Blog Archive

Tuesday, October 30, 2012

ஐப்பசி முழுநிலா

மேகங்களுக்குள்ளே மாட்டிக் கொண்டேனே
நேற்று இரவே சூழ ஆரம்பித்த மேகங்கள்
இதோ  வெளிவந்து விட்டேன்!!
தினசரி  மாலை மணி மூன்றுக்குவிஜயம் செய்யும் ஜோடி மைனாக்களில் ஒன்று.
பால் போலவே  ....வான் மீதிலே.
பவுர்ணமி நிலா   முதல்நாளே வந்து விட்டதாம். நான் ஏமாந்தேன். நாள்காட்டியில் இன்றுதான் பௌர்ணமி வட்டம் போட்டிருந்தது..

நாள் முழுவதும் புயல் பற்றிய எச்சரிக்கை. அங்கே இருக்கிறது. இங்க வந்துவிட்டது. வந்தாலும் வரலாம்..நெல்லூருக்குப் போகலாம்.!
கடலூரில் பாதிப்பு. எட்டடி உயர அலைகள்  மோதுகின்றன..

என்னப்பா இது:(

இது போதாது என்று     நண்பர்கள் வசிக்கும் அமெரிக்க நியுஜெர்சியில்  சாண்டி  புயல்.

சிங்கத்துக்குச் சிரிப்பு . கொஞ்சம் புதியதலைமுறையை(தொலைக்காட்சி) விட்டு வெளிய வா. புயல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்' என்றார்.:)))))

பிள்ளையாரப்பா எல்லோரையும் காப்பாற்று.

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Monday, October 29, 2012

சபை நாகரீகம்

தோழியின் பரிசு உரலில் கட்டுண்ட தாமோதரன்(ராமலக்ஷ்மிக்காக)
கண்ணன் சபை


நவராத்திரி  கோலாஹலம் பூர்த்தியாகி,    சச்சியின் உதவியோடு
பெரிய பொம்மைகளை   முதலில் பேப்பரில் சுற்றிப் பிறகு  பழைய
புடவைகளில் சுற்றி  மாடிப்படிகளில் ஏறிப் பெட்டிகளுக்குள்   பிரகாசமாக ஓய்வெடுக்கப் புகுந்தார்கள்.
குட்டித்
தெய்வங்கள் .

கொலு நடுவில் சுண்டல் மகிமையால் சிங்கத்துக்கு வயிற்றுவலி. மழை என்று   ஒரு கொலுவீட்டுக்குக் கூடப் போகவில்லை.

நல்ல வேளையாக அழைத்தவர்கள் அனைவரும் வந்து கௌரவப் படுத்திச் சென்றனர்.

வாங்கி வைத்திருந்த,பழங்கள் தேங்காய்கள்,ரவிக்கைத் துணிகள்  ஒரு குட்டி
ஹனுமான் என்று சுண்டலோடு கொடுத்தது மனம் நிறைவாக இருந்தது.
இவர்களில்  வீட்டுத் துணிமணிகளை இஸ்திரி செய்து  உதவி  செய்யும்  மீனாவின்  பெரிய பெண் செய்த  சீர்வரிசை ஆச்சாரியமாக இருந்தது.

என் இரண்டு கைகளுக்கும்  ஒவ்வொரு  டஜன்  கண்ணைப் பறிக்கும் கண்ணாடி வளையல்கள் ,பழங்கள் என்று   கொண்டு வந்திருந்தாள்.
வளையலைப் பார்த்ததுமே மனம் நெகிழ்ந்துவிட்டது. ஏம்மா செலவு செய்தாய் என்றால், நாங்கள் கொலு வைக்கும் வழக்கம் கிடையாதம்மா.

ஆனால் பதில் மரியாதை செய்வது நல்லது என்று என் மாமியார் சொன்னார்.

அவளுடைய இரண்டு குழந்தைகளையும் நல்ல பள்ளியில்  படிக்க வைக்கிறாள். இது ஒரு சந்தோஷம்தான்.
இன்னோருவர் நம் வலையுலகத்தைச் சேர்ந்தவர்
  பழங்கள்  நிறைந்த பையோடு தம்பதி சமேதராக வந்து  கௌரவம்
செய்தார்,.

அவர்கள் கிளம்பிப் போனவுடன் பார்த்தால் ...அத்தனை ஆபிள், மாதுளம்பழங்கள்  என்று  பெரிய பை நிறையப் பழங்கள்.
அவர் ரொம்பக் கூச்ச சுபாவம் உடையவராதலால் அவரைப் படம் எடுக்கவும் எனக்கு மனமில்லை.:) நம்மவர் எங்களவர் என்று பெருமைப் பட்டுக் கொண்டேன்.
இன்னோரு தோழி அழகான உரலில் கட்டின கிருஷ்ணனைக்  கொண்டு வந்து வைத்தார். அமைதியான அந்தத் தோழியின் பாசத்தை மெச்சிக் கொண்டேன்.

