோம்.

ரங்கன்  அம்மாவுடன் எப்பவும் ஈஷிக் கொண்டே இருப்பான்.
எங்கள் இருவருக்கும் அம்மா அந்தக் குழந்தையை மடியில் வைத்துக்
கொண்டு கொஞ்சுவது பார்த்துக் கொஞ்சம்
பொறாமையாகக் கூட இருக்கும்.

அப்பா மற்றவர்கள் வீட்டுக்கு அவ்வளவாகப் போக மாட்டார்.
அம்மா அந்தக் குழந்தையைப் பற்றி அடிக்கடி
பேசுவதை வேடிக்கையாகப் பார்ப்பார்.

அந்த வார சனிஞாயிறுகளில் ராமு மாமா வந்திருந்தார்.
அவர்களுக்கெல்லாம் அக்காவிடம் பேசுவது, ஒரு கவுன்சிலிங்க் போய் வந்த
தெம்பு கொடுத்தது என்று இப்போது புரிகிறது.

ராமசாமி ,பக்கத்து அகத்தில் ஒரு  அழகான பாப்பா வந்திருக்கிறது.
அவர்கள் இன்று ஊருக்குக் கிளம்புகிறார்கள்.
வாயேன் போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்ற
அக்காவை வினோதமாகப் பார்த்தார் மாமா.
//பாப்பா நீ வெளியில் வந்தே நான் பார்த்ததில்லையே.
நீ கூட படி தாண்டுவியா என்று புன்னகையோடு
கேட்டார். சரிதான் வா என்னுடன் என்று அழைத்துப் போனார்.

அவர்கள் போய் அரைமணி நேரம் கழித்து அப்பாவும்
ஆபீஸிலிருந்து வந்து விட்டார்.
காப்பியை எதிர்பார்த்து வந்தவருக்கு  அம்மா இல்லாததே
ஒரு அதிசயம். பக்கத்து வீட்டுக்குப் போயிருக்கார்ப்பா என்றதும்,
கழற்றின சட்டையைப் போட்டுக்கொண்டு மீண்டும் படியிறங்கி பக்கத்து வீட்டுக்குப்
போனார்.
நான் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த நாகம்மாவிடம்
அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன்.
வாசல் கதவு திறக்கும் ஓசை கேட்டு ஓடினேன்.
எனக்கு மாமாவுடன் சினிமா போக ஆசை.
மின்னல் வீரன் என்ற படம் வந்திருந்தது. ZORRO வின் தமிழ்ப்
பதிப்பு.

மூவர் முகத்தையும் பார்த்தால் எனக்கு அதைக் கேட்கத் தோன்றவில்லை.
மாமா எங்கள் மூவரையும் வெளியே அழைத்துப் போய் மீனாக்ஷி பவனில்
மசாலா தோசை, வாங்கிக் கொடுத்து சாப்பிடச் சொன்னார்.
கூடவே கை நிறையக் காராசேவ் எல்லோருக்கும் வாங்கிக் கொண்டார்.

ஏன் மாமா அம்மாவும் அப்பாவும் என்னவோ மாதிரி இருந்தார்கள்
அந்தப் பாப்பா ஊருக்குப் போறது எனக்குக் கூட வருத்தம்தான் என்று நானும் சொல்லிக் கொண்டேன்.
அது இல்லமா. அம்மாவுக்கு நீ பிறப்பத்ற்கு முன்னால்
ரங்கராஜன் என்று ஒரு குழந்தை, தங்கக் கட்டி மாதிரி பிறந்து பத்து மாதம் இருந்து
பெருமாளிடம் போய்விட்டது.
அம்மா வெளிலே சொல்லிக்க மாட்டா.
இந்தத் தாரக் நாத் கிட்டத்தட்ட அதே போல இருக்கு மா.
நீண்ட ஆயுசுடன் நன்றாக இருக்கணும். என்று பெருமூச்சுடன் சொன்னார்.

