Blog Archive

Showing posts with label முயற்சி. Show all posts
Showing posts with label முயற்சி. Show all posts

Sunday, February 08, 2015

கல்லூரிக்குப் போலாமா....(மீள் பதிவு)


அம்மா   பிப்ரவரி 9  1929 பிறந்த நாள்
வந்து சேர்ந்த இடம்!!
திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கல்லூரி என்பது கதைகளில் ,திரைப்படங்களில் பார்த்து அறிந்ததுதான்.
அப்பொழுது விகடனில் சேவற்கொடியோன் எழுதிக்கொண்டிருந்தார். மணியன் எழுதிய இதய வீணையும் வந்து கொண்டிருந்தது.
பள்ளி மதிய உணவுக்கு அப்புறம் அந்தத் தொடர்களில் வரும் கதாநாயகிகள் போல எங்களுக்குத் தெரிந்த ஆங்கிலச் சொற்களை,
(நுனி நாக்கு என்று பிறகு அறியப்பட்டது)
மாற்றிப்பேசப் பழகிக் கொள்ளுவோம்.:0)
எல்லாம் கல்லூரிக்குப் போக வேண்டிய அந்த நாளை நினைத்துத் தான்.!
திண்டுக்கல்லில் அப்போது கல்லூரிகள் இல்லை .
சென்னையோ,மதுரையோ ,திருச்சியோ போய்த்தான் படிக்க வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை கல்லூரி என்பது கனவில் மட்டும் வரும் இடம் என்று தீர்மானமாகத் தெரியும். ஆனால் அதைச் சொல்லிக் கௌரவத்தை இழக்க முடியுமா. அநேகமாக ராணிமேரியில் படிக்கப் போவேன் என்று தோழிகளிடம் அலட்டிக் கொள்ளுவேன். ஏனெனில் கதைகளில் அந்தக் கல்லூரி அதிகமாக இடம் பெறும்.
தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்களும் பெற்றாகிவிட்டது. எனக்குப் பிறகு தம்பிகள் இருவர். அவர்கள் கட்டாயம் கல்லூரிக்குப் போகவேண்டும். எனக்கும் பெரிய லட்சியம் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
கயிறு இழுத்தால் நிற்கும் வண்டிமாடு....

அப்போது வந்தது அந்தக் கடிதம் .சென்னையில் இருக்கும் பாட்டி எழுதி இருந்தார். ''நம் வீட்டில் அவளாவது கல்லூரிக்குப் போய் பட்டம் வாங்கவேண்டும்.
இங்கே இருந்து படிக்கட்டும். பியூசி முடித்து நல்ல மதிப்பெண் வாங்கினால் பட்டப் படிப்பும் படிக்கட்டும்''
என்று தொடர்ந்தது அந்தக் கடிதம்.
கல்லூரிக்கு விண்ணப்பிக்க இன்னும் நான்கு நாட்களே இருப்பதாகவும், உடனே புறப்பட்டு வரும்படியும் குறிப்பிட்டிருந்தார்.
பெற்றோர்களுக்குத் தர்மசங்கடம். பாட்டிவீடு என்பது விடுமுறைக்கு மட்டுமே போகும் இடம்.
அப்பாவுக்கு யாரையும் தொந்தரவு செய்வதோ, தன் சுய கௌரவத்தை விட்டுக் கொடுப்பதோ பிடிக்காது.
என்ன தோன்றியதோ கொஞ்ச நேரம் கடந்ததும் அப்பாவும் அம்மாவும் பேசி முடிவெடுத்துவிட்டனர் என்னை அனுப்புவது என்று.
அப்பாவுக்குக் கவலை.அம்மாவுக்குப் பெண் வீட்டைவிட்டுப் போவதை நினைத்து வருத்தம். சின்னத்தம்பி என் கூடவே இருந்தான். நிஜமாவே போகப் போறியா. கஷ்டமா இருக்காது உனக்கு என்றெல்லாம் கேள்வி.பெரிய தம்பிக்கு அவ்வளவாக மனம் திறந்து பேச முடியாது.
பதினாலு வயதில் என்ன தோன்றும்!