அழகா   இருக்கு கொலு, ஆனால் படிகட்டாமல் வைப்பது சாஸ்திரமில்லையே
என்று  அலுத்தவர்   ஒருவர்..
என்ன செய்வது என்னிடம் இருக்கும் இடத்தில் மற்றவர்களைச் சிரமப் படுத்தாமல்  நவராத்திரி நாயகிகளையும் அவர்கள் நாயகர்களையும்  மரியாதை செய்த நிறைவு இருக்கிறது.

இனி செய்ய வேண்டியது   கொலுவுக்கு அழைத்தவர்கள் வீட்டிற்குப் போய் மன்னாப்புக் கேட்க வேண்டியது பாக்கி. :)
அடுத்த நவராத்திரியில் எல்லாவற்றையும் சரிசெய்துவிடலாம்;)
தீவுளிக்கு   உடைகள் எடுத்தாச்சா.

இந்தத்தடவை நம் வீட்டில் பட்டாசு கிடையாது.
காசும் மிச்சம். கரியும் மிச்சம்.


என்று சொன்னவர்களும் உண்டு:)
 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Tuesday, October 23, 2012

அன்பர்களுக்கு இனிய சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை வாழ்த்துகள்

  அன்பர்கள் நண்பர்கள்  அனைவருக்கும் நாவன்மையும்,எழுத்து வன்மையும் நிறைவாக   வளம் பெற  சரஸ்வதி தேவியையும் மற்ற தேவியரையும்  வேண்டுகிறேன்.
மனம் நிறைந்த   விழாக்கால வாழ்த்துகள்.எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Friday, October 19, 2012

நான் இவண்ட் மேனேஜரான கதை...1

சின்னஞ்சிறு பெண்போலே கற்பனை செய்ய வேண்டியதுதான்.படம் ஸ்ரீராம் கேட்டது. ஈவண்ட் இவர்கள் சதாபிஷேகம்
இது இவண்ட்:)
எங்கயோ  மாலைநேரச் சந்திப்புக்கு ஏற்பாடு;)


 
ரொம்ப நாளைக்கு முன்னால்................1960 ஏப்ரில்
அம்மாவின்   தம்பிகள்  ஒருவருக்குக் கல்யாண ஏற்பாடு. பெண் பார்க்கக்
கிளம்புகிறோம்.
பாட்டி  வாங்கிய   பட்டுப் பாவாடை மிளகாய்ப் பழ வண்ணத்தில் மின்னியது. அதற்கு ஏற்ற(!)  பச்சை வண்ண  சட்டை  கைகளில் மாங்காய் ஜரிகையில்
வேய்ந்திருக்கும்.
அதைப் போட்டுக் கொண்டு குஞ்சலம் சூட்டிய பின்னலை முன்னால் போட்டுக் கொண்டு  பட்டம் சூட்டாத இளவரசியாக    அந்த மூன்று அறைகள் வீட்டில் நடை போட்டுக் கொண்டிருந்தேன்.
ஏ ஆண்டா  உங்க மாமாவுக்குத்தானே பெண் பார்க்கப் போகிறீர்கள்?
ஆமாம் மாமி . அதுக்கு நீ ஏன்  பறக்கிறே இப்படி.?

அவன் ரொம்ப (மாமாக்களோடயே  வளர்ந்ததால்  நிறைய மரியாதையெல்லாம் வைப்பதில்லை:)  )கூச்ச  ஸ்வபாவம். நாந்தான்
பெண் சரியாப் பார்க்கணும்'' அதான் யோசிக்கிறேன்.
தலைமேல் பட்டென்று  ஒன்று விழுந்தது.
யாரு  என்னைக் குட்டினது என்று திரும்பினால் ,  அம்மா!!
பேசாமல் உள்ளேவா. அவள் எப்பவுமே  இப்படித்தான் தைலா மாமி.
பிஞ்சில பழுத்தது. ஒரு பத்திரிக்கை
 விடாமல் படிக்க வேண்டியது.
அதில நடக்கிறதெல்லாம் உண்மைனு நினைத்துக் கொள்ளவேண்டியதுதான்.
அசட்டுப் பிசட்டுனு பேசறது.நீங்க தப்பா  நினைச்சுக் காதீங்கோனு '' அம்மா முகம்  சிவக்க  என்னை உள்ளே இழுத்துக் கொண்டு போனார்.
என்னிக்குத் தான் வாயைக் கட்டி,நாக்கை அடக்கப் போறியோ'அன்னிக்குத்தான் உனக்கு நல்ல பேரு  வரும்
என்று எச்சரித்தபடி ராக்கொடியைச் சுற்றி நல்ல கனகாம்பரப்பூவைச் சூட்டிவிட்டாள். நடுவில் மருக்கொழுந்தும் வைக்க மறக்கவில்லை;)

