Blog Archive

Friday, June 29, 2007

194,காரக்குழம்பு.. எங்க ஊர் வகை அம்மா வழிப்பாட்டி மகா ஆச்சாரம்.பூண்டு,வெங்காயம் பக்கம் போக மாட்டார்.

அப்பா வழிப்பாட்டி என்னை மாதிரி மாடர்ன்.:)))
ச்சின்ன வெங்காயம்,முருங்கை எல்லாம் கீரையோட சேர்த்து மண்சட்டியில் சமைப்பார். வாசனை ஊரைத்தூக்கும்.

அவங்க செய்யற இந்தக் காரக்குழம்பு, கெட்டியாக, நான்குநாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

படித்து சமைச்சுப் பாருங்க. நல்லா இருந்தா சரி. இல்லாட்ட இப்பப் பாட்டிகிட்ட கேக்க முடியாது.


செய்வதற்குத் தேவையான உணவுப் பொருட்கள்,
சின்ன வெங்காயம், ........2 கால்கிலோ பாக்கெட்
கொஞ்சம் பூண்டு,.......... 25 பல்லு
மிளகு........100கிராம்
புளி...........பெரிய எலுமிச்சம் அளவு
தனியா.......100கிராம்
மிளகாய் வற்றல்...100 கிராம்
தேவையான அளவு உப்பு.
இந்தக் குழம்பில் போடக்கூடிய தான்,அதாவது காய்கறிகள்...
முருங்கைக்காய்,.
கத்திரிக்காய்,
அவரைக்காய்,
சௌ சௌ,
கொத்தவரங்காய்,
உருளைக்கிழங்கு.
1,
புளியை முதலில் ஊற வைக்கவேண்டும்,
2 ,வாணலியில் இரண்டு ஸ்பூன் சமையல் எண்ணை விட்டு
3..தனியா,மிளகாய்வற்றல்,மிளகு,10பூண்டு,சின்னவெங்காயம் கால்கிலோ (பொடியாக நறுக்கினது)எல்லாவற்றையும் வறுத்து மையாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
4,நறுக்கின காய்கறிகளையும் வதக்கிக் கொண்டு,
புளியைக்கரைத்தத் தண்ணீரை மஞ்சள்பொடி உப்பு போட்டு
கொதிக்க வைக்க வேண்டும்.
புளிவாசனை போனதும் , காய்கறிகள் வெந்த பிறகு இறக்கிவைத்துவிட்டு,
கொஞ்சம் தாரளமாக எண்ணைவிட்டுக் கடுகும் சீரகமும் சின்னவெங்காயம்,மிச்சமான பூண்டு இவற்றை வதக்கிச் சேர்க்க வேண்டும்.
இதுவும் கொதித்தவரும் போது அரைத்தகலவையைப் போட்டுக்
கொதிக்க விடவேண்டும்.
குழம்பு ரெடி.
எண்ணைத் தனியாகத் தெரிய வேண்டும்.அதுதான் இந்தக்குழம்பின்
இலக்கணம்.:))))
கருவேப்பிலை,பெருங்காயத் தண்ணீர் விட்டு இறக்க வேண்டியதுதான்.
பி.கு.
செல்வநாயகி சுட்டிக் காடியதால் தான் காய்கறிகளைச் சேர்த்தேன்.
இல்லாவிட்டால் அவை வாடிப் போயிருக்கும்:))))
நன்றிப்பா.


Tuesday, June 26, 2007

193,அப்பா என்ற ஒரு மனிதர்

இந்தப் பதிவுக்கு ஒரு முன்னோடி இங்கே..

http://kurungudi-valli.blogspot.com/2006/05/appa30th-may-1921-3rd-february-1996.html
இந்த மாதம் முடிவதற்குள் மூன்று அப்பா பதிவுகள் பார்த்தாச்சு


அந்த வகையில் பார்த்தால் அப்பாக்களுக்குத் தனியிடம்.


அதென்னவோ பெண்கள் ஒடுவது தந்தையிடம் தான


ப்ஃப்ராய்டு தியரிக்கு எல்லாம் அப்பாற்பட்டது இமுதலில் இந்தத் தியரியில் எனக்கு நம்பிக்கையும் இல்லை


அம்மா கண்டிப்பு,அப்பா பாசம் இரண்டுமே இல்லை என்றால் நாமெல்லாம் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது.

எங்க அப்பா ரொம்பச் சாதாரண மிடில் க்ளாஸ் தந்தை.

தனக்குக் கிடைக்காத எல்லா சௌகரியங்களும் தன் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டி சகல முயற்சிகளையும் மேற்கொண்டவர்.

திருக்குறுங்குடி ஸ்ரீனிவாச நாராயணன்...பேருக்கேற்ற நெடிய உருவம். சாத்வீகமான கண்கள்


சிரித்த முகம்.நல்ல உழைப்பாளி. காணி சோம்பல் கோடி நஷ்டம் என்ற கொள்கைப்படிவளர்ந்தவர். அப்பாவின் அப்பா ,அம்மா இருவருமே உறவினர்கள்.

தாத்தா சிறுவயதில் பெற்றோரை இழந்து சிற்றன்னையின் அரவணைப்பில் வளர்ந்தவர்.


அவருக்குச் சிற்றன்னையின் குழந்தைகள் மூத்த அண்ணா என்பதைக் குறிக்கும் முத்தண்ணா என்றே பெயர் நிலைத்தது.

அந்த முறையில் பிற்காலங்களில் தங்கை மிகப் பெரிய தொழிலதிபரின் மனைவியாகி இருந்தாலும் மேற்கொண்டு தனக்கு ஆதாயம் தேடிக்கொள்ளாத மகா அறிவாளி.கண்டிப்புப் பேர்வழி. நேர்மைவழியிலிருந்து சிறிதும்


மாறாத குணம்படைத்தவர்.

தோட்டியிலிருந்து தொண்டமான் வரைனு ஒரு பழமொழி பாட்டி சொல்லுவார்.


அத்தனை பேரும் சினேகிதர்கள். தாத்தா ஸ்ரீவைகுண்டம் தபால் அலுவலக மேலாளர். அங்கேதான் அப்பாவும்,அவரின் மூத்த சகோதரிகளும் தம்பிகளும் வளர்ந்தார்கள்.படித்தார்கள்.

அந்த காலத்திலேயே மேல்சாதி,மற்ற சாதி என்ற வேறுபாடுகள் கிடையாது

தாத்தாவுக்கு. பிற மதத்தவருக்கும் வீட்டில் சாப்பாடு உண்டு.மாட்டுவண்டியில் வந்துபோகும் பக்கத்து ஊர் தபால் ஊழியர்கள் எல்லோருக்கும் வீட்டில் இருப்பது பகிர்ந்து கொடுப்பார் பாட்டி, என்று என் தந்தை சொல்லுவார்.


ஐந்து குழந்தைகள் படிக்க வைக்க முடியும் என்ற நிலையில் தாத்தாவின்


பணநிலைமை இருந்திருக்காது.


அத்தைகளுக்குக் கல்யாணம் ஆன கையோடு பிள்ளைகளைப் பாளயங்கோட்டையில் படிக்க வைத்துத் திருநெல்வேலிக்கு வந்து

வண்ணாரப்பேட்டையில் முதலியார் ஸ்டோர்ஸ் என்ற வரிசைவீடுகளில் ஒன்றில் புதுக் குடித்தனம் ஆரம்பித்தார்களாம்.


கல்லூரிப் படிப்பு தொடர்ந்தது.

முதலில் படித்து முடித்தகையோடு அப்பாவுக்கு டி.வி.எஸில் வேலை, கிடைத்து

ஸ்ரீகாகுளம் என்ற இடத்துக்குப் போகச் சொன்னதும்,

தாத்தா மறுத்துவிட்டாராம்.

