Blog Archive

Saturday, January 27, 2018

சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடையுடுத்தி

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 அவளுக்குப் பிஞ்சில் பழுத்தாளென்றே பெயர்.
அத்தனை ஞானமும் உள்வாங்கியே செய்த அவதாரம்.

எங்கள் பெரிய பாட்டி முதல் மகவு ஈன்றபோது அவளுக்குப் பதின்மூன்று
வயதே ஆகி இருந்தது.
இது இருபதாம் நூற்றாண்டுக் கதை.

நாச்சியார் அவதாரமோ,பக்தி இலக்கியம் ததும்பித் திளைத்த
ஏழாம் நூற்றாண்டு.

அப்போதெல்லாம் எந்த வகையான உடை நாகரீகம் என்று எனக்குத் தெரியாது.
என் பிறந்தகப் கொள்ளுப் பாட்டிகள் ரவிக்கை கூட அணிந்ததில்லை. என் அம்மாவின் அம்மா
வெள்ளை ரவிக்கை அணிவார்.

ஆங்கில நாகரீகம் உள்ளே புகுந்தபோது,
இந்த வெளிப்படைப் பேச்சு, வெளிப்படைக் கலாச்சாரம் எல்லாம் அருவருப்பாகத்
தெரிந்திருக்கவேண்டும்.
அவர்கள் குளிருக்கு உடை போர்த்து மூடிய வழக்கம்.
கோடை காலத்தில் வேறு உடையாக இருந்திருக்கலாம்.

வெறுங்காலோடு நடப்பதே அனாகரீகம் என்று சொல்பவர்கள்.
அந்தக் காலத்தில்
நம்மூர் எளிய மக்களுக்குச் செருப்பு பற்றித் தெரிந்திருக்கவே
நியாயம் இல்லை.

நம் கோதை சொன்ன நாச்சியார் திருமொழி
அவளுக்கு முன் வந்த ஆழ்வார்கள்
உரைத்த நாயிகா  நாயக bhaவத்தில் அமைந்தே திகழ்கின்றது..

சொல்ல  வேண்டும் என்று தோன்றியது.
இது என் கண்மூடித்தனமான பக்தியாகவும் இருக்கலாம்.
டிஎன் ஏ உலக முழுவதும் பதிந்து வரும் செய்திகள் பற்றி நேற்றுப் படித்தேன்.
அது போல கோதை நாச்சியார் அவதாரமும்
திருமாலுடன் இணையும் டி என் ஏ கொண்டதாக இருக்க வேண்டும்.
ஆண்டாள் போற்றி. அவள் திரு நாமம் வாழி.

பீஷ்ம ஏகாதசி.

ரதாங்க பாணி  ரக்ஷிக்கட்டும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
வியாசர் விருந்தில் ஆரம்பித்த  மஹாபாரத  லயிப்பு ,புக்ககம் வந்து பிறகு  பெரிய பாட்டியின்  துணையோடு மிகப் புராதன
அச்சுக்களில் கோர்க்கப் பட்ட, மஹா பாரதப் படிப்பாகத் தொடர்ந்த பொது  கண்ணன் மேலும், பீஷ்மர்  மேலும்  அதீத லயிப்புடன் தொடர்ந்தது.
 ஒருவன் ஆட்டுவித்தவன். இன்னொருவர் மகிழ்ச்சியுடன் அவன் குரலுக்கு ஆடியவர்.    பரிக்ஷித்து ராஜா,கரிக்கட்டையாக உலகில் வந்த பொது அவரை உயிர்ப்பித்த கிருஷ்ணன் சொல்லும் வார்த்தை, நான் உண்மையாகப் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்தது உறுதி என்றால் இந்தச் சிசு உயிர் பெறட்டும் என்று உரைத்து ,பாண்டவகுலத்தைக் காப்பாற்றுகிறான்.
உலகமறிந்து சூளுரைத்து பிரம்மச்சரிய  விரதத்தை மேற்கொண்டு,
பீஷ்மராகி,  குரு குலத்தை
 தன்  மனக்  கருவில் சுமந்து  கடமை வழுவாத கார்ய வீரராகத் திகழும் பீஷ்மரோ, தானாக உயிரை விட்டாலொழிய  அவர் உடலும் உயிரும் பிரியாது என்ற வரம் பெற்ற அஷ்ட வசுக்களில் ஒருவர்.
ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று சபதம் செய்த கண்ணனையே
ரதத்தின் சக்கிரக் காலைத்  தன்  கையில் எடுக்க வைத்தவர்.
ரங்க பாணியாகத் தன்னை நோக்கி வரும்  கண்ணனை இரு கரம் கூப்பி நிராயுத பாணியாக வரவேற்கிறார்.
அருச்சுனன் அந்த நேரத்தில் கண்ணன் கால்களில் விழும்போது ,சுயநிலை பெற்ற  கிருஷ்ணனும்  பீஷ்மரைப் பார்த்துப் புன்னகைத்து  மீண்டும் பார்த்த சாரதியாகத் தேர் ஏறுகிறான் .

சஹஸ்ர நாமம் பிறக்கிறது.
உத்திராயண காலத்துக்காக அம்புப் படுக்கையில் படுத்திருந்த
பிதாமஹரைப் பார்க்க வந்த அர்ஜுனன், அவருக்குத் தலைக்கு முட்டுக்கொடுக்க இன்னொரு அம்பை எய்துகிறான்..
அவரது தாகத்துக்கு கங்கா மாதாவையே வாயில் வந்து விழும்படி இன்னொரு பாணம்  விடுகிறான். எல்லோருக்கும் தெரிந்த கதை.
தாத்தாவிடம் அறிவுரை கேட்கவந்த பாண்டவர்களுக்கு கிருஷ்ணனைக்  காட்டுகிறார்,.
ஆயிரத்தெட்டு நாமாவளிகளும் பிறக்கின்றன. உலகம் உள்ளளவும் சாதுக்களை ரட்சிப்பெண். அல்லாதவர்களை அழிப்பேன் என்று வாக்குறுதி கொடுக்கிறான் விஷ்ணுவாகிய கண்ணன் .
இந்த ஏகாதசி பீஷ்மர்
தன்  கர்ம உடலை விட்டுப் பரமபதத்தை  அணுகிய நாள்.
அவரளவு  தூய  உறுதி இல்லாவிட்டாலும் கால் பங்காவது
நம் உயிரில்  அந்தத் தீர்மானம் இருக்க வேண்டும்
என்பதே நம் பிரார்த்தனை.

Friday, January 26, 2018

எல்லாம் மீனாக்ஷி அருள்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 எங்கள் மக்களுக்குத் திருமண நாட்கள்  வருகின்றன. அனைவரையும் மீனாட்சி அருள் புரிந்து எப்பொழுதும் போல்  காக்க வேண்டும்.

Thursday, January 25, 2018

அதிசயம் ஆனால் உண்மை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  இனிய நன்னாளுக்கான வாழ்த்துக்கள்
நாமோ நிறைய எழுதுவதில்லை.  இந்த இரு  மாதங்களில்  தான்
எண்ணங்களை பகிர்ந்து வந்தேன்
நேற்று கூட 92 ஆவது ராங்கில்  என் பதிவு இருந்தது.
இதென்ன பள்ளிக்கூடமே. இல்லை போட்டி போடத்தான்  வசந்தாவோ ,மீனாவோ இருக்கிறார்களா.

அதனால் அதிகம் யோசிப்பதில்லை . இன்னிக்குப் பார்த்தால்  29 ஆவது
ராங்க்  என்று  காட்டுகிறது. ஹ்ம்ம். நாமளும்
கொஞ்சம்  நல்ல வேலை செய்திருக்கோமோ
எதற்கும் நாளைக்கும்  இதே  நம்பர்  இருக்கிறதா என்று பார்க்கலாம்  அப்புறம் பதிவிடலாம் என்று நினைத்தேன்.
அப்படியெல்லாம் சொன்னதைக் கேட்பது என்பது நம்  அகராதியில் எழுதப் படவில்லையே,
அதனால் இன்றே பதிந்தேன்.  அடுத்த நாள் மனம்,எண்
எல்லாம் மாற வாய்ப்பு உண்டு.😀😀😀😀😀😀😀

Monday, January 22, 2018

புது வடை மெஷினும் பழைய முறுக்கு மெஷினும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 சென்னைக்குச் சென்று திரும்பிய மாப்பிள்ளை
புது வடை செய்யும் கருவியையும் வாங்கி வந்தார்.
அதோடு சப்பாத்தி மேக்கர் இன்ன பிற.
பார்த்ததும் வாயில் வந்த வார்த்தைகள், அடடா வரலாறு   திரும்புகிறதே
என்பதுதான்.
நல்ல வேளை சொல்லவில்லை.
புத்தி வந்து விட்டதே.ஹாஹா.

