Blog Archive

Thursday, March 31, 2016

அடை மாங்காய் ஊறுகாய்



  எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அடை மாங்காய் ஊறுகாய்.
+++++++++++++++++++++++++++++++
 பாட்டியின் ஸ்பெஷாலிடி  இந்த ஊறுகாய்.
பெரும்பாலும் ருமானி மாங்காய் உபயோகப் படுத்துவார்.
 அவரவர் வீட்டு அரிவாள் மணைகளை எடுத்துக்கொண்டு 
அக்கம்பக்கம்  மாமிகள் வந்துவிடுவார்கள்.
கொத்தவால் சாவடியில் இருந்து வாங்கிவந்த மாங்காய்கள் மூட்டை நிறைய இருக்கும்.
  அவரவர்  முடிந்த வரை அரிந்து தள்ளிவிடுவார்கள்.
நாலைந்து விறகடுப்புகள்  திகுதிகு என்று எரிந்து கொண்டிருக்கும்.

அதில் இரண்டு படி கொள்ளும் அண்டாக்கள். உள்ளே ஈயம் பூசப்பட்டவை.

அவைகளில் பாதி அளவுக்கு நல்லெண்ணெய் ஊற்றப்படும். மாங்காய்த் துண்டுகள் உப்பில் புரட்டப் பட்டிருக்கும்.
ஒருபடி மாங்காய்த் துண்டுகளுக்கு இரண்டு ஆழாக்கு உப்பு தூள். இரண்டு ஆழாக்கு மிளகாய்த்தூள்,
ஒரு கட்டிப் பெருங்.

காயம் வறுத்துப் பொடி செய்யப் பட்டிருக்கும். மஞ்சள் பொடி
ஒரு ஆழாக்கு. மெந்தியம் வறுத்துப் பொடித்தது அரை ஆழாக்கு.

இங்கே ஒரு படி என்பது எட்டு ஆழாக்கு.
கிட்டத்தட்ட ஒண்ணரைக் கிலோ.
இப்போது ஒரே ஒரு அடுப்பைப் பார்க்கலாம்..
அதில் அண்டாவில் ஒன்றரைக் கிலோ எண்ணை ஊற்றிக் கொதிக்க வைப்பார்கள்.
சூடானதும் இரண்டு கைப்பிடி கடுகு முதலில் போட்டு வெடித்ததும்
உப்பு மாங்காய்த்துண்டுகள்  போடப்படும்.
தளதள வெனக் கொதிக்கும் போது அடுப்பைக் குறைத்துவிடுவார்கள்.
மரக்கரண்டி பெரிதாக இருக்கும் அதனால் அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டிருப்பார்கள்.
ஏதோ கணக்குப் பார்த்து,ஒரு துண்டை எடுத்து பதம் பார்த்து வெந்துவிட்டதா 
என்று உறுதி  கொள்வார்கள். உடனே மஞ்சள் பொடி,மிளகாய்ப் பொடி,பெருங்காயப் பொடி போடப்பட்டு மீண்டும்  விரைவாகக் கிளறுவார்கள்.
அதற்குள்  ஊறுகாயை ஆற வைக்கும்  பாத்திரம் தயாராகும்.
எண்ணெய்  மேலாக வந்ததும் அந்த அடுப்பு அணைக்கப் படும்.
இரண்டு பேராக அந்த அண்டாவை இறக்கிவைப்பார்கள். ஆறிய
 பின் வறுத்துப் பொடித்த மெந்தியத்தூள்   ஊறுகாயின் மேல் தூவப்பட்டு மீண்டும் மேலும் கீழுமாகக்  கிளறப்படும்.
அப்போது  தெரியும் துண்டாக உள்ளே அனுப்பப்பட்ட மாங்காய் உருமாறியோன்றோடொன்று ஒட்டி இருக்கும்.  அதனால் தான் அந்த அடைமாங்காய் என்ற பெயர்.

