Showing posts with label ஊறுகாய். Show all posts
Showing posts with label ஊறுகாய். Show all posts

Monday, April 04, 2016

மாங்காய் எண்ணெய் மாங்காய்

 எண்ணெய் மாங்காய்  .
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++இந்த ஊறுகாய்க்கு   எந்த மாங்காயும் பொருத்தம். ஊறு காய் போட்டபிறகு
 வெய்யிலில் எடுத்து   வைத்து வைத்து எடுக்கவேண்டும்.

கொஞ்சம் இளசு  கொஞ்சம் முத்தின வகையாக இருக்கும் மாங்காய்கள் ஆறு எடுத்துக் கொள்ளணும்.

நன்றாக அலம்பித் துடைத்துக் கொண்டு பிறகு துண்டமாக அரிந்து கொள்ளவேண்டும்.
கையளவு தான் இதுக்கு.
ஐந்து அளவு மாங்காய்த் துண்டுகளுக்கு   ஒரு அளவு உப்பு பொடித்தது.
உப்பு அளவிற்கு ஒன்றேகால் அளவு மிளகாய்ப்   பொடி
முதலில் மாங்காய்த்துண்டுகளையும் உப்பு பொடியையும் கலந்து வைத்து விடவேண்டும்.
இரண்டு நாட்களில்   ஊறித் தண்ணீர்   விட்டு விடும் .

அடுத்து  அரைக் கிலோ எண்ணெய் அடுப்பில் வைத்துக் கடுகை
வெடித்ததும்,மிளகாய்ப் பொடி , வறுத்துப் பொடி  செய்த   மெந்தியப் பொடி
பெருங்காயம் வறுத்துப் பொடி  செய்தது, மஞ்சள் பொடி  6 ஸ்பூன் எல்லாவற்றையும் கொதிக்கும் எண்ணெயில் போட்டு அடுப்பை அணைத்துவிடவேண்டும்.
அதே சூட்டோட , மாங்காயில் இருந்த உப்பு ஜலத்தை சேர்க்கவேண்டும்.மீண்டும் அடுப்பை ஏற்றி, சிறிய  உஷ்ணத்தில் பதினைந்து நிமிஷங்கள் வைத்திருந்து    தண்ணிர்  வற்றியவுடன்
அதில் மாங்காய்த் துண்டுகளைப் போட்டு இறக்கிவிடவேண்டும்.
ஆறினவுடன் ஜாடியில்  சேர்த்துவிடவேண்டும்.
ஜாடி குளிர்ந்தவுடன் வேடுகட்ட வேண்டியது தான்.

இதற்குப் பராமரிப்பு கவனம் வேண்டும். நல்ல வெய்யில் வந்தவுடன் ,கிணத்து மேட்டிலோ இல்லை பால்கனியிலோ வேடுகட்டின துணியோடு வைக்க வேண்டும் .
நான் கு  நாட்களில் எண்ணெய் மாங்காய் ரெடி.


















எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Thursday, March 31, 2016

அடை மாங்காய் ஊறுகாய்



  எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அடை மாங்காய் ஊறுகாய்.
+++++++++++++++++++++++++++++++
 பாட்டியின் ஸ்பெஷாலிடி  இந்த ஊறுகாய்.
பெரும்பாலும் ருமானி மாங்காய் உபயோகப் படுத்துவார்.
 அவரவர் வீட்டு அரிவாள் மணைகளை எடுத்துக்கொண்டு 
அக்கம்பக்கம்  மாமிகள் வந்துவிடுவார்கள்.
கொத்தவால் சாவடியில் இருந்து வாங்கிவந்த மாங்காய்கள் மூட்டை நிறைய இருக்கும்.
  அவரவர்  முடிந்த வரை அரிந்து தள்ளிவிடுவார்கள்.
நாலைந்து விறகடுப்புகள்  திகுதிகு என்று எரிந்து கொண்டிருக்கும்.

அதில் இரண்டு படி கொள்ளும் அண்டாக்கள். உள்ளே ஈயம் பூசப்பட்டவை.

அவைகளில் பாதி அளவுக்கு நல்லெண்ணெய் ஊற்றப்படும். மாங்காய்த் துண்டுகள் உப்பில் புரட்டப் பட்டிருக்கும்.
ஒருபடி மாங்காய்த் துண்டுகளுக்கு இரண்டு ஆழாக்கு உப்பு தூள். இரண்டு ஆழாக்கு மிளகாய்த்தூள்,
ஒரு கட்டிப் பெருங்.

காயம் வறுத்துப் பொடி செய்யப் பட்டிருக்கும். மஞ்சள் பொடி
ஒரு ஆழாக்கு. மெந்தியம் வறுத்துப் பொடித்தது அரை ஆழாக்கு.