தனக்கு அறுபது முடியும் வேளையில் பையனை அத்தனை தொலைவு அனுப்ப மனமில்லை.அப்பாவும் மறுபேச்சுப் பேசவில்லை.தாத்தா சொல்படி தபால் அலுவலகத்தில் ஒரு குமாஸ்தாவாக


வேலைக்கு 40 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்துவிட்டார்.1941 என்று நினைக்கிறேன். அடுத்த வருடம் வெள்ளயனே வெளியேறு போராட்டத்துக்குப் போஸ்டர் ஒட்டியதாகவும் (சுவற்றில் எழுதி இருக்கலாம்) ஒரே ஒரு நாள் ஜெயில் வரை போய் வந்ததையும் சிரித்துக் கொண்டே சொல்லுவார்.அதற்குமேலாக ஏதும் செய்ய தாத்தாவின் அனுமதி இருந்திருக்காது.20 வயதில் வேலைக்குச் சேர்ந்தவர் 1978 டிசம்பர் வரை அலுப்புத் தட்டாமல்வேலைசெய்தார்.அப்பாவைப் பற்றி எழுதி இருக்கிறேன் என் இன்னோரு பதிவில். அது பதிவு செய்வதற்காக எழுதப்பட்ட எழுத்து. ஒரு பின்னூட்டமும் இருக்காது. ப்ளாக்தேசம் பக்கம் போகிறவர்கள்குறைவு என்று நினைக்கிறேன்.இப்பவும் ரவிகண்ணபிரான் தான் காரணம் இந்தப் பதிவுக்கு. நாங்கள் மூவர் பிறந்தோம் அம்மாஅப்பா குழந்தைகளாக. எனக்கு மூத்த குழந்தை ரங்கராஜன் என்ற பேரோடு 10 மாதங்கள் மட்டுமே பூமியை ஸ்பரிசித்துவிட்டுப் போனது.அந்தக் குழந்தையைப் பற்றி இருவரும் என்ன கனவு கண்டார்களோஇவ்வளவு பாசம் அப்பா மேல் நாங்கள் வைக்கக் காரணம் அம்மாவின் இம்மிகூடப் பிசகாத விஸ்வாசம்தான். ஒருவருக்கொருவர் இவ்வளவு புரிதலோடு இருந்த தம்பதிகளை நான் பார்த்ததில்லை. நான் பெரிசு நீ பெரிசு ஈகொவே கிடையாது.சில நாட்கள் முன்னால் சிகாகோவில் பெண்ணின் வீட்டுக்கு வந்திருந்த ஒரு முதியவர்,பேச்சுவாக்கில் தபால் துறையின் பொன்னான நாட்களில் எங்கள் நாட்கள் ஓடின. இப்போது அந்த மதிப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை உன்னைப் பபர்த்தால் என் பழைய நண்பர் நினைவுக்கு வருகிறார் என்று விசாரித்து இருக்கிறார். எங்க தாத்தாவும் போஸ்ட்மாஸ்டர்தான் என்று சொல்லவும்.,"நாராயணன் சார் பேத்தியா நீ.அவரை மாதிரி உண்டா.எங்களுக்கெல்லாம் நம் நாட்டுக் கொடிமேல் பற்று வர அவர்தான் காரணம்.சுதந்திர,குடியரசு தினங்களில் கொடி ஏற்றிப் பாட்டு பாடி, பேசவும் செய்து உற்சாகம் கொடுப்பார்.E.D. Packers(கடைநிலை ஊழியர்கள்)அத்தனை பேருக்கும் ஊக்கம் கொடுத்து தேர்வு எழுதி முன்னுக்குவரச் செய்தார்."நல்ல மனுஷர்மா..என்று பெருமையோடு சொல்லவும் மகள் எனக்கு உடனே தொலைபேசிவிட்டாள்.அநேகமாக குழந்தைகளுக்குத் தாத்தாவின் அருமை தெரியும் என்றாலும் அவருடைய தொழிலின் மீது அவருக்கு இருந்த பக்தி,கோட்பாடுகள் எல்லாமே நேர்மை வழியில் ஏற்பட்டவை.

எங்களுக்கும் ஏதாவது கொஞ்சமாவது நல்ல குணங்கள் வந்தன என்றால் அது அப்பா நடந்து கொள்வதைப் பார்த்துத் தான்.

அனாவசியமாக யாரைப் பற்றியும் வார்த்தைகள் விட மாட்டார். "words have a way of returning to you sometimes in your life. so be very careful

when you think of talking."

இதுதான் அவர் எப்பவும் சொல்வது.

அப்பாவின் கடவுள்பக்தி அளவிடமுடியாதது. ஸ்ரீராமன் பாதம் திண் சரணாகக்கொண்டவர். தன் தந்தை சொன்ன ஒரு வார்த்தையைக் கூட விடாமல் ,மறக்காமல் நிறைவேற்றியவர்.

சில காலம் எங்கள் வாழ்க்கையில் சில பல தொந்தரவுகள் வரும்போது அசராமல் உதவி செய்வார். நான் வருத்தப் படக்கூடாது என்று

ஒரு கை தருவது இன்னோரு கைக்குத் தெரியாமல் உதவுவார்.

பிள்ளைகள் படிப்புக்காக மட்டுமே பாங்கில் கடன் வாங்கி அடைத்தவர்.

மற்றபடி கடன் என்ற வார்த்தைக்கே இடம் கொடுக்காதவர்.

என் சம்பளத்தைவிட என் பென்ஷன் அதிகம் அம்மா என்று சிரிப்பார்.

ராமேஸ்வரம் புயல் அடித்த 1967ஆம் வருடம் அங்கே வந்த அத்தனை தந்திகளையும் ,அந்தக் கடுங்காற்றில் கைவிட்டுப் பறக்கும் குடை சகிதம் தன் மகனுடைய உதவியோடு கொண்டு போய்க் கொடுத்து எல்லாருடைய நன் மதிப்பையும் பெற்றவர்.

அவர் மேற்பார்வையில் இருக்கும் அலுவலகத்தில் தூசி தும்பு பார்க்கமுடியாது. அழகப்பாநகர் ,காரைக்குடியில் அந்தத் தபால் அலுவலகத்துக்குப் பரிசு கிடைத்தது.இப்படி எத்தனையொ.

ரிடையர் ஆகி வீடு கட்டி வத பிறகு அப்பா சும்மா இருந்தநாட்களே கிடையாது. கொலு பொம்மைகள் செய்வார். காஸ் அடுப்பைப் பழுது பார்த்து வண்ணம் அடிப்பார். வரைவதிலும் ,கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதிலும்....எங்களுக்காகச் செய்வார்.

அவரைப் பற்றி ச் சொல்ல ஒரு பதிவு போதாது.

இருந்தாலும் எனக்கு அவரிடம் ஒரே ஒரு குறை உண்டு.என் மகள் திருமணத்திற்கு பார்த்த சத்திரத்திற்கு வார் அறுந்த செருப்போடு வந்து பணம் கட்டியவர்

அடுத்த நாள் உடல்நலம் சீரில்லாமல் போய் அதற்கு அடுத்த நாள் மறைந்தார்.அவருக்குப் பிடித்த பெருமாள் பாதங்களைத் தேடிப் போயிருப்பார். இது கூட எனக்குத் தொந்தரவாகச் செய்யவில்லை. திருமணம் நல்ல படியாகத்தான் நடந்தது. எல்லாம் அப்பா சொல்படி இறைவன் சித்தம்.

இந்த நீண்ட பதிவைப் படித்தவர்களுக்கு என் நன்றி.


பாப்பா கவலை பாப்பாவுக்குத் தான் தெரியும்

பாப்பா பாப்பா அழுதியா
ஏன்னு ஏன்னு சொல்லுவியா.
அம்மா மம்மம் கொடுக்கணுமா
பாட்டி கொடுத்தா பரவாயில்லையா

பாலுக்கு அழுதியோ பழத்துக்கு அழுதியொ....

பாப்பா சொல்லும் பதில்

பல்லு வரலியே கடிக்கறது எப்போ
நிக்க முடியலியே, எட்டி எடுத்துக்
கவுக்கறது எப்பொ
இந்தக் கவலை பத்தாதுனு
குக்கர் சத்தம் படுத்தது.
மிக்ஸி ரொம்ப அலறுது.

சத்தமில்லாமப் பழகிட்டேன்
சென்னை சத்தம்னு சொன்னா
பாப்பா என்ன செய்வேன்.
தூங்கப்போகயிலே கீரக்காரன் கத்துவான்
சாப்பிடயிலே பாத்திரக்காரன் கூவுவான்

அதுவும் இல்லன்னால் பக்கெட்டும் பாத்திரமும்
மினிம்மா கையில சண்டைபோடும்.
சுத்தம் சத்தம் பாக்கும் அம்மாவே
சத்தமே போடாத அப்பாவே
எதுக்குப்பா வந்தோம்
ஸ்விஸூக்கு.

