Saturday, June 23, 2012

தொல்லைபேசிகள், மின் இணைப்புகள் இரண்டும் காணாமல் போனால்???

உலகம்  எங்கள் கைகளில்:)
ஆறுவது சினம்:)

 இருந்தது.அடுத்த நிமிடம் இல்லை.
பாட்ட்டி என் ஐபாட்  வேலை செய்யலை. என் சாட்
கட் ஆயிடுத்து.

பாட்டி என்  சோட்டா பீம்   போச்சு இது சின்னவன்.
அவன் கணினியில் யூ டியூப்.  பார்த்துக் கொண்டிருந்தான்..

முதல் நாள் தான் என் கைபேசி தொலைந்திருந்தது..
சமர்த்து  தொலைத்தால் தேடிக் கண்டு பிடிக்கும். அசடு தொலைத்தால்
ஞே'னு  முழிக்கவேண்டியதுதான்:(
வோடஃபோன் கம்பனிக்குப் போன் செய்தால் ஸாரி வி ஆர்   க்ளோஸ்ட்.
நாளைக்கு வாங்கன்னுட்டாங்க.
இனி வோடஃபோன் இணைப்பை வாங்குவதில்லை என்று தீர்மானித்தேன்.
நானும் ஏர்டெல்க்கு  மாறிட்டேன்.:)

செவ்வாய் அன்று   ஈபிக் காரங்க   கோடி வீட்டுக்கு  இணைப்புக் கொடுக்கும்போது  வழியில் தெமேன்னு   கிடந்த  எங்கள் தொலைபேசி இணைப்பையும் துண்டித்துவிட்டார்கள்.

இது முதல் தடவை  இல்லை. மூன்றாவது முறை   இது போல நடக்கிறது.

தரை தொலைப்பேசிகளுக்கு இப்போது மவுசு இல்லை என்பது தெரிந்த  விஷயம்.  பூக்காரம்மாகூட   காதில  கைபேசியைக் கொக்கி  போட்டுக் கொண்டுதான்  முழம் போடறாங்க.:)
இதோ துரத்தித் த்ரத்தி நேற்று இணைப்புக் கிடைத்தது.

இந்தத் தொந்தரவுக்கு விடிவே   கிடையாதா. தெரியவில்லை.

அடுத்ததா நிறைய புலம்பல்கள் இருந்தாலும் இன்னிக்கு இது
போதும்:)
நன்மைகள்
1,  வேங்கையின் மைந்தன் படிக்க ஆரம்பித்தாச்சு. பக்கத்தில

தில்லானா மோஹனாம்பாள்,  கூடவே தி.ஜானகிராமனின் சிறுகதைத்தொகுப்புகள்.
ஹலோ  ஃஎப்.எம்  ரேடியோல தீபா வெங்கட்டோட வாரத்தில மூன்றுதடவையாவது  பேசினது.

வாழ்க்கை ஒண்ணும் நின்னு போயிடலை சார்.!!!!!

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Friday, June 08, 2012

கோடைவிடுமுறை என் உலகத்தில்

எங்களுக்குக்   கைகொடுக்கும் குழந்தைகள்.

 இப்போது   புரிந்திருக்கும் உங்களுக்கு.
முதல் வரவாக  பெண்ணின் குடும்பம் வந்து இறங்கி இருக்கிறது.

வெய்யிலையும் தாண்டி தாத்தா பாட்டியைப் பார்க்கு ஆவல். தாத்தாவிடம் இண்டர்நல்  கம்பஸ்ஷன்  எஞ்சின்  பற்றி விவாதிக்க
ஆவலாக வந்திருக்கிறான்    பெரிய பேரன்.
சூரிய ஒளியை வீணாக்காமல்  தாத்தாவிடம்
மாடியில் ஒரு சோலார் பானல் போட  புத்திமதி
சொல்லிக் கொண்டிருக்கிறான்.:)

