Blog Archive

Saturday, July 26, 2008

க்ரிண்டெல்வால்ட் மலைத்தொடர்..ஸ்விஸ்
ஒரு வழியாக அடுத்த நாளும் வந்தது.


ஏன் ஒருவழியாகன்னு சொல்றேன், தூங்க முடியாத அளவுக்கு ஒரே


புழுக்கம்.
அப்பவே தெரியும் அடுத்த நாள் நிச்சயம் மழை இருக்குனு.


பாத்திரம் பண்டங்களுடன் குடைகளும் பெட்டிகளில் ஏறிக்கொண்டன.
மொத்தம் ஆறு பெட்டிகள்.


முதல் ஆரம்பத்திலியே பையன் சொல்லீட்டான்,'அம்மா எந்தப் பெட்டி பக்கமும் போகாதே. இன்ஃபாக்ட் உன் கைப்பை கூட பொட்டிக்குள்ள போட்டுடு.
மருந்தெல்லாம் நான் வச்சுக்கிறேன்.

அப்புறம் அவன் தடுக்கினான் இவன் தடுக்கினான்னு வம்பே வேண்டாம். ஃப்ரீயா கைவீசி நட.'' என்று சொல்லி நிறுத்தியவன்''வேண்டாம் கை வீச வேண்டாம்,சும்மாவே வா'' :)))
என்று 1 மணி வண்டியைப் பிடிக்க நடையைக் கட்டினோம்.
அது இரண்டு மணி நேரத்தில் இண்டர்லாக்கன் வந்தது.
அங்கேயெ கொஞ்சம் சுத்தலாம் என்றால் இரவு சாப்பாடு செய்ய,
சீக்கிரமே க்ரிண்டெல்வால்ட் கிராமத்துக்குப் போய்ச் சேரணும், அதனால் அடுத்த வண்டியைப் பிடித்தோம். இதோ,


போன தடவை

(2007) போய் வந்த இடம் தான் இந்த வால்ட் கிராமம்.

மேல இருக்கிற லின்கில் சொல்லிப் படம் போட்டு இருக்கேன்.


என்ன ஒரு வித்தியாசம்,அப்ப தமிழ்ல எழுதலை.

அடுத்தது அது ஒரு நாள் பயணம்.

இப்ப வந்தது ' நான்கு நாள் இருந்துட்டுப் போகலாமேன்னு'' சொல்லுவாங்க இல்லையா அந்த மாதிரி இந்த மலைகள் எல்லாம் என்னிடம் சொல்லி இருந்தது.அதனால் வந்த பயணம்:)வந்துட்டோம்.:)) உண்மையில் மிக மிக இதமான இடம். மனதை அள்ளிக்கொள்ளும் இயற்கைவளம். எங்கே பார்த்தாலும் காற்றின் ஒலியும் தண்ணீர் ஓடும் சப்தமும்.
கொண்டுவந்த இட்டிலியும் புளியோதரையும் டெக் மாதிரி இருந்த இடத்தில் வைத்துக் கொண்டு சாப்பிட்டோம்.
எப்பப் பார்த்தாலும் புளியோதரையானு அலுத்துக் கொள்ளக் கூடாது. மெஸ் இல்லாமப் பாக் செய்து எடுத்துப் போக இவையே உகந்த வகைகள்.
பையன் பாக் செய்யறதையே பார்த்துக் கொண்டிருந்தேன். எத்தனை சீக்கிரம் இந்தப் பசங்கள் குடும்பத்தில் இணைந்து எல்லா சமாசாரமும் கற்றுக்கொள்ளுகிறார்கள் என்று பெருமையாக இருந்தது.
நன்றாக வளத்தோடு வாழணும்.
பழங்காலமா இப்ப. நாம் ஊருக்கு ரயில் பிடிக்கணும்னா
டிக்கட்டிலிருந்து எல்லாம் பத்ரமா எடுத்துக் கொண்டு வழிக்குப் பால் டப்பா,நாப்கின்,ஃப்ளாஸ்க் இத்தியாது இத்தியாதி எடுத்து தயாரா இருக்கணும். சாமி , கடைசி நேரத்தில் வொர்க் ஷாப் வேலை வராம இருக்கணுமே, ரயில் நிக்கும் போதே,புறப்படறதுக்கு முன்னாடி ஏறணுமே. ம்ம் என்னவெல்லாமோ டென்ஷன்.
அப்படிப்பட்ட வேலை பளு. இப்ப எல்லாமே வேற மாதிரி.
இங்கேயும் செரி, மற்ற இரண்டு இடங்களிலும் சரி, கணவனாகப் பட்டவர்கள் சரி சமானமாக வேலை செய்கிறார்கள். அடுத்த நாள் பயணத்தை மீண்டும் படங்களோடு பதிகிறேன். பார்க்கலாம்.
Friday, July 25, 2008

சுவிட்சர்லாந்து வந்தோம்தோம்.2008


பசுமை,பசுமை,பசுமை. சூரிக் விமான நிலையத்தில் இறங்கினதும் மனதுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது,. அந்த அழகும் நேர்த்தியும் அமைதியான

வரவேற்பும் எப்போதும் போல இதமாக இருந்தது.மகன் சொன்னபடி இமிக்ரேஷனில் வாயடிக்காமல் வெளியில் வந்தேன். அங்கேயிருந்த பெண்தான், இப்பத்தானே போனீங்க அதுக்குள்ள இன்னோரு பயணமான்னு கேட்டாள்.
என்னம்மா செய்யறது அழைத்த குரலுக்கு ஓட நினைக்கிறோம். முடிந்த வரை
செய்வோம்னு சிரித்தேன்.
எனக்கும் இப்படிப் பெற்றொர் கிடைத்தால் தேவலை என்றாள்.


மகனிடம் சொன்னால் நம்ப மாட்டேன் என்கிறான். அவங்க எல்லாம் பேச மாட்டேங்களே. சும்மா சொல்றியாம்மான்னு கேக்கறான்.:)
நமக்குத்தான் கண்காது மூக்கு வைக்கும் பேர்வழின்னு பட்டம் கட்டி இருக்காங்களே:)
நிசத்தைச் சொன்னாக்கூட நம்ப மாட்டேங்கறாங்க.


வழக்கம்போல்(சதங்காவைச் சொல்லலைப்பா)
பாசல் வண்டியைப் பிடித்துப் பொட்டிகளை ஏற்றி வந்த காப்பியையும் ருசித்து, நலம் விசாரித்து முடிப்பதற்குள் வீடும் வந்துவிட்டது.
மழை உண்டாடாப்பான்னு கேட்டுக் கொண்டேன். ஏன்ன்னா இவங்க ஊரில மணிக்கு மணி அறிவிப்பு இருக்கும். தூறல்னா தூறல். இடின்னா இடி. வெறும் மேக மூட்டம்னா அதே.
நம்ம கவலை நமக்கு:))

. அவனும் போன வாரம் உலகைக் கலக்கிற இடி இடிச்சதும்மா. இந்த வாரம் அவ்வளவு இல்லை. வருவதற்கு முன்னால் நீங்க கிளம்பிடுவீங்க என்றான்.
அவன் வீட்டில் ஏற்கனவே விருந்தாளிங்க வந்திருந்தார்கள். எல்லாருமா இட நெருக்கடியோடு இருக்க வேண்டாம்னு வேற ஒரு மலையடிவாரக் கிராமத்தில் ஒரு விடுதியில் சமைத்துச் சாப்பிடுகிற வசதியோடு
இடம் ரிசர்வ் செய்திருந்தான்.


அடுத்த நாள் அங்கே போகலாம்னு முடிவு. அதுக்கு முன்னால் உனக்கு ஏதாவது வாங்கணும்னா டவுனுக்குப் போகலாம்னு சொன்னதும் ஆஹா அதுக்கென்ன போலாமேன்னு கிளம்பிட்டேன்.
மனசுக்குத்தான் வயசாகலை. உடம்பு அப்படியில்லையே:)
அதைத் தெரிஞ்சு கொண்டால் பிரச்சினையே வராது!!!

கொஞ்ச நேரம் பேத்தியோடு கொஞ்சிவிட்டு , ஒரு குட்டித் தூக்கம். ஒரு நல்ல காப்பி ,டவுனுக்குப் புறப்பட்டோம். சும்மா காலாற நடந்துவிட்டு வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்த ரைன் நதியைப் பார்த்துப் பெருமூச்சு விட்டு, பேருக்கு இரண்டு கம்பளி சாக்ஸ் வாங்கிக்கொண்டு வீடு திரும்ப எட்டாம் நம்பர் டிராமில் ஏறினோம். வார நாளாக இருந்ததால் நிறைய கூட்டம் இல்லை.
இருந்தும் வெய்யில் அடிக்காத பக்கமாகப் பார்த்து நாங்கள் மூவரும் இடம்
பிடித்து உட்காரப் போன போது:)
டிராம் ப்ரேக் போட்டது.


ஒரே ஒரு குலுக்கல் அடுத்த நிமிடம் நான் எதிர் சிட்டில் இருந்த ஒரு (ஏதோ ஊர்காரர்) ஆளின் தலையைப் பிடித்துவிட்டேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அவர் அலறவில்லை. அப்படியே பிரமித்துப் போய் விட்டார்.
கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு நின்ற போது யதேச்சையாகத் திரும்பினால் மகன் முகம் சிவந்து போயிருப்பது தெரிந்தது.
ஒன்றும் யூகிக்க முடியாமல் நான் விழ இருந்த ஆளின் தலையைத் தட்டி வெரி வெரி சாரி என்று இரண்டு மூன்று தரம் சொன்னாலும் ஒரே விரைப்பாப் பார்த்தார்.

அப்படியே பத்ரமாக உட்கார்ந்து மீண்டும்மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.
ம்ஹூம் அவருக்கு கோபம் தணியவே இல்லை.
இதென்னடா கஷ்டகாலம் என்று அவர் பக்கம் இருந்த அம்மாவைப் பார்த்தால் அதுக்கு மேல் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது அவள் முகத்தில்!!
அடுத்த நிறுத்தம் வருவதற்குள் இருவரும் எழுந்து அதே விரைப்போடு
மார்ச் செய்தபடி     இறங்கி விட்டார்கள்.
அவர்களுக்குப் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த இன்னோரு அம்மா,
என்னை இன்னும் விரோதமாகப் பார்த்தவுடன் எங்கிருந்தோ வந்த சிரிப்பு என்னைப் பிடித்துக் கொண்டது.
என் மகனுக்கும் அது தொற்றிக்கொண்டது.

ஏம்மா விழப் பார்த்தால் அவர் தலையை ஏம்மா பிடிக்கறே.
தே டூ நாட் லைக் எனி ஒன் டச்சிங் தெம் என்றானே பார்க்கலாம்.
அதுக்கு மேல குழந்தையைத் தட்டற மாதிரி அவர் தலையை வேற தட்டறே.
மோசம்பா இந்த அம்மா.
பெரிய வைத்தியம் செய்யற நினைப்பு.'' என்று முகத்தைப் பிடித்துக்கொண்டு
சிரிக்கிறான்.
தீர்ந்தது.கதை கந்தல்.நம்மளை இன்னிக்கு நல்ல போஸ்ட் மார்ட்டம் செய்யப் போறாங்க வீட்டுக்குப் போனதும் இன்னும் மருமகள்,பேத்தி, சம்பந்திகள் எல்லாம் விழுந்து விழுந்து சிரிக்கும் வரை இவங்களுக்கு அவல் கிடைத்ததே என்று என் தலை எழுத்தை நொந்து கொண்டே இறங்கி வந்தேன்:))
இன்னும் பேத்தி ஒண்ணுதான் பாக்கி. ''பாட்டி என் கையைப் பிடிச்சுண்டு வான்னு '' சொல்லப் போகிறா. ஹூம்.........

Thursday, July 24, 2008

கிளம்பியாச்சு எக்ஸ்ப்ரஸ்:)

இது ஸ்விஸ்.

இது துபாய். இது சென்னை.
துபாயை விட்டுக் கிளம்பும் நேரமும் வந்தாச்சு.
பாப்பாவை விட்டு விட்டு ஊருக்குப் போகணுமே என்கிற வருத்தம்.
என்னவோ நானே பெற்ற பெண்ணென்று நினைப்பு. அவளுடைய(பேத்தி)
அம்மாவிடம் ஏகப்பட்ட புத்திமதி சொல்லி விட்டு பொட்டிகள் நாலையும் கைப்பெட்டிகள் ரெண்டையும் தூக்கிப் போட்டுக் கொண்டு,
விமான நிலையத்துக்கு விரைந்தோம். பெரியவன் முடிந்தவரை அறிவுரைகள் சொல்லியபடி வந்தான். எங்க நடந்தாலும் பார்த்து நடம்மா. ஸ்பெஷலா இந்த எலிவேட்டெர், ஓடற வேகத்தில பொட்டி தடுக்கி விழ வாய்ப்பு இருக்கு....இப்படி அவன் சொல்லச் சொல்ல தூக்கக் கலக்கத்தில் மண்டையை
சரி சரி என்று ஆட்டியபடியே வந்துவிட்டேன்.
இமிக்ரேஷன் வந்தாச்சு தலை ஆட்டறதை நிறுத்திட்டு, அவனுக்கு பைபை சொல்லு என்று சிங்கத்தின் குரல் கேட்டது. அடப்பாவமே தகாப்பன் சாஅமி ரோல் எடுத்துண்டவனுக்கு வரேன்பா ன்னு கூட சொல்லலீயே என்றூ வேகமாக யாரையோ பார்த்து கையசைத்து விட்டு,
ட்யூட்டி ஃப்ரீ ஷாப்பிங் ஏரியா வந்ததும் கால்கள் தாமாக நின்றன. இவர் தனக்கு வ்வேண்டும் எகிறதை வாங்குவதாகச் சொல்லி எங்கேயும் பார்த்துக் கூட்டத்தில தொலைஞ்சுடாதேனு அருமைய சொல்லி விட்டு அடுத்த கடைக்குப் ஓனார். நானும் தங்கம் விற்கும் கடை பக்கம் கண்ணால் மேய்ந்தூவிட்டுத் திரும்பும்போது வேகமாக ஓடின ஜப்பான்காராரோட பெட்டியும் என் பெட்டியும் சந்தித்துக் கொள்ள, ஒரே இடத்தில தயாரான பாசமோ என்னவோ!!
அடுத்த வினாடி நான் கீழே.அடச்சே என்று ஆகி விட்டது.
இப்படிக்கூடவா ஒரு முழங்கால் சதி செய்யும்???
பத்தாயிரம் பேர் நடமாடுகிற இடத்தில் ஒரு வயசான அம்மா விழுந்தால் என்ன நடக்குமோ அத்தனையும் நடந்தது.:)
அடி ஒண்ணும் இல்லை கோபம்தான் எனக்கு, அந்த ஆளை நாலு நல்ல வார்த்தையினால் திட்டலாம் என்றால் அவன் ஜாக்கிச்சான் ரேஞ்சில் படிகளி நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.
இந்தக் கூத்து போறாது என்று ,அடுத்த கடையில் சிங்கத்தையும் காணவில்லை.
பகீர்னு பயம். வலி கூடத்தெரியவில்லை. ஸ்விஸ் ஏர் போர்டிங் அனௌன்ஸ்மெந்த் வர ஆரம்பித்தது.
சிங்கத்தை மொபைலில் கூப்பிடலாம் என்றால் என்னிடம் மொபைல் இல்லை.
வழியோடு போய்க்கொண்டிருந்த ஒரு சமர்த்தாகத் தெரிந்த பையனிடம் அப்பா
என் பையனிடம் பேச வேண்டும், உன் கைபேசி கொடுக்கிறாயா என்று கேட்டதுக்கு அவன் பயந்து ஓடி விட்டான்.
இப்படியும் நடக்குமா கடவுளே, ஆஸ்போர்ட் டிக்கட் எல்லாம் அவர் கையில் இருக்கு எங்அ போனார்னு தெரியலையே, ஆஞ்சனேயா என் ராமனை நீதான் தேடணுமென்று புலம்பிய படி
மேலே போகும் எஸ்கலேட்டரில் ஏறி அங்க டிபார்ச்சர் கேட்டில் என்னைத் தேடுகிறாரோ என்று போஒனேன்பா.
அங்க சத்தமாக ,அம்மாவைக் காணோம்பா. ஐ லாஸ்ட் ஹெர், ஒரே டென்ஷன்'' என்று சிங்கத்தின் குரல் கேட்டது.
நான் கையை ஒரு நரைத்த தலை தெரிந்த திக்கில் ஆட்டினாலும் அவர் என்னைப் பார்த்தால் தானே.
பேர் சொல்லிக் கூப்பிடவும் கூச்சம்.:)
திரிசூலம் கேஆர் விஜயா மாதிரி அழக் கூடத் தோன்றவில்லை.
என்னன்ங்கனு சொல்லப் பழக்கமும் இல்லை:)
சட்டென்று திருப்பிப் பார்த்து விட்டார்.
சட படன்னு கையையும் பொட்டியையும் இழுத்துக் கொண்டு கேட்டை நோக்கி விரைந்தார்.
பரிதாபமாக இருந்தது.
எப்படியொ ஸ்பெஷல் வாயில் வழியாக அந்த ஸ்விஸ் செக்யூரிடி எங்களை பிளேன் வரை போஒகும் பஸ்ஸில் ஏற்றீ விட்டார்.
ஏற்கனவே வந்து விட்டவர்கள் எங்களைக் கொஞ்சம் வினோதமாகப் பார்க்க,
நாங்களும் எங்கள் இருக்கைகளைத் தேடி அமர்ந்தோம்.
இனிமே என் கண்ணை விட்டு அந்தப்பக்கம் இந்தப்பக்கம் போகாதே என்று ஒரு கச்சிதமா சொல்லிவிட்டு இவர் ஆழ்னிலைத் தியனத்தில் இறங்கி விட்டார்.
அப்புறம் பார்த்தால் இன்னும் பத்துப் பேர்கள் எங்களை விட தாமதமாக வந்து கோண்டிருந்தார்கள்.
அவர்களில் ஒருவர் என்னைத் தடுக்கியவர்:)
Sunday, July 13, 2008

இல்லாத திண்ணையை நான் என்ன சொல்லி பாராட்ட:)

இது திண்ணையாக இருந்து அறையாகி விட்ட இடம். சென்னை:(
இது இந்த ஊரில் வீட்டு வேலை செய்பவர்கள் கூடிக் கலகலக்கும் இடம்.

இந்தக் குடியிருப்பின் வாசலில் இருக்கும் நிஜத் திண்ணை:)


இது திண்ணை மரத்தடி:) இங்கேயும் வழிப்போக்கர்கள் அமர்வதுண்டு. அதுவும் இந்த வெய்யிலில் கைகளில் மோர் இருக்கும் பாட்டிலை வைத்தபடி,ஆஸ்வாசப்படுத்திக் கொள்ளும் இடம்.
பக்கத்து சாலையில் பஸ் வரும்வரை காத்திருக்கும் இடம்.
அலுத்துப் போய் ஒரு டாக்சியாவது கிடைக்குமா என்று தவிக்கும்போது ஆதரவாக நிழலும் காற்றும் கிடைக்கும் இடம்.
மொத்தத்தில் பாலபாரதி ஆரம்பித்து அனைவரின் நினைவுகளையும் பதிய வைக்க ஆதாரமாக இருந்த திண்ணை.நானும் இதை எழுதிப் பதிந்து விட்டேன்:)Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Saturday, July 12, 2008