சென்னையில் வருடா வருடம் வரும் பொங்கலை ஒட்டி
ஒரு எக்ஸிபிஷன் ஐலண்ட் திடலில் நடக்கும்.
அதற்குப் போகாவிட்டால் தெய்வ குத்தமாகிடும்.
நான் சொல்வது நாற்பது வருடங்களுக்கு முன்னால்.
எங்களிடம் இருந்த குட்டி வண்டியில் ,சின்னத் தம்பி ரங்கன், எங்கள் குழந்தைகள்
எல்லோருடனும் நானும் இவரும் கிளம்பிவிடுவோம்.
வீட்டில் வேலை முடிந்த பிறகு தான்.
 முன்னெச்செரிக்கையாகக் கையில் தனியாக 100 ரூபாய் வைத்திருப்பேன்.
கணவருக்குப் பிக்பாக்கெட் கொடுப்பது வருடந்தோறும் நடக்கும் விஷயம்.

குழந்தைகளின் மகிழ்ச்சி கட்டுக் கடங்காது. பொருட்காட்சி வாசலில்
டிக்கெட் வாங்கினதும், முதலில் கண்ணில் தென்படுவது
இந்த சமையல் உபகரணங்கள் கடைதான்.
சிங்கத்துக்கு  இந்தப் புது விஷ்யங்களில் ஆசை ஜாஸ்தி.
ஏம்மா சப்பாத்தி மெஷின் வாங்கிக்கோயேன்.
அதோ முறுக்கு எவ்வளவு சுலபமாகப்
பிழிகிறான் பார்.வாங்கியாச்சு.

அடுத்தாற்போல் வளையல் கடை.ரிப்பன் கடை. இப்போது மாறி இருக்கலாம்.
பஞ்சு மிட்டாய் இவ்ளா பெரிசுக்கு வாங்கிக் கொண்டு,
பெரீயிய்ய்ய அப்பளம் ஆளுக்கொன்று,,
கூவம் வாசனையும் கூடவே வர ,ஜயண்ட் வீலில் ஒரு
தடவை ஏறி சென்னையைப் பார்த்துக் களித்து வீடு வருவோம்.

அப்போதெல்லாம் இடும்பை கூறாத வயிறு இருந்தது. அதனால் கவலை இல்லை.
வீட்டுக்கு வந்ததும் பெரிய பாட்டியிடமும் மாமியாரிடமும்
 வாங்கி வந்த பொருட்களைக் காட்டிவிட்டு
உள்ளே வைப்பேன். அவர்கள் அனுமதி இல்லாமல்
அவைகளை உபயோகப் படுத்த முடியாது.
இது போல ஒன்றில்லை,மூன்று இருந்தது. சப்பாத்தி அந்த மெஷினில்
இருந்து மேலே வரவில்லை. அன்னையை விட்டகலா கைக்குழந்தை
மாதிரி ஒட்டிக் கொண்டது.
நம் உலகத்தில் மெஷின் மேல் தப்பே இருக்காதே.
மாவு சரியாப் பிசையவில்லையோ என்று சந்தேகம் தான் முதலில்.
பெண் தான் சொல்வாள்,அம்மா சப்பாத்திக் கல்லில் நன்றாகத்தானே செய்வா
என்று. அத்தோடு அந்த மெஷின் பரணில் ஏறிக் கொள்ளும்.
இந்த முறுக்கு மெஷின் இருக்கே.
என்னைக் கஷ்டப்படுத்த என்றே வந்தது.
மாவுக்கை, மெஷினில் மாவு, எண்ணேயில் சுட்டுக் கொண்ட கை,
ஓரு தடவை ஒழுங்காக முறுக்கு விழும்.
அடுத்த தடவை பிரிபிரியாக விழும்.

சமர்த்தாகக் காத்திருக்கும் குழந்தைகள்,
 என்ன ஷேப்ல இருந்தாலும்
 நன்றாக இருக்குமா ந்னும் சொல்லும் போது
எனக்குக் கஷ்டமாக இருக்கும்.
பரணுக்குப் போனவை மூன்று.
கோவையில் வாங்கியது,சேலத்தில் வாங்கியது, திருச்சியில் வாங்கியது.
ஒரு மெஷினில் இருந்து மாவைப் பிரிக்க முடியாமல்
கார்ப்பரேஷன் குப்பத்தொட்டியில் போட்ட அனுபவமும் உண்டு.
இப்பொழுது வடை மெஷின். இதற்கு வந்த பின்னூட்டங்கள்
 உற்சாகப் படுத்துவது போல இல்லை.
பார்க்கலாம். மகள் வடை ஸ்பெஷலிஸ்ட்.
தோழிகள் யோசனை கொடுப்பார்கள். எப்படி வந்தது என்று
படம் எடுத்துப் போடுகிறேன். சோதனை மேல் சோதனை இருந்தால்
சமையலறை உருப்படும்.
Add caption டிஸ்க்ளைமர்   சப்பாத்தி மெஷினில் கை  தேர்ந்த  கிச்சன் கில்லாடிகள் பற்றி நான் சொல்ல வில்லை. ஒரு அப்பாவி மொபசல்
பெண்ணைப் பற்றித்தான் பேச்சு.😎😍😅😅😅😔😔😔

Saturday, January 20, 2018

எங்கள் ப்ளாகிற்கான பதிவு Engal Blog

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
// உங்களிடம் சில வார்த்தைகள் – கேட்டால் கேளுங்கள் – கேட்கமாட்டோம்னு சந்தேகம் இருக்குல்ல. அப்புறம் எதுக்கு அட்வைஸ்?//
எங்கள் ப்ளாக் அழைப்புக்கு நன்றி ஸ்ரீராம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முதல் அட்வைஸ் எனக்குத்தான். ஏதாவது எழுதினால் சேமிக்கணும்.
இரண்டாவது யார் என்ன சொல்கிறார்கள் என்பதை
நன்றாக உள் வாங்கிக்கணும்.
இரண்டும் செய்யலைன்னால் கணினி பொறுப்பேற்காது.

என் பேச்சை நானே கேட்காமல் இருந்தால் இன்னோருத்தருக்கு புத்தி சொல்லத் தகுதி இருக்கான்னு
எப்படி சொல்கிறது. கஷ்டம் தான். 12 வருஷமா எழுதினேன் என்கிற
பெருமையில் அர்த்தமே இல்லை. //செய்வனத் திருந்தச் செய் மற்றவர்களுக்கு மட்டுமா.//
இல்லை நான் முதலில் என்னைச் சீர் செய்து கொள்கிறேன்.

என் கணினிக்குக் கேள்விக்குறி போட வராது. அது மட்டும் இல்ல,ஆச்சரியக் குறியும் வராது. இது ஜெர்மன் மடிக்கணினி. இமோஜின்னு ஒண்ணு இருக்கோ பிழைத்தேனோ.
அதுவும்  அர்த்தம் தெரியாமல் ஏதாவது இமோஜியைப் போட்டு
வாங்கிக் கட்டிக் கொள்வதும் உண்டு.
சரி இனி, சொல்ல வந்த சப்ஜெக்டுக்கு வரலாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எங்கள் ப்ளாக் வாசகர்கள் வாசகிக்களுக்கு வணக்கம்.
என் 70 ஆவது வயது வரும் வரை அதாவது இன்னாள் வரை
புத்திமதிகள் கேட்டே வளர்ந்த காதுகள்.
பாதி வாங்கி,பாதி வெளியில் விடுவதே வழக்கம்.
Zone out ஆகாதே அம்மான்னு மகள் சொல்கிறாள்.
தாத்தா தான் நிறைய அறிவுரை சொல்வார். //கண்ணைப் பார்த்து பதில் சொல்லு
உண்மையைத் தவிர வேற வார்த்தை கிடையாது.
நேரத்தை வீணாக்காதே.// இதெல்லாம் என் பனிரெண்டு வயது வரை கேட்ட சொற்கள்.
ஆழமாகவே பதிந்து விட்டன.
நன்றி என் அருமை தாத்தா.
அடுத்தாற்போல்  அம்மாவும் அப்பாவும்.
 அம்மாவின் கை பதிந்த முதுகு. மகாலக்ஷ்மிக்கே கோபம் வரும் அளவு பயங்கர
துடுக்காக இருந்திருக்கிறேன்.பாவம் அம்மா.