இங்கே ஒரு படி என்பது எட்டு ஆழாக்கு.
கிட்டத்தட்ட ஒண்ணரைக் கிலோ.
இப்போது ஒரே ஒரு அடுப்பைப் பார்க்கலாம்..
அதில் அண்டாவில் ஒன்றரைக் கிலோ எண்ணை ஊற்றிக் கொதிக்க வைப்பார்கள்.
சூடானதும் இரண்டு கைப்பிடி கடுகு முதலில் போட்டு வெடித்ததும்
உப்பு மாங்காய்த்துண்டுகள்  போடப்படும்.
தளதள வெனக் கொதிக்கும் போது அடுப்பைக் குறைத்துவிடுவார்கள்.
மரக்கரண்டி பெரிதாக இருக்கும் அதனால் அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டிருப்பார்கள்.
ஏதோ கணக்குப் பார்த்து,ஒரு துண்டை எடுத்து பதம் பார்த்து வெந்துவிட்டதா 
என்று உறுதி  கொள்வார்கள். உடனே மஞ்சள் பொடி,மிளகாய்ப் பொடி,பெருங்காயப் பொடி போடப்பட்டு மீண்டும்  விரைவாகக் கிளறுவார்கள்.
அதற்குள்  ஊறுகாயை ஆற வைக்கும்  பாத்திரம் தயாராகும்.
எண்ணெய்  மேலாக வந்ததும் அந்த அடுப்பு அணைக்கப் படும்.
இரண்டு பேராக அந்த அண்டாவை இறக்கிவைப்பார்கள். ஆறிய
 பின் வறுத்துப் பொடித்த மெந்தியத்தூள்   ஊறுகாயின் மேல் தூவப்பட்டு மீண்டும் மேலும் கீழுமாகக்  கிளறப்படும்.
அப்போது  தெரியும் துண்டாக உள்ளே அனுப்பப்பட்ட மாங்காய் உருமாறியோன்றோடொன்று ஒட்டி இருக்கும்.  அதனால் தான் அந்த அடைமாங்காய் என்ற பெயர்.

ஆறும் வரை ஊர்க்கதைகள் பேசப்படும்.
மீண்டும் குளிர்ந்த பாத்திரத்துக்கு மாற்றப்படும்.
இதற்காகத் தயாராக இருக்கும் உயர ஜாடியில் மரக்கரண்டியினால் மாற்றப்படும்.
 யாருக்கு வேணும்  அடை மாங்காய்.....






































.

Saturday, February 21, 2015

எங்க வீட்டு ஆவக்காய்...மீள் பதிவு








ஆவக்காய் போட்டாச்சு.
எண்ணெய் அபிஷெகம் தான் பாக்கி.
புதிதா இன்னோரு பீங்கான் ஜாடியும் வாங்க வேண்டும்.
ஒரு பையனுக்கு கடுகெண்ணெய் கலந்த ஊறுகாய் மேல் மோகம்.அப்பா மாதிரி.
இன்னொருவருக்கு
எண்ணெய் வேண்டாம், உப்பு,காரம் எல்லாம் மிதம். அதுக்கப்புறமும் அந்தத் துண்டை அலம்பிவிட்டுச் சாப்பிடுவார்:)
பொண்ணுக்குக் கொண்டைக்கடலை கட்டாயம் போட்டிருக்கணும்.