 இன்னோரு மாமா பக்கத்தில வந்தார். நீதான் எல்லாத்தையும்
பார்த்துக்கணும் மா. நாங்க எல்லாரும் பேச்சில் கவனமா இருப்போம்.
நீ பார்க்கப் போகிற பொண்ணை ப்  பார்த்துப் பேசி  ஓகே சொன்னாதான் நாங்களும் சரின்னு சொல்வோம்''என்று சமாதானம் சொன்னார்.

சரி என்று முணுமுணுத்தபடி  வந்திருந்த பெரிய டாக்சியில் ஏறிக் கொண்டோம்.
''சீவி முடிச்சு  சிங்காரிச்சு. சிவந்த நெத்தியில் பொட்டும் வச்சு''னு படிக்காதமேதை  பாட்டைப் பாட ஆரம்பித்தவளை
ச்சூ  என்ற அம்மா குரல் அடக்க, மாமா சிரித்துவிட்டார். எனக்கே கொஞ்சம் நர்வஸாதான்  இருந்தது.
பரவாயில்லை  இவள் என் பக்கத்தில் இருக்கட்டும்.

பெண்வீட்டுக்குப் போனோம். அவங்க வீட்டில் வண்ணவண்ணமாக
நிறையப் பெண்கள்.
வருவதும் எங்களை வந்து  பார்த்துவிட்டு உள்ளே போனார்கள். நான் மெதுவாக  எங்களுக்குப் போடப்பட்டிலிருந்த  பாயிலிருந்து எழுந்து அலங்காரம் நடந்து கொண்டிருந்த  அறைக்குள் போனேன்.

உன் பேரென்ன, இது பெண்ணோட தங்கை குரல்.
ஆண்டாள். எங்க மாமாம்வுக்காக வந்தேன்.
என்ன வேணும்.
இந்த மாமியோட பேசணும். இவள் மாமியா. இவளுக்கே    20 வயதுதன் ஆகிறது
சரி ''உங்க பேரென்ன என்று அந்த அழகான பெண்ணைக் கேட்டேன்.
ஜயா என்றாள். அட எங்க அம்மா பேரு.
உங்களுக்குப் பாட  வருமா என்ற அடுத்த கேள்வி. கத்துக்கலையேமா.
என்று பதில் வந்தது.
பரவாயில்லை, சினிமாப் பாட்டெல்லாம் தெரியுமான்னு கேட்டேன். ம்ம் கொஞ்சம் தெரியும் என்று  சிரித்துவிட்டார் அவர். அப்படியே
மயங்கிவிட்டேன்.

ஓடி வந்து மாமாவின் காதைக் கடித்து
மாமா ரொம்ப அழகா இருக்காங்க ,பாட்டெல்லாம் பாடுவாங்களாம். தையல் எல்லாம் தெரியுமாம். நீ சரின்னு சொல்லிடு''

மறுபடியும்  ஷ் ஷ்.
நான் வரப்போகும் பஜ்ஜியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்:)

அந்தவீட்டில் நான்கு பெண்களுமே அழகாக இருந்தார்கள் எங்கள் ஜயா மாமிதான்    பெஸ்ட்   என்று  பாட்டியிடம் வந்து சொன்னேன்.

சரி மத்த பேச்செல்லாம் நடக்கட்டும். வைகாசியில் கல்யாணம் வைத்துவிடலாம் என்றார்.. சீனிம்மாப் பாட்டி. அவர் வெளியே வந்தே நான் பார்த்ததில்லை.அவருக்கு  எந்த வெளிவிஷயமாக இருந்தாலும் உதவி செய்வதெல்லாம் அம்மாவும் மாமாக்களும்தான்.
பாட்டி அம்மாவைக் கேட்டார்.
அதான் இந்த முந்திரிக் கொட்டை பார்த்துட்டுச் சொல்லித்தே,. அதில பாதி உண்மை. மற்றதை நான் பேசிவிட்டு வந்தேன் என்று அம்மா சொன்னார். அமர்க்களமாக  நிறைவேறிய  அந்த திருமணத்தில் மாப்பிள்ளை அழைப்பில் மாமாவின் அருகே  கொஞ்ச நேரம்  ஜானவாசக் காரில் உட்கார்ந்து
அம்மா முறைப்பதற்கு முன்   இறங்கிவிட்டேன்.:)