சின்னவன் அவன் சொல்வதற்கெல்லாம் ஒத்து ஊதிக் கொண்டு

அவ்வப்போது  தனக்குத் தானே  பேசிக்கொண்டு தானே விளையாடிக்கொள்ளும்

அழகுத் தங்கம்.இருப்பது ஒரு கணினி.
பெரியவனுக்கு  பள்ளியில் கொடுத்த விஞ்ஞான பாடங்களை
விவரித்து ஆராய்ச்சி செய்யணம்.
சின்னவனுக்கு
எப்பொழுதும் பார்க்கும் விளையாடும் கணினி   விளையாட்டுகள்.
வெளியெ  அனுப்ப முடியாத வெய்யில்.
அதனால் எனக்கும் கணினிக்கும்    கிடைக்கும் தொடர்பு     ஒரு மணி நேரமே:)

மடிகணீனி வாங்கிக் கொள் பாட்டினு புத்திமதி வேறு.
விகல்பமில்லாத இந்த அன்பைத்தவிர வேறே  என்ன வேணும்.

அதனால் சுற்றிவளைத்துச் சொல்ல வருவது என்ன என்றால்   லீவு லெட்டர் கொடுக்கிறேன்.:)
எப்பவாவது வரும் வசந்தத்துக்குத் தான் எத்தனை மதிப்பு.
அந்த மகிழ்ச்சியை  அனுபவிப்பது  இன்னும் முக்கியம்.
மீண்டும் பிறகு  பார்க்கலாம் தோழர் தோழிகளே.

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Wednesday, June 06, 2012

வளரும் உறவுகள்

கொடுக்காப்புளி ருசித்த காலம்தபால் சேலத்திலிருந்துதான்.

குழந்தை பிறக்கணும்னால்   மதுரைக்குத்தான்
போகணுமா. இங்க வைத்துக் கொள்ளக் கூடாதா.
பாண்டில் பட்டன் இல்லை.
சட்டையில் க்ரீஸ் போகலை.

தோய்க்கிறவன் சரியாச் செய்ய மாட்டேன் என்கிறான்.
நெஸ்கபே  பிடிக்கலை.
சாப்பாடு  ஒத்துக்கவில்லை  இத்யாதி இத்யாதி.

இத்தனைக்கும் உள்ளூரிலியே சித்தப்பா இருந்தார்.
போனால்   அழகாக ஒருவேளைச் சாப்பாடாவது
சரியாக இருந்திருக்கும்.
பதில் கடிதத்தில் தயிர் தோய்ப்பது எப்படி.
சாதம் குக்கரில் செய்வது எப்படி என்றேல்லாம் எழுதினால்
எவனுக்கு நேரம் இருக்கு.
வொர்க்க்ஷாப் முதல் சைரனுக்கு நான் அங்க இருக்கணும்னு
அப்பதான் தொழிலாளிகளுக்கு  எல்லாம் டிஜிப்லின் வரும்னு பதில்.

இப்படியே   நாட்கள் தள்ளிவிட்டோம்

நடுவில் லக்ஷ்மியும் வந்தாள்.
பரோடாவிலிருந்து   போபாலுக்கு மாறிவிட்டதாகவும்
உலகமே   அதிசயமாக   இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். அதுக்குள்ள எதுக்கு முதல் குழந்தை.

இரண்டு வருடமாவது  எஞ்சாய் செய்ய வேண்டாமா. நாங்கள் பார் பாங்கில்  லீவு வரும்போதெல்லாம் காஷ்மீர்,டெல்லி என்று போய் விட்டு வந்துவிடுவோம்.
உங்க ஆத்துக்காரர் ராத்திரி 12 மணிவரை வேலை செய்வாராமே.
நீ தனியாக   உட்கார்ந்திருப்பியா.
இல்லையே   எனக்குத் துணைக்கு ஆள் உண்டு. நிறைய புத்தகங்கள் படிப்பேன். அழகாக ரேடியோ வாங்கிக் கொடுத்து இருக்கிறார்.
அவர் வரும் வரை கேட்பேன்.
ராத்திரி விழித்தால் என்ன . பகலில் தூங்கிக் கொள்கிறேன்.
அவர் வேலை அப்படிப்பட்டது  என்றேன்.