அன்று நாங்கள் அனைவருமே மௌனமாக இருந்தோம்.
சாப்பிட்ட பிறகு அம்மா வழக்கமான கலகலப்புடன்
விசாகப்பட்டணம் பயணம் பற்றிப் பேச ஆரம்பித்தார்.
அப்பாவும் சேர்ந்து கொள்ள

கேட்டபடியே அம்மாவின் மடியில் ரங்கன் தூங்கி விட்டான்.
பொறுமையின்  மறு உருவம் என் அன்பு அம்மா.

Friday, May 03, 2019

சித்திரை ,வைகாசி,ஆனி திருமண மாதங்கள்

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  இனிதாக வாழ வேண்டும்.

மே  இரண்டு அன்பு அம்பி மாமாவும் ஜெயா மன்னியும் இணைந்த நாள்.
அதற்காக  நாங்கள் ஒரு பட்டாளமே சென்னையிலிருந்து கிளம்பி ஆந்திராவின் குண்டூருக்குப் போனோம் இது 1957 இல்.
 மன்னியின்  அப்பா மிகப் பெருந்தன்மையான மனிதர்.
சுற்றம் சூழ வந்திருந்து வாழ்த்தி அருள வேண்டுகிறேன் என்றதும்.
சினிம்மாப்  பாட்டியின் பிறந்தக மனிதர்கள், , என் வயதொத்த நண்டு சிண்டுகள்.
கோடியகத்து நரசிம்மாச்சாரி தான் வரவில்லை.

முதல் முறையாக அகலப் பாதையில் செல்லும்
ரயிலைப் பார்த்தோம்.
எங்களுக்கு ஓடி விளையாட எதுவாக  நிறைய இடம். ஜன்னலோர நீண்ட இருக்கைகள்.

அந்த ஐந்து  மணி  நேர பயணத்தில்  வெய்யிலிலும்
சுகம் காணும் வயது.
அது ஒரு  மதிய  நேர பயணம்.

மாலை வரும்போது குண்டூரில்  வரவேற்க  ஜெயா மன்னியி ன் அப்பா வந்திருந்தார்.
  அம்பி மாமாவின் மாப்பிள்ளைத் தோழன் க்ளாக்ஸோ  கிட்டு, குண்டூர் வந்தாச்சுடா மாப்பிள்ளே பாடியது நினைவில் இருக்கிறது.

ஆழ்வார் மாமா அனைவருக்கும் இளநீர் வாங்கி கொடுத்ததும் நினைவில் நிழலாடுகிறது.

நானும் தோழி ஆண்டாளும்  அந்த மஹா பெரிய பந்தலை வல ம் வந்து அதிசயித்தோம்.
 அம்பி யும் மன்னியும் அழகுப் பொருத்தத்தில் ஜொலித்தார்கள்.

திருமண நாள் வேகமாக ஓடிவிட்டது.
அடுத்த நாள் எங்களுக்கெல்லாம் பஸ்ஸில் சுற்றுலா. சுற்றி இருக்கும் கோவில்கள் சென்று வந்தோம். மறக்க முடியாதது பானக நரசிம்மர்.மங்களகிரி மலை மேல் உத்ஸாக ஏறி.,
ஈ மொய்க்காத   அண்டா நிறைய இருந்த    பானகத்தை பார்த்து  அதிசயப்  பட்டு  அந்தக் குகையின் பின்புறம் ஏதாவது  வழி இருக்கிறதா, நரசிம்மர் வாய் வழியே   சென்ற பானகம் என்ன ஆச்சு என்று  விசாரம். பாட்டி அதட்டவே ஓடுவதை நிறுத்தினோம்.😃😃😃😃?😃😃

அடுத்து  வந்தது 21 வருடங்கள் கழித்து தம்பி முரளி வசந்தி திருமணம். மே 14.
  பிறகு 17 ஆம் தேதி வரும்  பெற்றோர் திருமண நாள்.

இவர்கள் திருமணத்துக்கு நான் செல்லவில்லை.

நம் கீதா சாம்பசிவத்துக்கும்   அதுதான் திருமண நாள் 

அப்புறம் வருவது  சின்னத்தம்பியின் மண  நாள். மே  31.
அனைவரும் நலமே வாழ இறைவன் திருவருள் நிறையட்டும்.