ஆறும் வரை ஊர்க்கதைகள் பேசப்படும்.
மீண்டும் குளிர்ந்த பாத்திரத்துக்கு மாற்றப்படும்.
இதற்காகத் தயாராக இருக்கும் உயர ஜாடியில் மரக்கரண்டியினால் மாற்றப்படும்.
 யாருக்கு வேணும்  அடை மாங்காய்.....






































.

11 comments:

வெங்கட் நாகராஜ் said...

அடை மாங்காய்..... கேட்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறது. இப்போதெல்லாம் ஊறுகாய் போடுவதை பலரும் மறந்து விட்டனர். காசு கொடுத்து கடையில் வாங்குவதே பலருக்கும் வழக்கமாகி இருக்கிறது....

ஸ்ரீராம். said...

இந்த மாதிரி பெரிய அளவில் ஊறுகாய்ப் போட்டு நான் பார்த்ததே இல்லை.

Jayakumar Chandrasekaran said...

ஆவக்காய் ஊறுகாய்க்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

--
Jayakumar

Jayakumar Chandrasekaran said...

ஆவக்காய் ஊறுகாய்க்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

--
Jayakumar

வல்லிசிம்ஹன் said...

வரணும் வெங்கட். கடையில் வாங்கும் போது எல்லா ப்ரிசர்வேடிவும் சேர்ந்து வயிற்றுக்குள் போகும். வீட்டில் கொஞ்சமாகச் செய்து கொண்டாலே மேன்மைதான். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நான் சொல்வது 50 வருஷங்களுக்கு முந்திய சமாசாரம் ஸ்ரீராம்.
புரசவாக்க நாட்கள்னு
நான் ஒரு புத்தகமே போடலாம். அவ்வளவு ஒற்றுமை அக்கம்பக்கத்தில்.
ஆவக்காய் இன்னோரு பாட்டிவீட்டில் போடுவார்கள்.அது இன்னும் பிரம்மாண்டம்.
ஆந்திரா வகை.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஜயக்குமார்..
ஆவக்காயில் கடுகுப் பொடி முன்னிற்கும். இதில் கிடையாது .அதுதான்
வித்யாசம்.

Anuprem said...

படிக்கும் போதே சாப்பிடும் ஆசை வருகிறது ....

அம்மாவின் ஊறுகாய் க்கு (இன்னும் பெரு மாங்காய் கிடைக்க வில்லையாம் ) ...காத்திருக்கிறேன் ...

Thenammai Lakshmanan said...

ஒரே ஜொள்ஸ் மா. சூப்பர்.

ஆவக்காய்க்கு எண்ணெயை வெய்யிலில் காயவைத்து ஊறுகாயில் ஊற்றுவோம் நாங்கள்.

ஊறுகாய் ஜாடியில் நறுக்கிய மாங்காய் ரெண்டு கை கொத்துக்கடலையும் வெந்தயமும் சிறிது, சிறிது மிளகாய்ப் பொடி, கடுகுப் பொடி, உப்பு, அரைக் கரண்டி எண்ணெய். இந்த விகிதத்தில் மாற்றி மாற்றிப் போட்டு ஜாடியைத் துணியால் மூடி இரு நாட்கள் வைத்து பின் குலுக்கி விட்டு குலுக்கி விட்டு 4 நாட்கள் வைத்து உபயோகிப்போம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனுராதா, வருஷப் பிறப்பு முடிந்ததும் பெரிய மாங்காய்கள் கிடைக்கும்.
அம்மா அனுப்பிவிடுவார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேன்,
அப்படித்தான் ஆவக்காய் போடுவோம். எல்லாம் ஒரே அளவில் இருக்க வேண்டும்.
அதுவும் மாங்காய் விதையோடு இருக்கணும். விதையோட்டோடு வெட்டினால்தான் அது வெகு நாட்களுக்கு வரும். உங்க ஊர் சவரணை பேர் போனதாச்சேம்மா.
அது போல் வராது.