Blog Archive

Sunday, May 12, 2019

அன்னையர் தின நல்வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன்

 அம்மா அப்பா....1988  பாகம் 4.

அம்மாவுக்கு சொல்ல முடியாத பிரச்சினை வந்த போது
அறுவை சிகித்சையால் குணப்படுத்தலாம்
என்று முடிவெடுத்தோம்.
ஸுலப அறுவை தான். மயக்கம்  தெளிந்த பிறகு வந்த
இருமல் தான் மிக்க வலி கொடுத்தது.
அப்பா அம்மா பக்கத்தை விட்டு நகரவே இல்லை.

இரவு படுத்திருந்து விட்டு,என்னை அம்மாவுக்குத் துணை வைத்துவிட்டு,
வீட்டுக்குப் போய்க்
குளித்து சாப்பிட்டு அம்மாவுக்கும் சாப்பாடு கொண்டு வருவார்.
ஒரு நாள் இரவு இருமல் அதிகமாகி நெஞ்சு பக்கமாக வலி.
நானும் ரங்கனும் மட்டும் இருந்தோம்.
அம்மா டாக்டரை அழைக்கச் சொன்னார்.
இது வெறும் இருமல் இல்லை. கொஞ்சம் சீரியஸ் தான்.
டாக்டர் அம்மாவைக் கூப்பிடு.
உடனே பார்க்காவிட்டால் தவறாகி விடும் என்று வற்புறுத்தினார்.
ஸ்டாஃப் நர்ஸிடம் சொல்லி
விழயத்தை விளக்கினேன் .
அவர் கொஞ்சம் அலுப்போடு டாக்டரை அழைக்கப் போனார்.
டாக்டர் வந்ததும் இசிஜி எடுக்கச் சொல்லி,
லேசான மார்படைப்பு
உடனே கவனிக்க வேண்டும்
என்று உடனே இஸபெல் ஹாஸ்பிட்டலில்
சேர்க்கும்படி தொலைபேசியில் ஆம்புலன்ஸ் வரவழைத்து
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த 4000 ரூபாய் ஊசி போடப்பட்டு
ஐசியுவில் அனுமதித்து விட்டார்.
 ஒரு மாறுதலுக்காக வீட்டுக்குப் போயிருந்த அப்பா,தம்பியுடன் வண்டியில் வந்துவிட்டார்.
48 மணி நேர கெடுவுக்குப் பிறகு அம்மா கண் திறந்தார்.
அந்த வருடம் அம்மாவுக்கு 60 வயது பூர்த்தியாகி
இருந்தது.
ஏப்ரில் 3 ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப் பட்ட அம்மா 4 வாரம் அங்கே சிகித்சை
எடுத்துக் கொண்டார்.
நடுவில் வந்த என் பிறந்த நாளையும் மறக்கவில்லை.
சைகையினால் என்னை உள்ளே அழைத்து
அப்பாவோடு போய் ரங்காச்சாரியில் நல்ல புடவை வாங்கிக் கொள்.
என்றதும் என்னால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

எப்பொழுதும் பெற்ற மக்களின் நினைவுதானா உங்கள் இருவருக்கும்./
நீ நலம் அடைந்த பிறகே புதிது உடுத்துவேன்
என்று உறுதியாகச் சொல்லி விட்டேன்.

அம்மாவும் நலம் பெற்றார்.
அப்பாவின் முகத்தில் தெளிவு பிறந்தது.
எங்கள் குடும்பம் முழுவதும் ஈ ப்ளாக்கில் 21 ஆம் நம்பர்
அறையில் இருப்பதும்
பக்கத்தில் இருந்த எங்கள் வீட்டுக்கு காப்பி,டிபன்
வகையறாவுக்கும் வருவதும்
ஓய்வு எடுப்பதுமாக கடத்தினோம்.
எங்கள் எல்லோருடன் இருந்ததாலோ என்னவோ அம்மா விரைவில் தேறி
சிங்கம் வண்டி ஓட்ட,தன் வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தார்.

எந்த வித சோதனையிலும் அம்மா அசந்து போனதே இல்லை.
மீண்டு விடலாம் என்ற நம்பிக்கையே அவருக்கு ஆதாரம்.