அப்பா ஒரே மென்மை. அதைப் பார்த்து உலக ஆண்கள் அத்தனை பேரும்
அப்பா மாதிரியே இருப்பார்கள் என்று நம்ப வைத்தவர்.
அதிராமல் வார்த்தைகள் சொல்லி வாரத்துக்கு ஒரு முறையாவது
எங்களை உட்கார வைத்து நல் வார்த்தைகள்,கதைகள் சொல்வார்.
குழந்தைகளிடம் அதீத அன்பு வைத்தவர்க்கு
எப்பொழுதும் அவர்கள் தன் பாதுகாப்பிலேயே இருப்பார்கள்
என்கிற நினைப்போ ...தெரியவில்லை.
என் பேரில் போட்ட வைப்பு நிதிகளில் என் பெயர்  நாராயணன் ரேவதி நரசிம்ஹன்
என்றே இருக்கும்.
என்னப்பா LIC policy மாதிரி இரண்டு பக்கமும் பாதுகாப்பா என்று கேட்பேன்.
நீ கையெழுத்துப் போடு .மிச்சதை நான் பார்த்துக் கொள்கிறேன்
என்று வாங்கிப் போவார்.என் அருமை அப்பாவால் எங்கள் வாழ்வு உயர்ந்தது.

பின் என் கணவர்,
புத்திமதி சொல்வதில் அவருக்கு நம்பிக்கை கிடையாது.
சுதந்திரமாகச் சிந்திக்கத் தெரியணும். வரும் கஷ்டம்,லாபம் எல்லாத்துக்கும் பொறுப்பேற்கணும்
என்பதில் தீவிர நம்பிக்கை.
தன் தந்தையிடம் வாங்கிய அடிகள் பற்றிச் சொல்லும்போது என் தொண்டை
அடைத்துக் கொள்ளும்.
 அந்த 16 வயதுப் பையனை அணைத்துத் தேற்றவேண்டும் என்கிற உணர்வே மேலிடும்.
மாமியார் எதிர்மறை. அவர் மிரட்டியது என் மக்களைத்தான்.
மகன் மேல் கண்மூடிப் பாசம். ஆம்புலன்சில் படுத்த நிலையிலும்
சொன்ன கடைசி வார்த்தைகள்// சிம்மு நன்றாக இருடா. போயிட்டு வரேன்// என்பதுதான்.

அம்மா இறப்பதற்கு முதல் நாள் சொன்ன வார்த்தை,// யாருக்கும்
அட்வைஸ் பண்ணாதே. பிரயோசனம் கிடையாது. உன்னைப் பார்த்துக் கொள்.//

எங்கள் குழந்தைகளுக்கும் நாங்கள் புத்திமதி என்று சொன்னதில்லை.
 தன் முயற்சியில் வளர்ந்தார்கள். தந்தையின் உதவி, தாயின் உதவி என்றும் உண்டு.
எங்கள் இருவருக்கும் அவர்களது முடிவெடுக்கும் தன்மையில் அசாத்திய நம்பிக்கை உண்டு.
கடவுளும் அவர்கள் பக்கம் இருக்கிறார்.
 அவ்வப்பொழுது  நான் அவர்களது சொல் கட்டுப்பாட்டுக்கு வரும் நிலைமை வரும்.
இதமாக எடுத்துச் சொல்வார்கள். நானும் அந்த நேரம் ,கண் ஒரு பக்கம், நெஞ்சொரு
பக்கம் கேட்டுக் கொள்வேன்.
எனக்கும் என் உறுதிப்பாடுகள் தீர்மானங்கள் உண்டல்லவா.

பேரன்,பேத்திகளுக்கு புத்திமதி அவ்வப் பொழுது வாட்ஸ் ஆப்பில்
சொல்வது சேமிப்பைப் பற்றித்தான். அவசியம் இல்லாமல்

செலவழிக்காதே. கவனம் தேவை.
கைகளில் எப்பொழுதும் பணம் இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.
 ஒரு பகுதியை எடுத்து வைத்துவிடு. அந்தப் பணத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை
என்று நினைத்துக்கொள்.// என்பதுதான்.
தாத்தா சேமிக்கும் வழிகள் எல்லாம் சொல்வேன்.
 காதுகளில் வாங்கிக் கொண்டால் சரி.
என் பிரார்த்தனைகளும் அதுவே.
 அன்பு ஸ்ரீராம், இந்தப் பதிவையாவது ஒழுங்காக வெளியிடுகிறேன்.
நஷ்டங்களைப் பற்றிக் கவலைப் படாமல் லாபங்களை நோக்கி நடை போடலாம்.
வாழ்க வளமுடன்.

My dearest younger brother always  full of advises  forme. Rangappa. I miss you.

APPA
Singam
MuraLi  my Brother
Baby girl
Thambiyum makanum.
  என் ஆசான்கள் ,
பாட்டியும்,அம்மாவும் நானும்.
என் அன்பு மாமாக்கள்.

Thursday, January 18, 2018

அம்பி,மன்னி, என் தம்பி ரங்கன் ------8

இப்பொழுது அவனுக்கு 65 வயது ஆகிவிட்டது.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
         மன்னியின் மல்லி மொக்கு மாலை என் 16 வயது வரை என் கழுத்துக்குச் சொந்தம். அன்பு மன்னி வணக்கம்.
என் தம்பி ரங்கன்  இன்னொரு மாமா கோபுவுக்கு மிகச்செல்லம்
கொழு கொழுவென்றிருக்கும் அவனை மடியில் போட்டுக் கொஞ்சும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
ரங்கனுக்கு திருமணமாகி அழகிய மகள்  பிறந்தாள் .
அவன்  அலுவலகத்தில்  நல்ல பெயர் அவனுக்கு.
கையூட்டு வாங்காத நேர்மை ஆபிசர்.
 வருமானவரி ஏய்ப்புகளைக் கண்டு பிடிப்பதில் சூரன். அதற்காகக் கிடைத்த அவார்டுகள் ஏராளம்.
 அவனும் 52 ஆவது வயதில் ஒரு நாள் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை.
என்ன விசேஷம் என்றால்  13 நாட்கள் கழித்து என் மகன்கள்  இருவருக்கும் திருமணம்.
அழைப்பிதழ்களைக் கொடுக்கச் சென்றவன் அவன்தான்.
அத்தனை வீடுகளுக்கும் மயில்கண் வே ட்டி புரள ,
மனைவியுடன் போய் அழைத்தான்.
ஒரு போகி அன்று காலை எனக்குத் தொலைபேசி அழைப்பு. அக்கா
அவர் அழைக்க அழைக்க எழுந்திருக்கவில்லை.என்றதும் நான் ஸ்தம்பித்தேன்.
பெரிய தம்பி ஊரில் இல்லை.
அம்மாவீட்டுக்கு விரைந்தால்
ஒரு விவரமும் புரியவில்லை.
மக்களும் சிங்கமும், ரங்கன் மனைவியும் ஆம்புலன்சில் அப்போலோ போயிருந்தார்கள்.
ஒன்றும் இல்லை என்று கைவிரித்தனர்  வைத்தியர்கள்.
உடனே பார்க்க வந்தது    அம்பி தான்.
அம்மா முதல் தம்பி வீட்டில் இருந்தார். அவருடன் உட்கார்ந்து பேசிய அம்பி தானே ரங்கனுடைய அந்திமக் கிரியைகளை செய்வதாக அம்மாவிடம் வாக்களித்தார்.
செய்யவும் செய்தார். மாதம் தவறாமல் செய்ய வேண்டிய
கர்மாக்களை செய்து,
அக்காவிடம் வந்து சொல்வார். இருவரும் சேர்ந்து கண்ணீர் வடிப்பார்கள்.
இந்தக் கொடைக்கு ரங்கன் கொடுத்து வைத்திருந்தான்.

ஒரு மகா மனிதரின் கைகளால் அவனுக்கு நற்கதி கிடைத்தது.
அம்பி மாமா ஒரு காரியத்தில் ஈடுபட்டால், எத்தனை சிரமம் வந்தாலும் பின் வாங்க மாட்டார்.
அத்தனை பவ்யம். அத்தனை அடக்கம்.
கர்ம வீரனாகச் செய்தார். இந்த மனோபலம் எங்கிருந்து வந்தது.
72  வயதில்  விரதம் இருந்து கடமைகளை நிறைவேற்றிய பெரிய மனிதர்.
என் அம்மாவின் பாசத்துக்கு மரியாதை செய்தவர்.
அவருக்கு இறைவன் தன இருதயத்தில் தனி இடம் கொடுத்திருப்பார்.
வந்தாயா  வரதராஜன் என்று அனைத்துக் கொண்டிருப்பார்.
இன்னும் பல சங்கதிகள் இருக்கின்றன. என்னால் இந்த  வேலையைப் பூரணமாகச் செய்ய தெம்பில்லை.
 முடியவில்லை.
அவர் பெற்ற மகள்கள் இருவரும் பூரணமாக ஆசிர்வதிக்கப் படுவார்கள்.
அனைவரும் சுகமே வாழ வேண்டும்.
அம்பி மாமாவைக் கடைசி வரை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்ட என் கடைசி மாமா .கே.வி. ஸ்ரீநிவாசன்  அவர்களும்,ராமசாமி மாமா மகன்  வீர ராகவனும்  மாணிக்கங்கள்.
இறைவன் இவர்களுக்கு நாள் ஆரோக்கியமும்,நிறை வாழ்வும் கொடுக்க வேண்டும்.
இனி எல்லாம் சுகம். சுபம்.