அதனால் தங்கத்தைச் செயினாவும்,நெக்லஸாவும் ,அட்டிகையாவும் போட்டுக்கிற மாதிரி
மாங்காயை விதவிதமாச் செய்தாச்சு.
போட்டபிறகு எப்படி செய்தேன்னு சொல்லணும் இல்லையா.....
மாங்காய்களைத் துண்டு போட்டு வெள்ளைதுணியில் உலற வைக்கணும்,.
எங்கவீட்டு வெள்ளைத்துண்டு காணாமப் போய்விட்டது.
அதனால் கட்டம் போட்டத் துண்டுல உலத்தியாச்சு.
அப்புறம் அந்தத் துண்டுகளை(மாங்காயைச் சொல்றேன்பா)
அரைப்படில அளந்துக்கணும்.(சின்னப்படி)
ஒரு அரைப்படி துண்டுகளுக்கு
வேண்டியது 300 கிராம் கல்லுப்பு
வறுத்து அரைத்த சிவப்பு மிளகாய்ப் பொடி 300கிராம்
பச்சையாய் அரைத்த கடுகுப் பொடி 300 கிராம்.
மெந்தியம் வறுத்து அரைத்தது 3 தேக்கரண்டி.
மஞ்சள் பொடி 200கிராம்
கொண்டைக்கடலை 100கிராம்.
ஒரு பெரிய தாம்பாளம் ஒன்று எடுத்துக் கொண்டு ஒரு கைப்பிடி மாங்காய் ஒரு பிடி இந்தப் பொடிகலவை என்று எல்லா மாங்காய்த்துண்டுகளையும் கலக்கவேண்டும்.
கைபடாமல்  பெரிய  மரக்கரண்டியால்    ஒரு பெரிய ஜாடியில்  சேர்க்கவேண்டும்.
அதுக்கு முன்னாலே அந்த ஜாடி சுத்தமா இருக்கான்னு தெரிஞ்சுக்கணும்.
இல்லாட்டா கடைசி நேரத்தில,
திடிர்ர்னு எட்டுக்கால் பூச்சி எட்டிப் பார்க்கும்:)
அப்புறமா ஒரு கிழிஞ்ச வேஷ்டித் துண்டை(வேஷ்டியை யார் கிழிய விடுவார்கள்.)
பழசுதானேன்னு சொல்லி பீரோவிலிருந்து உருவிக் கொள்ள வேண்டியதுதான்:)
அதை ஜாடியோட கழுத்தில்   அரபு நாட்டு ஷேக்கோட தலைஅலங்காரம் (சிவாஜி சிவந்த மண்ணில்  பட்டத்து ராணி பாட்டுக்கு  வருவாரே)போல சுத்திவிட்டு மூட வேண்டியதுதான்.
மூன்று நாட்கள் கழித்துப் பார்த்தால் கொஞ்சம் தளர்ந்து விட்டிருக்கும்.
அப்போது நல்ல எண்ணெயை அப்படியே கலந்து விடலாம். அவரவர் இஷ்டம்.
சில பேர் தேவைக்கேத்தது போல அவ்வப்போது எண்ணெய் கலந்து கொள்வார்கள்.

மிச்சமிருக்கும் மாங்காய்த் துண்டுகளை வெய்யிலில் உலர்த்தி , மெந்திய மாங்காயும் போடலாம். அடர் மாங்காய் என்று இதற்குப் பெயர்.

உப்பு,மெந்தியம்(ஒரு தேக்கரண்டி),கடுகு,மிளகாய்,பெருங்காயம்  எல்லாவற்றையும்
வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு
பொடித்துக் கொள்ளவேண்டும்.

அதே வாணலியில் எண்ணெய்  தாராளமாகவிட்டு
அது நன்றாக  கொதித்ததும்,
உலர்த்தின  மாங்காய்த்துண்டுகளைப்  போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
மாங்காய் கொஞ்சம் வெந்ததும்  வறுத்த பொடியைத் தூவி  அடுப்பை அணைத்துவிடவேண்டும்.
கொஞ்ச நேரத்தில் எண்ணெய் மேலே   வந்துவிடும்.
ஆறின ஊறுகாயை நல்ல ஜாடியில் போட்டு வேடு கட்டி வைத்துவிடலாம்.






எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Sunday, February 14, 2010

கத்திரிக்காய் ஊறுகாய்

சிநேகிதியின் வீட்டில் போட்ட கத்திரிக்காய் ஊறுகாய் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.



இது இன்னொரு விதம் .நம்ம ஊறுகாய் இது இல்ல.
பி டி கத்திரிக்காய் எல்லாவிதத்திலும் பயமுறுத்திக் கொண்டு இருக்கும் போது ஊறுகாய் போடும் யோசனை வந்தது.

கத்திரிக்காய் ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள்:0)
*********************************************************************

கத்திரிக்காய் ....இது ரொம்ப அவசியம்.
ஊறுகாய்னு
போடறதுனால உப்பு ,மிளகாய்ப் பொடி,பெருங்காயப் பொடி, மெந்தியப் பொடி,மஞ்சள் பொடி

எல்லாம் அளவோடு இருக்கணும். எண்ணெயும் நிறைய வேண்டும்.
இல்லாவிட்டால் ரொம்ப நாள் தாக்குப் பிடிக்காது.
இப்ப எங்க வழிக் கத்திரிக்காய் ஊறுகாய் பார்க்கலாமா.

பரிசோதனையாச் செய்யறவங்களுக்குக் குறைந்த அளவு ஊறுகாய்ப் போடும் அளவுகளைச் சொல்கிறேன்.
கத்திரிக்காய். அதுவும் இந்த
பச்சைக் கலரில்
***************
இருக்குமே அந்த கத்திரிக்காய்.