சென்னைச் சத்தம் வேணும் மத்தச்
சின்னவங்க சத்தம் வேணும்
அழுற குழந்தயும்
கத்துற நாயும்
சுத்துற ப்ஃபானும்
பாக்கணும்,..

Monday, June 25, 2007

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி......3

முன் குறிப்பு...இந்தக் கதைக்கு ஆரம்பம் இரண்டு பகுதிகளாப் போட்டாச்சு. ரீட்டானு போடறது பக்கத்தில இருக்கிற குரங்கு அம்மா பேரு.
இப்ப என்ன செய்யறது. ரீட்டாவுக்கும்
எனக்கும் ரிலீஃப் வேணும்.
சாயங்கால சாப்பாடு செய்யணும்.சிங்கமும் வீட்டுக்கு வரரது. பக்கத்து ஸ்கூட்டர் ரிப்பேர் கடை கூடச் சாத்தியாச்சு.யாரை உதவிக்குக் கூப்பிடறது... என்று யோசித்தபடியே இருந்தபோதுதான் அந்தக் கதவு கண்ணில் பட்டது. வந்த ஒரு மாதமாத் திறந்து கூடப் பார்க்கவில்லை.
அந்தக் கதவுக்கு அந்தப் பக்கம் வீட்டுச் சொந்தக்காரர்களோட இடம் என்று தெரியும்.
சொந்தக்காரர்கள் சிங்கப்பூரிலோ மலேஷியாவிலோ இருந்தார்கள்.
எப்படியாவது கீழே போய்த் திருமேனியை அழைத்து இந்த ரீட்டாவைப் பிடித்துக் கட்ட வேண்டும்.
கதவு பூட்டாமல்தான் இருந்தது.தாழ்ப்பாள் விலக்கியதும் இருளோ இருள்.
டார்ச்சை எடுத்துக் கொண்டு கிழவியையும் ,திருமேனியையும் அழைத்தபடிக்
கீழே இறங்கினேன்.
பூட்டின வீட்டுக்குள் அவர்கள் எப்படி வருவார்கள் என்ற நினப்பில்லாமல்,
நான் போட்ட கூச்சலில் பக்கத்து வீட்டு ஆச்சி பயந்து,
திருடன் டார்ச் லைட் அடிக்கிறான்னு கத்த நிஜமாகத் திருடன் வந்துட்டானாக்கும் என்று நான் மீண்டும் மாடிக்கு ஓட,
இந்தக் கூத்தில் ரீட்டாவும் பயந்து கயிற்றை அறுத்துக் கொண்டு(கயிறா அது..,வெறும் நூல்)
இருந்த ஒரே சோஃபாவில் அது தாவி உட்கார்ந்து கொண்டது.
இப்போது சொல்லுங்கள் கோபம் வருமா வராதா.
இத்தனை சப்தம் ஆன பிறகு பக்கத்துவீட்டுப் பையன் மாடிப்படிகளிலிருந்து
ஒரு மாதிரி கத்தல் போட்டு மரக்கிளையைக் கையில் வைத்து அசைத்தான்.
தலையைத் திருப்பிப் பார்த்து ரீட்டா தன் இனத்தைச் சேர்ந்தவன் நினைத்தொ என்னவோ மொட்டைமாடியை நோக்கி ஓடவும்
நான் வாசல் கதவை அடைத்தேன்.
எட்டு மணிக்கு ஆஸ்வாசப் படுத்திக்கொண்டு பிறகு சமைத்துப்
படுக்க 10 மணியானது.
இதன் எதிரொலி அடுத்த நாள் நாம் முன்பே பார்த்த சினம் தணியாத புராணம்.
சிங்கத்துக்கு ரீட்டா புராணத்தைச் சொல்லலலம் என்றால் ,அவர் வேறு ஞாபகத்தில் புத்தகம் படிக்க உட்கார்ந்துவிட்டார்.
அதன்பலன் நான் பட்டினி.
அடுத்த நாள் வயிற்றுவலி.
மருத்துவர் விசிட். அப்புறம் தலைதீபாவளிக்கு மறுநாள்,மதுரையில் முதல் பையன் பிறந்தாச்சு.
சுபம்.

Saturday, June 23, 2007

190..பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு எட்டு

வேடிக்கையில்லா வாழ்வு வித்தியாசம் இல்லாமல் போய்விடும்னு நினைச்சு ஆரம்பித்த விளையாட்டு இந்த எட்டுப் பதிவுனு சொன்னாங்க

கொத்தனார் கீதாம்மாவை எட்டுப் போடச் சொல்ல அவங்க என்னைக் கைகாட்டி விட்டாங்க

இவர்கள் எல்லாம் வலை உலக ஜாம்பவான்கள்

எதை எழுதினாலும் சுவை பட எழுதி நம்மைப் படிக்க வைத்து விடுவார்கள


நானோ இன்னும் கைநாட்டு நிலையிலிருந்து முன்னேறவில்லை.

இன்று ஆறு மணிக்கு எழுந்திருந்தேன். பல தேய்த்தபிறகு

காப்பி குடித்தேன்.

பக்கத்துவீட்டு மரத்தில் குயில் குவியது.... என்று நிதர்சன*? உண்மைகளை எழுதும் ஒரு நாட்குறிப்புவாதி.

இங்கு எழுதப்போகும் எட்டு குறிப்புகள் என் வாழ்க்கையின்

முக்கிய சம்பவங்கள் நான் நினைப்பவைகளை பதிவிட நினைக்கிறேன்.


1,பிறந்தது,வளர்ந்தது,மணந்தது என்று வேறு வேறு மாறுபட்ட சூழ்னிலைகளில்
தென் இந்தியாவின் தண்ணீர்வளம் குன்றிய பல மாவட்டங்களில் இருந்ததால் நீரின் மேன்மை ,அருமை தெரிந்தே வாழ்க்கை அமைந்தது.
இன்றும் நீரிறைக்கும் பம்ப் வேலை செய்யவில்லை என்றால் சிறிது ரிப்பேர் மெகானிசமும் தெரிந்துவைத்திருக்கிறேன்.ஒரு கார்மெகானிக்கின் மனைவி என்பதால் ஸ்பானர்,பாக்ஸ் ஸ்பானர்,வண்டி எப்போ நின்னால் என்னமாதிரி
தொந்தரவால இருக்கக் கூடும் என்ற விஷயமெல்லாம் கொஞ்சம் தெரியும்.:-)
வனாந்தரங்களில் கார் நின்று அருகிலிருந்த குடிசைகளில் நீரும்,பன்னும் உண்ட நாட்கள் சில...மறக்கமுடியாதவை
2,கல்வி,ஸ்ரீவில்லிபுத்தூர்,திருமங்கலம்,திண்டுக்கல்,சென்னை
இந்த நகரங்களில் கற்ற தமிழும் ஆங்கிலமும் இன்றைய

இந்தப் பதிவு வரை கொண்டுவிட்டிருக்கின்றன.

கைம்மண் அளவு என்று கூடச் சொல்ல முடியாது.ஆனால் படித்தறியும் புத்தியாவது இருக்கிறதே என்று சந்தோஷப்படுகிறேன்.3,கடவுள் நம்பிக்கை

காலையில் நாங்கள் எழும்முன்னே எங்கள் தந்தை சொல்லும்
கடவுள் வாழ்த்துப்பாடல்கள் அரைத்தூக்கநிலையிலேயே மனப்பாடம் ஆகிவிட்டன..
அவைதாம் இன்னும் எனக்குத் துணையாக இருக்கின்றன.

இந்த நம்பிக்கை இல்லாமல் என் வாழ்வை நினைக்க முடியாது.4,சகமனிதர்களை நம்புதல்

இதுவும் தந்தை கொடுத்த பாடம்தான்

சந்தேகத்தோடு தொடங்கும் எந்த உறவும் நிலைக்காது .

என்ற வாக்கியம் மறக்க முடியவில்லை.எத்தனையோ தடவை இந்த நம்பிக்கை பொய்த்திருக்கிறது. இருந்தும் அவ்வாறு நடந்த பிறகும்,இ ந்த அறிவுரையின் ககரணத்தால்
இரண்டு மூன்று நாட்களில் மறந்தும் விடுவேன்.5,மறக்க முடியாத நிகழ்வு.திருச்சியில் எங்கள் நான்கு வருடத் தங்கலின் போது

நானும்,என்கணவரும் குழந்தைகள் மூவரையும் அழைத்துக் கொண்டு முக்கொம்பு என்னும் இடத்துக்குப் போயிருந்தோம்

காவிரியில் வெள்ளம் அப்போது.

கரையின் படிகளில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது,

தண்ணீரில் எங்கள் பிம்பங்களைப் பார்த்து ரசிக்கும் வேளையில்

எங்கள் சின்ன மகன் மூன்றுவயதுக் குழந்தை

பாப்பா என்று கைநீட்டியவன் அப்படியே தலை குப்புற

10அடி ஆழத்தில் விழுந்து விட்டான்.

பையா என்று நான் அலற வாய் திறக்கும் முன் அப்படியே தண்ணீரில் பாய்ந்தவர் எங்க சிங்கம்தான்.

அடுத்த நொடியில் குழந்தையை மேலெ கொண்டுவந்துவிட்டார்.

அன்று நாங்கள் பட்ட திகில் இபோதும் நடுங்குகிறது நினைத்தால்.

இவரும் தண்ணீரைப் பார்த்து பயப்படுபவராகவோ

நீச்சல் தெரியாதவராகவோ இல்லாமல்

ஒரு தைரியசாலியாக எனக்குக் கை காட்டியது

அந்தப் பெருமாள் தானே.அவன் கருணைக்கு இது ஒரே ஒரு எடுத்துக்காட்டுதான்.
6, பயணங்கள்,
சென்னை எழும்பூர்செண்ட்ரல் இந்த இரண்டு நிலையங்களிலிருந்து
புறப்படும் இரண்டு ,மூன்று வண்டிகளைத்தவிர மற்ற விவரம் அதிகமாகத் தெரியாது. அந்த நிலை மாறி இப்போது மீனம்பாக்கம் , பழகிவிட்டது.அதுவும் காலத்தின் மாற்றம்தான்.
7,நண்பர்கள்,சினேகிதிகள்
எனது முதல் வகுப்பிலிருந்து பதினோராம் வகுப்புவரைகிடைத்த அருமையான தோழிகள் ,பகிர்ந்து கொண்ட ரகசியங்கள் அநேகம்.அந்த நினைவுகள் வாழ்வின் மீது நம்பிக்கைக்கு இன்னும் உரம் கொடுக்கின்றன.
8,வலைப் பதிவுகள்
நல்ல மனிதர்களால் நிரம்பியகுடும்பத்தில் எண்ணிக்கை குறைந்து, குழந்தைகளும் வேலை நிமித்தமாகத் தொலதூரங்களில் வாழக்குடிய இந்தச் சூழலில் தமிழ்மணமும்,தேன்கூடும் இன்னும் பிற இணையஇதழ்களும் எனக்குக் கிடைத்த வரம். இந்த இணையத்தினால் எனக்கு இப்போது வரவு நட்பும் மகிழ்ச்சியும்.
எப்போதும்போல் வந்து படித்தவர்களுக்கு நன்றி:)))
நான் 8 விளையாட்டுக்கு அழைக்க விரும்பும் நண்பர்கள்,
1..நானானி,
2அம்பி,
3காட்டாறு,
4ராதா ஸ்ரீராம்,
5,ராகவன்,
6,Jeeves
7,delphin victoria,
8,யோசிப்பவர்.
நேரமும் விருப்பமும் இருந்து விளையாடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
விளையாட்டின் விதிகள்:


1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும
OPTIONAL:2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்

.3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

Saturday, June 16, 2007

உலகின் அமைதியான,அழகான இடம் ஸ்விட்சர்லாண்ட்

.

இதோ இருக்கும் பா(ஹ்)னாஃப் என்னும் ரயில் நிலயத்தில்


இறங்கி வெளியே வரும்போது முதலில் காண்பது மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட


போக்குவரத்து.


அடுத்தாற்போல அதைக் கொஞ்சம் கூட மீற முயற்சிசெய்யாத மக்கள்ஸ்.ஒரு குட்டிப் பூனை நாய் ,குழந்தை எல்லோரும் ஒருவர் பாக்கியில்லாமல் பச்சை விளக்கு, நட,


என்று வந்தால்தான் நடக்கிறார்கள். சாலையைக் கடக்கிறார்கள்.


இந்த டிராம் போகும் வழியெல்லாம் வீடுகள்.


ஒரு வீட்டிலிருந்தும் எந்தக் குழந்தையோ இல்லை வேறு எதுவுமோ சாலைக்கு வந்து நான் பார்க்கவில்லை.


இப்படி எல்லாமே நிறைவுதானா குறையே இல்லையா என்று எனக்கும் தோன்றியது.


இதே ரயில்நிலையத்தின் வெளியே இசைக்குழுக்களும்,


தனியாக அக்கார்டியனோ,இல்லை புல்லாங்குழலோ இது போல பாடுபவர்கள்,


என்று உள்ளத்திற்கு மகிழ்ச்சி அளிக்கும் காட்சிகளோடு இன்னொன்றும் மனத்தை இறுத்தியது.


அது வயது,பெண்,ஆண் பாகுபாடு இல்லாமல் எல்லோரும் புகை


பிடிப்பது.


வெறும் புகை இல்லை.மரியுவானா போன்ற போதைப் பொருட்கள் பழக்கமும் அதிகரித்து வருவதாகத் தெரிந்தது.


அதே போல AIDSஉம் கொஞ்சமேபரவலாக இருப்பதாகவும் இந்தப் பக்கத்து ஆங்கிலப் பத்திரிகையில் படித்தேன்.


மற்றபடி குற்றங்கள் குறைவுதான்.


ஃப்ரான்ஸ்,ஜெர்மனி,இத்தாலி இவை போன்று ஸ்விஸ் நிலமும் நதிகளும் கலக்குமிடங்களில் பொதுவாகப் பயணிகள் எச்சரிக்கப்படுகிறார்கள்.


தங்கள் உடமைகளைப் பாதுகாக்கும்படிக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இரவு 11 மணிவரை ட்ராம்கள் போய் வந்துகொண்டுதான் இருக்கின்றன.


ஒருவர் இருவருக்காகக்கூட ஓடிக்கொண்டு இருக்கின்றன.தனியாகப்போவது பற்றிப்


பயம் கவலை இல்லை.
குப்பை சேர்த்து கொட்டுவதிலும் மூன்றுவகையாகத் தான் வைக்கவேண்டும்.


சாதாரண குப்பை,ரிசைக்ளிங்,பாட்டில்கண்ணாடியெல்லாம் தனி.

ஒரு பைக்கு 2 fரான்க்ஸ் கார்ட் கட்டி குப்பை பெட்டியில் வைக்கவேண்டும்.

மின்சாரத்துக்கும் தண்ணீருக்கும் பணம் நிறைய செலவாகிறது.


சுற்றுச்சூழல் கெட்டுவிடக்கூடாது என்பதால் துவைப்பதிலிருந்து மற்ற எல்லாவேலைகளுக்கும் ஆகும் சோப் சாதனங்கள் எல்லாவற்றையும்

கவனமாகக் கையாளுகிறார்கள்.
மீண்டும் எழுதும்போது
யங்ஃப்ராவ் மலைக்குப்போய் வந்த கதையை எழுதுகிறேன்.


Tuesday, June 12, 2007

185 பெண்,அம்மா,மாமியார்
அம்மாவுக்கும் பெண்ணுக்கும் உண்டான உறவு

தென்றல்னு யாராவது நினைத்தால் அவர்களுக்கு இன்னும் அனுபவம் போதாது என்றுதான் சொல்லவேண்டும்.

கிழித்த கோட்டைத் தாண்டும் பெண்களே அதிகம்.

நீ எல்லாம் இருந்த மாதிரி நான் இருக்க மாட்டேன்.