Wednesday, January 17, 2018

ஸாதாரண பேச்சு வார்த்தைகள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

வாழ்க்கையில் எத்தனை தடவை அடி பட்டாலும்,
வாய் என்னவோ நேரம் பார்த்துப் பேசுவதில்லை.
சுற்றி இருப்பவர்களுக்குப் பிடித்த சப்ஜெக்ட் மட்டும் பேச வேண்டும்.
அவர்கள் மதிக்காதவர்களை உயர்த்திப் பேசக்கூடாது.

இதைவிட மௌனமாக இருக்கலாம் என்றால் அது முடிவதில்லை.
 வயதாவதில் வரும் தொந்தரவுகளில்
இதுவும் ஒன்று.

அம்பி, மன்னி என் தம்பி முரளி. 7

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption
  அம்பி, மன்னி என் தம்பி முரளி.
+++++++++++++++++++++++++++++++++++++++++
1970 இல் என் தம்பி முரளி இந்திய தொழில் நுட்பக்
கல்லூரியில் பி டெக் படித்து முடித்த கையோடு, பாட்டா
 செருப்புகள்  செய்யும் மெயின் அலுவலகத்தில்
உதவி இஞ்சினீயராக


 வேலை கிடைத்தது.
கல்கத்தாவில் அந்தக் கம்பெனி இருந்தது.
முதலில் பயிற்சி தில்லி அருகில் ஃபரீடாபாதில்.
வீட்டை விட்டுக் கிளம்பும் அவனுக்கு
போதிய ஏற்பாடுகள் செய்து அனுப்பினாலும்,
அம்மா அப்பாவிற்கு ஆறுதல் சொன்னது
அம்பி மாமா தான். நான் அவனுக்கு கார்டியனாக இருக்கிறேன்.
நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் என்ற உறுதி மொழி அவர்களுக்கு
மிக இதம் கொடுத்திருக்க வேண்டும்.
அவன் ஃப்ரீதாபாதில் ஒரு வங்காள இளைஞனுடன் அறையெடுத்துத் தங்கினான்.
சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லை. வார இறுதியில் தில்லிக்கு மாமாவீட்டுக்குச் சென்றுவிட்டான்.
இப்படி இரண்டு மூன்று மாதங்கள் கழிந்த நிலையில்
அந்த இளைஞன் திடீரென தற்கொலை
செய்து கொள்ள தம்பிக்கு ஜுரமே வந்து விட்டது.
தில்லியைப் பார்க்க விரைந்து வந்துவிட்டான்.பாவம் குழந்தை.
ஆறு மாதம் ஆன நிலையில் ,மாமா அவனுக்கு ஆறுதல் சொல்லி
சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
பிறகு கல்கத்தாவுக்கே சென்றுவிட்டான்.
நிறைய வருடங்கள் அம்பி மாமா குடும்பத்தைப் பார்த்த நினைவில்லை.
 என் மாமனார் மறைந்த போது, வீட்டுக்கு வெளியே நின்று ,சீனிம்மாப் பாட்டியும் அவரும் வந்து ஆறுதல் சொன்னது நினைவுக்கு வருகிறது.
அடுத்தாற்போல முரளியின் திருமணம், அப்பாவின் அறுபதாவது வயது பூர்த்தி, தம்பி ரங்கன் திருமணம் எல்லாவற்றிலும் அம்பி மாமா ,மன்னி இல்லாமல்
அம்மாவால் ஒன்றும் செய்திருக்க முடியாது.
எந்த விழா வீட்டில் ஆரம்பித்தாலும் அக்காவும்,தம்பியும்,மன்னியும் ஒன்றாக உட்கார்ந்து காய்கறிகள்  நறுக்கவதும், ,பெரியம்மா,சித்தி இவர்களுடைய
மக்கள்களைப் பற்றிப் பேசுவதும் நினைவில் நிழலாடுகின்றன.
1983 இல் அம்மா,அப்பா தில்லி சென்று நெடு நாளைய அபிலாஷையான
பத்ரி நாத் பயணத்தை அம்பியுடன் மேற்கொண்டனர்.
பத்ரி நாத் குளிரில் அப்பாவுக்குக் காய்ச்சல் வந்துவிட, நிமிடத்தில் ஏழெட்டுக் கம்பளிகள்
கொண்டுவந்து ,காத்தது மாமாதான். பிறகு அங்கிருக்கும் வென்னீர் ஊற்றில் குளித்தது
எல்லாம் அப்பா விவரமாகச் சொன்னார்.
இது போல ஒரு நல்ல ஆட்மா தனக்கு மச்சினனாக வாய்த்ததைச்
சொல்லிக் கொண்டே இருப்பார்.
 1992 இல் தம்பி முரளிக்கு 42 வயதில் ஹார்ட் அட்டாக்.
 அவன் முழு குணம் பெற அம்பி மாமா ராமாயண சுந்தர காண்டம் 68 சர்க்கத்தையும்
 ஒரே நாளில்
 இருந்த இடத்திலிருந்து எழுந்திருக்காமல் படித்து
அக்ஷதையும் அனுப்பினார். இந்த அனுகூலம் யார் செய்வார்.
தம்பியும் பிழைத்தெழுந்தான்.
 அதற்குப் பிறகு 25 வருடங்கள் வாழ்க்கை கடவுள் அருளினார்.
கடந்த மே 22 அவன் இறைவன் திருவடி அடைந்த போது
85 வயது தள்ளாத நிலையிலும் தன் அன்பு மருமானைக்
கடைசியாக வந்து பார்த்து விட்டுத்தான் போனார்.  தொடரும்.

Saturday, January 13, 2018

மார்கழி 29ஆம் நாள், முப்பதாம் நாள் வாழி கோதை நாமம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption
 29 ஆம்  பாசுரம். மிக முக்கியம் ஆனதும் கூட.
ஆண்டாள் திருவடிகளே  சரணம்.

பின் வரும் இரு பாடல்களும் தினசரிப் பூஜையில்  சாற்றுமுறைப் பாடல்களாகப்  பாடப்படும் எல்லோர்வீட்டிலும்.வைஷ்ணவ சம்பிரதாய முறைப்படி.
 எத்தனை ஏற்றம் ஆண்டாளின்  வார்த்தைகளுக்குத்தான்!!!
.பெண்ணாகப் பிறந்து தெய்வ அம்சமாக   இருந்தாலும் மனிதப் பிறவிக்கான அத்தனை   முயற்சிகளையும் செய்து,பக்தி வழியில் தானும் ஆட்பட்டு,கண்ணனையும் ஆட்படுத்தினாள்.
அவன்  அவளிடம்  தன்னைச் சிறை கொடுத்தான். அவள் அன்பில் பூத்த பாசுரங்களைப் பாமாலையாகச் சூடிக் கொண்டான்.
எத்தனை  தடவை அவள் சரித்திரத்தைப் படித்தாலும் கேட்டாலும் இந்த அற்புதம்   மெய்சிலிர்க்கவைக்கிறது.

மானிடர்க்கு வாழ்க்கைப் படமாட்டேன் என்ற திண்ணத்தோடு அரங்கனுடன் ஒன்றிய  மங்கை.
என்னிடம் இருக்கும் சொல்ப அறிவையும் புரிதலையும் வைத்துக் கொண்டு இந்த மார்கழி மாதத்தை
கோதையையும் கண்ணனையும்,வடபத்ர சாயியையும்,வேங்கடவனையும்,ஸ்ரீரங்கராஜனையும்
வழிபட வைத்தவளும் அவளே.

இதோ 29ஆம் பாடல்

சிற்றஞ்சிறுகாலே  வந்துன்னைச் சேவித்து  உந்தன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும்  குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
இற்றை பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும் உந்தன்னோடு
உற்றோமே ஆவோம்  உனக்கெ நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர்  எம்பாவாய்!!
***********************************************************
30ஆம் பாசுரம்

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார்  சென்றிரைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண்டெரியல்   பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பான் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்  எம்பாவாய்!!!
*******************************************************

ஹே மாதவா  பிரம்மமுஹூர்த்தம் எனப்படும் சின்னஞ்சிறு காலையில்
எழுந்து தூய்மையாகி  உன்னைச் சேவிக்கிறோம். சேவித்து உன்னிடம் விண்ணப்பிக்கும் வார்த்தைகளைக் கொஞ்சம் கேட்டருள்வாய்.