 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Tuesday, October 16, 2012

முதல் நாள் அம்மா துர்காவுக்கு

சிங்கம் ஜியின்  யானை ஃபௌண்டெயின்
செட்டியாரும் வந்தார்.கய்கறிக்கடை வைக்க..புரட்டாசிப் பெருமாளும் வந்தார் தாயாருடன்.
குடும்பத்தைப் பிரிக்க வேண்டாம்னு   சேர்த்துவைத்துவிட்டேன்.அம்பாள் அரளி மாலையில்
மாலை மணந்த மங்கை மாலையில் மாலையும் சூட்டினாள்
இன்றைய   நைவேத்யம் மொச்சை சுண்டலும் கேசரியும்

அனைவருக்கும் அன்னைகளின் அருள் பொங்க வேண்டும்.
நன்மைகள் பெருகவேண்டும்.
மகிழ்ச்சி தங்கவேண்டும்.
மனம் நிறைந்த நவநவ வாழ்த்துகள்.

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

நவராத்திரி ஆரம்பித்தாச்சு

காராமணி சுண்டல்  கூகிளார்  உபயம்
சோளிங்கபுரம் நரசிம்ஹனும்,அமிர்தவல்லித் தாயாரும்,சின்னமலை ஆஞ்சனேயரும்.புது வரவு.
ஆரத்தியும் தீபமும்,செட்டியார் தம்பதிகளும் அவரது கடையும்
ஸ்ரீராமர்,சீதா,லக்ஷ்மண  ஹனுமான்
மற்றும்  பண்டரினாதனும் ருக்மணியும்
நாச்சியார் கோவில் கல்கருடன் புதிய வரவு
 


கண்ணனின்  ராஜ்யம்
முருகனின் அம்மா மாமனார்,மாமியார்,அம்மா
ஸ்ரீவில்லிபுத்தூர் அம்மாவின் ஆட்கி.மணவாளன்,தந்தை ,சேர்த்து வைத்த கருடாழ்வார். துளசி மாடம்.
தஞ்சாவூரிலிருந்து  ஸ்ரீமதி துளசி கோபாலன்  கொண்டுவந்த  பரிசு. நன்றிப்பா.
Add caption
கருடனுடன் வந்து ஆனையை ரட்சித்த  எம்பெருமான் நாராயணன்,ஸ்ரீ ராமானுஜர்,ஸ்ரீமஹாபெரியவா, நம் பிள்ளையார்,குகப்படலம்,ஸ்ரீஸ்வாமி தேசிகன்,அனுமன் தோளில் ராமனும் லக்ஷ்மணனும்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Monday, October 15, 2012

வருகிறது நவராத்திரி

பட்டுப் போல பூனைகுட்டிகள்
Aபீங்கானில் பாவைவிளக்கு
டேலியாப்பூ
காலம் மாறுகிறது


முப்பெருந்தேவியரும்  கொலுவிருந்து நம்மைக்காக்கும்   காலங்கள்  இறைவன் உலகைப் படைத்த நாளிலிருந்து நடை பெறுகிறது.
தயை,கருணை,அன்பு,இரக்கம்   எல்லாக் குணங்களும் கொண்ட தாய்களாக
அவர்கள் நம் வீட்டைச் சிறப்பிக்க வருவது இந்த நவராத்தி நாட்களில்.
நவராத்திரி ஐந்து  காலங்களில்  வெவ்வேறு நாமங்களோடு வந்தாலும்  நம் தம்ழ்நாட்டில் இந்த புரட்டாசி அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்களுமே கோலாகலமாகக் கொண்டாடப் படுகின்றன.

அன்னையைர் மூவருக்கும் மூன்று நாட்கள் ஒதுக்கி,முதலில் துர்கா,பிறகு  லக்ஷ்மி தேவி,கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியை
ஆவாஹனம் செய்து பிரத்தியேகப் பூகைகள் செய்வதும்


வழக்கம் என்று புகுந்த வீட்டுப் பாட்டி சொல்லிக் கொடுத்தது.

1976இல் திருச்சியை விட்டுச் சென்னை வந்தோம். பெண்ணுக்கு வயது எட்டு.