இப்போது போல பயணச்சீட்டு வாங்குவது அவ்வளவு சிரமமில்லை. அப்பாவின் அலுவலகமான(+வீடு)) தபால் ஆபீஸுக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கும் குதிரை வண்டி போகும் தூரம்தான்.:)
அம்மாவுக்கு ஒரு பை. எனக்கு ஒரு சின்ன தோல்பெட்டி. அந்த வருடம்தான் அந்தப் பெட்டிகூட வீட்டுக்கு வந்திருந்தது.
ஒரு ஆறு பாவாடைகள். அதற்கு மாட்சிங்  ஜார்ஜெட் தாவணிகள், ஒரு கலப்படமான எல்லா வர்ணங்களும் பொருந்தும் படியான
ஆறு ஜாக்கெட்கள்.
போதுமா போதாதா கதையெல்லாம் செல்லாது. இவ்வளவுதான்:)

சரியாக மே (ஜூனா?) மாதம் 21 ஆம் தேதிச் சென்னை எழும்பூரில் இறங்கிப் புரசவாக்கம் வந்தாச்சு.
இனம் தெரியாத பயம்.சென்னை எதிராஜ் காலேஜ்!!!

. பாட்டி கரைத்துக் கொடுத்த ரசம்+ சாதம் சப்பிட்டு விட்டு நானும் அம்மாவும் கையில் , அப்ளிகேஷன் ஃபார்ம்,மார்க் ஷீட் சகிதம், மாமா கொண்டுவந்த பேபி டாக்ஸியில் ஏறி எதிராஜுக்கு வந்தோம்.
அங்கே பெரிய கியூ வரிசை எல்லாம் இல்லை.
பிரின்சிபல் மிஸ்.மாத்யூ.

ஒரு ஒன்பது கஜப்புடவை கட்டி ,பின்னின தலையை, ஒரு பின்னல் கொண்டையாகப் போட்டுக் கொண்டு,கையில் என் கையை இறுகப் பிடித்துக் கொண்ட என் அம்மாவும் ,அவ்வளவு பெரிய இடத்தை முதல் முறை பார்க்கும் நானும்,
ஒரு விசித்திரக் காட்சி கொடுத்து இருப்போம்.

அந்த நாள் வரை என் அம்மா எந்த ஒரு பள்ளிக்கூடத்துக்கும் வந்ததில்லை.
அவள் தன்னுள் பயந்தாளா தெரியாது. அறைக்குள் நாங்கள் வரிசைப் பிரகாரம் நுழைந்தபோது ஏற இறங்கப் பார்த்தார். ,ப்ரின்சிபால்.

இது என் பெண்.நல்ல பள்ளியில், மூன்றாவது ரான்க். வாங்கிப் பாஸ் செய்திருக்கிறாள்.
நாங்கள் திண்டுக்கல்லிருந்து வருகிறோம்.
இந்தக் கல்லூரியில் இவளைச் சேர்த்துக்கணும்.
இதைச் சொன்னது என் அம்மாவா என்று இப்பவும் யோசிக்கிறேன்.
எப்பவும் இரண்டு மூன்று வார்த்தைகளில் விஷயங்களைச் சொல்லிவிடும் அம்மா
மிஸ்.மாத்தியூ என் மதிப்பெண்களைப் பார்த்தார்.
அப்பா சொல்லியபடி நான் முதல் பாட்ச் எனப்படும் விஞ்ஞானத்தைக் கேட்டேன். கல்லூரியின் கடைசி அப்ப்ளிகேஷன் உன் கையில் இருக்கும்மா. உனக்கு
எஃப் குரூப் எனப்படும் ஆங்கிலம்,லாஜிக், இயற்கைவிஞ்ஞானம்தான் கொடுக்க முடியும்.
அதுவும் உன் ஆங்கில மதிப்பெண்களை வைத்துக் கொடுக்கிறேன், என்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.

அம்மாவுக்கு எனக்கு முதல் பிரிவு கிடைக்கவில்லை என்று புரிந்தாலும் ஏமாற்றத்தைக் காண்பித்துக் கொள்ளவில்லை. கல்லூரியில் இடம் கொடுத்ததற்கு நன்றி சொல்லி வெளியே வந்தோம்.