உன் பொன்னாலான தாமரையடிகளில் சேவித்து  வணங்கி இந்தப் பாசுரங்களைப் பாடும் பெருமை பெற்றோம்.
நாங்கள் ஆய்க்குலப் பெண்கள்.இடம் வலம் அறியாதவர்கள் .
எங்கள் நாயகனான நீ  எங்கள் குற்றங்களைப் பெரிதாக க் கொள்ளாமல்
உனக்குச் சேவகம் செய்யும்  புண்ணியத்தைக் கொடுத்தருளவேண்டும்.

இந்த வரத்தை மட்டும் நீ எங்களுக்கு அருளிவிட்டால் இன்னும் வரப் போகும் ஏழேழு பிறவிகளிலும்  உந்தன்னோடு   உற்றவராய் உன் அன்பிறு உரித்தானவர்களாக இன்புற்று இருப்போம்.
உன் பாத சேவை செய்யும்  பாக்கியம் பெற்றவர்களாவோம்.

மற்றபடி எங்களை வருத்தக்கூடிய ஆசாபாசங்களை விலக்கி உன் சரணே திண் சரண் என்று இருக்க நீயேதான் அருளவேண்டும்.**
*******************************************************************
இதுவரைத் தன்னையும் தோழியரையும்  ஆய்ப்பாடிக் கோபியராகவே நினைத்து கண்ணனைத் தொழுது நின்று   பிரார்த்தனை செய்த ஆண்டாள் எனும் நம் கோதை,
இந்தக் கடைசிப் பாசுரத்தில் திருப்பாவை நோன்பின் மகிமையையும்
அதன் பலன்களையும்  உருகி உருகி  விவரிக்கிறாள்.

திருப்பாற்கடலைக் கடைந்த கோவிந்தனை,கேசவனை,மாதவனைத் தேடிச் சென்று இந்த அழகிய திருவில்லிபுத்தூர்ப் பெண்கள் நோற்ற நோம்பின் மகிமையை என்ன சொல்வது!!
அவனை இறைஞ்சி,சேவித்து  பரிசுப் பொருளாகத் தீராத,அழியாத
அவன் பாத சேவகத்தைக் கேட்டுப் பெற்றோம்.
இவ்வாறு  பாடிய பாவையோ அழகிய  பெரிய   மாலையைச் சூடிய பொற்கொடி  கோதை நாச்சியார்.
பட்டர்பிரான்  ஸ்ரீ விஷ்ணு சித்தரின்   குலப்பாவை.அவர் பெற்ற செல்வம்,
இந்தப் பாடலில் தன் தகப்பனாரையும் மாலையில் சேர்த்துக் கொள்கிறாள்.
அவர் சொன்ன பிரபந்தங்களை கேட்டு வளர்ந்தவள் அல்லவோ.
அவள் சொன்ன  சங்கத்தமிழ்ப் பாடல்கள் முப்பதையும் தப்பாமல்
பாடுபவர்கள், செவ்வரியோடிய கண்களால் அருளுபவன் திருமால்,
நான்கு  கரங்களில் சங்கம் சக்கரம்,சார்ங்கம்,நந்தகம்,தாமரை என்ற் வன்மை மென்மை கலந்த ஆயுதங்களையும் அருளை வழங்கும் அபயக் கரங்களோடு காட்சி தருபவன்.

அவன்  எப்பொழுதும் நம்மைக் காப்பான்.
அவனை நாம் மறந்தாலும் அவன் நம்மை மறக்கமாட்டான்.
அன்று சொன்னாளே ஆண்டாள். .அவள் சொன்ன வார்த்தையை
நான் மறப்பேனா.
நானே மறந்தாலும் அவள் என்னை மறக்க விடுவளோ.
என் இருதயத்தில் வசிப்பவள்.ஒரு சிறிய புருவ அசைப்பினாலேயே
என்னை அணைத்துப் பக்தர்கள் அடியவர்கள் பக்கம் திருப்பிவிடுவாள். நான் என்றும்  அடியவர்களைக் காப்பேன் என்று அவளுக்கும்
வாக்களிக்கிறான்.
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவோம்.

திருவாடிப் பூரத்துச் ஜகத்துஉதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள்  வாழியே
பெரியாழ்வார்   பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்துமூன்றுரைத்தாள்  வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருவல்லி வளநாடு வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே!!!!!!

ஸ்ரீவிஷ்ணு சித்தர் பாதங்களில் சரண்.
ஸ்ரீராமானுஜ  முனியின் பாதங்களிலும் சரண்.

தீப மங்கள ஜோதியாய்  நம்மை எப்பொழுதும்
நமக்குப் பகவானை அடைய  வழிகாட்டும் எம் தோழியே
ஆண்டாளே  மீண்டும் மீண்டும் உன்னை வணங்குகிறேன்.
தாயே சரணம். அன்புடை மணவாளனோடு மகிழ்ந்திருப்பாய்
எங்கள் கோதையே நீ!


Friday, January 12, 2018

.அம்பி மன்னி, எங்கள் குடும்பம்..6

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1996க்குப் பிறகு சீனிம்மாப் பாட்டியின் உடல் நலம் அவ்வளவாகச் சரியில்லை.
மாப்பிள்ளை பகவான் திருவடி அடைந்தது வெகு வாகப் பாதித்தது.
என்னைப் பொறுத்த வரை உலக அழகிப் பட்டம் அவருக்குத்தான் கொடுப்பேன்.
அடுத்தாற்போல் என் அம்மாவும் ,மன்னியும்.

1998இல் எங்கள் பேரன் பிறந்த பொழுது சென்னை வந்து, உடனே
அம்பி மாமாவுடன் இருந்த பாட்டியைப் பார்க்கத்தான் போனோம்.
ஜெயா மன்னி, குழந்தையை மடியில்
வைத்துக் கொஞ்சியது இன்னும் மனக்கண்ணில் இருக்கிறது,.
வாழ்க்கையில் எத்தனை சவால்களைச் சந்தித்திருக்கிறார்.

அசரவில்லையே. அம்பிமாமாவைத் தன் அரவணைப்பினாலேயே
 துணை நின்று,வாழ்க்கையை நடத்தியவர்.
ஒரு சமயம் நினைவுக்கு வருகிறது.
தி.நகர் தபால் அலுவலகத்தில் தன் பென்ஷனைப் பெற்றுக் கொண்டு, பெருங்களத்தூர்
திரும்பிய,மாமாவின் மொத்தப் பணமும்
பறி போனது.
மாமாவுக்கு இருந்த அசதி,அதிர்ச்சி கூட மன்னி, பாதித்ததாகக் காண்பித்துக் கொள்ளவில்லை.
இதுக்கு மேல ஒண்ணும் நடக்கலை.
அதுதான் பெரிய விஷயம்.
சம்சாரம் தானே நடக்கும் என்றார்.
இந்த உறுதுணை தந்த ஆறுதலில் அம்பிமாமாவின் குடும்பம் நடந்தது.
அம்பி மாமா ஒரு சொந்தத்தையும் விட்டுவிட்டார் என்ற சொல்லே கிடையாது.
அவருடன் நான் பேசும்போது எல்லோரையும் பற்றி விசாரிப்பேன்.
தில்லியில் அவர் செய்த பத்ரி பயணங்கள் எண்ணிலடங்காதவை.
என் அம்மா அப்பா தில்லி சென்றபோது, அவர்களையும்
அழைத்துக் கொண்டு பயணித்ததை அம்மா சொல்லிக் கொண்டே இருப்பார்.
மறக்க முடியாத பயணம் அது அப்பாவுக்கும்.
அம்பி மாதிரி யார் பத்ரி விஷால் சொல்ல முடியும்
என்று வியப்பார்.

மார்கழிப் பாவை 28 ஆம் நாள் பாசுரம் கறவைகள் பின் சென்று

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

   கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
   அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்துன் தன்னைப்
பிறவிப் பெருந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது,
  அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.//
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே  சரணம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 27 ஆம் நாள் சர்க்கரைப் பொங்கல் செய்து கண்ணனுக்கு அமுது
படைத்துக் களித்த கையோடு,
அடுத்த நாள் கண்ணனோடு கானகம் செல்ல
ஆவல் தெரிவிக்கிறாள்.
கண்ணனிடம் தன் பிரார்த்தனை செய்கிறாள்.
கண்ணா, நீயும் ஆய்க்குலத்தில் பிறந்தவன்.
நாங்களும் ஆய்க்குலத்துப் பெண்கள்,இடம் வலம் தெரியாதவர்கள்.
ஆனால் உன்னை எங்களுடன் இருக்கச் செய்த பாக்கியம்
பெற்றவர்கள். 
குறையே இல்லாத கோவிந்தா, உன்னால் நாங்கள் நிறைவு 
பெறுகிறோம்.
அறியாமையால் உன்னை அழைக்கத்தெரியாமல் ஏதோ 
சிறு பேர் சொல்லிக் கூப்பிடுகிறோம்.
 நீதான் எங்களுக்குப் பறையான பரிசைத்தரவேண்டும். 
மோக்ஷ சாம்ராஜ்யத்தைக் கொடுக்கவேண்டும்.

