Blog Archive

Monday, January 22, 2018

புது வடை மெஷினும் பழைய முறுக்கு மெஷினும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 சென்னைக்குச் சென்று திரும்பிய மாப்பிள்ளை
புது வடை செய்யும் கருவியையும் வாங்கி வந்தார்.
அதோடு சப்பாத்தி மேக்கர் இன்ன பிற.
பார்த்ததும் வாயில் வந்த வார்த்தைகள், அடடா வரலாறு   திரும்புகிறதே
என்பதுதான்.
நல்ல வேளை சொல்லவில்லை.
புத்தி வந்து விட்டதே.ஹாஹா.

சென்னையில் வருடா வருடம் வரும் பொங்கலை ஒட்டி
ஒரு எக்ஸிபிஷன் ஐலண்ட் திடலில் நடக்கும்.
அதற்குப் போகாவிட்டால் தெய்வ குத்தமாகிடும்.
நான் சொல்வது நாற்பது வருடங்களுக்கு முன்னால்.
எங்களிடம் இருந்த குட்டி வண்டியில் ,சின்னத் தம்பி ரங்கன், எங்கள் குழந்தைகள்
எல்லோருடனும் நானும் இவரும் கிளம்பிவிடுவோம்.
வீட்டில் வேலை முடிந்த பிறகு தான்.
 முன்னெச்செரிக்கையாகக் கையில் தனியாக 100 ரூபாய் வைத்திருப்பேன்.
கணவருக்குப் பிக்பாக்கெட் கொடுப்பது வருடந்தோறும் நடக்கும் விஷயம்.

குழந்தைகளின் மகிழ்ச்சி கட்டுக் கடங்காது. பொருட்காட்சி வாசலில்
டிக்கெட் வாங்கினதும், முதலில் கண்ணில் தென்படுவது
இந்த சமையல் உபகரணங்கள் கடைதான்.
சிங்கத்துக்கு  இந்தப் புது விஷ்யங்களில் ஆசை ஜாஸ்தி.
ஏம்மா சப்பாத்தி மெஷின் வாங்கிக்கோயேன்.
அதோ முறுக்கு எவ்வளவு சுலபமாகப்
பிழிகிறான் பார்.வாங்கியாச்சு.

அடுத்தாற்போல் வளையல் கடை.ரிப்பன் கடை. இப்போது மாறி இருக்கலாம்.
பஞ்சு மிட்டாய் இவ்ளா பெரிசுக்கு வாங்கிக் கொண்டு,
பெரீயிய்ய்ய அப்பளம் ஆளுக்கொன்று,,
கூவம் வாசனையும் கூடவே வர ,ஜயண்ட் வீலில் ஒரு
தடவை ஏறி சென்னையைப் பார்த்துக் களித்து வீடு வருவோம்.

அப்போதெல்லாம் இடும்பை கூறாத வயிறு இருந்தது. அதனால் கவலை இல்லை.
வீட்டுக்கு வந்ததும் பெரிய பாட்டியிடமும் மாமியாரிடமும்
 வாங்கி வந்த பொருட்களைக் காட்டிவிட்டு
உள்ளே வைப்பேன். அவர்கள் அனுமதி இல்லாமல்
அவைகளை உபயோகப் படுத்த முடியாது.
இது போல ஒன்றில்லை,மூன்று இருந்தது. சப்பாத்தி அந்த மெஷினில்
இருந்து மேலே வரவில்லை. அன்னையை விட்டகலா கைக்குழந்தை
மாதிரி ஒட்டிக் கொண்டது.
நம் உலகத்தில் மெஷின் மேல் தப்பே இருக்காதே.
மாவு சரியாப் பிசையவில்லையோ என்று சந்தேகம் தான் முதலில்.
பெண் தான் சொல்வாள்,அம்மா சப்பாத்திக் கல்லில் நன்றாகத்தானே செய்வா
என்று. அத்தோடு அந்த மெஷின் பரணில் ஏறிக் கொள்ளும்.
இந்த முறுக்கு மெஷின் இருக்கே.
என்னைக் கஷ்டப்படுத்த என்றே வந்தது.
மாவுக்கை, மெஷினில் மாவு, எண்ணேயில் சுட்டுக் கொண்ட கை,
ஓரு தடவை ஒழுங்காக முறுக்கு விழும்.
அடுத்த தடவை பிரிபிரியாக விழும்.

சமர்த்தாகக் காத்திருக்கும் குழந்தைகள்,
 என்ன ஷேப்ல இருந்தாலும்
 நன்றாக இருக்குமா ந்னும் சொல்லும் போது
எனக்குக் கஷ்டமாக இருக்கும்.
பரணுக்குப் போனவை மூன்று.
கோவையில் வாங்கியது,சேலத்தில் வாங்கியது, திருச்சியில் வாங்கியது.
ஒரு மெஷினில் இருந்து மாவைப் பிரிக்க முடியாமல்
கார்ப்பரேஷன் குப்பத்தொட்டியில் போட்ட அனுபவமும் உண்டு.
இப்பொழுது வடை மெஷின். இதற்கு வந்த பின்னூட்டங்கள்
 உற்சாகப் படுத்துவது போல இல்லை.
பார்க்கலாம். மகள் வடை ஸ்பெஷலிஸ்ட்.
தோழிகள் யோசனை கொடுப்பார்கள். எப்படி வந்தது என்று
படம் எடுத்துப் போடுகிறேன். சோதனை மேல் சோதனை இருந்தால்
சமையலறை உருப்படும்.
Add caption டிஸ்க்ளைமர்   சப்பாத்தி மெஷினில் கை  தேர்ந்த  கிச்சன் கில்லாடிகள் பற்றி நான் சொல்ல வில்லை. ஒரு அப்பாவி மொபசல்
பெண்ணைப் பற்றித்தான் பேச்சு.😎😍😅😅😅😔😔😔

16 comments:

Angel said...

ஆமாம் வல்லிம்மா சென்னையில் இருந்தவரை பொருட்காட்சி பார்த்தே ஆகணும் வருஷா வருஷம் முழு குடும்பம் சகிதம் போவோம் மண் புதைய நடந்து தூசி பட்ட அப்பளம் சாப்பிட்டு பஜ்ஜி வாசனை முகர்ந்து அதெலலா,தனி சந்தோஷம் .எங்கம்மாக்கு பிளாஸ்டிக் பொருட்கள் வாங்குறதில் ரொம்ப ஆசை .ஒரு பிளாஸ்டிக் டப்பா குட்டி பிங்க் நிறத்தில் இன்னும் என்கிட்ட பத்திரமா இருக்கு நானா சென்னைவிட்டு வரும் முன் போய் வந்த கடைசி பொருட்காட்சி நினைவா .
இது இடியாப்பம் முறுக்கு அச்சு டிசம்பர் வாங்கினேன் இங்கே 12 பவுண்ட்ஸ் .வீட்டுக்கு வந்து திறந்தா ஓலைபக்கோடா ஸ்டார் முறுக்கு இடியாப்ப அச்ச்சு மட்டும் இருக்கு உள்ளே .
வடைக்கும் அச்ச்சு வந்தாச்சா !!!

நெல்லைத் தமிழன் said...

உங்கள் அனுபவங்களை நானு அனுபவித்திருக்கிறேன்.

பொருட்காட்சியில் அவன் முருக்கை சர்வ சாதாரணமா பிழிவான். நாம உபயோகப்படுத்தினால் ஒன்றும் சரியா வராது.

சமீபத்துல (ஓரிரு வருடத்துக்கு முன்பு) பாலில (இந்தோனேஷியா) காய்களை கட் பண்ண அட்டஹாசமான மிஷின் வச்சிருந்தான். எல்லாவித டிசைன்லயும் கட் பண்ணலாம். ஆனா வாங்கலை. நமக்கு அது வொர்க் ஆகாதுன்னு நினைச்சதே காரணம்.

சப்பாத்தி மேக்கரும் எப்போதும் ஃபெயிலியர்தான்.

வல்லிசிம்ஹன் said...

நாம் எல்லாரும் சென்னைக் காரர்கள் தானே. டிசம்பர்,ஜனுவரி
எல்லாம் கொண்டாட்ட மாதம் இல்லையா ஏஞ்சல்.
பள்ளி விடுமுறை, பண்டிகைகள், க்ரிஸ்ட்மஸ் கேக்குகள்,பொங்கல் ம்ம் .இனிமையான
நாட்கள். புது வருடக் கொண்டாட்டங்கள்.
தேங்காய்த் துருவி வாங்கிய நினைவு வருகிறது.நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத்தமிழன் ,
உண்மைதான். அவன் செய்யும்போது எல்லாம் சுலபமாக இருக்கும்.
வீட்டுக்கு வந்தால் ஒண்ணும் நடக்காது.
பாலியில் நம்பி வாங்கி இருக்கலாம் மா.
அங்கே மகன் வாங்கிய பொருட்கள்
நன்றாகவே வேலை செய்கின்றன.

ரோட்டி கிங் நு ஒண்ணு வாங்கினோம்.
கிங் மாதிரி சும்மா இருந்தது.

Thulasidharan V Thillaiakathu said...

துளசிதரன் : எங்கள் வீட்டில் எங்கள் வீட்டார்கள் இப்படியான புது மெஷின்கள் வாங்குவதே இல்லை...சீவல் கூடக் கிடையாது. எல்லாம் கத்தியாலேயே மலையாளத்துப் பழக்கமில்லையா அப்படியேதான் செய்வது வழக்கம்...

கீதா: ஹா ஹா ஹா ஹா வல்லிம்மா நானும் இந்தக் கிச்சன் மெஷின் கள் எல்லாம் பார்ப்பதுண்டு. ஆனால் வாங்கியதில்லை. எங்கள் உறவினர்கள் வீட்டில் வைத்திருப்பதைப் பார்த்து அங்கு அனுபவம் கிடைத்ததால் குறிப்பாக சப்பாத்தி மேக்கர் ஏனோ பிடிக்கவில்லை. கையில் இடுவதுதான் நன்றாக மிகவும் பூப்போல வருதே!!! முருக்கு மெஷின் நான் முயற்சி செய்ததில்லை ஆனால் எங்கள் உறவினர்கள் அதில் நன்றாகவே செய்கிறார்கள் எப்படி என்று தெரியவில்லை..நான் என் வீட்டில் சீராகக் கொடுத்த பழைய ஒழக்கு அச்சுகளையே பயன்படுத்துகிறேன்...இரும்பு, எவர்சில்வர், ஹிண்டலியம் என்று....

வடை மெஷின் படத்தில் வீடியோவில் பார்த்ததோடு செரி யாரும் பயன்படுத்திப் பார்த்த அனுபவம் இல்லை. வாவ் உங்கள் மகள் வடை ஸ்பெஷலிஸ்டா ஆஹா!!! அப்படினா செய்ததும் போடுங்கமா...!!

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா நானும் இந்த ஐலன்ட் திடலில் நடக்கும் பொருட்காட்சிக்குக் கண்டிப்பா போவது வழக்கம். சும்மா விண்டோ ஷாப்பிங்க் செய்யவும் ரொம்பப் பிடிக்கும்...அது ஓரு நல்ல எனக்குப் பிடித்தது மார்க்கெட்டில் என்னென்ன வந்திருக்குனும் தெரிஞ்சுக்கலாமே.... ஆனா இப்ப சமீப காலமாத்தான் போறதில்லை...இம்முறை சுற்றுலா கண்காட்சி நடக்கிறது. போகவில்லை...போகமுடியுமானு பார்க்கணும்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நெல்லை வல்லிம்மா எங்கள் மச்சினர் காய் கட் பண்ணும் பாக்ஸ் ஒன்று வாடில்லா (அமெரிக்காவில் பிரபலம்) ஒன்று தானும் வாங்கி எனக்கும் ஒன்று கொடுத்தார். அதில் இரண்டு வகை ப்ளேட்தான் ஆனால் அதற்கப்புறம் இங்கு சென்னையில் பல ஸ்டோர்களிலும் வித விதமான ப்ரான்ட்களில் பல ப்ளேடுகளுடன் வித விதமான சைஸ்க்களில் கட் செய்வது போல காய் கட் பண்ணும் பாக்ஸ் வந்துவிட்டது. இது கொஞ்சம் ஓகேதான்... ஆனால் என்ன ஒரு கஷ்டம் என்றால் இங்கு சென்னையிலோ தண்ணீர்க் கஷ்டம். அந்த பாக்ஸில் அழுத்தும் பாகத்தில் இருக்கும் அந்த முள் போன்ற பகுதியைச் சுத்தம் படுத்த சீப்பு போன்ற ஒன்றும் இருக்கும் என்றாலும் தண்ணீர் செலவாகும்...அப்புறம் வேடில்லா போன்று இங்கு வருபவை உறுதியாக இல்லை அதனால் ப்ளேட் உடைந்துவிடுகிறது அழுத்தம் கொடுக்கும் போது...மற்றும் நாம காயைக் கொஞ்சம் சின்னதா கட் செய்த பிறகுதான் அதில் வைத்துக் கட் செய்ய முடியும் அதுக்கு நாம எப்பவும் போல கையாலேயெ கட் செய்யலாமேனு தோணும்...

கீதா

Geetha Sambasivam said...

தன் கையே தனக்குதவி! நம்ம ரங்க்ஸ் புனாவில் இருந்து முறுக்கு மெஷின் வாங்கறேன்னு ஒத்தைக்காலில் நின்னார். நிக்கட்டும்னு விட்டுட்டேன். அதே போல் தான் தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் பொருட்களையும் வாங்கணும்னு சொல்வார்! நான் குறுக்கே விழுந்து தடுப்பேன். கடைகளுக்குப் போனாலே நான் ஒரு ஓரமா ஏதேனும் நாற்காலி கிடைச்சால் நிம்மதியா உட்கார்ந்துப்பேன்! அவர் ஷாப்பிங் பண்ணுவார்! :)))))நமக்கும் ஷாப்பிங்குக்கும் ரொம்ப தூரம்!

'பரிவை' சே.குமார் said...

ஹா..ஹா...
அனுபவங்கள் ரசிக்க வைப்பவை.

Avargal Unmaigal said...

எங்க வீட்டுல எங்க வீட்டம்மாதான் இப்படி பட்ட வாங்குவார்கள் நான் சத்தம் போடுவேன் கடைசியிலே அதை வாங்கி ஒரு சில தினம்பயன்படுத்தி கடைசியிலே எங்கோ சென்று ஒழிந்து கொள்ளும்..

இணைய திண்ணை said...

எல்லார் வீட்டிலும் இப்படிப்பட்ட இயந்திரங்கள் ஒன்றிரண்டாவது இருக்கும்.
அவற்றை பற்றி முன்பே தெரிந்திருந்தாலும் வாங்கும் ஆர்வத்தை மட்டும் நாம்மால் தவிர்க்க முடிவதில்லை.

நீங்கள் சொல்லியிருப்பதாவது பரவாயில்லை. விலை குறைந்தவை. வாக்கும் கிளீனர் படும் பாடு ஒன்றும் சொல்வதற்கில்லை. விலை அதிகம். அதை வாங்கிவிட்டால் என்னமோ வீடே ஷோரூம் போல மாறிவிடும் என்று நினைத்துதான் எல்லாரும் வாங்குகிறார்கள். ஆனால் சில நாட்களுக்கு பிறகு அதன் மேலேயே தூசி படிந்து கிடக்கும்.

ஒருமுறை எங்கள் தெருவில் ஸ்டாப்ளர் போல இருக்கும் கை தையல் மஷின்களை ஒருவர் விற்றார். அதை எங்கள் வீட்டிலும் அக்கம் பக்கத்து வீட்டிலும் வாங்கினர். ஆனால் அதை வைத்து ஒரு இன்ச் துணியைக்கூட தைக்க முடியவில்லை. விற்பனையாளர் கையில் இருந்தது மட்டும் நன்றாக தைத்ததாக மனைவி சொன்னார். அதன் ரகசியம் இதுவரை தெரியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசிதரன்,
சீவல் கட்டை கூட வாங்குவதில்லையா.பிரமாதம்.
எனக்கும் அதில் சீவுவது கஷ்டம். விரல்களைச் செதுக்கிகோள்வேன்.
அரிவாள் மணைதான் ஆகச் சிறந்தது.

அன்பு கீதா,
அதென்ன அச்செடுத்த மாதிரி முறுக்கு நாழிகள் இருவரிடமும்
ஒன்றாக இருக்கின்றன.ஆஹா. ஒரே ஊரோ.
எல்லாம் வாங்கிய பிறகு குட்டி இரும்பு பிழியற குழல் ஒண்ணுதான் இப்ப கைவசம்.
அதன் அருமை வேற எதிலும் வராது.
அப்போ இளம்வயதில் ஒரு பைத்தியம் மாதிரி நடந்துவிட்டது.

இப்பவும் சமீப காலம் வரை கோவில் கடைகளில் அவர் மரசிற்பம் வாங்கினால், நாம் தோசைக்கல் வாங்குவேன்.காசுக்கு வந்த கஷ்டம். நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா ,
ஆமாம் இந்த chef cutter தண்ணீர் உள்ள ஊருக்குத்தான் நல்லது.
பெண் அழகாக உபயோகப் படுத்துகிறார். மகனும் வைத்திருக்கிறார்.
சென்னையில் இந்த 2017 ஜூன் மாதம் தண்ணீருக்குப் பட்ட பாடு நினைவுக்கு வந்தது.
என்றுதான் விடிவு வருமோ.ஐப்பசியில் சென்றவர்கள்
தண்ணீருக்குச் சிரமப் படவில்லை.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கீதா மா.
யாராவது ஒருவர் உறுதியாக இருக்க வேண்டும்.
இவர் என்னைக் கேட்காமல் வாங்கி வந்த பொருட்களுக்கு
லிஸ்ட் போட்டால் முழ நீளம் வரும்.
இவர் வாங்கி வருவது ஒண்ணு. பெரியவர்கள்
முணுமுணுப்பது ஒன்று. கடவுளேன்னு இருக்கும்.
கையால் செய்வதே உத்தமம். அன்புக்கு நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பரிவை குமார்.
ஆமாம் வாழ்வின் மறக்க முடியாத பாடங்கள்.ஹாஹா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மஹேஷ்,
ஓஹோ. நாங்களும் வாங்கி இருக்கோமே. வாக்வம் க்ளீனர்.
வீட்டில் வந்து விற்று விட்டுப் போனார்.

ஒழுங்காக வேலை செய்கிறது.கைத்தையல் மெஷின்.
நன்றாக நினைவிருக்கிறது. இயல்பாகவே
தைப்பதில் விருப்பம் இல்லாததால்,
நல்லவேலை வாங்கவில்லை.
பணம் பிழைத்தது. உங்கள் கூற்றுப்படி பார்த்தால் வீட்டுக்கு வீடு
வாசப்படி போல.