அங்கிருந்து இப்போதைய அண்ணா சாலையில் பதினாறாம் நம்பர் பஸ்ஸில் ஏறி புரசவாக்கம் லாடர்ஸ்கேட் நிறுத்தத்தில் இறங்கும் போது அம்மா சொன்னார். என்னாலும் காலேஜில் படிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று!!
அம்மாவுக்கு அப்போது வயது 35 தான்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அடுத்த  வருடத்தில் தான் மாமியாராகப் போகிறோம்    என்றும் நினைத்திருக்க மாட்டார். அதற்கடுத்த வருடம் பாட்டி ஆவோம் என்றும் எதிர்பார்த்திருக்க  மாட்டார். எல்லா நிலைமைகளையும் சமாளிக்கும் பக்குவம்,தைரியம் எல்லாம் நிறைந்த என் அம்மா. எத்தனையோ இன்னல்களைத் தாண்டி வந்து எங்களைக் காத்துப் பின் இறைவனடி ஏகினார்.

Sunday, October 30, 2011

பிசையோ வலியோ தெரபி:)

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

கால் புராணம்
1998  ஒரு தரம். 2000 ஒரு  தரம். அப்புறம்  கணக்கு மறந்துவிட்டது.
அநேகமாக எக்ஸ் ரே எடுக்கப்பட்டது காலும் பாதமும் தான்.

ஏது இந்த அம்மா இன்னும் வரலையே நாலு மாசங்கள் போய் விட்டதே
என்று அப்போதைய
  தேவகியும் இப்போதைய மீனாட்சி  ஆசுபத்திரி  எமர்ஜென்சி
நர்ஸ் நினைச்சிருப்பாங்க,.

மண்ணோ, கல்லோ, தண்ணீரோ  எதுவாயிருந்தாலும்
ஆக்ஷேபனையே இல்லை. தடுக்குமா தடுக்காதா என்று என் கால்கள் தேடும்.
தடுக்கி விழுந்தால்  வலி வராமல் இருக்குமா. இல்லை வைத்தியருக்குக்
கொடுக்கவேண்டியதைக் கொடுக்காமல்தான் சரியாகப் போகுமா.

முதல் தடவை விழுந்தபோதே  வைத்தியர் சொன்னது  , முதுகெலும்பு தேய்ந்து
உதிருவது போல இருக்கு.
கால்ஷியம் மாத்திரை எடு.  உடல் எடையைக் குறைத்துவிடு.
உடல் தானே  சமநிலைப் பட்டுவிடும் என்றார்.

அதற்காக அகஸ்தியர் மாதிரி இமயம் முதல் பொதிகை வரை நட க்க
என்னால்  முடியுமா.:)
அவ்வப் பொழுது விழுவதும் எழுவதும் கால்கட்டு போடுவதும்
வழக்கமாக ப்  போதும்,  ஆறு மாதங்கள் முன்னால்   காலில் பட்ட  அடி
வலி குறையவே இல்லை.

சரிசெய்தே ஆகவேண்டிய நிலையில்   எலும்பு  வைத்தியரிடம் போய்
வந்து ஒரு வாரம் ஓடிவீட்டது.
டாக்டரின் உதவியாளினி  என் காலில் ஒரு அங்குலம் கூட விடவில்லை.

இரண்டுகைகளினாலும்    அழுத்தி இத்தனை நாட்களாக எனக்குத் தெரியாமல் இருந்த தசைநார்கள், செல்லணுக்கள்  எல்லாவற்றையும் வன்மையாக ச்  சிறந்த  முறையில்    அறிமுகப்   படுத்தினார்.:(

உங்களை  ஒரே மாதத்தில்  சரிப் படுத்திவிடுகிறேன். தினம்
ஃபிசியோதெரபி எடுத்துக் கொள்ளுங்கள்.
அந்தப் பயிற்சிகளைச்   சரிவர  வீட்டிலும் செய்தால்  தசைகள் பலம் பெறும் என்று    புத்திமதி சொல்லி அனுப்பினார்..

தமிழ்மண நட்சத்திரம் அப்படி இப்படின்னு நான்கு நாட்கள்     வாய்தா வாங்கி  வைத்துக் கொண்டேன்.
எங்கள் குடும்பத்திலேயே  அவரிடம் சிகித்சை எடுத்துக் கொண்டவர்களின் அனுபவங்கள்  என்னைப் பயமுறுத்தின.   உடல் பூராவும்
வலி க்கும்  ஆனால் பழகிவிடும்.பூரண    குணம் நிச்சயம்.!!!!

