Showing posts with label சீனிம்மா. Show all posts
Showing posts with label சீனிம்மா. Show all posts

Friday, September 06, 2013

பேசாத மௌனங்கள்








''ரு'' இந்த எழுத்து நினைவுகளைதிருப்பி விட்டது.
அந்த எழுத்து என் அம்மா வழிப்பாட்டியின் முதல் எழுத்து. ருக்குமணியின் ரு:)
பெண்ணின்வீட்டு அலங்காரப் பொருட்களைத் துடைத்து,அடுக்கிக் கொண்டு வைத்துக் கொண்டிருக்கும்போது, இந்த ருவும் என்னைப் பார்த்தது. ரு பொறிக்கப்பட்ட பொருள் ஒரு பித்தளையாலான விளையாட்டுத் தேங்காய்.
கல்யாணங்களில் பெண்ணுக்குச் சீராக தரப்படும் மணைகள்,குடம்,விளக்குகள்,அண்டாக்கள் இவைகளோடு இந்த பித்தளைத் தேங்காயும் வருமாம்.,
ஒரு மங்கலப் பொருளாக.
அழகான உருண்ட,மூன்றுபாகமாகப் பிரிந்திருக்கும். குடுமி ஒன்றுதான் கிடையாது. மூன்று கண்கள் உண்டு தேங்காய் போலவே.
அது
என் அம்மாவுக்குக் கொடுக்கப்பட்டு என்னிடம் வந்து, இப்போது சிகாகோ ஷெல்ஃபில் உட்கார்ந்திருக்கிறது.
அது எந்தத் திருநெல்வேலிக் கடையில் செய்தார்களொ.
எனக்கு அதெல்லாம் கூட மனதை நெருடவில்லை.
இங்கே பொழுது ஆரம்பிப்பது போலவே,என் சீனிம்மாவும் பொழுதும் ஆரம்பிக்கும்.
எனக்கு டேஸ்ட்மாஸ்டர்'ஸ்
சாய்ஸ் காப்பி.

அவளுக்கு வறுத்து அரைத்த காப்பிப் பொடியை அழகான வெள்ளி ஃபில்டரில் போட்டு காப்பி இறக்கணும்.
ஆசாரமான குடும்பம்.
அதனால் காப்பிக்குத் தனி இடம்.
கீழே கரியடுப்பில் கெட்டிலில் வென்னீர் கொதிக்கும்.
அதற்குப் பக்கம் மேலே மேடையில் சாணி போட்டு மெழுகிய அடுப்புகள் நான்கு இருக்கும்.
 அரிசி மாவுக் கோலம் போட்டு அந்த மங்கலான் பல்பு வெளிச்சத்திலும் பளிச்சென்று வைத்திருப்பாள்.
அந்த நாலரை மணிக்கு அவள் எழுந்திருக்கும் போதே, அவள் புடவையைப் பிடித்த வண்ணம் உட்கார்ந்து இருந்தது நினைவிருக்கிறது.

என்க்கெனத் தனியாக் ஒரு மரப்பலகையைப் போட்டு உட்கார வைத்துக் கதைகள் சொல்லியபடி வேலைகளை ஆரம்பிப்பாள். அப்போதெல்லாம்,
அதிகாலை நான்கு மணிக்கு புரசவாக்கம் பக்கம் நல்ல தண்ணிர் குழாயில் வரும்
அது வீட்டுக்குள் இருக்கும் குழாய்.
அது முதலில் திறக்கும் போது காற்றோடு சத்தம் வரும்.
சீனிம்மா பாத்திரங்களை அடுக்காக எடுத்து வைப்பார்.
ஒரு உயரத்திண்ணையில் ''அம்மி ''பொருத்தப் பட்டிருக்கும். அதன் மேல் ஒரு சிமெண்ட் தொட்டி.
அதை மூட ஒரு பெரிய தாம்பாளம்.
குழாயில் தண்ணீர் வர ஆரம்பித்ததும் பளபளவென்று துலக்கிவைத்த பெரிய சொம்பு வழியாக தண்ணீரை நிரப்பி எடுத்துத் தொட்டியில் கொட்டுவார்.
வரிசையாகஇருக்கும் துலக்கப்பட்ட அண்டாக்கள் நிறைந்ததும்,
முதல் நாள் அழுக்கான பாத்திரங்களைத் தேய்க்கும் வேலை ஆரம்பிக்கும்.