உனக்குப் புத்தகம் இருந்தால் போதும்,  எனக்கு அப்படி இல்லைமா.
என்று மேலும்  வளவளத்த பிறகு, குழந்தை பிறந்ததும் பார்க்க வருவதாகச் சொல்லிப் போனாள்.

பிறகு அவளுக்கும் இரு ஆண் குழந்தைகள் பிறந்தார்கள்.

எனக்கும் மூன்றாவதாகப் பையன் பிறந்தான்.
எங்கயோ இந்தூரிலிருந்து என்னை சென்சார் செய்து கடிதம் போட்டாள். ரெண்டு போறும்னால் கேட்கலியே  என்று பொறுமினாள்.:)

எனக்குக் கஷ்டமே இல்லை  லக்ஷ்மின்னால் ஒத்துக் கொள்ள மாட்டாள்!!

நாற்பது வருடங்கள் கழித்து இப்போது பார்த்தபோது நிறைய சேதிகள். மதுரைக்குத் திரும்பி விட்டதாகவும் பிள்ளைகள் அமெரிக்காவில் இருப்பதால் அங்கே ஒரு வருடம் இங்கே ஒரு வருடம் இருப்பதாகவும் சொன்னாள்.

அப்பா  இறைவனடி சேர்ந்தது.,தம்பிகளும் அமெரிக்காவில் இருப்பது என்று நீண்டு போன பேச்சில் ஒன்றைக் கண்டுபிடித்தேன். குற்றமே சொல்லவில்லை. என்ன  இப்படி  சாதுவாயிட்டியேலக்ஷ்மி  என்று ஆச்சரியப் பட்டேன்.பசங்களுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதுன்னு சொன்னேனே  என்று முடித்தாள்:)

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Tuesday, June 05, 2012

வளரும் தேயும் நிலைக்கும் உறவுகள்

எப்படியெல்லாம் எடுக்க முடியுமோ அப்படியெல்லாம் நிலவம்மாவைப்பிடித்தேன்.

உண்மையாகவே நீல வானம்.
நீந்துகின்ற வெண்ணிலா
இப்படியே களங்கமே இல்லாமல்   வாழ்வும்  போனால் நன்றாகத்தான் இருக்கும்.
என் பெரியக்காவும்  இது போலத்தான் . இன்பம் வந்தால் தலைகால் தெரியாது. நானும் தெரிய மாட்டேன்.
சிறிது ஏறுக்கு மாறாக ஏதாவது காதில் விழுந்தால் புலம்புவாளோ அப்படிப் புலம்புவாள்.
எஸ்டிடி  போட்டுப் புலம்புவாள்.

உனக்கென்ன என்று ஆரம்பித்தால் தெரிந்துவிடும். ஏதாவது தகறாரு
மாமியாருடன்   என்று,
நான் என்ன செய்யட்டும். என் மாமியாரும் எண்பது தொண்ணூறு வயது இருந்தால் நானும் சந்தோஷம்தான் பட்டிருப்பேன்.
அருமையான  மனுஷி.

இவள் இந்த  லக்ஷ்மி இருக்கிறாளே, அப்பா  செல்லம். 
வரைந்த சித்திரம் போல அழகு. 
பதினெட்டு வயதிலியே கண்கள் நாலும் பேசும்.
மதுரை   வசந்தநகர்  வீட்டுக்கு யாராவது ஏதாவது காரணத்தைக் கொண்டு வருவார்கள் போவார்கள்.
பாதி நபர்களுக்குச் சின்னம்மாவைப் பார்ப்பதுதான். வேலை. இவளும் ஊஞ்சலை விட்டு நகராமல்,நீண்ட கூந்தலைப் பின்னித் தளர்த்தி
இந்தக் கையில் ஜயகாந்தன் புத்தகம் வைத்துக் கொண்டு  அசையும் ஓவியமாய்க் காட்சி தருவாள்:)
அப்பா   சீதாலக்ஷ்மி மில்லில் நல்ல வேலையில் இருந்தார்.
எப்பவாவது  நம்  வீடு வழியாகப் போகும்போது   லக்ஷ்மியை இற்க்கிவிட்டுப் போவார்.
சாயந்திரம்    வரை கதை அளந்துவிட்டுப் புதிதாகக் கற்றுக் கொண்ட எம்ப்ராய்டரிக் கலையில் பட்டாம்பூச்சியையை ஏற்றிய  
துணியைத் தைக்க தயார் செய்வோம்.

