Blog Archive

Friday, August 02, 2019

பொறுமை வெல்லும் 3



வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் .

பொறுமை  வெல்லும்  3
++++++++++++++++++++++
  மறு  நாள்   , தந்தையிடமிருந்து தபாலும்   ,மாப்பிள்ளைக்கு தங்கள் வீட்டில் நடக்கப் போகும்   ஷஷ்டி அப்த பூர்த்தி  விழாவைப்
பற்றிய விவரங்களை எழுதி  மைதிலியின்  தம்பி ராமசுவாமி
அனுப்பிய  அழைப்பிதழும் வந்தது.

   ஆவணி மாத சதய நட்சத்திரம் அன்று அப்பாவுக்கு
அறுபதாம் பிறந்த நாள்.
தம்பியின் கைக்கடுதாசியும் மிக அழகாக வடிவமைத்திருந்தான்.
மைதிலிக்கு ராமசாமி மற்றும் கோபாலன் என்று இரு தம்பியர்.

இருவரும் படித்து விட்டு தந்தையுடனேயே பந்தல்குடி கிராமத்தில் இருந்தனர்.

தண்ணீருக்குப் பஞ்சமில்லை. நல்ல விளைச்சல்.
நல்ல மனைவிகள், ஆளுக்கு இரண்டு குழந்தைகள் என்று
மிக மகிழ்ச்சியான குடும்பம்.

மாப்பிள்ளை உப்பிலியின் உதார குணத்தை என்றுமே தவறாக நினைத்தது
கிடையாது. எப்பொழுதும் மற்றவர்களைப் பேணும் குடும்பத்தில் வந்தவர்க்கு
எப்பொழுதும் தாழ்வில்லை என்பதை நம்பினார்கள்.
தாங்கள் அனைவரும் கும்பகோணத்துக்கு ஜவுளி எடுக்க வருவதாகவும்,
அக்கா தங்களுடன் வந்து புடவை,பாவாடை,மற்றும் குடும்பத்துக்கு வேண்டிய

எல்லாம் வாங்க தங்களுடன் வரவேண்டி எழுதப் பட்டிருந்தது
அந்தக் கடிதம்.
மைதிலியின் உள்ளம் பூரித்தது.
அம்மாவுக்கு வாங்க வேண்டிய திருமாங்கல்யம் ஒரு பவுனிலாவது
 இருக்க வேண்டும், மகள் வீட்டு சீராக,தந்தைக்குப் பத்துமுழம் மயில்கண்
வேஷ்டி, தாயாருக்கு ஒன்பது கஜம் இரட்டைப் பேட் போட்ட
நாகப் பழக்கலர் புடவை,தம்பிகளுக்கு பொருத்தமான
உடை என்று எழுதிக் கொண்டிருக்கும் போதே
உப்பிலியும் கலந்து கொண்டார்.
பெரிய விசேஷம் நாம் மூன்று நாட்கள் முன்பே அங்கே
போய்விட வேண்டும். திரட்டிப்பால் கிளற மறந்து விடாதே
என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.

கேட்டுக்கொண்டே வாரிஜாவின் முகத்தைப் பார்த்ததுமே
மைலி உஷாரானாள்.
ஆடி வெள்ளிக்கு அவர்கள் வண்டி எடுத்துக் கொண்டு வருகிறார்கள்.
துடுக்குப் பேச்சை இப்போதே அடக்கு.
ஒருவார்த்தை இசகு பிசகாகப் பேசினால்
உனக்கு எங்கிருந்தும் உதவி கிடைக்காது
என்று உறுதியாகச் சொன்னாள்.

உப்பிலி இருவரையும் மாறி மாறிப்
பார்த்துக் குழம்பினார். ஏன் குழந்தையைக் கோவிக்கிறாய்.
நீ இங்க வாம்மா , உனக்கு என்ன வேண்டும்
சொல்லு. // என்றவரை வாரிஜா பார்த்துவிட்டு
எனக்கு சட்டம் படிக்கணும்பா என்றாள்.
ஓ அதுக்கென்ன செய்துட்டாப் போச்சு.
இந்த இண்டர்மீடியட்டை நன்றாக முடி.

அடுத்தது லா காலேஜ் தான் என்றார்.....தொடரும்.


13 comments:

கோமதி அரசு said...

மிக பிடித்த பாடல்.
கதை பாத்திரங்களின் பெயர் மிக நன்றாக இருக்கிறது.

//எப்பொழுதும் மற்றவர்களைப் பேணும் குடும்பத்தில் வந்தவர்க்கு
எப்பொழுதும் தாழ்வில்லை என்பதை நம்பினார்கள்.//

உண்மைதான், அப்படியே தாழ்வில்லாமல் இறைவன் அருளால் இருக்கட்டும்.