தாழ்ந்த இடத்தில தான் தண்ணீர் தங்கும்,

பொறுத்தார் பூமி ஆள்வார்...இந்த வசனம் எல்லாம் நீர்த்துப்போயாச்சு.

தாழ்ந்த இடத்தில் தண்ணீர்தங்கினா கொசுதான் வரும்.

எனக்குப் பூமியை ஆளவேணாம், இதோ இங்க இருக்கிற காலேஜுக்கு

விருப்பப்படி போயிட்டு வர நீ சரினு சொன்னால் போதும்...

இது ஒரு பாட்டிக்கும் பேத்திக்கும் நடந்த சம்பாஷணை.


பாட்டி மாலைஆறு மணிக்கு அப்புறம் வீட்டுக்கு வெளியில் இருக்கக்கூடாது.

என்கிற பரம்பரை.

பேத்திக்கோ அதுக்குமேலதான் அரட்டையே ஆரம்பமாகும்.இது 20 வருடங்கள் முன்னால் சரியாக இருந்தது. இப்போது பாட்டியோ தாத்தாவோ
வீட்டில் இருந்து ,குழந்தைகளோடு உரையாடுகிறார்களா தெரியாது.
சொன்னாலும் குழந்தைகளுக்கு நேரம் இருக்குமா ...சந்தேகம்தான்.
பெண்கள் வளர்ந்து திருமணமாகிப் போகும் போது அவசியமான
புத்திமதிகள் சொல்வது முக்கியம்.
கிளம்பும்போதே அங்கே இருப்பவர்களிடம் ஜாக்கிரதையாக இரு. யாரையும் நம்பாதே. கணவனின் பெற்றோர்கள் ஏதாவது ஏறுக்குமாறாகப் பேசினால்
ஒரு போன் போடு.நாங்க வந்து அதைப் பார்த்துக்கிறோம்....
இந்த மாதிரி பயமுறுத்தி அனுப்ப வேண்டாமே.
நம்ம டி.வி சீரியல் மாமியார்கள்தான் கத்தி கபடா இல்லாமல் பேச்சினாலேயே
அழிப்பவர்களாக வருகிறார்கள்.
இதைப் பார்த்து மனம் கெடும் பெண்களும் ஏராளம்.
நல்ல குடும்பங்களைப் பற்றி,நல்லபடியாக இருக்கும் மாமியார் மாருமகளைப் பற்றிச் சொல்ல வரவில்லை.
இப்போது சமீபத்தில் நடந்த ஒரு விவாகரத்தும்
அது நடந்த விதமும்,என் காதில் விழுந்தது.
அந்தப் பெண்ணிற்கு இப்போதுதான் 25 வயது ஆகிறது.
பெரிய குடும்பத்தில் வந்த பெண்.
உறவுகளின் அருமை நெருக்கம் எல்லாம் தெரியும்.
நண்பர் வட்டாரத்திலேயே தெரிந்த இடமாகப் பார்த்து இரண்டு வருடங்கள் முன் திருமணம் நடந்தது. மும்பையில் குடித்தனம் வைத்துவிட்டு வந்த அன்றிலிருந்து இங்கே அவள் அம்மாவுக்கு இனம் தெரியாத கவலை.
இந்த அம்மாவும் மெத்தப் படித்தவள்,தானே ஒரு தொழிலதிபர்.
பெண்கள் முன்னேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்ட சங்க அமைப்பு
ஒன்றையும் நடத்திவந்தார்.
வாழ்வில் வெற்றி பெறபெண்களுக்குச் சுய சம்பாத்தியம் எவ்வளவு முக்கியம் என்பதை நன்கு உணர்ந்ததால் முழு நம்பிக்கையுடன்
பார்ப்பவர்கள் அனைவரையும் ஊக்குவிப்பார்.
எனக்குத்தான் இந்த அறிவுரை பொருந்தவில்லை. கேட்டுக் கொள்வேன்.
ஏதோ தடங்கல் வரும்.முனையாமல் இருந்துவிடுவேன்.
அப்படிப்பட்ட அம்மாவுக்குத் தன் பெண்ணீண் திருமணவாழ்க்கை சரியாக இல்லை என்று தோன்றிவிட்டது.
தினம் மும்பைக்குப் போன் போகும்.
சாப்பிட்டியா,தூங்கினியா தகவல்களுடன் வேலை கிடைச்சுதா
இதுவும் கேள்வி.
அந்தப் பெண் ஆரம்பத்தில் திருமண வாழ்க்கையின் சந்தோஷத்தை,வெளியூர் போய் வந்ததை எல்லாம் சொல்லி மகிழும்போதெல்லாம் இந்த அம்மா கேட்டுக்கொள்ளவில்லை.
இரண்டுமாதங்கள் போனதும் சென்னைக்கு ஏதோ வேலையாகப்
பெண்ணும் மாப்பிள்ளையும் வர அம்மாவின்
மனதுக்குப் பெண்ணின் வாழ்க்கை ஒட்டு மொத்தம் நாசமாகிவிட்டது போல வருந்தினாள்.
இப்படி நடக்குமா என்று கேட்காதீர்கள் நடந்தது.
மாப்பிள்ளையிடம் தன் பெண்ணுக்குத் தனி நிறுவனம்
ஆரம்பித்துக் கொடுக்கப் போவதாகச் சொல்லவும் அவர் மறுத்திருக்கிறார்.
அவர்கள் வீட்டில் அது வழக்கம் இல்லை. குழந்தைகள் வேண்டும் என்று ஆசைப்படுகிறொம் என்று சொல்லிப் பெண்ணையும் அழைத்துப் போய்விட்டார்.
அம்மா சொன்ன பேச்சைக் கேட்டுக் கொண்டு
அந்தப் பெண்ணும் கணவரைத் தொந்தரவு செய்ய,
அவர் மறுக்க நிலைமை தீவிரமாகிப் பெண் கோபித்துக் கொண்டு பிறந்தவீடு வந்துவிட்டது.
அம்மாவின் முழு சப்போர்ட் கிடைக்கவும், தன் படிப்பைத் திரும்ப ஆரம்பித்துக் கொண்டாள்.
நடுவில் அவர் எழுதிய இமெயிலுக்கும், தொலைபேசி அழைப்புகளுக்கும்
பதில் சொல்லவில்லை.
தானாக அவர் மனம் மாறித் தங்கள் வழிக்கு வந்துவிடுவார்
என்ற அவர்கள் நம்பிக்கை பொய்த்தது.
விவாகரத்து செய்யப் போவதாக அறிவிப்புக் கொடுத்தார்.
அப்போது இவர்கள் ஆள் மேல் ஆள் அனுப்பி,
சரி செய்யப் பார்த்தாலும் பலன் இல்லை.
பெண்ணின் அப்பா செய்த முயற்சிகள் வீணாகிவிட்டன.
இதற்கு மேல் அந்த அம்மா பெண் விடுதலையாகி விட்டதாக மகிழ்கிறார்.
சமூகத்தில் தன் பெயர் கெடக்கூடாது என்ற ஒரே காரணம்தான்
இப்படி அவரைப் பேச வைக்கிறது என்று நினைக்கிறேன்.
இவர்களை அமெரிக்காவில் பார்த்து எனக்கு ஒரே அதிர்ச்சி.
21 வயதில் திருமணம் 23 வயதில் அது இல்லாமல் போவதற்கு யாரை நோவது.
இன்னும் நல்ல பிள்ளையாகத் தேடுகிறார்கள். கிடைத்தால் நல்லதுதான்.

184 நிறையப் பேசவேண்டும்

உங்களுக்குப் பேச வருமா என்று யாராவது கேட்டால்....
சிரிப்போம்.
சர்வ அலட்சியமாக பேசுவது நமக்குக் கைவந்த கலை.
அதுவும் திருமணம் ஆனபோதில் இருவருக்கும் பகிர்ந்துகொள்ள எத்தனையோ விஷயங்கள்.
பிறந்ததிலிருந்து இப்போ திருமணம் ஆகும் வரை நடந்த அத்தனை சேதிகளையும் சொல்ல வேண்டும்.