ஒருநாள்   காலையில் பெரியப்பா வந்தார்.
லக்ஷ்மிக்குப்  பரோடாவிலிருந்து வரன் வந்திருக்கிறது. அவர்களும் 
மதுரைக்காரர்கள் தானாம்.

மாப்பிள்ளை மானேஜர் வேலையில் இருக்கிறார் வசதியான  குடும்பம்.
இவர் ஒரே    பையந்தான். படமும் அனுப்பி இருக்கிறார்கள் .
நல்ல உயரம் , சேப்பா நன்றாக இருக்கிறார்.
உன் மனைவி கலர் இருப்பார்' என்றதும் அப்பா சிரித்துக் கொண்டார்.
அம்மா  உள்ளே  டப்பென்று எதையோ   வைக்கிற சத்தம் கேட்டது.:)

அப்பா  படத்தைப் பார்த்துவிட்டு, நல்லதாப் போச்சு   கோவிந்தா,
லக்ஷ்மியைக் கேட்டியா,அவள் சம்மதம் இல்லாமல் செய்யாதே
என்றார்.
அதெல்லாம் நேற்றே  ஆச்சு.
அவளுக்கு எப்படியாவது இந்த மதுரையைவிட்டுப் போனால் போதும் என்றிருக்கு, அவள் அம்மாவுக்குத்தான் இவ்வளவு தூரத்துக்குப் பெண்ணை அனுப்பணுமே.அடிக்கடி  பார்க்க முடியாதே. உன் பெண்ணாவது இங்கே புதுக்கோட்டையில் இருக்கிறாள்.

இதோ கல்யாணமாகி ஆறு மாதத்தில் கருவும் தரித்தாச்சு.
மாப்பிள்ளையும் வாராவாரம் மோட்டார்சைக்கிளில் வந்துவிடுகிறார் பார்க்க. 

நாங்கள் அப்படி செய்ய முடியாதே   என்று ஜானகி
கவலைப் படுகிறாள்  என்று முடித்தார் பெரியப்பா.

இது நடந்தது ஒரு ஆவணியில். அதற்குள் எங்அளுக்குச் சேலம்  மாற்றம் கிடைத்துப் போய்விட்டோம். திருமணத்துக்கு வரமுடியவில்லை.
சென்னையில் எங்களுக்குச் சீமந்தம் முடிந்த அம்மா கையோடு என்னை மதுரைக்கு அழைத்துவந்துவிட்டார்.
அதற்குள்  லக்ஷ்மி  திருமணம் முடிந்து பரோடா போயிருந்தாள். அம்மா
அந்தக் கல்யாணப் பெருமைகளைச் சொல்லி முடிக்க ஒரு நாள் எடுத்துக் கொண்டார்.!!

எனக்குத்தான் கதை கேட்கப் பிடிக்குமே,பிரசவத்துக்குத் துணயாக வந்திருந்த பெரிய பாட்டியின் மடியில் படுத்துக் கொண்டு
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தேன்.
பெரிய  பாட்டி  என் கல்யாணத்தையும் அவள் கல்யாணத்தையும்
ஒத்து நோக்கிக் கொண்டே, 
பாப்பா    உனக்கும்  உங்க ஆத்துக்காரருக்கும் சாம்ர்த்தியம் போதாது போ.
அவனைப் பார்த்தியா. ஊர்ப் பெரிய மனுஷாளையெல்லாம் கூப்பிட்டு  
பந்தல் நிறையப் பரிசாக அடுக்கிவைத்திருந்தான் பார்,