பழைய சணல், தேங்காய் நார் ,ஒரு மரத்தட்டில்.
இன்னோரு மரத்தட்டில் புளியும் உப்பும்,புது மணல்,அரப்புப் பொடி.

ஒரு கலவையான வாசனை தூக்கும்.

நான்கு மணிக்கு ஆரம்பித்த ஏழுமணி அளவில்  நின்றுவிடும். அதற்குள்
குளித்து, கடவுள் நமஸ்காரம் செய்து அம்மா(என் பாட்டி)வுக்குச் சமையலில் உதவி செய்ய வந்து விடுவார்கள்.
பெரியமாமா காய்கறி நறுக்குவார்.
அடுத்த மாமா  அன்வர் ஸ்டோருக்குப் போய் என்ன வாங்கிவர என்று ஒரு லிஸ்ட் எடுப்பார்.
அவரே ஃபண்ட் ஆஃபீஸ் வேலையும் பார்ப்பார். அதாவது பணம் எடுப்பது கட்டுவது.
அடுத்தமாமா சைக்கிளைத் துடைத்து விட்டுக் காய்கறி வாங்கி வரப் போவார்.
கடைசிமாமா.
ஒருவருக்குப் பாரி&;கோ வில் வேலை. அடுத்தவருக்கு தந்தி  அலுவலகம்,
மூன்றாவது மாமா விவேகானந்தா  கல்லூரி,

சின்ன மாமா கல்லூரியில் அடியெடுக்கக் காத்திருப்பவர். கிரிக்கெட் ரசிகர்.

இதற்குள்  இரு மண் பூசின அடுப்புகளிலும் வெண்கலப்பானையும் ,கொடி அடுப்பில் பருப்பும் வேக ஆரம்பித்திருக்கும்.

சீனிம்மா கொடுக்கும் கழுநீர் எல்லாவற்றையும் சிந்தாமல் ஒரு பக்கெட்டில் கொட்டிவைத்தால் அது பசு மாட்டின் தாகத்துக்குத் தீர்வாய் இருக்கும்.
பாட்டியின் ஆசாரத்துக்குச் சாணி மிகவும் அவசியம்:)
வாசல் தெளிக்க, சாப்பிட்ட இடத்தில் சுத்தம் செய்ய.  இத்யாதி வேலைகளுக்கு.
ஆண்டா !!அந்த சாணியை  என்று ஆரம்பிக்கும் முன் ஓடிவிடுவேன் பக்கத்துவீட்டுக்கு:)

அங்கே  விகடனில் வேலை செய்து கொண்டிருந்த மாமா அப்பொதுதான்
 சிவ பூஜையை முடித்துக் கொண்டிருப்பார். பிச்சு மாமி அன்னம் நெய் என்று வரிசையாக வைப்பார்.
ஆரத்திகாட்டும்போது அங்கெ இருக்கிற ஸ்வாமிகளுக்கும் எங்கள் வீட்டு சாமிகளுக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பேன்.
குளிச்சியோடி பொண்ணே? என்றவாறு  மணி மாமா சிரிப்பார்.
நேத்திக்கே குளிச்சுட்டேன் மாமா. என்று நானும் சிரிப்பேன்.
பிச்சு!!! குழந்தைக்கு பேரீச்சம்பழம் கொடு. குச்சியாட்டம் இருக்கு பாரு.
இதொ  அண்ணா என்றவாறு அந்த அம்மாவும் கொடுப்பார். மெல்ல வாசலுக்கு வந்து எட்டிப் பார்ப்பேன். அங்கே  சுத்தம் செய்யும் வேலை முடிந்திருக்கும்:)

