Showing posts with label இராமன் பாதுகை. Show all posts
Showing posts with label இராமன் பாதுகை. Show all posts

Sunday, January 20, 2008

பாதுகையே நாட்டை ஆளும்




பாட்டி!! ஒரு கதை சொல்லேன். இப்படித்தான் எங்கள் இரவு நேரம் ஆரம்பமாகும்.


நாள் பூராவும் பள்ளிப்பாடங்கள் எழுதிவிட்டுக் கொஞ்ச நேரம் தாத்தாவோடு கேள்விக்கணைகள் தொடுத்து அரட்டை அடித்துவிட்டு,


அவர் தூங்கப் போனதும் என்னிடம் வருவான் பெரிய பேரன்.


இரண்டு வருடங்கள் முன்னால் சொன்ன சாக்கலேட் மரம், ஐஸ்க்ரீம் வீடு, பகாசுரன் கதை இதெல்லாம் இப்ப வேண்டாம்.


நான் பெரியவனாய்ட்டேனே பாட்டி:))




சரி ராமாயணம் சொல்லலாமான்னதும் ரொம்ப ட்ராஜிக்கா இல்லாம சந்தோஷமான பார்ட் மட்டும் சொல்லு'' என்று பதில் வரும்.


இவனுக்காக ராமாயணத்தில் கொஞ்சம் சைடு கதைகள் எல்லாம் இட்டுக் கட்டி சொல்வதும் உண்டு.


ஏனெனில் கேட்கிற கேள்விகள் சுலபத்தில் பதில் சொல்ல முடியாது.


உ-ம், ராமர் பரதன் கிட்ட பாதுகைகளைக் கொடுத்துட்டு வெறும் காலோட போனாரா.


பரதன் வேற ஏற்பாடு(another pair of sandals)


செய்திருக்கலாமே.


அப்போ சீதை,லக்ஷ்மணர் இவர்களும் செருப்பு போட்டுக்கலியா?




சாமி!!னு ஆயிடும்.


நான் என்ன, கம்பரா,வால்மீகியா என்று தேடிப் படித்த வகையும் இல்லை. எல்லாம் கேள்விஞானம்.


ஒரு நிமிஷம் இந்த கே ஆர் எஸ் போன் நம்பரை வாங்கி விஷ்ணு(பேரன்) கிட்ட கொடுத்து விட்டால் என்ன என்று தோன்றியது.


அவர்தான் எல்லாவற்றுக்கும் ரெடியாகப் பதில் தேடித் தருவார்.


போனால் போகட்டும் பாவம் கண்ணபிரான் ரவி என்று விட்டுவிட்டேன்.:)


அதற்குப் பதிலாகப் பாதுகா தேவியின் மகிமையைச் சொல்லலாம் என்று ஆரம்பித்தேன்.




''ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய பாதுகா சஹஸ்ரம் நூலில் இந்த அழகான கதை வருவதாகப் படித்தவர் ஒருவர் எனக்குச் சொன்ன விஷயத்தை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

ஸ்ரீராமன் சேதுக்கரையில் நிற்கிறான்.

சுக்ரீவன்,லக்ஷ்மணன் ,அனுமன்,அங்கதன் இன்னும் மற்ற வானர சேனைகளும்,கரடிப் படைகளும் சீறிவரூம் கடலைப் பார்த்து,ஏங்கி நிற்கின்றனர்.

எப்படிக் கடப்பது இந்தக் கடலை??


அனைவராலையும் தாண்டக் கூடிய தொலைவு இல்லையே என்று யோசித்தபோது,விபீஷணின்
ஆலோசனைப்படி உணவும் நீரும் அருந்தாமல், தர்ப்பசயனத்தில் இருக்கிறான் ஸ்ரீராமன்.
சமுத்திரராஜன் வரவில்லை. ராமபாணத்தைப் பூட்டி கடல் மேல் ஏவும்போதும்
கடல் பொங்கியதாம். ஆனால் வற்றவில்லை. பிறகு நடந்த ,அணைகட்டும் படலம்
ராவண வதை,ஸ்ரீராமபட்டாபிஷேகம் எல்லாம் தெரிந்த,தெளிந்த புராணம்.

கடல் வற்றாமல் போனதற்கு ஸ்ரீமன்நிகமாந்த மகாதேசிகன் தன் பாதுகாசஹஸ்ரத்தில்
புதிய அழகிய அர்த்தமுள்ள காரணம் கொடுக்கிறார்.
ஸ்ரீராம பட்டாபிஷேகம் நடக்கவில்லை. அவருடைய பாதுகைகள் அரியணையில் அமர்ந்தன. அவைகளுக்குப் பட்டாபிஷேகம் நடத்திவைத்தான் பரதன்.
பாதுகாதேவி பெருமான் சரணங்களிலிருந்து கிளம்பி சிம்மாசனத்தில் அமர்ந்தன.
அவர் கைகளைப் பற்றிய திருமகள் சீதையோ கானகத்தில் நடந்தாள்.
இங்கே நந்திகிராமத்தில் பாதுகாதேவிக்குத் தினம்
காலை மாலை என்று சகல புண்ணிய நதிகளிலிருந்தும் கொண்டுவந்த தீர்த்தங்களால்
அபிஷேக ஆராதனை செய்தான் பரதன்.
அவ்வளவு புண்ணிய தீர்த்தங்களும்
சர்யு நதியை அடைந்து சாகரத்தையும் சேர்ந்தனவாம்.
வழக்கமாகக்
கடலில் நதிகள் சங்கமிக்கும்போது கடலுக்கு ஏதும் மாற்றம் கிடையாதாம்.
ஆனால் ஸ்ரீராமபாதுகா தீர்த்தம் அப்படியில்லையே!!
அதற்குத் தனி மகிமை அல்லவா!!

அம்ருதம் போல இந்த ஸ்ரீபாதுகாதீர்த்தம் கடலில் கலந்ததும் கடல் மேலும் விருத்தியாக,
கடல் நீரும் பெருகி விட்டதாம்.
அத்தனையும் அக்ஷ்யமாக வளம் பெருக,
அதே கடல் நீரில் ராம்பாணம் வந்தும் கடல் நீர் வற்ற சந்தர்ப்பமே இல்லாமல்
போய்விட்டதாம்.
ஸ்ரீராமபாணம்,பாதுகா தேவியின் சரண் புகுந்து புறப்பட்ட தீர்த்தத்திடம்
வாக்குவாதம் செய்யாமல் திரும்பிவிட்டதாம்.
என்ன ஒரு கற்பனை.!!
அவ்வளவு பெரிய மகா மகானின் வாக்கியங்களைப் படித்தவுடன்
இதையே கதையாகச் சொல்லத் தோன்றியது.
ஸ்ரீராமா சரணம்.
ஸ்ரீராம பாதுகா சரணம்.
ஸ்ரீ பாதுகா தேவியே சரணம்.
இந்தக் கட்டுரைக்கு ஆதாரம் ஸ்ரீந்ருசிம்ஹப்ரியா தை மாத இதழ்.
நன்றி.
சொற்குற்றம் பொருள் குற்றம் பொறுக்கவேண்டும்.


நவராத்திரி பதிவு 4

வல்லிசிம்ஹன் நவராத்திரி நல் நாட்கள் வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்  நவராத்திரி நல்  நாட்கள்  +++++++++++++++++++++++++++++++ சின...