தேவையான அளவுகள்
***************

1, 6 எண்ணம் பெரிய இளம் பச்சை வண்ண நீளக் கத்திரிக்காய், பிஞ்சா இருக்கிறதாப் பொறுக்கி எடுத்துக்கணும். சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளணும்.
2,இந்த அளவுக்குத் தேவையான
உப்பு...................அரைக் கப்,
புளிக்கரைசல்.........அரைக்கப் (கெட்டியாக இருக்கணும்)
மிளகாய்ப்பொடி......அரைக் கப்
மஞ்சள் பொடி.........இரண்டு டீ ஸ்பூன்
வெல்லமும் பொடித்துப் போட்டுக் கொள்ளலாம்...சிறிதளவு.
நல்லெண்ணெய்..........400 கிராம்
கட்டிப் பெருங்காயத்தை வறுத்துப் பொடித்த தூள் மூன்று தேக்கரண்டி,
வறுத்துப் பொடித்த வெந்தயம்.............ஒரு தேக்கரண்டி பொடி.
வெள்ளைப்பூண்டு நறுக்கினது ஒரு கப்.
சின்ன வெங்காயம் நறுக்கினது இரண்டு கப்.(நிறைய இருக்கேன்னு தோணினால் ,கொஞ்சம்
குறைத்துக் கொள்ளலாம்) .ஆனால் இந்த வெங்காயம் அவசியம்.
இப்ப செய்முறைக்குப் போகலாமா.
கொஞ்சம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்க.:)

நல்ல சுத்தம் செய்த
இரும்பு வாணலில செய்தால் சுவை கூடும். இல்லைன்னால் கனமான வேற வாணலிலயும் செய்யலாம்.
அடுப்பில் வாணலியை ஏற்றிக் காய்ந்ததும் கொஞ்சமாக நல்லெண்ணெயை விட்டுக் கொண்டு,
அது காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தையும், பூண்டுத் துண்டுகளையும் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
வதங்கி முடியும் நேரம் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள்,பெருங்காயத்தூள்
மூன்றையும் சேர்த்து நன்றாகப்பிரட்டி எடுக்க வேண்டும்.
இந்தக் கலவை ஒரு அரைகுறையாக அரைத்த சட்டினி ஸ்வரூபத்தில் வந்துவிடும்.
அப்பொழுது நாம் நறுக்கி வைத்த கத்திரிக்காயை இந்தக் கலைவையில் சேர்க்கணும். அடுப்பை அணைத்து விட்டு,
இன்னோரு வாணலியில் மிச்சமிருக்கும் எண்ணெயை விட்டுக் காய்கிற வரை பொறுமை காத்துக் கொஞ்சம் கடுகு போட வேண்டும். வெடித்ததும்(கடுகு)
அடுத்த வேலை புளிக்கரைசலயும்,உப்பையும் சிறிதளவு வெல்லத்தையும்
சேர்த்து, (அடுப்பை சிம்மரில் வைத்துக் கொண்டு பிறகுதான் புளிக்கரைசலை விடணும்)
கொதிக்க வைக்கணும்.
இது புளி வாசனை போகக் கொதித்ததும் இந்த
அடுப்பை அணைத்து , கத்திரிக்காய் இருக்கும் அடுப்பை ஏற்றணும்.கத்திரிக்காயும் மற்ற எல்லா உட்பொருள்களும் கலந்து ஒரே கலவையாகத் தெரியும் வரைக் கிளற வேண்டும்.
முக்கால் பதம் வந்ததும் புளிக் கலவையை ஊற்ற வேண்டும்.
அடுப்பு சிறிய அளவில் எரியட்டும்.
எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது,நன்றாக ஊறுகாயின் மேல் மிதக்கும் அளவில் அடுப்பை அணைத்துவிடலாம்.
ஆறிய பிறகு நல்ல ஜாடியோ, இல்லை கண்ணாடி பாட்டிலிலோ முக்கால் அளவுக்கு நிரப்பி வைக்க வேண்டும்.
ஒரு சிறிய சுத்தமான வெள்ளைத்துணியினால் வேடு கட்டி ,நல்ல இறுக்கமான மூடி போட்டு மூடிவைக்கலாம்.

இது எங்க வீட்டில் மிகப் பிடித்த ஊறுகாய்.
இதைப் பிடிச்சு சாப்பிடறவங்களுக்கு இன்னிக்கு மண நாள். எங்கயோ அமெரிக்காவில் இருந்தால் எப்படி அனுப்பறது. காக்காய் காலில் தான் கட்டி அனுப்பணும்:)






எல்லோரும் வாழ வேண்டும்.

சுதந்திரம் அடைய என்ன தேவை?

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் . விடுதலை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன். குடும்பத் தளையிலிருந்து விடுபடுவது கூட அவ்வளவு சிரமம் இல...