மதில்மேல்  பூனையாக வீட்டுக்குப் பக்கத்து   தெருவிலேயே  இருக்கும்
வைத்திய சாலைக்குப் போன முதல் நாள்   ' ராஷி'
(அதுதான் அந்தப் பெண்ணின் பெயர்)   பூப்போல்  கால்களுக்கு ஒத்தடம் கொடுப்பதுபோல  எங்கெல்லாம் வலியிருக்கிறது என்று தெரிந்து கொண்டார்.

இவ்வளவுதானா. இதற்காப்  பயந்தோம்  என்றவாறு

 எல்லோரிடமும்
தொலைபேசி என் ஆநந்தத்தைப் பகிர்ந்து கொண்டு   நீங்க எல்லாரும் அங்கே
வைத்தியம் செய்து கொள்ள தாராளமாகப்   போகலாம்.
வலியே      இல்லை என்று சொல்லிப் பெருமை சொல்லிக்கொண்டே அடுத்தநாள்    வைத்தியத்திற்குப்   போனேன்..

கோதுமை மாவு    ,சப்பாத்திக்குப்  பிசைவோம் இல்லையா....
அதுபோல  என் கால்களில் உள்ள     தசைகள் அழுத்தப்பட்டுப் பிசையப் பட்டு,
வலி தாங்காமல் போன போது,
பனிக்கட்டி நிரம்பிய பையினால்   ஒத்தடம் கொடுத்தார் அந்தப் பெண்.

இப்போது    நான் முழங்கால் வலி என்றே சொல்வதில்லை.
உடல் முழுவதும் புதுரத்தம் ஓடுபவது போல புத்துணர்ச்சிக்காகக் காத்திருக்கிறேன்.
டாக்டர்   அப்படித்தான் சொல்லி இருக்கிறார்.  இன்னும்  பத்து நாட்கள்  இந்தப் பயிற்சி மேற்கொண்டால் போதும்.
ராஷி என்னை ரொம்பவே மெச்சிக் கொள்கிறார்.
இங்க வரவங்க இரண்டு நாட்களுக்கு மேல  வரத்தயக்கம் காட்டுகிறார்கள்
ஆந்டி..
உங்களுக்குப்  பொறுமை  அதிகம்.
நீங்க   மூணு நாள் வந்துட்டீங்க.
இனிமே  வலி குறைந்துவிடும். முன்னைவிட வேகமா நடப்பீங்க  பாருங்க.
என்று அவள் சொன்ன அடுத்த நாள் ஏதோ  ஒரு தடங்கல் வந்துவிட்டது.
போக முடியவில்லை.


அடுத்தநாள்     பயிற்சியை நினைத்தால்   இரண்டு கைகளுக்கு   நடுவில் அகப்படும்    பரோட்டா மாவுதான் நினைவுக்கு  வருகிறது.
பரவாயில்லை இதையும்  தாண்டிவிடலாம்  மெள்ள,:)

பிறகு  அதே வைத்தியரின்  பயிற்சிக் கூடத்துக்குச் சென்று
ஒற்றைக் காலில் நிற்கப் பழகினேன்.
அடுத்த நாள்  கீழே உட்காரப் பயிற்சி நடந்தது.

ஒவ்வொரு நாள் பயிற்சிக்கும் 450 ரூபாய்தான்
பயிற்சிகளைத் தொடர்ந்து  ஆறு மாதங்கள் கற்றுக் கொள்ளுமாறு அங்கே இருக்கும்  ஆன்ட்ரு  வற்புறுத்தினார். பத்து நாட்களுக்குப் பிறகு போகவில்லை.

இப்பொழுது  ஒரு மாதிரி வேகம் குறைந்த நடையாதலால்  விழவில்லை.

மெரினா,வீட்டு வாசல்,துபாய்  ஏர்போர்ட், சுவிஸ்  நிலம் எல்லாவற்றையும்  என் கால்  ஸ்பரிசித்திருக்கிறது.

இனி விழாமல் அவன் பார்த்துக் கொள்ளுவான். நடை தளர்ந்துவிட்டதல்லவா.