மதுரை ஜங்க்ஷனே கொள்ளாமல்   வண்டிகள், ஃபர்ஸ்ட்    க்ளாஸ்
குப்பியாமே  அதில் இவா மட்டும் போகிறமாதிரி

ஏற்பாடு. மாமியார் மாம்னார் தனியா ஃஃபர்ஸ்ட் க்ளாஸில் போனார்கள்
என்றதும் எனக்குச்  சிரிப்புத் தாங்கவில்லை.
பெரியம்மா அது குப்பி இல்லை  கூபே. இரண்டு பேர் மட்டு போகக் கூடிய ஃபர்ஸ்ட் க்ளாஸ்  .தேன்நிலவுத் தம்பதிகள் இல்லியா 
என்று குறும்பாக முடித்தேன்.

என்னவோடிம்மா.நாங்கள் எல்லாம்  ஒருத்தருக்கு ஒருத்தர் முகம் பார்க்கவே நாலு மாசம் ஆகும்;''

ஆமாம் அதுக்குள் பாப்பா மட்டும்    சீக்கிரம் வந்துடும் என்று சிரித்த என்னை அம்மா அடக்கினாள். வாயாடாதே.
இல்லம்மா இப்பா எல்லாம் மாறியாச்சு. நம்ம லக்ஷ்மி சந்தோஷமா இருக்கட்டும்.  
அவர், அவளோட கணவர் எப்படி இருந்தார்.கலகலப்பா  இல்லைன்னா வேற மாதிரியா  என்று கேட்டேன்.வம்பு வேண்டாமா:)
அய்யோ  அதையேன் கேட்கறே. அவர் சிரிச்சே நான் பார்க்கலைடிம்மா.

நம்ம லக்ஷ்மி குணத்துக்கும் அவர் குணத்துக்கும் ஒத்து வருமோ என்று யோசனையில் ஆழ்ந்தாள் பெரியபாட்டி
கன்னத்தில் கைவைத்தபடி.
என்ன இருந்தலும் நம்மகத்து மாப்பிள்ளை போல வராது.
என்று  பெருமிதப் பட்டுக் கொண்டாள். அதற்குள் 
போஸ்ட்  வரவே அவசரமாக எழுந்த என்னை,
அமர்த்தியபடியே அம்மா போய்   வாங்கி வந்து கொடுத்தாள். தினம் எழுத என்ன இருக்கிறது உங்கள்  இரண்டு பேருக்கும்  
என்று  பரிகாசம் செய்தபடி  உள்ளே சென்றாள் அம்மா.

தொடரும்.
கதையின் மறுபாகம் உடனே வந்தாலும் வரும். இல்லை    ,நாட்களானாலும் ஆகும்.
விருந்தாளிங்க வராங்கப்பா.:)எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Saturday, June 02, 2012

உறவுகள் தொடரும் வழி

அக்கா தங்கை    ஆநந்தம் எப்பொழுதும் தொடரும்.வெகுநாட்களுக்குப் பிறகு என்    பெரியப்பா மகளைச் சந்தித்தேன்.அவள்  எனக்கு அக்காதானே.
ஒரே ஆநந்தம்,ஆரவாரம்  வம்பு, விசாரிப்பு எல்லாம் தொடர்ந்தது.

வீட்டுப் பெரியவர் ஒருவரின் சதாபிஷேகத்துக்காக்  கூடியிருந்தோம்.

அவர் ஒர்  சிறந்த ஆன்மீகச்  சிந்தனையாளர். தனக்கு இந்த
வைபவமெல்லாம்  செய்வதில் அவ்வளவு     இஷ்டமில்லை.
இருந்தும் அவர்களது குழந்தைகளின் விருப்பத்தை மீற முடியாமல்
ஒரே  ஒரு  நண்பர்கள்  குழாம்   சந்திப்புக்கு மட்டும் சரியென்று சொன்னார். நாங்கள் அனைவரும்  புடவை வேட்டி மாலைகள் சகிதம் அவர்தௌ பெரிய வீட்டில்   கூடினோம்.

அமிர்தமான சாப்பாடு.
அமிர்தத்திலும் சர்க்கரை இருந்ததால் கொஞ்சமே எடுத்து:)

சாப்பாடை முடித்துக் கொண்டேன்.
அப்புறம்   ஆரம்பித்தது அரட்டை.

ஒவ்வொருவராக   தம்பதிகளுடனும் மற்றவர்களுடனும் படங்கள்  எடுத்துக் கொண்டோம்.வரலாறு படைப்பதில் வல்லவர்கள்:)
  யார் யார் என்ன புடவை,என்ன  பரிசு  என்ற   ஆராய்ச்சி தொடர்ந்தது.

எல்லாவற்றிலும் நடு நாயகமாகப் பெரியவர் உட்கார்ந்து கொண்டார்.
புடவைகள் ஒரு புறம்   வேஷ்டிகள் ஒரு புறம்/.


தொண்டையைக் கனைத்துக் கொண்டு என்ன நான் இனிமேல் பேசலாமா

என்றார்.
ம்ம்ம்.  பேசுங்கோ என்று ஒரே கூச்சல்.
ராதா நீயும் வா  என்று ஊஞ்சலில் மனைவியையும்
உட்காரவைத்தார்
கண்கொள்ளாக்காட்சிக்கு   நாங்கள் ராதாகல்யாண வைபோகமே. மாதுமாமா
கல்யாண வைபோகமே பாடினோம்.

பத்துமுழம்ஜரிகை  வேஷ்டி வாங்கினது யார் என்று முதல் கேள்வி.
அவரது தம்பி வந்தார். ஏண்டா என் உடம்பைப் பார்த்தியா. நான் தாங்குவேனா
இந்த வேஷ்டியை?  அதைக் கையிலெடுத்தார்,
இன்னோரு தம்பியை அழைத்து ''டேய் உன் சதாபிஷேகத்துக்கு இதை வைத்துக் கொள் என்று கொடுத்துவிட்டார்.
அந்தத் தம்பி ஆறடி உயரமும் ,கொஞ்சம் பருத்த  உடலும் கொண்ட அந்தத் தம்பி வெட்கத்தோடு வாங்கிக் கொண்டார்.

தனக்கு வந்திருந்த எட்டு முழ  பட்டு வேஷ்டியை
இரண்டாவது தம்பிக்குக் கொடுத்தார்.
 சேலம் பருத்தி வேஷ்டியைத் தான் எடுத்துக் கொண்டார்.

பரிசுப் பொருட்களைப் பெண்களிடம் பிரித்துக் கொடுத்தார்,.
நான்  அந்த ராதாமாமிக்கு நல்ல பச்சையில் சிகப்பு ஜரிகைபோட்ட
பட்டு பருத்திப் புடவையை வைத்திருந்தேன்.

அதன் கதி என்ன ஆகப் போகிறதோ என்று பார்த்த போது மாமி அதை எடுத்துத் தன் பின்னால் வைத்துக் கொண்டுவிட்டார்.

''தலை நரைச்சது ஆசை நரைக்கலியே என் ராது' என்று மாமா  பாட்டு வேறு பாடினார்.
ஆமாம் நீங்கள் பாதி சந்யாசி. எனக்கு இன்னும் நிறைய கல்யாணம் எல்லாம் போய்வரணும். இதை நான் கொடுக்க மாட்டேன் என்று சிரித்தார் மாமி.

என் கைக்கு நல்ல ரோஜா நிற    காட்டன் புடவை வந்தது. அது  கனம் ஜாஸ்தி என்பதால்   எனது கனமான் உடலுக்குப் பொருத்தம் என்று மாமி கொடுத்துவிட்டார்.
இப்படியே தொடர்ந்தது.

அருமையான காப்பி,டிபனுடன் அந்தப் புதுமைத் தம்பதியரிடமிருந்து விடை பெற்று நானும் அக்காவும் வீடு வந்தோம் அந்தவம்பை இன்னுமொரு நாள் பார்க்கலாம்:)


 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்