அம்மா(என்)வுக்கு லேசாகக் கோபம் வரும். வேலையெல்லாம் கத்துக்க வேண்டாமா.  கதைப் புத்தகத்தைக் கையில் எடுத்து மணிக்கணக்கில ஜன்னல்ல உட்காரத் தெரிகிறது. இடுப்பு வளைஞ்சு வேலை செய்தால்தான்
உடல் சொன்ன பேச்சைக் கேட்கும்.
வந்தது வந்தே  இங்க எல்லாம்  பெருக்கிச் சுத்தம் செய்யணும் . திருப்பி ஓடுகிற வழக்கம் எல்லாம் வேண்டாம் என்று கண்டிப்பாகச் சொல்வார்.
அது பூந்துடப்பம்மா. முள்ளு முள்ளாக் குத்தும்  என்பேன்.
ஒண்ணும் வலிக்காது,முதலில் தரையில் புரளுகிற பாவாடையைஏத்திக் கட்டிக்கோ. வேலை தானே வரும்.

அடுத்த லீவுக்காவது அம்மாவைத் திருமங்கலத்திலியே விட்டுவிட்டு வந்துடணும்.''என்று முணு மூணுத்தபடி பருக்கிக் குப்பையை முறத்தில் எடுத்து அதற்கு உண்டான கூடையில் போடுவேன்.
குளிச்சு,சாப்பிட்ட பிறகு  எங்கவேணா விளையாடப் போ.
தெருவுக்குப் போகக் கூடாது.
இதற்குள் ஜமா கூடி இருக்குமே கனகா,கமலா,சுந்தரா,பூர்ணிமா எல்லோரும் புளியங்கொட்டை,பல்லாங்குழி சகிதம் மாடிவீட்டில் கூடி இருப்பார்களே என்று நினைத்தபடி,ஒரு அவசரக் குளியல்.
பாவாடை சட்டை போட்டதும், அம்மா கையில் காந்தரிடைன் எண்ணெய் வசமாய்   வந்து உட்கரும்.

ம்ம் உட்காரு.!
ரிப்பன் எங்க.
தெரியல.
சரி பரவாயில்லை
இன்னிக்குக் கம்பளி நூல் தான் உனக்கு.
ஐய்ய வேண்டாம்மா. புது ரிப்பன் கொடும்மா. எல்லாரும் கேலி செய்வா.
அதையும் தொலைச்சுடுவே  என்றபடி நா சூக்காய்  அழகாகப் பின்னி நூலயும் கட்டி முடிந்து விடுவார். முதல்  நாள் எடுத்துவைத்திருந்த கதம்ப சரத்தைப்
பந்தாக  வளைத்து   பாந்தமாக வைத்ததும்,
சாப்பிடப் போ.
அம்மாவின் குரலில் சிரிப்புத் தெரிவதாகச் சந்தேகம் வரும்:)
முன்னுச்சு வாரிண்டு போ என்று ரெண்டு தட்டு நெற்றியில்.

சீனிம்மாவிடம் புகார் கொடுத்தபின் மணக்க மணக்க சாப்பாடு முடித்துக் கழுவிய கை காயும் முன் பறந்துவிடுவேன்.
பிடித்த பீட்ரூட்  கறியும் கத்திரிக்காய்க் குழம்பும் என்று சமையல் அறைக்கு நகர்த்துவார் அம்மா. முந்தைய பதிவுக்கு இந்த ருக்மணி அம்மா தான் காரன் கர்த்தா. அவளால் அடைந்த  நன்மைகளுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது.
அவளது  கடைசி நாட்களிலும் சிரிப் பை  மறக்கவில்லை.
 ரெய்க்கி கற்றுக் கொண்ட புதிது   அவளுக்கு சிகித்சையாகத் தரும்போது, என் கைகளைப் பிடித்துக் கொண்டு நீ அன்பாப் பிடிச்சுக்கறதெ எனக்கு மருந்து என்பாள்.  என்னை விட்டு  என்றுமே அகலாதவர்கள் என்று நினைத்தவர்களூள் அவளும் ஒருத்தி .