இன்றைய அமுது,கண்ணனுக்கு உகந்த தயிரன்னம்.
அதுவும் எப்படி செய்ய வேண்டுமாம் தெரியுமா.
பாலில் சமைத்த அன்னத்தில் துளித் தயிரால் 
உறைகுத்தி, மூன்று மணி நேரத்தில் 
அது தயிரன்னமாக ஆகிவிடுமாம்.
அதில் பழங்களை நறுக்கிச் சேர்த்து, பாதாம்,முந்திரிபருப்பு ,திராட்சை
 சேர்க்க வேண்டுமாம். எவ்வளவு சாதம் இருக்கிறதோ
அவ்வளவு வெண்ணெய் சேர்த்துப் பிசைய வேண்டுமாம்.
 எல்லோரூம்  ததியன்னம் படைத்துப் பெருமை பெறுவோம்.
..

Thursday, January 11, 2018

மார்கழி 27 ஆம் நாள் பாவைப் பாசுரம்,கூடாரை வெல்லும்

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
https://youtu.be/ibrOG5KG8_0

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா/உன் தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடுபுகழும் பரிசினில் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பால் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர்  எம்பாவாய்.
பாசுரம் 26 இல்  மோக்ஷத்தை நீ எங்களுக்குத் தரப் போகிறாய்
என்றூ வேண்டிக்கொண்டவள்,
27 ஆம் பாசுரத்தில்  கண்ணன் அருகாமையில் அனுபவிக்கிறேன் என்று சொல்லுகிறாள்.
அவள் கேட்பதெல்லாம் கண்ணன் தருவதோடு மட்டுமல்லாமல்
அவனும் நப்பின்னையும் , இவர்களுக்கு நீராட்டம் செய்வித்து, அவர்கள்
உடுத்திகளைந்த பீதக ஆடைகளை
இவர்களுக்கு உடுத்திவிட்டு, காதுக்குத் தோடும் செவிப்பூவும், கால்களுக்குப்
பாடகமும்,கைகளுக்கு வளயல்களும் அணிவித்து விடவேண்டுமாம்.
அதன் பின் அவனுடன் அனுபவிக்கும் ஆனந்தமான
பாற் சோறு.
அதில் கலந்த நெய் உருகிக் கைகளில் வாங்கும்போது
முழங்கை வரை வழிகிறதாம்.
இந்த அனுபவத்தை அவனுடன் கூடாதோர் அனுபவிக்க
முடியாது.
இவர்கள் அவனுடன் கூடி இருந்து குளிரக் குளிர அனுபவிக்கப் போகிறார்கள்.
பாவை இரண்டாம் பாசுரத்தில் எல்லாவற்றையும் விலக்கியவள்,
27 ஆம் பாசுரத்தில் கண்ணன் தரிசனம் பெற்றதும் அத்தனையையும் அனுபவிக்க
அவன் கூட இருக்கும்போது மகிழ்கிறாள்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே  சரணம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அம்பி,மன்னி எங்கள் குடும்பம் 5

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

   அம்பி,மன்னி எங்கள் குடும்பம் 5
+++++++++++++++++++++++++++++++++++++++++++
1965 இல் என் சென்னை படிப்பு பியுசியுடன் நின்றது.
மதுரைக்கு வந்துவிட்டேன். என் நாட்கள் கடிதங்கள் எழுதுவதிலும், படிக்க
விட்டுப்போன புத்தகங்கள்  படிப்பதிலும் கழிந்தன.
என் தோழமை குழுவில் அம்பி மாமாவும் ஒருவர்.
தபால் அலுவலகத்தோடு வீடு இருந்ததால்
இன்லாண்ட் கடிதம் வாங்குவது எளிதாக இருந்தது. தில்லிக்குப் பறக்கும்
கடிதங்கள் என் விருப்பங்கள்,படிப்பு இவற்றைச் சுற்றி இருக்கும். மன்னியும் அம்பியும்
என்னை உற்சாகப் படுத்தி  இன்னும் எழுதத் தூண்டுவார்கள்.

அவர்தான் என்னை மும்பையிலிருந்த ஒரு கல்விக்கூடத்துக்கு

எழுதிபோட்டு ஜர்னலிசம் படிக்கும்படி  அறிவுறுத்தினார்.
அதற்குப் பின்னர் நடந்தது எல்லாம் கடவுள் எண்ணம்.
திருமணத்துக்கு வந்த அம்பி மன்னிக்கு 6 வயது மகனும்,
மூன்று வயது பெண்குழந்தையும் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டனர்.
சின்னப் பெண் இந்து அந்த நாளைய செலுலாய்ட் பொம்மை
போல இருப்பாள். மழலையில் குப் சிப்,குப் சிப் என்று ரயில்
போகும் சப்தத்தை, இரண்டு குட்டிக் கைகளைக் குவித்து வைத்துக் கொண்டு,
இளம் ரோஜா போல வாயைக் குவித்து சொல்வது இன்னும் மனதில்
 இருக்கிறது. திருமண ஆல்பத்தில் கூட அந்தப் படம் இருக்கும்.

மன்னிதான் என் திருமணத்தோழி.
சிங்கத்துடன் பேச அவருக்கு மட்டும் சலுகை இருந்தது.
எங்களகத்து  Fairlady ,inimEl unga Fairlady என்று அவரிடம் சொன்னார்.
சிங்கமும் சிரித்துக் கொண்டது. உங்கள் வீட்டுக்கு நீ ரொம்பச் செல்லமோ
 அன்று மாலை வரவேற்பின் போது கேட்டார். அதிலென்ன சந்தேகம் என்று
பெருமைப் பட்டுக் கொண்டேன்.
அன்று என்னை என் வருங்கால வீட்டில் கொண்டு விடும்போது,
மன்னி,அம்மா,அம்பி எல்லோர் கண்களிலும் நீர்.
  1968இல் சேலத்தில் எங்கள் இரண்டாவது பெண் பிறக்கும்போது அம்மா
உதவிக்கு வந்திருந்தார்.
கோவைக்குத்தன் சித்தி பெண்,மாப்பிள்ளையைப் பார்த்த கையோடு ,மாமா
 திடீரென்று சேலத்துக்கும் வந்தார்.
வெறும் கைகளொடு வர அவருக்குத் தெரியாது.
அருமையான கடாவ் வாயில் புடவை, ஏகப்பட்ட பழங்கள் பூ எல்லாம் கொண்டு வந்து என் மாமியாரை
அசத்திவிட்டார். ஒரே ஒரு வேளை இருந்து, சாப்பிட்டு விட்டு அக்காவுடன் வேண்டும் அளவு பேசிவிட்டுக் கிளம்பி விட்டார். தன் மூன்றாவது மகள் பற்றி ஒரே பெருமை.
 அதே போல எனக்கு மூன்றாவது மகன் பிறக்கும்போது காரைக்குடிக்கும் வந்தார்.
அவன் பிறந்த 7,8 நாட்களில் மாமா,மன்னிக்கு நான்காவதாகப்  பெண் பிறந்தது.
எங்கள் அனைவருக்கும் ஏகப்பட்ட சந்தோஷம்.
இந்த இரண்டு பெண்குழந்தைகளும் இப்போது என் உயிர் நாடிகள் போல அன்பு வைத்துக் கொண்டாடுகிறார்கள்.
கனிவுள்ளம் படைத்த பெற்றோருக்குப் பிறந்தவர்கள் அல்லவா.
இருவரின் வருத்தத்தைத் துடைப்பது முடியாத காரியமாக இருக்கிறது.
மறக்க முடியாத அங்கமாக அம்பி மாமா,மாறிய நேரம் ,என் தம்பி திடீரென
இறைவனடி சேர்ந்த போது.   அதைப்பிறகு பார்க்கலாம்.

Wednesday, January 10, 2018

மார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா..