அனைவரிடமும் இந்த பாசிட்டிவ் எண்ணங்கள் பெருகவேண்டும்.
அம்மாவின் சார்பிலும் என் சார்பிலும்,என் மகள் சார்பிலும்

எல்லோருக்கும் அன்னையர்  தின நல்வாழ்த்துக்கள்.. 

12 comments:

ஸ்ரீராம். said...

மனதைரியம் இழக்காமலிருப்பதே இதுபோன்ற தருணங்களில் சிறப்பு. அம்மாவின் தைரியம் நமக்கும் வர அம்மா அருளட்டும்.

ஸ்ரீராம். said...

என் அம்மா தனது கடைசிக்கு காலங்களில் எங்களை யாரென்று அடையாளம் காண முடியாத நிலையிலேயே இருந்து மறைந்தாள். எங்களை யாரென்று அடையாளம் காணுவது இருக்கட்டும்... தன்னையே யாரென்று அறியாமல்தான் இரு(ற)ந்தாள். இந்த வரிகளை தட்டச்சு செய்ய முடியவில்லை. வேண்டாம் என்று நினைத்தாலும் இங்கே குறிப்பிட்டு விட்டேன். என் மனதில் ஆறாத வருத்தம் அது.

Geetha Sambasivam said...

அன்னையர் தின வாழ்த்துகள். உங்களுக்கும், உங்கள் மகளுக்கும் இங்கே வரப்போகும் வந்திருக்கும் அனைத்து மகளிருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

//எந்த வித சோதனையிலும் அம்மா அசந்து போனதே இல்லை.
மீண்டு விடலாம் என்ற நம்பிக்கையே அவருக்கு ஆதாரம்.//

ஆமாம், மனவலிமை அதிகம் அந்தக்கால அன்னையருக்கு.

அன்னையர் தின வாழ்த்துக்கள் அக்கா.

Thulasidharan V Thillaiakathu said...

பதிவு வாசித்துவிட்டு வருகிறேம் அம்மா...முந்தைய பதிவுகளை வாசித்துவிட்டேன்

கீதா

கரந்தை ஜெயக்குமார் said...

அன்யைர் தின நல் வாழ்த்துகள் சகோதரியாரே

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்.
இந்த விஷயம் எனக்குத் தெரியாதே.
அல்சைமர் அனியாய வியாதி.
எனக்குத் தெரிந்து எத்தனை வயோதிகர்களைப் பாதித்திருக்கு.

அதெல்லாம் கொடுமை.அப்பா கொடுக்கவில்லை. கடைசி 10 நாட்கள்
அம்மாவுக்குச் சிறிதே
நினைவு தவறியது
அதுவும் சின்னத்தம்பி மறைவினால் வந்ததுதான். இல்லாவிட்டால்
அசந்து போகும் மனுஷி இல்லை அவள்.
தைரியமாக இருங்கள் ஸ்ரீராம். சுஜாவுக்கும் மற்ற எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா. எல்லா நாட்களும் அன்னையர் தினம் தான்.
எல்லோருக்கும் நன்மையே விளைய வேண்டும்.
நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம் உங்கள் வரிகள் கண்ணை நிறைத்துவிட்டது. அல்சிமர் யாருக்கும் வரக் கூடாது...

என் பாட்டியின் நினைவுகள்...அவரும் அப்படித்தான் கடைசி சில மாதங்கள்...என் மாமனாரின் நினைவுகள்.

எல்லோருக்கும் வல்லிம்மா சொல்லுவது போல் பாசிட்டிவ் எண்ணங்கள் வளர வேண்டும்.

ஆமாம் வல்லிம்மா எல்லா தினமுமே அன்னையர் தினம் தான். உங்கள் மகளுக்கும் வாழ்த்துகள்!

கீதா

மாதேவி said...

அம்மாவின் மனஉறுதி அசரவைக்கிறது.
அனைவருக்கும் அன்னையர்தின வாழ்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

என்றும் அன்னையர் தின வாழ்த்துகள்...

கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன் said...

அன்னையர் தினம் மட்டு அன்னையை போற்றி விட்டு மற்ற நாட்களில் அன்னை என்ற மதிப்பே வைக்காமல் ஏராளம்பேர் இருக்கிறார்கள்...

நமக்கு என்றுமே அன்னையர் தினம் தானே...!
தாமதமான வாழ்த்துகளுடன் நான் பூந்தோட்ட கவிதைக்காரன்.