Sunday, October 23, 2011

கதை சொல்லும் பாட்டி

தாயும் அவளைப் பெற்றவளும் நானும்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்










புரசவாக்கத்து வீடு, மூன்று அறைகளும் வீட்டுக்கு வெளியே இருக்கும் வெளிவசதிகளும் கொண்டது.

கோலம் போடும் இடத்தைத் தாண்டியதும் ஒரு பத்துக்குப் பத்து வரவேற்பரை அறை. ஒரே ஒரு நாற்காலியும் பெஞ்சும் உண்டு:)

கம்பித்தடுப்பும் அதற்கு மூங்கில் தட்டியினாலான மறைப்பும்(கர்ட்டன்)உண்டு.
இதைத் தாண்டியதும் நான் சொன்ன கூடம். அதில் ஒரு காத்ரேஜ் பீரோ, அரிசி மூட்டை வைக்கும் ஒரு கால் உடைந்த பெஞ்ச்.

அத்ற்கு முட்டுக் கொடுக்க இரண்டு செங்கல்கள்
அந்தப்பக்கம் சுவரில் ஒரு குட்டி ஜன்னல்.
இந்தப்பக்கம் சுவரில் முப்பத்திரண்டு கடவுள் படங்கள்.:)
மூலையில் நல்ல மரத்தால் செய்த அலமாரி
ஒன்று.
மேல்தட்டில் அலங்கார பொருட்கள்.
இரண்டாவது தட்டில் தாத்தாவிண் பிரபந்தம்,பாட்டியின் சிவகாமீயின் சபதம்
மாமாக்களின் எகனாமிக்ஸ் புத்தகங்கள் ,,
அந்தக் காலத்து விஞ்ஞான புத்தகங்கள்
கீழ் தட்டில் இவர்கள் பரிசாக வாங்கிய கோப்பைகள்,தட்டுகள் என்று வரிசையாக இருக்கும்.
அதற்கு
அடுத்த அறை கொஞ்சமே பெரீய புழக்கடையைப் பார்த்த சமையல் அறை.
அதீல் அடுப்பு மேடையின் கீழெ
கற்சட்டிகள் அடுக்கி வைக்கப் பட்டு இருக்கும்.
அதைத்தவிர பாட்டியின் தம்பி, ஹைதராபாத் மிலிட்டரி மாமா வாங்கி வரும்
பீங்கான் ஊறுகாய் ஜாடிகள். என் உயரத்துக்கு இருக்கும்.
மண்கலயங்களில் காய்கறிகள் கழுவி வைக்கப் பட்டிருக்கும்.

தையல் இலைக்கட்டுகளும் இருக்கும்.
எதிர்த்த சுவரில் பருப்பு வகையறாக்களை வைக்கும் காரைக்குடி டப்பாக்கள்
வைக்க ஒரு மரத்தட்டு சுவற்றில் அடித்து வைத்திருப்பார்கள்.
அதன் அருகிலேயே காப்பிக் கொட்டை அரைக்கும் மெஷினும் இருக்கும்..

அந்தப்பலகையில் மாட்டியிருக்கும் கொக்கிகளில் நல்லெண்ணை,தேங்காயெண்ணை,
நெய்,ஓகே ஆயில் எனப்படும் பட்சணம் செய்யும் எண்ணெய்
எவர்சில்வர் தூக்குகளில் தொங்கும்.
சமையலறைக்கு மட்டும் ஓடு வேய்ந்திருக்கும்.
அவ்வப்போது சீனிம்மாவை மட்டும் கடிக்கும் தேள்களும் அங்கிருந்து விழுவதுண்டு.
நான் ஒன்று கூட பார்த்ததில்லை.