அவளோ நச்சரிக்க ஆரம்பித்தாள்.
அம்மா கொலு அம்மா கொலு  என்று.
பாட்டி சரின்னு சொன்னால் வைக்கலாம் என்று நல்ல நேரம் பார்த்து(!)
பாட்டியிடம் வரம் கேட்டேன்.
நிறைய பேர் வந்து போகிற இடம்.
இத்தனூண்டு கூடத்தில் எங்கே வைப்பாய்.
உனக்குப் படிகள் கூடக் கிடையாதே.
முதலில் பொம்மை எல்லாம் இங்க இல்லையே .எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டேனே.
ஒரே ஒரு லக்ஷ்மி ,சாயமெல்லாம் போய் ஆனால் மகாக் களையோடு இருக்கிறாள்.
அவளை வைத்து ஆரம்பி. பின் 'மகளே உன் சமத்து என்று ஒரு ஐம்பது ரூபாயைக் கொடுத்தார்.
கச்சேரி ரோடு ராஜ கல்யாண  மண்டபத்தில் கொலு பொம்மைகள் வைத்திருக்கிறார்களாம்.
அம்பாள்
குழலூதும் கண்ணன் பளிங்கில்
அங்கே போய்ப் பார்த்து வேலையை  முடி என்று அனுப்பினார்.
பூனைக்குட்டிகள், ஒரு அம்பாள்,இரண்டு பாவைகள்,ஒரு கிருஷ்ணன்   இவை 48 ரூபாயில் வாங்கிவிட்டோம்.
பஸ் சார்ஜுக்கு    ஒரு ரூபாய்,கொறிக்க  வேர்க்கடலை...

சந்தோஷமாகத் திரும்பி வந்தோம்:)

பாட்டியிடம் காட்டினால்
'அடி காமாட்சி என்று முகத்தில் கைவைத்தார்.
இதில மூணு படி எப்படித் தேத்துவே என்றும் கேட்டார்.

பொண்ணொட படிப்பு மேஜை ரெடி
தேநீர் வைக்கும் டீ டேபிள் ரெடி.
கடைசியாக சின்னவனின் உட்காரும் ஸ்டூல்


இவற்றைப் பரபரவென்று ஜன்னலோரம் வடக்குப் பார்த்து வைத்தோம்.
மாமனாரோட சலவை வேஷ்டியைக் கேட்டு வாங்கி வந்தான் பெரியவன்.
 நடு நாயகமாக மஹாலஷ்மி முகம் நிறையப் புன்னகையோடு அமர்ந்தாள்
அவளுக்குப் பக்கத்தில் அம்பாள். அந்தப் பக்கம் சரஸ்வதிபடம்.

இரண்டாம்படிக்கு கிருஷ்ணனும் பாவை  விளக்குகளும் ,சுற்றிவர சின்னவனின் டின்கி  டாய் கார்கள்.

மூன்றாம் படிக்கு பூனைக் குட்டிகளும் இன்ன்னும் கையில் கிடைத்த
குட்டி ப்ளாஸ்டிக் பொம்மைகளும்.

ஈஸி சேரில் சாய்ந்தபடி எங்களைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார் பாட்டி.

இப்ப என்ன.?  கோலம் நைவேத்யம் எல்லாம் வேண்டாமா
என்றார்.
எனக்குத் தெரிந்த மயில் கோலம் அரிசிமாவு,காப்பிபொடி, ராபின் ப்ளு, மஞ்சள் பொடி  குங்குமம்  என்று கலந்து  கோலம் போட்டு ஸ்ரீராமஜயமும் எழுதிவிட்டேன்.

மாமியார் உள்ளே யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்.
கமலா வா வா,. இந்த நண்டும் சிண்டும் வைத்த கொலுவைப் பார் என்று கூவினார்.
கொலுவா  என்றபடி  வந்த மாமியாருக்கு முதலில் சிரிப்பு வந்தாலும்
கையோடு கேசரி கிளறி
கொலு முன் வைத்தார்.
முதல் முதல் வைத்த கொலு விருத்தியாகட்டும்.
சாயந்திரம்  சுண்டல் செய்துவிடலாம் என்று சந்தோஷமாகச் சொன்னார்:)
அடுத்த பதிவில் இந்நாளைய கொலுவைப் படமெடுத்துப் போடுகிறேன்:))))


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Saturday, October 13, 2012

கைவிடப்பட்டவை----1(பிட் போட்டி)

மணல் அடைக்கலம் தந்த  வேண்டாத  குப்பை.
ஆளில்லாத வீட்டுக்குக் குப்பைகள் அடையாளம்
சுனாமிக்குப் பிறகு
அதே வீட்டின் துருப்பிடித்த வாயில் கதவு.
முன்னாள் வக்கீல் ஒருவரின் வீட்டுக் காம்பவுண்டு சுவர்
இன்னுமொரு கடற்கரை வீடு


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa