நம் எல்லோருக்கும் தீபாவளி நல்ல ஆனந்த்தத்தையும், நிம்மதி,ஆரோக்கியத்தையும் கொடுக்க இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன்.நம்பிக்கை வைத்தால் அதுவும் சிறிதும் தளர்வில்லா நம்பிக்கை இறைவனிடம் வைத்த சிறுவன் பிரகலாதன்.,போல் வைக்கவேண்டும்.
ஞானமும் பக்தியும் ஒன்று சேர மாலிடம் சரணம் அடைந்தவன்.
எத்தனை தடவை படித்தாலும் அலுக்காத அவதார மகிமை.
ஹிரண்யன் எப்போது என்ன கேட்பன், பிரகலாதன் அவனுக்கு என்ன பதில் சொல்வான்
என்று தெரிந்து கொள்ள நம் அழகிய சிங்கப் பெருமான் அத்தனை இடத்தில் அணுக் கூட இடைவெளி இல்லாது நிறைந்து இருந்தான்.
அந்தச் சின்னக் குழந்தைக்குப் பங்கம் வராமல் எல்லா இடர்களிலிருந்தும் காப்பாற்றிய நரஹரியே !!உனக்கு வணக்கம்.
ஹிரண்யன் மகனைப் பார்த்துப் பார்த்து வெதும்புகிறான்
அசுரகுலக் கொழுந்து,
இப்படி நாரணன் நாமம் சொல்லி
தன் எண்ணப்படி உய்யாமல், வேறு வழிப்படுகிறானே என்ற வருத்தம் மேலிட, இன்னும் ஒரு முறை முயற்சிக்கிறான்.
நீ சொல்லும் ஹரி எங்கே இருக்கிறான் என்று மகனை விளிக்க,
எங்கும் உளன் என் ஹரி என்று உறுதியுடனும் திண்ணமாகப் பதிலளிக்கிறான் சிறுவன்.
வெகுண்டெழும் அகங்காரத்துடன் பக்கத்திலிருந்த ஒரு தூணை உதைக்க,
தூண் பிளந்து நரசிம்மம் வெளி வருகிறது.
அதென்ன காட்சி!!!
அந்தத் தூணும் மற்ற எல்லா ஸ்தம்பங்களும் ஹிரண்யன் பார்த்துப் பார்த்துத் திட்டமிட்டுக் கட்டியது.
அதனால் கட்டிடம் கட்டிய போதே ஹரி அங்கே ஆவிர்ப்பவித்து விட்டான் என்று சொல்ல முடியாது!!
பன்னெடுங்காலம் காத்திருந்து , தான் அழிக்கப் போகும் அரக்கன்
எங்கே தட்டினலும் வெளிவரத் தயாராக எல்லாத் தூண்களிலும் விஷ்ணு இருந்தானாம்.
உலகைப் படைத்த பிரமன், அவனைத் தன் திரு வயிற்று உந்தியில் தாங்கும் பெருமாள்,
அவனையே ஈன்று புறம் தந்ததால் அந்த தூண் பாட்டியாகி விட்டது,.
நரசிம்ஹ அவதார வைபவத்தால்.
பொன்னிற பிடரி சிலிர்த்து எழ,
செந்நிறத் தாமரைக் கண்கள் சீற்றத்துடன் ஹிரண்யனை நோக்க,
சங்கும் சக்கரமும்
மேலிரு கைகளில் இருக்க
மற்ற இருகைகளில் நகங்களால் அரக்கனை இழுத்து
வீட்டு வாயில் படியில் பகலும் இரவும் சந்திக்கும் அந்திப் பொழுதில்
அமர்கிறான் நரசிம்மன்.
சிங்கத்தின் கர்ஜனை கேட்கிறது.
அடுத்த நிமிடம் அரக்கனின் வயிறு கிழிக்கப்படுகிறது.
அவன் வயிற்றிலும் நெஞ்சிலும் ஹரி துழாவிப் பார்க்கிறானாம். ஒருவேளை நம் நினைவு இவன் இதயத்தில் இருந்தால் அவனை வாழ விடலாம் என்று.
அந்தக் கருணையும் கண்மூடி நாரண ஜபத்தில் இருக்கும் பிள்ளை பிரகலாதனுக்காக!!
ஹிரண்யன் குடலை எடுத்து மாலையாகப் போட்டுக் கொள்ளும் பெருமாள் அதே கரத்தைப் பிரகலாதன் தலையில் வைக்கிறான்.
ஒரு க்ஷணத்துக்கு முன்னால் தீ உமிழ்ந்த கண்கள்
பிரகலாதனை வாஞ்சையோடு பார்க்கின்றன.
இனி உன் சந்ததிக்கு தீங்கு செய்யேன்.
உன் வழி பிறந்த வம்சத்திற்கு என்னால்
அரக்க வதை இனி கிடையாது என்று
வரம் கொடுக்கிறான்.
அந்தப் பிரதிக்ஞையால் தான் மஹா பலிச் சக்கரவர்த்தி,
தாத்தா பிரகலாதன் செய்த புண்ணியத்தால்,
வாமன அவதாரத்தில்,
திருமால் காலடியைத் தலையில் தாங்கி, உயிர் பிழைக்கிறான்.
காருண்யா,லக்ஷ்மிந்ருசிம்ஹா
எங்கும் என்றும் சுபிக்ஷம் நிலவ நீதான் அருள வேண்டும்.
அனைத்து வலை நண்பர்களுக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.