இது ஒரு ஆறு மாதங்கள் தள்ளும்.
பிறகுதான் கொஞ்சம் தகராறு.
முழுவதும் புரிந்துகொண்ட தம்பதியரைப் பற்றிப் பிரச்சினை இல்லை. புது மோகத்திலிருந்து விடுபடாதவரை தப்பே கண்ணில படாது.
அப்புறம் கணவன் வேலைக்குப் போக ,மனைவி வீட்டிலிருந்தால்
வேலைக்கும் போகாத நிலையில் கொஞ்சமே கொஞ்சம்
அலுப்புத் தட்ட ஆரம்பிக்கும்.அதற்குள் ஒரு குழந்தை பாக்கியம் கிடைத்துவிட்டால் தொந்தரவு இல்லை. எங்க மகனின் சினேகிதன் சொல்றான்,"கல்யாணம் ஆன பிறகு ஒரு நாள் கூட ஹிண்டுவை அக்கடானு படிக்க முடியல்லை. கையில ஒரு குழந்தைனு கொடுத்துட்டா வம்பில்லை!!"எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது ஏன் முன்னுக்குப் பின் முரணாகப் போகிறது...திருமண வீடியொக்களில் யாராவது போட்டொ எடுக்கப் பக்கம் வந்தாலேசுளித்தவன் இவன்.ஏன் மனைவியிடம் இவ்வளவு சலிப்பு என்று தோன்றியது.


என்னங்க அம்மா, நீங்களே சொல்லுங்க...போகவர நை நைனு அம்மா அப்பாவுக்கு இவ மேல கம்ப்ளெயிண்ட்....இவளுக்கு
அவங்க மேல...நின்னாங்க உட்கார்ந்தாங்க


வெளில போகக்கூடாதுனு சொன்னாங்க.


அலுப்பாப்போச்சு பிழைப்பு ...என்றான்.

இதம் தெரிந்து நடப்பவர்கள் அவன் பெற்றோர் என்று எனக்குத் தெரியும்.


அதுவும் அவன் ஒரே மகன் என்பதால்


மிகுந்த பாசம். அதே நேரம் பழைய காலம் மாதிரி எல்லாம் அநாகரிகமாக


நடப்பவர்கள் இல்லை.


அவர்களுக்குக் கூட இந்தப் பிரச்சினையா என்று அதிசயமாக இருந்தது.


(கீதா இதுக்குக் கட்டாயம் கமெண்ட் சொல்லுவாங்க)


மதிய வேளை ஒரு நாள் அவங்க வீட்டுக்குப் போன் செய்து விட்டுப்


போனேன்.

அம்மாவும் அப்பாவும் தனிஅறையில்.


மருமகள் மதிய ஓய்வு.


நான் போனதும் இருவரும் எழுந்து வந்து ஹாலில் உட்கார்ந்து,காபிஉபசாரம் முடிந்ததும் பேச ஆரம்பித்தார்கள்.


உள்ளேஇருந்து செல்போன் அடிக்கும் சத்தமும் உடனே


சின்னக்குரலில் மருமகள் பேசும் சத்தமும் கேட்டது.

உடனே இங்கே இருந்தவர்கள் முகம் மாறியது.


இப்போது வெளில வருவாங்க. அப்புறம் கிளம்பிடுவாங்க அம்மா வீட்டுக்கு.


அவன் வீட்டுக்குத் திரும்பும்போதுதான் அழைத்து வரவேண்டும்.


என்று அவர்கள் சொல்லி முடித்ததும்


மருமகள் வெளியில் வரவும் சரியாக இருந்தது.


அந்தப் பெண் என்னைப் பார்த்து அழகாகச் சிரித்துவிட்டு,


நான் கொஞ்சம் வெளில போகணும்மா. சாயந்திரம் ஆகும் வர.

ராத்திரி சாப்பாட்டுக்கு ஏதாவது செய்துடுங்க .எங்க ரெண்டுபேருக்கும் சாப்பாடு வெளியில் என்ற மரியாதை வார்த்தைகளோடு


கிளம்பினாள்.


இவர்கள் முகத்தைப் பார்த்தால் கசப்புத் தெரிந்தது.

ஏனென்ற கேள்வியோடு அவர்களை நான் பார்க்கவும்,


"இது தினம் நடக்குதும்மா. பிறந்த வீட்டிலிருந்து போன் வரும்


உடனே போயிடுவாங்க.எங்களோட இருக்கணும்னு தோணலியே


நாங்க என்ன இது போலத் தினமுமா வீட்டைப் போட்டுட்டுப் போவோம்


இல்ல அப்படித்தான் எங்க மாமியார் விட்டாங்களா


சொல்லுங்க"


என்று மனோவோட அம்மா கேட்டார்.

"வீட்டுவேலையில் எல்லாம் உதவியாத்தான் இருக்காங்க. எங்களோட இந்த வரவேற்பறையில ஒண்ணா உட்கார்வது சொல்பம்.

புதுசா ஒரு பொண்ணு வருது.நம்மளோட சந்தோஷமா இருக்கப் போகிறதுனு நினைச்சோம்மா. எங்க கிட்ட என்ன தப்போ"பேசிக்கொண்டே போனார்..எனக்கும் கொஞ்சம் வித்தியாசமாகத் தான்

தெரிந்தது. அது என்னோட வயதைப் பொறுத்ததோ என்றும் சந்தேகமாகவும் இருந்தது.

எதற்கும் புதுப்பெண்ணையும் அழைத்துப் பேசவேண்டும் என்று சிறிது நேரம் அவர்கள் ஆவலாதியைக் கேட்டுவிட்டு வீட்டுக்கு வந்ததும் மனோவுக்குத் தொலைபேச வந்தேன்.வீட்டுக்கு ஒருநாள் மாலை வருமாறு அழைத்ததும் அவனுக்குச் சிறிது

தயக்கம்தான். நானும் ஏதாவது அறுக்கப் போகிறேனோ என்று பயம் போலிருக்கு. எங்க வீட்டுச் சிங்கமும் வற்புறுத்தியதில் சம்மதித்தான்.

அம்மா அப்பாவையும் அழைத்து வரவேண்டுமா என்றும் கேட்டான்.இந்தப் பசங்களுக்குத்தான் எவ்வளவு சோதனை. பெற்றோரையும் சந்தோஷமா வைத்துக்கணும். பெண்டாட்டி கண்ணும் கலங்கக் கூடாது,பெரிய பொறுப்புத்தான்:-)) ஒரு சனிக்கிழமை மாலை இருவரும் புதிதாக வாங்கிய
ஸாந்த்ரொ காரில் வந்தார்கள். கூடை ஒன்றில் பழங்கள் அலங்கரித்து
,பூங்கொத்து ஒன்றும் வாழ்த்துக்களொடு வரவேற்பரையில் வந்தன.

இங்கிதம் தெரிந்த குழந்தைகள் என்று நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது.
உட்கார்ந்து பேசிவிட்டு உணவு உண்ண வந்தோம்.
மனோவின் மனைவி ஹரிணி உடனே உள்ளே வந்து சமையலறையில் உதவி செய்ய ஆரம்பித்தாள்.அழகாக மேஜையில் எடுத்துவைத்த உணவுவகைகளை
உண்டுமுடித்தபிறகும் கூடவே வந்து விட்டு மீண்டும் ஹாலுக்கு வந்தோம்.

சிறிது சிறிதாக பேச்சு வளர்ந்து தற்போதைய பிரச்சினைக்கு வந்தது.
நான் ஹரிணியிடம் நேரிடையாக விஷயத்தை அணுகும் அளவுக்கு அவள் நெருங்கிவந்துவிட்டாள்.
ஏம்மா என்னத்தினால இந்த மாதிரி தொந்தரவு,
அவங்க வகைதெரிந்த மனுஷர்களாச்சே என்றதும்
"நான் என்ன செய்தால் அவங்களுக்கு சந்தோஷமாக இருக்கும் என்று தெரியவில்லை ஆன்டி.என்னால முடிஞ்ச வேலையை செய்யறேன். and I leave them alone,so they can carryon their praivate life
as they have done before our marriage"என்றாளே பார்க்கணும்.
இவள் அவங்க தனிமையை விருன்புகிறார்கள் என்ற நினைப்பில் வீட்டைவிட்டுக் கிளம்ப
வேறு வேறு இடங்களுக்குப் போய்விட்டு வந்திருக்கிறாள்.