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption
 மார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம்  மாலே மணிவண்ணா..
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தைஎல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன்  பாஞ்சஜன்யமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
  கோலவிளக்கே  கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 முந்தைய பாசுரத்தில் உன்னையே தருவாய் என்று கேட்ட
கோதையிடம் ,இன்னும் என்னவெல்லாம் வேண்டும்
என்று கேட்கிறான்.இந்தக் குழந்தைகளைப் பார்த்து அவனது
 உள்ளம் உவகையில் லயிக்கிறது.
 ஆர்வத்துடன் பட்டியல் இட்டுக் கேட்கிறாள்,.
திருமாலே மணிவண்ணா அழகிய ரூபத்தால் எங்களை ஈர்த்து
உன் சௌலப்ய குணத்தால் ஆலிலைப் பெருமாளைப் போல
எங்களுக்கு வைகுண்டப் பிராப்தியும் கொடுக்கப் போகிறாய்.
இப்பொழுது எங்கள் மார்கழி நீராட்டம், வீதி தோறும்
உன்னைப் பாட, தலைக்கு மேல் ஒரு விதானம், கைகளில் ஏந்த விளக்குகள்,
நாங்கள் வருகிறோம் என்று அறிவிக்க ஒவ்வொருவருக்கும்
பாலன்ன வண்ணத்து வெண்சங்கங்கள், கருடக் கொடி,ஒரு பெரிய பேரி முழக்கம் செய்யும் பறை
எல்லாம் வேண்டும் என்கிறாள்,
இதை எல்லாம் எந்த சாஸ்திரம் பார்த்துக் கற்றாய் என்று கேட்கிறான்
கோவிந்தன்.
நீ இருந்த ஆயர்ப்பாடிக் கோபிகைகள் செய்த அதே நோன்புதான்
எங்களுக்கு மேலையார் சொன்னது என்று பதில் சொல்லி
அருள் செய்வாய் என்று வணங்குகிறாள்.
 ஸ்ரீ கோதை நாச்சியார் திருவடிகளே சரணம்.

Tuesday, January 09, 2018

என்றும் ஆள்பவள் ஆண்டாள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  ஸ்ரீ கோதை நாச்சியார் , மனித வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவர்.
எல்லாமே வரலாற்று சம்பவமாக்ப் பதிந்திருக்கின்றன.
  இதில் யாரோ ஒருவர் அப்பழுக்குச் சொன்னர் என்றால் வருந்த வேண்டியது நாம் அல்ல. அவளிடம் தீரா பக்தி செலுத்தும் குடும்பங்கள் ,அதில் பிறந்தவர்கள் என்று பார்க்கும்போது,
 
இதெல்லாம் தீயினில் தூசாக வேண்டிய மொழிகள்.


பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. நாங்கள் சேலத்தில் இருந்த நேரம். அம்மா வீட்டிலிருந்து 3 மாதக் குழந்தையையும்,அவள் அண்ணனையும், என் தம்பி ,மற்றும் என் கணவரோடு ஒரு வண்டியில் சேலம் நுழைகிறோம்.

திடீரென் கறுப்புக் கொடிகளோடு ஒரு ஆரவாரக் கும்பல். என் வாழ்க்கையில் அதுவரை பார்த்திராத பெரிய பெரிய ராமர்,சீதை,லக்ஷ்மணன் பிம்பங்கள். அடுத்த காட்சி உறைய வைத்தது. அவர்கள் கழுத்தச் சுற்றி செருப்புகளால் மாலைகள்.
கெக்கலிக்கும் கோஷங்கள்.
கணவரே பிரமித்துப் போனார். குழந்தையோடு குனிந்து கொள்.
ரங்கா அவர்களைப் பார்க்காதே. என்ற வண்ணம் வண்டியை
லாவகமாக ஒடித்து வேறு சந்து வழியாக வெளி வர வழி செய்தார்.
இன்னும் பசுமையாக அந்த அலங்கோலம் நினைவை விட்டு அகலவில்லை.
 இது நடந்து 48 வருடங்கள் ஆகிறது.

இந்த நிகழ்ச்சியை பின்னர் ,என் மாமனார் வந்திருந்த போது,
மனிதர்கள் செய்யும் எந்த மாற்று நிகழ்வும் பகவானைத் தொடாது.
என்று விளக்கிச் சொன்னார்.
அதே போல இப்போது நடந்திருக்கும் சொற்பொழிவு.

 இதற்குப் பதில் சொல்ல நேரம் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
உலகத்தைக் காப்பவர்களுக்கு, நாம் அரண் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
காலம் பதில் சொல்லும்.

மார்கழிப் பாவை 25. ஒருத்தி மகனாய்ப் பிறந்து

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 மார்கழிப் பாவை 25. ஒருத்தி மகனாய்ப் பிறந்து
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தருக்கிலானாகித் தான் தீங்கு நினைத்தக்
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றினில்
நெருப்பென நின்ற நெடுமாலே..ஊண்ணாஈ
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++ கண்ணனின் பிறப்பு
மகிமையை ஆண்டாள் நினைத்து நினைத்து மகிழ்கிறாள்.
 இதோ கண்ணெதிரே கோவிந்தன் கம்பீரமாகச் சிங்காதனத்தில் அமர்ந்திருக்கிறான்.
கண்குளிரக் கடாக்ஷிக்கிறான்.
எதை எதிர்பார்த்து என்னைக் காண இத்தனை சிரமம்
எடுத்துக் கொண்டீர்கள் என்று கேட்கிறான். உங்களுத்தேவை என்ன என்று
வினவுகிறான்.
 உன்னையே பரிசாகத் தேடி, விழைந்து வந்திருக்கிறோம் கண்ணா.
 அன்னை தேவகியின் வயிற்றில் உதித்து உன்னை,
கம்சனுக்குப் பயந்து  யசோதை அகத்தில்
ஒளித்து வளர்த்தனர்..
நீ உயிரோடு இருப்பதையே
பொறுக்க முடியாத கம்சன் பல்வகை அசுரர்களை ஏவி உன்னை அழிக்க முயற்சித்தும்
அவனால் முடியவில்லை.
அவனைக் கனவிலும் நினைவிலும் தகித்து வந்தாய்.
கடைசியில் நேருக்கு நேர் யுத்தத்தில்  அவனை.
 முடித்து வைத்தாய்.
உன்னையே வேண்டி எங்கள் வாழ்வின் அர்த்தமாக நினைத்து வந்திருக்கிறோம்.
அந்தப் பரிசை நீ எங்களுக்குத் தந்து அருள்.
எங்களுக்குக் கிடைத்த செல்வத்தைப் பாடிப்பாடி மகிழ்வோம்
என்று பூர்த்தி செய்கிறாள்.
நம் வாழ்வின் அர்த்தமும் கண்ணனாகவே இருக்கட்டும்.

Monday, January 08, 2018

மார்கழி 24 ஆம் நாள் போற்றி.போற்றி.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 பெரியாழ்வார் பெற்றெடுத்த  பெண்பிள்ளை வாழியே 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்றிவ்வுலகம்  அளந்தாய்  அடி  போற்றி 
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்  போற்றி.
பொன்றச் சகடம்  உதைத்தாய்  புகழ் போற்றி 
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி.
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி 
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி 
என்றென்றும் உன் சேவகமே ஏறிப் பறை கொள்வான்
 இன்று யாம் வந்தோம் இரங்கேலோர்  எம்பாவாய்.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
+++++++++++++++++++++++++++++++++++++++
 கண்ணன் நடந்து வந்ததை பார்த்த பாவைகளுக்கு 
ஆஹா இந்தச் செந்தாமரைப் பாதங்கள் நடந்தது போதாதா.
நமக்காக வேறு நடந்துவிட்டானே என்று ஆதங்கம் தோன்றிவிட்டதாம்.
உடனே  கோதை அந்தப் பாதங்களுக்கு மங்களாசாசனம் செய்யும் முறையாகப் போற்றி சொல்ல ஆரம்பிக்கிறாள்.

முதலில்  வாமன் திரிவிக்கிரம  அவதாரத்தை போற்றுகிறாள்.
 இரண்டாவது  அயோத்தியிலிருந்து  தென்னிலங்கை வரை நடந்த  இராமன் பாதங்களை போற்றுகிறாள். 

அந்த  ராமனாவது வளர்ந்த பிறகு  நடந்தான் இந்தக் கண்ணன் குழந்தையாக இருக்கும்போதே சகடாசுரனை உதைத்தவன் ஆயிற்றே  என்று கேசவனைப் போற்றுகிறாள்.

இரண்டு  அசுரர்களை ஒரே நொடியில் ஒழித்தவன்.
ஏழு வயதுக்கு குழந்தையாக இருந்த பொது 
கோவர்த்தன கிரியைத் தூக்கிப் பிடித்து தன மக்களைக் காத்தவனைப் போற்றுகிறாள்.