பை பை துபாய்......
பொட்டியெல்லாம் அடுக்கியாச்சு. கிளம்ப வேண்டியதுதான். என்ன முன்பு போலத் துபாய்க் கடைகளின் வசீகரம் இழுப்பதில்லை.:)
எதைப் பார்த்தாலும் வாங்க வேண்டும் என்ற நினைப்பு, ஊரில் யாருக்காவது கொடுக்க என்று வாங்கிச் செல்வதும் இப்போது கொஞ்சம் நின்றிருக்கிறது,.
காரணம் எமிரெட்ஸின் பாகேஜ் அளவுதான்.
பேரீச்சம்பழம் இங்க கிடைப்பது போல் சென்னையில் கிடைப்பதில்லை.
அதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்.
மீண்டும் லெட் களி,க்ளீன் களி உணவகத்துக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இது கொஞ்சம் மாறுபட்ட இடம்,இன்னும் சுத்தமான அமைப்பு.
மூக்கை உறுத்தாத மணம்.
உபசரிப்பு.அதனால் வயிற்றுக்கும் தொந்தரவு இல்லை. அதிகக் காரமில்லாத
நிறைய காய்கறிகள்,பழங்கள் சேர்த்த மெனு.
ஒப்புடன் முகம் மலர்ந்து உபசரித்து உண்மை பேசி:)
இதெல்லாம் ஒரு விலைக்கு நன்றாகக் கிடைத்தது.
இந்தத் தடவை சிங்கத்துக்கு வெளியே செல்லவும் கட்டுப்பாடு. வெய்யில் தாங்காது
என்று. அப்படியும் பையனிடம் சொல்லாமல் நழுவி விட்டார்.
எனக்குத்தான் சாமர்த்தியம் போதாது. அவசியமும் இல்லை:)
தசாவதாரம் போய்ப் பார்க்கலாம் என்ற முனைப்பும் இல்லை. தெரிந்தவர்கள் இணையத்தில் பார்த்ததாகச் சொன்னார்கள்.
Behaind enemy lines சினிமா மட்டும் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது.
அந்த பரபரப்பு என்னிடமிருந்து விலகவே சிலநேரமாச்சு.
அத்ற்கப்புறம் அந்தப் படத்தோட ரெவியூ படிச்சதும், அடடா, அவ்வளவுதானா என்று தோன்றியது.
படம் எடுக்க அவர்கள் பட்ட சிரமங்கள் இவர்கள் துண்டு துண்டு ஆகக் கிழிப்பதில் அந்த மாஜிக் போய் விடுகிறதோ.:(
வாழ்க்கையில் எல்லாமே அப்படித்தான். ஒருவர் முயற்சியில் மட்டுமே வாழ்வு அமைவது இல்லை. இருவரும் ஒத்துழைத்தால் கொஞ்சமாவது நிம்மதி கிடைக்கும்.
சற்றேறக் குறைய சம்சாரம் இருந்தால் கூறாமல் சந்நியாசம் கொள்ள நாம் என்ன அவ்வையார் காலத்திலா இருக்கோம்:)
பக்கத்து வீட்டுப் பைலட் வேற ஏர்லைன்ஸ் பார்த்துக் கொண்டுவிட்டார். அவர் வீட்டு அம்மாவுக்கு இந்த இடத்தைவிட மனசில்லை.அவங்க இங்கயும் அவர் பாஹ்ரனைக்கும் ஆகக் குடித்தனம் நடக்கிறது.
எகிப்து குடும்ப மாமனார் மாமியார் கிளம்பிட்டாங்க. அந்த குணாப் பொண்ணும் ஒழுங்காத் திருப்பி வேலைக்கு வந்து விட்டது.
இப்போதைக்கு எல்லாம் சுபமே. இப்படியே இருக்கட்டும்
நாங்களும் தேச சஞ்சாரம் கிளம்பறோம்.
மீண்டும் சென்னைக்குப் போனால்தான் நமக்குச் சரிப்படும்.
உப்பும் தண்ணியும் எங்க எல்லாம் போட்டு இருக்கோ
அங்க எல்லாம் டேரா போட்டு விட்டுத் திரும்பலாம்.:)
துணைக்கு இணையமும் பெறாத பிள்ளைகளும் இருக்கையில என்ன கவலை:)மீண்டும் சந்திக்கலாம்.Thursday, July 03, 2008