வாலண்டரி சர்வீசிலும் இருப்பதால் பல முதியோர் இல்லங்களுக்கும் போய் வருவதாகச் சொன்னதும்
எனக்குக் குழப்பமாக இருந்தது.
இதை அவர்களிடம் சொல்லுவதில்லையா. பிரச்சினையே இல்லாத இடத்தில்
இவ்வளவு அமைதியில்லாமல் போய் விட்டதே,எனவும்
அவள் உடனே அவங்கதான் அவங்க அறைக்குப் போயிடராங்களே ,நான் பிறகு என்ன பேசுவது,
என்றாள். நான் என்ன கௌன்சலரா ,எல்லாருக்கும் புத்திமதி சொல்ல என்று நினைத்தபடி உண்மை நிலையை விளக்கவும் புருஷன் மனைவி இருவர் முகங்களிலும் தெளிவு வந்தது.

எங்கேயோ செய்யற சோஷல் சர்வீஸ் வீட்டிலேயெ நீ ஆரம்பி,
வேணுமான்னா வங்களையும் அழைச்சிட்டுப் போ.
இருவரும் தாங்கள் தனிமைப்படுத்தப் பட்டதாக நினைக்கிறார்கள்.
இயல்பாகவே நிறையப் பேச மாட்டார்கள். நீதான் அவர்களை
வெளியில் அழைத்துவரணும் என்றதும்
அவளும் மகிழ்ச்சியாகக் கிளம்பினாள்.
இரண்டு வாரங்கள் கழித்து அவர்கள் அனைவரையும்
மெரினாவில் நடைப்பயிற்சியின் போது சந்தித்தோம்.
மாமியாரும் மருமகளும் முன்னே நடக்க அப்பாவும் மகனும் பின்னே வந்தார்கள்.
மனோவை நான் எப்படியிருக்கு குடும்பம் என்று கேட்டதற்கு
நான் தனியாயிட்டென்மா....என்றான்.
ஏன்ப்பா என்றால் அவங்க எல்லாம் ஒண்ணூ சேர்ந்துட்டாங்க என்றபடி சிரிக்கிறான்.

Thursday, June 07, 2007

எங்க பாட்டி

இது ஒரு மீள் பதிவு
ஆஜி என்கிற பாட்டி

ஆஜிப் பாட்டி இருந்து இருந்தால் இந்தக் கார்த்திகைக்கு 111
வயது ஆகி இருக்கும்.
அதென்ன ஆஜி? என்று எல்லோரும் கேட்பார்கள்.
இந்தப் பெயர்வைத்துக் கூப்பிடப்பட்டவரை நான் இது வரை பார்த்தது இல்லை.
நற்குணங்களோடு ஒரு பெரிய குடும்பத்தை
நிர்வாகம் செய்தவர், அதுவும் 6 தலைமுறைகளோடு ஒற்றுமையாகப் பழகி எல்லோருக்கும்
நல்ல வழி காட்டியவர்.
எட்டு வயதில் ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்துக்கு
மருமகளாகி,
பதின்மூன்று வயதில் முதல் மகனைப் பெற்றவர்.
கும்பகோணம் பக்கத்தில் கடம்பங்குடி என்ற ஊரில்
சாதாரணமான ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்
ஆஜியின் தந்தை.
சிறு வயதில் பல ஆங்கிலேய மாவட்ட (1860)ஆட்சியாளர்களைப் பார்த்து எப்படியாவது வாழ்க்கையில்
முன்னேற வேண்டும் என்று தெளிவாகச் சிந்தித்து
அந்தக் கால வழக்கப்படி துண்டை உதறித் தோளில் போட்டு, கையில் வெறும் ஐந்து ரூபாயுடன்,
தீராதக் கல்வி தாகத்தோடு வந்தவர்.
அப்போது ரயிலுக்கு செலவழிக்கக் கூட அவரிடம் பணம் கிடையாது என்று பாட்டி சொல்லிக்
கேள்வி.
சென்னை வந்தவர் தன் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெரிய
கிரிமினல் வழக்கறிஞரிடம் சேர்ந்தார்.
அந்தச் சிறு பையனின் அறிவும் தீர்க்கமும் பெரியவரை
ஈர்த்து விட்டன. மேலே படிக்க விருப்பமா என்று அவனைக் கேட்டபோது அவனும் தயங்கவில்லை.
எப்படியும் கடமையைச் செய்ய வேண்டும் என்று
உதவியை ஏற்றுக்கொண்டான்.
பெரியவரின் ஊகம் மோசம் போகவில்லை.
வழக்கறிஞராக வந்து நின்ற இளைஞனுக்குத்
தன் பெண்ணையேத் திருமணம் செய்து வைத்தார்.
மயிலைக் குளத்து அருகில் அப்போது வீடுகளும்
கோவில்களுமே இருந்தன.
அதில் ஒரு வீட்டில் குடியமர்த்தப்பட்டனர் இந்தத் தம்பதிகள்.
குடும்பம் பெருகியது. வருமானமும் பெருகியது.
நல்லபடியாக ஆளத்தெரிந்த அரசிபோல வளைய வந்த தன்
அம்மாவை ஆஜி எப்போதும் மறந்ததில்லை.

இதிலென்ன அதிசயம் என்று கேட்கிறீர்களா?
அந்த நூற்றாண்டில் பெண்கள் செல்லம் கொடுத்து வளர்க்கப் படவில்லை.
ஆஜியின் அம்மா,அவரை ஐந்துவயதிலேயே வீட்டு வேலைகள் செய்யபக பழக்கி இருக்கிறார்.
வரவு,செலவு கணக்குப் பார்க்க,அது தம்படியாகவே இருந்தாலும் எண்ணிச் செலவழிக்க,
புத்தி சொல்லி, சமையல் கற்றுக்கொடுத்து,
இன்னோரு வீட்டில் மரூமகளாகி,நளபாகம் வேலை செய்து
வந்தவர்களை உபசரித்து,
குழந்தைகளைப் பெற்று,
அவர்களைத் தன் பிம்பமாக வளர்த்து................
வயதாகி அடங்க வேண்டியதுதான்.
இந்த அச்சில் வார்க்கப் பட்ட பொம்மையாக
இருக்க ஆஜி மறுத்ததுதான் அதிசயம்.


திருமணம் செய்ய வரனைத் தேர்ந்து எடுத்தது
என்னவோ தன் தந்தையாக இருந்தாலும்(திருமணத்திற்கு
அப்புறம்)
தன் வாழ்வை நிர்ணயிக்கும் மன உறுதி அவரிடம்
இருந்தது. அதை நினைத்துதான் எங்களுக்கெல்லாம்
ஆச்சர்யமாக இருக்கும்.
ஆஜிப் பாட்டி வாழ்க்கைப்பட்டது பெரிய மிராஸ்தார் குடும்பத்தில்.
ஆறு மைத்துனர்கள், இரண்டு நாத்தனார்கள்.
திருமணத்துக்கு முன்னாலேயெ இறைவன் திருவடி சேர்ந்ததால்,
திருமணம் செய்து வரும் குழந்தை மருமகளுக்கு அறிவுரை
சொல்லி, நடத்திச் செல்ல யாருமில்லை.
வீட்டு ஆண்களோ விவசாயத்தையும், வைதிகத்தையும்,
வேதாந்தத்தையும் விடாமல் பின்பற்றுபவர்கள்.


இந்த ஆஜிப் பாட்டிக்கு முன்னாலேயெ வந்து விட்ட முதல் மருமகள் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவராக இருந்ததால் கொஞ்சம் நெளிவு சுளிவு தெரிந்து
நடப்பாராம்.
மச்சு என்னும் மாடியில் பெண்கள் இருக்க, கீழே
கும்பல் கும்பலாக சாப்பாட்டுப் பந்தி நடக்கும் என்றும்,
சாப்பாட்டு மணம் வரும்போது பசி பொறுக்காமல் அந்த மச்சிலேயெ குமித்து வைத்து இருக்கும் உப்பு புளி, வெல்லம் எல்லாம் கலந்து அரிசி யோடு சாப்பிடப் பழகியதாகவும் சிரித்துக் கொண்டே சொல்லுவார்.