தேள் கொட்டினால்,சீனிம்மா,தன் வேலையெல்லாம் முடித்துக் கொண்டுதான்,
டாக்டரைப் பார்க்கப் போவார்.
இல்லாவிட்டால் வீட்டுக்கே வந்து ஊசி போடும் (ஒரு பாதி) டாக்டரை (அரை வைத்தியர்=கம்பவுண்டர்)வரவழைப்பார்

இதே வீட்டில் அம்மாவைப் பெண் பார்க்க அப்பா குடும்பம் வந்திருக்கிறது.
மாமாக்கள் திருமணங்கள்,
பிறகு என் திருமணம் எல்லாம் நடந்தன.
வாசல் சிமெண்ட் தரையில் கட்டில்கள் போட்டு ஆண்களும்,
வீட்டின் உள்ளே பெண்களும்,முதல் அறையில் குழந்தைகளும் படுப்போம்.
சரி பாத்திரங்கள் அலம்பற சீனுக்குப் போவோமா::)

அப்போது மணி ஆறு ஆகியிருக்கும். ஒவ்வொருவராக மாமாக்கள்,தம்பிகள்,அம்மா எல்லோரும் எழுந்து கூடத்தில் அவரவர் படுக்கைகளில் உட்கார்ந்து ,பேசிக்கொள்ள ஆரம்பிப்பார்கள். அது நாட்டு நடவடிக்கைகளிலிருந்து ஊர் நடப்பு,யாருக்குக் கல்யாணம்,என்ன படம்,சிவாஜி மாதிரி உண்டா இப்படி போகும்.
நானும் சீனிம்மா குளிக்கப் போகும்போது இங்கே வந்துவிடுவேன். அம்மாவுடன் ஒட்டியபடி அவர்கள் பேச்சைக் கேட்பதில்,அந்தக் குரல்களின் அன்பு மொழியில் ஒருவிதப் பாதுகாப்பு இருக்கும்.

சீனிம்மா தான் மட்டும் சில்லென்ற பச்சைத்தண்ணீரில் குளித்துவிட்டு,மற்றவர்களுக்கு பெரிய வென்னீர்த்தவலையில் தண்ணீரை நிரப்பிவிட்டு
அடுப்பு மூட்ட அம்மாவைக் கூப்பிடுவார்.
''போறும் பாப்பா, அதுகள் இன்னும் வெளியே கிளம்பணும். பேச்சு நிறுத்திக் கொள்ளுங்கள்''
என்று குரல் கதவுக்குப் பின்னாலிருந்து வரும்.

அத்தனையூண்டு மூன்றே அறை கொண்ட வீட்டில் அத்தனை பேர் எப்படி இருந்தோம்!!

உடமைகள் கொஞ்சம். மனம் பெரிய விசாலமானது.அது ஒன்றுதான் காரணமாக இருக்க முடியும்.
மீண்டும் சீனிம்மா ஒரு பெரிய பாத்திரத்தோடு வாசலில் பால் வாங்கக் கிளம்புவார்.

மாடு ஒன்று கட்டியிருக்கும். தோலால் தைத்த கன்று ஒன்றும் நிறுத்தி இருக்கும்.நானும்
அந்தக் கோபாலுக் கோனாரிடம் கேட்பேன். '' இந்தக் கன்னுக்குட்டி கத்தாதா '' என்று அவரும் சலிக்காமல் சொல்லுவார். அது புல் மேயப் போயிருக்கு. நான்
 திரும்பிப்  போகும்போது இந்த உடம்புக்குள்ள வந்துவிடும் என்று.

ஆறு வயதில் எனக்கேன் இந்தச் சின்ன விஷயம் கூட எட்டவில்லை என்று,
இப்பொது யோசிக்கிறேன்.

இப்போது என்றால் காலமே வேறு. பெரிய பேரன் சொல்கிறான்
 ,150 வருடங்கள் வாழ மருந்து கூடிய சீக்கிரம் வந்துவிடுமாம். முடிந்தால் அவனே கண்டு பிடீக்கப்போகிறானாம்

''நோ படி ஹேஸ் டு டை பாட்டி'':)

இப்போது இந்தக் கதை எழுத என்ன காரணம்???
இருக்கு.அது அடுத்த பகுதியில்

வரும்:))))
அன்று சீனிம்மா எங்களைப் பராமரித்ததற்கும், இப்போது இங்கே நாங்கள் வந்து இங்கு(சிகாகோ)

இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இல்லை.
பாட்டிகள் மாறுவதில்லை.
அநுபவங்கள் மாறுகின்றன. அவ்வளவுதான்.

