எல்லோரும் வளமாக வாழ வேண்டும் .
பொறுமை வெல்லும் 3
++++++++++++++++++++++
மறு நாள் , தந்தையிடமிருந்து தபாலும் ,மாப்பிள்ளைக்கு தங்கள் வீட்டில் நடக்கப் போகும் ஷஷ்டி அப்த பூர்த்தி விழாவைப்
பற்றிய விவரங்களை எழுதி மைதிலியின் தம்பி ராமசுவாமி
அனுப்பிய அழைப்பிதழும் வந்தது.
ஆவணி மாத சதய நட்சத்திரம் அன்று அப்பாவுக்கு
அறுபதாம் பிறந்த நாள்.
தம்பியின் கைக்கடுதாசியும் மிக அழகாக வடிவமைத்திருந்தான்.
மைதிலிக்கு ராமசாமி மற்றும் கோபாலன் என்று இரு தம்பியர்.
இருவரும் படித்து விட்டு தந்தையுடனேயே பந்தல்குடி கிராமத்தில் இருந்தனர்.
தண்ணீருக்குப் பஞ்சமில்லை. நல்ல விளைச்சல்.
நல்ல மனைவிகள், ஆளுக்கு இரண்டு குழந்தைகள் என்று
மிக மகிழ்ச்சியான குடும்பம்.
மாப்பிள்ளை உப்பிலியின் உதார குணத்தை என்றுமே தவறாக நினைத்தது
கிடையாது. எப்பொழுதும் மற்றவர்களைப் பேணும் குடும்பத்தில் வந்தவர்க்கு
எப்பொழுதும் தாழ்வில்லை என்பதை நம்பினார்கள்.
தாங்கள் அனைவரும் கும்பகோணத்துக்கு ஜவுளி எடுக்க வருவதாகவும்,
அக்கா தங்களுடன் வந்து புடவை,பாவாடை,மற்றும் குடும்பத்துக்கு வேண்டிய
எல்லாம் வாங்க தங்களுடன் வரவேண்டி எழுதப் பட்டிருந்தது
அந்தக் கடிதம்.
மைதிலியின் உள்ளம் பூரித்தது.
அம்மாவுக்கு வாங்க வேண்டிய திருமாங்கல்யம் ஒரு பவுனிலாவது
இருக்க வேண்டும், மகள் வீட்டு சீராக,தந்தைக்குப் பத்துமுழம் மயில்கண்
வேஷ்டி, தாயாருக்கு ஒன்பது கஜம் இரட்டைப் பேட் போட்ட
நாகப் பழக்கலர் புடவை,தம்பிகளுக்கு பொருத்தமான
உடை என்று எழுதிக் கொண்டிருக்கும் போதே
உப்பிலியும் கலந்து கொண்டார்.
பெரிய விசேஷம் நாம் மூன்று நாட்கள் முன்பே அங்கே
போய்விட வேண்டும். திரட்டிப்பால் கிளற மறந்து விடாதே
என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.
கேட்டுக்கொண்டே வாரிஜாவின் முகத்தைப் பார்த்ததுமே
மைலி உஷாரானாள்.
ஆடி வெள்ளிக்கு அவர்கள் வண்டி எடுத்துக் கொண்டு வருகிறார்கள்.
துடுக்குப் பேச்சை இப்போதே அடக்கு.
ஒருவார்த்தை இசகு பிசகாகப் பேசினால்
உனக்கு எங்கிருந்தும் உதவி கிடைக்காது
என்று உறுதியாகச் சொன்னாள்.
உப்பிலி இருவரையும் மாறி மாறிப்
பார்த்துக் குழம்பினார். ஏன் குழந்தையைக் கோவிக்கிறாய்.
நீ இங்க வாம்மா , உனக்கு என்ன வேண்டும்
சொல்லு. // என்றவரை வாரிஜா பார்த்துவிட்டு
எனக்கு சட்டம் படிக்கணும்பா என்றாள்.
ஓ அதுக்கென்ன செய்துட்டாப் போச்சு.
இந்த இண்டர்மீடியட்டை நன்றாக முடி.
அடுத்தது லா காலேஜ் தான் என்றார்.....தொடரும்.