இவர்கள் சமையல் செய்யப் போகாத காரணம்,
அந்த சமயத்தில் ஆஜிப் பாட்டியின் மாமனார்
ஒரு மடாதிபதியாகப் பொறுப்பேற்றதுதான்.
பெண்களுக்கு சமையல் அறை பக்கம் போக முடியாது.
மடத்தில் குருவைப் பார்க்க வருபவர்கள் நேரே
வீட்டுக்கு சாப்பிட வந்து விடுவார்கள்.
அந்தப் போஜனம் எல்லாம் முடிந்த பிறகுதான்
வீட்டுப் பெண்கள் சாப்பிட முடியும்.!
தினம் தினம் இந்தக் கதைதான்.
ஒருவழியாகத் தாத்தாவின் பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பும் முடியும் போது
சென்னைக்கு இருவரும் அனுப்பி வைக்கப் பட்டார்கள்
தாத்தா சட்டம் படித்து , குழந்தைகள் பிறந்தது அப்போதுதான்.
தாத்தாவுக்கு நிலபுலன்களைப் பார்த்துக் கொள்ளும் வேலையும் சேர்ந்து கொண்டதால்
பாதி நேரம் கும்பகோணம் போக வேண்டிய நிலைமை.
எத்தனை நாள் தந்தையின் வீட்டில் இருப்பது?அதனால் ஆஜிப் பாட்டி தனக்கென்று ஒரு இடம்
வேண்டும் என்று தன் தந்தையின் ஆசியோடு 1930(என்று நினைக்கிறேன்)ல் இப்போது இருக்கும் சாலைக்கு
வீடும், தோட்டமும் மாடு கன்றுகளோடு வந்தார்கள்.
இதற்குள் ஆஜிப் பாட்டியின் குடும்பத்தில்
இரண்டு புதல்விகள், நான்கு புத்திரர்கள்.
எல்லோருக்கும் நல்ல கல்வி ஏற்பாடு
செய்து கொடுத்தார் ஆஜி..கோமள
வல்லியாக இருந்த அம்மா , ஆஜி ஆனது அப்போதுதான்.
பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்தது பங்களூரில்.
அந்தப் பெண்ணுக்குப் பிறந்த குழந்தைகள் , அந்த ஊர் வழக்கப் படி அஜ்ஜி(கன்னடத்தில் பாட்டி)
ஆஜி என்று கூப்பிட ஆரம்பித்ததும்
எல்லோருக்கும் ஆஜியாகி விட்டார்.
அவருக்கு மாற்றுப் பெண்களும் மாப்பிள்ளைகளும் வந்த
பிறகும் ஆஜி ஓய்வெடுத்து நான் பார்த்ததில்லை.


நிலத்திலிருந்து விளைந்து வரும் பொருட்களைத் தனியாக சீர்செய்து வைப்பது.,
அத்தனை பெரிய வீட்டுக்கு ஒரே ஒரு ஆளை வைத்து
சுத்தம் செய்வது, கடைக்குப் போவது,(மாட்டு வண்டியில் தான்) , பேத்திகள் படிக்கும் பள்ளிக்கூடத்திற்குப் போய்,
விவரங்கள் அறிவது,
மாடுகளுக்குத் தீவனம் வைத்து,பால் கறக்கும் ஆட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது,
சமையல் அறையில் நின்று தன் பெரிய சம்சாரத்துக்கு அளவாக அரிசி, பருப்பு, காய்கறி செலவு செய்து
வேளைக்கு சாப்பாடு செய்து போடுவது..
எப்போதும் சேமிப்புக்கு மாதந்தோறும்
பேரன்கள், பேத்திகள் கணக்கில் பணம் போடுவது.
மகன்களின் வருமானத்துக்கு மீறி செலவு இல்லாமல்
அவர்களைக் கட்டிக் காத்த குடும்பம் நடத்தும் பாங்கு
சொல்லிக் கொடுத்து,
தவறு செய்தால் திருத்திக் கொள்ள வழி சொல்லி,
நேர்மையிலிருந்து ஒரு துளி கூட விலகாமல்,
எல்லாப் பேரன் பேத்திகளுக்கும் கல்லூரி வரைப் படிக்க வைத்தவர்.
படிப்பின் அருமை தெரிந்தவர்.
4 வகுப்பு வரைதான் படித்தவர்.
ஆங்கிலத்தில் கையெழுத்துப் போடத்தெரியும்.
நான் என் லெண்டிங் லைபிரரிக்குப் போகும்போது,
கௌண்ட் ஆஃப் மாண்டி க்ரிஸ்டோ, ஷெர்லக் ஹோம்ஸ் நாவல்கள் தமிழாக்கப் பட்டவை, வை.மு.கோதைனாயகி அம்மாள் கதைகள் எல்லாம் எடுத்து வரசொல்லுவார்.
கூர்மையான புத்தி.
எதிராளியின் முகத்தை வைத்தே சொல்வது பொய்ய உண்மையா என்று எடை போடுவார்,.
எல்லாரிடமும் இருக்கும் பலம் பலவீனம் தெரியும்.
நேர்மையாக இருப்பவர்களைப்பார்த்தால் தனி அன்பு காட்டுவார்.
இறக்கும் தருணத்தில் அவர் தன் சொத்து என்று வைத்து இருந்தது இரண்டே இரண்டு நூல் புடவைகள்தான்.
மற்ற எல்லாவற்றையும் நாலு தலைமுறைகும் சமமாகப் பிரித்துக் கொடுத்து விட்டு,
வங்கியில் தன் ஈமச் சடங்குக்கு என்று எட்டு ஆயிரமும் வைத்துதான் இறந்தார்.
கீழே விழுந்ததால் தான் அந்த 88 வயதில் இறக்க நேர்ந்தது.
அதுவும் எப்படி?
தன் உயிர் சினேகிதியின் பேரன் அமெரிக்காவுக்கு
எடுத்துப் போக , காலை 4 மணிக்கு, சமையல் அறையில்
புளிக்காய்ச்சல் தயாரிக்கப் போனவர், எண்ணை சிந்தி இருப்பதை பார்க்காமல் வழுக்கி விழுந்து விட்டார்.
ஒரு நல்ல முற்போக்கு எண்ணங்கள் கொண்ட
அறிவாளி நிறை வாழ்வு வாழ்ந்து
இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொன்னார்.
இத்தனை தனித் தன்மை பொருந்திய பெண் எனக்குப் புகுந்த வீட்டுப் பாட்டியானது என் அதிர்ஷ்டம் தான்.
Posted by வல்லிசிம்ஹன் at Tuesday, August 29, 2006

5 comments:
தி. ரா. ச.(T.R.C.) said...
நல்ல ஆதர்ஷ பெண்மணி.பாரதியார் காலத்தில் வாழ்ந்த அவர் கண்ட பெண்மணி.
8/29/2006 8:08 PM
said...
தி.ரா.ச, நன்றி. உடனே பின்னூட்டம்போட்டதற்கு.அந்த மாதிரி பெண்கள் இப்போது பார்க்க முடியாது.அசராமல் வேலை செய்வார்.திடமான ஆரோக்கியம்.எங்களுக்குத்தான் சில சமயம் கீப் அப் பண்ண முடியாது.
8/30/2006 8:08 AM
பொற்கொடி said...
மஹாத்மா என்று ஒருவர் வாழ்ந்தாரா? அது சாத்தியமானு கேட்கும் காலமும் வரும்னு எங்கேயொ படிச்ச ஞாபகம் வருது.. அது போல தான் இதுவும்..
9/01/2006 8:45 AM
துளசி கோபால் said...
ஆஜி இஸ் க்ரேட்ப்பா. இந்த மாதிரிஇருக்கறவங்களைப் பத்திப் படிக்கமுடிஞ்சதே ஒரு பாக்கியம்தான்.
9/01/2006 1:37 PM
தி. ரா. ச.(T.R.C.) said...
அந்த மதிரி தைர்யமான பொண்ணுங்க இப்பவும் இருக்காங்க!இப்போ புதுசா வலைப்பதிவுலே இருக்காங்க.பேரு சரியா ஞாபகம் இல்லை ஸ்வர்ணலதாவா கூட இருக்கலாம்
9/09/2006 2:36 PM
Post a Comment