பெனாத்தலாருக்கு மணநாள் வாழ்த்துகள்!!!!
ஜூலை 4!! யுஎஸ் ஏ நாடு சுதந்திரம் அடைந்தது கொண்டாடுகிறார்கள். அது நமக்குத் தெரியும்.
ஆனால் அன்னிக்கே ஒரு சுகமான தளையில் மாட்டிக்கொண்டவர் யார் தெரியுமா உங்களுக்கு???
அதுதான் நம்ம பெனாத்தல் வலைப்பூக்காரர்.
அவருக்கும் திருமதிக்கும் திருமண நாள் வாழ்த்துகள் சொல்லவே இந்தப் பதிவு.
இன்னும் இனிய நாட்கள்,வருடங்கள் சேர்ந்திருந்து
ஆரோக்கியத்துடனும்,ஐஸ்வரியத்துடனும்,
மகள்களுடனும் சுற்றத்தாரோடும் நீண்ட நல் வாழ்வு வாழ நாம் எல்லோரும் வாழ்த்துவோமா:)
இனிய மணநாள் வாழ்த்துகள் சுரேஷ். உங்கள் திருமதியின் பெயர் தெரிந்து கொள்ளாமல் விட்டு விட்டேன்.
திருமதி சுரேஷ் திரு சுரேஷ் பாபு இருவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நல் வாழ்த்துகள்.
மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ் ஜூலை4th:))))
அன்புடன் இணைய நட்புகள்.

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

சொற்களே மிச்சம்.அம்மா.
கடுகு தாளிக்கும்போது,
இட்லித்தட்டில் எண்ணெய் தடவினால்,
''கூந்தலிலே நெய் தடவி'' பாட்டைக் கேட்டால்
மௌனமாகச் சிரிக்கும் மகாலக்ஷ்மி படத்தைப் பார்த்தால்,
கசங்கல் துளியுமில்லாமல் நேர்த்தியாகக்
கட்டிய புடவையில் மெலிந்த தேகத்தோடு எதிரே
வரும் ஏதோவொரு வயதான
அம்மாவைப் பார்க்கும் போது இன்னமும்
கண்ணில் தண்ணிர் கட்டுகிறதே.
எவ்வளவு வருடம் போனால் உன்னை
வலியில்லாமல் நினைப்பேன் என் அன்புள்ள அம்மா.

Tuesday, July 01, 2008

சதுரங்கம்...நீயும் நானுமா?புதிதாக மகன் வாங்கி வைத்திருக்கும் மடிகணீனி சாப்பாட்டு மேசையில் இருப்பது மகா சௌகரியம்.

மடியில் பாப்பாவை வைத்துக் கொண்டு தமிழ்மணம் மேயலாம். இதிலென்ன சங்கடம் என்றால் பாப்பாவுக்கும் கணினி மேல் ஆர்வம் வந்து விட்டது.