இத்தனை திறலுக்கும்  காரணமான  உன் கையில் இருக்கும் வேலுக்கும்  போற்றி போற்றி என்று  வணங்குகிறாள்.
உன் வீர தீர பராக்கிரமங்களை பாடவே நாங்கள் 
வந்திருக்கிறோம்.
நீ அருள் செய் என்றும் இறைஞ்சுகிறாள்.

நாமும் கோவிந்தனைப் பாடுவோம்.


Sunday, January 07, 2018

இன்று திருப்பாவை 23 ஆம் நாள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

இன்று திருப்பாவை  23  ஆம் நாள். சீரிய சிங்காசனத்தில் இருந்து 
யாம்  வந்த  காரியம்  ஆராய்ந்து  அருளச் சொல்கிறாள்..

 ஆண்டாளுக்கு கண்ணனின்  நடையழகு பார்க்க வேண்டுமாம்.
பாலும் சர்க்கரையும் சேர்ந்தது போலவாம் நரசிம்ஹ அவதாரம்.
நரனும் சிங்கமும் கலந்த அழகனாம்.

அவன் தீவிழித்துப் பார்ப்பது, கொடியவர்களை வீழ்த்த.
ஹிரண்யனை வீழ்த்தும் பார்வை. ராவணனை
அதிர வைத்த பார்வை.
துரியோதனன் சபையில்   கண்ணனை அவமதிக்கக்
காத்திருக்கிறான்.
கண்ணன் உள்ளே   நுழைகிறான். யாரும் எழுந்திருக்கவில்லை. அரசனுக்குப்
பயந்து.
கண்ணனின் கண்ணைப் பார்த்த அடுத்த கணம் துரியோதனனின் உடல் எழுந்துவிட்டதாம்.

அதனால்  அடியவர்களாகிய நாம்,சிங்கம் என்று பயப்படவேண்டாம்.
அது சீரிய சிங்கம்.
ஆண்டாள் பாவைக்காக இத்தனை நாள்     மாய உறக்கத்தில் இருந்த சிங்கத்தின்  உறக்கம் கலைந்து விழித்ததாம்.
இவர்கள் வந்துவிட்டார்கள்  என்று தெரிந்ததும் தாமரைக் கண்கள் சிவந்து விரிந்தனவாம்.
அடியவர்கள் அருகில் இருந்தால் பகவானின் கண்கள் தாமரைச் சிவப்பு கொள்ளுமாம். அவர்கள் சற்றே அகன்றாலும் அவர் கண்கள் வெளுத்துவிடுமாம்.!!

பூவைப் பூ வண்ணா,நீ உன் சிம்ம கதியில் நடந்து வந்து
எங்களுக்கு அருள வேண்டும் என்று சொல்லிவிட்டுப்  பிறகு சொன்னோமே என்று  வருந்தினாளாம்.

இந்தக் கண்ணன்  நடந்த நடை போதாதா. நான் வேறு நடக்கச் சொல்லிவிட்டேனே.

இந்தப் பாதங்களை குளிர்சந்தனம்  பூசிப் பூஜிக்க அல்லவா வேண்டும்.
என்று   உணர்ந்து அடுத்த பாசுரத்தில்(அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி ) போற்றிப் பாடுகிறாள்.

இன்றைய பாடல்

மாரிமலை முழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய  சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா  போல நீ பூவைப் பூவண்ணா உன்
கோவில் நின்று இங்கனே  போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காதனத்திருந்து  யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோ எம்பாவாய்.!
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

Saturday, January 06, 2018

அம்பியும் ஜெயா மன்னி 4

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption அம்பி மாமா மறைந்து 10 நாட்கள் ஆன நிலையில் , மன அழுத்தம் மிகுதியாகிக் கண்கள் நீர் வடிக்கின்றன.

எல்லா நலன் களையும் அவர்களிடம் இருந்து பெற்றவளுக்கு அவர்களின் இறுதி நிலையில் உதவ முடியாத சூழ்நிலை.
தன்னை விட மூ ன்றே வயது  மூத்த அக்கா பாப்பாவிடம் அளவிற்கு அதிகமான கரிசனை எல்லா சகோதரர்களுக்கும் உண்டு.
 என் மக்கள் திருமணத்துக்கு 13 நாட்கள் இருக்கையில் என் தந்தை திடீரென இறைவனடி சேர்ந்தார்.
திக்குத் தெரியாத காட்டில் விட்டது போல நான் உணர்ந்தேன்.
உடன் கை  கொடுத்தது அம்பி மாமா தான்.
ஒரு பக்கம் தம்பிகளுக்கு வைதீகக் காரியங்களில் கை  கொடுத்து முடிந்த கையோடு . திருமண முதல் நாள் ஜெயா மன்னியுடன், திருமணத்துக்கு முதல் நாள் சத்திரத்துக்கு வந்துவிட்டார்.
பல்வேறு கொதிப்புகள் சேர்ந்து என் பேச்சு திடீரென்று நின்றது. வைத்தியர் உதவியுடன் சத்திரம் வந்து சேர்ந்தோம்.
பெரியமகன்,சின்ன மகன்,,மக்கள் எல்லோரும் பம்பரமாகச் சுழல, அனுக்கிரஹம் செய்ய வந்த கண்ணன் போல் அம்பியும்  மன்னியும் வந்து என்னை ஆசுவாசப் படுத்தி.
மன்னியின் மடியில் படுத்துத் தூங்கினதுதான் தெரியும்.
தலையைத் தூக்க முடியாமல் ரத்த அழுத்தம்.
அடுத்த நாளைக்கு வேண்டும் என்கிற ராமாயணப் புத்தகம், ஸ்ரீநிவாஸத் தாயார் படம், பாய், கைத்தடி  எல்லாவற்றையும்  பாரிஸ் கார்னருக்கே போய் வாங்கி வந்தது அம்பி மாமாதான்.
ஓயாமல் ஒழியாமல்  சுற்றி சுற்றி அனைவரையும் விசாரித்து
இதமாக  உபசரித்து , எல்லா இடங்களிலும் இருந்தார்.
என் தம்பிகளுக்கு 12 ஆம் நாள் காரியங்கள் இருந்ததால் வர முடியாத நிலை.
 மன்னியின்  இதமான கவனிப்பில் எழுந்து உட்கார்ந்த நான் என்ன செய்தெனோ இன்னும் நினைவில்லை.
இந்தத் திருமணத்துக்காகக் கோடி கற்பனைகள் வளர்த்து வைத்திருந்த அம்மாவால் வரமுடியவில்லை.

மறு  நாளைக்கு காலையில்  அப்பா படவடிவில் மண்டபத்துக்கு வந்தார்.
இவர்தானே  சத்திரத்தின் முன்பணம் கொடுத்துச் சென்றார் என்று அந்த அதிகாரிகள் வியந்து சென்றனர்,.அவர்கள் சொல்லாவிடில்
எனக்குத் தெரிந்திருக்காது.
அம்பி மாமா
 புது சம்பந்திகளுடன் பேசுவதிலிருந்து , கட்டு சாதம் கட்டி முடிக்கும் வரை இருந்தவர், தன அக்காவுடன் நடந்த விஷயங்களை சொல்ல போய்விட்டார்.
இந்தத்தாராள மனம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏, காருண்யம் இதற்கெல்லாம் நான் என்ன பதில் சொல்வேன் அம்பி.

மார்கழிப்பாவை 22. அங்கண்மா ஞாலம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

  மார்கழிப்பாவை  22. அங்கண்மா ஞாலம்
அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே, எம் மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள்  மேல் சாபம் இழிந்தேலோர்  எ ம்பாவாய் .
கண்ணா உன் இரு திருக்கண்களும் மலர்ந்து மலராத தாமரைப் புஷ்பங்களைப் போலத் தண்மையோடு எங்கள் மேல் விழவேண்டும்.
முழுவதும் திறந்து கடாக்ஷித்தயானால் எங்களால்
தாங்க முடியாது.
உன் கண்களோ எதிரிகளுக்கு அச்சுறுத்துவது போலவும், பக்தரிடம்
அருள்மழை பொழிவது போலவும் 
அமிர்தமபோல இருக்கின்றன.

உன்னிடம் தோல்வி அடைந்த மன்னர்கள் உன்  கட்டிலின் 
கீழ் 

அடிமைகளாகக் காத்துக் கிடக்கிறார்கள்.
அவர்களைப் போலவே நாங்களும் வந்திருக்கிறோம்.
எப்போதோ எங்கள்  மேல்  இட்ட சாபங்கள் எல்லாம் 
தீர நீயே வழி. அவை இழிந்து மறைந்து போக நீயே
  அருள வேண்டும் கண்ணா.

 ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
.