அன்றைய பாட்டிக்கு வேலை செய்ய ஆள் கிடையாது.
இங்கே பேத்திக்கும் அதே நிலைமை.

அவளும் பாத்திரம் தேய்த்து,துணி உலர்த்தி,
வீடு பெருக்கித் துடைத்து எல்லாம் செய்தாள்.
இங்கு பேத்தியும் அதையே இன்னும் கொஞ்சம் நாகரீக லெவலில் செய்கிறாள்.
அப்பளம் வடகம் வத்தல் எல்லாம் செய்ய நேரம் இருந்தது.
இன்றைய பாட்டியான எனக்கு இங்கே வந்தால்தான் அந்த வேலை.
நம்ம ஊரில்தான்
க்ராண்ட் ஸ்நாக்ஸ் எனக்காகவே திறந்திருக்கிறார்களே;)
மேலும் எங்க வீட்டு மொட்டை மாடிக்கு தூசிதும்பு அதிகம் வரும்.
ரோட்டு மேல வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம்.
இந்த ''ஐக் புயல்'' சூறாவளி வருவதற்கு முன்பே கொஞ்சம் ஊறுகாய் வடாம் எல்லாம் போட்டாச்சு.
இரண்டு நாட்களாக சூரியனைக் கண்ணால் பார்க்கவில்லை.
நடுநடுவே பேஸ்மெண்ட் செக்கிங் வேற. அங்க தண்ணீர் சரியாக
வெளியேற்றப் படுகிறதா என்று பார்க்க வேண்டுமாம்.
சரி இந்த தற்கால நிகழ்வுகளுக்கும் சீனிம்மாவுக்கும் என்ன சம்பந்தம்.
அவருக்கு இந்த அமெரிக்க மனிதர்கள் பற்றிய நாவல்கள் ரொம்பவும் பிடிக்கும்.


எல்லா
எழுத்தாளர்கள்,ஆர்தர் ஹெய்லி,டானியல் ஸ்டீல்,ஜெஃப்ரி ஆர்ச்சர் இவர்களுடைய ஆக்கங்களைத் தமிழ்ப் படுத்தி ராகி.ரங்கராஜன் அவர்கள் குமுதத்தில் எழுதும்போது ஒரு வரி விடாமல் படிப்பார்.
எதைப் பற்றியுமோ யாரைப் பற்றியுமோ அவசரமாகக் கணித்து விடமாட்டார்.
எல்லோருடைய செய்கைகளுக்கும் ஏதாவது காரணம் இருக்கும்,
என்று நிதானமாக அதர்சைட் ஆஃப் மிட்னைட் கதாநாயகியை அலசுவார்.
என்னுடைய திருமணத்தின் போது இருந்த சீனிம்மாவுக்கும்,இப்போது
30 வருடங்கள் கழிந்த நிலையில் புத்தம் புதிதான சீனிம்மாவைப் பார்ப்பதற்கும்
ஏகப்பட்ட வித்தியாசம்.
சந்தோஷமாக இருந்தார். நான் முதல்தடவை டெட்ராய்ட்டுக்கு வந்த போது நிறைய விவரங்கள் எனக்குக்
கொடுத்தார்.அவரையும் அழைத்து வந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாரோ.
வருவதற்கு சம்மதித்திருக்க மாட்டார்;)பிள்ளைகளை விட்டு வரவேண்டுமே!!
காரணங்கள் இவ்வளவுதான் இந்தக் கொசுவத்திக்கு.
இந்தச் செல்லப்பாட்டி   என்  வாழ்வின்   வெகு முக்கிய அங்கம்
அவளை நட்சத்திரப் பதிவில் கவுரவிக்கணுமா இல்லையா.


முதுமையின் இரவும் பகலும் 4

வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதே வாழ இறைவன் வழி வகுப்பான். அனைவருக்கும் கலியுகத்திலும் கண்ணன் நாமம் பாடக் கவலைகள் தீரும் கண்ணன் பிறந்து சிறப்பித...