கண்ணன் வெண்ணெயை கையில் வைத்து கொண்டு ஆடுகிறான் . அருமை.பச்சை பட்டு எல்லாம் நலமே!

KILLERGEE Devakottai said...

//ஓ அதுக்கென்ன செய்துட்டாப் போச்சு
இந்த இண்டர்மீடியட்டை நன்றாக முடி//

அந்த சமயத்தில் இப்படி பேசி மகிழ்ச்சியை கொடுப்பதே புத்திசாலித்தனம்.

பிறகு படிக்க வைப்பதும், மறுப்பதும் வேறு விசயம்.

தொடர்கிறேன் அம்மா...

மாதேவி said...

துடுக்குத்தனத்துக்கு ஏற்ற லா. பொறுத்திருந்து பார்ப்போம்....

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
இனிய காலை வணக்கம் மா.

ஆடி வெள்ளிக்குத் தாம்பூலம் கொடுத்ததில்,
இங்கே வர நேரமாகிவிட்டது.
உங்களுக்கும் ஆடிப்பெருக்குக்கான வாழ்த்துகள்.
உங்கள் ரசிப்புதான் மிக அழகு.

கண்ணன் எங்கள் மடத்தில் அழைக்கப்படும் நவ நீதக் கண்ணன்.
பெயர்கள் எல்லாம் கும்பகோணக் கடவுள்களின் பெயர்களாக இருக்கட்டும் என்றே
வைத்தேன்.
அனைவரும் நலமுடன் இருக்க வாழ்த்துகள்.

துரை செல்வராஜூ said...

இனிமையாகச் சென்று கொண்டிருக்கின்றது...
பாசமும் நேசமுமாக!..

இன்று ஆடிப்பெருக்கு!..

அன்பு பெருகட்டும்.. அறிவு வளரட்டும்..
அழகு மிளிரட்டும்!.. அகிலம் ஒளிரட்டும்!..

வல்லிசிம்ஹன் said...

ஒரு அன்பான தந்தையின் மொழியை நீங்கள் பேசுகிறீர்கள் அன்பு தேவகோட்டைஜி.
நல்லதே நடக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி , உங்கள் கருத்தே சிறப்புமா.
பேச்சு சாமர்த்தியம் அனைவருக்கும் வந்து விடாது.
நன்றி மா.

திண்டுக்கல் தனபாலன் said...

துடுக்கு பேச்சு என்றால் "Law" தான் சரி...

நாளாம் நாளாம் திருநாளாம்... என்னே இனிமையான பாடல்...

ஸ்ரீராம். said...

எண்ணம் போல வாழ்வு. எல்லாம் நல்லதாக நடக்கட்டும். நாலாம் நாலாம் பாடல் என் மாமாவுக்கு - கேஜிஜியின் அண்ணன் - மிக மிக மிகப் பிடித்த பாடல்.

கோமதி அரசு said...

எங்கள் குடும்பங்களில் நவநீதகிருஷ்ணன் என்ற பெயர் கொண்டஆண்கள் நிறைய இருக்கிறார்கள்.
பெண்களுக்கும் நவநீதம் என்று பெயர் வைப்பார்கள் அக்கா.

Thulasidharan V Thillaiakathu said...

லாயர் வாரிஜா என்று ஆகப் போகிறாளோ?! ஒரு வேளை அப்பாவுக்குச் சம்பாதிக்கத் தெரியவில்லை என்று தானும் லா படித்து சம்பாதித்துக் காட்டப் போகிறாளோ அல்லது லா படித்ததும் அவள் மனம் மாறி அப்பா அப்படி இருப்பதன் காரணம் அறிகிறாளோ அவளும் மாறுவாள்...

நீங்கள் பாசிட்டிவாகத்தான் முடிப்பீர்கள் அம்மா..

கீதா

Geetha Sambasivam said...

சஷ்டி அப்தபூர்த்தி வைபவம் சிறப்பாக நடைபெறப் பிரார்த்தனைகள். அதில் இருந்தாவது வாரிஜாவுக்கு விவேகம் வருமா? பொறுத்திருந்து பார்க்கணும்.

வெங்கட் நாகராஜ் said...

வாரிஜா - வித்தியாசமான பெயர் வல்லிம்மா...

மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள தொடர்கிறேன் மா...

நாளாம் நாளாம் பாடல் - மிகவும் இனிமையான பாடல். கேட்டுக் கொண்டு இருக்கிறேன் மா...