கண்முன்னால் பாட்டி கை மட்டும் போய்ப் போய் வருதே பாட்டி எங்க என்று மேலே முகத்தை நிமிர்த்துகிறது.
இல்லாவிட்டால் கைவளையலைப் பிடித்துக் கொள்ளுகிறது.
இப்ப என்ன பண்ணுவேங்கிற மாதிரி.:)

அப்படியாவது இணையத்துல உலாவணுமான்னு கேக்கலாம்.
நமக்கு அஷ்டாவதானியாகணும்னு ரொம்ப நாள் ஆசை.

இதையும் செய்து அதையும் செய்து, இடுப்பில் குழந்தை, அடுப்பில தோசை
இதெல்லாம் அந்தக் காலத்தில செய்தது.
அது போறாதுன்னு ரேடியோ வேற பாடிக்கிட்டு இருக்கும்..:)
பார்க்க்கிறவங்களுக்குக் கொஞ்சம் விபரீதமாவே தோணும். ஏன்னா
அடுப்புக்கு அந்தப் பக்கம் படித்துக் கொண்டிருக்கும் நாவல் வேற இருக்கும், பக்கம் திரும்பாமல் இருக்க அது மேல ஒரு குழவி:)
சப்பாத்தி செய்யறதுதான்..

இதெல்லாம் செய்தது ஒண்ணும் பெரிசில்லைம்மா. இப்ப இந்தக் கணினியில் செஸ் விளையாட்டு இருக்கு.அதுகிட்ட நம்ம வீரம் பலிக்க மாட்டேன் என்கிறது
நானும் ஏதோ எங்க அப்பா கத்து கொடுத்த
மூவ்ஸ் வச்சு சுலபமா என் பேரனை ஜெயிச்சுடுவேன்.(சீ)

இந்த கல்லுக் குண்டு கணினி என்னைத் தோற்கடிப்பதிலியே இருக்கு. தோற்பதும் ஜெயிப்பதும் விளையாட்டில் சகஜம்தான் இல்லைன்னு சொல்லலை.
ஆனா இது ரொம்ப மோசம். என்னோட சுய மதிப்பீட்டையே கவுத்துடும் போல இருக்குப்பா..

முதல் ஐம்பது கேம் வரை தோற்பது பிரமாதமாகப் படவில்லை.
என்ன இருந்தாலும் ஒரு கணினிகிட்டத் தோற்கிறதில பெரிய நஷ்டம் ஒண்ணுமில்ல.:)))
அப்புறம் கொஞ்சம் கவனமாகத் திட்டம் போட்டு விளையாடியதில் நான்கு முறை ஜெயித்துவிட்டேன்.

பிறகு திடீரென ஸ்ட்ராட்டிஜி மாற்றிக் கொண்டு விட்டது. நான் ஜெயிப்பது போன்ற நிலைமை வந்தால் ''நௌ தெ கேம் இஸ் அ ட்ரா'' என்கிறது.
செக்மேட் வைத்து வெற்றி பெறப்போகிறோம் என்கிற நிலைமையில் என்னைச் செக் செய்துவிடுகிறது.

பின்னூட்டம் வரலைன்னால் கூட இவ்வளவு கவலையும் வருத்தமும் இருக்காது.
இப்ப என்னடா என்றால் இந்தப் பொட்டிகிட்ட தோற்கிறோமே என்ற தாழ்வுணர்ச்சி பயங்கரமாக இருக்கிறது, காரம் அதிகமானா ஒரு ஸ்பூன் சர்க்கரை வாயில் போட்டுக் கொள்ளுவதைப் போல ,வெறும் ஃப்ரீசெல்லும்,ஸ்பைடரும்,சாலிடேரும் விளையாடி மனதை சமாதானப் படுத்திக்கொள்கிறேன்.:(

அடிமனதில் எப்படியாவது இந்த வெற்றி விகிதத்தைச் சமமாக்க வேண்டும் என்கிற வெறி மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறது. யார் விட்டா:)
ஒரு கை பார்த்துடலாம்,.:)
இதுக்காக மாக்ருடில போயி ''ஹௌ டூ'' புத்தகம் வாங்கறதாக இல்லை.